ஆறுதலா ஒரு வார்த்தை…

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 17,783 
 
 

மீனாட்சி சுந்தரம் இல்லம்,

மதுரை – அனுப்பனடி – கிழக்கு தெருவில்,

காலை எழுந்ததில் இருந்து , பம்பரமாய் வேலை பார்த்து கொண்டிருந்தாள் ராகவி.

வீட்டு வேலைகளை பார்த்து , குழந்தைகளை எழுப்பி , அவர்களுக்கு சாப்பாடு தயார் செய்து , பள்ளிகூடத்திற்கு செல்லும் வாகனத்தில் கொண்டு சென்று விட்டு வரும் வரை அந்த பரபரப்பு ஓயாது.

பிறகு வீட்டிற்கு வந்து கணவன் பிரசாத்தை எழுப்பி , அலுவலகத்திற்கு செல்ல தயார் செய்து, அனுப்பி வைத்த பிறகு சற்று பரபரப்பு குறையும். அதன் பின் தனிமையில் வீட்டு வேலைகளை பார்த்து விட்டு மதியம் சிறு தூக்கம் போடுவாள் ராகவி.

குட்டி தூக்கம் அசத்தும் நேரம் , பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பிள்ளைகளை சென்று பேருந்து நிறுத்தத்தில் சென்று அழைத்து வர வேண்டும். மீண்டும் அவர்களுக்கு பணிவிடை செய்து நேரம் சரியாக போய்விடும். மீண்டும் அடுப்பங்கரை இரவு தூங்க செல்லும் வரை அசராமல் வேலை பார்ப்பாள் ராகவி.

மொத்தத்தில் சம்பளம் வாங்காத வீட்டு வேலைக்காரி ராகவி.

இன்று காலை எட்டு மணிக்கு மேல்,

பிள்ளைகளை பள்ளி பேருந்தில் ஏற்றி விட்டு, அவசரமாக வீட்டிற்கு வந்தாள் ராகவி.

கணவன் பிரசாத் , எழுந்து குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்து இருந்தான்.

“என்னங்க ரெடியா. இதோ வந்துட்டேன். ஸ்கூல் பஸ் வர லேட் ஆய்ருச்சு. சரி உட்காருங்க சாப்பிட “ என்று தட்டை எடுத்து பரிமாற ஆரம்பித்தாள் ராகவி.

அவள் பேசியதை காதில் வாங்காமல் செல் போனை பார்த்த படி அமர்ந்து இருந்தான் பிரசாத்.

சாப்பாடை பரிமாறினாள் ராகவி. செல்போனை நோண்டிய படி சாப்பிட ஆரம்பித்தான் பிரசாத்.

“என்னடி , சாப்பாடு ? பார்க்கிறது ஒரு வேலை , அத கூட ஒழுங்கா பண்ண தெரியாதா ? இத தான் பிள்ளைகளும் கொண்டு போயிருக்கா ? உப்பு இல்ல , ஒரு மாதிரி சப்புன்னு இருக்கு” என்று கூறி சாப்பாடு தட்டை , கோவத்தில் வீசி எறிந்தான் பிரசாத்.

ராகவிக்கு , இது பழகி போனது போல் இருந்தது. ஒரு நாள் பொழுது பாராட்டியது இல்லை. குறை மட்டுமே சொல்லுவார் என்பது தெரியும். இருந்தாலும் அதனை காட்டி கொள்ளாமல் இருப்பாள் ராகவி.

“என்னங்க , பிள்ளைகளுக்கு உப்பு , உரப்பு கொஞ்சம் கம்மியா போட்டு செஞ்சேன். அத மறந்தாபில உங்களுக்கும் வச்சிட்டேன். மன்னிச்சிருங்க , இருங்க உப்பு போட்டு கொண்டு வந்து தாரேன் “ என்று ராகவி கூறினாள்.

“அதெல்லாம் தேவை இல்லை. நீயும் உன் சாப்பாடு ! “ என்று கோவமாக அலுவலகம் புறப்பட்டான் பிரசாத்.

ராகவி சமைத்த சாப்பாடை அலுவலகத்திற்கு கூட கொண்டு செல்லாமல் புறப்பட்டான் பிரசாத்.

“என்ன மனுசனோ? திடிர்னு கோவம் வந்தா சாப்பாடை இப்படி தட்டி விட்டு போறாரு , வேலை பாரக்கிறவளுக்கு தான் கஷ்டம் தெரியும். என்னைக்காவது ஒரு நாள் ஆறுதலா வார்த்தை சொல்லிருப்பீங்களா ? கல்யாணம் ஆகி எட்டு வருசத்தில “ என்று ராகவி புலம்பினாள்.

அதனை காதில் வாங்கி விட்டு அவளை முறைத்த படி, “நீ பார்க்கிற வேலை தான சமைக்கிறது, அதை கூட உருப்படியா பார்க்க முடியாது , உனக்கு ஆறுதல் வார்த்தை வேற சொல்ல வேண்டியதுதான் “ என்று நாக்கை துருத்திய படி , வீட்டில் இருந்து அலுவலகம் புறப்பட்டான் பிரசாத்.

அண்ணா நகர் ,

அலுவலகம் சென்றான் பிரசாத். தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிகிறான் பிரசாத்.

“பிரசாத் , உன்னை மேனேஜர் வர சொன்னார் “ என்று அலுவலக நண்பர் ஒருவர் கூறினார்.

“மேனஜர் அதுக்குள்ள வந்துட்டாரா.? இதோ போறேன். “ என்று கூறி விட்டு மேனஜர் அறையை நோக்கி நகர்ந்தான்.

உள்ளே நுழைந்தான் பிரசாத். பிரசாத்தை பார்த்ததும் மேனஜர் கோவமாக டேபிள் மீது இருந்த ஃபைலை தூக்கி எறிந்தார்.

“என்ன பிரசாத் , A1 நிறுவன கணக்கு தவறாக வரவு வச்சிருக்கீங்க , பார்ட்டி கிட்ட பேச முடியல , என்ன கவனத்தில் வேலை பார்க்கிறீங்க. உங்களால பார்க்க முடியலைன்னா சொல்லுங்க நான் வேற கம்பெனி பார்த்துகிறேன் என்று சொல்ற அளவுக்கா வேலை பார்ப்பது. அவர்களை சமாதானம் பண்ண முடியல. நீங்க உருப்படியா பார்க்கிற ஒரு வேலைய கூட உங்களால சரியா பார்க்க முடியாதா?. இந்தாங்க சரி பண்ணிட்டு வாங்க. அந்த A1 நிறுவனத்திடம் இனிமே இப்படி தப்பு நடக்காது என்று சொல்லி மன்னிப்பு கேளுங்க” என்று மேனஜர் கோவமா பேசி கூறி அனுப்பினார்.

காலையில் அலுவலகம் நுழைந்ததுமே இப்படி மேனஜரிடம் திட்டு வாங்கியது பிரசாத்துக்கு கோவத்தை அதிகபடுத்தியது.முகம் வெளுத்து போனவனாய் வெளியில் வந்தான் பிரசாத். அவனையே அலுவலகத்தில் உள்ள அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர்.

பிரசாத்தின் மனதில் “ எவ்வளோ வேலை நல்லா பார்க்கிறேன் , அதெல்லாம் கண்ணுக்கு தெரியல , ஒரு தப்பு பண்ணதுக்கு , மன்னிப்பு கேளுன்னு சொல்றான். நீ பார்க்கிற வேலை இதை கூட , சரியா பண்ண மாட்டியான்னு கேக்குறான். நல்லா பார்த்த வேலைக்கு ஒரு பாராட்டோ இல்ல ஆறுதலா பேசவோ மாட்டான். வைய தான் தெரியும். அதிகாரத்தில் இருக்கிற திமிரு. “ என்று புலம்பிய படி அந்த பைலை சரி செய்ய ஆரம்பித்தான் பிரசாத்.

அப்படி புலம்பும் போது தான் இதே வார்த்தையை தானே வீட்டில் ராகவியிடம் கூறினேன் என்று தோன்றியது.

“அந்த வார்த்தை எனக்கு வலிப்பது போல தான அவளுக்கும் வலித்திருக்கும்.”

“ நான் வேற ரொம்ப பேசிட்டேன் , அதனை சிரித்த படி சமாளித்தாள் என் ராகவி. அவளை ஒரு நாள் பொழுது நான் பாராட்டியது இல்லை.”

“அந்த பாராட்டையோ இல்லை ஆறுதல் வார்த்தையோ அவள் எதிர்பார்த்ததாக கூட தெரியவில்லை. அவள் அதனை எனக்காகவும் , என் பிள்ளைகளுக்க்காகவும் தன் கடமை என்று நினைத்து செய்து கொண்டு இருக்கிறாள்.”

“அவளின் அருமை இந்த மாதிரி அதிகாரத்தில் இருப்பவர்கள் நம்மை கோவ படுத்தும் தான் தெரிகிறது.” என்று திடீர் ஞானம் பிறந்தவனாய் பிரசாத்.

உடனே மனைவி ராகவியிடம் மன்னிப்பு கேட்க செல் போனை எடுத்தான் பிரசாத்.

வீட்டில் இருந்து நமக்காக வீட்டு வேலை பார்த்து, நம்மை பேணி , வழி நடத்தும் அம்மா , அக்கா , தங்கை , மனைவி என்று யாராக இருப்பினும் அவர்களுக்கு தகுந்த மரியாதை தருவோம். உதாசினம் படுத்த வேண்டாம்.

அவர்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை , திட்டாமல் ஆறுதலா ஒரு வார்த்தை பேசலாம். அதனால் நமக்கு ஒன்றும் குறைந்து விட போவது இல்லை.

நம் அதிகாரத்தை அவர்களிடம் திணிக்க வேண்டாம்.

ஊதியம் பெறாத வீட்டு வேலைகாரிகளாய் இருப்பவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *