அஷ்டாவக்ரம்
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 102
(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அஷ்டாவக்ரம் எனில் எட்டுக்கோணல் என்று பொருள். அந்தக் கோணல்கள் யாவை என்பதை வடமொழிப் பண்டிதர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து ‘அஷ்டாவக்ரன்’ எனும் புனைபெயரில் கதாசிரியர் ஒருவர் இருந்தார். அவரையும் நேரில் அறிமுகம் இல்லை.
என்னிடம் உள்ள அஷ்டாவக்கிர-சனக சம்வாதமான ‘அஷ்டாவக்ர கீதை’ என்றொரு மொழிபெயர்ப்பு நூலானது, ரமணாஸ்ரமம் வெளியீடு. அதில் பதினேழாவது அத்யாயத்தில் மூன்றாவது வசனம் எனக்கு மிகவும் பிரியமானது.
‘ஈச்சங் குருத்துண்டு இன்புறும் யானையை வேப்பிலை மகிழ்வியாதது போலத் தன்னுளே உவப்பவனை இவ்விஷயங்கள் எவையும் என்றும் களிப்பிக்க மாட்டா’ என்பது.
ஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டாவக்ரம்’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதி நவீனத் தமிழ் சினிமா பற்றியது.
கடந்த ஆறு மாதமாகவே தேசிய, பிராந்திய நாளிதழ்களில் முழுப்பக்க எட்டு வர்ண விளம்பரங்கள். வயலெலாம் முத்தம், வரம்பெல்லாம் கழுநீர்க் கொள்ளை என்பது போல் வாராந்தரிகளிலெல்லாம் படங்கள், பெட்டிச் செய்திகள், துணுக்குகள், கேள்வி பதில்கள். தமிழ்கூறும் நல்லுலகத்தார் மகிழ்ச்சியில் திளைத்துக் கிடந்தார்கள். ஏதோ எய்ட்ஸ் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மிக மலிவான விலைக்கு சாலையோரம் கூறு வைத்து விற்பனைக்கு வந்ததைப் போல. கிட்டத்தட்ட ஆறாயிரம் கிலோ மீட்டர் எல்லைக்குப் பாயும் ஏவுகணை விடுதலுக்கான கவுன்ட் டவுன் போல, இன்றென்றனர், நாளை என்றனர், நாளை மறுநாள் என்றனர், வாராதும் போய்விடுமோ வையத்தில் என்றனர்.
தூரதேசத்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்டார். “ஓய் கும்பமுனி, அஷ்டாவக்ரம் பாத்தேரா? எப்பிடியும் பாத்துக் கிட்டுச்சாவும்.”
“நான் என்னத்துக்குவே பாக்கணும்? ஒனக்கு அம்மைக்க ஆமக்கனுக்கு கொண்டுபோயிக் காணி” என்றேன். தொடர்பைத் துண்டித்துவிட்டான்.
பாபா வந்தபோதும், சந்திரமுகி வந்தபோதும், சிவாஜி வந்த போதும், தசாவதாரம் வந்தபோதும் இவ்வண்ணமே கேட்டார்கள். நாளை எந்திரன் வரும்போதும் கேட்பார்கள்.
எப்படியும் ஆறுமாதம் பொறுத்து திருநெல்வேலிக்கோ, திருச்செந்தூருக்கோ பேருந்தில் போகும்போது அதைப் பார்ப்பது தவிர்க்க இயலாததாகிவிடும். செத்துப்போய், யமதர்மராசனின் தர்பாரில் நிற்கும்போது, சித்திரகுப்தன், பண்டு குஜராத்தி பனியாக்கள் சுவஸ்திக் மார்க் வரைந்த சிவப்புத் துணி அட்டை போட்ட பேரேடுகள் வைத்திருப்பதைப் போன்ற ஒன்றைப் புரட்டி பாவபுண்ணிய வரவுசெலவைப் பார்க்கும்போது, தேவை யற்ற ஒரு வினாவைத் தவிர்க்க ஏதுவாகும்.
கடந்த ஒரு வாரமாக, பால்காரன், கீரைக்காரி, தபால்காரன், கோலப்பொடி மாவு விற்பவள் என எவர் கண்டாலும் கேட்கும் கேள்வி இதுதான்.
“பாட்டா, அஷ்டாவக்ரம் பாத்தாச்சா?” அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, கும்பமுனியாகிய நானே ஒரு அஷ்டாவக் கிரன் என்று.
ஏதோ நூற்றிருபது ஆண்டுக்கு ஒருமுறை வரும் வால் நட்சத் திரம் ஒன்று அடிவானத்தில், தென்கிழக்கு மூலையில் காலையில் ஐந்தே காலுக்குத் தெரிவதைப் போலவும் இன்னும் ஒன்பது நாட்களே காண இயலும் என்பது போலவும் பேசிக்கொண்டார்கள்.
ஒரு பத்திரிகையாள நண்பர் கேட்டார், “வே, இருபது டிக்கட் இருக்கு, வாறேரா?”
மேயப்பட்ட கழுதையை மேயவிடாது மெனக்கெட்ட கழுதை என்றனர் பண்டைத் தமிழர்.
மூன்றாவது வாசிக்கும் பக்கத்து வீட்டுப் பையன் பார்த்துவிட்டு வந்து கதை சொல்லி நின்றான். அவனைக் கூட்டிப் போக வந்த பொறுப்புள்ள தகப்பள் சொன்னான், “பாட்டா, இரு நூறு ரூவாய்க்கு டிக்கட் கெடச்சதே பெரும்பாடாக்கும். எனக்கு மச்சினன் கல்பனாவிலே ஆப்பரேட்டர் பாத்தேளா… சொல்லி வச்சு வாங்கித் தந்தான்.”
“ஆமாடே, மூத்திரத்தை அடக்கினாலும் ஆத்திரத்தை அடக்கப் பிடாதுல்லா.”
அவனுக்கு என்ன தாலியறுப்பு புரிந்ததோ, தவசிப்பிள்ளை ஊமைச்சிரிப்பாணி சிரித்தார்.
இந்து பேப்பர் இரவல் வாங்கவரும் பையன், பத்தாவது படிப்பவன் சொன்னது, அவன் வகுப்பில் இன்னும் பதினேழு பேர் மட்டுமே பார்க்கவில்லை என்று. பெரிய நிறுவனங்கள் மூன்று நாட்கள் மாலைக்காட்சி முழுவதையும் திரையரங்குகளைத் தீர் மானித்து குத்தகைக்கு எடுத்தனர். கொச்சியில் இருக்கும் நிறு வனம் ஒன்று தனது ஊழியர்களை மூன்று குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளில் ஏற்றிக் கொணர்ந்து, திரைப்படம் காட்டி, ஆரிய பவன் ஆனந்தபவன் அன்னபூரணி உணவு விடுதிகளில் உணவு வாங்கிக் கொடுத்து திருப்பிக் கூட்டிச்சென்றது என்றது நாளிதழ் ஒன்று. பீர் செலவு அவரவர் கைக்காசு.
திருமணவரவேற்பு நடத்துபவர்கள் நூற்றுக்கணக்கில் இரவுக் காட்சி சீட்டுகள் வாங்கி வைத்து, விருந்தினருக்கு டோக்கன் கொடுத்தனர். நகரின் பெயர் பெற்ற மனோதத்துவ மருத்துவர் குடும்பத்தினருக்கும் நண்பருக்கும் எண்பது சீட்டுக்கள் வாங்கிப் போனார்.
முதலமைச்சர், ஆளுநர், அமைச்சரவை உறுப்பினர், எதிர்க் கட்சித் தலைவர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவர்தம் குடும்பத் தினருக்கு என்று தனிக்காட்சிகள் ஏற்பாடாயின. படம் பார்க்கும் போது கொறிக்க எனத் தலைக்கு முன்னூறு கிராம் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, கம்பூஜியா ஆப்பிள், உறிஞ்ச ஆரஞ்சு! சாத்துக்குடி/ஆப்பிள்/மாதுளைமாம்பழம் அன்னாசி|சப்போட்டா சாறு, விழுங்க பிளாக் பாரஸ்ட் கேக், நக்க இறக்குமதியான ஐஸ்கிரீம் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டின் முன்னிலை வாராந்தரிகள் நூற்றுக்கு தொண் ணூற்று ஒன்பது மதிப்பெண்கள் விமர்சனத்தில் வழங்கின. சிறு முதலாளிகள் நடத்தும் கலை இலக்கிய மாதாந்திரிகளில் நான்கு
முதல் ஆறு பக்கத்துக்கு அஷ்டாவக்ரம் பற்றி உலக சினிமாக் களோடு தாரதம்யப்படுத்தி ஆய்வுக் கட்டுரைகள் வந்தன. முதலா ளிகளுக்கு விளம்பரமும் நிருபர்களுக்கு உள்ளங் ‘கவர்’ விருந்தும் ஏற்பாடாயின.
எட்டுக் கோணல் வேடங்கள் தரித்த பிரபஞ்ச நாயகன் திருப் பதியில் முடி இறக்கினார், திருத்தணியில் தாடி மழித்தார், பழனி யில் காது குத்தினார், திருநள்ளாற்றில் தீர்த்தமாடினார், சபரி மலையில் அங்கப் பிரதட்சணம் செய்தார், சீரங்கத்தில் இலட்சம் பேருக்கு இவை போட்டு, ‘தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவி’ அக்கார அடிசில் பரிமாறினார்.
செய்திகள், செய்திகள், செய்திகள்…
எட்டுக் கோணல் வேடங்களுக்கும் இணையாக வந்து புட்டம் ஆட்டி, தனங்கள் குலுக்கி, தொடைகள் தட்டி, அல்குல் தைவரல் செய்து நடிப்பில் சிகரங்களைத் தொட்ட இஷ்ட காமி அஷ்ட நாயகிகளின் அட்டைப் படம் போடாத பருவ இதழ்கள் இல்லை எனவாயிற்று. பார்த்துப் பரவசம் கொண்டு திவ்ய தேசத்து மொழியில் ஜொள் எனப்படும் திரவம் ஒழுக்கி மக்கள் வாய் வறண்டு போனார்கள்.
எட்டுக்கோண நாயகனின் கட்-அவுட்களுக்கு, பால், தேன், கருப்பஞ்சாறு,பன்னீர், விஸ்கி, பீர், வைன் அபிசேகங்கள் ஆயின. அபிசேகங்கள் மூடநம்பிக்கை எனக் கருஞ்சட்டைப் படை, சூடம் காட்ட, சாம்பிராணி புகைக்க மட்டும் அனுமதி அளித்தது. கும்பமுனி செய்திகளில் மூச்சு முட்டிச் செத்துக்கொண்டிருந்தார்.
பாக்ஸ் ஆபீஸ் வசூல் நாளும் ஐந்து கோடியாம். அகில பிரபஞ்சத்துக்கும் – சந்திர மண்டலம், செவ்வாய்க் கிரகம், வீனஸ் கிரசும் அடக்கம் – ஆயிரத்து முன்னூற்றுப் பத்து பிரிண்ட் என்றார்கள்.
தன்னைப்போல் ஒரு கதாபாத்திரம் வருகிறது என்று ஜார்ஜ் வாஷிங்டன் முகமூடி அணிந்து மாறுவேடத்தில் வந்து படம் பார்த்துப் போனார் என்றனர். உலக சினிமாக்கள் பார்க்கும், இரண்டாயிரம் டிவிடி வைத்திருக்கும், சினிமாக் கட்டுரையாளர் ஒருவர் அறுபத்து நான்கு ஆஸ்கர் பரிசுகள் உறுதி என்றார். அதி நவீன தமிழ் எழுத்தாளர்கள் எழுதித் தீர்த்துவிட்டு அடுத்து ‘குசேலன்’ வரவு பார்த்திருந்தனர்.
கும்பமுனி மனக்கணக்குப் போட்டுப் பார்த்தார். தினமும்
ஐந்து கோடி வசூல் எனில் நூறு நாட்கள் படம் ஓடினால் ஐந்நூறு கோடிகள். எனில் எவ்வளவு வரி அடைப்பார்கள்? ஒருவேளை, முதலமைச்சர், இதர அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற தனித் திரையிடல் காரணமாய், பிரபஞ்ச நாயகனுக்கு வரிவிலக்கும் செய்வார்களோ! இல்லை வேறேதும் கணக்கு வழக்குகள் இருக்குமோ!
திருமூலர் பாட்டொன்று ஞாபகம் வந்தது கும்பமுனிக்கு.
‘படமாடக் கோயில் பரமர்க்கு ஒன்று ஈகில்,
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈகில்
படமாடக் கோயில் பரமர்க்கு அங்கு ஆமே!’
அதாவது அரசுக் கருவூலத்தில் செலுத்தும் பணம், நடமாடும் சாதாரண மனிதனை வந்து சேராது. ஆனால் தெருவில் திரிதரும் மனிதனுக்குக் கொடுத்தால் அது அரசு கருவூலத்தில் சேர்ந்தது போலாகும் என்று வித்தாரமாக விரித்துப் பொருள் கொள்ளலாம்.
உள்ளூர் நகைக்கடை விளம்பரம் ஒன்றிருந்தது அன்றைய செய்தித் தாளில், பத்தாயிரம் ரூபாய்க்கு நகை எடுத்தால் அஷ்டா வக்கிரம் படத்துக்கு இரண்டு சீட்டுகள் இலவசம் என்று.
பிரபஞ்ச நாயகன் நற்பணி மன்றம் ஒன்று – நற்பணி ஆவது புதுப்படம் வெளியாகும் போது மொத்தமாகச் சீட்டுகள் வாங்கி மூன்று மடங்கு விலைக்கு விற்பது – அறிவித்தது. அஷ்டாவக்கிரம் நடக்கும் கொட்டகையில் எந்தத் தாயாவது பிரசவித்தால் குழந் தைக்கு ஆண் என்றால் அஷ்டாவக்கிரன் என்றும் பெண் என்றால் அஷ்டாவக்கிரி என்றும் பெயர் சூட்டப்படும் என்றும் பிரபஞ்ச நாயகன் முத்திரை போட்ட பத்துப் பவுன் சங்கிலி ஒன்று பரிசாக வழங்கப்படும் என்றும் அவர்கள் பருவவயது எய்தும்போது பிரபஞ்ச நாயகன் படத்தில் ஆண் எனில் வில்லனாகவும், பெண் எனில் நாயகியாகவும் நடிப்பர் என்றும்.
எல்லாம் செய்தித்தாள் நீதிநெறி பரப்பலாக இருந்தது. ஏற்கனவே சினிமாக்களில் நாயகர்களாக நடித்து இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபத்தைந்து முதல் எழுபத்தைந்து வரை வயதானவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் நாற்காலி எதிர்காலத் திட்டமாக இருந்தது. தலைக்கு ஐந்தாண்டுகள் என முன்பதிவு செய்து வைத்தாலும் 37 X 5=185 ஆண்டுகள் வரைக்கும் பொற்றமிழ் நாட்டுக்கு முதலமைச்சருக்கு ஆள் தட்டுப்பாடு கிடையாது.
மேலும் நாயகர் தம் வாரிசுகள் குறுக்குச்சால் ஓட்டுவார்கள். அல்டிமேட் ஸ்டார், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், உலக நாயகர், யுனிவர்சல் ஸ்டார், புரட்சித் தளபதி, மக்கள் நாயகன், புரட்சித் தமிழன், பிரபஞ்ச நாயகன், ஐ.நா. நாயகன் என ரேஷன் கடை வரிசைபோல் நீண்டு கிடப்பதனால், பிரபஞ்ச நாயகன் பாரதப் பிரதமர் கனவில் இருந்தார். விரைவில் தகர மகர ககர எழுத்து களில் கட்சி ஒன்று துவங்கப்பெறும் என்றும் கறுப்பு சிவப்பு வெள்ளை நிறங்களைக் கொண்ட கொடியொன்று வரைவாகிக் கொண்டிருக்கிறது என்றும் சொன்னார்கள்.
பிரபஞ்ச நாயகன் தனது பெயரை -ஜவகர்லால் நேரு-இந்திரா காந்தி – லால்பகதூர் சாஸ்திரி-மொரார்ஜி தேசாய் – சரண்சிங் – குல்ஜாரிலால் நந்தா-அடல் பிகாரி வாஜ்பாய்-தேவகவுடா- நரசிம்மராவ்-வி.பி.சிங்-ராஜீவ்காந்தி மன்மோகன்சிங் வரிசையில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும் காலத்தை எதிர் நின்றார்.
மிகத் தாமதமாக, படம் வெளியாகிப் பத்து நாட்கள் சென்ற பின், அரசுக் குறிப்பொன்றும் வெளியாகியது. பிரபஞ்ச நாயகன் தலைமை மன்ற வேண்டுகோளை ஏற்று, அஷ்டாவக்ரம் வெளி யாகும் அன்று, மக்கள் ஓய்வாகப் படம் பார்க்கும் பொருட்டு, அன்று அரசு விடுமுறை என்றும் ரயில்கள் – விமானங்கள் ஓடாது என்றும் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மாற்றி வைக்கப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் யாவும் மறுதேதி குறிப் பிடாமல் மாற்றி வைக்கப்படுகிறது என்றும் மொத்தக் காவல்துறை யின் பணி கொட்டகை வாசல்களில் என்றும் அவசரத் தேவைக் காக இராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அரசாணை கூறியது.
மேலும் கொட்டகைகளில் இருக்கைகள் பிற்படுத்தப்பட்ட வருக்கு அறுபத்தொன்பது சதவீதமும் பிற்படுத்தப்படாதவருக்கு முப்பத்தி ஒன்று சதவீதமும் அவர்களுக்குள் பெண்களுக்கு முப்பத்துமூன்று சதவீதமும் இஸ்லாமியருக்கு ஐந்து சதவீதமும் கிறித்தவருக்கு மூன்று சதவீதமும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாக அரசாணை கூறியது. கிரீமி லேயர் என்றழைக்கப்பட்ட பத்துப் பேருக்கு உச்ச நிதிமன்றத் தலைமை நீதிபதி, பிரதம மந்திரி, ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர், மத்திய காபினட் அமைச்சர், ஆண்டுக்கு இருபத்தைந்து கோடிக்கு மேல் வருமானம் உடை யவர், ஆகியோருக்கு முன்பதிவு தரப்பட மாட்டாது என சமூகநீதி வழங்கினர். ஆண்டு வருமானம் ஐம்பது கோடிக்குக் கீழே உள்ள வரைப் பிற்படுத்தப்பட்டவர் என அறிவிக்க வேண்டும் என்று ரிட் மனு ஒன்றும் தாக்கலாகியது.
ஆமென்றுரைத்தன மறைகள் யாவும். ஓம் ஓமென்று உரைத்தனர் நாட்டின் இரண்டாயிரத்து எழுநூற்றாறு அரசியல் கட்சித் தலைவர்களும்.
புதிய செய்தியொன்று, பிரபஞ்ச நாயகன், மெல் கிப்சன் இயக்கும் படம் ஒன்றுக்கும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படம் ஒன்றுக் கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று ஏக காலத்தில் தயாரிக்கும் நான்கு படங்களுக்கும் நாயகனாக ஒப்பந்தம் ஆகிறார் என.
நடக்கட்டுமே, நமக்கு மயிரே போச்சு என்றுதான் எண்ணினார் கும்பமுனி.
ஆனால் தவசிப்பிள்ளை சொன்ன சேதி அவரைக் கதி கலங்கச் செய்தது.
புதிய செய்தியொன்று, பிரபஞ்ச நாயகன், மெல் கிப்சன் இயக்கும் படம் ஒன்றுக்கும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படம் ஒன்றுக் கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று ஏக காலத்தில் தயாரிக்கும் நான்கு படங்களுக்கும் நாயகனாக ஒப்பந்தம் ஆகிறார் என.
நடக்கட்டுமே, நமக்கு மயிரே போச்சு என்றுதான் எண்ணி னார் கும்பமுனி.
ஆனால் தவசிப்பிள்ளை சொன்ன சேதி அவரைக் கதிகலங்கச் செய்தது.
எல்லா நகரப் பேருந்து நிலையங்களின் உள்வாசல், வெளி வாசல்களிலும் நற்பணி மன்றத்தினர் கூட்டமாக நின்று பயணிகளை வழிமறித்துக் கேட்கிறார்களாம்.
“அஷ்டாவக்கிரம் பாத்தீங்களா?” ஆமென்றால் போ, இல்லை என்றால் தனியாகத் தள்ளிக்கொண்டு போய், சிவாஜி சினிமாப் பாணியில் ஆபீஸ் ரூமில் அமர்த்துகிறார்களாம்.
யார் வேண்டுமானாலும் ஆமென்று ஆணித்தரமாக அறைந்து கூறிவிடலாம் அல்லவா? அத்தனை முட்டாள்களா நற்பணி மன்றத்தினர்? நாளை இந்தியத் துணைக்கண்டத்தை ஆளப் போகிறவர்கள்?
படம் வெளியான பத்து நாட்களில் கொட்டகையினுள் நுழைபவருக்கு ஆண் எனில் வலது மார்க் காம்பிலும் பெண் எனில் இடது முலைக்காம்பிலும் காது குத்துவதுபோல் வலிக்காமல் வளையம் அணிவித்து விடுகிறார்களாம். எனவே முதல் பத்து நாட்களுக்குள் படம் பார்த்தவர் இரண்டாம் முறை பார்த்தார்கள். இல்லாவிட்டாலும்தான் பார்க்கப் போகிறார்கள்!
சொக்காரன், சீனியர் கசடன், லேகியம் சப்போர்ட்டர் ஆகிய புலனாய்வுப் பருவ இதழ்கள் அஷ்டாவக்கிரம் செய்திகளுக்காக எட்டுப் பக்கங்கள் ஒதுக்கின.
படத்தை அதிகமுறை பார்த்தவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர் ஆணானாலும் பெண்ணானாலும் அவருக்கு பிரபஞ்ச நாயகனின் உள்ளாடை ஒன்று பரிசளிக்கப் டும் என்றனர்.
பிரபஞ்ச நாயகன் நானூறு ஆண்டுகள் வாழவேண்டும் என்பதற்காக யாகங்கள், குருதிக் கொடை முகாம்கள், கண் தானங்கள், சிறுநீரகத் தானங்கள் நடந்தன. கவி மூத்தரசன் பிரபஞ்ச நாயகனின் ஆயுட் காலத்தை ஏழு ஏழு ஆண்டுகளாகப் பிரித்து சப்த ரோக சிகாமணீயம் எனப் பெருங்கொண்ட காப்பியம் ஒன்று பாடி, வழக்கம் போல முதலமைச்சர் அதை வெளியிட மூத்தரசரின் பேராய உறுப்பினர் சிலர் பிரதி ஒன்றுக்குப் பத்தாயிரம் கொடுத்துப் பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்தனர்.
நூறாம் நாள் கொண்டாட்டத்துக்கு இன்றைய முதல்வரிடம் இப்போதே தேதி வாங்கி விட்டார்கள் எனவும் இருநூறு முதல் ஆயிரம் வரையிலான வெற்றிவிழாக்கொண்டாட்டங்களுக்கு இன் றைய முதலமைச்சரிடமும் எதிர்காலத்தில் முதலமைச்சர்களாக வர வாய்ப்புள்ள ஏழு பேரிடமும், ஒருவரிடம் வாங்கியது மற்ற வருக்குத் தெரியாமல் கமுக்கமாகத் தேதி வாங்கி வைத்திருப்ப தாயும் மேற்சொன்ன புலனாய்வுப் பருவ இதழ்கள் எழுதினார்கள். உலகக் காமெடி நாயகன் உப்பாற்றுப் புயல் பெருமாள் பிச்சையின் தேதி மாத்திரம் கிடைக்கவில்லை என்றார்கள்.
கொட்டகைகள் பெருத்த சேலம் மாநகரில் புதுமணத் தம்பதியர் அஷ்டாவக்கிரம் பார்த்துக்கொண்டே முதலிரவும் கொண்டாடும் விதத்தில் – இரண்டும் எங்ஙனம் ஒரே நேரத்தில் சாத்தியம் என்று தெரியவில்லை – புத்தம் புதுத் திரையரங்கு ஒன்றில் குளிர்சாதன கேபின் ஒன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் முன்பதிவு உண்டென்றும் கட்டணம் மூவாயிரம் ரூபாய் ஒரு காட்சிக்கு என்றும் பாத்ரூம் வசதி உண்டென்றும் மெத்தை விரிப்பு, தலையணை உறை, போர்வை தனிக்கட்டணம் என்றும் இனிப்புகள், பால், பழங்கள், மலர்ச்சரங்கள், ஆணுறை, கிரீம் அவரவர் செலவென்றும் சொன்னார்கள். ஆனால் கண்டிப்பாக மதுபானங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்கள். முழுப்பக்க விளம்பரங்கள் வந்தன.
கும்பமுனிக்கு மூலக்கடுப்பு முற்றிக்கொண்டு வந்தது. கட்டங்காப்பி கொண்டுவரும்போது தவசிப்பிள்ளை கண்ணு பிள்ளை தொடங்கினார் – “பாட்டா, இந்த அஷ்டா வக்கிரத்திலே…”
“போவும் வே இங்கேருந்து… போயி அவுனுக்கு அம்மைக்கு பொறந்த நாளுக்கு திருச்செந்தூருக்கு பால்கொடம் எடும்….என் சீவனை ஏன் வாங்குதேரு?”
கும்பமுனிக்கு அஷ்டாவக்கிரம் பற்றிய செய்திகளை வாசிக் காமலும் இருக்க இயலவில்லை. பிடுங்கப்பட்ட பற்குழியாய் நாக்கு அதில் நெருடிக் கிடந்தது. அல்லது ரொமான்டிக் ஆன உதாரணம் எனில் புதுப் பொண்டாட்டியின் உடல் மணம் நாசி முகப்பில் சுற்றித் திரிவதைப் போல
அஷ்டாவக்கிரத்தில் ஒரு பாத்திரம் அம்மணங்குண்டியாக வருவதால் அது சமணர்களின் மனத்தைப் புண்படுத்துகிறது என்றும் இன்னொரு பாத்திரம் போட்டிருக்கும் நாமம் வட கலையா, தென்கலையா, நடுக்கலையா என்று வைணவரும், மூன்றாவது பாத்திரம் வைத்திருக்கும் சூலம் கொக்கிபோல் வளைந்திருப்பதால் அது முருங்கைக்காய் பறிக்க உதவுமே அல்லாது அரக்கரை அழிக்க வல்லது அல்ல என்று சைவரும், எனவே படத்தைத் தடை செய்யவேண்டும் என்றும் ஏகப்பட்ட வழக்குகள் என்றாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வர இன்னும் இருபத்து மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுபற்றி தயாரிப் பாளர் – விநியோகஸ்தர் பொருட்படுத்தவில்லை என்றும் தமிழ்த் தொலைக்காட்சி சானல்கள் எழுபதும் தீப்பிடித்தம் செய்திகள் ஓட்டியவாறிருந்தன.
தவசிப்பிள்ளை சொன்னார் “பாட்டா, பத்து ரூவாய்க்கி டிவிடி கெடைக்காம்.”
“போனா வராது டே, பத்து நூறு முன்கூறா வாங்கி வச்சுக்கோ.”
“அதுல்ல பாட்டா காரியம், இப்பம் ஓட்டல்லே ஆமவடை கேட்டா அந்த டி.வி.டி.யிலே இல்லா கொண்டாநது வய்க்கான்.’ “அப்பிடியா, சரவணபவன் அண்ணாச்சிக்கு ஒரு காயிதம் எழுதிப் போடும் வே.”
மேல்போக்கு எழுத்தாளர், சிறுகதைச் செம்மல், தான் அறுபத் தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறுகதை ஒன்றைத் தழு வியே அஷ்டாவக்கிரம் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், எனவே தமக்கு நூற்று நாற்பத்து எட்டு கோடி ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்றும் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு உட னடியாகத் தள்ளுபடி ஆனது. படத்தின் மூலக்கதை, திரைக்கதை, உரையாடல், பாடல்கள், இசை, ஒளி ஓவியம், படத்தொகுப்பு, ஒப்பனை, நடன இயக்கம், சண்டைப் பயிற்சி, இயக்கம், தயாரிப்பு இத்தனையும் செய்த பிரபஞ்ச நாயகன் தரப்பு வழக் கறிஞர் வைத்த ஒரேவாதம், திருடுவது தமிழ் சினிமாக்காரர்களின்
குலத்தொழில், தொழில் தர்மம், அதில் தலையிட உயர்நீதிமன் றம், உச்ச நீதிமன்றம், மாநிலங்கள் அவை, மக்களவை, ஐ.நா. சபை உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை என் பதை அரசியல் நிர்ணய சட்டம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது, உறுதியாகவும் அறுதி இட்டும் என்பதாகும்.
வழக்கு தள்ளுபடியாகாமல் வேறென்ன ஆகும்?
பிரபஞ்ச நாயகனின் அதிநவீன சொகுசுக் கார், அறுபது கோடி ரூபாய் பெறுமதியுள்ளது கும்பமுனி வீட்டு வாசலில் வந்து காற்றுப் போல் ஒசிந்து நின்றது. அடுத்த படத்துக்கான கதை விவாதத்துக் காக இருக்கும் என்று கும்பமுனி யூகித்தார்.
கோவணம் வேறு யதா ஸ்தானத்தில் இல்லை. கும்பமுனி பதற்றமாக உணர்ந்து கையைக் கையை ஆட்டிக் குரல் கொடுத்தார். “ஓய் தவசிப்பிள்ளை… ஓய்… ஓடியாரும்… யாரு வந்திருக்கா பாரும்!”
“என்ன பாட்டா நல்ல ஒறக்கம் போல்ருக்கு… கொறட்டச் சத்தம் வேற ரைஸ்மில் ஓடுகது மாரி கேட்டு பெலமாட்டு. எந்திரி யும், எந்திரிச்சு மொகத்தைக் கழுவும், கட்டங்காப்பி போடு கேன்.”
“காலம்பற கண்ட சொப்பனம் பலிக்குமாடே, கண்ணுவிள்ளே?”
“அது காலம்பற கண்டால்லா யோசிக்கணும். இப்பம் நடு மத்தியானமாக்கும்” என்றார் தவசிப்பிள்ளை.
– உயிர் எழுத்து, ஆகஸ்ட் 2008.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா?
வளர்கவி
September 6, 2026
இதய ஓசைகள்
மா.வீ.தியாகராசன்
September 6, 2026
உறவுகள் ஆயிரம்
ஐ.சாந்தன்
September 6, 2026
