இ(எ)ப்படியும்…




காலை மணி 10.00. அந்த நகரத்தின் பிரதான அஞ்சல் அலுவலகம் ரொம்ப சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
அழுக்கு வேட்டி சட்டை, தோளில் துண்டு. ஐம்பது வயது பெரியவர் கையில் உள் நாட்டு கடிதத்துடன் படி ஏறி சுற்றும் முற்றும் பார்த்தார் எல்லா கௌண்டர்களிலும் மக்கள் வரிசை. ஓரமான பெஞ்சில் நாலைந்து பேர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை அணுகினார்.
”ஐயா!” முதலில் எழுதியவனை அழைத்தார்.
இளைஞன் நிமிர்ந்தான்.
”ரெண்டு வரி எழுதனும் தம்பி !” தன் கை கடிதத்தை நீட்டினார்.
”மன்னிக்கனும். அந்த மூலையில ஒருத்தர் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு உதவ எழுதறார். ஒத்த ரூபாய் கொடுத்தால் போதும் காரியம் முடியும். ” சொல்லி அவன் தன் வேலையைத் தொடர்ந்தான்.
நகர்ந்தார்.
அவனை நாலைந்து பேர்கள் சூழ்ந்திருந்தார்கள். இரண்டொருத்தர் மணி ஆர்டருடன் நின்றார்கள். ஒரு பெரியவர் சொல்ல அவன் எழுதிக்கொண்டிருந்தான்.
அவர்களெல்லாம் வேலை முடித்துச் சென்ற பிறகு கடைசியாக இவர் நீட்டினார்.
”யாருக்கு எழுதனும் ? ”
”பையனுக்கு தம்பி.”
”விபரம் சொல்லுங்க ? ”
”பையன் திருச்சி கம்பன் நகர்ல கார் வீடுன்னு நல்ல வாய்ப்பு வசதியாய் இருக்கான். மாசம் அம்பதாயிரம் சம்பளம். பெத்த அம்மா அப்பாவுக்கு பத்து பைசா அனுப்ப மாட்டேன்கிறான். அம்மாவுக்கு உடம்பு சரி இல்லே. அம்பதாயிரம் உடனே அனுப்பு. அப்பா ஆறுமுகம்ன்னு வாசகமா எழுதிக் கொடுங்க.” சொன்னார்.
அவன் கடகடவென்று முடித்து விலாசத்தையும் கேட்டு எழுதி ஒட்டி ”அந்த செவப்பு பொட்டியில போட்டுட்டுப் போங்க” நீட்டினான்.
வாங்கிய பெரியவர் அந்த அஞ்சல் பெட்டி வரை சென்று கடிதத்தைப் போடாமல் திரும்பி அவனிடம் வந்தார்.
செல் பேசிக் கொண்டிருந்தவன் கொஞ்சம் கலவரமாகி, ”என்ன பெரியவரே ? ” என்றான்.
அவர் பேசவில்லை. மாறாக ஓங்கி அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தார்.
”எழுந்திருடா ஸ்டேசனுக்கு!” சட்டையைப் பிடித்து ஆளைக் கொத்தாகத் தூக்கினார்.
சத்தம் கேட்டு அங்குள்ள மக்கள் ஓடி வந்தார்கள்.
”படிக்காதவங்க வெள்ளந்தியா விபரம் சொன்னால்… அதை கூட்டாளிங்ககிட்ட கைபேசியில் உடனடியாய்ப் போட்டுக் கொடுத்து கொள்ளையடிக்கிற கும்பலை வேறோடு பிடிக்க வந்த இன்ஸ்பெக்டர் தனசேகர் நான். நட ஸ்டேசனுக்கு.” கத்தி ஆளை தரதரவென்று இழுத்துச் சென்றார்.
‘எப்படியெல்லாம் பிழைப்பு!’ மக்கள் உறைந்தார்கள்.