அறிந்தா அறியாமலா
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன மிஸ்டர் அறிவூற்று. அடுத்தவாரம் நிறைவேற்ற இருக்கிற தண்டனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. செய்யாத தவற்றுக்குத் தண்டனை என்பதை எண்ணித்தான் வருத்தப்படுகிறேன். நான் செய்த பாவம் ஒன்று உண்டு. அந்தச் செல்லம் ஸ்டோர் முதலாளியை விட்டு வெளியே வந்தது; அவர் மனத்தைப் புண்படுத்தியது தான் நான் செய்த பாவங்களில் மிகக் கொடியது.”
“நீங்கள் சில தகவல்களை வெளிப்படையாகச் சொன்னால், இப்போதும்கூட அதிபரிடம் கருணை மனு போட்டு உங்களைக் காப்பாற்ற வழியிருக்கிறது.”
“நான் எங்கள் இஷ்ட தெய்வத்திற்கு முன்பு சத்தியம் செய்து கொடுத்துவிட்டேன். அதை மீறுவது பாவம்.”
“எது பாவம்? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அவன் சூழ்ச்சி செய்து உங்களை மாட்டிவிட்டுத் தப்பித்து விட்டானே; அது பாவம் இல்லையா? அவனைக் காட்டிக் கொடுப்பதும், தவறு செய்த அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டுச் செய்யாத தவற்றுக்குத் தண்டனை அனுபவிக்காமல் நீங்கள் வெளியே வருவதும்தானே தருமம்.”
“நீங்கள் என்ன என்ன சொன்னாலும் என் மனம் கேட்காது. அந்தச் செல்லம் ஸ்டோர் முதலாளி சொல்லியே கேட்காதது என் மனம்.”
“அடிக்கடி செல்லம் ஸ்டோர்… செல்லம் ஸ்டோர் என்கிறீங்களே. அங்கே என்னாச்சுது?” என்று அந்தத் தொண்டூழியர்கள் நச்சரிக்கத் தொடங்கியவுடன், அறிவூற்றுச் சிறையில், காவலுக்கு நின்றவர்கள் அனுமதியுடன் சொல்லத் தொடங்கினான்.
அடுத்த வாரம் அவனுக்குத் தூக்குத் தண்டனை. அவன் மனம் என்ன பாடுபடும்? ஆனால், நிதானமாக, எல்லாவற்றையும் உள்ளடக்கியே ஆரம்பித்தான்.
“சா…நான் தமிழகத்திலிருந்தபோது என் மனைவி சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வருவாள். அவள் தெய்வ நம்பிக்கை மிக்கவள். நான் அப்படியொன்றும் பெரிய நம்பிக்கை யெல்லாம் இல்லாதவன். அவள் வந்தால் திருப்பதி செல்லாமல் வரமாட்டாள். நான்தான் மன்னார்குடியிலிருந்து, திருப்பதிக்கு அழைத்துச் சென்று, சாமிதரிசனம் செய்ய வைத்து அழைத்து வருவேன். குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தவள், இடையில் ஒருமுறை, தனியே வந்தாள். கூட யாரும் வரவில்லையே என்று விசாரித்தேன். ‘நீங்கள்தான் கூட இருக்கிறீர்களே’ என்றாள். எங்கள் டிராவல்ஸ் கம்பெனியில் வேறு டிரைவரைப் போட்டு அனுப்ப ஏற்பாடு செய்தால் முடியாது என்று சொல்லிவிட்டு, நான் வரும் வரையில் காத்திருப்பாள். ஏனென்று கேட்டால், அறிவூற்றுதான் எனக்கு ஏற்ற, பாதுகாப்பான டிரைவர், எனக்குப் பிடித்த டிரைவர் என்று சொல்லி என்னை அழைத்துக் கொண்டு திருப்பதிக்குப் போவாள். முன் சீட்டில் என் அருகிலேயே உட்கார்ந்து கொள்வாள். வண்டி ஒரு பக்கம் சாய்ந்தால் என்மீது சாய்வாள். நானும் ஒரு ஆம்பிளைதானே! எனக்கும் சபலம் தட்டியது. திருப்பதி சென்றோம் அறை எடுத்துத் தங்கினோம். நான் சாமியிடம் வேண்டிக் கொண்டேன்.
‘சாமி நீ இருப்பது உண்மையானால் என் மீது ஆசைப்படுவதுபோல் தோன்றும் அவள் எனக்குக் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டேன். அதேபோல் தனித் தனிப் படுக்கையில் படுத்திருந்தோம். அவள் படுக்கையில் கரப்பான் பூச்சியைப் பார்த்துவிட்டுப் பயந்துவிட்டாள். எழுந்து தட்டிவிட்டு, என் படுக்கையுடன் அவள் படுக்கையை நகர்த்திப் போட்டுப் படுத்துக்கொண்டாள்.
விடிந்ததும் தலை குளித்துவிட்டு என்னைப் பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டே மறைந்தும் நெளிந்தும் நடக்க ஆரம்பித்தாள். நானும் சாமி தரிசனத்திற்கு முதன் முதலாகப் புறப்பட்டேன். காரணம் நேற்று இரவு சாமி இருக்கிறார் என்று நிரூபித்துவிட்டாரே. இனி நம்பவேண்டியதுதான். என்று முடிவெடுத்தேன்.
மூலவிக்கிரஹத்தினருகே நின்று வேண்டியபோது ‘அவள் எனக்கு மனைவியாகவும் வேண்டும்’, என்று வேண்டிக் கொண்டேன்.
நாளடைவில் எங்கள் காதலும் வளர்ந்தது. அவளோ சிங்கப்பூர். நானோ பட்டிக்காடு. அவளோ நல்ல படிப்பாளி. நானோ அவ்வளவாகப் படிக்காதவன். நான் அந்த நாட்டில் தங்க முடியாது. அவள் எங்கள் நாட்டில் தங்கிவிட்டால் வறுமையில் மூழ்க வேண்டியதுதான். இப்படி எந்தப் பொருத்தமும் இல்லாமல் எங்கள் திருமணம் ஆண்டவன் சன்னதியில் நடந்தேறியது. ஆண்டவன் அனுக்கிரஹம் இல்லாவிட்டால் அப்படியொரு இணைப்பு ஏற்பட்டிருக்குமா?
இந்த நிலையில் சிங்கப்பூருக்குப் பலமுறை டிராவலில் வந்தேன். மனைவியுடன் தங்கிக்கொண்டு ஆண்டவனை வேண்டி வேலை தேடும் படலத்தைச் செய்தேன். நான்காண்டுகள் ஆகியும் படிப்பறிவு இல்லாததால் வேலை கிடைக்கவில்லை. இறைவனுடைய கண் திறக்கப்படவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இடையிடையே ஏற்படும் பிரிவு எங்களைப் பெரிதும் வாட்டியது. இதிலே பார்த்து ஆண்டவன் ஒரு குழந்தையை வேறு கொடுத்துவிட்டான்.
ஆண்டவன் ஏன் என்னைச் சோதனைச் செய்கிறான் என்று நினைத்துக்கொண்டே வழக்கம் போல் கடை கடையாக ஏறியிறங்கும்போதுதான் செல்லம் ஸ்டோர் சென்றேன். அது ஒரு மளிகைக் கடை. அந்த முதலாளி மிகவும் நல்லவர். வேலை யாள்களை அணைத்துப் போகும் தன்மையோடு, மாதம் கடைசி நாளே சம்பளத்தை ஒழுங்காகக் கொடுக்கக்கூடிய அன்பானவர். சிங்கப்பூரில் செல்லம் ஸ்டோர் என்றால் நாணயத்திற்குப் பெயர் பெற்ற கடை. அவரிடம் நிலைமையைச் சொன்னேன்.
‘எங்களுக்கும் டிரைவர் தேவைப்படுகிறது. உனக்கு டிரைவிங் தெரியும் என்கிறாய். இந்த ஊர்ப் பெண்ணைத் திருமணம் செய்திருப்பதை அடிப்படையாக வைத்து, எங்கள் ஆடிட்டர் மூலம் முயற்சி செய்கிறேன்’ என்று சொன்னார். மறுநாள் நானும் என் மனைவியும் சென்று பாஸ்போர்ட், இங்கும் பதிவு செய்திருந்த திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்ற எல்லாவற்றையும் கொடுத்தோம்.
அவரும் வாங்கிக்கொண்டு மனுச் செய்தார்.
பத்தே நாள்களில் வேலை செய்யும் அனுமதி கிடைத்தது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லாத சிங்கப்பூரில் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும் அர்ச்சனை செய்தோம். என் இந்திய இண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூரில் மாற்றிக் கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு, செல்லம் ஸ்டோர் டெலிவரி வேனுக்கு டிரைவராகப் பணியில் சேர்ந்து, அந்த நன்றி விசுவாசத்துடன் ஒழுங்காகவும், உண்மையாகவும் வேலை செய்தேன். என் உண்மையை அந்த முதலாளியே பாராட்டுவார். பணிவு, அன்பு, கடமை, நேர்மை இவற்றையெல்லாம் அவர் பலமுறை சொல்லி, என்னையும் அவர் பிள்ளைபோல் பாவித்து வந்தார்.
இப்படியாக இரண்டு ஆண்டுகள், போன பின்பு, நிரந்தரவாசிக்கு மனுச்செய்ய வேண்டினேன். அவர் கொஞ்சம் யோசித்தார். காரணம் எனக்கு முன்பு, இதேபோல் ஒருவருக்கு, நிரந்தரக் குடியுரிமை வாங்கிக் கொடுத்தவுடன், வேறு கடைக்குச் சென்றுவிட்டார். ‘அதைக் காரணம் காட்டி எனக்கு மாட்டேன் என்று சொல்லிடாதீர்கள். நான் கடவுளுக்குப் பயந்தவன். உங்களுக்குத் துரோகம் செய்யமாட்டேன். என்னைப் ‘போ’ என்று சொன்னால்கூட உங்களை விட்டுப் போகமாட்டேன்’ என்றெல்லாம் உறுதி சொல்லிய பின்பு மனுவில் கையெழுத்துப் போட்டார். நீங்கள் நம்பமாட்டீர்கள். இரண்டு மாதத்தில் நிரந்தரக் குடியுரிமையும் கிடைத்துவிட்டது. நான் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிப் பணியில் தொடர்ந்தேன். ஒழுங்காகத்தான் செய்து கொண்டு வந்தேன். மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழா வந்தது. நான் லீவு கேட்டேன். ஏனென்றால் விரதம் இருந்து தீயில் இறங்கப் போகிறேன்.
அதற்கு அவர் பதில் சொன்னார்.
“ஏம்பா… இது தீபாவளி சீசன். டெலிவரி ஆர்டர்கள் நிறைய இருக்கிறது. தொழில் முக்கியமா? தெய்வம் முக்கியமா? அரைநாள் லீவு எடுத்தாலும் பரவாயில்லை. முழுநாளும் லீவு எடுத்தால், நீயில்லாமல் வேன் ஓடுமா? உனக்குப் பதிலாக வேறொரு டிரைவரை மாற்று ஏற்பாடாவது செய்திருக்கலாம். அதுவும் இல்லை. தினந்தோறும், சாப்பாட்டுக் கடைகளுக்கு டெலிவரி செய்யும் சாமான்களை எப்படிக் கொடுப்பது? ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க. ஆண்டவன்கிட்டே நீ போயிதான் இடம் பிடிக்கணும் என்று இல்லை. நீ உன் மனசிலே மாசு இல்லாம இருந்தா, உன்கிட்டே ஆண்டவன் வந்துடுவான்.’ என்றெல்லம் எனக்கு எனக்கு எடுத்துச் சொன்னார். எனக்குத்தான் பி.ஆர் கிடைச்சிடுச்சே. என்னை அறியாமல் அந்தத் திமிரில் எனக்குக் கோபம் வந்துவிட்டது. தெய்வத்தைவிட தொழில் முக்கியம் இல்லை. இந்த வேலையில்லாவிட்டால் இன்னொரு வேலை என்று சொல்லி வெளியேறிவிட்டேன். அவருக்கு இறைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாத தனால், என்னையும் கோவிலுக்குப் போக வேண்டாமென்று சொல்லலாமா? என்று அவர்மீது கோபம் வந்தது.
தீமிதித்தலை முடித்தேன். மறுநாளே தெய்வ பக்தர் ஒருவரிடம் சென்றேன். செல்லம் ஸ்டோரில் டிரைவராக இருந்தபோது அவருக்காகப் பெருமாள் கோவிலுக்கு உபயமாக நிறைய மளிகைச் சாமான்களைக் கொண்டுபோய் இறக்கியிருக்கிறேன். பார்ப்பதற்குச் சிவப்பழமாகக் காட்சியளிப்பார். என்ன பக்தி! என்ன தாரள நன்கொடை. அவர் என்னைப் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு, வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். சிறிது நாள்களில் என் பெயரிலேயே ஒரு பழைய காரை வாங்கினார். ‘ஏன் முதலாளி என் பெயரில்’ என்றேன். ‘பரவாயில்லைப்பா. நீயும் வீட்டுக்குப் போக வர, உன் குடும்பத்தை லீவு நாள்ளே அழைத்துக்கொண்டு வெளியில் போக, வர பயன்படுவதோடு, ஆபீஸ் வேலையையும் பார்த்துக் கொள்ளப் பயன்படட்டுமே. ஏற்கெனவே என் பெயரிலே மூன்று கார் இருக்கிறது. கணக்குக் கொடுக்கவும் வசதியாயிருக்கும் என்று சொல்லிவிட்டு, ‘உன் இஷ்ட தெய்வம் எது என்று கேட்டார். நான் ‘லயன்சிட்டி விநாயகர்’ என்றேன்.
ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். நானும் மகிழ்ச்சியாகச் சென்றேன். விநாயகருக்கு இலட்சார்ச்சனை யெல்லாம் செய்துவிட்டு, சன்னதியில் உட்கார்ந்து என்னிடம் கேட்டார்.
“அறிவூற்று! நீ ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.” என்றார்.
‘என்ன’ என்று கேட்டேன். இந்தக் கார் நான் வாங்கிக் கொடுத்தது என்று யாரிடமும் சொல்லக் கூடாது. எந்த நேரத்திலும், எந்த இக்கட்டான நிலை வந்தால் கூட என்னைச் சொல்லக்கூடாது. நீயே சம்பாதித்து, வாங்கியதாகச் சொல்ல வேண்டும். இந்தக் கார் மூலம் டிரான்ஸ்போட் செய்யும் எந்தத் தொழிலையும் என்னுடையது என்று அதேபோல சொல்லக்கூடாது. உன்னையும் ஒரு பார்ட்னர் போல நான் பாவிப்பேன். அதற்கான கூடுதல் சம்பளத்தைக் கொடுத்துவிடுவேன். சரியென்றால் இந்த உன் இஷ்டதெய்வத்தின் முன் சத்தியம் செய்து கொடு’ என்றார். நானும் அப்படியே செய்து கொடுத்தேன்.
எனக்கும் வேலை கஷ்டம் இல்லை. ஜோகூர் செல்வேன். இங்கு ஏர்போட் என்று பல இடங்களுக்குச் செல்வேன். காரைக் கொண்டுபோய்த் துறைமுகத்திற்கருகே நிறுத்திவிட்டுப் பாலிக்குச் சிறு கப்பல் மூலம் சென்று சில தஸ்தாவேஜுகளைக் கொடுத்துவிட்டு அன்றே திரும்பிவிடுவேன். சில இடங்களுக்குச் செல்லும் போது என் மனைவியையும் கூப்பிடுவேன். அவள் வர மறுத்துவிடுவாள். அவளுக்கு மட்டும் இந்த வேலை நிரந்தரமாகத் தோன்ற வில்லையென்று சொல்லிக் கொண்டே யிருப்பாள்.
ஒருநாள் சாங்கி விமான நிலையத்திற்கு அனுப்பினார். ‘நீ அங்கு டெர்மினல் டூ கார் பார்க்கிலே உன் காரைப் பார்க் செய்துவிட்டு, உன் கைத்தொலைபேசியை ஆன் செய்துவிட்டு உட்கார்ந்து கிட்டு இரு. அடுத்து நீ என்ன செய்யணும் என்று அப்போது சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். நானும் வழக்கம்போல் அப்படியே செய்தேன்.
அங்கு நான் காரிலேயே உட்கார்ந்திருந்தபோது போன் வந்தது. ‘இப்போது உன் கார் எதிரே உள்ள பெஞ்ச்சில் புளு கோட் போட்ட உயரமான 50 வயது மதிக்கத்தக்கவர் உட்கார்ந்திருக்கிறாரா? ‘ஆம்’ என்றேன். உன் கார் பின்னால் உள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு போய் அவர் அருகில் வைத்துவிட்டு உட்கார். அதன் பிறகு அவர் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தால், பெட்டியை எடுக்காமல் எழுந்து வந்துவிடு என்றார். நானும் முதலாளி சொன்னபடி பின்னால் இருந்த டிக்கியைத் திறந்து பெட்டியை எடுத்தேன். உடனே இரண்டு போலீஸ்காரர்கள், நாயுடன் வந்து என் பெட்டியைக் கைப்பற்றினார்கள்.
“அந்தப் பெட்டிக்குள் என்ன இருந்தது என்று உங்களுக்குத் தெரியாதா?” தொண்டூழியர் கேட்டார்.
பைல்கள், பேப்பர்கள், புத்தகங்கள்தானிருக் கின்றன என்று எப்போதும் சொல்வார். பெட்டியை எப்போதும் நான் திறக்கக்கூடாது என்று சொல்வார். அப்படிதான் இருக்கும் என்றிருந்தேன்.
“அந்த நபரையும் கைது செய்தார்களா?” “போலீஸ் என்னருகே வந்தவுடன், திரும்பிப் பார்த்தேன் அவர் அங்கு இல்லை.’
“உங்களைப் போலீஸ் என்ன கேட்டது?”
இந்தக் கார் உன்னுடையதா? இந்தப் பெட்டி உன்னுடையதா? என்று கேட்கப்பட்டது. நான் ‘ஆம்’ என்று சொன்னேன். பெட்டியைத் திறந்தார்கள். பிளாஸ்டிக் டப்பாக்களாக இருந்தன. நாய் மோப்பம் பிடித்து டப்பாக்களைக் கவ்வியது. ‘யார் உன்னிடம் கொடுத்தார்கள்? எங்கே வாங்கினாய்’ போன்ற விவரங்களையெல்லாம் கேட்டார்கள்.
உடனே லைன்சிட்டி விநாயகர் கோவிலில் முதலாளி வாங்கிய சத்தியம் நினைவுக்கு வந்தது. அவை என்ன என்றும், அதன் பின்விளைவு தெரியாமல் என்னுடையதுதான். நானே கொண்டு வந்தேன் யாரும் என்னிடம் கொடுக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.
பிறகுதான் எல்லாமே தெரிந்தது; அதனுள் போதைப் பொருள்கள் இருந்ததாம். அதன்பிறகு கேஸ், கோர்ட், தண்டனை எல்லாமே தங்களுக்குத் தெரியுமே.”
“எங்களிடம் சொல்லியதையாவது போலீஸில் சொன்னீர்களா?”
“இல்லை! அடுத்த வாரம் நான் சாகப்போகிறேன். இனி என்ன இருக்கிறது. என்ன… நான் முன்னால் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வரப்போகிறீர்கள். உடம்புக்குதானே அழிவு. என் எண்ணத்திற்கு, என் கொள்கைக்கு வெற்றிதானே!”
“எப்படிச் சொல்கிறீர்கள்?”
“நேற்று இரவு ஆண்டவன் கனவில் தோன்றி, என்னைச் சொர்க்கத்திற்கு அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டான். அதுபோதும். என் உண்மைக்கும்; என் பக்திக்கும் கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன்.’
“நீங்கள் பிடிவாதமாக இருப்பதால் உங்களின் இறுதிக் காலத்தில் உங்கள் மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை. நாங்கள் புறப்படுகிறோம். நேராக உங்கள் மனைவியிடமாவது சொல்லிக் கருணை மனுவுக்கு முயற்சிக்கலாமா என்று பார்க்கிறோம்” என்று சொல்லித் தொண்டூழியர்கள் இருவரும் புறப்பட்டனர்.
வீட்டிற்குள் சென்ற தொண்டூழியர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்கள் எதிர்பார்த்துச் சென்ற சோகக்களை எதையும் அறிவூற்றின் மனைவி முகத்தில் பார்க்க முடியவில்லை.
தொண்டூழியர்ள் தாங்கள் வந்ததன் காரணத் தையும், கருணை மனுப் போட வேண்டிய அவசியத் தையும் முறையையும் எடுத்துச் சொன்னார்கள்.
அவள் சிரித்தாள். இதனுடனாவது என்னை விட்டாரே; என்னையும் உடன் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லாமல், உங்களுக்கு முன்பே எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தேன். கருணை மனுவுக்கு, நீங்கள் உண்மையைச் சொன்னால்தான் முடியும். ஒத்துழைத்தால்தான் முடியும் என்றெல்லாம் அழுது கேட்டுப் பார்த்தேன். சாமிக்கு முன்பு சத்தியம் செய்து கொடுத்துவிட்டேன். அவரைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று என் அரிச்சந்திர மகாராஜா மறுத்துவிட்டார்.
நானும் சென்று, அந்தச் சிவப்பழத்தையும் தேடிப்பார்த்தேன். அந்த அயோக்கியன் தன் பெயர், முகவரி எதையும் தெரியாமலே வைத்து இருந்து, அநேகமாக வெளிநாடு தப்பியிருக்க வேண்டும். இவன்தான் நல்லவனாம். ஏனென்றால் ‘கடவுள் பக்தன்’ என்கிறார். இவருக்குப் போய் ‘அறிவூற்று’ என்று இவர்கள் பெற்றோர்கள் பெயர் வைத்திருக்கிறார்களே, அதுதான் பெரிய கூத்து. இப்போது நான் ஏன் அழவில்லை என்று நினைப்பீர்கள். மேலும் அழுவதற்குக் கண்ணில் நீர் வற்றிப்போய்விட்டது.
அந்தச் செல்லம் ஸ்டோர் முதலாளிக்குத்* துரோகம் செய்தார். அவருடைய மனிதாபி மானத்தைப் புரிந்து கொள்ள இவருக்குத் தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவர்தாம் எங்கள் குடும்பத்திற்கு ஆண்டவன். அவர் உதவாவிட்டால்… அல்லது அவரிடமே தொடர்ந்து வேலையில் இருந்து இருந்தால்… யோசித்துப் பார்த்தால்தான் தெரியும். பகுத்தறிவு இல்லா அறிவுப் பாலைவனமாகி விட்டாரே!” என்று சொல்லிவிட்டு உள் அறைக்குச் சென்று சாமி படங்கள், சாமி சிலைகளை எடுத்துக் கொண்டு வந்து அப்புறப் படுத்திவிட்டுச் சொன்னாள்.
“இன்றிலிருந்து நான் புதுப் பிறவி. பகுத்தறிந்து, மனித நேயத்துடன் வாழப்போகிறேன். என் பிள்ளையை நானே உழைத்துக் காப்பாற்றுவேன்.
இனி ஆண்டவன்கிட்டே நான் போகமாட்டேன். என் அகத்தூய்மை, புறத்தூய்மை மூலம் ஆண்டவனை என்னிடம் வரவழைப்பேன்” என்ற அவள் முடிவை கேட்டு, வாழ்த்திவிட்டு தொண்டூழியர்கள் புறப்பட்டார்கள்.
– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.