ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை




(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழனிமுத்துவின் சிந்தனை வலைப் பின்னலாய்த் தொடர்ந்தது, ஆழமாகச் சிந்திக்கத் தெரியாததால் சிந்தனை வலையிற் சிக்கல் மிகுந்தது!
அவன் அப்படி என்ன தவறு! செய்து விட்டான்?!
தனக்குச் சரியெனப் பட்டதைச் செய்தான். தவறென்று உணர்ந்ததை எதிர்த்தான். நிர்த்தாட்சண்யமாக எதிர்த் தான். அவன் சார்ந்திருக்கும் தொழிற்சங்கம் அவனை ஆதரித்து நின்றது.
அதன் பயனாக, அடேயப்பா! என்னென்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டிருக்கின்றன.
தேயிலைத் தோட்டத்து ஸ்டோரிலே தொழில் செய்கிற சாதாரண தொழிலாளிகளில் அவனும் ஒருவன். முறையான வேலை நேரம். நியாயமான ‘மணிக்காசு” அளவான வேலை தங்களுக்குக் கிடைப்பதில்லை என்ற குறைபாடு அவர்களுக்கு நெடுநாட்களாகவே உண்டு.
என்றாலும் அது முக்கலாய், முனகலாய் வெளிப்படுவ தோடு சரி. வாழ்க்கைச் செலவு கட்டிவராத அளவுக்குப் பெருகிவிட்ட போதிலும், வயிற்றைக்கட்டி, வாயைக் கட்டி வாழும் மனிதராசிகளாற் சுமக்க முடியாத வேலைப்பளு அதிகரித்தபோதும், அது வெடித்துக் கிளம்பியது. அவர்களது ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தால் வேலைத்தலமே குழம்பிப் போயிற்று.
தோட்டத்தின் நிலைக்களனே தொழிற்சாலைதான். அது இயங்காது போய்விட்டால், தோட்டமெங்கணும் பூத்துக் குலுங்குகிற பசுமையும், பொங்கி வழிகிற ரம்மியமும் காட்டில் எறித்த நிலவுதான்.
விஜயதுங்கவால் இதை சகித்துக்கொள்ள முடியவில்லை. எண்ணி இரண்டே ஆண்டுகள்-இந்தத் தோட்டத்துச் “சுப்பிரண்டன்’” தொழிலில் இழுபறியாவதிலும் பார்க்க கம்பெனி டைரக்டராகிக் கொழும்பில் உல்லாசமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசைக்கு மண் தூவிவிட்டது அந்த “ஸ்ட்ரைக்’
”என் பதவிதான் பறிபோயிற்று. குழந்தை அழுவதைக் கேட்க அவர்களின் வாழ்க்கையையே பழி வாங்கிவிடு கிறேன்.’ விஜயதுங்கவின் நெஞ்சில் வன்மம் குடி புகுந்தது.
பழனிமுத்துவின் மீது பழி விழுந்தது. தொழிற்சாலை யைத் தாக்கித் தகர்த்துவிடத் திட்டமிட்டிருந்ததாக. அவன் தானே “ஸ்ட்ரைக்” கை முன் நின்று நடத்தியவன். பழி சுமத்தியவர் தோட்டத்து நிர்வாகிதான் என்றாலும் நீதியும் நியாயமும் வளைகிற வரைக்கு தாமே வளையலாம். ஏழு நாள் தடுப்புக் காவலில் எதுவும் ருசுவாகவில்லை என்று அவனை வெளியே அனுப்பிவிட்டார்கள்.
பொசுக்கும் தணலாய்ப் பொங்கி வருகிற உணர்ச்சி பழனிமுத்துவுக்கு.
பட்டுத் தெளிந்தவுடன் பழக்கமாகிவிடும் மனித உணர்ச்சி. பழிக்கும் பாவத்துக்கும் ஆளாகும்போது, பீறிட்டு எழும் வேகம் அலாதியானதுதான்.
நியாயத்தைக் கேட்டதற்காக இப்படி ஓர் அபாண்டமான பழியா? உழைத்து உருத்தெரியாமற் போகின்ற சமுதாயத்தில் உரிமை கேட்டாலும் ஒழிந்து போகவேண்டியது தானா?
அவனால் தாள முடியவில்லை.
மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானது.
“விஸ்கி” போதை ஊட்டுவதாக இல்லை. கையிலிருந்த சிகரெட்டை அலட்சியமாக வீசி எறிந்துவிட்டு இன்னொரு கிளாஸை நிரப்பினார் விஜயதுங்க. நினைத்ததைச் செய்து காட்டிவிட்ட எக்களிப்பு அவருக்கு. தரையில் கிடந்து புகைந்து கொண்டிருந்தது சிகரெட்,
தனது சப்பாத்துக் காலால் அதை அழுத்தி நசுக்சித் திருகினார் புகைவதும் நின்று போனது. வெள்ளைக்கு மேலாக, ஒரு பக்க நுனியில் மங்கலாய் நசுங்கி தெரிந்த கறுப்பால், பொசுங்கிக் கிடப்பது சிகரெட் என்று தெரியுமள வுக்கு சிதைந்து போன சிகரெட்டைப் போலத்தான் பழனி முத்துவும்.
அவனது நினைவே அவருக்கு வேம்பாய்க் கசந்தது.
“ஆகக்கூடினா, ஒரு கூலிக்காரப் பயல் என்னை எதிர்த்துக் கோர்ட்டில் மான நஷ்ட வழக்குப் போடுற அள வுக்குத் துணிச்சல் வந்திருக்குன்னால் அன்னைக்கே அவனை வெட்டிப் பொதைச்சிருக்கணும் ஓ… இப்ப மட்டும் என்ன? நாளைக்கே அவனுக்கு “நோட்டீஸ்’ கொடுக்க வேண்டியது. தான். டிஸ்ட்ரிக் கோர்ட்டில் வழக்குத் தங்களுக்குச் சாதக மாக முடிந்திருப்பதாக கேள்விப்பட்டதுமே ‘எல்லாரோ” தனக்கு டெலிபோன் பண்ணி இருந்தது அவருக்கு அத்தனைப் போதையிலும் நினைவிருந்தது.
இந்த நினைப்பே போதையூட்டியது பழனிமுத்துவுக்கு. ஓயாது உடலால் உழைத்தே பழகிப்போன அவனுக்கு. ஒன்றரை வருடங்களாக மனதாலும் மூளையாலும் உழைத்துச் சலித்துப் போய்விட்டது.
இவன் தொய்ந்தும் போனான். தோல்விக்குமேல் தோல்வி. விழிகள் நிலைகுத்தி நிற்குமளவுக்கு அவனுக்கு வெறுப்பு மேலிட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக துரைக்கு எதிராக அவன் தாக்கல் செய்திருந்த வழக்கில் – தன் மீது பொய்க் குற்றம் சாட்டிய விஜயதுங்க துரைக்கு எதிராகப் போட்டிருந்த மான நஷ்ட வழக்கில் அவனுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அதையே குற்றமாக்கொண்டு அவனை வேலையிலிருந்து’ ‘நோட்டீஸ்” கொடுத்திருந்தார்கள். அதை எதிர்த்து தொழில் கோர்ட்டில் செல்திருந்த வழக்கிலும் இன்று அவ னுக்குக் கிடைத்தது தோல்வி.
அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒன்றரை வருடங்களாக பட்ட பாடெல்லாம் இதற்குத்தானா?
“தோட்ட நிர்வாகி என்ற முறையிலும், தொழில் தரு. கின்றவர் என்ற விதத்திலும் தொழில் செய்யும் தளத்தில் அமைதி நிலவுவதற்கு ஏற்ப பழனிமுத்து வேலை நீக்கம் செய்யப்பட்டது சரி” என்று தொழில் நீதிமன்ற தலைவர் தீர்ப்பு கூறி இருந்ததும், “தோட்ட நிர்வாகி தனக்கெதிராக பொலீஸில் முறையிட்டதால் தன்னுடைய மானம் பறிக்கப் பட்டதாகக் கூறுவது ஒத்துக்கொள்ள முடியாதது” என்று மாவட்ட நீதிபதி அளித்த தீர்ப்பும், சிலந்திக் கால்களாக்கிச் சிந்தனை வலை பின்னின.
“தொரையோட ஏங்க நாம் மோதிக்கனும். நாமுண்டு- நம்ம பாடுண்டுன்னு இருந்திட்டு போவோம்’ என்று நகை யும் நட்டுமாய் இருந்து சொன்னவள் இன்று மஞ்சள் கயிற் றோடும், கண்ணாடி வளையலோடும், “நமக்கு ஏன் இந்த வம்பெல்லாம், நான் அப்பவே சொன்னேன். கேட்டீங் களா?” என்று புலம்பி நிற்கிறாள்.
பழனிமுத்துவுக்குத் தன் மனைவியின் நிலைமை புரியாம லில்லை. சங்கம் என்றும் வழக்கு என்றும் நாள் தோறும் டவுனுக்குப் போய் வருவது அவனுக்கு இரண்டு குழந்தை களோடும், அக்கம் பக்கம் ஆளுக்கொன்றாய் பழனிமுத்துவின் சவடாலை பரிகசித்துத் தள்ளும் சனங்களோடும் “நம் முடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே” என்ற கவலை.
“தொழிலுக்குத் தொழிலும்போய் இப்போது இருக்கவே இடம் இல்லாமலும் போய்விட்டதே” என்ற நியாயமான பயத்தில் லயத்து காம்பராவுக்குள்ளேயே உலகை அமைத்துக் கொள்ளத் துடிக்கும் ஏழைப் பெண்ணான தன் மனைவியின் தவிப்பு-சில சமயங்களில் அவனுக்குத் தடுமாற்றத்தை ஏற் படுத்துவதுமுண்டு.
உண்மையில் நான் தவறுதான் செய்து விட்டேனா?
ஆத்திர உணர்ச்சியிலும், ஆவேசத் துடிப்பிலும் செய லாற்றத் துணிந்த தன் காரியத்தால், அமைதியும் லயமும் மிகுந்த குடும்ப வாழ்க்கையே அழிந்துவிடப் போகிறதோ?
தன்னைத் தேற்றி, தன் மனைவியையும் தேற்றிக் கொள்வதற்கு அவனுக்கு நாளா வட்டத்தில் பழகிப் போயிருந்தது.
“நமது நாளாந்த வாழ்க்கையே பிரச்சினைகள் நிறைந் ததுதான். அவைகளைத்தான் மாற்றிக்கொள்ள மார்க்கம் கிடைக்கவில்லை. எனினும் புதிது புதிதாக உருவாக்கப் படுகிற பிரச்சினைகளையாவது தீர்த்துக் கொள்வதன் மூலம்- தீர்த்துக்கொள்ள முயற்சி செய்வதன் மூலமாவது-தங்கள் வாழ்க்கைப் பாதையில் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் விஷ முட்களை அப்புறப்படுத்த முடியும்” என்று அவன் திடமாக நம்பினான்.
“அந்த விஷ் முட்கள் நம்மை தைக்க நேர்ந்து. புரை யோடி நாம் சாக நேர்ந்தாலும் நம்மைச் சுற்றியிருக்கிற மற்றவர்களையாவது அவைகளினின்றும் காப்பாற்ற நேர லாம்” என்று அவன் தன் மனைவிக்கு ஆறுதல் சொல்வதுண்டு.
முழு மனதோடு அவைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டா லும், தங்கள் குடும்பம் நிர்க்கதியாகிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் அவனுக்கு நம்பிக்கையூட்ட அவள் தவறுவதில்லை.
அவனோடு ‘ஸ்டிரைக்’ ‘கில் ஈடுபட்டிருந்தவர்கள். இன்று விஜயதுங்க துரைக்கு வேண்டியவர்களாகி விட்டார்கள்.
“பழனிமுத்துவைப்போல் நாமும் போயிருந்தால் நமக் கும் இந்தக் கதிதான்’ என்று அவர்கள் கூட்டு மொத்த மாய்ப் பேசித் திரிவதைக் கேட்கையில் அவர்களைக் காறித் துப்பவேண்டும் போலிருக்கும். வக்கற்றவர்கள், வலிக்கிறது என்பதற்காக வலிந்து வருகிற அநீதிகளுக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டுமா?
டிஸ்ட்ரிக் கோர்ட்டிலும் தொழில் கோர்ட்டிலும் கிடைத்த தோல்வியால் துவண்டுபோன தனது கணவனுக்கு தூண்டும் விளக்கானாள் அவள்.
“நம்ம பொழப்பு சந்தி சிரிக்கிறப்படி ஆவப்புடாதுங்க. இன்னைக்கி நம்பளைப் பார்த்துச் சரிக்கிற இந்த திராணி யற்ற ஜன்மங்களுக்கு மத்தியில் நாம மானமும் ரோஷமும் உள்ளவுங்கன்னு எப்படியும் காட்டிபுடனுங்க.
மிரட்சி நிறைந்த பார்வையும், பயம் கலந்த பேச்சும், கலக்கம் மிகுந்த பாவனையுமாக தான் இதுவரை கண்டுவந்த மனைவியா இவள்?
துரையை மாத்திரமல்ல, தொழில் நீதிமன்ற தீர்ப் பையே எதிர்த்து வழக்காடுவதென்று பழனிமுத்து உறுதி செய்துவிட்டான்.
ஓடும் ஆறாக ஒரு வழி சமைத்துக்கொண்ட பின்னர் மேடு பள்ளங்களையும், வளைவு சுளிவுகளையும் கண்டு மலைத்து நிற்பதில் அர்த்தமில்லை. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவானது.
“பட்டது போதாதுபோல இருக்கிது. பூண்டோடு அழிய போறான்”னு தொழிலாளர்கள் பேசத் தலைப்பட்டாலும் விஜயதுங்க மலைத்துப் போனார், பயல் எத்தனை பிடிவாதமாக இருக்கான் என்று!
“இவன் ஒருவனை வளைத்தெடுத்திருந்தால் போதும். தோட்டத்து சனங்களையே நிர்மூலமாக்கிவிட்டிருக்கலாம்!” நவ் இட் இஸ் டூ லேட்.” அவர் தனக்குத்தானே சமா தானம் செய்துகொண்டார்.
அவர், காலங்கடந்த சிந்தனையாக தனக்குப் பட்டதை கடைசி நேரத்திலாவது செய்து பார்த்திருக்கலாம் என்று கவலைப்பட வேண்டியவரானார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியானபோது.
“பழனிமுத்துவை வேலை நீக்கம் செய்தது தவறு. மீண்டும் வேலை கொடுக்க வேண்டும். நஷ்ட ஈட்டுத் தொகையுடன். தோட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது தனது தொழிலாளியால் என்று சந்தேகிக்க துரைக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை தனக்கு ஏற்பட்ட தொல்லை, தன்னுடைய துரையால் வந்தது என்று சந் தேகிக்க பழனிமுத்துவுக்கும் உண்டு!” என்று தீர்ப்பில் கூறப் பட்டது.
பழனிமுத்து நம்பிக்கையோடு மூச்சுவிட்டான்.
அன்றுதான் கரம் பிடித்தது போன்ற மகிழ்ச்சியில் தன் மனைவியை அள்ளி அணைத்துக் கொண்டான்.
அந்த அணைப்புச் சுகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் மட்டும்தாளா? புதிய நம்பிக்கையும் அல்லவா இழைந்தோடுகிறது.
அவள் சொன்னாள்: “நாளையிலே இருந்தே வேலைக்குப் போகப் போறீங்களா? ரெண்டு மூணு நாளைக்கி வீட்டுல இருந்து உடம்ப முதலில் தேத்திக்குங்க.”
அவன் பதில் பேசவில்லை.
விஷ முட்கள் நிறைந்த பாதையில் நாளை முதல் நடக்க மீண்டும் தயாராக வேண்டும்.
பழனிமுத்துவின் சிந்தனை கவலைப் பின்னலாய்த் தொடர்ந்தது.
– 1973
– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.