அறியாத பயணம்




(என்றோ படித்த ஒரு கதையின் கரு)
இரவு பத்து மணி காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் முன்பு சென்னைக்கு செல்லும் டிராவல்ஸ் பஸ் நின்று கொண்டிருந்தது.

இடது புறத்தில் மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்த நான் யாரோ என்னை தாண்டி நடந்து செல்வதை உணர்ந்து எப்பொழுது கிளம்பும்? கேள்வியை வீசினேன்.
இப்ப கிளம்பிடும், ஒரு ‘பேசஜ்சருக்காக’ வெயிட் பண்ணுது. ஆண் குரல் சொல்லிக் கொண்டே என்னை தாண்டி சென்றது.
எனக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையை தடவி பார்த்தேன். ஒரு வேளை இந்த இடத்துக்கான பயணியாகவும் இருக்கலாம். பார்ப்போம்.
அந்த இரவிலும் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தேன். உறக்கம் கண்களில் நிறைந்திருந்தது. நாளை காலை சென்னையில் ஒரு வேலையை முடித்து மறு நாள் இரவு இதே பஸ்ஸில் கோயம்புத்தூர் திரும்ப வேண்டும்.
யாரோ ஏறி வரும் அரவம் கேட்ட்து. மெதுவான நடை என் காதுகளில் விழுந்தது கொலுசு சத்தம் ஆனால் மிக மென்மையாக பெண்ணாக இருக்கலாம்.. இதுதான் உங்க சீட், கூட வந்த கண்டக்டர் சொல்லியிருக்கலாம்.
என் அருகில் உட்காருவதும், “தேங்க்ஸ்” சொல்வதும் கேட்டது. குரலின் நளினம், மென்மை என்னை அப்படியே ஒரு நிமிசம் திரும்பி பார்க்க வைத்தது.
‘சாரி” உங்க தூக்கத்தை கெடுத்துட்டேனா? அந்த பெண் என்னை பார்த்து சொல்லியிருக்க வேண்டும், ஏனெனில் குரல் என்னை நோக்கி வந்ததை உணர்ந்து கொண்டேன்.
இட்ஸ் ஓகே பரவாயில்லை, நல்ல உட்கார்ந்துக்குங்க, நான் என் சீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டேன்.
மீண்டும் ஒரு தேங்க்ஸ் அவள் வாயிலிருந்து எனக்கு வந்தது.
பஸ் இப்பொழுது பீளமேட்டை தாண்டியிருக்கலாம், விரைந்து கொண்டிருந்தது. இனி எங்கும் நிற்காது இந்த பஸ். அடிக்கடி இதில் வருவதால் எனக்கு அத்துப்படி.
நீங்க சென்னைக்கா? பேச்சை ஆரம்பித்தேன்.
அந்த பெண் ஏதோ யோசித்து கொண்டிருக்க வேண்டும், இல்லை காதில் ஹெட்போன் போட்டு பாட்டை கேட்டு கொண்டிருக்க வேண்டும், சிறிது நேரம் கழித்தே எனக்கு பதில் சொன்னாள்.
யெஸ்..எனக்கு ஒரு செமினார் இருக்கு, வள்ளுவன் காலேஜூல, கூப்பிட்டிருக்காங்க.
குட், ஆங்கில வார்த்தையை உதிர்த்தேன். அவளிடமிருந்து மெல்லிய நறுமணம் என் நாசிக்குள் நுழைந்தது. அவளின் கூந்தலிருந்தா? என்ற கேள்வி என் மனதுக்குள் எழ சிரித்துக்கொண்டேன்.
இவள் இளமையான பெண்ணாய் இருக்கலாம், குரலும் அப்படித்தான் தெரிவிக்கிறது. என் திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் ஞாபகம் வந்தது.
நீங்க ? அந்த பெண்ணிடமிருந்து கேள்வி வர, மனதுக்குள் சட்டென ஒரு பரபரப்பு, என்னை பற்றி சொல்ல ஒரு வாய்ப்பு.. நான் அரசு தொழிற்கல்லூரியில் பேராசிரியராய் இருக்கிறேன். உறவினரை பார்க்க சென்னை செல்கிறேன். இப்பொழுது தமிழ் என் நாவில் விளையாண்டது. இன்னும் திருமணம் ஆகவில்லை (இது அவசியமா?) கொசுறாக இந்த தகவலை சொன்னேன். என் கண் பார்வை குறைவை ஏன் சொல்ல வேண்டும், இவளுடன் நட்பு தொடர்ந்தால் பிறகு சொல்லிக்கொள்ளலாம்.
கிரேட் சார். நீங்க ஒரு பேராசிரியரா? ஆனால் குரல் எதிராய் செல்வதாய் பட்டதால் அந்த பெண் என்னை பார்க்காமல் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தேன்.
சிறிது நேரம் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து, பின் அப்ப்டியே தூக்க நிலைக்கு போய் விட்டோம். அதாவது அந்த பெண் கண்ணயர்ந்து விட்டாள் என்பதை எந்த வித அசைவுகளும் அவளிடம் இல்லை என்பதால் ஊகித்து கொண்டேன். எனக்கு தூக்கம் வரவில்லை சில நேரங்களில் அவளின் கூந்தல் முடி என்னை உரசி செல்லும்போது மனதுக்குள் கனவுகள், கற்பனைகள், இருந்தும் அப்படியே நேரம் செல்ல செல்ல என்னை மறந்து….
ஏதோ அசைவுகளின் சர சரப்பு தெரிய விழிப்பு வந்து விட்ட்து. இருக்கைக்குள் தூக்க கலக்கத்தில் வளைந்திருந்த என் உடலை நிமிர்த்தி, கொட்டாவி விட்டேன். அப்பொழுதும் என் கண்ணாடியை கழட்டவில்லை. (என் குறை தெரிந்து விடுமோ)
தேங்க்ஸ் சார் அடுத்த ஸ்டாப்பில நான் இறங்க போறேன். சாரி மறுபடியும் உங்க தூக்கத்தை கலைச்சுட்டேன்.
அந்த பெண்ணின் மன்னிப்பை விட அவள் பிரிவு என்னை சங்கடப்படுத்தியது. இன்னும் அவளிடம் கொஞ்சம் பேசியிருக்கலாம், இருந்தும் பரவாயில்லை, சொல்லி வைத்தேன்.
அந்த பெண் எழுந்து முன்புறம் நடந்து செல்வது எனக்கு புரிந்தது.
கண்டக்டர் வாங்க மேடம் இங்கதான் நீங்க இறங்கணும், பார்த்து இறங்குங்க, அதோ உங்களை பிக்கப் பண்ணிக்க வர்றாங்க, சொல்வது எனக்கு காதில் விழுந்தது. இவனுக்கு தெரிந்த பெண்ணாய் இருக்கலாம், மனதுக்குள் முணங்கினேன்.
எல்லோரும் இறங்கிக்கலாம், கண்டக்டர் சொன்னவுடன் அனைவரும் இறங்க அடித்து பிடித்து என்னை தாண்டி செலவது எனக்கு உணர்த்தியது.மனிதர்கள் வித்தியாச மானவர்கள்தான். ஒரு மணி நேரம் சும்மா வேணும் ஒரு இடத்தில் காத்திருப்பார்கள், போவதானாலோ அல்லது இறங்குவதற்கோ ஐந்து நிமிடம் காத்திருப்பதற்குள் பொறுமை போய் விடுகிறது. மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
கடைசியாக இறங்குவதற்கு தயாரான என்னை வாங்க சார் பார்த்து வாங்க. இங்கதான் இறங்கணும், உங்க நண்பர் நின்று கிட்டிருக்காரு, மெதுவா இறங்குங்க, என்னை கூப்பிட்டான். இதே வார்த்தை இதற்கு முன்னாலும் சொன்னானே,
மடக்கி பைக்குள் திணித்திருந்த என் கைத்தடியை விரித்து எடுத்துக்கொண்டு மெல்ல பஸ்ஸை விட்டு இறங்க போனவன், ஏம்ப்பா என் பக்கத்துல உட்கார்ந்திருக்கற பொண்ணையும் இப்படித்தானே சொல்லி இறக்கி விட்டே?
ஆமா சார் அந்த பொண்ணுக்கும் உங்களை மாதிரி கண தெரியாது, அவங்க பேரண்ட்ஸ் அந்த இடத்துல பத்திரமா இறக்கி விட சொல்லிட்டு போனாங்க.
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |