அறிவிற் பெரியவன்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 2,905
(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குழந்தையிடம் அம்மா இறைவனைப்பற்றிச் சொல்லி யிருக்கிறாள். எல்லோரையும்விட இறைவன் அறிவிலே சிறந்தவன் என்பதை ஒரு நாள் சொன்னாள். குழந்தைக்கு அறிவு என்றால் புத்தகமும் வாத்தியாரும் பள்ளிக் கூடமுமே நினைவுக்கு வரும். அது தன் தந்தையை மிகவும் நன்றாகப் படித்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது அவர் அத்தனை நூல்களை வீட்டில் வைத்திருக்கிறார். அவருடைய அறிவைப் புத்தகங்களைக் கொண்டு குழந்தை அளந்து பார்க்கிறது.
இறைவன் மிகப் பெரிய அறிவுடையவன் என்பதைக் கேட்ட குழந்தை தனக்குத் தெரிந்த அளவு கோலால் அளக்கப் பார்க்கிறது, ‘அப்பாவே இவ்வளவு நூல்களைப் படித்தவராயிற்றே. கடவுள் எத்தனை புத்தகங்களைப் படித்திருப்பார்! அவர் படித்த நூல்களையெல்லாம் குவித்தால் ஒரு மலையைப்போல இருக்குமே!’ என்று எண்ணுகிறது. அம்மா விடம் கேட்கிறது; “அம்மா, அம்மா, கடவுள் படித்த புத்த கங்கள் ஒரு கோடி இருக்குமா?” என்கிறது. ஆனால் அம்மா கூறும் விடை அதற்கு வியப்பை உண்டாக்குகிறது.
“அவர் ஒரு நூல்கூடப் படித்ததில்லை” என்று அவள் சொல்கிறாள்.
குழந்தைக்கு ஒன்றும் புரிபடவில்லை, புத்தகம் படிக்கா தவர் எப்படி அறிவுடையவராக இருக்க முடியும்? அதற்கு யோசனை விரிகிறது. புத்தகம் படிக்காவிட்டால் அவருக்குப் பல விஷயங்கள் தெரிந்திருக்க நியாயம் இல்லையே! அம்மாவை மறுபடியும் கேட்கிறது குழந்தை; “அப்படியானால் கடவுளுக்குப் பல விஷயங்கள் தெரியாமல் இருக்குமோ?” என்று கேட்கிறது.
அம்மா அதற்கும் பதில் சொல்கிறாள். ”அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை” என்று அவள் சொல் கிறதைக் கேட்ட குழந்தை பின்னும் வியப்பில் மூழ்குகிறது.
குழந்தை பச்சைக் குழந்தை அல்ல; சிறிது சிந்திக்கத் தெரிந்த குழந்தை. ஆதலின் அதற்குச் சிந்தனை ஓடுகிறது. புத்தகத்தைத் தானே படிப்பது ஒரு முறை, படித்தவர் களிடம் கேட்பது ஒரு முறை என்று அந்தக் குழந்தை அறிந்து கொண்டிருக்கிறது. “கேள்வி முயல்” என்ற ஒளவையின் வாக்கைப் பொருளோடு தெரிந்து கொண்ட குழந்தை அது. ‘பல அறிஞர்களுடைய உபதேசங்களைக் கேட்டு அறிவாளி யாகியிருக்கலாம்’ என்ற நினைவு வந்தது. “அவர் காதில் பல அறிவாளிகளுடைய பேச்சுக்கள் விழுந்திருக்குமோ?” என்று குழந்தையிடமிருந்து அடுத்த கேள்வி எழுந்தது.
“அவர் காதில் மற்றவர்கள் ஓர் உபதேசமும் செய்ய வில்லை. அந்தக் காதில் அவர் யார் உரையையும் போட்டுக் கொள்ளவில்லை. சங்கினாலான குழையைத்தான் காதில் போட்டுக்கொண்டிருக்கிறார்.” அம்மா சற்று வேடிக்கை யாகவே பேசினாள்.
பிறர் வாத்தியாராக இருந்து சொல்ல அதைக் காதில் வாங்கிக்கொள்ளும் வேலை அவருக்கு இல்லையாம்.
குழந்தைக்கு ஒரே குழப்பமாகி விட்டது. ‘கடவுள் படித்தவர் அல்ல; படித்தவர்கள் சொல்வதைக் கேட்டதும் இல்லை. ஆனால் அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை.’ இதை நினைக்க நினைக்கக் குழந்தைக்கு வியப்பாக இருக்கிறது. இது எப்படி முடியும்?’ என்று யோசிக்கிறது.
‘படிக்காதா தவர்களும், படித்தவர்களை அணுகிக் கேட்காதவர்களும் வாழ வகைதெரியாமல் துன்புறுகிறார்கள் அறிவு இல்லாதவர்கள் எந்த விதமான நன்மையையும் பெற மாட்டார்கள்; எப்போதும் கவலையோடேயே இருப்பார்கள். கடவுளுக்கும் நிச்சயமாகக் கவலை பல இருக்க வேண்டும்’ என்ற எண்ணங்களின் விளைவாகக் குழந்தை அன்னையை. •அவருக்குக் கவலை நிறைய உண்டா?” என்று கேட்கிறது.
“கவலையா! அவரை நினைப்பவர்களுக்கே கவலை அணுகாதே! மிகமிகக் கவலைக்குக் காரணமான துன்பம் ஒன்று இருக்கிறது. அதை உலகில் யாராலும் போக்க முடியாது. அதைப் போக்கிப் பாதுகாக்கும் ஆற்றல் அந்தக் கடவுள் ஒருவருக்குத்தான் உண்டு,”
“அது என்ன கவலை அம்மா?”
“பிறப்பு என்பதுதான் துன்பங்களுக்குள் பெரிய துன்பம். அதை நினைத்தால் பெரியவர்களுக்கு உண்டாகும் கவலைக்கு எல்லையே கிடையாது. அந்தக் கவலையையே கடவுள் போக்கி அருளுவார்.”
“அவர் அறிவுடையவர் என்று சொல்கிறாய்; கவலை இல்லாதவர், கவலையை ஒழிப்பவர் என்கிறாய். ஆனால் அவர் படித்ததும் இல்லை. படித்தவர் சொல்லக் கேட்டதும் இல்லை என்று சொல்கிறாயே! அவருக்கு எப்படி அறிவு உண் டாயிற்று?’
தாய்க்கு விடை சொல்லச் சிறிது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ‘அவர் இயற்கையாகவே அறிவு நிரம்பப் பெற்றவர். நூலறிவுக்கெல்லாம் மேம்பட்ட வாலறிவை உடையவர்” என்று சொன்னால் குழந்தைக்கு விளங்காது.
அந்தக் குழந்தை நம்முடைய மரபுகளை ஓரளவு அறிந்த குழந்தை: வேதம், சாஸ்திரம் என்பவற்றைப் பற்றிக் கேட்டிருக்கிற குழந்தை. அதற்குத் தெரிந்திருக்கிறதைக் கொண்டே விஷயத்தை விளக்கலாம் என்று எண்ணுகிறாள் தாய்.
“உனக்கு என்ன என்ன புத்தகம் தெரியும்?” என்று அம்மா கேட்கிறாள். குழந்தை தனக்குத் தெரிந்த பாட புத்தகங்களையும் ஆத்திச்சூடி முதலிய சில நூல்களையும் சொல்கிறது.
“நீ கேட்ட புத்தகங்களில் மிகவும் சிறந்ததாக ஏதாவது தெரியுமா?”
“வேதம், சாஸ்திரம்”
“அந்த வேதங்களும் சாஸ்திரங்களும் பெரிய நூல்கள். அவற்றுக்கு முந்திப் புத்தகமே இல்லை. வேதந்தான் முதல் புத்தகம். அதை இயற்றியவர் கடவுள். முதல் முதலில் புத்தகம் இயற்றியவரே அலர்தாம். அறிவு என்பதே அவரிட மிருந்துதான் தோன்றியது. அவர் அறிவுருவானவர். முதல் நூலும் அவரிடமிருந்து தான் எழுந்தது. அவருக்கு மிஞ்சின அறிவர்ளி இல்லை, வேதத்தையும் ஆறு சாஸ்திரங்களையும் சொன்னவர் அவர்?”
“அவ்வளவு பெரிய அறிவாளி என்கிறாயே; அவருக் கென்று தனியாக அடையாளம் உண்டா? படித்தவர்கள் எது எதையோ கழுத்தில் அணிந்திருக்கிறார்களே; அவருக்குக் கழுத்தில் ஏதாவது ஆபரணம் உண்டா?”
அன்னை சிரித்துக் கொண்டாள். “அவருக்குக் கழுத்தில் பிறர் அணிந்த அணி ஏதும் இல்லை. அவராக அணிந்து கொண்டது ஒன்று உண்டு. அந்த அடையாளம் வேறு யாருக்கும் இல்லை”.
“என்ன அடையாளம் அது?”
“அவரை நீலகண்டப் பெருமான் என்று தேவர்களும் மனிதர்களும் பாராட்டுவார்கள். அவர் கழுத்தில் விஷம் தங்கியிருக்கிறது. தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஆலகால விஷத்தை அருந்தித் திருக்கழுத்தில் அடையாள மாக வைத்துக் கொண்டார். அது அவருடைய பேராற்றலை யும் கருணையையும் புலப்படுத்திக் கொண்டு விளங்குகிறது. வேதமும் அந்தக் கண்டத்தின் வழியேத்தான் ஒலிக்கிறது.
“முதல் நூல் வேதம் என்று சொல்கிறாயே; அப்படி யானால் அதை சொன்ன கடவுள் மிகவும் வயசு ஆனவரோ?”
“ஆம், அவர் மிகவும் பழையவர். ஒவ்வோர் ஊரிலும் ஒரு குடும்பத்தை ஆதிக் குடும்பம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு குலத்திலும் ஒருவரை ஆதி புருஷர் என்று சொல் வார்கள். இப்படியே தேவர்களிலும் சொல்வதுண்டு. பழமையைச் சுட்டிக்காட்டும் போது இன்னார் காலம் முதற் கொண்டு என்று சொல்வது வழக்கம். ஆனால் இப்படிச் சொல்லும் ஆதிகளெல்லாம் ஏதோ ஒரு வகையில் முதலாக நிற்பவைகளே அல்லாமல் அவற்றிற்கு முன்பு ஏதும் இல்லை என்று சொல்ல முடியாது. கிளைகளுக்கெல்லாம் முற்கிளை என்று ஒன்றைச் சுட்டலாம். ஆனால் அது முதற்கிளையே ஒழிய அதற்கு முன்னே தோன்றியது அடிமரம். அதற்கும் ஆதி வேர்; அதற்கும் ஆதி விதை: அதற்கும் ஆதி அது தோன்றிய மாம், இப்படி ஆதியை ஆராய்ந்து கொண்டு போனால் எல்லாவற்றிற்கும் மூலமாகிய ஆதியாக இருப்பது எதுவோ அந்தப் பொருளே கடவுள. ஆதிக்கு அளவாக இருக்கிறவர் அவர்.”
“கடவுளை நாம் காண முடியுமா?”
“அவரை இந்தக் கண்ணால் காணமுடியாது. ஆனாலும் அவருடைய நினைப்பை ஊட்டும் உருவங்களைக் காணலாம். கோயில்களில் அந்த மூர்த்திகள் எழுந்தருளியிருக்கிறார்கள்.”
“ஏதாவது ஒரு கோயிலைச் சொல், அம்மா.”
இதோ சோழ நாட்டில் ஆக்கூர் என்ற தலம் இருக் கிறது. அங்கே கடவுள் எழுந்தருளியிருக்கிறார். அவருக்குத் தான்தோன்றியப்பர் என்று பெயர். அதுவே கடவுளுடைய பழமையைக் காட்டுகிறது அவர் பிறரால் உண்டாக்கப் பட்டவர் அல்ல. அவருக்கு முன் யாரும் இல்லை. அவரே ஆதிக்கும் ஆதிக்கும் ஆதியானவர்; தாமே தோன்றினவர்; சுயம்பு மூர்த்தி; எல்லோரையும் தோற்றுவித்த தந்தை. தான்தோன்றியப்பர் என்ற திருநாமம் இந்தக் கருத்துக் களைத் தெரிவிக்கின்றது.’
குழந்தை அறிவு மயமான கடவுளை, ஆதிக்கு அளவாக நிற்கும் தான்தோன்றியப்பரைத் தியானிக்கப் புகுந்து விடுகிறது.
இறைவனுடைய தன்மைகளைக் குழந்தைக்குத் தாய்? சொல்வது போல அழகாகச் சொல்கிறார் அப்பர் சுவாமிகள்.
ஓதிற்று ஒருநூலும் இல்லை போலும்;
உணரப் படாததுஒன்று இல்லை போலும்;
காதில் குழைஇலங்கம் பெய்தார் போலும்;
கவலைப் பிறப்புஇடும்பை காப்பார் போலும்;
வேதத்தோடு ஆறங்கம் சொன்னார் போலும்;
விடம்சூழ்ந்து இருண்ட மிடற்றர் போலும்;
ஆதிக்கு அளவாகி நின்றார் போலும்;
ஆக்கூரில் தான்தோன்றி அப்ப னாரே.
[படித்தது ஒரு நூலும் இல்லை; தம்மால் அறியப் படாதது ஒன்றும் இல்லை; தம் திருச்செவியில் சங்கினாலான அணியை விளங்குமபடி அணிந்தவர்; கவலைக்குக்காரணமான பிறவியாகிய துன்பத்தை அடியார்கள் அடையாமல் பாது காப்பவர்; வேதத்தோடு ஆறு சாஸ்திரங்களையும் திருவாய் மலர்ந்தருளினவர்: ஆலகால விடம் சேர்ந்து கறுத்த திருக் கழுத்தை உடையவர்; ஆதி என்று குறிப்பதற்குரிய அளவாகி நின்றவர்; ஆக்கூரில் எழுந்தருளியிருக்கும் தான் தோன்றியப்பர்.
ஓதிற்று-படித்தது, குழை-காதணி. இலங்க-விளங்கும் படி. பெய்தார்- அணிந்தவர். கவலையைத் தரும் பிறப்பாகிய இடும்பை. *”தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால், மனக்கவலை மாற்றல் அரிது” என்று குறள் கூறும். இறைவனை அணுகினவருக்குக் கவலை இல்லை. அங்கம்- சாஸ்திரம். மிடறு-கழுத்து. தான்தோன்றியப்பர் : சுயம்பு நாதேசுவரர் என்பது வடமொழித் திருநாமம்.
போலும் என்று வருபவை எல்லாம் அசைகள். அவற் றிற்குப் பொருள் இல்லை.
ஆக்கூர் என்பது மாயூரத்திற்கும் திருக்கடவூருக்கும் இடையே உள்ளது]
இது ஆறாம் திருமுறையில் 21-ஆம் பதிகத்தில் இரண்டாம் பாட்டு.
– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.