அல்பம்

பெரும்பொங்கலுக்கு சூரியனுக்குப்படைக்க இரண்டு கரும்புகள் ஜோடியாக வாங்கவேண்டுமாம் எப்போது.யார் ஆரம்பித்து வைத்தார்களோ. அவன் முதல் நாளே ஒரு நூறு ரூபாய் கொடுத்து தாம்பரத்தில் இரண்டு கரும்புகள் வாங்கி சைக்கிள் காரியரில் கட்டிக்கொண்டான். சைக்கிள் எடுத்துக் கொண்டு போய் கரும்பு வாங்கி வருவது அவனுக்கு நன்கு பழக்காமாகியிருந்தது. சைக்கிள் ஹாண்டில்பாரில் கருப்பங்கழிகளின் முனைப்பகுதியைத் தொங்கும்படி கட்டி சைக்கிள் காரியரில் கரும்பின் அடிப்பகுதியைக்கட்டிவிட்டால் போதும். நீங்கள் உங்கள் பாட்டுக்கு சைக்கிளை மிதித்துக்கொண்டு ஜம் ஜம்மென்று ராஜ பாட்டையில் போயிக்கொண்டே இருக்கலாம். கரும்பின் சோலையை பத்திரமாக வளைத்துக்கட்டி எடுத்து வரவேண்டும். சோலை இல்லாத கரும்பு சூரியனுக்குப் படைக்க முடியாது என்பது உலக மகாநீதி.
பெரும் பொங்கல் முடிந்தது. வீட்டில் கரும்புகள் இரண்டும் உன்னைப்பார் என்னைப்பார் என்று விழித்துக் கொண்டிருந்தன. அவன் வாங்கி வந்து படைத்து முடித்த அந்தக் கரும்புகளை தின்று முடிக்க வேண்டுமே. அவன் தான் பெற்ற பையன்களிடம் சொல்லிப் பார்த்தான். கழுத்தில் டைக்கட்டிக்கொண்டு வேலைக்குப் போகும் பிள்ளைகள் கரும்பு தின்பதை எங்கே அறிந்திருக்கிறார்கள். கதை ஒன்றும் ஆகவில்லை. அவன் மனைவிக்கு சர்க்கரை வியாதி. அவனுக்கும்தான். சுகர் என்பது வியாதியா இல்லை தமிழில் சொல்ல நோயா இல்லை ஒரு ப்ராப்ளமா இல்லை அது ஒரு பிரச்சனையா அல்லது குறைபாடா என்னவோ அது.
தானே தண்ணீீர் ஊற்றி பார்த்து பார்த்து வளர்த்த அவன் தருமங்குடி வீட்டு பலா மரத்தில் பழுத்த முழு பலாப்பழம் ஒன்றின் சுளைகள் அத்தனையும் எடுத்து எவர்சில்வர் பேசனில் வைத்துக் கொண்டு ஒரு நாள் மாலை கணவன் மனைவி இருவரும் வீட்டுக் கூடத்தில் சம்மணமிட்டு சாப்பிட்டு விட்டுப்பின் தலைசுற்றியது. அருகே இருக்கும் ஒரு டாக்டரிடம் காண்பித்து இருவருக்குமே சுகர் வந்து இருப்பதை தெரிந்து கொண்டார்கள். தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டுமாமே அப்படித்தான் சுகர் விஷயமும். சுகர் வந்தவர்கள் காலத்தில் கொஞ்சம் அடங்கித்தான் போகிறார்கள்.
நூறு ரூபாய் முழு நோட்டாகக் கொடுத்து வாங்கி வந்த கரும்பை சாப்பிடுவதற்குத்தான் ஆளில்லை. கூடத்து மூலையில் துயின்ற கரும்புகளில் ஒரு கரும்பை எடுத்து பக்கத்து வீட்டுப் பையன் ஒருவனிடம் ஜம்பமாய்க் கொடுத்து ‘தம்பி இந்த கரும்பை நீ சாப்பிடு’ என்றான். பையன் வெடுக்கென்று பதில் சொன்னான். ‘கரும்பை தின்றதா இல்லை சாப்பிடறதா’. அவனுக்குப் பொட்டில் அறைந்த மாதிரிக்கு இருந்தது. கரும்பை வாங்கிக் கொண்டு போனான். அது கூட பெரிய ஒத்தாசைதான். இன்னும் இரண்டில் ஒன்று பாக்கி இருந்தது.
பாக்கி இருந்த அந்த கரும்பினை அவனே இரண்டாக நறுக்கினான். அடிப்பகுதி கூடக்கொஞ்சம் இனிக்குமாமே ஆக அதனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான். தெருவில் யாரும் இல்லை. கடைவாய்ப் பல்லில் வைத்து கரும்பைக் கடித்துத்தின்ன ஆரம்பித்தான். அரைசாண் கரும்புக்கு ஒரு கணு இருக்கவே அதனை கடிக்க முடியாமல் திணறினான். கணுக்களை கடிக்காமல் அப்படியே விட்டான். கொண்டு வந்த கரும்பைக் காலி செய்து விட்டதில் மனம் மகிழ்ச்சி பாவித்தது. இந்த பாழும் மனம் இருக்கின்றதே அது எது எதற்கெல்லாம் மகிழ்ச்சி பாவிப்பது எது எதற்கெல்லாம் துக்கப்படுவது என்கிற வெவஸ்தை இல்லாமல்தான் பழகிக்கொண்டிருக்கிறது.
‘கரும்பு சாப்பீட்டாச்சா’
‘ஆச்சு இன்னும் பாதி கரும்பு பாக்கி வச்சிருக்கேன் நீ எடுத்த்க்கோயேன்’
‘அதயும் தின்னு தொலையறதுதானே ஏன் பாக்கி வக்கணும் காலாகாலத்துல போய்ச்சேரலாமே’
‘அதான் எனக்கு சுகராச்சேன்னு பாதியோட நிறுத்திகிட்டேன்..நீ பாதி எடுத்துக்க’
‘வயச்சாயிட்து அது ஒண்ணுதான்.எதுக்கு அத திங்கணும் அப்படி என்ன அவதிங்கற’
‘காசு போட்டு வாங்கி வந்தது. கரும்பு யாரும் தொடல. எனக்கு மனசு கேக்கல’
‘என்னவாவது பண்ணிக்கோங்கோ.கீழபடுத்துட்டாதான் தெரியும் மனுஷ லட்சணம் என்னங்கறது’
அவனும் அவன் மனைவியும் பேசிக்கொண்டார்கள். அன்று இரவு சாப்பிடும்போது காரம் வேண்டாம் என்றான். நாக்கு சற்று புண் ஆகியிருப்பது அவனுக்குத் தெரிய ஆரம்பித்தது. மறு நாள் காலை பல் துலக்கும் சமயம் கடைவாய்ப்பல் அருகே வலித்தது. அது எதோ சாதாரணமாக வலிப்பது இல்லையா என சமாதானம் சொல்லிக் கொண்டான். மாலையில் ஈறு வீங்கிய மாதிரிக்குத் தெரிந்தது.
வெந்நீரில் கொஞ்சம் உப்பு போட்டு வாய்க்கொப்பளித்தான். ஒன்றும் உபத்திரவம் நின்றபாடில்லை.
‘நான் கொஞ்சம் பல் டாக்டரை பாத்துட்டு வரணும்’
‘ஏன் என்ன ஆச்சு பல்லுக்கு’
‘இல்லை எகிறு வீங்கினமாதிரி தெரியுது’
‘பாக்கி அரைக்கரும்பு இன்னும் இருக்குமே அத சாப்பிடுங்க சரியாயிடும்’
‘இல்லை காசு போட்டு வாங்குன கரும்பாச்சேன்னு சாப்பிட்டேன்’
‘எனாமா கரும்பு உங்களுக்கு யாராவது தர்ராங்க்ளா’
‘நானு தந்தனே பாக்கி இருக்குற அரை கரும்பையும் அதே பக்கத்து வீட்டுபையனுக்கு கொடுத்துட்டேன்’
‘டாக்டரப்பாத்துட்டுவாங்க’
அவன் மனவியிடம் சொல்லிக்கொண்டு ஒரு பல் டாக்டரைத் தேடிக் கொண்டு போனான். அந்த டாக்டரிடமும் கூட்டம் இருந்தது. பல்வலிக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனை சொல்லிக்கொண்டு அங்கே நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவன் டாக்டரிடம் பற்களைக்காண்பித்தான்.
‘கடைவாய்ப்பல்லு ரெண்டு தேஞ்சி இருக்கு. ஈறு வீங்கி இருக்கு. பல்லு சுத்தம் பண்ணணும். ரெண்டு கடவாய்ப்பல்லும் வேறு வரையிலும் நோண்டி சுத்தம் பண்ணுற பெரிய வேல இருக்கு. ஆக எல்லாமா சேத்து பன்னெண்டு ஆயிரத்துக்கு வரும். என்னா சொல்றீங்க. ஒரு எக்ஸ்ரே எடுக்கணும் இன்னும் மருந்து மாத்திரைங்க வாங்க வேண்டியதுருக்கு’
‘வீட்டுல சேதி சொல்லிட்டு பிரகு வர்றன் டாக்டர்’
‘அதுவும் சரி பணத்தோட நீங்க வாங்க பல்லுக்கு நா கர்ரண்டி ‘ பல் டாக்டர் முடித்துக்கொண்டார்.
வீடு ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கலாம். பொடி நடையாய் வீடு திரும்பினான்.
‘போன சேதி என்ன டாக்டரு என்ன சொன்னாரு’
‘போயிட்டு வந்தவன் சொல்ல மாட்டனா பறக்குற கெடந்து’ அவன் முடித்துகொண்டான். பல் வலி அதிகமாயிற்று. சரியாக சாப்பிடமுடியாமல் இருந்தது. இரவில் ஒரு மாதிரியாக வலித்தது. பகலில் வேறு ஒரு மாதிரியாக வலித்தது. வலி வலிதான். சாப்பிடுவதற்கு முன் ஒரு மாதிரியும் சாப்பிட்ட பின் வேறு மாதிரியும் வலித்தது. வீங்கியிருக்கும் பகுதியை ஒதுக்கி மற்றைய பற்களால் தின்று பார்த்தான். வலி குறைந்தால்தானே. பக்கத்து வீட்டுக்காரன் சொன்னபடிக்கு சிரிராம் கார பல்பொடி வாங்கி இரண்டு மூன்று முறை பல் தேய்த்தான். கருவேலம் குச்சி வைத்து பல் தேய்த்தான். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியாம் சொல்லிக்கொண்டான். எத்தை தின்றால் பித்தம் தொலையும் என்றபடிக்கு பல் வலி இருந்தது.
அவனுக்கு லேசாக சுரம் வரும் போல் தெரிந்தது.
சாஃப்ட்வேரில் வேலைபார்க்கும் பையன் அப்பாவைப் பார்த்தான். அவருக்கு ஏதோ பிரச்சனை அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. அம்மா தனக்கும் இந்த பல் வலி பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்..
‘வாங்க அப்பா பல் டாக்டர் கிட்ட நானே உங்களை கூப்பிட்டு போறேன்’
சரி என்று சொல்லி உடன் புறப்பட்டான். அதே பல் டாக்டரிடம் பையன் அப்பாவைக்கூட்டிக்கொண்டு போனான்..பல் டாக்டர் தந்தையும் மகனும் சேர்ந்து வந்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.
‘ரெடியாதான வந்து இருக்கிங்க’ என்ற டாக்டரிடம் இருவருமே ஓரே குரலில் ‘ஆம் ‘ என்றனர். அவனை பல் டாக்டரின் அருகே இருக்கும் நெடுக்குப்படுக்கையில் படுக்கச்சொன்ன டாக்டர்’ சிஸ்டர் பில் அவரு பையங்கிட்ட கொடுங்க. பணம் கட்டியாச்சுன்னா ட்ரீட்மென்ட் தொடங்கலாம்’. சிஸ்டர் பன்னிரெண்டு ஆயிரத்துக்கு பிரேக் அப்போடு பில் கொடுத்தாள். பையன் அதிர்ந்து போனான். வெளியில் எதுவும் தெரிகிற மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. தனது ஏ டி எம் வங்கிக் கார்டு கொடுத்து பில்லைக் கட்டி முடித்தான். மருத்துவப்பணிக்ள் தொடங்கி நடந்தன.
‘நாளைக்கும் வரணும் ரெண்டு பல்லுக்கு கேப் போடணும். இன்னொரு நாளைக்கும் வரவேண்டியது இருக்கும் வந்துடுங்க’
டாக்டர் முடித்துக்கொண்டார்.
அவன் தன் பையனிடம் ‘தம்பி ஒரு சேதி இங்க நடந்த எதுவும் அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.அதான்’
‘நான் ஏன் சொல்லப்போறன். நீ சொல்லாம இருந்தா போதாதா’
பையன் முடித்துக்கொண்டான். எதை அம்மாவிடம் அவன் சொல்லாமல் விட்டு இருக்கிறான். இருவரும் வீடு நோக்கி நடந்தனர்.
‘என்ன வேல முடிஞ்சுதா இப்ப வலி தேவலாமா’ அவன் மனைவி ஆரம்பித்தாள். அவன் தலையை ஆட்டினான்.
‘ஏன் பேசக்கூடாதுன்னு டாக்டர் ஏதும் சொன்னாரா’
‘வாயில பஞ்சு வச்சி டாக்டர் அனுப்பியிருக்கிறாரு இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அப்பாவால பேசமுடியாது’ பையன் அம்மாவுக்கு பதில் சொன்னான். பன்னீராயிரம் செலவு ஆனது என்பது பற்றி எல்லாம் அவன் யாருக்கும் சொல்லவில்லை.
ஒரு மணி நேரம் முடிந்தது. டாக்டர் வைத்த பஞ்சை வாயிலிருந்து எடுத்துவிட்டு வாய்க்கொப்பளித்தான். அவனுக்கு இப்போது பல்வலி போன இடம் தெரியவில்லை. ‘இனிமே பொங்கலுக்கு கருப்பங்கழி மட்டும் வாங்கக்கூடாதுன்னு கண்டிஷனா இருக்கேன்’
வேக வேகமாய்ப்பேசினான்.
அவன் மனைவி பதில் சொன்னாள் ‘கரும்பு கழிவ வாங்குணும், அத சாமிக்கு படைக்கணும். நாம வாய மட்டும் ரவ பூட்டு போட்டுகணும்’
– ஜூன் 2015