ஆனயும் – பானயும்




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல ஒருத்த ஆன வளத்தானாம். வளக்கயில, அந்த ஊர்ல, ஆரு கல்யாணம் முடிச்சாலும், இவங்கிட்ட ஆன வாங்கிட்டுப் போயி, ஆன மேலதா ஊர்வலம் நடத்துவாங்களாம்.
அப்ப, ஒருத்தனுக்கு, அந்த ஊர்ல கல்யாணம் முடியப் போகுது. அவ், மொதல்ல ஆனக்காரங்கிட்டப் போயி, எங்கல்யாண ஊர்வலத்துக்கு ஆன வேணும்ண்டு கேட்டர். ஆனக்காரனும், பணத்த வாங்கிக்கிட்டு, ஆனயக் குடுத்திட்டர்.
ஆனய கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாரர். வீட்ல வந்து, கெட்டி வச்சிருக்கயில, ஆன செத்துப் போச்சு. சாகவும், ஆனக்கார் வந்து, ஏ…ஆனயக் குடுண்டு கேட்டர். ஏலே! ஆன செத்துப் போச்ச. ஆனக்கிப் பதிலா பணம் வாங்கிக்கண்டு சொன்னா. பணம் எனக்கு வேணாம். எனக்கு ஆனதா வேணும்ண்டு சொல்லிட்டா. ஆன செத்துப் போச்சு, நிய்யி, போயி பஞ்சாயத்ல சொல்றாண்டு சொல்லிட்டா.
இவா போயி, பஞ்சாயத்ல சொல்லி, ஊரக் கூட்டிட்டர். இப்ப, இவ் என்ன செய்றாண்டா, வாசல்ல, மண்சட்டிகள் அடுக்கி கதவால அடச்சு வச்சிருக்கர். வச்சிட்டு, வீட்டுக்குள்ள ஒக்காந்திருக்கா.
கூட்டங்கூடுனங்க அவனப் போயி, கூட்டிட்டு வாடாண்டு ஆனக்காரன போகச் சொன்னாங்க. இவ் போயி, கதவாலத் தள்னர், தள்ளவும், அடுக்கி வச்சிருந்த சட்டி பானைக, விழுந்து ஓடஞ்சு போச்சு. ஒடஞ்சு போகவும், எஞ் சட்டிகளக் குடுடாண்டு, ஆனக்காரனப் புடிச்சுக்கிட்டா.
ரெண்டுவேரும் சண்ட போட்டுக்கிட்டே பஞ்சாயத்துக்கு வந்தாங்க. நடந்ததச் சொன்னாங்க. சொல்லவும், ஆனக்கிம் பானக்கும் சரியாப் போச்சு. போங்கடாண்டு பஞ்சாயத்ல சொல்லி ட்டாங்க. சொல்லவும், பெறகு பேசாம வீட்டுக்கு போனாங்களாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.