அறிவுஜீவி என அறியப்பட்டவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 566 
 
 

திரு.ஷாராஜ் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட இரண்டாவது கதாசிரியர் இவர் தான். நவம்பர் முதல் மே 2025 வரை, 94 கதைகள் வெளியாயின. இது ஒரு மிக பெரிய சாதனை.வாழ்த்துக்கள் ஐயா.

முன்னதாகக் கடிதம் ஒன்றை எழுதி வைக்க முடிவெடுத்திருந்தான் யுகா. புத்தகங்கள், பேப்பர் வெய்ட், ஆஸ்ட்ரே என இறைந்திருந்த மேஜையில் இடம் ஒதுக்கி அமர்ந்தவனுக்கு, எப்படி எழுதுவது என்பதில் மிகுந்த யோசனை. சிகரெட்டைப் புகைத்தவாறே முதலில் எழுதிய கடிதங்கள் எண்ணியபடி அமையவில்லை. மூன்றாவதாக எழுதியது திருப்தியாக அமைந்தாலும், மறுமுறை படித்துப் பார்த்தபோது, அதை விளங்கிக்கொள்கிற அளவுக்கு இங்கே யாரும் கிடையாது (குறிப்பாக காவல் துறை) என்று பட்டது. எனவே, அவற்றைக் கசக்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினான்.

இனியென்ன, ஆரம்பித்துவிட வேண்டியதுதான்!

அதற்கு முன் எல்லாம் சரியாக உள்ளதா என்று சோதித்துக்கொள்ள வேண்டும். முன் கதவையும் பின் கதவையும் சாத்தித் தாளிட்டாயிற்று. மற்ற அறைகளில் விளக்குகளையும் அணைத்துவிட்டிருந்தான். இந்த ஜன்னலையும் அடைத்து விட வேண்டும். அதற்காக, ஜன்னலைத் திறந்தபடி நிறுத்தும் கட்டைகளை விடுவிக்கும்போது வெளிப்புறத்தை ஒரு முறை பார்த்துக்கொள்ளத் தோன்றியது. பார்வை எட்டும் தூரம் வரை உற்று நோக்கினான். தெருவின் இரு புறங்களிலுமான வீடுகள் தெரிந்தன. பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டபடியால் அவை கதவடைக்கப்பட்டிருந்தன. தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் காற்று மரங்களை அசைக்காதபடியான நிச்சலன அமைதி. அதை மிகைப்படுத்திக் காட்டும் இருட் பகுதிப் பூச்சிகளின் ரீங்கரிப்பு.

அந்த வீடுகளைக் காண அவனுக்கு ஏளனம் உண்டாகியது. கனவுகளுடனோ அதில்லாமலோ உறங்கிக்கொண்டிருக்கக் கூடிய அவனறிந்த அந்த வீதி வாழ் மனிதர்களை நினைத்துக்கொண்டான். தங்களின் வழக்கமான ஒரு நாளை இன்றும் கழித்துவிட்டு இப்போது தத்தமது சுவர்களுக்குள்ளே முடங்கிவிட்டார்கள். இந்த இரவும், வழக்கத்தின் மற்றொரு நாளாக அவர்களுக்கு விடியும். நாளையும் இன்று போலவே வாழ்வார்கள். அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் உலகம் இப்படியே இயங்கிக் கொண்டிருக்கும். தன்னுடைய சகல வித அபத்தங்களோடும்.

முட்டாள்தனமான மனிதர்களின் சமூகம். அதன் சலிப்பான நடைமுறைகள். தான் வாழ்வதற்கு எந்தவித அருகதையும் அற்றது இது. ஆகவேதான் யுகா தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தான். ஏறத்தாழ இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு அந்த முடிலெடுத்திருந்தான்.

எவ்விதமான தற்கொலை என்று தேர்ந்தெடுப்பதில் பலதும் நினைவுக்கு வந்தன. தூக்குப் போட்டு சாவதில் முழி பிதுங்கி, நாக்கு நீண்டு, மலமும் விந்தும் வெளியேறுகிற நிலை அவனுக்குப் பிடிக்கவில்லை. தீக்குளித்து சாவதை அதன் குரூரத்தாலும் பெண்கள், தொண்டர்கள் செய்வது அது என்பதாலும் விலக்க வேண்டியதாயிற்று. தண்டவாளத்தில் தலை கொடுப்பது ரயில்களின் தாமத வருகையினால் தள்ளிப்போகலாம். தூக்க மாத்திரைகளை அதிகமாக விழுங்குவதற்கு டாக்டரின் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் வாங்கவே முடியாது. தவிர, அதுவும் பெண்களுக்கான தாகவும், மரணத்தை நேரடியாக அனுபவிக்காமல் சாகிறதாகவும் பட்டது. இறுதியாக விஷமருந்துவதைத் தேர்ந்தெடுத்தான்.

தனது சாவை நேரடியாக உற்சாகத்துடன் நிகழ்த்த வேண்டும் என்பது அவனது விருப்பம்.

இருநூற்று சொச்சமே பணம் கையிருப்பு. அதற்குத் தகுந்த அளவு விஷத்துடன் விஸ்கி, சாப்பிட அசைவம், ஸ்நாக்ஸ் மற்றும் சிகரெட்டுகள் வாங்க வேண்டும். ஐம்பது ரூபாய்க்கு உட்பட்ட விஷமாக எது, எங்கே கிடைக்கும் என திவிரமாய் யோசித்தபடி வருகையில் முத்து தியேட்டர் அருகே பூச்சி மருந்துக் கடை பார்வையில் பட்டது. அங்கே அவர்கள் வீட்டுக்கு மூட்டைப் பூச்சி மருந்தடிக்க டிக் -20 வாங்கும் ஞாபகம். எனவே, அங்கிருந்து டிக் -20யையே வாங்கிக்கொண்டான். இமயம் ஒயின்ஸிலிருந்து அரை பாட்டில் ஜானெக்ஸா, ஹோட்டல் சம்பூர்ணாவிலிருந்து மட்டன் பிரியாணி, ஆஃப் ப்ளேட் சில்லி சிக்கன், ஒரு பேக்கரியிலிருந்து கப்பைக் கிழங்கு சிப்ஸ், மசால் கடலை முதலியவைகளை வாங்கி ஒரு கேரி பேக்கில் போட்டு வந்தவனுக்கு கடைசிப் பேருந்துதான் கிடைத்தது.

இறங்கி வரும்போதே சில வீடுகள் கதவடைக்கப்பட்டு வெளியில் நடமாட்டமும் குறைந்திருந்தது. இவர்கள் வீட்டில் அம்மா இருந்தால் விளக்கெரிய கதவு திறந்து யுகாவின் வரவைக் காத்துக்கொண்டிருப்பாள். அவள் இங்கில்லாததால் வாசல் விளக்கும் கூட எரியாமல் இருந்தது வீடு. அவள் இருந்திருப்பின், தான் இங்கேயே சாவது முடிந்திராது என நினைத்துக்கொணடே தெரு விளக்கொளியில் பூட்டைத் திறந்து உள்ளே வந்தான்.

அம்மா இருக்கும்போது வழக்கப்படி அவன் இங்கே குடிப்பதற்கே முடியாது. யுகாவிற்கு பார்களில் அல்லது அனுமதிக்கப்படும் ஹோட்டல்களின் தனியறைகளில் குடிப்பது ஒத்துக்கொள்வதில்லை. நேரம் பற்றிய கெடு இல்லாமல் தன்னந்தனியாக வீட்டுக்குள் சுதந்திரமாக இருந்து குடிப்பதில்தான் திருப்தி. பத்து மணிக்கு மேற்படத் துவங்கி அரை பாட்டிலை சிகரெட்டுடன் முடிக்க ஒன்றோ இரண்டோ மணியாகிவிடும். முன்னெல்லாம் பார்களில் குடித்துவிட்டு வீட்டுக்கு ஆட்டோவில் வந்திறங்குவான். அதற்குப் பணமில்லாமல் பஸ்ஸில் வந்து தள்ளாடி நடந்து வருவதும், வழியில் வீதியோரமாகப் படுத்திருப்பதுமான நாட்களும் இருந்தன. அம்மாவும், அண்ணனும் அது பற்றி நிறையவே கண்டித்திருக்கின்றனர். இன்னும் அம்மாவுக்கு யுகா தனது உடைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை, படிக்கிற புத்தகங்கள் வீடெங்கும் இறைந்திருக்கின்றன, அயல் வீட்டு மனிதர்களையோ உறவினர்களையோ மதிப்பதில்லை, திருமணத்திற்கு சம்மதிக்க மறுக்கிறான் என்பதான குற்றச்சாட்டுகள் தீராது. அதற்காகத் திட்டவும், புலம்பவும் செய்வாள்.

யுகாவுக்கோ சுத்தம், சுகாதாரம், அழகு, புனிதம், உன்னதம், நம்பிக்கை, திருமணம், குடும்பம், கௌரவம், சமூகம், மதிப்பு என்கிற வார்த்தைகனே உடன்பாடற்றவை. தன்னிச்சையான செயல்கள் மட்டுமே அவன் ஏற்றுக்கொள்ளக் கூடியன. இதனால் அம்மாவுக்கும் அவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும். அது முற்றி, அடுத்த நாளே அம்மா கோபித்துக் கொண்டவளாக அண்ணன் வீட்டுக்குப் போய்விடுவாள். “எக்கேடோ கெட்டுத் தொலைடா. இனிமே நீ எனக்கு மகனுமில்ல; நான் உனக்கு அம்மாவுமில்ல” என்றுவிட்டுச் செல்பவள், ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்துவிடுவாள்.

அவள் உட்பட பிற மனிதர்கள் யாவருமே சகித்துக்கொள்ளப்பட் முடியாதவர்கள். வெவ்வேறு உரு கொண்ட ஒன்றின் இன்னொன்றுகள். சுய விசாரணைகளற்று, தொடங்கியது தெரியாமல் முடிவும் அறியப்படாமல் காலங்காலமாய் ஓடிக்கொண்டிருக்கிற தொடரோட்டம். இதில் மற்றவர்களும் தன்னைப் போலவே இருக்கவேண்டும் என்ற ஆசையும் வேறு. அவன் எப்படி அவர்களாக முடியும்? அற்ப காரியங்களுக்காக மகிழ்ந்து, துக்கித்து, மீண்டும் மீண்டும் அதற்காகவே வாழ்ந்துகொண்டிருக்க அவன் தயாரில்லை. இங்கே அவனைப் போன்றவர்கள் வாழ்வதற்கு உலகில் எதை உருப்படியாக விட்டு வைத்திருக்கிறார்கள் இவர்கள்?

ஷாராஜ்தான் சொல்வான், “பைத்தியங்கள் மட்டுமே இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியும். தன்னிச்சையாக, தனக்கென்றிருக்கும் உலகில், தான் மட்டுமேயாக” என்று. உண்மைதான்! அந்த நிலையில் தானும் இருந்திருந்தால் நல்லது. அவன் கதை, சுவிதையெல்லாம் எழுதுகிறவன். இலக்கியத்தோடு கலை, ஆன்மிகம், யோகம், தத்துவம் முதலான துறைகளையும் படிக்கிற பேர்வழி. இங்கே அலமாரியில் உள்ள நூல்களைப் பார்த்துவிட்டு, “இவ்வளவும் நீங்க படிச்சதா?” என்று கேட்டான். படித்து ஒழித்ததில் மிச்சமென்றான் யுகா.

மேல்நிலைப் படிப்புக் காலத்தில் கம்யூனிசத்தில் அறிமுகம் ஏற்பட்டு மார்க்ஸ், லெனின், மாவோ, எங்கெல்ஸ் எனப் படிக்கத் துவங்கி, பின் குறுகிய வட்டத்தில் அடைபட முடியாமல் வெளியேறியதிலிருந்து அவனது அலமாரியில் மாறி மாறி நிறைந்து ஒழித்தது போக கடைசியாகத் தங்கிவிட்ட புத்தகங்கள் அவை. ஆன்மிகம், மதம், தத்துவம், அறிவியல், உளவியல் என தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான அனேக நூல்கள். அவற்றைப் படிக்க இரவல் எடுத்துச் சென்ற நண்பர்கள், “உன்னை மாதிரி இன்ட்டலக்சுவல்களாலதான் இதையெல்லாம் படிக்க முடியும்” என்று உடனடியாகத் கொடுத்துவிட்டனர். அவர்களிடம் யுகா கூடுமானவரை அந்தக் கருத்துக்களை விளக்கவும் முற்பட்டிருக்கிறான். இது போன்ற பெரிய விஷயங்களாகவே பேசுவதால் அலுவலகத்தில் பலருக்கு யுகாவைக் கண்டாலே மிரட்சி. நணபர்களிடமும் முன்பு தனி மரியாதை இருந்து, பின் விலகல் ஏற்பட்டுவிட்டது. அப்போதுதான் நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தன்னைப் புரிகிற அளவுக்கு அறிவில்லை என்பது உறுதியானது. தன்னைத் தவிர மற்ற எந்த மனிதனுமே தனக்குப் பிரச்சினையாகத்தான் இருப்பான் என்பதும்.

சுயமில்லாத நகலெடுப்புகள் இவர்கள். தனித்திருக்க பயப்படுகிற சார்புண்ணிகள். கொசு, மூட்டைப் பூச்சிகளைப் போல ஒட்டுண்ணிகள். இது தோன்றவுமே, அவனுக்கு டி.க் -20 ஞாபகமும், தான் செய்ய வேண்டிய காரிய நினைவுகளும் மீண்டன.

ஜன்னலை சாத்திக் கொண்டியிட்டுவிட்டு வந்தான். சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு, மின்விசிறியில் வேகம் கூட்டினான். கொசுத் தொல்லையைச் சமாளிக்க இங்கே மின்விசிறி அவசியம். அறை நடுவே பாய் விரித்துக்கொண்ட பிறகு ஒவ்வொன்றாக அதனருகே கொண்டுவந்து வைத்தான். பெஞ்ச்சின் மீதிருந்த பார்சல்கள் அடங்கிய கேரி பேக், சமையற்கட்டிலிருந்து தண்ணீரும் கண்ணாடி டம்ளரும், பேண்ட் பாக்கெட்டிலிருந்து சிகரெட் பாக்கெட், தீப்பெட்டி, கஞ்சாப் பொட்டலம், டேபிள் மேலிருந்த ஆஸ்ட்ரே மற்றும் 045 ரெனால்ட்ஸ் பேனா.

லுங்கியை இறுக்கியபடி பாயில் உட்கார்ந்தபோது காதருகில் ஒற்றைக் கொசு ரீங்கரித்தது. கையசைத்து விரட்டினான். இவைகளாவது பரவாயில்லை, மூட்டைப் பூச்சிகளின் தொல்லைதான் இங்கே அதிகம்.

மருந்தடித்தாலும் ஆறேழு மாதங்களுக்குள் மறுபடி வந்துவிடுகின்றன. பகலெல்லாம் கட்டில், பெஞ்ச், மேஜை, சுவர்களின் இண்டு இடுக்குகள், அவனது புத்தக அலமாரி என ஒளிந்திருந்து, இரவானதும் ஒவ்வொன்றாக வெளிப்படும். தூங்க விடாமல் கடிக்கும். கட்டிலிலும் தலையணையிலும் ஒளிய அதிக இடமுண்டு என்பதால் மூட்டைப் பூச்சிகள் பெருகும்போது யுகா பாய் விரித்து, தலையணையில்லாமல் தூங்குவான். அப்படியும் சுவர்களிலிருந்து மனித வாசம் பிடித்து இறங்கி வந்து ரத்தம் உறிஞ்சிக் குடிக்கும். அதனால் தூங்கும் முன்பாக சுவரில் அவை தட்டுப்படுகின்றனவா என்று பார்த்து, ஊர்வது தெரிந்தால் அப்படியே இடக்கை பெருவிரலால் நசுக்கிவிடுவான். ரத்தம் சிவப்புத் திற்றலாகப் படிந்து, நாள்பட கருத்துவிடும்.

“செவுத்துல தேய்க்காதடா. அசிங்கமா இருக்குது” என்பாள் அம்மா. மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக் கொன்றால் அதன் ரத்தத்திலிருந்து குஞ்சுகள் உருவாகிவிடுமாம். அதை முறியடிக்க உபயோகமற்ற ப்ளாஸ்டிக் கிண்ணத்தில் நீர் ஊற்றி வைத்து, அதில் பிடித்துப் போடுவாள். யுகாவுக்கோ மூட்டைகளைத் தன் கையால் நசுக்கிக் கொல்வதியேயே முழுத் திருப்தி. உடனே விரலை முகாந்தால் வரும் நாற்றத்தில் அருவருப்பாக முகம் சுளிப்பான். கையைக் கழுவாமல் அந்த நாற்றமும் அருவருப்பு உணர்வும் போகாது.

இப்போதும் சுவாகளை உன்னித்ததில் அங்கங்கே கருப்பாய் ரத்தத் தீற்றல் கறைகள், அவற்றினூடே மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்துகொண்டிருப்பது கறுத்த புள்ளிகளின் நகர்வாக பார்வையில் பட்டது. ஆனால் இன்றைக்கு அவைகளை அவன் நசுக்கப் போவதில்லை. இன்னும் சில மணி நேரங்களதானே! அதன் பின்னர் அவை தன்னுடைய உறைந்த ரத்தத்தைக் குடிக்க முடியாது. அம்மாவும் இனி நிரந்தரமாக அண்ணனோடயே தங்கி விடுவாள். அதனால் வீட்டை காலி செய்துகொண்டு இங்குள்ள பொருட்களைக் கொண்டு செல்லும்போது அவற்றோடு மூட்டைப்பூச்சிகளும் இடம்பெயரும். சுவர்களில் தங்கியவை, அடுத்து இந்த வீட்டுக்குக் குடிவருகிறவர்களை ரத்தம் உறிஞ்சும். ஒரு மாதம் வரை ரத்தம் குடிக்காமல் வெறும் தோலாக உலர்ந்து கிடந்தாலும் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளக் கூடியவையாமே இந்த மூட்டைப் பூச்சிகள்! அதற்குள் யாராவது இங்கே குடிவந்துவிட்டால் சரி. தற்கொலை பண்ணிக்கொண்ட வீடு என்று யாரும் வராமல் போய் விட்டால்…? அப்போது அவை வீட்டைவிட்டு வெளியேறி பக்கத்து வீடுகளுக்குப் போய்விடுமோ?

மூட்டைப் பூச்சிகள் எப்படிப் போனால் நமக்கென்ன? அது அவைகளுடைய பாடு. யுகா தன்னுள் சொல்லிக்கொண்டவனாக கேரிபேக்கில் இருந்தவற்றையெல்லாம் வெளியே எடுத்து தனக்கு முன்பாகப் பரப்பினான். விஷமருந்தி சாகிற பலரும் மதுவுடன் கலக்கி அருந்துவது அவன் அறிந்ததே. ஆனால், அது தனது திட்டத்திற்கு ஒத்து வராது. விஷம் முழுதையும் மதுவில் கலந்து குடிப்பது உடனடியாக சற்று நேரத்தில் மரணத்தை ஏற்படுத்திவிடும். எனவே, முன்னதாக மதுவைப் பாதியளவுக்கு அருந்துகிறவரை அதன் போதையை அனுபவித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். பிறகு மீதமுள்ள மதுவில் டிக் -20 யையும் கலந்து குடித்துவிடலாம். அப்போதுதான் அதன் நெடியும் உறுத்தாது.

யுகா டிக் -20 யை சற்றுத் தள்ளி வைத்துவிட்டு காக்கிக் கவரிலிருந்து ஜானெக்ஸா பாட்டிலை எடுத்துவைத்துக்கொண்டான். பக்கத்தில் டம்ளர்.

பாட்டிலை மூடி திறந்து விரற்கடையளவு மது ஊற்றினான். அதோடு விளிம்பு வரை சொம்பு நீரையும். ரெனால்ட்ஸ் பேனாவின் மூடிப் பாகத்தில் பிடித்துக் கொண்டு மெதுவாக நன்கு கலக்கிவிட்டுக்கொண்டு, ஒரு மிடறு அருந்தினான்.

கைகளைத் துடைத்துக்கொண்டு டம்ளரை எடுத்து மற்றொரு மிடறு அருந்தினான். சாப்பிடுகிற நேரம் கடந்து விட்டதால் கூடுதலான பசி. ஹோட்டல் பார்சல்களையும், பேக்கரி ஐட்டங்களையும் பிரித்து வைத்துக்கொண்டான். பிரியாணியையும் சில்லி சிக்கனையும் சூடு ஆறி சாப்பிடுவது சுவைக் குறைவு. ஆனாலும் வேறு வழியில்லை. தவிர, மதுவுடன் சாப்பிடும்போது சுவைக் குறைவு அவ்வளவாகத் தெரியாது. இடது கைக்கு டம்ளரையும், வலது கைக்கு சாப்பிடுகிறவைகளையும் வைத்துக்கொண்டு தொடர்ந்தான். சிறிது சிறிதாக அவற்றின் அளவு குறைய, பாட்டிலின் திரவமும் குறைந்துகொண்டே வந்தது. ஒரு வெறும் சிகரெட்டை எடுத்து எச்சிற் கையாலேயே பொருத்திப் பற்ற வைத்துக் கொண்டான். போதை லேசாக ஏறிக்கொண்டிருந்தது. ஜானெக்ஸா பாட்டிலில் விஸ்கி பாதிக்கும் குறைந்தாயிற்று. அந்த சிகரெட் தீர்ந்ததே தெரியவில்லை. மின் விசிறிக் காற்றுக்கு இழுக்காமலே சீக்கிரத்தில் புகைந்து தீர்ந்துவிடும்.

இந்த போதையைக் கொஞ்சம் கூட்டிக்கொண்டால் நல்லது. கஞ்சா சிகரெட்டை எடுத்துக் கொளுத்திக்கொண்டான். ‘தம்’ கட்டி இழுத்து, புகையை உள்ளேயே இருத்து அனுபவித்து, வாயிலும் மூக்கிலுமாக வெளிவிட்டான். மெல்ல மெல்ல கஞ்சா போதை பரவி, கிறங்கச் செய்தது.

மதுவின் போதையிலிருந்து மாறுபட்ட போதை. “பாதை ஒன்றாலும் அதனதன் பயணங்கள் வேறு வேறு” என்பதைச் சொல்லிவிட்டு சிரித்து, சிகரெட்டைப் புகைத்து, திரும்பவும் அதையே சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தான்.

அடுத்த சிகரெட்டைப் புகைக்கும்போது கிறக்கம் கூடி, வாய் குழறியது. அதே வார்த்தைகளைப் பிதற்றி, உதடு கோண சிரிக்கலானான்.

எப்போது மயக்கமாக தூக்கம் வந்து பாயில் கவிழ்த்தியது என்பது அவனுக்குத் தெரியாது.

அடுத்த நாள் விழிப்புத் தட்ட எழுந்தான். தலை பாரமாய் கனத்தது. உணவுப் பண்டங்கள் ஈயும் எறும்பும் மொய்க்க அலங்கோலமாகக் கிடந்தன. ஜானெக்ஸா பாட்டில் கவிழ்ந்து, விஸ்கி தரையில் சிந்தியிருந்தது. இறைத்திருந்தவற்றை ஒழுங்குபடுத்திவிட்டுப் பார்க்கும்போது மணி பத்தே முக்கால். தாமதமாகி விட்டதால் அலுவலகத்திற்குப் போக முடியாது. அன்றைக்கும் கடிதம் கொடுக்காத விடுப்புதான். பரவாயில்லை, அதை சமாளித்துக் கொள்ளலாம்.

அது கூட அடுத்த ஒரு நாள் பிரச்சனை. அன்றைக்கு அவன் மூட்டைப் பூச்சி மருந்தடிக்கிற பம்ப்பைத் தேடியெடுத்து டிக் -20 யை மண்ணெண்ணெய் கலந்து அடித்ததிலிருந்து ஆறேழு மாதங்களுக்கு அங்கே மூட்டைப் பூச்சித் தொல்லை இல்லாது போயிற்று.

– புதிய பார்வை, 1-15, 16-31 ஆகஸ்ட், 1998.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *