ஆவி
(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவசர அவசரமாக அந்த அறை மங்கலான வெளிச்சமுள்ளதாக மாற்றப்பட்டது. நான்கு பக்கமும் உள்ள வழிகளில் திரைச்சீலைகள் யாவும் முழுவதாக நீட்டி விடப்பட்டது. பக்கத்து அறையில் இருந்து ஸ்ரீபரவவிடப்பட்ட ஒளிக் கீற்றுக்கள் திரைச்சீலைகள் ஊடே புள்ளிகளாக அறை முழுவதும் ஒளியைப் பாய்ச்சின.
கரம்போட் காய்கள் அகற்றப்பட்டன. நடுவிலே ஒரு ரம்ளர். வளைத்து ஆங்கில எழுத்துக்கள் இருபத்தாறும் வைக்கப்பட்டன.
நண்பர்களின் தலைவன் ஆவியுலகத் தலைவரிடம் அனுமதி பெற்றார். ரம்ளர் மெதுவாக அசைந்தது.
ஹலோ கவ் ஆர் யூ? என அவர் கேட்டார்.
பதில் இல்லை .
வட்ஸ் யுவ நேம்?…………
வெள்ளையம்மா. எனப் பதில் வந்தது.
அதர் நேம்ஸ்? மாடு எனப் பதில் வந்தது.
யூமீன் நாலுகால் , வால்?
யெஸ் யெஸ்.
கௌ டிப் யூ டை?
சூய்சைட்.
வாவ் வட் ஏ சர்பிறைஸ்
என்னதான் நடந்தது எனக் கேட்கிறீர்களா
வெள்ளையம்மா எனும் பசு மழை மேகத்தைக் கண்டு வேகமாக மேய்ந்தது.
அதனுடைய கன்று நுனிப் புற்களைக் கடித்து கடித்து விளையாடியது.
தாய்ப்பசு கன்றைப் பார்த்துப் பார்த்து கவனமாக மேய்ந்தது.
இருட்டிக் கொண்டது. நாளைக்கு தன்னுடைய கன்றுக்கு நல்ல பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக வெள்ளையம்மா இன்னும் கொஞ்சம் மேய வேண்டியிருந்தது.
கண் தப்பினா கரணம் என்பது போல அந்தக் கதை நடந்து விட்டது.
குதுகலமாகத் துள்ளிக் குதித்த அந்தக் கன்று தாயின் மடியை முட்டிவிட்டது. மாடு குப்புறக் கவிண்டது,.
அப்படி என்னதான் நடந்தது.
ஏற்கனவே மிதி, வெடியில் அகப்பட்ட வெள்ளைக்கு முன் கால் ஒன்றில்லை. யுத்த காலப் பசுக்களுக்கு பகுத்தறிவு வந்துவிட்டது.
விழுந்த மாடு எழும்பவில்லை .
அது தீவிரமாகச் சிந்தித்தது. கேவலம் கேவலம். கன்னி நாகாக இருந்து கருக்கொண்ட போது மட்டும் நான்கு கால்களாக இருந்தன?
கன்று கதறியது. தாய் மூர்ச்சையாகியது. மடி தானாகவே பீச்சியடித்தது. ஆவி அகதிதோ புறத்தோ என அறிய முடியாத நிலை,
நான் ஏன் இன்னும் இருக்க வேண்டும். முதலாவது கன்றின் வேலையே தாங்காத நான் ஒரு தாயா என்று வெள்ளை நினைத்தது. மூச்சை அடக்கி சாக நினைத்தது. கன்றின் அம்மா எனும் ஒலி மீண்டும் தாயின் தலையினை அசைத்தது.
என்றாலும் தான் தற்கொலை செய்வது என்று முடிவெடுத்தது வெள்ளை:
மழை திடீரெனக் கொட்டத் தொடங்கியது. வெள்ளை படுத்துக் கிடந்த இடம் வெள்ளக் காடாகியது.
நோ றிலேசன்ஸ்?
வண் சிமோள் காவ்.
வெயா இஸ் இற்?
நிய மை வொடி.
நோ பியூணறல்?
ஜ டோனற் நோ.. ஏய் வெய்ற்,
ரம்ளர் நின்று விட்டது.
ஆவி மீண்டும் வெளியே வந்தது.
தன்னுடைய உடலைச் சுற்றிக் கொண்டு பக்கத்தில் நடப்பதை நன்றாக உற்றுப் பார்த்தது.
மழை கொட்டிக் கொண்டிருந்தது. நல்ல கொழு கொழுப்பான வெள்ளை உருவங்கள் இரண்டு வளர்ந்த புற்களின் நடுவே அசைந்து வந்தன. தொடர்ச்சியாக ஒருவர் அனுங்கிக் கொண்டிருந்தார். மற்றவரின் கைத்தாங்கலில் அனுங்கியவர் இருந்தார். வெள்ளையின் ஆவி கண்களைத் தீட்டிக் கொண்டது அவை தீட்சண்ணியமாயின.
அனுங்கிய உருவத்தில் இருந்து ………..?
ஏதோ ஒன்று புவியில் விழுந்தது. பொலித்தீன் மாதிரி இருந்தது. சாடையாக அசைந்தது. பெரிய உருவம் அவசர அவசரமாக ஏதோ செய்தது.
வந்தவர்கள் இருவரும் வெள்ளையின் உடலைப் பெரிய கல்லாக நினைத்திருக்க வேண்டும்.
மீண்டும் இரு உருவங்களும் வந்த வழியே அசைந்தன.
வெள்ளையின் ஆவி நன்றாகப் பார்த்தது அவை மனித உருவங்களே. மீண்டும் வெள்ளையின் ஆவி அவர்கள் விட்டுச் சென்ற பொருளைப் பார்த்தது. அது ஒரு புதிய உருப்படி.
இப்பொழுது வெள்ளையின் ஆவி தனது முடிவை மாற்றிக் கொண்டது.
வெள்ளையின் மூக்கெல்லாம் நீர் நிரம்பியது. வெள்ளையின் உயிர் பிரிந்தது.
ஆவி மெதுவாக மேல் நோக்கிக் கிளம்பியது.
அந்த நேரம் பார்த்துத்தான் அந்த நண்பர்கள் ஆவியினை அழைத்திருந்தனர்.
ஆவி அறைக்குள் என்ன நடக்கிறது எனப் பார்ப்போமா!
அது தன்னுடைய உடலில் மூக்கு வழியே மீண்டும் புகுந்தது. மீண்டும் தலையைக் கிளப்பியது வெள்ளை .
மூன்று காலிலே வெள்ளையம்மா எழுந்து நின்று அம்மா என்றது.
தூரத்தில் அவர்கள் இருவரும் மலைத்து நின்றனர்.
அங்கே ‘கிடந்த பை வெடித்துத் சிதறியது. ஓரு வெளிச்சம் மேலெழுந்தது
நீல ஒளிக்கீற்று ஒன்று நண்பர்களின் ஆவி அறையினுள் புகுந்தது, அவர்கள் மீண்டும் ஹவ் ஆர் யூ என்றனர்….வட்ஸ் யுவ நேம்? என்றனர் நோ நேம் காட்டியது.
– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு.