அவன் வசந்தத்தைத் தேடி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் தினகரன் (இலங்கை)
கதைப்பதிவு: March 10, 2025
பார்வையிட்டோர்: 899 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அக்கரைப் பச்சை எப்படிப்பட்டது? பிறநாடுகளுக்கு வாழ்வுதேடிப் போனவர்களுக்குத்தான் அது தெரியும். அது, நாங்கள் அவர்களிடம் கேட்கக் கூடாத, அவர்கள் நமக்குச் சொல்ல விரும்பாத பரம இரகசியம்! இந்தக்கதையிலே சுந்தரமூர்த்திக்கும் அந்த ‘பச்சையின் மயக்கு’ தெரியவருகின்றது……! சுந்தரமூர்த்தி, நம்மிடையேயிருக்கும் உயர் கல்வி பயின்ற இளைஞர்களுடைய முழுமையான ஒரு பிரதிநிதி. அவன் மூலம் அவர்களது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள். ஏற்றங்கள், ஏமாற்றங்கள் எல்லாம் வந்து நமது உள்ளத்திலும் நிறைகின்றன. 


அரவிந்தனின் கனடா வாழ்க்கை சுந்தரமூர்த்தியின் மனத்திரையில் ஒடிக் கொண்டிருந்தது. ‘அவன் அங்கு எப்படி வாழ்கிறான்?’ என முணுமுணுத்தபடி தன் முதுகைக் கல்லாகத் தாக்கும் கட்டிலின் மீது படுத்திருந்தபடியே காலாலும் கையாலும் அடித்துக் கொண்டான். 

”சீ… நான் பேராதளையில் மார்க் மண்டபத்திலிருந்த போது வோனோ ஸ்பிரிங் கட்டிலிலல்லவா படுத்தேன். மாணவனாயிருந்தபோது இதைவிட எவ்வளவு வசதிகளை அனுபவித்தேன்…'” அந்தச் சின்ன அறையைச் சுற்றி அவன் கண்கள் சுழல்கின்றன. பக்கீஸ் பலகை மேசை, பக்கீஸ் பலகைப் புத்தக றாக்கை, பக்கீஸ் பலகை உடுப்பு அலுமாரி. இது ஒரு பக்கீஸ் வாழ்க்கை! அவன் முகத்திலேயே அருவருப்பு. 

கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான். நின்று நின்று ஓடும் பழம் கட்டை அது. அதன் கறுப்புநிற வார் வருடங்கள் பலவாகி விட்டதால் சாம்பல் நிறமாகிவிட்டது. அதன் கண்ணாடியில் தெரியும் கணக்கற்ற கீறல்கள் வயோதிபனின் சுருக்கங்கள் போல் அதன் வயதைப் பறைசாற்றின. 

சுவரிலே தொங்கிக் கொண்டிருந்த உடைகளைப் பார்க்கிறான். ஒன்றாவது அழகானதாயில்லை. அரவிந்தனின் தோற்றத்தை நினைக்கிறான். அவனுடைய உத்தியோகம், அங்கு அவன் பெறும் சம்பளம், அவனுடைய வாழ்க்கை பற்றி அவன் கூறியவை எல்லாவற்றையும் நினைவு கூாகிறான். அறையில் உள்ளனவெல்லாம் அவனுடைய ஏழ்மையின் சின்னங்களாகமட்டும் படவில்லை; அவன் வாழ்க்கை இலட்சியத்தினது தோல்வியின் நினைவுச் சின்னங்களாகவும் பட்டன. 

பல்கலைக் கழகத்தில் மாணவனாய் இருந்தபோது, மற்றைய மாணவர்கள் பலரைப் போலவே, சுந்தரமூர்த்தி ஒரு பட்டதாரிக்குக் கிடைக்கக்கூடிய அதி உயர்ந்த பதவிகளைச் சுற்றித் தன் கனவுகளைக் கட்டியெழுப்பியிருந்தான். அந்த உயர் பதவிகள் எல்லாம சமூகத்தின் யதார்த்த நிலைமைகளிலே மாணவப்பராயத்தின் கனவுலக மனோரம் மியங்களாய் மட்டுமே பெருந்தொகையினருக்கு அமைந்து விடுகின்றன. 

இந்த விதிக்குச் சுந்தரமூர்த்தியால் விலக்காகிவிட முடியவில்லை. முதலாம் ஆண்டின்போது விலங்கியல் விசேஷப் பட்டப் படிப்பிற்குத் தேர்வுபெறவேண்டும் என்ற ஓரே இலட்சியத்துடன் விடாப்பிடியாகப் படித்துத் தேர்வு பெற்றபோது தன் வெற்றிக்கனவின் முதற் கட்டத்தை நிஜமாக்கி விட்டதாகப் பெருமிதமடைந்தான். இறுதித் தேர்வில் விசேட சித்திபெற முடியவில்லை. சாதாரண ஆனால், சித்தியே கிடைத்தது. அற்ப புள்ளிகளின் வேறுபாட்டால் வந்த அந்தத் தோல்வி அவனுடைய எதிர்காலத்தையே மாற்றிவிட்டது. அவன் பல்கலைக் கழக உதவி விரிவுரையாளராக முடியவில்லை. அந்தச் சாதாரண சித்தி அவனை ஆராய்ச்சி உத்தியோகங்களுக்கு இலாயக்கற்றவனாக்கியது ஒரு வருட வேலைதேடலின் பின் அவனுக்குக் கிடைத்ததோ ஓர் உதவி ஆசிரியன் வேலை. ஆறு வருடங்களாக அந்தத் தொழில்தான். வயதும் முப்பதைத்தாண்டுகிறது. 

அரவிந்தனை மீண்டும் நினைக்கிறான். ஒருசாலை மாணவன். அவனும் விலங்கியல் பட்டதாரி. அவனுக்குக் கிடைத்ததும் சாதாரன சித்திதான். ஆனால், இன்று இருவருக்குமிடையே உள்ள வேறுபாடுகளோ எத்தனையோ உலகங்கள்! அரவிந்தன் அதிர்ஷ்டசாலி. கொழும்பு மனிதனாயிருந்ததால் தான் அவனுக்கு அந்த அதிரஷ்டம் கிட்டியதோ! வெளிநாட்டுப் பேராசிரியன் இலங்கையில் ஒரு வருடம் வனவிலங்கு வாழ்வுபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு உதவியாளனாகக் கடமை யாற்றும் சந்தர்ப்பம் அரவிந்தனுக்குக் கிட்டியது. அவனுக்கு ஆங்கிலமும் நன்றாக வரும். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து கிராமப்பள்ளியில் படித்த சுந்தரமூர்த்திக்குப் பல்கலைக் கழகம் போன பின்பே தன் ஆங்கில மொழியாற்றலை ஒரளவுக்கு வளர்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது. 

“அவன் எப்போதுமே ஒரு ‘புஷ்’ உள்ள ஆள். நமது பேராசிரியருக்குக் கூட அவனைப் பிடித்திருந்ததுதானே. அதனால் தானே சாதாரண சித்தியோடை அவனுக்கு ஒரு வருடம் தற்காலிக உதவி விரிவுரையாளர் பதவி கிடைத்தது. அந்தப் பதவி அவனுக்கு மற்றப் பதலியைப்பெற உதவியாயிருந்தது. மற்றப் பதவி கனடாவுக்குப் போக உதவியாயிருந்தது. நமது பேராசிரியரைப் போலவே அந்த வெளிநாட்டுப் பேராசிரியரும் அவனுக்கு உதவி செய்தார்….நான் இந்த வாத்தி வேலையில்தான் சாகும் மட்டும்… நான் இந்தச் சமுதாய அமைப்பால் வஞ்சிக்கப்பட்டேன்..எந்தக் கனவுதான் நிறைவேறியது! … ஒன்றுமில்லை!… இந்தப் பட்டம் என்னத்தைத் தந்தது எனக்கு? விரக்திதான் என்னிடம் மிஞ்சியிருக்கிறது… கெட்ட சமூகம்! சுந்தரமூர்த்தியின் ஆத்திரம் சமூகத்தின்மீது பாய்ந்தபோது அவனுடைய இன்னொரு பழைய ஒருசாலை மாணவ நண்பனின் நினைவு வந்தது ஆனந்தனும் ஆசிரியன் தான் ஆனால், அவனுடைய பிரதான வேலையோ அரசியல் வேலை. இருவருமே ஏறக்குறைய ஒரே மாதிரியான வசதி குறைந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள். ஒரே வயதினர். அவன் ‘இந்தச் சமுதாய அமைப்பை நொறுக்க வேண்டும். சுரண்டல் சமூகத்திறகுச் சமாதி கட்டவேண்டும்’ என்றெல்லாம் இரவு பகலாய்க் கத்திக் கொண்டு திரிகிறான். அவனிடம் விரக்தி, தோல்வி என்பனவற்றின் அறிகுறிகளை நான் காணவில்லை.” 

ஆனந்தனின் ‘கனவுப் புரட்சியில்’ சுந்தரமூர்த்திக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் ஆனந்தன் இந்தச் சமுதாய அமைப்பைத் தாக்கிப் பேசும்போது, இந்தச் சமூகத்தின் முடிவு நெருங்குகிறது என அவன் அழுத்தி அழுத்திக் கூறும்போது எல்லாம் சுந்தரமூர்த்திக்கு ஓருவித உளவியல் திருப்தி. இந்தத் திருப்தியைப் பெறுவதற்காக அவன் ஆனந்தனை அடிக்கடி காணவிரும்பினான். அவன் பேசும் போது ஏதோ ஒரு தற்காலிக ஆறுதல் கிடைத்தது. ஆனால், ஆனந்தனே அவனுடைய உளவியலை அறிந்தவன் போல் ‘எனக்குத் தெரியும், உனக்கும் இந்தச் சமூகத்தின்மீது ஆத்திரம். ஆனால் நீ விரும்புவதை இந்தச் சமூகம் தந்துவிடுமென்றால், நீ அதை மீண்டும் பூஜிக்கத் தொடங்கி விடுவாய்” என அவனுக்கு அடிக்கடி சாட்டை கொடுப்பான். 

அரவிந்தனுக்கும் ஆனந்தனுக்கும் என்ன தொடர்போ! இப்போது ஆனந்தனைப்பற்றிய நினைவுகள் ஏன் வந்தனவோ! ‘சே ஆனந்த மற்றவர்களுக்காகக் கனவு காணுகிறான். நான் எனக்காகக் கனவு காண்கிறேன், இருவருமே கனவு காண்பவர்கள் தான். ஒருவேளை அவன் சொல்லும் அந்தப் புதிய சமூகம் நம் வாழ்நாளிலேயே கிடைத்துவிட்டால் சே… அதாவது நடக்கிற காரியமா? அப்படித்தான் நடந்து விட்டாலும் அந்தப் புதிய சமூகத்தால் என் ஆசைகளை ஈடேற்ற முடியுமா? அந்தப் புதிய சமுதாயத்தால் எனக்கு.. சீ இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? நான் குழந்தைத்தனமாகக் கற்பனை பண்ணிக் கொண்டு அரவிந்தன் சொன்னதை வைத்துப் பார்த்தால் நானும் கனடாவுக்குப் போகச் சான்ஸ் உண்டு, அவனைப் போய்க் கண்டு எப்படியாவது ! 

மறு நாளே அரவிந்தனைக் காணப் போனான். இன்னும் இரண்டு வாரங்களில் கனடா திரும்பும் அவன் போய்ச் சேர்ந்ததும் ‘ஏதாவது செய்து, சுந்தரமூர்த்கி அங்கு செல்ல வழிவகுப்பதாக உறுதியளித்தான். சுந்தரமூர்த்திக்கு பீக்கை பிறந்தது நீண்ட காலத்திற்குப் பின் அவன் மனதிலே ஒரு களிப்பு. ‘இதைப்பற்றி இப்ப யாரிடமும் சொல்லக்கூடாது’, என்று முடிவுகட்டினான். இருந்தாலும் நான் போக முயல்வது பற்றிச் சொல்லாமல் கனடாவைப் பற்றியாயினும் யாரிடமாவது பேச வேண்டுமென்ற ஓர் ஆசை. அவனுடைய சக உத்தியோகத்தன் பாலனிடம் பேசலாம் என்றெண்ணினான். பாலன்தான் பெரிய வெளிநாட்டும் பிரியனாச்சே. பாலனிடம் சுந்தரமூர்த்தி அரவிந்தனைப் பற்றிச் கூறினான். அரைவாசிக் கதையிலேயே பாலன் குறுக்கிட்டு, 

“மச்சான், இப்படி ஒருத்தன் கனடாவிலே இருக்கும் போது… நீ ஒரு மடையன்! அவனைப் பிடித்துப் போகப் பார். நீ முயன்றால் கட்டாயம் உதவி பெறலாம். நீ போய் என்னையும் கூப்பிட வேணும், விளங்கிச்சுதே” 

பாலன் தொடர்ந்தும் சுந்தரமூர்த்தி, அரவிந்தனின் உதவியைப் பெற்று கனடா போவதே மேல் எனப் புத்திமதி சொன்னான். பாலன் கொடுத்த நம்பிக்கையில் சுந்தமூர்த்தி உண்மையை அவனிடம் கூறிவிட்டான். “எனக்குத் தெரியும்; நீ போவாய். ஆனால் என்னையும் மறந்திடாதை” 

சுந்தரமூர்த்தி அரவிந்தனிடமிருந்து ஏதாவது செய்தி வருமென இரண்டு மாதங்கன் காத்திருந்தான். ஒன்றுமே வரவில்லை பொறுமை இழந்த சுந்தரமூர்த்தி அரவிந்தனுக் கடிதம் எழுதினான். அவன் கொடுத்து வாக்குறுதியை நினைவுபடுத்திதன் நிலைமைகளையெல்லாம் உருக்கமாக விளக்கி எழுனான். பதில் வந்தது. கனடாவிற்குப் போகச் ‘சான்ஸ்’ இருந்தது. ஆனால் அந்த அழைப்போ சுந்தரமூர்த்திக்குக் கல்யாணப் ‘புறப்போசல்’ ஒன்றையும் கொண்டு வந்தது. கனடாவில் வசிக்கும் ஒரு யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்னைக் கல்யாணம் கட்ட அவன் தயாரென்றால் கனடாவிற்குப் போய் வாழலாம். பெண்னைப் பற்றிய சகல விவரங்களும், புகைப்படமும் வந்திருந்தன. சாதி,சமயம் உட்படச் சகல தகவல்களுமிருந்தன. 

அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் கூர் குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரமூர்த்தி. அவளுக்கும் வயது முப்பது. ஆனால் படத்தில் மிகவும் இளமையாகத் தோன்றினாள். படத்தின் பின் புறத்தில் ‘சமீபத்தில் எடுத்த படம்’ என்றெழுதியிருந்தது. தமிழ்ப் பெண் மாதிரியே உடுத்தியிருந்தாள். அவள் ஒரு வருடத்திற்கு முன்புதான் தன் மூத்த சகோதரனோடு சேர்ந்துகொள்ள, கனடா போயிருக்கிறாள். சுந்தரமூர்த்தியால் தனியாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. பாலனையும் கலந்தாலோசிக்க முற்பட்டான். 

‘கல்யாணம் செய்தாயினும் கனடாவுக்குப் போ’ என்பது போல் பாலன் விடாப்பிடியாகப் புத்திமதி சொன்னான். சுந்தரமூர்த்தி தன் பெற்றோரிடம் சொல்ல வேண்டுமென்ற போது பாலன், “அவர்கள் எதிர்க்கக் கூடும். நீ அங்கு போன பின்பு இந்த புறப்போசல் அங்கு வந்தது போலவும், அதில் உனக்கு விருப்பம் போலவும் அவர்களின் விருப்பத்தைக் கோரிக் கடிதம் போடு. நாங்களும் போய் அவர்களைச் சம்மதிக்க வைக்கலாம். அதுதான் லேசான வழி.” 

சுந்தரமூர்த்திக்குப் பாலனின் புத்திமதியை ஏற்கும் துணிவு பிறக்கவில்லை. ஆனால் பாலனின் திறமை இலேசானதல்ல. அடிக்குமேல் அடி அடியடித்துச் சுந்தரமூர்த்திக்குத் துணிவு பிறக்க வைத்தான். 

“நீ உன் பெற்றோரிடம் பேசி அவர்களின் அனுமதியைப் பெறுவதுதான் சிறந்தது. ஆனால், அதுக்கெல்லாம் நேரமில்லை. நான் சொல்ற வழிதான் பிறக்டிக்கலான வழி எனக்குத் தெரியப் பலர் இப்படிக் கல்யாணம் செய்திருக்கிறார்கள்.” 

”பாலா, பெண்ணை நேரிலை ஒருதரம்கூடப் பார்க்காமல் எப்படி மூடிவுகட்டறது?” 

“நான் சொல்லறதைக் கொஞ்சம் யோசித்துப் பார் சுந்தா. அரவிந்தன் உன்னுடைய பழைய நண்பன். ஒரு தமிழன். அவன் உனக்குப் பாதகமான ஒரு கல்யாணப் புறப்போசலைக் கொண்டுவரமாட்டான். இரண்டாவது, இது ஒரு நல்ல தமிழ்ப் பெண். இப்பதான் அங்கே போயிருக்குது. அதுவும் யாழ்ப்பாணத்துச் சைவவெள்ளாள குடும்பத்துப் பிள்ளை. எனக்குத் தெரிய இந்த மாதிரிக் கல்யாணம் ரண்டு மூன்று நடந்திட்டுது. நீ அளவுக்கு மிஞ்சி யோசிக்கிறாய், வேணுமெண்டால் வா, போய்க் கதைப்பம்.” 

“என்னுடைய கந்தோரிலை வேலை செய்யிற ஒரு தமிழ் ஆளின்டை தம்பியார் இப்பிடித்தான் அமெரிக்காவுக்குப் போனவர். இப்ப சந்தோஷமாயிருக்கிறார்.” 

“எண்டாலும் இது ஒரு பெரிய விஷயம்; எப்படி வீட்டுக்குப் பொய் சொல்றது.” 

“நீ ஒண்டும் பொய் சொல்ல வேண்டாம். உண்மையைக் கனடாவுக்குப் போனபிறகு சொல்லன். என்ன வித்தியாசம். ஒரு கல்லாலை இரண்டு மாங்காய் அதெல்லாம் சரி பண்ணலாம். நானெல்லோ போய் கதைச்சுச் சரி பண்றது. நீ பயப்படாதே.” 

அன்றிரவு முழுவதும் சுந்தரமூர்த்தி தூக்கமின்றிச் சிந்தித்தான். இந்த அறை வாழ்க்கை, இந்த வாத்தி வேலை, இந்த விரக்தி நிறைஞ்ச தாழ்வுச் சிக்கல் நிறைஞ்ச வாழ்க்கை – இதெல்லாத்தையும் மாற்ற இதுதான் எனக்குக் கிடைத்த கடைசிச் சந்தர்ப்பம். 

சுந்தரமூர்த்தி முடிவுகட்டிவிட்டான். 

தனக்குக் கனடாலில் வேலை கிடைத்துவிட்டதெனப் பெற்றோருக்கு அறிவித்த சுந்தரமூர்த்தி, தான் கல்யாணத்துக்குச் சம்மதமென அரவிந்தனுக்குக் கடிதம் போட்டான். 

சுந்தரமூர்த்திக்குக் கனடாவிலிருந்து அவனுடைய எதிர்கால மைத்துனன் பிரயாணச் சீட்டை அனுப்பி வைத்தான் அவனுடைய பிரயாண ஆயத்தங்களைப் பாலன் முன் நின்று செய்தான். போகும் நாள் வந்தது. 

இரண்டு கார்களில் வெள்ளவத்தையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் சுந்தரமூர்த்தியை வழியனுப்ப உறவினர்கள், நண்பர்கள் போகிறார்கள். சுந்தரமூர்த்தியும் பாலனும் ஒரு காரின் முன் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். காரின் சிங்களச் சாரதி பாலனிடம் சிங்களத்தில் சொன்னான். “சார், இப்ப கார் சாரதிகளுக்கெல்லாம் அராபியாவில் நல்ல கிராக்கி; நல்ல காசு கிடைக்கும். நான் போறதுக்கு எழுதிப் போட்டிருக்கிறேன். இந்த நாட்டிலை இருந்து பிழைக்கேலாது சார். எங்கையாவது வெளிநாடு போவதுதான் புத்தி. இல்லையா சார்.” 

கார்ச்சாரதிக்கு ஆமா போட்ட பாலன், சுந்தரமூர்த்தியின் காதில் ஆங்கிலத்தில் முணுமுணுத்தான். “பார்த்தியா மச்சான் உலகத்தை. இந்தப் படியாத ட்ரைவர்கூட வெளி நாட்டுக்குப் போகவேணுமாம். இப்பேர்ப்பட்ட தொழில் செய்யிறவருக்கெல்லாம் இப்படி ஆசை இருக்குதாம். நமக்கு இருக்கக் கூடாதா? இவன் அங்கே போனாலும் ட்ரைவர் தானே.” 

கனடாவின் தலைநகரில் விமானம் தரை தொட்டபோது சுந்தரமூர்த்திக்குத் தான் கனவுலகை அடைந்துவிட்டது போன்ற திருப்தி. அரவிந்தன் சுந்தரமூர்த்தியைக் கட்டித் தழுவி வரவேற்றான். பெண்ணையும் தமையனையும் அவன் அறிமுகம் செய்துவைத்தான். “இவளா அந்தப் புகைப்படத்திலிருந்த பெண்?’ எனச் சுந்தரமூர்த்தி அதிர்ச்சியடைந்தான். ஆமாம்; அவள்தான். ஆனால் அந்தப் படமதான் பத்துவருடங்கள் முந்தியது. ‘மொட்’ உருவில் தோன்றிய அவளுடைய அண்ணன் அவளுடைய தம்பி போன்றிருந்தான். “இதுதான் விதியோ!” எனத் தன்னைத்தானே தேற்றிக்கொள்ள முற்பட்டான், சுந்தரமூர்த்தி. பாலன்தான் கூடவரவில்லையே. அவளை மீண்டும் ஒரு தடவை பார்த்தான்! மீண்டும் மீண்டும் பார்த்தான்! தன்னைத் தானே தேற்றிக்கொள்கிறான். “அவ்வளவு மோசமில்லை. ஷி இஸ் ஓ கே.” எனத் தனக்குத்தானே அபிப்பிராயம் கூறிக் கொண்டான். ஆனாலும் இன்னும் அவன் சுய நிலைக்கு வரவில்லை. 

அவர்கள் அவளின் வீட்டை நோக்கிக் காரிலே போய்க் கொண்டிருக்கிறார்கள். அவளுடைய அண்ணன் சுந்தரமூர்த்தியைப் பார்த்துக் கேட்டான். “உங்களிடம் கார் ஓட்டும் லைசென்ஸ் இருக்கிறதா?” 

“இல்லை; எனக்கு இப்போது கார் ஒன்றும் தேவை யில்லை” என இழுத்தான் சுந்தரமூர்த்தி. 

“என்னெண்டால் சுந்தா… உனக்கு ஒரு நிரந்தரமான வேலை கிடைக்கும் மட்டும்.. தற்காலிகமாக, சாரதியாக நீ வேலை பார்க்கலாம்… ஆ…அது ஒன்றும் இங்கே குறைவான தொழிலில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக உன்னிடம் லைசென்ஸ் இல்லையே, உனக்குச் சொன்னாலென்ன சுந்தா. நானும் வந்த புதிதில் கார் ட்ரைவராகத்தான் வேலை செய்தேன். ஏன் இப்பவும் சிலவேளை பாட்ரைமாக அதைத் தான் செய்கிறேன். இங்கு நம்மாக்கள் மத்தியில் இது சர்வசாதாரணம்.” 

சுந்தரமூர்த்தி காரின் ஜன்னலுக்கூடாக வெளியே பார்த்த வண்ணமிருக்கிறான்.- 

– தினகரன், 1977.

– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.

ந.சண்முகரத்தினம்

கலாநிதி ந. சண்முகரத்தினம் முற் போக்குச் சிந்தனையுடைய ஒர் எழுத்தாளர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த காலந் தொடக்கமே மார்க்சிசச் சிந்தனைகளிலும் இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டவர். விவசாயத் துறையிலே உயர் பட்டங்களை யப்பானிய, இலங்கைப் பல்கலைக் கழகங்களிலே பெற்ற சண்முகரத்தினம் சிறுகதை, குறுநாவல் ஆகியனவற்றைப் படைத்துள்ளார். விமரிசனக்  கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘சமுத்திரன்’ என்ற புனைபெயரிலே பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளார் யாழ்ப்பாணவளாகத் தமிழ்த்துறை வெளியீடாக (1977) கலாநிதி அ.சண்முகதாஸ் பதிப்பித்த ‘ஆக்க இலக்கியமும் அறிவியலும்’ என்னும் நூலிலே, இவர் எழுதிய “ஆக்க இலக்கியமும் அழகியலும்” என்னும் கட்டுரை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்போது நோர்வேயில் விவசாயப் பல்கலைக் கழகமொன்றிலே கடமையாற்றுகிறார். இவருடைய மனைவி மிக்குகோ நன்றாகத் தமிழ் பேசும் ஒரு யப்பானியப் பெண். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *