அறிமுகம்
கதையாசிரியர்: தேவன் யாழ்ப்பாணம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 17, 2025
பார்வையிட்டோர்: 170
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் புகையிரத நிலையத்தில் வந்திறங்கியதும் கையில் என் பெட்டியை எடுத்துக்கொண்டேன். எத்தனையோ போர்ட்டர்கள் வந்து போரிட்டுப் பார்த்தார்கள். என் பெட்டி அதிக கனமானதல்ல. என் சரீரம் ஒற்றை நாடிதான். ஆனால் என் பெட்டியைத் தூக்குவதற்கு வேண்டிய வலு என்னிடமிருந்தது. மேலும் நான் பெட்டி சுமப்பது அநாகரீகம் என்று கருதுபவனல்ல. ஆகவே நடக்க ஆரம்பித்தேன். அதி காலையானபடியால் வீதியின் நடமாட்டமேயிருக்க வில்லை. கடைகள் அப்பொழுதுதான் திறக்கப் படலாயின. கடைக்காரர் பார்வைக்கு வைக்கும் விளம்பரப் பொருள்களை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் கடை வாயிலைக் கூட்டித் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் உள்ளே சாம்பிராணிப் புகை காட்டிக்கொண்டிருந்தார்கள். இரைச்சல், சந்தடி, அமளி, தூசி, புழுதி எல்லாமாகக் குமைந்து தலைவலியைப் பகல் வேளையில் உண்டாக்கும் வீதி, தூக்கத்திலிருந்து விழிக்கும் காட்சி அழகாயிருந்தது. மெல்லிய தூறல் சற்று முன்பு பெய்திருக்க வேண்டும். வீதி நனைந்திருந்தது. எவ்வளவு காலத்துக்கு இங்கே நிலைத்திருக் கப்போகிறனோ என்று யோசித்தவாறு போய்க்கொண்டிருந் தேன். நான் தங்குவதற்கு ஒழுங்கு பண்ணியிருந்த ஹோட்டல் புகையிரத நிலையத்துக்கு எதிரே போகும் வீதியில் இருநூறு யார் தூரத்திலிருப்பதாக முன்னரே அறிந்திருந்தேன். ஆகவே பெயர்ப் பலகைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.
பின்னால் யாரோ ஓடி வருவதுபோற் சத்தம் கேட்டது. “ஐயா, பத்திரிகை வேண்டுமா?” என்று கூவிக்கொண்டு ஒரு பையன் ஓடிவந்தான்.
“உனக்கு விஜயலதா ஹோட்டல் எங்கேயிருக்கிறதென்று தெரியுமா?” என்று கேட்டேன்.
“அதோ தெரிகிற மூன்றாவது கட்டிடம்” என்று ஒன்றைத் காண்பித்தான். அது காலை வெளியாகும் ஓர் ஆங்கிலத் தினசரி
“ஒன்றைத் தா” என்று பணத்தைக் கொடுத்து வாங்கிக் கொண்டேன். அது காலை வெளியாகும் ஒர் ஆங்கிலத் தினசரி.
“என் பின்னாலேயே வாருங்கள்…நான் அங்கே தான் போகிறேன்” என்று கூறிக்கொண்டு முன்னால் நடக்க ஆரம்பித்தான். நான் பின்தொடர்ந்தேன். “நீங்கள் இந்த ஊருக்குப் புதிசு போல இருக்கு” என்று பேச ஆரம்பித்தான். “ஊம்” என்றேன், அதிகம் பேச விருப்பமில்லாதவன்போல, “ஏன் ஐயா, ஏதாவது இங்கே உத்தியோகமாக வந்திருக்கிறீர்களா? அல்லது யாரை யாவது பார்க்கவேண்டுமா?” என்று கேட்டான். வாய் கொஞ்சம் அகலமான பேர்வழி, தப்பமுடியாது என்பதை ஊகித்துக்கொண்டேன்.
“இங்கேயுள்ள ஆங்கிலக் கல்லூரியில் ஆசிரிய பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன்.” என்றேன். நடந்து கொண்டே போனவன் “டக்”கென்று நின்றான். திரும்பி என் முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.
“நீங்கள் தானா ஐயா அது? பத்திரிகைகளிற் கூடக் கதை எழுதுவீர்களாமே. இதெல்லாம் சென்றவாரப் பத்திரிகை யொன்றில் வெளியாகியிருந்தது… உங்கள் கதைகளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றான். முகஸ்துதியாகச் சொல்லி யிருப்பான் என்று நினைத்தேன். என் கதைகளுக்கும் கட்டுரை களுக்கும் நாவல்களுக்கும் பத்திரிகைக்காரர்களுடைய விமர் சனத்துக்காக நான் தவம் கிடப்பதில்லை. என்னுடைய மொழி பெயர்ப்பு நாவல் ஒன்று வெளிவந்ததிலிருந்து எனக்கு விமர் சகர்களைப்பற்றி ஓர் அபிப்பிராயம் வேரூன்றி விட்டது. அதாவது இரண்டொரு பத்திரிகைகளின் விமர்சர்களைத் தவிர மற்றவர்கள் நூலையே படிக்காமல் மதிப்புரை எழுதுகிறார்கள் என்பதுதான். அந்த நூலில் ஆங்கிலப் பெயர்களுக்குப் பதிலாகத் தமிழ்ப் பெயர்களைப் போட்டிருந்தேன். படிக்கும் பொழுது அன்னிய பெயர்கள் தடங்கலாக இருப்பது என் அனு பவம். பல்லுடைக்கும் உச்சரிப்புக்களைத் தவிர்க்கப் பெயர் மாற்றங்கள் செய்தேன். அப்படிச் செய்யும்பொழுது ஓசை ஒற்றுமையுள்ள தமிழ்ப் பெயர்களையே உபயோகித்தேன். வர வேற்பார்கள் என்ற நம்பிக்கையில் வேறு யாரோ ஓர் ஆசிரியர் முன்னரே கையாண்ட வழி என்ற நம்பிக்கையில் ஒரு விமர்சகர் என் முன்னுரையையும் முதல் பக்கத்தையும் மட்டும் படித்து விட்டு என்மீது கூசாமற் குறை கூற ஆரம்பித்துவிட்டார். என் துர திர்ஷ்டம் அக்கதையின் முதல் பக்கத்திலேயே மதுபானக் காட்சி ஒன்று வருகிறது. விமர்சகருக்கு அது பிடிக்கவில்லை. தமிழ்ப் பண்பாட்டுக்கும் தமிழர் நாகரீகத்துக்கும் கலாசாரத்துக்கும் இழுக்குத் தேடிவிட்டேன் என்று தீர்ப்பளித்து விட்டார். மூல நூலைப் பாழ்படுத்திவிட்டேன். என் கதையே ஒரு இரண்டுங் கெட்டான் என்று தாக்கினார். அன்றிலிருந்து சாதாரண மக்கள், தெருவில் போகிறவர்கள் கூறும் அபிப்பிராயமே உண்மையான தென வரவேற்பவனாகிவிட்டேன், ஆனால் இப்படி ஒரு பத்திரிகைகாரப் பையன் எனக்கு நற்சாட்சிப் பத்திரம் கொடுப்பது இதுதான் முதல் தடவை. இவன் என் கதைகளை எங்கே படித்திருக்கப் போகிறான் என்றுதான் எனக்குத் தோன் றியது. மேலே நடக்க ஆரம்பித்தோம். “ஐயா, நீங்கள் போகிற கல்லூரியிலுள்ள தமிழாசிரியருக்கு மட்டும் உங்கள் கதைகள் பிடிக்காது. நீங்கள் இங்கு வருவதாகப் பத்திரிகையிற் படித்த அன்று அவரிடம் விசாரித்தேன். “இப்படிப்பட்டவர்களால்தான் தமிழ் வளரமாட்டேன் என்கிறது. ஆங்கிலமும் அதிகம் படிக்கா மல், தமிழையும் அதிகம் கற்காமல் மொழியைக் கொலை பண்ணித் தள்ளும் பணியைச் செய்கிறார்கள். எல்லோருக்கும் விளங்கக்கூடிய தமிழ் என்று அன்னிய மொழிச் சொற்களைப் புகுத்தித் தொலைக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார். “பண்டி தர்களென்றால் தமிழ் தங்கள் பரம்பரைச் சொத்து என்று நினைத்துக்கொள்கிறார்கள்.” என்றான். ஹோட்டலை அடைந்து மனேஜரிடம் பேசி, எனக்கு ஒதுக்கப்பட்ட அறைத் திறப்பை வாங்கி வரும்வரை அவன் அங்கேயே தங்கி நின்றான். நான் மாடிப் படிவழியே ஏறும்பொழுது “உங்களுக்குத் தினமும் பத்திரிகை கொண்டுவந்து கொடுக்கட்டுமா, ஸார்?” என்றான்.
“சரி” என்றேன். என் அறை நம்பரைக் கேட்டுக்கொண்டு போய்விட்டான்.
என் மனக் கண்முன்னால் இவ்வளவும் ஓடி மறைந்தது. இப்படி அறிமுகமானவன் எப்படியெல்லாமோ என்னோடு பழகி “அண்ணா! அண்ணா!” என்று என்னைச் சுற்றித்திரிய ஆரம்பித் தான். நீ என்று என்னோடு பேசுகிற அளவுக்கு மாறினான். நானும் அவனை என் “தம்பி” என்றே கூப்பிடத் தலைப்பட்டேன். ஏழு மாதங்களாக இப்படி இருந்து வந்த தொடர்பில் ஒரு நாள் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டது. அழுகையோடு அவன் தன் கதை முழுவதையும் சொன்னான். அப்போது தான் அவன் தொடர்பு அற்றுப்போயிருந்த என் தந்தையின் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு மைத்துனன் என்பது தெரியவந்தது. தன் தகப்பனாரோடு சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடியவன் அவன் என்று தெரிந்ததும் என் வீட்டில் தங்க இடம் கொடுத்தேன். ஹோட்டலில் கொஞ்சக்காலம் இருந்த எனக்கு அமைதி வேண்டி யிருந்தபடியால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். அவன் என் வீட்டுக்கு வந்து இப்போது இரண்டு வருஷங்களா கின்றன. அவனைப்போலச் சுவையாகச் சம்பாஷணை செய்யத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால் வாழ்க்கையில் வெறுப்பே தோன்றாது. அவன் கூட இருப்பவர்களின் நாட்டத் தைத் தெரிந்து அதற்கு ஏற்றவாறு பேசுவதிற் சமர்த்தன். அவனுக்குத் தெரியாத விஷயமே கிடையாது எனத் தோன்றும். சமீபத்துக் கொலை வழக்குகளைப் பற்றி உரையாடுவான். தேர்தல் வழக்குகளைப்பற்றி விரிவாகக் கூறுவான். முப்பரி மாண சலனப் படங்களின் நுணுக்கங்களை விளக்குவான். திரா விடக் கழக இயக்கத்தின் போக்கை விபரிப்பான். சினிமாப் படங் களைப்பற்றி அபிப்பிராயங் கூறுவான். கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றிப் பேசுவான். பறக்கும் தட்டுக்களைப்பற்றி ஆராய்ச்சி செய்வான். அவனோடு நன்றாகப் பழகியபிறகுதான் அவன் என் கதைகளைப் பற்றிச் சொன்ன அபிப்பிராயம் சும்மா முகஸ் துதிக்காகச் சொன்னதல்ல என்று தெரிந்தது. என் கதாபாத்திரங் களைப்பற்றி அவன் அடிக்கடி பேசும் பொழுது எனக்கே சில சமயம் நான் சிருஷ்டித்த பிரகிருதிகள்தானா இவர்கள் என்று தோன்றிவிடும். அவ்வளவு தூரம் அவன் தான் படிப்பதைக் கிரகித்து நினைவில் வைத்திருந்தான். என்மீது இவ்வளவு அன்பு ஆரம்பத்தில் பிறந்ததற்குக் காரணம் என் கதைகள்மீது இருந்த மோகம்தானோ என்றுகூட நினைத்திருக்கிறேன். இல்லாம லென்ன? கதைகளைப் பிடித்திருந்தால் கதாசிரியனையும் பிடிக் கும் கதாசிரியனை நமக்குப் பிடித்திருந்தால் அவன் கதைகளை யும் புகழத் தோன்றும். இது மனித இயற்கை தானே?
அவன் என்னோடு வசிக்க வந்தபிறகு அவன் கேட்டுக் கொண்டபடி நல்ல உத்தியோகம் ஒன்று பார்த்துக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தேன். அவனுடைய பிறப்புப் பத்திரம் அவனுடைய தகப்பனார் கையிலிருந்து எனக்குக் கிடைக்காது என்பது தெரிந்ததும் நேரே மலாயாவிலிருந்த என் நண்பர் களுக்கு எழுதி அவனுடைய பிறப்புப் பத்திரப் பிரதி ஒன்று எடுத்துக் கொடுத்தேன். அவன் இலங்கைக் குடி என்று பதிவு செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண் டேன். அன்னியரை நாடு கடத்துவதற்காகப் பிறந்த சட்டம் சொந்த நாட்டவரையே பிறநாட்டில் பிறந்த தோஷத்துக்காகத் தொல்லை கொடுத்தது. அது பற்றிக் கடிதப் போக்குவரத்துச் சதா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இடையிலே எனக்குத் தெரிந்த ஒரு கம்பனியில் “கிளாக்” வேலை பார்த்துக் கொடுத் தேன். ஒருநாள் என்னிடம் வந்து “அண்ணா! நான் நாளைக்கே வேலையை விடுங் கடிதம் எழுதிக்கொடுத்து, உத்தியோகத் துக்கு ஒரு முழுக்குப் போடப்போகிறேன்.” என்றான். ஏன் அப்படி என்று விசாரித்ததில் அவன் மனேஜரோடு ஏதோ வாக்கு வாதம் செய்ய நேரிட்டதாம். அவர் ஏறுக்கு மாறாகப் பேசினா ராம். இவனுக்கு ரோஷம் வந்து விட்டதாம். நான் “என் பெயரைக் கெடுத்துவிடாதே, உனக்காக அவரிடம் கெஞ்சி வாங்கிக்கொடுத்தது நல்லதாக ஏதாவது கிடைத்தபிறகு இதை விட்டுவிடலாம். இங்கேயிருப்பதால் உனக்கு நன்மைகள் பல உண்டு.
“டைப்பிங்” வேறு அங்கே கற்றுக்கொண்டு வருகிறாய்” என்றெல்லாம் சொன்னதன்பேரில் தணிந்து மறுநாள் வேலைக்குப் புறப்பட்டான். இப்படியே பழைய காலச் சிந்தனை களில் மூழ்கியிருந்த சமயம் என் தம்பி வந்தான். வருகிற பொழுதே “அண்ணா, அவர் பல்லைத் தட்டிக் கையிற் கொடுத் திருப்பேன். ஏதோ மரியாதைக்காகப் பார்த்தேன்.” என்று ‘சொல்லிக்கொண்டு வந்தான்.
“ஏன்? யார் அவர்?” என்று நான் கேட்டதற்கு “அவர்தான் உன் கல்லூரியில் தமிழ்ப் புலவராயிருக்கிறாரே, அந்த மகானு பாவன்தான், என் அக்காளையும், உன்னையும் பற்றி ஏதோ கேள்விப்பட்டாராம். சென்றவாரம் வெளிவந்த உன் “அந்த மோதிரம்” என்ற கதையில் சகுந்தலை என்ற பாத்திரம் உண்மை யாகவே என் அக்காளாய்த்தானிருக்க வேண்டுமாம். நீ கூட முன்னைப் போலில்லையாம். நீ எழுதிய அந்தக் கதை உன் சொந்த அனுபவமாய்த்தானிருக்க வேண்டுமாம். என்னிடமே வந்து அளக்க ஆரம்பித்து விட்டார். ஊர் வம்பும் வதந்தியும் எப்படி உற்பத்தியாகின்றன. பார்த்தாயா? இவருக்கு ஏண்ணா, இந்த வேலை?” என்று படபடப்பாக ஆத்திரத்தோடு கூறினான்.
என் நெஞ்சு துணுக்குற்றது!
– தை 1956, கேட்டதும் நடந்ததும்.
– தேவன் யாழ்ப்பாணம் சிறுகதைகள், முதல் பதிப்பு: மே 2004, யாழ் இலக்கியவட்டம், யாழ்பாணம்.