அலகில் விருட்சம் முளைத்த செம்பறவை




(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆதிநாளில் தானியங்களுக்கும் பறவைகளுக்குமான விரோதம் தொடங்கியிருந்தது. பறவைகளைக் கண்டு பயந்த தானியங்கள் காற்றின் கூந்தல் வழி இறங்கி பாறைப் பிளவுகளுக்குள் பதுங்கின. எனினும் பறவைகள் அதைக் கண்டுவிடவே செய்கின்றன. அன்றும் செம்பாறைப் பிளவில் தலை புதைய ஒளிந்திருந்த தானியங்களைக் கண்டுவிட்டன. ஆறு பறவைகள். தனது அலகின் கூர்சுழிப்பில் தானியக் கோர்வையை வசமாக்கிக் கொண்டு பறந்தது ஒரு செம்பறவை. வெட்டவெளியில் மிதந்து வட்டமிட்டு நடுகல் ஒன்றின் மீது அமர்ந்து தானிய உடல் பிளந்து மணிகளைத் தின்றது பட்சி, ஒற்றைத் தாளியமொன்று குத்தீட்டி போல மேல் அலகில் சொருகி உட்புகுந்திருந்ததைக் கண்ட செம்பறவை கல்லின் மீது அலகை உரசியும், தலையைச் சிலுப்பிக்கொண்டபோதும் தானியம் விழவில்லை.
நிமிஷ முயற்சிக்குப் பின் மீண்டும் வான் பரப்பில் தானியம் பறந்து மிதக்கத் தொடங்கியது. இரவில் வலி பெருகிய அலகோடு அது முகத்தைச் சிலுப்பிக்கொண்டே இருந்தது. நீர்நிலையில் தலையைச் சுழித்து தண்ணீரை விலக்கியபோது தானியம் தன் ரகசிய ஈரமும் கூடிய இரண்டு பகலுக்குப் பிறகு எறும்பின் காலென வேர்கள் நீலவெளியைக் கண்டது சிறு செடி. விருஷி இன்னதென அறியாமல் முண்டும் இலைகளைக் கண்டு கண் அசைந்தது. வேர் கிளைவிட, விட அலகில் வலி பெருகிக் கொண்டே வந்தது. எனினும் உலகில் இப்போதே தோன்றி யிருந்த அச்செடி தன் உடலை அசைத்து, பிடிப்பற்று காற்று வெளியில் மிதந்து செல்வதன் பயம் பெருக இலைகளைப் படபடக்கச் செய்தது. பறவைக்கு வேடிக்கையாக இருந்தது. இலைகள் தனது நூற்றுக்கணக்கான சிறு மூக்கால் காற்றை வெளியிட்டபடி பறவையைப் பார்த்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் பறவை நீர்ப் பரப்பின்மேல் சுழன்று பறக்கும் போது அவகில் முளைத்த செடியினைப் பார்த்துக் கொள்ளும். மிகச் சிறிய செடியாக இருந்தபோதிலும் அதன் இவைகள் இதய வடிவில் தூற்றுக்கணக்கில் ஒரே தண்டில் அரும்பியிருந்தன. முணுமுணுப்பும் அசதியும் கொண்டதாக இருந்தது அந்தச் செடியின் குரல். நீண்டகாவ தனது தனிமையை விலக்கியது அக்குரல் என அறிந்தது பறவை. வெயிலும் சுழிக்காற்றும் பெருகிய கோடைக் காலம் பிறந்தது. செடி தன் உடவை வளைத்து திருக்கியபடி சப்தமாக முளங்கியது. “தாங்க முடிய வில்லை வெக்கை, ஒரே தாகமாக இருக்கிறதே. வேர்களின் முணுமுணுப்பு இலைகளையும் தொற்றிக்கொள்ள அவைகளும் முணுக்கம் கொண்டன. பறவை, தண்ணீர் தேடி அவைந்தது. நீண்ட கரிசல் வெடிப்புகளும், நீர் அற்ற மூளிக் கிணறுகளும், கானலை உறிஞ்சும் பூச்சிகளுமே தென்பட்டன. வீடுகளின் மீது பறந்து அலைந்தது பறவை. ஓட்டு வீடுகளின் மீது வெயில் நடமாடி அலைய, கிராமங்கள் பெருமூச்சு கொண்டிருந்தன. நாக்கு உலர்ந்த பசுக்கள் கிணற்றின் கல்லில் பதுங்கிய ஈரத்தை நாவால் அறிந்தன.
நீண்ட அலைவின் பின்பு சுனையின் உலர்ந்த கண்ணில் எப்போ தாவது துளியிடும் நீரில் தன் அலகினை நனைத்தது பறவை. நீரின் ஸ்பரிசம் கண்ட வேர்கள் நாக்கைச் சுழற்றி உறிஞ்சின. அவசரமாக இலைகள் கீழே பார்த்தன. சுனையில் மறு துளி நீர் வரும் முன்பே விருட்சம் தெளிவு கண்டது. தனது ஈரக்குரலில் அது பறவையைப் பார்த்துச் சிரித்தது. தொல்காலம் முதல் தானியங்கள் பறவைகளோடு கொண்டிருந்த விரோதத்தை அந்தச் சிரிப்பு அறுத்து வீழ்த்தியது. பறவையின் இதயம் விம்மிக் கொண்டது.
கோடை பகல் சிறு செடியினை உலரச் செய்தபடி நாளெல்லாம் வதைத்தது. பறவையின் சிறகடிப்பு தண்ணீருக்காகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. களைப்பும் வெக்கை குடித்த உடலும் கொண்ட பறவை ஒரு மதியத்தில் இடிந்த வீடொன்றின் தரை நிழவில் அமர்ந்து கால் தடுங்க நின்றது. சொரியும் வெயிலில் புற வெளி மங்கி நீண்டது. பறவையின் கண்கள் சொருகி மங்குவது போல இருந்தன. இலைகள் அதைக் கண்டிருக்க வேண்டும். தங்களுக்குள் அவை தலை கவிழ்ந்து பேசிக்கொண்டன. பின் அவை தங்கள் உடலைச் சுழற்றி அசைத்தன. இதய இலைகளின் வழி பிறந்தது ஈரக்காற்று. காற்று கண்களில் பட உயிர்ப்பும் நீர்மையும் கொண்டது பட்சி. இலைகள் விடாது உள் மடங்கி விரிந்து காற்றைப் பெருக்கிக் கொண்டிருந்தன. பறவையின் கண்களில் தெரியும் ப்ரியம் கண்டு வெட்கித் தலையை மடித்துக் கொண்டன சில இவைகள். சிறு செடி வளர்ந்துகொண்டே வந்தது. வேர்கள் கீழ் அலகினைச் சுற்றிக்கொண்டு தொங்கின. எப்போதாவது அலகில் ஏற்படும் வலி தாளாது பறவை சப்தமிடும்போதெல்லாம் விருட்சத்தின் நாடி அதிரும். சமயங்களில் பறவைக் கூட்டத்தின் ஊடே விருஷி நிற்கும்போது மற்ற பறவைகள் இதை வேடிக்கையாகக் கண்டன. போந்து பறவையொன்று செடியினைக் கொத்திப் பார்க்கத் தன் செந்நிற அலகினைத் திருப்பியது. பிடியற்ற வாளாக தன் மீது அலகு பாயப்போகிறதோ எனச் செடி பயந்து ஒடுங்கும் முன்பு பறந்தது செம்பறவை. விருட்சத்தைச் சுமந்து செல்லும் பறவையாக வானில் வட்டமிட்டது. பின்னே பறவை பார்த்தபடியிருந்த நாள் ஒன்றில் இவைகள் நிறம் மாறி மெளனமாகின. செடியும் அதன் முணுமுணுப்பை நிறுத்திக் கொண்டது.
ஒன்றிரண்டு நாள்களில் இலைகள் உதிரத் தொடங்கின. எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு நிசப்தத்தில் ஆழ்ந்த செடியின் மர்மம் அறியாது வானில் தவைகீழாகப் பாய்ந்து சுழன்றது பட்சி. இலைகள் அற்றுப் போன பின்பு தனிமை பெருகி உயர அது இரவிலும்கூட வானில் பறந்தது. பின்னொரு நாள் விழித்துக் கொண்டது போல செடி மீண்டும் இலைகளைத் துளிர்த்தது. சிவப்பும் பச்சையும் கலந்த பிஞ்சு இவைகள் வேகமாகப் பேசிக்கொண்டன. இலையின் குரல் பகல் இரவிலும் நீண்டது. இலைகள் ஒரு பசுவில் திடீரென தன்னைத் தாக்கிய நீர்த் திவலையைக் கண்டு விழிப்புறும்போது வெயிலின் ஊடாக வானில் இருந்து குதித்து தரைக்கு விரையும் குள்ளர்களான மழைத்துளிகள் கைகளை உயர்த்தி ஆர்ப்பரித்தபடி நிலம் நோக்கிப் பாய்ந்தன. அன்றுதான் விருட்சம் முதலாக மழையைக் கண்டது. மழையின் ஊடாகப் பறந்து சென்றது பறவை. உடலெங்கும் ஈரம் பூசி அர்த்தமற்றுப் புலம்பியது. அன்று சிறகு ஒட்டிக்கொள்ளுமளவு பறந்தது பறவை. அந்த இரவில் விருட்சத்தின் உடலில் புதிய மினுமினுப்பும் வேட்கையும் பரவுவதைக் கண்டது செம்பட்சி.
மறுநாளில் மழைக்காலம் ஆரம்பமாகிவிட, விருட்சம் வெட்கத் துடன் பறவையிடம் எப்படிச் சொல்வது என அறியாமல் காற்றில் முணுமுணுப்பு இட்டபடி தன் முதல் பூவைப் பூக்கச் செய்தது. சங்கு வடிவம் கொண்ட அந்த வெண்ணிறப் பூவைக் கண்டு இவைகள் பெருமிதம் கொண்டன. பறவை அதிசயம் படர்ந்த கண்ணாவ் அதைப் பார்த்தது. அப்போதே இப்பிரபஞ்சத்தில் பூத்திருந்த பூ, பறவையின் கண்களையும் பூவாகவே கண்டு வெட்கித் தவையசைக்க இவைகள் பூவின் நளினம் கண்டு கேலி செய்தன. காற்று கடந்து செல்லும் வழியில் பூவின் உடலெங்கும் கள்ள முத்தமிட்டு ஓடியது. பூத்த அசதியால் உடல் நலிவு கொண்டது விருட்சம். பட்சி மறுநாளில் தான் எப்போதும் அறியாத வாசமொன்றை நுகர்ந்தது. அந்த வாசனை நட்சத்திரங் களின் வாசம் போல இருந்தது. பூவின் கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்த அந்த வாசம் வானவெளி எங்கும் கிறு கிறுப்பையும் வசீகரத்தையும் பரப்பியது. மிதந்த பறவைகளில் சில இந்த வாசனை தாக்கி வீழ்ந்தன. இன்னும் சிறு பறவைகளோ செம்பட்சி பின்னே வாசனையைத் தொடர்ந்தபடி பறந்து வந்தன. விருட்சம் கிளைதோறும் பூக்களை அரும்பச் செய்தபடி இருந்த தால், பறவை அலகில் பூத்த மலர்கள் முடிவற்ற வான வெளியினைத் தமது நறுமணத்தால் நிறைத்துவிட முயல்வதைப் போல வாசனை பெருக்கின. கிராமங்களின் மீது பறவை மிதக்கும்போது வாசம் மழையென இறங்கியது. சிறுவர்கள் வானில் பறக்கும் பட்சியைக் கண்டபடி தலை உயர்த்தி தெருவில் ஓடி வருவார்கள். பெண்களும், வயசாளிகளும் அலகில் விருட்சம் கொண்ட பறவையின் வருகையை தெய்வாம்ச மாகவே கண்டனர்.
பறவை கிராமவெளிகளிலும் அறியாத நிலப்பரப்பிலும் சுற்றியது. தன் மூதாதையர் எவரும் பார்த்து அறியாத கிராமங் களை, மணல் படுகைகளை, மலை பாறைகளைக் கண்டறிந்தது விருட்சம். பறக்கும்போது உதிரும் விருட்சத்தின் சிறு மலர் ஒன்றைக் கண்டெடுத்த காவியஸ்திரி ஒருத்தி வீட்டிவ் துர்மரணம் சம்பவித்து விடவே, பெண்கள்தான் முதலில் விருட்சம் கொண்ட பறவையை தீவினையின் அடையாளமாக்கிப் பேசினர். காதுகளின் வழியே தாவித் தாவிப் பரவிய செய்தி எல்லா கிராமத் தெருக்களிலும் சேர்த்துவிட்டது. பறவையினின்று காற்றில் பரவும் அந்த வாசம் மரணத்தினை நினைவுபடுத்திச் சுழல, வேட்டையாடிவிட எழுந்தது. ஆண்களின் உக்கிரம். பறவை வாசனையின் மிதப்பில் தொடர்ந்து பறந்தது. திடீரென வான் வெளியில் பறந்து வரும் சுழிக் கல்லையோ, மரக்கட்டை களையோ கண்டு பறவை கண் தாழ்த்தும்போது, மனிதர்களின் முறுக்கேறிய முகங்கள் தென்படும். அது முதல் இடைவிடாமல் அதி உயரத்தில் மிதக்க வேண்டியிருந்தது பறவை. களைப்பும் விருட்சத்தின் படர்வுச் சுமையும் தொற்ற பலவீனமான இதயத்துடன் அது சிறகடித்துக்கொண்டிருந்தது. விருட்சமோ இதைப் பற்றிய நினைவேதுமின்றி அவகில் அமர்ந்தபடி உலகம் கண்டது.
நாள் கடக்க, கடக்க வேர்கள் சிறகுகளிலும் ஊர்ந்து பற்றிக் கொண்டுவிட்டதால் சிறகை விரித்து அதிகமாக்கியது. எங்காவது அறுப்பில் தப்பிய ஒற்றைக் கதிர்களைக் கொத்தி பசி தீர்த்தது பட்சி எனினும் அதன் கவனமெல்லாம் விருட்சத்தின் மீதே குவிய, இலைகளின் பசுமையான சங்கீதத்தையும், வேர்கள் காற்றில் விரல் அடித்து எழுப்பும் தாள ஒலியையும் கேட்டபடி மொட்டைக் கோபுரத்தின் மீது நின்றிருந்தது. பூக்களின் வாசனை தூண்டிய வண்ணத்துப் பூச்சிகள் இச்சை பெருகிய கொம்பு களுடன் விருட்சத்தை நாடி வந்தன. கறுப்பு மஞ்சளும், செந்நிறக் கலவையும் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு இலை கள் வெட்கம் கொள்ள, நிறங்களைத் தடவியபடி மலர்களோடு சல்லாபித்தது பூச்சி. பறவையின் சிறகுகளில் அமர்ந்தபடி வண்ணத்துப் பூச்சி காதல் வார்த்தைகளைப் பிதற்றியது.
நீண்ட பகல் கொண்ட நாள்கள் தொடங்கின. தெருக்களில் நிழல் அற்ற நாள்கள். வீட்டு உரல்களில் ஒளிந்த பூச்சிகளின் சப்தம் அறிந்து, அதை நிசப்தமாகக் கவ்விவிட தெருவின் இடுப்பளவில் பறவை மிதந்து சென்றபோது தாக்கியது சிறுவனின் விரலிலிருந்து கிளம்பிய கல். ஒற்றை இறகு பிய்ந்து சிதற, சுருண்டு தரை வீழ்ந்து, சிறுவனின் கால் எட்டும் முன்பு மீண்டும் சுழன்று பறந்தது பறவை. வான் பரப்பில் வெகு அப்பால் மறையும்போதும் விருட்சம் கொண்ட நடுக்கம் தீரவில்லை. சிறகைப் பற்றியிருந்த வேர்கள் அறுந்து போயிருந்தன. விருட்சம் இடைவிடாமல் புலம்பியது. மறுநாளில் பறவைக்குப் பறத்தலே இயலாததாகிப் போனது. அது ஒரு புதரடியில் நின்றபடி மேகம் பார்த்துக் கொண்டிருந்தது. பறக்க முயலும்போதெல்லாம் வீழ்வதும் இலைகள் அறுபடுவதுமாகத் தொடர, செம்பட்சி பின்நாளில் பறப்பதையே நிறுத்தியது. குட்டைப் புதரடி விட்டு அகலாது நின்ற இரவில் பெய்த மழை மரங்களில் ஊர்ந்து இறங்கியது. பறவையின் அலகில் மிதந்த வேர்கள் மண்வாசமும் ஆசையும் மேலேற பூர்வ ஞாபகம் கொண்டது போல வெகு வேகமாகத் தரையிறங்கின. பறவையின் கண்கள் அறிந்தே அவை மண்ணில் புதைவு கொண்டன. தப்பவிட முயல்வது போல விருட்சம் தன் எல்லா வேர்களையும் தரையிறக்கி மண் கலக்கச் செய்தது. அவசரமாகத் தரையிறங்கிய வேர்கள் பறவையின் அலகையும் பிணைத்துத் தரையிட்டன. வேர் ஈர்ப்பில் அலகும் நிலத்தில் இணைவுபட்டது. பறவையிடமிருந்து துயரமான முணுமுணுப்பு கேட்கத் தொடங்கியது. மண் கலந்த வேர்பிடிப்பு விருட்சத்தின் இதயத்தில் மகிழ்ச்சியின் பாடலைச் சுரக்கச் செய்தது. தானியமும் பறத்தலுமற்ற பறவையின் இறகுகள் உதிரத் தொடங்கின. எண்ணற்ற சிறு உயிர்கள் சிறகில் ஏறி அலைந்தபோது அது அலகை அசைக்கவில்லை. சிறகு உதிரும் பறவையினைக் கண்ட பூனையொன்று வாலைப் பின்னிகள் பார்வையுடன் அலைந்தது.
விருட்சத்தினின்று அறுத்துக்கொண்டு பறத்தல் இயவாததாகி விட்டதை உணர்ந்த பறவை தொலைவில் சாவின் விரல்கள் காற்றில் தாளமிடுவதைக் கேட்டது. ஒரு மண்புழு போல சாவு இருதலை கொண்டபடி ஊர்ந்து பறவையின் முன் வந்தது. அதைக் கண்ட விருட்சம், இலைகளின் வழி குரலிட்டது அறியாமல். இமை மூடி இருந்தது செம்பறவை. விருட்சத்தின் துக்கக் குரல் பறவை இதயத்தில் சென்று ஒளிய அதன் நாடி ஒடுங்கியது. பூனையின் பல் துண்டித்த செம்பட்சியின் கபாலம் மட்டும் சில காலம் வெயிலில் உலர்ந்து கிடந்தது. சிறகுகள் ஒரு மழையில் மண் புதைந்தன. பின் எப்போதோ விருட்சத்தின் முதுகுத் தண்டில் இறகொன்று ஊர்வது போலப் பட நெளிவு கொண்டது. ஆகாசம் விட்டுத் தரையோடு வாழ்வைத் தொடர வேண்டியதாகியது விருட்சத்துக்கு. எனினும் அதன் வெண்ணிற மலர்கள் இப்போது பறவையின் கண்வளையம் போன்ற நிறவட்டம் கொண்டு வானைப் பார்த்தபடியிருப்பதும், ஏக்கத் துடன் பறவைகளைக் கண்டு முணுமுணுப்பு கொள்வதையும் அறிய அங்கு எவருமேயில்லை.
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.