ஆதங்கம்!




தனது தங்கை ரம்யா கட்டியுள்ள புது வீட்டின் புண்ணியர்ச்சனைக்கு சென்று வந்த பின் மிகவும் கவலையில் ஆழ்ந்தாள் நித்யா. ‘கையாளாகாதவனுக்கு நம்மைக்கட்டி வைத்து விட்டார்கள். இந்த ஜென்மமே நமக்கு வீணாகி விட்டது’ என தனக்குத்தானே புலம்பிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.

ஊரிலிருந்து தன் தாய் கமலம் அலைபேசியில் அழைத்ததை நிராகரித்தவள், பத்து முறை அழைத்த பின் எடுத்துப்பேசினாள்.
“சொல்லு…”
“எதுக்கடி புண்ணியர்ச்சனைக்கு வந்துட்டு ரம்யா கிட்ட சொல்லாமக்கூட பஸ் ஏறிப்போனே….? அவ வீட்டுக்காரர் என்ன நினைப்பார்…? ரொம்ப வருத்தப்பட்டார். கெளம்பறேன்னு நீ ஒரு வார்த்த சொல்லியிருந்தா கார்லயே அனுப்பி வெச்சிருப்பார். நீ ஓட்டு வீட்ல இருக்கறேங்கிறதுக்காக அவ வீடு கட்டாம இருப்பாளா….? அவ யோகம் அப்புடி… நாங்களா கொடுத்தோம்..? அவ வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார், பொண்டாட்டி சந்தோசமா இருக்கட்டும்னு கட்டிக்கொடுத்திருக்கார்…”
“சொல்லி முடிச்சிட்டியா….? இன்னும் பாக்கி இருக்கா…?”
“நாங்க என்ன பண்ண முடியும்? எங்க சக்திக்கு உங்க ரெண்டு பேரையும் ஒரே மாதர படிக்க வெச்சு நகை போட்டு கல்யாணம் பண்ணிக்கொடுத்து சீமந்த செலவு, டெலிவரி செலவு ன்னு பார்த்ததோட குழந்தைகளையும் ஸ்கூலுக்கு போகற வரைக்கும் காப்பாத்தி அனுப்புனோம். கவர்மெண்ட் ஸ்கூல் வாத்தியாரு உங்க அப்பாங்கிறத மறந்திடாதே… ஏதோ கடனில்லாம ஒரு வீடு இருக்குது. பென்சன் வர்றத வெச்சு சிக்கனமா காலத்த ஓட்டறோம்”
“நீ வாத்தியாரக்கட்டினதுனால ஓட்டிக்குவே… அவளும் லட்சக்கணக்குல சம்பாதிக்கிற ஐடி புருசனக்கட்டிட்டோம்னு ஆட்டம் போடறா… நாந்தான் லட்சணமும் இல்லாம, லட்சத்த தொட்டே பாக்க முடியாத ஒரு குடிகாரன கட்டீட்டு குழந்தைகளை எப்படிப்படிக்க வைக்கப்போறேன்னு தெரியாம வாழறேன். எங்கியாச்சும் ஆத்துலயோ, கெணத்துலயோ குதிச்சு செத்துப்போலாம்னு நெனைச்சு அழறேன்…”
அதிர்ச்சியில் “அடியேய்… பேசறா பாரு பேச்சு. செத்துப்போறதுக்கா உன்னப்பெத்து வளர்த்துனேன்…? நீ பேசாம நம்ம வீட்டுக்கு வந்திரு. என்ற ஆயுசுக்கும் நாம்பாத்துக்கறேன்” மகளை நினைத்து தேம்பி அழுதாள் கமலம்.
பக்கத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு குறைந்த சம்பளத்தில் வேலைக்கு செல்லும் நித்யா, இரவு நேரத்தில் வீட்டில் டெய்லர் வேலையும் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினாள். ஆனால் கார் டிரைவர் வேலைக்கு செல்லும் கணவன் நிகனோ, கையில் கிடைக்கும் பணத்திற்கு மது குடிப்பதோடு, நண்பர்களுக்கும் வாங்கிக்கொடுத்து பணம் தீர்ந்த பின் போதையுடன் நடு இரவில் வீட்டிற்கு வருவான். சில சமயம் நண்பர்களையும் வீட்டிற்கே அழைத்து வந்து சமைத்துப்போடச்சொல்லுவான்.
திருமணமாகி ஐந்து வருடங்களில் ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்கு தாயானவள், அதன் பின் கடந்த ஐந்து வருடங்களாக கணவன் மனைவியாக வாழாமல் கடமைக்கு வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால் தங்கை ரம்யாவோ திருமணமாகி எட்டு வருடங்களில் தன் வீட்டை எட்டிக்கூட பார்க்க வரவில்லை. வீடு புண்ணியர்ச்சனைக்கு அழைக்க வந்த கணவனும், மனைவியும் சாப்பிடக்கூட விரும்பாமல் காஃபி மட்டும் குடித்து விட்டுச்சென்றதை நினைத்து தன்னை மதிக்கவில்லை என வருந்தினாள்.
ஒரு நாள் தாய் வீட்டிற்கு சென்றிருந்த போது “இருந்தா ரம்யா மாப்பிள்ளை மாதிரி இருக்கோணும். கல்யாணத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவளைப்பிரிஞ்சு இருந்ததில்லை” என தனது தாய் தன்னிடம் சொன்னதைக்கேட்டு கோபத்தின் உச்சத்துக்கே போனாள் நித்யா.
“ஏம்மா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா…? அவ அப்படி வாழறா, இப்படி வாழறான்னு வாழா வெட்டியா வாழற எங்கிட்ட சொல்லலாமா? நானும் ஒரு பொண்ணு தானே… எனக்குன்னு கனவு, ஆசை இருக்காதா? யாரு கிட்ட எப்படிப்பேசோணும், எதப்பேசோணும்னு மொதல்ல தெரிஞ்சு வெச்சுக்க. எப்பப்பார்த்தாலும் உன்ற சின்னப்பொண்ணு புராணமே பாடாதே… அதுவும் எங்கிட்டப்பாடாதே…” சொன்னவள் கண்ணீர் சிந்தினாள். அன்று முதல் தன் தாயிடம் அலை பேசியில் பேசுவதைக்கூட குறைத்துக்கொண்டாள். பிறந்த வீட்டிற்கும் செல்ல விரும்பாதவளாய் இருந்தாள்.
நித்யாவின் மனமுடைந்த பேச்சைக்கேட்ட தாய் தன் கணவனையும் அழைத்துக்கொண்டு அன்று மாலை வேளையில் நித்யாவின் வீட்டிற்கு வந்தவள் மகளைக்கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினாள். பதிலுக்கு மகள் நித்யாவும் அழுதாள்.
“நீ உள்ளதப்பேசவும் மாட்டீங்கறே… மாப்பிள்ளையும் திருந்தி வாழற பாட்டக்காணோம். நாங்க பண்ணுன தப்புக்கு நாங்க தான் சாகோணும். கல்யாணமாயி நாலு வருசங்கொழந்தையில்லாம கோயில் கோயிலா போயி தவமிருந்து பொறந்தவடி நீயி. உன்ற மேல பாசமில்லாம இருப்பமா? உனக்குன்னு ஒரு நேரங்காலம் வர்ற போது ரம்யாள விட பெருசா வீட்டக்கட்டிப்போடலாம் நீ கவலைப்படாதே…” மகளின் மனதைத்தேற்றினாள் தாய் கமலம்.
அடுத்தநாள் தங்களது குடும்ப ஜோதிடர் ராகவனிடம் நித்யாவை அழைத்துக்கொண்டு சென்று அவளது ஜாதகத்தைக்கொடுத்து எதிர்காலம் பற்றிய கேள்விகளைக் கேட்டனர் அவளது பெற்றோர்.
“ஒரே வயித்துல பொறந்தாலும் நாளும், நேரமும் மாறும் போது கோளும் கட்டத்துல மாறும். அதுக்கேத்தாப்ல தான் நம்ம வாழ்க்கை இருக்கும். ரெட்டைப்பிறவியா ஒரே பிரசவத்துல பிறந்தாலும் ஒரு பாகை மாறினாலே கிரக குணம், லக்ன குணம் மாறிப்போறதுனாலதான் ஒருத்தருக்கொருத்தர் வாழ்க்கை மாறு பட்டும், வேறு பட்டும் இருக்குது. நித்யா பிறந்து ரெண்டு வருசங்கழிச்சு பொறந்த ரம்யா வாழ்க்கை எப்படி ஒரே மாதர இருக்கும்? ஒருத்தருக்கு மாளிகைல வாழற யோகம், ஒருத்தருக்கு சாதாரண வீட்ல வாழற யோகம்னு பிறப்பு நேரத்தப்பொறுத்து அமையும்னாலும் காலம் மாறும்போது எல்லாம் மாறும்…” என கூறியதைக்கேட்ட போதே அலைபாய்ந்த நித்யாவின் மனம், கஷ்டம் நிரந்தரமில்லை என அறிந்ததால் கவலையற்று சாந்தமானது.
“இந்த பூமில பிறக்கிற எல்லாருக்குமே சில கிரகங்கள் யோகத்தக்கொடுக்கும். சில கிரகங்கள் வாழ்க்கையையே கெடுக்கும். சிலபேருக்கு சின்ன வயசுலயும், சில பேருக்கு நடு வயசுலயும், சில பேருக்கு பின் வயசுலயும் யோக காலம் வரும். எப்படிப்பட்ட காலம் எப்ப நடக்கும்னு தெரிஞ்சுக்கிற அற்புதக்கலை தான் ஜோதிடம். நித்யா ரம்யாவை விட யோகமான ஜாதக அமைப்போட பிறந்தவள் தான். ஆனா அந்த யோக காலம் இன்னும் நாலு வருசங்கழிச்சு தான் தொடங்கும்” என ஜோதிடர் கூறியதைக்கேட்டவளுக்கு நம்பிக்கை மனதில் ஊற்றெடுத்தது.
“யோகமா இருந்தாலும், தோசமா இருந்தாலும் அதனோட திசைலதான் அதுக்கான பலன் கொடுக்கும். தோச கிரக திசை சந்தோசத்தைக்கெடுக்கும். யோக கிரக திசை சந்தோசத்தைக்கொடுக்கும். அந்த யோக திசை நடத்தும் போது நம்மோட ஆசை மட்டுமில்லை, பேராசையும் நிறைவேறும். வீடு, கார்னு வசதியா தேவையானதெல்லாம் நிறைவேற்றி, நிறைவா வாழ முடியும். அதே சமயம் இப்ப நடக்கிற தோச திசை யாரைக்கல்யாணம் பண்ணியிருந்தாலும், பத்துப்பொருத்தமும் இருந்திருந்தாலும் திசைக்கூறால இப்படித்தான் சந்தோசமில்லாம கஷ்டப்பட வைக்கும். அதனால கணவனைக்குறை சொல்லாம, வருத்தப்படாம அனுசரிச்சு, வருமானத்துக்கேத்தாப்ல சிக்கனமா வாழ்ந்தா நல்ல காலம் வரும் போது நல்ல திறமையான மனுசனா அவரும் மாறிடுவார். அன்பாகவும் நடந்துக்குவார். குடிக்கிறதையும் நிறுத்திக்குவார்…” ஜோதிடரின் இந்த நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் நித்யாவை மட்டுமில்லாமல் அவளது பெற்றோரையும் மகிழச்செய்தது!