இடையில் ஒரு இருபது வருஷம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2025
பார்வையிட்டோர்: 236 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த அணில் செத்துப் போய்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. வெள்ளையும் வயலற்றுமாகப் பூச் சுமந்து வளைந்து சரிந்து வகுப்புத் தாழ்வாரத்திற்கே வந்திருந்த சீர் மைக் கிழுவங் கொப்புகளில் ஒன்றில் இந்தத் ‘தற்கொலை’ நிகழ்ந்திருந்தது. 

வகுப்பைச் சுற்றி அரைச்சுவர்-நெஞ்சளவு உயரம். மேலே திறந்தபடி. உள்ளே நுழைந்ததும் கண்ணிற் படுகிற மாதிரி-வகுப்பில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய மாதிரி – அந்த அணில் தொங்கிக் கொண்டு காற்றில் இலேசாக அசைந்தது. 

பெரிய அணில். வெண்மையான வயிற்றுப் பாகம் வகுப்பைப் பார்த்துத் திரும்பியிருக்க, குறண்டின பின்னங் கால்களிரண்டினடியிலும் அது ஆண் என்பதற்குப் பெருத்த சாட்சியந் தெரிந்தது. புசுபுசுவென்று சணைத்துத் தொங்கிய வாலில் கட்டியிருந்த கடதாசித் துண்டில் பெரிதாக மைனாயில் எழுதியிருந்தது. ‘காதலிலே தோல்வியுற்றான் காளை யொருவன்’ என்று. 

வழக்கம் போல அன்றைக்கும் பெட்டைகள் தான் லாப் பிலிருந்து முதலிற் திரும்பி வகுப்புக்கு வந்தார்கள். பிறகு பெடியன்கள்… 

எல்லாருக்கும் பின்னால் – கடைசியில் – நல்ல பிள்ளை களாக வந்து கொண்டிருந்த எனக்கும் ஐயருக்கும் வகுப்பில் வெடித்த அமளிகள் வடிவாகக் கேட்டன. 

ஆனால், கெட்டகாலம், அடுத்த வகுப்பறையில் பிரின்சிபலுடைய பாடவேளையாய் அது இருந்தது. 

விசாரணை தொடங்கிய போது, வழமைபோல நியாய மாகவே — சந்தேகம் எங்கள் பக்கந் திரும்பியது. நான் முதல் எதிரியாகவும் ஐயர் இரண்டாவது எதிரியாகவும் ஆனோம்.’பொட்னி’ சுப்பரின் சாட்சியம் எங்களுக்கு மிகப் பாதகமாய் அமைய நேர்ந்தது. ஆய்வுகூட வேலைக்காக, பாட நடுவில். ஸீஸல் பினியா — மயிற்கொன்றை — பூத் தேட எங்களை அனுப்பியதை அவர் சொன்னார். 

இந்த அணில் கூட கொன்றையடியில் தான் செத்துக் கிடந்தது. 

ஜி. ஸீ. ஈ. சாதாரண வகுப்பிலுங்கூட, எங்களுக்கு. ஒழுங்கான ஆய்வுகூடப் பயிற்சி இருந்தது. பிரின்சிபலின் மகன் எங்கள் வகுப்பிலிருந்தான் என்பதை இதற்குக் காரண மாக அப்போது சொன்னார்கள். எப்படியோ, விஞ்ஞானப்’ பாடங்கள் நான்கிலும். ஒவ்வொன்றுக்கும் கிழமையில் ஒரு தரம், டபிள் பீரியட் வேளைகளில், ஆய்வுகூட வேலை இருக் கவே இருந்தது. 

சுந்தரராமன் பிராணியியல் எடுத்தார். சேவ் எடுத்த தாடைகள் பச்சையாய்த் தெரியும்: நல்ல சிவலை. 
என்றைக்கும் எங்களால் மறக்கப்பட முடியாத வலு அருமை யான மனுசன். இந்தியாவில் சொந்த ஊர். படிப்பிக்க வந்த வருக்கு யாழ்ப்பாணத்தில் ஏதோ பிடிப்பு ஏற்பட்டு, இங்கேயே தங்கிவிட்டார். அவரும் ஐயர் தான் என்று சொன்னார்கள். இதனால், எனது கூட்டாளி ஐயரை மற்றெந்த மாஸ்ரராலும் முடியாத விதமாக-

‘ஏண்டா, ஷர்மா….’ என்று கூப்பிட இவரால்- முடிந்தது. 

எங்களைப் பொறுத்தவரையில், சுந்தரராமன் ஒரு விதி விலக்கு, தவளை, எலி, சுறா, நாக்கிளி, கரப்பொத்தான் எல்லாவற்றையும் அளைந்து டிஸெக்ற் செய்கிற பிராமணர். இந்தச் சங்கடம் எங்கள் ஐயருக்கு அப்போது நேரவில்லை. ஸ்பெசிமன்களைப் பார்த்துக் கீறுகிற வேலை மட்டுந்தான் அப்போதைய எங்கள் மட்டத்திற்கு இருந்தது. 

அன்று–அந்த அணில் தொங்கிய அன்று,விசாரணை முடிவில், இரண்டாம் எதிரி விடுதலையானார். ‘செத்த அணிலை” ஐயர்ப்பெடியன் தொட்டிருக்க மாட்டான்’ என்ற முடிவுக்கு. பிரின்சிபல் வந்திருந்தார். அது சரி. அணிலின் தலையில் நான் சுருக்குப் போட்டுக் கொடுக்க, கயிற்றின் மற்ற நுனி யைத்தான் ஐயர் கிழுவங் கொப்பில் கட்டினார். 

ஐந்தாறு வருடங்கள் என் வகுப்பு சகாவாக இருந்து, பிறகு என் நல்ல நண்பனாகவும் இருக்கிற இந்த, ஜே.கே. சர்மா என்கிற ஐயர் சம்பந்தமாக என்றைக்கும் எனக்கு. முதலில் நினைவுக்கு வருவது, இந்த அணில் விவகாரந்தான். பிறகு, சுந்தரராமன். 

5 

நாக்கிளிப் புழுவுக்கு உடலெங்கும் ‘ஸீற்றா’ இருக்கிறது ஸீற்ற– பற்ற உதவும் சின்னமுள்ளு. நீளமாக இழுபட்ட ‘எஸ்’ வடிவம். ஸீற்றாவைக் கரும்பலகையிற் கீறிக் காட்டி, அதன் செயற்பாட்டையும் சுந்தரராமன் விளக்கிக் கொண் டி தந்தார். 

‘இட்ஈஸ் எல்லோயிஷ் இன் கலர்……..’ 

‘க்ளுக்’ என்று சிரித்தார் ஐயர். அமைதியாக இருந்த, வகுப்பில் இது பெரிதாக ஒலித்தது. 

சுந்தரராமன் கையிலிருந்த சோக்கட்டியை மேசையில் விசிறி விட்டுத் திரும்பியபோது, ஐயர் சொண்டைக் கடித்துக் கொண்டு கரும்பலகையிலிருந்த ஸீற்றாவைப் பார்த்து, தனது கொப்பியில் வலு ஸீரியஸாகக் கீறிக் கொண்டிருந்தார். 

‘ஏண்டா. ஷர்மா….?’ சுந்தரராமன் கிட்டவந்து. ஐயருக்கு முன்னால் நின்று கேட்டார். 

‘…ஏன் சிரிச்சே, நீ?’ 

‘ஒண்டுமில்லை சேர்….’ எழும்பி நின்று. இணக்கமான புன்சிரிப்புடன் சொன்னார், ஐயர். காது நுனிகள் செவ்வரத்தம் பூவாய்ச் சிவந்திருந்தன. 

‘சொல்லு…. ஒய் டூ யூ லாஃப்?’

ஐயரால் இப்போதும் தாங்க முடியவில்லை. அடுத்தாட்டம் கிளுக்கிட்டார். 

சுந்தரராமனுக்கு எப்படி இருந்திருக்கும்? 

சளாரென்று கன்னந்தில் ஒரு அடியும், பாடம் முடியும் மட்டும் ஐயர் -ஒரு ஜி. ஸி. ஈ. வகுப்பு மாணவன்-முழங்காலில் நின்றதுமாய் இந்தச் சம்பவம் முடிவடைந்தது. 

தன்னை மீறி வந்த சிரிப்புகளுக்காக, ஐயர் கனகாலம் கழிவிரக்கப்பட்டுக் கொண்டிந்ததை நானறிவேன். -ஆனாலும் இரண்டு விஷயங்களை நினைத்து, அதனூடே அவர் ஆறுதலுங் கொண்டார்: ஒன்று, சிரித்த காரணம் சுந்தர ராமன் மாஸ்ரருக்குத் தெரியாமலே போனது; மற்றது தான் வாங்கிய அடி. 

ஐயரை நான் முதலிற் சந்தித்தது, ஐம்பந்தெட்டாம் ஆண்டில், அது வடிவாக நினைவிருக்கும். அப்போது நாங்கள் ஏழாம் வகுப்பு. ‘கப்பலேறிய தமிழர்கள்’ என்று எங்களால் பிறகு அழைக்கப்படத் தொடங்கிய எட்டுப் பேரில் ஒருவராக இவரும் வந்தார். 

அந்த ஆண்டுக் கலவரத்தால் கொழும்புப் பள்ளி களுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஊரோடு வந்த இந்த எண்மருக்கும் எங்களுக்கும் முக்கியமாக மூன்று வித்தியா சங்களிருந்தன. தமிழில் இங்லீஷில் காலில். 

எட்டாம் வகுப்புக்கு வருவதற்குள்ளாகவே ஐயர் என் நெருங்கிய கூட்டாளியாகிப் போனார். எங்களுக்குள் முதலில் ஒத்துப் போனது சாப்பாடு 

தினசரி மத்தியான நேரத்தில், சரைகளையும் சாப் பாட்டுப் பெட்டிகளையும் வாங்குகளில் திறந்து வைத்துக் கொண்டு பெடியன்கள் வெட்டத் தொடங்குகிற வேனைகளில் எனக்குப் பக்கத்தில்தான் அவரால் பயமில்லாமல் உட்கார்ந்து சாப்பிட முடிந்தது. நான் பிறவிச் சைவம். 

முந்திப் படித்த பள்ளி, பழைய சிநேகிதர்கள், தெஹி வளையில் குடியிருந்த வீடு தகப்பனின் உத்தியோகம், தங்கள் குடும்பம், கலவர காலத்திற் தாங்கள் பட்ட அந்தரம், றோயல் கல்லூரி அகதி முகாம், கப்பற்பயணத்தில் காய்ச் சலும் சத்தியும் வந்தது. காங்கேசன் துறையில் இறங்கியது என்று எல்லாவற்றையும் அவர் எனக்குப் பரிச்சயமாக்கி விட்டிருந்தார். 

குழப்படிகளிலும் சாப்பாட்டிலும் மாத்திரந்தான் என் றில்லை, அந்தச் செத்த அணிலை நாங்கள் அவ்வளவு அலங் கோலம் பண்ணி அவமதித்திருக்கக் கூடாது என்று, அதன் தற்கொலைக்கு அடுத்த நாளில் அதன்பால் இரக்கங் கொண் டதிலுங்கூட, நாங்கள் ஒத்தேபோனோம். 

ஜி. ஸீ, ஈ, யைத் தாண்டியபிறகு, எங்கள் வழிகள் பிரிந்தன. 

இடையில் கொஞ்சக் காலம், ஆளை ஆள் சந்திக்கக் கூடவில்லை. பிறகு, ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு, ஐயரை மீண்டும் கண்டேன். வேலை மாறிக் கொழும்பிற்கு வந்து விட்டதாயும், வெள்ளவத்தையில் இருப்பதாயும் சொன்னார். நான் மருதானையில் இருந்தேன். 

நகர வாழ்வின் அவதியில், கதைக்கக் கூட முடியாத அவசரங்களில் ஆளை ஆள் சந்திப்போம், எப்போதாவது, எங்கேயாவது, பஸ்ஸில், ரயிலில். 

இப்போதும் கிட்டடியில் ஒருதரம் ரயிலில்தான் சந்தித் தேன். எழுபத்தேழு ஓகஸ்டில் கடைசிப் பகுதி. ஒரு வியாழக் கிழமை. 

அந்த நாட்களில் வீசிக்கொண்டிருந்த பெரும் புயலில் -அது தந்த கலக்கத்தில் – எந்த நிமிடம் என்ன ஆகுமோ என்ற அந்தரந் தாங்க முடியாமல், வருவது வரட்டும் என்ற முடிவுடன். நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டிருந்தேன். 

கோட்டை ஸ்ரேஷனில் ரயிலைப் பார்த்துக் காத்திருந்த கும்பலில் ஜே. கே. சர்மாவும் இருந்தார். 

இம்முறை, அகதி முகாமுக்குப் போகாமலே வந்து விட்டதாகச் சொன்னார். 

– மல்லிகை, ஏப்ரல் 1979.

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *