ஆனந்தமாய் வாழ்வோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 3,416 
 
 

குணசீலன் பேறுக்கேற்றவாறு நல்ல குணம் படைத்தவர். யாருக்கும் உதவக் கூடிய நல்ல எண்ணம் கொண்டவர். கடவுள் பக்தி மிக்கவர். பல இளைஞர்களுக்கு வேலை கொடுத்து அவர்களது வாழ்வாதரத்தை உயர்த்தியவர். அதிகம் படிக்கவி;லையென்றாலும் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் வாழ்க்கையில் உயர்ந்தவர். தனது வீட்டருகே ஒரு மரப்பட்டறையை வைத்து கதவு, ஜன்னல், கட்டில், அலமாரி வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மரச் சாமான்களை தயாரித்து அவைகளை விற்பனைச் செய்து வந்தார்.

அதோடுகூட அவரது பிள்ளைகளை வைத்து வீடு கட்டும் கட்டுமானத் தொழிலும் செய்து வந்தார். மரப்பட்டறையில் தயாரிக்கும் பொருட்களை விற்பதற்காக ஒரு விற்பனைக் கூடத்தை பக்கத்து ஊரில் ஆரம்பித்தார். அது மக்களின் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. கடைக்கு வருகின்றவர்களிடம் அன்பாகப் பேசி அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிறந்து விளங்கினார்.

பாலு படித்த பட்டதாரி. அவரிடம் வேலைக்குச் சேர்ந்தான். அவனது பேச்சுத் திறன், பழகும் விதம் ஆகியவை குணசீலனுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. எனவே அவனை அவருக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் அவனை அழைத்துச் சென்று அவனைப் பலரிடம் அறிமுகம் செய்து வைத்தார். பாலு வந்த பிறகு வியாபாரம் பெருக ஆரம்பித்தது. குணசீலனும் பாலுவின் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக அவனைக் கடையைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வியாபாரத்திற்குத் தேவையான கொருட்களை வாங்க அவ்வப்போது வெளி ஊருக்குச் சென்று வந்தார்.

அவர் கடையில் இல்லாத நேரங்களில் தானே முதலாளி என்ற எண்ணம் பாலுவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எழ ஆரம்பித்தது. அவனது ஊரைச் சேர்ந்தவர்கள் உறவினர்கள் என்று பலர் அவ்வப்போது பொருட்களை வாங்க கடைக்கு வரும்போது அவன் வைத்ததே விலை என்று வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். இது உடன் பணிபுரிந்தவர்களுக்கு சங்கடமாக இருந்தது.

இந்த செய்தி கொஞ்சம் கொஞ்சமாக முதலாளியின் காதுகளில் விழ ஆரம்பித்தது. இருந்தபோதிலும் அதை அவர் பெரிதாகக் கருதவில்லை. பாலுவுக்கு தனது நெஞ்சில் ஓர் இடம் கொடுத்துள்ளதாகவும் அவன் எனக்குத் துரோகம் செய்ய நினைத்துக் கூடப் பார்க்க மாட்டான் என்று கடை ஊழியரிடம் கூறியது அவனது உற்சாகத்தை இன்னும் கொஞ்சம் தூண்டியது. அதோடுகூட மேலும் சில பொருப்புகளையும் பாலுவுக்குக் கொடுத்தார் முதலாளி.

ஒரு காலத்தில் குணசீலன் வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால் பாலுவிடம் கடையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு சென்று விட்டார். இந்த வாய்ப்பு பாலுவிற்கு அதிக உற்சாகத்தைத் தந்தது. தானே முதலாளி என்ற எண்ணம் தலை தூக்கி ஆடியது.

நாட்கள் செல்லச் செல்ல பாலுவின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டது. கடைக்கு பொருட்கள் வாங்குகின்ற இடத்தில் பாலு தன்னை முதன்மைப்படுத்த எண்ணி முதலாளி குணசீலனுக்குத் தெரியாமல் தனக்கென விசிட்டிங் கார்டினை அச்சடித்து வழங்கி வந்தான்.

அதோடுகூட அவர்கள் தரும் கமிஷன் தொகையை தானே பெற்று அனுபவிக்க ஆரம்பித்தான். அது அவனுக்கு மேன்மேலும் ஆசையைத் தூண்டியது. ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போல |ஆடிடுவோமே வாழ்நாளிலே என்று ஆசையில் அமிழ்ந்து போனான்.

நாளுக்கு நாள் இவனது செல்வாக்கு பெருக ஆரம்பித்தது. கடையில் வேலை செய்பவர்களிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தன. குணசீலன் வெளிநாடு சென்று வந்தவுடன் பாலுவைப் பற்றிய செய்திகள் அரசல் புரசலாய் அவரது காதுகளில் விழ ஆரம்பித்தது. இருந்த போதிலும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று கடவுள் மேல் பாரத்தைப் போட்டு கடையை நடத்தி வந்தார். ஆனால் பாலுவின் பழி வாங்கும் குணம் கடை ஊழியர்கள் மேல் திரும்பியது.

குணசீலன் பாலுவை தாராளமாக நம்பியதால் அவர் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மிதி வண்டியில் வந்த பாலுவுக்குக் கிடைத்த சம்பளம் மற்றும் கிம்பளத்தினால் அவன் ஒரு பைக் வாங்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தான். இருந்தாலும் பாலுவின் நடவடிக்கை தவறு என்பதை அவனது ஆழ் மனம் அவ்வப்போது சுட்டிக் காட்டியது. ஆனாலும் அவன் திருந்தியபாடில்லை.

இந்நிலையில் அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவர்கள் அவனை ஒரு வார காலத்திற்கு ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். அவனுக்கு ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கினார் குணசீலன்.

அவன் இல்லாதபோது அவனைத் தேடி பல விநியோகஸ்தர்கள் அவனைப் பார்க்க கடைக்கு வந்தனர். அவன் கொடுத்திருந்த விசிட்டிங் கார்டினை முதலாளி குணசீலனிடம் கொடுத்து கடை முதலாளி பாலுவைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறினர். அந்த கார்டில் பாலுதான் அந்தக் கடையின் முதலாளி, உரிமையாளர் என்று அச்சிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் முதலாளிக்கு தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் தான்தான் கடைமுதலாளி என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களது தேவைகளைப் பூர்த்திச் செய்து சந்தோஷமாக அனுப்பினார்.

இது நாள் வரை கடை ஊழியர்கள் அவ்வப்போது பாலுவைப் பற்றி கூறியவைகள் உண்மை என்பது முதலாளிக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. பாலு செய்த நம்பிக்கைத் துரோகச் செயல் குணசீலனை பெரிதும் வாட்டியது.

ஒருவார காலம் முடிந்து பாலு எப்போதும்போல கடைக்கு வந்தான். முதலாளி,; அவன் இல்லாத போது வந்தவர்கள் கொடுத்த அவனது விசிட்டிங் கார்டினை அவனிடமே காண்பித்து இது யாருடைய கார்டு எனக் கேட்டார். அதோடுகூட அவர் வெளிநாடு சென்ற போது கடையில் நடந்த அனைத்து விஷயங்களையும் பலர் வந்து கடை முதலாளியைத் தேடியதையும் ஒன்றுவிடாமல் அவனிடம் கூறினார். அதைக் கேட்டதும் பாலு திடுக்கிட்டான். அவனது குற்ற உணர்வு அவனைக் காட்டிக் கொடுத்தது.

தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். இருந்தாலும் பாலு நீ செய்தது பெரிய நம்பிக்கைத் துரோகம். இதற்கு மன்னிப்பே கிடையாது. உன்னை முழுமையாக நம்பிய எனக்குத் துரோகம் செய்ய உன்னால் எப்படி முடிந்தது.

உன் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக அவ்வப்போது கடை ஊழியர்கள் உன்னைப் பற்றிக் கூறியதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடைக்கு பொருட்களை வழங்குபவர்கள் கூறியதைக் கேட்ட பிறகும் என்னால் சும்மா இருக்க முடியாது. எனவே உனக்குச் சேர வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு உடனே இங்கிருந்து கிளம்பு என்று கூறிய குணசீலன் அவனது கணக்கை முடித்து அவனை வீட்டிற்கு அனுப்பினார். ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தை என்ன, தேடிய செல்வமென்ன, திரண்டதோர் சுற்றமென்ன, என்று அவனது உள் மனம் அழுது புலம்பியது.

நம்மில் பலர் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் நம்மிடம் இல்லாத நிலையை இருப்பதாகக் கூறி நம்மை நாமே உயர்த்திப் பிடிப்பதையே விரும்புகின்றோம். இல்லங்களில் அலுவலகங்களில், அரசியலில் இன்னும் பல்வேறு பொது வெளிகளில் இது அதிகமாக இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஒல்வொருவருக்கும் தனித்தன்மையை வழங்கியுள்ள கடவுளுக்கு நன்றி கூறி நமக்காக ஒதுக்கப்பட்ட பணியை, நம்மீது சுமத்தப்பட்ட கடமைகளை உணர்ந்து அது சிறியதாயினும் பெரியதாயினும் அதனை உண்மையான மன நிறைவோடு, நேர்மையாகச் செய்து முடிக்க அயராது உழைக்க வேண்டியது நமது கடைமை ஆகும்.

1957ம் ஆண்டு வெளி வந்த மகாதேவி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா என்று பாடலாசிரியர் கல்யாணசுந்தரம் எழுதிய அருமையான பாடல் நினைவிற்கு வருகின்றது.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விழைவது, உழைக்காமல் உண்ண நினைப்பது, தனக்குத்தானே பெருமை பாராட்டிக் கொள்வது நம்பியவருக்கு துரோகம் இழைப்பது, ஆசை காட்டி மோசம் செய்வது போன்றவைகள் ஒருநாளும் நமக்குப் பலன் தராது என்பதை உணர வேண்டும்.

பல நான் திருடன் ஒருநாளில் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப ஒரு நாள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். அதற்காக அன்றைய தினம் வருந்துவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போலாகும். எது செய்தாலும் ஒன்றே செய்க அதுவும் நன்றே செய்க என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். நல்லதோ கெட்டதோ நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் என்றேனும் ஒருநாள் ஏதாவது ரூபத்தில் நம்மிடமே தி|ரும்ப வந்து சேரும் என்பதில் எள்ளளவும் ஜயமில்லை.

புலர்ந்துள்ள புத்தாண்டு நமக்கு நல்வழி காட்டும் என்று நம்புவோம். என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி துதி கூறி இறைவனைப் புகழ்ந்து அவரது திருவுளப்படி நடக்க பிராத்திப்போம். கடவுள் நல்வழியில் நம்மை நடத்துவார். அவ்வழியில் எப்போதும் ஆனந்தமாய் வாழ்வோம். புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *