ஆசையா.. கோபமா…?





(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
அத்தியாயம் – 16

லிஸி… ஒரு முடிவெடுத்து விட்டாள்…
ஒன்று அவளுக்கு குணசீலன் கிடைக்க வேண்டும்.. இல்லையென்றால்.. அவனது காதலும் நிறைவேறக்கூடாது.. பூர்ணிமாவுக்கும் அவன் கிடைத்து விடக்கூடாது….
“அவங்க ஒன்னும் லவ்வர்ஸ் இல்லை லிஸி.. பட்.. பூர்ணிமா குணசீலனின் விசயத்தில் ரொம்பவும் பொஸஸிவ்வாக இருப்பா..” மதிய உணவு வேளையின் போது சுகுணா சொன்னாள்…
“எதைவைச்சு அப்படிச் சொல்கிற.. ? நான் பார்த்த வரைக்கும் அவங்க இரண்டு பேரும் பேசிக்கிட்டது கூட இல்லையே…” அறியாதவளைப் போலக் கேட்டாள் லிஸி…
“பேசிக்க மாட்டாங்கதான்… இன்னும் சொல்லப் போனா.. இரண்டு பேருமே.. ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க…”
“அப்புறமும் எதுக்காக அப்படிச் சொல்கிற சுகுணா..?”
“நீ இந்த பேங்கில் ஜாயின் பண்ணுகிறதுக்கு முன்னாலே.. இங்கே சரளா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தா…. அவளும்.. பூர்ணிமாவும் திக் பிரண்ட்ஸ்.. லேடிஸ் ஹாஸ்டலில் ஒரே ரூமில்தான் தங்கியிருந்தாங்க…”
“இந்த சிடுமூஞ்சிக்குக் கூட திக் பிரண்ட் இருந்தாங்களா..?”
“பூர்ணிமா எல்லார்கிட்டயும் அப்படி முகம் திருப்பிக்கிட்டு இருக்க மாட்டா.. அளவாத்தான் பேசிப் பழகுவா.. யாரையாவது அவ மனசுக்குப் பிடிக்காமப் போனாத்தான் சுள்ளுன்னு பேசுவா.. என்கிட்டேயெல்லாம் நல்லாத்தான் பேசிப் பழகுகிறா அவளைப் போய் ஏன் சிடுமூஞ்சின்னு சொல்கிற.. ?”
“சும்மா.. தோணிச்ச… சொன்னேன்…”
“அப்படியெல்லாமில்லை… சரளாவுடன் கூட அப்படித்தான்.. திடீர்ன்னு முகம்திருப்பிக்கிட்டு பேசாமல் இருந்தா.. சரளா கெஞ்சிப் பார்த்தா.. இவ அசையவே இல்லை.. ஒருவாரம் கழிச்சுத்தான் போனால் போகுதுன்னு மலையிறங்கினா..”
“இவதான் சிடு மூஞ்சியாச்சே…!”
“ஊஹீம்.. விசயம் அப்படியில்லை… சரளா பூர்ணிமாவைச் சீண்டிப் பார்க்கன்னே குணசீலன்கிட்ட குளோஸா பேசியிருக்கிறா…”
லிஸிக்கு விசயம் விளங்கி விட்டது… உயிர்தோழியாக இருந்தாலும்.. குணசீலன் என்று வரும்போது பூர்ணிமா கோபப் பட்டிருக்கிறாள்.. தோழியென்று கூடப் பார்க்காமல் மௌனமாகியிருக்கிறாள்.
“சரளாவைக் கூடமன்னித்து பேசிட்டா. குணசீலன் கூட இப்ப வரைக்கும் பூர்ணியா பேசவேயில்லை… இப்பத்தான் திடீர்ன்னு ரெண்டு பேரும் சமாதானமாகி டூயட் பாடுகிற வரைக்கும் போயிட்டாங்க..”
ஆக.. பூர்ணிமாவுக்கு குணசீலனின் பார்வை வேறொரு பெண்ணின் மேலே பட்டால் பிடிக்காது… அவன் அந்தப் பெண்ணைக் கூட மன்னித்து விடுவான். குணசீலனை மன்னிக்கவே மாட்டாள்…
லிஸிக்கு நூல் முனை கிடைத்துவிட்டது.. கோடு போடச் சொன்னால்.. ரோடு போட்டு விடும் குணம் படைத்தவளுக்கு இவ்வளவு விவரங்கள் கிடைத்தால் போதாதா…?
அவள் திட்டம் தீட்டிவிட்டாள்…
அதன்படி.. பேங்கில் குணசீலன் காபி சாப்பிடப் போயிருந்த சமயமாகப் பார்த்து.. பூர்ணிமாவை நெருங்கினாள்…
‘இவ எதுக்கு என்கிட்ட பேச வருகிறா..’ பூர்ணிமாவுக்கு அவள் முகம் பார்க்கவே பிடிக்கவில்லை..
‘ஆளும்.. மூஞ்சியும்.. ஒருநாளாவது ஒழுங்காய் டிரெஸ் பண்ணிக்கிட்டு வருகிறாளா…’
லிஸியை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தாள் பூர்ணிமா…
“என்ன.. என் ஆளுகூட பாட்டெல்லாம் பாடிக்கிட்டு அலைகிற…?”
லிஸி எடுத்த எடுப்பிலேயே நேரடித் தாக்குதலைவிட, பூர்ணிமா அதிர்ந்து நிமிர்ந்தாள்…
‘இவள் ஆளா.. ? யார்..? குணசீலனா..? நான் அலைகிறேனாமா..? எவ்வளவு தைரியமிருந்தா.. இவ இந்த வார்த்தைகளை பயமில்லாம என்கிட்டச் சொல்லுவா…’
“யார்கிட்ட என்ன பேசுகிறோம்ன்னு யோசிச்சுப் பேசனும்.. கூடக்குறைய பேசுகிற வேலையை என்கிட்ட வைச்சுக்காதே.. ஜாக்கிரதை.. யாரைப் பார்த்து.. யார் அலைகிறதாய் சொல்கிறது.. ? உன்னைப் பார்த்துத்தான் இந்த ஊரே அந்த வார்த்தையைச் சொல்லுது…”
இப்படிக்கூட பூர்ணிமாவினால் பதிலடி கொடுக்க முடியும் என்பதை அன்றுதான் உணர்ந்தாள் லிஸி…
அதிகம் பேசாமல் ஒதுங்கிப் போகிற ரகமாக தெரிந்ததால் துணிந்து பேசியவளின் முகம் இருண்டு விட்டது… பூர்ணிமா பேசியதை வேறு யாரும் கேட்டு விட்டார்களோ என்ற கவலையுடன் சுற்று முற்றும் பார்த்தாள்…
‘நல்லவேளை.. யாரும் கேட்கலை..’
முகத்தில் அவசரமாக வரவழைத்துக் கொண்ட அலட்சியத்துடன் அவள் நிமிர்ந்தாள்…
“சும்மா துள்ளாதே.. எனக்கும் குணசீலனுக்கும் கல்யாணம் ஆகப் போகுது.. அப்புறம்.. அவரை என் ஆளுன்னு சொல்லாம வேற எப்படிச் சொல்வேன்..? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவரோடு நான் டூயட் பாட்டைப் பாடிக்கிட்டு இருந்தா நீ சும்மாயிருப்பியா..? நான் பேசின வார்த்தைகளை நீயும் பேசியிருக்க மாட்டாயா…?”
“என்னது.. ?”
பூர்ணிமாவின் காலடியில் பூமி பிளந்ததைப் போ இருந்த… முதல்நாள் மாலையில்தான்.. மெல்லிய இருள் போர்வையின் மறைவில் அவளைப் பெயர் சொல்லி அழைத்து… அவள் முடி கோதி நின்றான்.. அவனுக்கு லிஸியுடன் திருமணமா…?
“இருக்காது…”
அவள் நம்ப முடியாமல் அரற்ற.. லிஸி வெற்றியுடன் சிரித்தாள்…
அடிபட்ட பறவையின் உயிருக்குப் போராடும் துடிப்பை ரசிக்கும் குரூரம் அவளது விழிகளில் தெரிந்தது.
இனி அவள் என்ன வேண்டுமானாலும் பூர்ணிமாவை பேசிக்கொள்ளலாம்.. எதிர்த்துப் பேச பூர்ணிமாவுக்கு திராணி இருக்காது.. அவளின் உயிரைக் குடிக்கும் வார்த்தைகளை லிஸியின் வாய் உதிர்ந்து விட்டது…
எழுந்து கொள்ள முடியாமல் வெட்டுண்டு தரையில் கிடக்கும் எதிரியைப் பார்ப்பதைப் போல லிஸி பூர்ணிமாவைப் பார்த்தாள்…
“இருக்காதா..? ஏன் நம்ப முடியலையா…? அப்ப ஒன்னு செய்.. இன்னைக்கு சாயங்காலம் நெல்லையப்பர் கோவிலுக்கு வா…”
“வந்து..?”
“வந்து பார்.. எல்லாம் உனக்குத் தெரியும்..”
காபி குடித்துவிட்டு வந்த குணசீலன் பூர்ணிமாவை லிஸி அவனருகில் நின்று உரிமையுடன் எதையோ பேச காதலுடன் பார்த்தபடி… அவனது சீட்டில் உட்கார்ந்தான். ஆரம்பித்தாள்.. அதைப் பதறும் நெஞ்சத்துடன் உயிரற்ற பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்த பூர்ணிமாவைக் கண்டதும் குணசீலனுக்கு யோசனையாய் இருந்த…
‘ஏன் இப்படிப் பார்க்கிறா.. ?’
அருகில் சென்று விவரம் கேட்க விடாமல் லிஸி அவனையே சுற்றிச்சுற்றி வந்தாள்… வேலை நேரம் முடியும் வரை அதே கதை தொடர… வெறுத்துப் போனவளாக பூர்ணிமா எழுந்து போய் விட்டான்…
‘வீட்டுக்குப் போய்.. செல் போனில் பேசிக்கலாம்..’
குணசீலனிடம் பூர்ணிமாவின் செல்போனின் எண்கள் இருந்தன… ஆனால்… அதுவரை அவன் அந்த எண்ணிற்கு அவளை அழைத்துப் பேசியதில்லை…
‘இப்போதுதான் அப்படியில்லையே..’
முதல்நாளின் முன்னிரவு மாலைப் பொழுதை நினைத்துப் பார்த்தவனின் நெஞ்சம் இனித்தது.. அந்த இனிமையான நினைவுகளின் சுகம் தந்த இதத்தோடு அவன் வீட்டிற்குக் கிளம்பினான்….
“உனக்காகத்தான் காத்திருக்கேன் குணா..”
காந்திமதி வாசலிலேயே அவனை எதிர்கொண்டாள்.
“என்ன விசயம்மா…?”
“கோவிலுக்குப் போகனும்.. கூட வா…”
விஸ்வநாதனால் கூட வரமுடியாத சமயங்களில் குணசீலன் காந்திமதியை கோவிலுக்கு அழைத்துப் போனது உண்டு…
அந்த நினைவில்… முகம் கழுவி.. உடைமாற்றிக் கொண்டு தாயுடன் கோவிலுக்கு கிளம்பினான் குணசீலன்..
“உன் வண்டி வேணாம்டா.. காரை எடு…”
காந்திமதி கூறியதும் குணசீலன் திகைத்தான்..
அவர்கள் வீட்டில் கார் உண்டுதான்.. ஆனால் அதை குடும்பத்தோடு வெளியில் போகிற போது மட்டும்தான் பயன் படுத்துவார்கள்.. மற்ற நாள்களில்… அவரவரின் இருசக்கர வாகனங்களில்தான் பயணிப்பார்கள்…
அதற்கு முன்னால் காந்திமதியை கோவிலுக்கு அழைத்துச் சொல்லும் போது.. அவனின் இருசக்கா வாகனத்தில்தான் குணசீலன் அழைத்துச் சென்றிருக்கிறான்…
“கார் எதுக்கும்மா…?” புரியாமல் அவன் கேட்ட போது…
“லிஸியும் நம்ம கூட வருகிறாடா…” என்று குண்டைத் தூக்கிப் போட்டாள் காந்திமதி…
“இதென்னம்மா புதுப்பழக்கம்..?” குணசீலன் கண்டிப்புடன் கேட்டான்…
“பாவம்.. வெளியூர்காரப் பொண்ணு.. உன்கூட ஆபிஸில் ஒன்னா வேலை பார்க்கிற சொந்தத்திலே என்கிட்ட பிரியமா பழகுது…”
“அது ஒரு சொந்தமா… ?”
“எனக்கு அது சொந்தம் தான்.. கோவிலுக்கு வர ஆசைப்படுது… வாம்மா போகலாம்ன்னு சொல்லிட்டேன்..”
“அப்ப நான் எதுக்கு வெட்டியா உங்க கூட துணைக்கு வரனும்..? அதுதான் அவ துணைக்கு வர்றாளே.. ஒரு ஆட்டோவை பிடிச்சு நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க…”
“டேய்… டேய்… எங்ககிட்ட கார் இருக்கு.. அதிலே போகலாம்ன்னு… நான் பகுமானமா சொல்லிட்டேண்டா..”
“அதுக்கு நான் பிணையா.. ? என்னால் உங்களுக்கு டிரைவரா இருக்க முடியும்… அவளுக்கு டிரைவரா இருக்க முடியாது…”
“அருமையான பொண்ணுடா… உனக்குத்தான் அவ அருமை தெரியலை…”
“தெரியவே வேணாம்… ஆளை விடுங்க…”
குணசீலன் வழக்கடித்துக் கொண்டிருந்த போது.. இழுத்துப் போர்த்திய புடவையுடன்.. தலை முடியை பின்னலிட்டு. நெற்றியிலே ஸ்டிக்கர் பொட்டுடன்.. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பரப்பப் பிறந்தவளைப் போல… எதிர் வீட்டிலிருந்து வெளிப்பட்டு.. சாலையைக் கடந்து.. அவர்கள் வீட்டு காம்பவுண்டு வளாகத்திற்குள் நுழைந்தாள் லிஸி…
“உங்க மகனை யார் பிடித்து வைத்திருக்கிறது அத்தை…?”
என்னவோ… அவனை முன்பின் பார்த்தறியாதவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு… வெட்கத்துடன் அவள் கேட்டவிதத்தில் அயர்ந்து போனான் குணசீலன்..
‘அத்தையா.. இது எப்போ… இருந்து.. ?’ மகனின் முகமாற்றத்தைக் கவனிக்காமல் லிஸியைக் கண்டு முகம் மலர்ந்தாள் காந்திமதி…
“நான்தான் பிடித்து வைத்திருக்கிறேனாம்மா…”
“விடாதிங்க அத்தை.. இறுக்கிப் பிடிச்சுக்கங்க. விட்டால் இவர் ஓடிவிடுவார்…”
‘எவர்… ?’
குணசீலன் அவளை ஒர்விதமாக பார்த்து வைத்தான்… முறை மாப்பிள்ளையிடம் உரையாடுவதைப் போல கேலி பேசியவளை கன்னம். கன்னமாய் நாலு சாத்தி சாத்தினால் என்ன என்று அவனுக்குள் ஒரு வேகம் ஏற்பட்டது…
“வாடா குணா…”
காந்திமதி விடாமல் அழைக்க.. வாய்க்குள். முணுமுணுத்தபடி அவன் காரைக் கிளப்பினான்..
கோவில் வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் முன்னே வேக நடை நடக்க…
“குணா…” என்று வேகத்தடை போட்டாள் காந்திமதி…
“என்னம்மா..?”
“பூவுக்கு பணம் கொடுத்துட்டு வாடா…”
யதார்த்தமாக… தாய் சொன்னதற்காக பணத்தைக் கொடுத்தவனுக்குத் தெரியாது…. அதைப் பதறும் இதயத்தோடு பூர்ணிமா பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது…
உண்மையில் பூவை வாங்கியது லிஸிதான்.. காந்திமதியின் தலையில் பூ இருந்தது.. அதை உணராமல் லிஸி வாங்கிய பூவுக்கு குணசீலன் பணத்தைக் கொடுத்துவிட்டான்… அதை கோவில் வாசலில் காத்திருந்த பூர்ணிமா பார்த்து விட்டாள்…
மெதுவாக பின்னடைந்து பூர்ணிமாவின் அருகே சென்று நின்ற லிஸியின் முகத்தில் வெற்றிப் புன்னகை இருந்தது…
“எப்படி..? எனக்கு பூ நல்லாயிருக்கா…? இது எனக்காக அவர் வாங்கிக் கொடுத்த … அத்தைதான் வாங்கிக் கொடுக்கச் சொன்னாங்க…”
அவள் கண்சிமிட்டிச் சிரிக்க… பூர்ணிமா கண்மூடி மனம் துடித்தாள்…
அத்தியாயம் – 17
“அதோ போறாங்க பாரு.. அவங்கதான் என் அத்தை… என் குணாவின் அம்மா.. வருகிறாயா.. உனக்கு அவங்களை அறிமுகப் படுத்தி வைக்கிறேன்…” மிதப்பாக பேசினாள் லிஸி…
அவளுக்கு பதில் சொல்லாமல் வெறித்துப் பார்த்தாள் பூர்ணிமா…
“என்ன… அப்படிப் பார்க்கிற.. ? உனக்கு அவரோட அம்மாவைத் தெரியாது இல்லையா… அவங்களுக்கு நான்னா உயிர்… என்னை அவங்க வீட்டுக்கு மூத்த மருமகளாய் செலக்ட் பண்ணியது அவங்கதான்…” பெருமையாகக் கூறினாள் லிஸி…
அந்தப் பெருமையைக் கேட்க பூர்ணிமாவுக்கு விருப்பமில்லை…
“அத்தை தேடுவாங்க.. நான் போகிறேன்.. நீ இருந்து.. ஆற… அமர.. எங்க ஜோடிப் பொறுத்தத்தை பார்த்து ரசித்து விட்டுப் போ…”
லிஸி அவசரமாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டாள்…
நடுவில் குணசீலன் நடக்க… அவனது இருபக்கமும் காந்திமதியும்.. லிஸியும் நடந்து செல்வதைக் கண்ட பூர்ணிமாவின் நெஞ்சம் உடைந்து நொறுங்கியது…
சிந்திய சிதறல்களை ஒட்டவைக்க.. ஒரு துளி நம்பிக்கையாவது கிடைத்து விடாதா.. என்று பதைக்கும் இதயத்துடன் அவள் அவர்களை பின்பற்றிச் சென்றாள்…
கிடைக்கவேயில்லை… அவள் தேடிய அந்த ஒரு துளி நம்பிக்கையை அவளுக்கு கிடைக்க லிஸி விடவில்லை…
கோவிலைச் சுற்றி வரும்போது… குணசீலனின் கையிலிருந்த குங்கும பிரசாதத்தை.. லிஸியின் கையில் கொடுக்க வைத்தாள்…
“அடடா.. குருக்கள்கிட்ட பிரசாதம் வாங்கிக்க மறந்துட்டேனே அத்தை…”
“அதுக்கென்னம்மா.. குணா.. உன் கையிலிருக்கிற பிரசாதத்தை லிஸிக்கு கொடு…’
தாய் சொல்கிறாளே என்று பல்லைக் கடித்துக் கொண்டு தன் கையிலிருந்த குங்கும பிரசாதத்தை லிஸியின் கையில் குணசீலன் கொட்ட, பின் தொடர்ந்து வந்த பூர்ணிமாவைப் பார்த்து ரகசியப் புன்னகை புரிந்தாள் லிஸி…
அந்தக் குங்குமத்தை காந்திமதியின் கையினால் லிஸியின் நெற்றியில் வைக்கவும் வைத்தாள்…
“அத்தை.. இதை நீங்களே உங்க கையால் என் நெற்றியில் வைத்து விடுங்களேன்..”
காந்திமதி பிரியத்துடன் லிஸியின் நெற்றியில் குங்குமத்தை வைக்க.. பூர்ணிமா பின்னடைந்தாள்….
மறுநாள் காலையில் குணசீலன் அவள் முகம் பார்க்க முயன்றபோது.. அது பாறாங்கல்லாய் இறுகியிருந்தது…
‘என்ன ஆச்சி…?’
குணசீலனால் பொறுமை காக்க முடியவில்லை… அவன் பூர்ணிமாவைத் தேடி அவள் தங்கியிருக்கும் லேடிஸ் ஹாஸ்டலுக்கே சென்று விட்டான்…
யாரோ பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற செய்திமட்டும் கிடைத்தவளாய்.. ஹாஸ்டலின் வரவேற்பறைக்கு வந்த பூர்ணிமா குணசீலனைக் கண்டதும் திகைத்தாள்…
“உன் கூடப் பேசனும்…”
“எதைப் பத்தி..?”
“சொன்னால்தான் என்கூட வருவியா..?”
“ஆமாம்.. இன்னொருத்தியின் வருங்காலக் கணவன்கூட எனக்கென்ன பேச்சு வேண்டிக்கிடக்கு..?”
பூர்ணிமா எங்கேயோ தொலை தூரத்து தொடுவானில் தொலைந்து போன தன் காதல் கனவுகளைத் தேடியவளாக விட்டேற்றியாக பதில் சொல்ல.. குணசீலனின் புருவங்கள் முடிச்சிட்டன…
“இன்னொருத்தியின் புருசனா…? என்ன உளருகிற..?”
“உளருகிறேனா..? நானா..? குட்ஜோக்.. நேத்துச் சாயங்காலம்.. கோவில் வாசலில் உங்க வருங்காலப் பெண்டாட்டிக்கு நீங்க பூ வாங்கிக் கொடுக்கலையா.?”
“ஏய்ய்.. ச்சீ… அது என் அம்மா வாங்கிய பூவுக்கு கொடுத்த.. பணம்…”
“ஓஹோ.. லிஸி உங்க அம்மாவாகிட்டாளா…?”
குணசீலன் இமைக்காமல் அவளையே பார்த்தான்..
“ஸோ.. நீ என்னை வேவு பார்த்திருக்கிற..?”
“வேவு பார்த்தது உண்மைதான்.. ஆனால், நானாக வேவு பார்க்க வரலை… உங்க வருங்காலப் பெண்டாட்டிதான் வரச் சொன்னா…”
“அது நீதானேடி…”
குணசீலன் நிதானமாகச் சொல்ல.. பூர்ணிமாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.. இதுவரை உணராத கிளர்ச்சியை உணர்ந்தவளுக்கு.. இந்த உணர்வு நிரந்தரமில்லையென்ற துக்கம் மனதில் பொங்கியது…
“இல்லை.. அது லிஸிதான்…”
“அதை முடிவு பண்ண நீ யார்..?”
அந்தக் கேள்வியில் சட்டென்று குணசீலனின் முகம் பார்த்தாள் பூர்ணிமா.. அவளின் கண்கள் கலங்கின…
“நான் யாரோதான்.. உங்களுக்கு நான் யாருமில்லைதான்… அவள்தானே உங்களுக்கு எல்லாமும்..”
“அடச்சீ… வாயை மூடு.. அப்படி யார் உன்னிடம் சொன்னது..?”
“லிஸி…”
“அவ சொன்னா.. நீ நம்பிருவியா..?”
“நம்பலை… அதனால்தான் அவ கோவிலுக்கு வந்து பாருன்னு கூப்பிட்டா… நானும் வந்தேன்.. எல்லாத்தையும் . பார்த்துட்டேன்…”
“அப்படி என்னத்தை பார்த்துத் தொலைத்த..?”
“அவ வாங்கித் தலையில் வைத்துக்கிட்ட பூவுக்கு நீங்க பணம் கொடுத்ததைப் பார்த்தேன்.. உங்க கையில் இருந்த குங்குமத்தை அவ கையில் நீங்களே கொடுத்ததைப் பார்த்தேன்.. அந்தக் குங்குமத்தை உங்க அம்மா அவ நெற்றியிலே வைத்து விட்டதையும் பார்த்தேன்…”
“அடிப்பாவி.. அம்மா பூவுக்கு பணம் கொடுடான்னு சொன்னாங்க.. பணம் கொடுத்தேன்.. குங்குமப் பிரசாதத்தை அவ வாங்கிக்கலை கொடுடான்னு சொன்னாங்க.. அதையும் கொடுத்தேன்… இதில என்மோ குற்றம் சொல்ல.. என்னடி இருக்கு..?”
“இன்னைக்கு உங்க அம்மா சொன்னாங்கன்ன அவளுக்கு பூவையும்.. குங்குமத்தையும் கொடுத்தவர். நாளைக்கு அம்மா சொன்னாங்கன்னு அவளுக்கு தாலியையும் கொடுக்க மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்..?”
“பூர்ணிமா…”
“உங்க அம்மாவுக்கு அவமேலே பிரியமிருக்கு…”
“உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா..?”
“எதை வைத்து நம்பச் சொல்கிறீங்க..? என்னைக்குமே நீங்க என்னிடம் முகம் கொடுத்துப் பேசினதில்லை…”
“உன்னைக் காதலித்து விட்டு.. இன்னொருத்தியின் கழுத்தில் நான்.. தாலி கட்டுவேனா பூர்ணிமா..?”
“காதல்..! இத்தனை நாளாய் சொல்லாத வார்த்தையைச் சொல்கிறிங்க…”
“சொன்னால்தான் காதலாடி..?”
“சிலசமயம் அப்படித்தான்.. சொல்லாமல் மனதில் வைத்திருந்தால் அந்தக் காதலால் யாருக்கு என்ன பயன்.. ?”
“என் மனது உனக்குத் தெரியாதா..?”
“எப்படித் தெரியும்.. ? இதுவா.. அதுவான்னு நான் அல்லாடியதுதான் மிச்சம்.. எந்த நம்பிக்கையில் நீங்க என்னைக் காதலிக்கிறிங்கன்னு நான் நினைக்க…?”
“எதுவுமேயில்லையா..?”
“இல்லை.. நம்ம கூடவேலை பார்க்கிற பெண்கள் எல்லோருமே என்னை விட அழகு…”
இதைச் சொன்ன பூர்ணிமாவின் முகத்தில் மண்டிய துயரத்தை வியப்புடன் பார்த்தான் குணசீலன்…
இவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் அவனுக்கு அழகாகத் தோன்றியதில்லையே.. அது இவளுக்குத் தெரியுமா..?
“அப்படியா…? எனக்கென்னவோ.. நீ மட்டும்தான் அழகுன்னு தோணுது…”
“போதும்…” நிராசையுடன் முகம் திருப்பிக் கொண்டாள் பூர்ணிமா…
“பூர்ணி…”
“வேண்டாம்.. போய் விடுங்கள்.. நேத்துச் சாயங்காலம் நடந்ததிலிருந்து நான் இன்னும் மீண்டு வரவில்லை… திரும்பவும் ஆசைகாட்டாதீங்க.. நான் தாங்க மாட்டேன்…”
“நான் உண்மையிலேயே உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன் பூர்ணிமா…”
“பொய்யிலே எழும்புகிற கோட்டை எத்தனை நாள் நிலைத்துநிற்கும்..? கற்பனையிலேயே என் காலம் கழிந்து விட்டது… எதுவும் எனக்கு நிஜமில்லையென்று ஆனபின்பு… சாம்பலாகி விட்ட என் கனவுகளுக்கு உயிர் கொடுக்க நினைக்க வேண்டாம்.. போய் விடுங்கள்..”
குணசீலனின் கண்கள் சிவந்து விட்டன.. அவளையே உறுத்துப் பார்த்தான் அவன்…
“இவ்வளவுதானா நீ…? இத்தனை நாளும் எனக்காக நீ ஏங்கித் தவித்ததெல்லாம் பொய்தானா..? ஒரு ஜாலக்காரியின் சாகஸ நாடகத்தை நம்புவாய்… என்னை மட்டும் நம்பமாட்டாய்… போகிறேன்.. இனிக் காதல்ன்னு சொல்லிக்கிட்டு உன் முன்னால் வந்து நிற்கவே மாட்டேன்…”
குணசீலன் போய்விட்டான்.. அவன் பேசிய பேச்சுக்களின் தாக்கம் பூர்ணிமாவின் மனதில் உறைந்து நின்றது…
விடியும் வரை தூங்காமல் அழுது கொண்டிருந்த- வளுக்கு.. விடிந்த போது.. காய்ச்சல் வந்து விட்டது..
அவள் பேங்கிற்கு லீவைச் சொன்னாள்… மனம் தனிமையின் கனம் தாங்காமல் நசுங்கித் தவிக்க… லீவை நீடித்து விட்டு.. பெரிய குளத்திற்கு பஸ் ஏறிவிட்டாள்…
“என்ன சுரேஷ் சார்.. உங்க ஆளைக் காணோமே..” திட்டத்தின் அடுத்த காயை நகர்த்த ஆரம்பித்தாள் லிஸி… சுரேஷின் கண்கள் பூர்ணிமாவைத் தேடித் தவித்ததைக் கண்டவள் அவனிடம் பேச்சை வளர்த்தாள்..
“அதுதான் தெரியலைங்க.. மெடிகல் லீவாம்..”
“ஆள் ஹாஸ்டலிலும் இல்லையாமே.. பெரியகுளத்துக்கு போய் விட்டாளாமே…”
”உங்களுக்கு யார் சொன்னது..?”
“அவளோட ஹாஸ்டல் ரூம் மேட் சொன்னா..”
“ரெஸ்ட் எடுக்கப் போயிருப்பாங்க…”
“அதுக்குப் போனாளோ.. இல்லை… பெண் பார்க்க யாரும் வந்திருக்காங்கன்னு போனாளோ.. யாருக்குத் தெரியும்.. ?”
“என்னங்க.. இப்படி குண்டைத் தூக்கிப் போடறிங்க..?”
“நடப்பைத்தான் சொல்கிறேன் சார்… நீங்க பாட்டுக்கு.. வெறும் யோசனையை மட்டும் மனசில வைத்துக்கிட்டு இருப்பீங்க… மத்தவங்க காரியத்தில் காட்டி வைப்பாங்க.. கடைசியில் என்ன ஆகும்..?”
“என்ன ஆகும்..?”
“உங்களுக்கு அவளோட கல்யாண இன்விடேசன் வந்து சேரும்…”
சுரேஷ் அலறியடித்துக் கொண்டு.. பெற்றவர்களுக்கு போன் போட்டு முடுக்கி விட்டான்.. பெரிய குளத்திலிருந்த சுரேஷின் உறவினர்கள் தந்த விவரங்கள் சுரேஷைப் பெற்றவர்களுக்கு வெகு திருப்தியாக இருந்து வைத்ததில்… அவர்கள் பெண் கேட்டு பூர்ணிமாவின் பெற்றோரை அணுகி விட்டார்கள்…
“ஜாதகம் பொருந்தியிருக்குங்க…” என்று சந்தோசமாக லிஸியிடம் சொன்னான் சுரேஷ்…
“வெரிகுட்… தீயாய் வேலை செய்கிறிங்க போல…”
“யெஸ்.. சீக்கிரமே பெண் கேட்டு போகப் போறோம்..”
பூர்ணிமா லீவு முடிந்து வரும் போது.. சுரேஷின் மனைவியாக வந்து சேர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்ற நினைவில் மகிழ்ச்சிப் புன்னகை பூத்தாள் லிஸி…
அவர்களது கலந்துரையாடலை.. அக்கறையில்லாத செவிமடுத்துக் கொண்டிருந்தவனைப் போல குணசீலனின் மனதில் சினம் துளிர்த்தது….
‘இவள் பூர்ணிமாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறானா..?’
அத்தியாயம் – 18
கடைத் தெருவிற்கான அனைத்து பரபரப்புகளும் அந்தத் தெருவில் குடிகொண்டிருந்தன. ஒரு வினாடிகூட நிற்க முடியாமல்.. கடையிலிருந்த வேலையாள்கள் சுழன்று கொண்டிருக்க.. அதை கண்காணிப்பாய் பார்த்தபடி.. கல்லாப் பெட்டியைக் கவனித்துக் கொண்டிருந்தார் கந்தசாமி…
“மளிகைக்கடை நடத்தறதும்.. மணல் வியாபாரம் செய்கிறதும் ஒன்னுடா தம்பி.. எப்பவுமே நசநசன்னு இருக்கும்…”
அவர் மளிகைக்கடை ஆரம்பித்தபோது… கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் அண்ணன் பெரியசாமி இந்த வார்த்தைகளைச் சொல்லித்தான் அவரைத் தடுத்தார்….
அவர் கேட்கவில்லை.. பிடிவாதமாய் சின்னதாக ஒரு கடையை பெரிய குளத்தின் கடைத்தெருவில் போட்டார்.
“கிராமத்திலே சொத்துபத்து இருக்கு… இருந்தாலும் ஒரே ஒரு குறையும் சேர்த்து இருக்கு.. மாப்பிள்ளை கலப்பையைத் தூக்கி பிழைப்பை நடத்தாம.. தராசைக் தூக்கி பிழைப்பை நடத்தறான்…”
அவருக்கு பெண் கொடுக்க நினைத்த சுந்தரியின் வீட்டில் மாப்பிள்ளையைப் பற்றிய பெருங்குறையாக அவர் கடை நடத்துவதைத்தான் கூறினார்கள்..
“ஏன்ப்பு… பெண்ணைப் பெத்தவங்க நினைக்கிறதிலயும் தப்பில்லையேப்பு.. நமக்கு வராததை கையில் எடுக்கிறதைவிட… வழிவழியாய் வந்த பிழைப்பைப் பார்க்கலாமேப்பு…”
பெரியசாமி.. கந்தசாமியைப் பெற்றெடுத்த தாயும் கந்தசாமியிடம் கெஞ்சிப் பார்த்தாள்…
அவர் அசையவில்லை.. வேறு வழியின்றி சொந்தபந்தம் விட்டுப் போய்விடக் கூடாது என்ற காரணத்தைக் காட்டி.. கால்மனதுடன் சுந்தரியை கந்தசாமிக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்கள். அவளைப் பெற்றவர்கள்..
அவர் கைபிடித்து வந்தவள்.. அடுத்தடுத்து ஆணொன்று.. பெண்னொன்றுமாக… கணபதியையும்– பூர்ணிமாவையும் பெற்றெடுத்தாள்.. குழந்தைகள் வளர.. வளர.. கடையும் வளர்ந்தது.. பெரியகுளத்தின் கடைவீதியில் கந்தசாமியின் மளிகைக்கடையென்ற தனி அடையாளத்துடன் நிலை கொண்டது…
இன்று… கந்தசாமிக்கு பெரியகுளத்தில் மூன்று வீடுகள் சொந்தமாக இருக்கின்றன… கிராமத்து வயலுக்குப் பக்கத்தில் இருக்கிற வயல்களையும் சேர்த்து வாங்கிப் போட்டிருக்கிறார்.. சுந்தரியின் கழுத்து.. கைகளில் கனமான தங்க நகைகள் அலங்கரிக்கின்றன… பூர்ணிமாவின் திருமணத்துக்கு தேவையை விட அதிகமான நகைகளை செய்து வைத்திருக்கிறான்…
“மகன் என்ஜினியரா இருக்கான்… பெருங்கொண்ட இடத்தில இருந்தெல்லாம் பெண் கொடுக்க போட்டி போடறாங்க.. காலத்திலே பயிர் செய்யின்னு.. பெரியவங்க சொல்லியிருக்காங்க…” சுந்தரி கவலைப் படுவாள்…
“ஆம்பளைக்கு காலத்தைப் பத்தி ஒரு கவலையுமில்லடி.. பொம்பளைப் புள்ளைக்குத்தான் நாம அத்தனையையும் பார்த்தாகனும்.. தங்கச்சிக்கு கல்யாணத்தை பண்ணி முடிக்காம என் மகன் தாலியை கையில தொடமாட்டான்…” கந்தசாமி பெருமையுடன் மீசை முருக்குவார்…
“அதெல்லாம் சரிதாங்க… அதையாவது காலாகாலத்திலே செய்து முடிக்கணுமில்ல…” சுந்தரி அங்கலாய்ப்பாள்…
”பொருடி.. பொண்ணு இப்பத்தான் பேங்கு வேலைக்கு போயிருக்கிறா.. அவளைப் போலவே வேலை பார்க்கிற மாப்பிள்ளை அமையனுமில்ல… கந்தசாமி நிதானமாகவே செயல்படுவார்…
வாரத்திற்கு ஒரு மாப்பிள்ளை வீட்டாராவது பூர்ணிமாவைப் பெண் கேட்டு அவரை அணுகாமல் இருக்க மாட்டார்கள்..
அதுகுறை… இது குறையென்று சொல்லி.. அவர் அனைத்தையும் சல்லடை போட்டு சலித்துப் பார்த்து ஒதுக்கிவிடுவார்…
“எங்கப்பா இப்படிப் பார்த்திருந்தா.. உங்களுக்கு நான் கழுத்தை நீட்டியிருக்க மாட்டேன்..” சுந்தரி எரிச்சல் படுவாள்…
“அடேங்கப்பா.. உனக்கு அதிலதான் குறைஞ்சு போச்சாக்கும்..? என்னைப்போல ஒருத்தன்.. உனக்கு கிடைச்சிருப்பானாடி..?” கந்தசாமி மனைவியை வம்புக்கு இழுப்பார்…
அப்படி சல்லடை போட்டு சலித்ததில்.. சில குறைகள் மட்டுமே உள்ள மாப்பிள்ளையாக சுரேஷ் அவரின் கவனத்தில் பட்டான்…
‘அப்பா… அம்மா.. அம்பாசமுத்திரத்திலே இருக்காங்களாம்… ரெண்டு அக்கா.. ஒரு அண்ணனாம்.. மாப்பிள்ளையைத்தவிர.. மத்தயாரும் அதிகம் படிக்கலையாம்…’
கந்தசாமி விவரம் கூற… சுந்தரி யோசனையானாள்..
“அப்போ.. மாப்பிள்ளை ஒருத்தர்தான் அந்த வீட்டிலே உத்தியோகம் பார்க்கிறவருன்னு சொல்லுங்க…”
“அதேதாண்டி.. தர்மபுரியிலதான் முதமுதலா.. வேலைக்குப் போட்டாங்களாம்.. அங்கேயிருந்து மாறுதல் வாங்கி சொந்த ஊருக்கு இப்பத்தான் வந்து சேர்ந்திருக்காரு… சொந்தமாய் வீடிருக்கு.. ஆனா…”
“ஆனா..?”
“அவரோட அக்காக்களை தாய் மாமன் மகன்களுக்கு கட்டிக்கொடுத்து.. வீட்டோட மாப்பிள்ளைகளா வைத்திருக்காங்களாம்.. அண்ணன்காரன் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த மறுமாசமே வீட்டுக்கு வந்த மருமக.. சொல்லாம கொள்ளாம பிறந்த வீட்டுக்கு ஓடிப் போயிருச்சாம்…”
“அடிக்கடவுளே.. அது எதுக்காம்.. ?”
“எல்லாம் உள்வீட்டு கலவரம்தான்…”
”அப்புறம்..?”
“அப்புறமென்ன.. பொண்ணு வீட்டில பஞ்சாயத்துப் பண்ணி பெரியவனை தனிக்குடித்தனம் போக வைச்சாங்களாம்…”
“அப்போ.. நம்ம பூர்ணிமாவையும் நாம் தனியாகுடிவச்சிரலாம்…”
“ம்ம்.. அதுக்கு வாய்ப்பிருக்கு.. ஆனா எடுத்த எடுப்பிலேயே அதைச் செய்ய முடியாது சுந்தரி…”
“முதலில் அவங்க பொண்ணு பார்க்க வரட்டும்.. மத்ததை அப்புறம் யோசிக்கலாம்.. பொண்ணு லீவு போட்டுட்டு வீட்டில வந்து இருக்கிற இந்த சமயம்தான் அதுக்கெல்லாம் லாயக்குப் படும்.”
பூர்ணிமாவுக்கு தெரியாமலே.. சுரேஷ் குடும்பத்தோடு பெண்பார்க்க வந்து இறங்கி விட்டான்.. அந்தத் திடிர் பெண்பார்க்கும் படலத்தில் பூர்ணிமா அதிர்ந்து விட்டாள்.. சுரேஷின் வீட்டார் போன மறு நொடியிலேயே அவளின் ஆட்சேபத்தையும் வீட்டில் சொல்லி விட்டாள்…
“யாரைக் கேட்டும்மா அவங்களைப் பெண் பார்க்க வரச் சொன்னீங்க… ?”
சுந்தரியிடம் அவள் கோபப்பட.. தாடையைத் தடவியபடி கந்தசாமி பதிலுக்கு கேட்டார்…
“யாரைக் கேட்கனும்.. ?”
“என்னைக் கேட்க வேணாமாப்பா..?”
“கட்டாயம் கேட்கனும்.. எப்போத் தெரியுமா.. ? உன் கண் முன்னாலே மாப்பிள்ளையைக் காட்டிட்டு.. இவரை உனக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்கனும்… அதைத்தானே நானும் செஞ்சேன்..?”
“இவனை எனக்குப் பிடிக்கலை…”
“விடு.. வேற மாப்பிள்ளை பார்க்கலாம்…”
“அப்பா…”
பூர்ணிமா தவிப்புடன் பெற்றவரைப் பார்க்க.. கந்தசாமி கண்டிப்புடன் மகனைப் பார்த்தார்…
“பாரு பூர்ணிமா.. இதுவரைக்கும் உன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாலே நான் நிறுத்தினதில்லை.. எல்லாம் கூடி வந்து.. இந்த இடத்தில் பெண்ணைக் கொடுத்தா என் பொண்ணு நல்லா வாழ்வான்னு என் மனசுக்கு பட்டா மட்டுமே.. அவங்களை பெண்பார்க்க வரச் சொல்கிறதாத்தான் நான் இருந்தேன்.. இந்த மாப்பிள்ளை உன் கூட திருநெல்வேலியில ஒரே பேங்கில வேலை பார்க்கிறவரு கண்ணுக்கு லட்சணமாய் இருக்காரு.. வேற கெட்ட பழக்கம் எதுவுமில்ல.. அதனால உனக்குத் தோதான இடம்ன்னு நினைச்சேன்.. அவங்களையும் வரச் சொன்னேன்.. உனக்குப் பிடிக்கலைன்னு சொல்கிற… அதனால ஒரு குத்தமுமில்ல.. உனக்கு பிடிக்காத மாப்பிள்ளைக்கு ஒருநாளும் உன்னைக் கட்டிக் கொடுக்க மாட்டேன்… கவலையை விடு.. ஆனா.. கல்யாணமே பிடிக்கலைன்னு மட்டும் கதை விடலாமுன்னு நினைக்காதே… ஒருநாளும் நான் அதுக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன்…!”
“அப்பா…”
“எனக்கு உன்னையும் தெரியும்.. இந்த உலகத்தையும் தெரியும்.. உனக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னா.. நான் வேற மாப்பிள்ளையைப் பார்க்கலாமுன்னு சொன்ன உடனேயே உன் முகம் மலர்ந்திருக்கனும்.. ஆனா அது கூம்பிப் போயிருச்சே..ஏன்..?”
“அப்பா..”
“இந்தக் கந்தசாமி சொல்லுப்படாம பொழைச்சவன் தாயி.. கல்லடி பட்டாலும் படலாம்.. சொல்லடி படக்கூடாது தாயி.. இதுவரை என் தலை குனிஞ்சதில்லை.. இனிமேலும் அது குனியக் கூடாது…”
அன்று இரவு பூர்ணிமா சத்தமில்லாமல் வெகுநேரம் அழுது கொண்டே இருந்தாள்…
குணசீலனை மறந்து இன்னொருவனின் கையில் தாலி வாங்கிக் கொள்வதா… ? அவளால் அது முடியுமா..? அந்த நொடியிலேயே அவள் செத்து விட மாட்டாளா..?
அந்த நினைவு வந்த உடனேயே.. பூர்ணிமாவுக்குள் தெளிவு பிறந்தது.. நிலைமை நெருக்கடியாக மாறினால் அவள் செய்ய வேண்டியது எது என்பதை அவள் தீர்மானித்து விட்டாள்…
‘செத்து விடுவேன்…’
போதும் என்ற சோர்வு அவள் மனதைச் சூழ்ந்தது..
அவள் மனதை மதிக்காத குணசீலனும் அவளுக்கு வேண்டாம்… அவனைத் தவிர.. வேறு ஒருவனுக்கு அவள் சொந்தமாகவும் வேண்டாம்… அவனைப் பற்றிய நினைவுகளுடன் போய்விட வேண்டும்.. உயிரோடு இருந்தால்தானே.. பெற்றவர்களின் மரியாதையைக் காப்பாற்ற இன்னொருவனுக்கு கழுத்தை நீட்ட வேண்டும்..? செத்துவிட்டால் எந்தத் தளைகளும் அவளுக்கு இருக்காதே…
‘சாவு ஒருவகையான விடுதலை…’
அந்த முடிவை எடுத்தபின்பு அவளால் கண்மூடித் தூங்க முடிந்தது… மறுநாள் மதிய உணவுக்கு கடையிலிருந்து வீட்டுக்கு வந்த கந்தசாமி.. அன்று மாலை.. பூர்ணிமாவைப் பெண்பார்க்க.. வேறு ஒரு மாப்பிள்ளை வீட்டார் வரப் போகிறார்கள் என்ற தகவலைச் சொன்னார்…
“இவங்க எந்த ஊரு..?” சுந்தரி ஆவலாக கேட்டாள்….
மகள் இப்படி மறுத்துவிட்டாளே என்ற கவலை அவளுக்கு… வருகிற மாப்பிள்ளைகளை அவள் நிராகரிக்க ஆரம்பித்தால்.. ஊரில் என்ன சொல்வார்கள்..?
பூர்ணிமாவுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்க வில்லை யென்று யாரும் சொல்ல மாட்டார்கள்.. எந்த மாப்பிள்ளைக்கும் பூர்ணிமாவைப் பிடிக்கவில்லை யென்று சொல்லி விடுவார்கள்…
அந்தக் கவலையில் இருந்தவளுக்கு.. ஒரே நாளிலேயே.. இன்னொரு மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்திய கணவனின் மீது காதல் வந்தது…
அதைப் பார்வையிலே அவள் வெளிப்படுத்த… கந்தசாமி கிறங்கிப் போனார்..
‘இதப்பாரு.. பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிற சமயத்தில.. இவ.. என்னைப் போயி புதுமாப்பிள்ளையைப் பார்க்கிறதைப்போல பார்த்து வைக்கிறா…’
அவருக்கும்.. அவள் புதுப்பெண்போலத்தான் தெரிந்தாள்…
‘வீட்டுக்கு மருமகனும்.. மருமகளும் வரப்போகிற வயசு வந்தும்.. அசத்தலாய்.. அப்படியே.. அன்னைக்குப் பார்த்த மாதிரியே இருக்காளே…’
கணவனின் பார்வையில் அன்றைய ராத்தூக்கம் பறி போவதைப் பற்றிய செய்தியிருக்க… சுந்தரியின் முகம் சிவந்துவிட்டது…
“கேட்டதுக்கு பதிலைக் காணோமே…” அவள் சிணுங்கலாக வினவினாள்…
“இவங்க திருநெல்வேலிதானாம்… சொந்த வீடு… வாசல்ன்னு சொத்து சுகம் ஏராளமாம்…”
“என்ன இருந்து என்ன பண்ண ? உங்க பொண்ணுக்கு பிடிச்சுத் தொலைக்கனுமே…”
“பிடிக்க வைச்சிரலாம்…”
“என்னங்க சொல்கிறீங்க… ?”
“சுந்தரி.. முந்தாநாளு வந்துட்டுப் போன மாப்பிள்ளை வீட்டைப்பத்தி உனக்கும்.. எனக்கும் குறையிருந்துச்சு.. அதனால.. பூர்ணிமா சொன்னதுக்கு நான் மறுப்புச் சொல்லலை… இப்ப வர்ற மாப்பிள்ளை வீடு நாம தேடினாலும் கிடைக்காத இடம்டி… ஒரு குறையும் சொல்ல முடியாது.. இதை வேண்டாம்ன்னு பூர்ணிமா சொன்னா… அவ தலையிலே அவளே மண்ணை அள்ளி போட்டுக்கிறான்னு தான் அர்த்தம்.. அதுக்கு நான் விடமாட்டேன்…”
கந்தசாமி உறுதியாக கூறிக் கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த பூர்ணிமாவுக்கு.. அப்போதே வரப்போகும் மாப்பிள்ளை வீட்டாரின் மீது வன்மம் எழுந்தது…
– தொடரும்…
– ஆசையா.. கோபமா… (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2012, லட்சுமி பாலாஜி பதிப்பகம், திண்டுக்கல்.