அவயான் பொந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 8, 2025
பார்வையிட்டோர்: 2,018 
 
 

“கன்னி மூலையிலே அவயாம் பறிச்சு பெரும் பொடையாக் கெடக்கு” என்று புலுபுலுத்தபடி வந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. அவர் கையில் ஓல்ட் மாங்க் ரம் நிறத்தில் கட்டன் சாயா இருந்தது. சற்றே சாய்வான சூரல் நாற்காலியில், சபரிமலை ஐயப்ப சாஸ்தா அமரும் ஆசனம் போட்டு உட்கார்ந்திருந்தார் கும்பமுனி. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் அவர் ஒருவர் என்பது கூறியது கூறல். பிற மூத்த எழுத்தாளர்கள் இந்திரலோகப் பதவி பிறகு கிடைக்குமோ கிடைக்காதோ என்று, அவசரமாக வானோர் இருக்கை பிடிக்க, விரைந்து மேலுலகு ஏகிக் கொண்டிருக்க, கும்பமுனி நின்ற வரிசையும் நகர்ந்து அவர் மூத்த படைப்பாளி ஆகிப்போனார்.

எப்படியும் பத்துப் பன்னிரண்டு பேர் இரங்கல் கட்டுரை எழுதுவர். நம்மளைப் பிடிக்காத பருவ இதழ்கள் தவிர்த்து, மிச்சம் பேரு அட்டையிலே படம் போடுவான். நாலஞ்சு இரங்கல் கூட்டம் நடக்கும்’ என்ற கற்பனையில் திளைத்து, செம்மாப்பில் இருந்த கும்பமுனியின் புரந்தரனார் – பெருந்தவம் கலைந்தது.

தவசிப்பிள்ளையை ஏறிட்டுப் பார்த்தார்.

கை நீட்டி, கட்டஞ்சாயா கிளாசை வாங்கி, லயித்து, ஒருவாய் உறிஞ்சிக் கண்மூடிக் கிறங்கினார். தூரத்தில் இருந்து பார்த்தால், ஏதோ 117 ஆண்டுகள் மூத்த சிங்கிள் மால்ட் விஸ்கியை ஒரு பூங்கொத்து மோந்து பார்ப்பதுபோல் மணத்திப் பார்த்து அனுபவித்து, துளித்துளியாய்ப் பருகித் திளைப்பது போலிருக்கும்.

‘கட்டஞ்சாயா ஆனால் என்ன, பல்லாண்டு மூத்த நாட்படுதேறல் ஆனால் என்ன, ஏகப் பெருவெளியில் எல்லாமும் ஒன்றே’ என்றொரு சித்தர் மரபும் சிந்தனையைத் தறித்து, ஓடியது. ‘அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே’ என்னும் இடைக்காட்டுச் சித்தர் அனுபவமும்.

தாண்டவக்கோனுக்கு அவித்த நெல் முளைக்கும், சுட்ட பனங்கிழங்கு குருத்துவிடும், வறுத்த நிலக்கடலை இலைவிடும் தமிழ்நாட்டு அரசியல் அனுபவம் இருந்திருக்காது.
“சொன்னது காதில விழல்லியா?” என்றார் கண்ணுபிள்ளை.

“அம்மா சமாதிக்க கன்னி மூலைலா வே, அவயாம் பொந்து பறிக்கு?” என்றார் காட்டமாய் கும்பமுனி.

“நான் பிண்டத்தைச் சொன்னா, நீரு அண்டத்தைச் சொல்லுகேரு! நம்ம வீட்டுல கன்னி மூலைல அவயாம் பெரும்பொந்தால பறிச்சுப் போட்டிருக்கு….”

“ஒரு செங்கல்லுத் துண்டு வச்சுக்குத்தி அமுக்கி அடையும்வே! பெருசா சிங்களத் தீவுக்குப் பாலம் கெட்டுகமாரி பொலம்பாதேயும்!”

“அதெல்லாம் அடச்சுப் பாத்தாச்சு… பெரும் பொந்தாட்டுல்லா பறிச்சுப் போட்டிருக்கு….”

“சவம் பின்ன கெடக்கட்டும்”

“கெடக்கட்டுமா? கொள்ளாம் சீரு! நாளைக்கு அவயாம் – பொந்து வழியா மத்தவன் எவனாம் ஆதிசேடன் ” வம்சாவழிக்காரன் ஊந்து வருவான்” என்றார் கண்ணுபிள்ளை.

“துரியோதனன் பொஞ்சாதி பானுமதிக்கு அந்தப்புரத்திலே தக்கன் என்ற அட்டமா நாகங்களில் ஒண்ணு நொழஞ்சதுபோல இங்க நொழஞ்சு என்ன ஆகப்போகுவே? இங்கயே நீரும் நானுமா ரெண்டு கெழட்டுப் பாம்பு போறதுக்குப் பாடை இல்லாமக் கெடக்கோம்! சரி! இப்பம் என்ன செய்யலாம்ங்கேரு?”

“ரெண்டு கிலோ சிமெண்டும் ரெண்டு சட்டி மணலும், கொஞ்சம் முக்கால் இஞ்சு சல்லியும் கெடச்சா குத்தி இறுக்கீரலாம்!”

“சரி, பின்னே செய்திர வேண்டியது தானே! ஸ்வச் பாரத் சர்க்கார் அனுமதி வேணுமா?”

“ரோடு நல்லாக்க சல்லி அடிச்சுப் போட்டிருக்கான். ஒரு கட்டைப் பையிலே கொஞ்சம் அள்ளிக் கொண்டாந்திரலாம்…. சிமென்டு, வடசேரி சந்தை கடையிலே ரெண்டு கிலோ வேண்டிக்கிடலாம்… மணலுக்கு எங்க போக இப்பம்?”

“மணலுக்கா வே பஞ்சம்? மணப்பாடு, மணக்குடி, மணலூர், மணலூத்து, மணக்காடு, மணத்தேரிண்ணு ஊருகேள கெடக்க ஒருவாடு! ஒமக்கு ரெண்டு சட்டி மணலுக்குப் புத்திமுட்டு வந்திட்டா? நம்ம பாறையாத்திலே வடக்கமாற நடந்தா ஆயிரம் லாரி அள்ளலாம் பிராமணந் தோப்பிலே!”

“நீரு காமராசர் அரசாண்ட காலத்திலேயே கெடயும் பாட்டா… யதார்த்தவாதம் போயி பின்னவீனத்துவம் வந்தாச்சு…. இப்பம் பிராமணந் தோப்பே கெடையாது!
அவ்வளவும் ஆக்கிரமிச்சு தென்னையும் வாழையும் மாவும் கொல்லாமாவுமா காடாக் கெடக்கு… கெடந்த மணலு எல்லாம் லாரி லாரியா வாரீட்டுப் போயாச்சு…. எம்.எல்.ஏக்கு, மந்திரிக்கு, தலைமைச் செயலாளர் வரைக்கும் பங்கு போச்சுங்கான்…”

“எம் வே? பார்வத்தியக்காரரு, தாசில்தாரு எல்லாவனும் என்னத்துக்கு இருக்கானுவோ?” –

“ஒண்ணும் கண்டுக்கிட மாட்டானுவோ… எம்மெல்லே, மந்திரி, பெரிய ஆபீசரெல்லாம் எல போட்டுச் சாப்பிட்டு எந்திரிச்சுப் போன பொறவு, இவுனுக வழிச்சு நக்குவானுக எச்சி எலய….”
“பின்ன என்னதாம் செய்யதுவே, கண்ணுவிள்ளே? ரேஷன் கடையிலே கேட்டுப் பாரும்… முன்னால எல்லாம் சிமென்ட் குடுத்தானுவவே… விசாரிச்சுப் பாரும்…”

“அங்க மணல்லாம் தரமாட்டான்… வேணும்ணா அரிசி, கோதம்பு வாங்கி அரிச்சா பொடி கல்லு கெடைக்கும்… மணல் கெடைக்காது… ஆங்… ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்… எனக்கு ஸ்மார்ட் கார்டுலே பெருச்சாளி படம் போட்டிருக்கான் பாட்டா…”

“சரியாத்தான வே போட்டிருக்கான்…. அதான் அவயான் பறிக்கு… உமக்காவது அவயான், ஒரு ஜீவராசி… சிலருக்கு செருப்பு படம் போட்டுக் குடுத்திருக்கானாம்… வேணும் வே நமக்கு… கண்ட பயலுகளை எல்லாம் எம்மெல்லே மந்திரி ஆக்குனம் லா?”

கும்பமுனி பழைய பாழ் நினைவுகளில் மூழ்கினார். ‘மண்ணை , மலையை, மாதொரு பாகனின் சிலையை, தன்னை, தமிழை, தள்ளையை விற்றுத் திரியுமொரு கூட்டம். பெற்ற பிள்ளையைக் கூட்டிக் கொடுக்குமோர் கும்பல்.’

அவயான் எங்கு அடைத்தாலும் வேறொரு பக்கம் திறக்கும். கண்மணி குணசேகரன் அடிக்கடி சொல்வது போல, ‘அம்மாசி இருட்டிலே அகவான் போற எடமெல்லாம் தடம்தான்! நாம் இரங்கல் கட்டுரைகளை யோசனையில் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில், கண்ணுபிள்ளை பெருச்சாளிப் புடைகளைப் பற்றிக் கவல்கிறார். ஏதோ இன்னும் நூறாண்டுகள் வாழக் கிடைப்பதைப் போல ‘
’முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார், வாழ் நாள் வகையளவு அறிஞரும் இல்லை ‘ என்கிறார் முப்பேர் நாகனார், நற்றிணையில். ..கண்ணுபிள்ளை என்னத்தக் கண்டான் என்று ஓடியது கும்பமுனி சிந்தை நதி.

“வே! கண்ணுபிள்ளை ! ஒரு சொலவம் தெரியுமா?” என்றார் கும்பமுனி, சட்டென ஆராசனை வந்தவராய்.

“சொன்னாத்தாலா பாட்டா தெரியும்! நாமென்ன ஒம்மைப் போல முக்கால் உணர்ந்த ஞானியா?” என்றார் கண்ணுபிள்ளை.

“அவனவனுக்கு ஆயிரத்தெட்டு வேலை; அவயானுக்கு மண்ணு பறிக்கப்பட்ட வேலை. கேட்டதில்லையா? அதுக்க சோலியை அது செய்யட்டும் வே! எதுக்குக் கெடந்து வெசனப் படுதேடு?”

“ஆமாமா! பாம்புக்கு வேலை கடிக்கணும். டெங்குக்கு வேலை கொல்லணும். உம்ம வேலை ஊருக்குசும்பு எழுதிக் காசாக்கணும். எனக்கு வேலை கட்டஞ்சாயா போடணும். அரசியல் வாதிக்கு வேலை அவயாம் பறிக்கதைக் காட்டிலும் அதிகம் பொந்து பறிக்கணும்….”

“ஆங்… இப்பச் சொன்னேருல்லா, அது பேச்சு! இந்த பெருச்சாளி பொந்தை சல்லியும் மணலும் சிமென்டும் போட்டு அடைப்பேரு! இவன்மாரு தேசத்தையே மைலுழக்க ஒரு பொந்தா பறிச்சுத் தள்ளீட்டுருக்கான். அதை என்ன செய்வேரு?” என்றார் கும்பமுனி எகத்தாளமாக.

“நீரு சொல்லுகதும் சரிதான். இந்தப் பொந்தை அடைக்கலாம் அந்தப் பெரும் பொந்துகளை என்ன செய்ய?”

“அது பொந்து இல்லவே! பிலம்ணு ஒரு சொல்லுருக்கு தமிழ்லே! கம்ப ராமாயணத்தில் பிலம் புக்கு நீங்கு படலம்ணே ஒரு படலம் இருக்கு பாத்துக்கிடும்….”

“பொந்தே அடைக்க முடியல்லே! பிலம் எப்பிடி அடைப்பேரு பாட்டா?” “அதையும் அடைக்கலாம் வே! மருந்திருக்கு!” “அதென்ன மருந்து?” “பொந்து தோண்டப்பட்டவன் ஆசனவாயை அடைச்சிட்டா போதும்.”

“அது என்ன பாட்டா? தென்னை மரத்துக்கு தேள் கொட்டினா பனை மரம் பட்டுப் போகுமா?”

“அது அப்பிடித்தான் வே! ஒமக்கு சொன்னா மனசிலாகாது…”

“எல்லாம் மனசிலாகும்… ஒமக்கு குல்புர்கி போன வழிதான். நம்மளை விட்ரும். நமக்கு அப்பம் திங்கவா, குழி எண்ண வா ?”

குல்புர்கி பேச்சு எடுத்தவுடன் கும்பமுனிக்கு கட்டி மலம் எல்லாம் காடி மலமாக இளக ஆரம்பித்தது. ‘தமிழ் எழுத்தாளனா இருக்கது எம்புட்டு பாதுகாப்பு? இங்க சினிமாவுக்கு சீன் பிடிக்கிறவன் தவிர வேற எவன் வாசிக்கான்?” என்று எண்ணினார் கும்பமுனி.

கும்பமுனி பேச்சைக் கேட்டால், பிரதம மந்திரி வேட்பாளராக நிற்க நினைப்பவனும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியே உயர்ந்தது என்று எண்ணவும் ஆகும் என்பது கண்ணுபிள்ளையின் அனுபவப் பாடம். வெயில் தாழ்ந்த பிறகு, அவர் பாட்டுக்கு, மைசூர் சருவச் சட்டியை எடுத்துக்கொண்டு, பழையாற்றங்கரை ஓரமாக நடந்து, பிராமணந் தோப்பு, இலுப்பாறு, பூனாந்தோப்பு எல்லாம் கடந்து, பருமணல் படுகை தவிர்த்து, பஞ்சசாரைப் பருவத்தில் இருந்த நெய்மணல் தேறி, சருவச் சட்டி நிறைய அள்ளி, தோள் முண்டால் தலைப்பாகை கட்டி, தலையில் சுமந்து, புற்றுக்கால் தாங்கித்தாங்கி நடந்து வந்து சேர்ந்தார்.

திருமணம் பேசப் போகும்போது, எண்ணெக்குடத்துடன் வாணியன் எதுப்பு வந்ததுபோல, நவீன எழுத்தாளர் தாடகை மலைத் தமிழன் எதிர்ப்பட்டது, கண்ணுபிள்ளைக்கு பப்படத்தில் கல் கடித்தாற்போல் இருந்தது. முற்றம் தாண்டி, முகப்புப் படிப்புரை ஏறும்போது, கும்பமுனி கேட்டார், “என்ன வே? நீர்மாலைக்குப் போயிட்டு வாறது போல இருக்கு?”

“அதுக்கு நீரு சாவாண்டாமா? எப்பிடியும் நாந்தான் தர்மக் கொள்ளி வைக்கணும்!”

“சட்டு புட்டுண்ணு பொணம் எடுத்திராதயும் என்ன? ஒருநாள் கெடந்தாலும் குத்தமில்லே! செலப்பம் மலர்வளையம் வைக்க முதலமைச்சர், கெவர்னர் கூட வருவா…”

“ஆமா! வருவன் டெல்லீல இருந்து. வந்து, என் தலைமேல ரெண்டு கையும் வச்சு ஆறுதல் தைவரல் செய்வான்… எனக்கு வாயிலே என்னமோ வருது… நான் ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசி, நமக்கு ராமச்சந்திர சத்திரபதி கெதி வந்திரப்பிடாது… சும்மா போவேரா, தமிழ் நாறும் ஊத்த வாயை வச்சுக்கிட்டு…”
கும்ப முனிக்கு சாரைப் பாம்பு ஒத்த சீற்றம் எழுந்தது. “நீரு என்னத்த வே கண்டேரு? தமிள்ள எளுதப்பட்ட மூத்த எழுத்தாளனாக்கும் நான். நான் செத்துப்போனா சட்டசபையில எரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவான்…”
“ஆமா! பார்லிமென்ட் காம்பவுண்ட்லே செலயும் வைப்பான்…”

“அம்பது அறுவது பொஸ்தகம் எழுதியாச்சு பாத்திக்கிடும்!”

“முந்நூறு நானூறு எளுதுனவனும் நாட்டிலே உண்டும் பாத்துக்கிடும்…

“வாங்காத பிரைசு இல்லே…. சவம், ஒரு பத்ம விபூஷண் வாங்கீட்டுச் சாவலாண்ணு பாத்தா, அதும் வருவனாங்கு…”

“ஏன்? பாரத ரத்னாவே கேளுமே! அதுக்கு நீரு ரஜினி காந்து பாரும்…. ஆசை கெடந்து அடிக்கு மனுசனுக்கு.. நீரு செத்துப்போனா ஒரு பஞ்சாயத்து மெம்பர் கூட வரமாட்டான் கேட்டேரா? ஆனானப்பட்ட அற்பாயுசிலே செத்த பாரதியாருக்குக் கூட பதிமூணுபேரு வந்தாம்ணு நீருதான பாட்டா கூடக்கூட சொல்லுவேரு? உம்மை ராஜாஜி ஹால் முகப்புல வச்சிருப்பான் மூணு நாளைக்கு…. தூ… எனக்கு வாயிலே என்னமோ வருது… அந்தப் பையன் தாடகைமலைத் தமிழன் அப்பப்பம் வந்துக்கிட்ருந்தான்…. நீரு முற்போக்கு, பிற்போக்கு, பின்னவீனத்துவம், மாய எதார்த்தம்ணு பயமுறுத்தி அவனையும் வெரட்டிவிட்டாச்சு… இப்பம் அவன் முகநூல்லே, உமக்கு ஏகப்பட்ட தோழிகள்ணும் ஏழெட்டுப் பேரைக் கற்பழிச்சிட் டேருண்ணும் போஸ்டிங் போட்டுக்கிட்டுத் திரியானாம்…”

“எடு வாரியலை…. கறந்த பால் முலை புகாது வே… அதைவிடும்…. நீரு எப்பவே பேஸ்புக்கு அக்கவுண்டு ஆரம்பிச்சேரு?”

“ஆமா! எனக்கு இதாலா சோலி! எல்லாம் கடைக்கு போகச்சிலே காதுலே விழும்லா? எனக்கு என்ன பயம்ணா, கும்பமுனி யாருண்ணும் கண்ணுபிள்ளை யாருண்ணும் அடையாளம் தெரியாம எவனாம் என்னையை அடிவயத்துல குத்தி இழுத்திட்டாம்ணா…’

“சரி! சரி! மொதல்ல தலைச்சுமையை எறக்கும்… வெயிலோட போயிக்கிட்டு வந்திருக்கேரு… அடுப்பங்கூட்டி ஒரு கட்டன் போட்டுக் குடியும்…”

“ஆமா…. அவயான் எதுக்கு அம்மணங்குண்டியா ஓடுகுண்ணு பாத்தேன்! கட்டஞ்சாயா வேணும்ணா சொன்னாப் போராதா?”

உள்ளூர்க் கொத்தனாரின் கையாளாக இருந்த பரதேசியைக் கால் கை பிடித்து, இருநூறு ரூபாய் கொத்து பேசி, சிமெண்ட், சல்லி, மணல் எல்லாம் கும்மாயம் சேர்த்து, அவயான் பறித்த பொந்து அடைத்த நாற்பத்தி ஓராவது நாள், அரெஸ்ட் வாரண்ட் ஒன்று வந்தது. அதை அப்படியே தருவது என்றால், அது தொல்காப்பியரும் இறையனாரும் பவணந்தி முனிவரும் நாற்கவிராச நம்பியும் தண்டியும் யாத்த சிறுகதை இலக்கணத்தின் சொல் பேச்சுக் கேளாது என்பதனால், திரண்ட கருத்தை மட்டும் நிரல்படப் பார்க்கலாம்.

2017-ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம், 15-ஆம் நாள், பிற்பகல் மூன்று மணிக்கு, பழையாற்றின் வடக்குப் பகுதியில், குற்றம் சுமத்தப் பெற்றவராகிய தாங்கள், அரசு ஆணைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் மாறாக, சட்டத்தையும் நீதியையும் மக்கள் நலனையும் சுற்றுச்சூழலையும் நதிகளின் புனிதத்தையும் பொருட் படுத்தாமல் புறக்கணித்து, அவமதித்து, ஆதாய நோக்குடன் ஆற்று மணல் அள்ளி, அண்டை மாநிலமான கேரளத்துக்கு சட்ட விரோதமாக விற்க முயன்றதாக புரட்சி எழுத்தாளர் தாடகைமலைத் தமிழன் உச்சநீதி மன்றத்துக்கு எழுதிய புகார் கடிதத்தைப் பொது நல வழக்கை ஏற்றுக்கொண்டு, இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க, உங்களைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட பத்தியில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எதுவும் இல்லாமல் இருந்தால் அதற்கு உச்ச நீதி மன்றமே பொறுப்பாகும்.

வெள்ளிக்கிழமை பின்மாலையில் கும்பமுனியைக் கைது செய்துகொண்டு போனார்கள். சனி, ஞாயிறு கோர்ட் விடுமுறை. வேறு வழி இல்லாமல் மூன்று இரவுகள் டெங்குக் கொசுக்கடியில் குறுகிக் கிடந்தார் கும்பமுனி.

‘நாகர்கோயில் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவரும் கேளுங்கள். யான் அமர் மூத்த எழுத்தாளன் தன்னைத் தவறு இழைத்த கோ நகர் சீறினேன், குற்றமிலேன் யான்’ என்று இடது மார்பு கையால் திருகி, மணிமேடை ஜங்சன் மும்முறை வலம் வந்து, அலமந்து, மணி முலையை வட்டித்து விடவும் எறியவும் கண்ணுபிள்ளை என்ன கண்ணகியா? கையாலாகாமல் கவிழ்ந்து கிடந்தார்.
தமிழ் நாட்டின் தலை மூத்த நாளிதழ்கள் அனைத்தும், ‘ஆற்று மணல் அள்ளிக் கேரளத்துக்குக் கடத்தி, கொள்ளை லாபம் சம்பாதித்த மூத்த எழுத்தாளர் கும்பமுனி கைது’ என்று தலைப்புச் செய்திகள் எழுதின. விளக்கு வைத்த பிறகு, ஆறு தொலைக்காட்சிச் சானல்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.கா., காங்கிரஸ், இடதுசாரி, வலதுசாரிப் பொதுவுடைமைக் கட்சிகள், தமிழ் தேசிய இயக்கங்கள் இவற்றின் மக்கள் தொடர்பு பேச்சாளர்கள் கூடி, தலையை ஆட்டியும் விரலை நீட்டியும் மேசையைத் தட்டியும் தலைமயிர் ஒதுக்கியும் சினந்தும் கனன்றும் கர்ஜித்தும் ஊளையிட்டும் மூலத்தில் மிளகாய்ப் பொடி தடவப்பட்டதுபோல் எதிர்வினை ஆற்றினார்கள்.

கும்பமுனி மதிப்புரை எழுத மறுத்த, முன்னுரை எழுத சாக்குப் போக்குச் சொன்ன, வெளியீட்டு விழாவுக்குப் போகாமல் தவிர்த்த குற்றங்களுக்காகக் கோபத்தில் இருந்த படைப்பு பிரம்மாக்கள் கட்டுரை எழுதினார்கள்.

‘வெள்ளாள எழுத்தாளனின் பொல்லாங்கும் புனை சுருட்டும்,’ ‘வெறுங்குண்டி வேதாந்தி, போட்டுக்கடா சம்மணம்’, ‘பத்தினி எழுத்தாளன் பரதேசம் போனார்’, ‘ஐம்பதாண்டுகளாய் கட்டன் சாயாவுக்கு பணம் வந்த மூலம்’, என்றெல்லாம் வரைந்து தள்ளினார்கள். முகநூலில் தேவஅசுர, கௌரவ-பாண்டவ, தி.மு.க.- அ.தி.மு.க., முற்போக்கு பிற்போக்கு யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

கும்பமுனிக்கு என்று குழுமம், வட்டம், மன்றம் என ஏதும் கிடையாது. இல்லாவிட்டாலும் அந்த நாறப்பய மூஞ்சிக்கு எவன் கிட்டே நெருங்குவான்? வெள்ளாள சாதி வெறி வேறு, போதாக்குறைக்கு! என்றாலும் மனது கேட்காமல், கண்ணுபிள்ளை, கும்பமுனியின் அபிமானி வீடுகளுக்கு நடையாக நடந்து, புத்தகக் காவடிகள் எடுத்து, பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ‘தேரா சச்சா சௌதா’ வழக்கை விசாரித்து, கைது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. கோர்ட்டுக்குப் பதினைந்து ஆண்டுகள் தேவைப் பட்டன.

கும்பமுனி, கட்டன் சாயா கிளாசை இடது கையில் வைத்தவாறு கண்மூடி கணக்குப் போட்டார்.

அவயான் பறித்த பொந்து அடைக்க, ஆற்றில் ஒரு சருவம் மணல் அள்ளி, கைதாகி, ஜாமீன் வாங்க ஆன செலவு ரூ.3,60,486.00. வாழ்நாள் வைப்பு நிதி வைகுந்தம் போயிற்று. இனி ஆறாண்டுகள் ஆகும், 26,612 பக்கத்தில் முதல் தகவல் அறிக்கை பெற. தனக்கு ஆங்கிலம் தெரியாது, F.I.R.க்கு தமிழ் மொழிபெயர்ப்பு வேண்டும் என்று கேட்டால், அதற்கு எப்படியும் எட்டாண்டுகள். வழக்கு எப்படியும் 37 ஆண்டுகள் நடக்கும். தான் உயிர் வாழும் சாத்தியமே இல்லை எனக் கூட்டிக் கழித்தார் கும்பமுனி.

போபாலில் விஷவாயு கசிந்து 3000 பேர் இறந்து, கை கால் முடம்பட்டு, மூளை செயல்பாடு குன்றி, புற்றுநோய் வந்து அல்லல்படும் வழக்கு. இந்திரா காந்தி கொலையுண்டபோது, பாமுக்கு 3000 சீக்கியர் கொல்லப்பட்ட வழக்கு. ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டு, பேட்டரி செல் வாங்கிக் கொடுத்தவனுக்கு எல்லாம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, மூன்றாவது ஆயுள் தண்டனைக் காலத்தில் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் வழக்கு… பொது நல வழக்குகளே மூத்துப் போகாமல் சிரஞ்சீவியாக வாழ்கின்றன.

கும்பமுனிக்கு இளக்காரச் சிரிப்பொன்று புறப்பட்டது. தனது வழக்குக்கு 45 ஆண்டுகள் சென்று தீர்ப்பு வரும்போது கழகங்கள் எல்லாம் வலுவிழந்து அன்னைத் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஆட்சி நடந்து கொண்டிருக்கலாம் என்று நினைத்தார். அவர் சிந்தனையின் வழித்தடத்தில் பயணப்பட்ட பாவனையில் முற்றத்துக் கல்மீது அமர்ந்து இளமாலை வெயிலை அனுபவித்துக் கொண்டிருந்த தெண்டல், ஓந்தான், ஓதி, ஓயான், ஓந்தி, ஒடக்கான், அல்லது ஒடக்காய் ஒன்று தலையாட்டியது.

– உயிர் எழுத்து- பிப்ரவரி 2018

நன்றி: https://nanjilnadan.com/2020/02/03/அவயான்பொந்து/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *