ஆரோகணம் அவரோகணம்





(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“வணக்கம்”

“வணக்கம் – வாருங்கள்”
”நன்றி”
“இப்படி அமரலாமே-”
“நேற்றிரவு ரெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்குக் கூறியது போல எமது வார வெளியீட்டின் சார்பில் பேட்டி காண வந்துள்ளோம் ”
“நல்லது..”
“தங்களை எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரியும். ஆகவே எமது பத்திரிகை வாயிலாக அறிமுகப்படுத்தி வைப்பது எமது நோக்கமல்ல. அது அவசியமுமல்ல. தங்களின் பேட்டி மூலம் வளர்ந்து வரும் கலைஞர் களுக்கு ஏதாவது பயன் கிடைக்க வேண்டும் என விரும்பு கிறோம். எனவே எமது கேள்விகளையோ, குறுக்கீடு களையோ, எதிர்பாராமல் பயனுள்ள மிக முக்கியமான விடயங்களைப் பற்றி ஆழமாகவும் நுட்பமாகவும் சொன் னால் நன்றாக அமையும்.”
“உங்கள் நோக்கம் எனக்குப் புரிகின்றது. கூடியவரை உங்களது வேண்டுகோளை நிறைவேற்ற முனைகின்றேன்”
“தாங்கள் இசைத்துறையில் மிக நீண்ட காலமாக ஈடுபாடு உடையவராக இருக்கின்றீர்கள், இசைத்துறை யில் ஈடுபடக் காரணம் யாது?
சங்கீத ரசிகர்கள் எந்தவிதமான ஆர்ப்பரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் இன்றி அடங்கிப்போய் இருந்தார் கள். அவர் ருடைய தோற்றங்களிலும் செயற்பாடுகளி லும் சங்கீதம் மணத்தது.
இந்தியாவில் இருந்து சற்று முன்னர்தான் வந்தவர்கள் போல பெண்கள் காணப்பட்டார்கள். பளபளக் கும் சேலைகள் பளீரென மின்னும் நகைகள் அன்ற லர்ந்த மலர்கள் சகிதம் அவர்கள் வெகு சிறப்பாகக் காணப்பட்டார்கள்.
இனிமையான ஒரு எதிர்பார்ப்புடன் எல்லோரும் அமர்ந்திருக்தார்கள். விழிகள் ஆர்வத்துடன் சுழன்று பார்வைகளை எறிய செவிகள் இனிய நாத இசையை செவிமடுக்க துடி துடிக்க, இதயங்கள் இன்பவேதனையை அனுபவிக்கக் காத்து நிற்க, ராஜபார்வையுடன் செல்வி பிரியா கந்தசாமி மேடையில் தோன்றினார்.
சிறு வயதிலேயே எனக்கு சங்கீதம் என்றால் உயிர்……யாராவது பாடும் போது அசையாமல் இருந்து கேட்பேன்.
எனது இந்த ஆர்வம் காரணமாக தகப்ப னார் எனக்கு சங்கீதம் படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார். நானும் வளர, என்னுடைய சங்கீத அறிவும், ஆர்வமும் வளர்ந்தன. இப்படியான உரமிக்க வளர்ச்சியின் அடிப்படையினாலேயே நான் மிகச் சிறந்த இசை மேதையாக விளங்குகின்றேன் என்பதை தெரிவித் துக் கொள்ள விரும்புகின்றேன்.”
“சங்கீதத்தைப் பற்றி…”
“சங்கீதம் என்பது, செவிக்கு இன்பம் தரும் ஒரு புனிதமானகலை. மனிதர்கள் முதற் கொண்டு மிருகங் கள், பண்டிதர்கள், பாமரர்கள், விருத்தர்கள், பாலகர் கள் எல்லோருமே அதனை ரசிக்கின்றார்கள்.
உடல் வெண்பட்டாய் பூத்திருக்க, வதனம் புன்னகை மழைபொழிய நெற்றியிலே வட்டக் கரும் பொட்டு வண்ணமாய் பிரகாசிக்க, காதில் தூங்கிய வளையங்களும் காதோரத்து கார் கூந்தலும் அசைந்தாட, கன்னக் கதுப்புகள் கருஞ்சிவப்பாய் மின்ன மெல்லதரங்கன் மலர செல்வி.பிரியா கந்தசாமி பாட ஆரம்பித்தார்.
“வலசி வச்சி யுன்ன நாபை-சலமுஸேயமே ராஸா மி” என்ற நவராக மாளிகை வர்ணத்துடன் கச்சேரி ஆரம் பிக்க ரசிகர்கள் மெய்மறக்க முனைந்தனர்.
மிருதங்கமும் வயலினும் கடமும் அவர் நாதத்தோடு இணைந்தும், வளைந்தும், நெளிந்தும் மெருகூட்ட கச்சேரி களை கட்டியது.
முன் வரிசையில் இருந்தவர்கள் தங்களை மறந்து தாளம் ‘போடத்தொடங்கினர். ஊனையும், உயிரை யும் உருக்கும் உன்னதமான நாத வெள்ளம் அந்த மண்ட பத்தில் இருந்தவர்களை மயக்கி உணர்ச்சிப் பிரவாகத் தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.
ஏனைய கலைகளுடன் ஒப்பிடுகையில் சங்கீதம் எந்த வகையில் வேறுபடுகின்றது, என்று சொல்ல முடியுமா?”
“கலைகளுக்குள் மிக நுட்பமான கலை சங்கீத மாகும். சிற்பம், சித்திரம், இவற்றைக் கண்ணால் காண லாம். அவற்றைத் திருத்தி அமைக்கலாம். அழித்து எழு தலாம். கவிஞர்கள் தாங்கள் எழுதும் கவிதைகளைக்கூட ஒருமுறை ஏட்டில் எழுதிப்பார்த்துவிட்டு தேவையா னால் பிறகு திருத்தி அமைக்கலாம். ஆனால் சங்கீதக் கலையில் இப்படி எல்லாம் செய்ய முடியாது.சங்கீதம் காற்றினிலே தோன்றிக் காற்றிலேயே மறைந்து விடுகின்றது. அதற்கு உருவம் கிடையாது. கண்ணால் பார்க்க முடியாது, திருத்தி அமைக்க முடியாது என்று பேராசிரி யர் கல்கி அவர்கள் சொன்னதையே நானும் இங்கு சொல்ல விரும்புகின்றேன்.
இசை ரசிகர்களின் கரகோஷம் வானைப் பிளந்தது. அவர்களது ஆனந்தமான பாராட்டுகளைத்தன் புன்ன கையினால் ஏற்றுக் கொண்டார் செல்வி – பிரியா கந்த சாமி. எத்தனை தரம் கேட்டாலும் சற்றும் தெவிட்டாத ஆலாபனை அளவுடனும், அழகுடனும் ஒழுங் கான அமைப்புடனும், அடுக்கடுக்காகவும், செதுக்குவது போலவும், வளைந்தும் குழைந்தும் வழங்கி, மக்களை தன் வசப்படுத்தி செயல் இழக்கச் செய்து கொண்டிருந் தார் தொடர்ந்து முத்தையா பாகவதரின் ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த…
“கங்கணபதே… மோ நமோ…சங்கரி தந்யா… நமோ … நமோ…” என்ற கீர்த்தனை ராஜபாவத்துடனும் உயிரோட்டத்துடனும் எழுந்து மெல்லிய நுண் அலை களாக மண்டபத்தில் இருந்தவர்களின் செவி வழியாகப் புகுந்து இதயநாடிகளை இதமுடன் வருடியது.
அந்தச் சந்தர்ப்பத்திலே மண்டபத்தின் வாசலிலே கார் ஒன்று வந்து நின்றது. அங்கு ரசிகர்களை வர வேற்றுக் கொண்டிருந்த வரவேற்பு குழுவைச் சேர்ந்த எக்கவுண்டன் ஞானஸ்கந்தனும் ரெவிக்கொமினிக்கே ஷன் இன்ஸ்பெக்டர் சாள்ஸ் ரஞ்சித்தும், பரபரப்புடன் காரை நெருங்கினார்கள். பருத்த உருவமும் உயர்ந்த தோற்றமும் உடைய ஒருவரும் வேறு சிலரும் காரை விட்டு இறங்கினார்கள்.
“சங்கீதம் பயலுவதனாம் இசைக் கலைஞராக மாறு வதைவிட வேறு என்ன பலன்களைப் பெறலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?”
“சங்கீதம் பயிலுவதனால், அன்பு, அடக்கம், பக்தி, நட்பு, மனத்திருப்தி முதலிய நற்குணங்கள் விருத்தியாகும் என்று சொல்லப்படுகின்றது கூடவே புத்தி கூர்மை. கற்பனாசக்தி, ஞாபகசக்தி முதலியவையும் ஒருவருக்கு விருத்தியாகும். சங்கீதத்தினால் ஒற்றுமையினை வளர்க்கலாம், அகில உலக மனப்பான்மை ஏற்படும், பல தேசத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் சக்தி சங்கீதத்துக்கு உண்டு எனவும் கூறப்படுகின்றது.”
மதுரமான தெளிவான கவர்ச்சியான குரலையுடைய பிரியா கந்தசாமி மண்டபத்தில் அமர்ந்திருந்த சனங்களை தன்வசம் இழுக்கச் செய்து மகுடியில் மயங்கிய நாகங்களாக மாற்றி ”ஜெகன் மோகினி” ராகத்தில் அமைந்த “ஸோ பில்லு சப்தஸ்வர-அந்தருல பகிம்ப வே மனசா’ என்ற கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருந்தார்.
உடலோடு இயைந்த உயிராக பக்க வாத்தியக்கார ரும், அவரின் இசைக்கு சுவையூட்டினர்.
பிரியாவின் குரல் இளமையும், இனிமையுமாக பொங்கிப் பிரவாகித்தது. மென்மையான மலர்களை உதிர்த்தது. பன்னீரைச் சொரிந்தது. மெருதுவான தென்றலாக உருவெடுத்தது. உணர்ச்சியைக் கிளறும் தாபத்தை உண்டுபண்ணியது. ரோஜாவின் மெதுமையை உணரவைத்தது. மொத்தத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான ஜொலிப்புடன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில்
காரில் வந்திறங்கிய மனிதரை ஞானஸ்கந்தனும் சாள்ஸ் ரஞ்சித்தும் மண்டபத்தினுள் அழைத்து வந்தார்கள்.
“பாடுபவர்கள் எல்லோரும் பக்தி உடையவர்களாக இருக்க வேண்டுமா?”
நிச்சயமாக இசைக்கு அடிப்படை பக்தியாகும். ஏணி எவ்வளவுதான் மேலே சாய்ந்திருந்தாலும் அதன் அடிக்கால் தரையில் நன்றாக ஊன்றியிருக்க வேண்டும். அதேபோல, பக்தியோடுதான் இசை அமைய வேண்டும். மேலும் பாடுவது என்பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய கலையாகும். சுருதியை அனுசரித்துப் பாட முயலுவதிலும் லயத்துடன் பாடுவதினாலும் மனிதனுக்கு ஒழுங்குடன் நடக்கும் குணமும் சங்கீதத்தால் ஏற்படுகின்றது.”
ராகம், தானம், பல்லவி, கீர்வாணி ராக ஆலாபனை யுடன் ஆரம்பித்து.”தென்பழனி வடிவேலனே” பல்லவி யுடன் களை கட்டி திரிகாலப்படுத்தி அணுலோமம்- பிரதிலோமம் பாடி நிரவல் செய்து “ரிகரிஸநீ… ஸரிகரீரி… ஸ்ரிகரிவிஸநீ…ஸநிநித்தபாம பதநிஸரீ… ரிகமகரிஸ. ரிக் ம்பா.. பதபதபம… பதநிநிஸா…ஸ” என்ற சுரவரிசையில் புகுந்தது.
போர்க்களத்தில் வில்லில் இருந்து குறிதப்பாமல் பாயும் பாணங்களைப் போல சுர பாணங்கள் புறப் பட்டு ரசிகர்களை சல்லடைக் கண்களாகத் துளைக்க- அவர்களோ.
மென் காற்றில் ஆடும் நாற்றங்கால்களாக மனங் களை அசையவிட்டு வேப்பமர நிழலின் குளிர்மையையும் பனிகாலத்து விடியற்காலையின் சிலிர்ப்பையும் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
பருத்த உருவமும், உயர்ந்த தோற்றமும் கொண்ட அந்த மனிதரையும் அவரோடு வந்தவர்களையும் அழைத் துக் கொண்டு மண்டபத்தின் உள்ளே ஞானஸ்கந்தனும் சாள்ஸ் ரஞ்சித்தும் வந்தபோது மேடையின் முன்னால் மெய்மறந்து போயிருந்த ரசிகர்கள் இவர்களைக் கவனிக்கவில்லை.
முன் வரிசையில் கதிரைகள் ஒன்றும் வெறுமையாக இல்லை. ஞானஸ்கந்தனும், சாள்ஸ் ரஞ்சித்தும் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினர்.
“சங்கீதக் கச்சேரி செய்பவர்கள் அதாவது பாடு பவர்கள் எவ்வாறு பாட வேண்டும்?”
“பாடுபவர்கள், கேட்பவர்கள் மனதிலே உணர்ச்சி பொங்கும்படி, மொழியுணர்ச்சி, பாவ உணர்ச்சிகளுடன் பாடவேண்டும். தானும் உணர்ச்சிவசப்பட்டு சபையோர்களையும், அவ்வுணர்ச்சி வசப்படும்படி பாடுவதே உண்மையான சங்கீதமாகும். சங்கீத வளர்ச்சிக்கு வித்து வான்களின் சீர்திருத்த முயற்சி மட்டும் போதாது. பொதுமக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அப் போதுதான் அவர்களாலும் உன்னதமான சங்கீதத்தினை அனுபவிக்க முடியும். உண்மையான சங்கீதத்தின் அழகு படித்தவர்களும், படிக்காதவர்களும் சங்கீத ஞானம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் அனுபவிக்கும்படி இருக்க வேண்டும். சங்கீத வித்து வான்களின் உண்மை யான உயர்ந்த நோக்கம் தங்கள் சங்கீதத்தை பல்லாயிரக் கணக்கான மக்கள் அனுபவித்து ரசிக்க வேண்டும் என்பதேயாகும்.
ரசிகர்கள் கரகோஷம் செயவதையே மறந்து போய் இருக்க – லாவகமாக ஊர்ந்தும் ஓடியும், பாய்ந்தும், பறந்தும் ஜால வித்தை செய்து கொண்டிருந்தது செல்வி. பிரியா கந்தசாமியின் குரல். பிரம்மஸ்ரீ வீரமணி ஐயரின் அடாணா ராகத்தில் அமைந்த “கந்தனிடம் நீ சொல் லடி- சகியே இந்தகணம் வராவிடில் எந்தன் உயிர் நில்லா தென்று” என்ற பதம் புதுமையாக வெளிப் பட்டு ரசிகர்களை சிலு சிலுக்கச் செய்தது. “நீறு பூத்த நெருப்புப் போல் நெஞ்சம் நிறைந்ததே தொல்லை கூடும் பிரிவுத் துயரில் கொடுமைக்கும் உண்டோ எல்லை- ஆறுமுகன் அன்றி எனக்கு ஆறுதல் எவரும் இல்லை” என்ற சரண அடிகளுடன் ரசிகர்கள் உருகினர்.
ராஜ பார்வையுடனும் – நாயகி பாவத்துடனும் உன்னதமான தாபத்துடன் உணர்ச்சிகளை குவியல் குவி யல்களாக வாரியிறைத்தார். ரசிகர்கள் புல்லரித்து, வண் டிடம் மயங்கிய புதுமலர்களாகத் தள்ளாடினர்.
மண்டபத்தின் சனங்கள் இவ்வாறு இருக்க, உள்ளே வந்த பருத்த உயரமான மனிதருக்கு சற்று கோபம் வந்தது.”ஏன்… நான் வருவேன் என்று தெரியாதா? நல்ல ஆட்கள்தான் நீங்கள்…” என முணு முணுத்தார்.
அப்போதுதான் அவரை அவதா னித்த சிலர் விரை வாக எழுத்து பய பக்தியுடன் அவரைப் பார்த்து சிரித்து அவருக்கு இருக்க இடம் கொடுக்க முனையும்போது யாரோ கதிரைகள் கொண்டுவந்து வைத்தார்கள்.
கால்மேல்கால் போட்டவாறு – அவர் கதிரையில் மர்ந்தார். அவருடன் கூட வந்தவர்களும் அவ்வாறே அமர்ந்தனர்.
“அகம்பாவத்தை அழிக்கக்கூடிய சக்தி சங்கீதத்துக்கும் உண்டென்று சொல்லுகிறார்களே…தற்போதைய இசைக் கலைஞர்களுக்கு இது எவ்வளவு தூரம் பொருந்துகின்றது?”
“நல்லதொரு கேள்வி கேட்டீர்கள். அகம்பாவத்தை அழிக்கக்கூடிய சக்தி சங்கீதத்திற்கு உண்டு என்பது மிகப்பெரிய உண்மை. ஆனால் தற்போதைய கலைஞர்களிடம் அகம்பாவமும் ஆணவமும்தான் மிஞ்சி யுள்ளது. தங்களை விட்டால் வேறு இசைக் கலைஞர் களே இல்லை என்ற மாதிரியான ஒரு மனப்பாங்கு அவர் களுக்கு இருக்கிறது. ஒருவர் நன்றாகப் பாடுவதைக் கூட மற்றவர்கள் சரியில்லை – சுருதி சுத்தமில்லை, தாளக்கட்டு இல்லை என்று சொல்லுவார்கள். இப்படியான எண்ணங் களும் செயல்களும், சங்கீதவளர்ச்சிக்கு ஏற்றது அல்ல”.
“கீத்துனிகி தக தீம் திகிட தோம்… நாசுரக கோனி தாதி தெய்… தெய்தி தெய் கிரக தோம்” என்ற பல்லவியு டன் தில்லானா ஆரம்பித்தது.
இனிய மெருகுடன் ராகபாவம் ததும்பும் வகையிலும் பாட ரசிகர்களின் உணர்வுகளைச் சுண்டியிழுத்து “பதும நாப துமாரி… லீலா…ஜாபசுமே ஸாவரோ -தாப சங்கட சரனா ஆயோ, ஸோக மாரோ துமஹரோ ததீம் ததீம், திரணா-உதறித-தானி தானி ததீம் ததீம் திரணா” என்ற சரணம் பாடி மீண்டும் பல்லவிக்கு வந்து தில்லானாவை நிறைவு செய்த போது ரசிகர்கரங்கள் அசைந்தனவே ஒழிய கரவோசை வெளிவரவில்லை. அந்தளவுக்கு மெய் சிலிர்த்து உருகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மெய் மறந்து உருகும் ரசிகர்களை அந்த பருத்த உருவமுடைய உயர்ந்த தோற்றமுடைய மனிதர் பார்த்தார். அவர் முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன.
“இப்படியான பிரச்சினைக்கு தாங்கள் என்ன கூற விரும்புகின் றீர்கள்- குறிப்பாக இளங் கலைஞர்களுக்கு”
“ஏனையோரிடம் குற்றங்கள் குறைகள் இருக்கலாம். அவற்றை திருத்துவதற்கு உதவி செய்ய வேண்டும். மட்டம் தட்டும் மனப்பான்மை இருக்கக் கூடாது. ஆனால் நம்மவர்கள் ஒரு இசைக் கலைஞர் என்னதான் திறமை யாகப் பாடினாலும் மட்டம் தட்டுவதைத்தான் செய்கின் றனர். ஆனால் ஒன்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கும். எனவே ஏனையவர்களை மதிக்கும் பழக்கமும் வாழ்த்தும் பண்பும் எல்லோருக்கும் ஏற்படவேண்டும். இளைய தலைமுறை கலைஞர்களாக இருந்தால் என்ன – வளர்ச்சி பெற்ற கலைஞர்களாக இருந்தாலென்ன – இதை மனதில் கொள்ளவேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று கதைக்கும் பழக்கமும் இருக்கக் கூடாது”
“இவ்வளவு நேரமும் மிக பயனுள்ள விடயங்களைப் பேட்டி மூலம் கூறிய தங்களுக்கு எமது நன்றிகள்”
“நன்றி”
“அபகார நிந்தை பட்டுழலாதே அறியாத வஞ்சனைக் குறியாதே.” என்ற திருப்புகழுடன் கச்சேரி இனிது முடிந்தது. பாடிக் களைத்து சிவந்த முகத்துடன் பிரியா கந்தசாமி பவ்வியமாக மேடையை விட்டு இறங்கினார்.
மேடையில் யாரோ நன்றி சொல்ல ஆரம்பித்தார். ‘சிறப்பாக இசைக் கச்சேரி செய்த செல்வி. பிரியா கதந்சாமி அவர்களுக்கும் வயலின் வாசித்த…அவர்கட்கும் மிருதங்கம் வாசித்த… அவர்கட்கும் மற்றும் வாத்தியக் காரர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவிக்கின்றேன். முக்கியமாக இந்த இசைக் கச்சேரி சிறப்பாக நடக்க ஒழுங்கு செய்து பெரிதும் உதவிய செல்வி…அவர்கட்கும் எனது இதயம் கலந்த மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
மேடையை விட்டு இறங்கிய செல்வி பிரியா, கந்தசாமி அந்த பருத்த உருவமுடைய மனிதர் அருகில் வந்து கையெ டுத்து வணங்கினார். பார்வையாலேயே கச்சேரி எப்படி இருந்தது என வினவினார்.
“என்ன நடந்தது? நன்றாகப் பாட முயலுகின்றீர் தான். ஆனாலும் சுருதி சுத்தமில்லை. தாளமும் இடை யிடையே தவறி விடுகிறது. இவற்றைக் கவனிக்க வேண்டும். சங்கீத ஞானம் இல்லாத ரசிகர்கள் எல்லாவற் றுக்கும் கையைத் தட்டுவார்கள். அதை வைத்துக் கச்சேரியை மதிப்பிடக்கூடாது. தொடர்ந்து சிறப்பாகக் கச்சேரி செய்ய வேண்டும். எனது வாழ்த்துக்கள்.” என அந்தப் பருத்த உயரமான மனிதர் சொன்னார்.
சிவந்திருந்த பிரியா கந்தசாமியின் வதனம் இருண்டு கறுத்தது. இனிய சுகத்தை அனுபவித்த ரசிகர்கள் ஆனந்தக் களிப்புடன் இசை நாயகியான பிரியா கந்த சாமியை நெருங்கினார்கள்.
அந்த பருத்த உருவமுடைய உயரமான மனிதர் தன் மனைவி சகிதம் வீடு போய்ச் சேர்ந்தார்.
வீட்டிற்குப் போகவும் ரெலிபோன் மணி அடித்தது அவர் ரெலிபோனை எடுத்தார்.
”ஹலோ…”
“ஹலோ…”
“நான் வார வெளியீட்டு நிருபர் பேசுகின்றேன். நாளை உங்களைப் பேட்டிகாண விரும்புகின்றேன். என்ன நேரத்துக்கு வரலாம்?”
“காலை பத்து மணிக்கு… ஓமோம் நான் வீட்டில் தான் இருப்பேன்…”
– வீரகேசரி 01-02-1980.
– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.