அரைநாள் பொழுது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2025
பார்வையிட்டோர்: 1,402 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காமினி காலையிலேயே வந்து விட்டிருந்தான். அவன் எனது சிங்கள நண்பன். ஒரு மாதத்திற்கு நான்கு ஐந்து தடவையாவது என்னைச் சந்திக்க எனது அறைக்கு வருவான். அன்றும் அப்படித்தான் ஒரு வருகை.அவன் முகம் வெளுப்பேறி இருந்தது. கொஞ்சம் மெலிந்திருந்தான். அவனை நினைத்தாலே மெலிவுதான் நினைவுக்கு வரும். ஆனால் அன்று அந்த மெலிவில் கூடுதலான அழுத்தம். காரணம் ஒரு குதூகலமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தானாம். கூடவே தேவைக்கு அதிகமாக புத்தகங்களையும் வாசித்தானாம். 

வந்தவுடனேயே எனக்கு எதிரே யிருந்த ஈசிசெயரில் உடம்பை வளர்த்திவிட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் மெளனம். 

‘பிறகு மச்சான்’ நான்தான் மீண்டும் கதையைத் தொடங்கினேன். ‘இந்த முறை கொஞ்சம் கூடுதலாகத்தான் வீட்டில் தங்கி விட்டாய், என்ன? 

அவன் சொன்னதையேதான் கேள்வியாகக் கேட்டேன், காரணத்தைய றிய. ‘இங்கு வருவதற்கு காசில்லை அதனால் நின்று விட்டேன்’ அவன் பதில் சொன்னான். 

மீண்டும் மௌனம். 

‘டீ குடிக்கப் போவோமா?’ நான் கொண்டே 

மௌனத்தைக் கலைத்துக் சிங்களத்தில் கேட்டேன். 

‘தற்ஸ் ஏ குட் ஐடியா. மச்சான்’ ஆங்கிலத்தில் விளையாட்டாக ஆமோதித்தான். இருவரும் வெளியே வெளிக்கிட்டோம். 

தெருவில் காலடி வைத்தபோது, அவன் காற்சட்டை ப் பைக்குள் கையைப் போட்ட வண்ணம், இரண்டு குதிகளையும் உயர்த்தியவனாய் ‘இஸ்” என்று நாக்கை இழுத்தான்.பிறகு ‘என்னைப் போல ஒருவன் இருப்பானா?’ என்றான் அமைதி இழந்தவனாய். 

‘என்ன விஷயம்?’ 

‘கண்டக்டரிடம் ஐந்து ரூபாவைக் கொடுத்துவிட்டு மிச்சச் சல்லியை வாங்காமல் மறந்து போய் வந்துவிட்டேன்… இன்றோடு இப்படி மூன்று தடவை; நான் ஒரு முட்டாள்.’அவன் தன்னையே திட்டிக் கொண்டான்.

‘அப்போ என்ன செய்யலாம்?’ 

‘ஒருக்கால் பஸ்ராண்டுக்கு ஓடிவிட்டு வருவோம். இன்னும் அந்த பஸ் எங்கும் போயிருக்காது’ 

நாங்கள் பஸ்நிலையத்துக்கு வேகமாகப் போய்க் கொண்டிருந் தோம். திடீரென்று அவன் தன் நடையின் வேகத்தைத் தளர்த்தி, ‘மச்சான், அந்த பஸ் எங்காவது போயிருக்கும். நாங்கள் ஓடுவதில் அர்த்தமில்லை’ என்றான். 

‘ஏன்? 

‘நான் உன்னிடம் வருவதற்கு முன், அரை மணித்தியாலமாக லைப்பிரரியில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். அது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது…… அந்த பஸ் எங்காவது போயிருக்கும்’. 

‘எப்படியிருந்தாலும் போய்ப் பார்ப்போமே. ஒருவேளை அந்த பஸ் இன்னும் அங்கேயே நின்று விட்டால், அதிஷ்டமல்லவா?’ 

அவன் தலையை அசைத்துக் கொண்டே நடந்தான். 

பஸ் நிலையத்தில் அந்த பஸ் அங்கே நிற்கவில்லை. அருகிலிருந்த அலுவலகத்தில் விசாரித்தோம். அந்த பஸ் கொஞ்சம் முந்தியாகத்தான் நிலையத்தைக் காலி செய்திருக்கிறது. இப்போது அது இதங்கொடைக்கு போயிருக்கிறது. திரும்பிவர 12.15 ஆகும். அவர்கள் சொன்னார்கள். இப்போது நேரம் 10.20 

அங்கிருந்து திரும்பினோம். 

நிலையத்தை விட்டுவந்து நெடுந்தெருவில் விழுந்தபோது தாகம் எடுப்பதுபோல் இருந்தது. 

நான் டீக்கடை ஒன்றுக்குள் நுழைந்தேன். அந்தக்கடை, எங்களுக்குப் பழக்கமானதுதான். காமினி டீக்கடையின் படிகளில் ஏறியபடி. காற்சட்டைப் பைகளுக்குள் கையைவிட்டுத் துழாவியபடி ‘என்னிடம் ஒற்றைச் சதம்கூட இல்லை’ என்றான். 

நான் பதிலளிக்காமலே உள்ளேபோய் உட்கார்ந்தவனாய் ஒருபிளேன் டீக்கு ஓடர் பண்ணினேன். காமினி எனக்கு எதிரே வந்து உட்கார்ந்து கொண்டான். 

ஒரு பிளேன்டீ இருவருக்குமிடையே பங்காடப்பட்டது. அவன் கோப்பையோடு குடித்தான். எனக்கு கோப்பையின் கீழிருந்த தட்டோடு. வெறும்டீ இன்னும் வெளிறியிருந்தது, வெள்ளைத் தட்டில். 

‘ஒரு சிகரட் கொண்டு வரவா?’ ஹோட்டல் பையன் கேட்டான். அவனுக்கு எங்களைப் பற்றித் தெரியும். 

ஒரு திறீறோஸஸ் கொண்டு வரப்பட்டது. கூடவே அதைப் பற்றவைக்க ஒரு சின்ன விளக்கையும் கொண்டு வந்து வைத்தான். அந்த சின்ன விளக்குக்கு சிமினி இருக்கவில்லை. அது ஒரு ஆழமான பெட்டிக்குள் அதிகப்படியாகத் தூண்டிவிடப்பட்டு வளைந்து வளைந்து எரிந்தது. 

சிகரட்டுக்கும் பிளெயின் டீக்கு நேர்ந்த கதி. பாதிபாதி!

‘படுமுட்டாள்தனமாக எரிகிறது’ என்றான் காமினி, சிகரட்டைப் பற்றவைத்து விட்டு எரிந்த விளக்கைச் சுட்டிக் காட்டி. அதில் ஒரு நகைச்சுவை லேசாக நின்றது. 

‘அது ஒரு கழைக் கூத்தாடி மாதிரி’ என்றேன் நான். ‘இல்லை யாரோ அனாவசியமாகத்தன் கெட்டித்தனத்தை விளம்பரப்படுத்துவது போல் இருக்கிறது… எனக்கு எரிச்சல்தான் வருகுது’ என்றவன் ஆத்திரத்தோடு அதை ஊதி அணைத்தான். 

நான் சிரித்தேன். எனக்கு அதை உணர முடிந்தது. ஆனால் விளக்கு செத்தும் மண்ணெண்ணெய் புகையின் குமைச்சல் எம்மை வஞ்சம் தீர்த்துக் கொண்டது. எழுந்து ஹோட்டல் முன்மேசைக்கு வந்தபோது, ‘சத்தாஹசயாய், மாத்தையா’ என்ற குரல் பின்னால் கேட்டது. எங்களுக்குப் பரிமாறிய பையனில் குரல். 

‘முதலாளி, கணக்கை எழுதி வையுங்கள், பிறகு தாறன்’ என்றேன்.

‘முந்தியும் கொஞ்சம் இருக்கு’ என்றார் அவர்.

‘எல்லாத்தையும் சேர்த்து தாறன்’ என்று நான் கூறிய போது அவர் முகம் ஒரு பக்கம் நீண்டு கோணலாகியது. 

‘சரியாகப் 12 மணிக்கு நாங்கள் மீண்டும் பஸ் நிலையத்துக்குப் போனோம். இதங்கொடையிலிருந்து அந்தப் பஸ் இன்னும் வரவில்லை. அலுவலகத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். அந்த அலுவலகத்தின் குட்டிச் சுவர்களில் கைகளை முட்டுக் கொடுத்து முகத்தைத் தாங்கியபடி எதிரே கலகலப்பாய் கிடந்த பஸ் நிலையத்தைப் பார்த்துக் கொண்டு நின்றோம். அங்கும் இங்குமாக கிற்பாக்குகளோடு ஆடவர்களின் நடமாட்டம். சில இடங்களில் க்கியூ வரிசைகள் சளிந்தும் சடைத்தும் ஆட்களின் போக்குக்கு ஏற்ற தோற்றம் எடுத்துக் கொண்டிருந்தது. அரை நேரத்தோடு மூடப்படும் பள்ளிக்கூட மாணவ மாணவிகள், திடீரென எங்கிருந்தோ படையெடுத்தவர் களாய், பஸ்களை நோக்கிப் பந்தயம் பிடித்தவர்கள் போல் ஓடிக் கொண்டிருந்தனர். ஒருவித விடுபட்ட பார்வையில் எல்லாமே பைத்தியக்காரத்தனமாகப் பட்டது. 

‘அங்கே பாரேன், பண்டா படும்பாட்டை!’ திடீரெனக் காமினி எங்கள் அமைதியைக் கலைத்துக் கொண்டே கத்தினான். அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்வையை விட்டேன். எங்களுக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் கைநிறையப் பார்சல்களோடு ஆஸ்பத்திரிக்குப் போகும் பஸ்ஸுக்கு க்கியூவில் நின்று கொண்டிருந்தார். 

‘ஆஸ்பத்திரியில் அவனுடைய மனைவி பிரசவத்துக்காய் விடப்பட்டிருக்கிறாள் இவன் அங்கு போகிறான்’ என்று கூறிவிட்டு அவன் லேசாகச் சிரித்தான். 

‘இவனுக்கேன் இந்த அவஸ்தை? காசுள்ளவன் டாக்ஸியில் போகலாமே?’ நான் பதிலை எதிர்பார்க்காமலே கேட்டேன். 

‘இப்பதான் பிறிமிட்டிவ் அக்கியுமிலேஷன் (ஆரம்பச் சேகரிப்பு) நடக்குது. அதனால் அவஸ்தைப்படுகிறான்’. 

காமினி பதில் சொன்னான். நான் சிரித்தேன். ஆனால் எனது சிரிப்பையும் மேவிக் கொண்டு இன்னொரு சிரிப்பு எனக்கு அண்மையில் கேட்டது. நான் எனது பார்வையை அருகிழுத்தேன். 

எதிரே ஒரு மாணவி, சிரிப்போய்ந்த முகத்தோடு தனது தோழிக்கு கைகாட்டிவிட்டு நடந்து கொண்டிருந்தாள். 

‘காமினி, அதோ ராணி போகிறாள்’ என்றேன். எதிரே கைகாட்டி விட்டுப் போனவளைக் காட்டி. 

‘எந்த ராணி? ‘ 

‘எங்களோடு சிவனொளிபாத மலைக்கு வந்தாளே, அவள்’.

‘ஓ, அவளா! கூப்பிடன்’ 

‘கூப்பிட்டு என்ன பயன், கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? அதுவும் இந்த நேரத்தில்’ நான் கூறினேன். 

காமினி சிரித்துக் கொண்டே அவளின் பின்புறத்தைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டுச் சொன்னான். 

‘டிக்கி அபாரமாக இருக்கிறது’. 

நாங்கள் காத்திருந்த இதங்கொடைக்குப் போயிருந்த பஸ் ஒருபடியாக வந்து சேர்ந்தது. அன்று வழக்கத்துக்கு மாறாக சுணக்கம். 12.15க்கு வரவேண்டியது சரியாக 1.15க்கு வந்தது. அதே கண்டக்டர் தானாம். காமினி கண்டக்டரிடம் விஷயத்தை விளக்கியபோது அவன் ஒருக்கால் நெற்றியைச் சுழித்துவிட்டு பிறகு ஒப்புக்கொண்டான். அவனிடம் மிகுதிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு நகரின் நடுப்பகுதிக்கு வந்தபோது நேரம் இரண்டுக்கு மேலாகி விட்டது. வயிற்றைப் பசி நிரப்பியது. வழக்கமான எங்கள் டீக்கடைக்குள் நுழைந்தோம். இருவர் சாப்பிடக் கூடிய ஒருரூபா சாப்பாடு அங்கேதான் உண்டு. ஆனால் நாங்கள் நேரத்தைத் தப்பவிட்டதால் சோறு காலியாகியிருந்தது. மத்தியானமும் பாண் சாப்பிடுவதற்கு இன்னும் பயிற்றப்படவில்லை. பழைய பழக்கம் இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது. அடுத்த கடைக்குப் போனோம். அங்கும் அப்படி. இன்னொரு கடையில் ஈக்களின் ‘ஙொய்’ என்ற இரைச்சல். கடை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. திரும்பினோம். எங்களுக்கு எதிரே கொஞ்சம் பசையுள்ளவர்களுக்குரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. எங்கள் கையிலிருந்த நான்கு ரூபாவின் தைரியத்தோடு அங்கு போனோம். சாப்பாட்டைத் தவிர மற்றவை எல்லாம் வசதியாய் இருந்தன. சாப்பாடு முடிய எதிரே தட்டில் வைக்கப்பட்டிருந்த பழம் ஒன்றை எடுத்து அவன் உரித்தான். 

‘அது கோளிகூட்டுப் பழம்’ என்று எச்சரித்தேன் நான்.

‘இல்லை, புளிவாழை’ என்றான் அவன். 

‘இல்லை அது நன்றாகப் பழுக்காததால் உனக்குத் தெரியவில்லை. கடித்துப்பார் தெரியும்’ என்றேன் நான். 

‘வீணாக இருபதுசதம் காலி’ என்று முகத்தைச் சுழித்தான். 

‘கவலைப்படாதே’ என்று நான் கூறியபோது, எங்களுக்குச் சற்றுத் தொலைவில் பூட்ஸ் கால்கள் சப்திக்கும், ஓர் உருவம் தெரிந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன். அந்த உருவம் எங்களைப் பார்த்து விட்டுக் காணாதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டது. ஆனால் நான் விடவில்லை. அவனை அடையாளங் கண்டு கொண்டு வேண்டுமென்றே ‘ஹலோ லம்பெட்’ என்று கத்தினேன். அவன் எங்கள் பக்கம் திரும்பி யோசிப்பவன் போல் பாசாங்கு செய்துவிட்டு, அப்போதுதான் எங்களை அடையாளங் கண்டு கொள்பவன் போல் ‘ஹலோ!’ என்று போலியாகச் சிரித்துக் கொண்டு அருகே வந்தான். 

‘வா மச்சான் வா, கன காலத்துக்குப் பிறகு’ என்று கூறிக் கொண்டே காமினி அவனை அருகே அமரவைத்தான். அவன் மிகுந்த அசௌகரியத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே உட்கார்ந்தான். 

லம்பெட் எங்களோடு பள்ளியில் படித்தவன். ஓர் பிரபல தேயிலைத் தோட்டச் சொந்தக்காரன். 

‘டீ குடிப்போமா?’ என்று கேட்ட அவன் குரலில் ஒரு அவசரம் நின்றது. 

‘இல்லை, இப்போதுதான் சாப்பிட்டோம். புறுட்சலட் என்றால் நல்லாய் இருக்கும்’ என்றான் காமினி சிறிதும் கவலையில்லாமல். 

எதுவித பேச்சுமில்லாமல் இரண்டு புருட் சலட்டுக்கும் தனக்கு ஒரு டீக்கும் ஓடர் கொடுத்தான். கூடவே சிகரட்டுகளும் வரவழைக்கப்பட்டன. 

காமினி என்னைப் பார்த்துக் கண்ணைக் காட்டினான். நான் விஷமமாகச் சிரித்தேன். 

டீயைப் பருகிய லம்பெட் மேல் விழிகளால் எங்களை நோக்கினான். 

எங்கள் உடையும் தோற்றமும் அவனை ஆறுதலாய் இருக்கவிடவில்லை என்பது அவனது மூக்கு நுனியின் துடிப்பில் தெரிந்தது. நான் சேர்ட் அணிந்து சாரம் உடுத்தியிருந்தேன். காமினி வேர்வை ஏறிய சேட்டும் மங்கற் கால்சட்டையுமாய் குந்தியிருந்தான். 

லம்பெட்டின் அசௌகரியத்தை ரசித்துக் கொண்டே நாம் புறுட்சலட் அருந்தினோம். 

சிகரட்டை பற்றவைத்தபோது எங்கள் ‘பில்லை’க் கொண்டு வந்து வைத்தான் சேர்வர். எங்களது சாப்பாட்டுக்குமாக இரண்டு பில் இருந்தது. இரண்டு பில்லையும் லம்பெட்டே எடுத்துக் கொண்டான். அவற்றுக்குரிய பணத்தைக் கட்டியவன் தாமதிக்கவில்லை. ‘எனக்கொரு அவசரமான விஷயம்’ என்று கூறிக் கொண்டு வெளியேறியவன் காரிலே போய்விட்டான்.

‘எப்படி திருப்தியா?’ என்றேன் நான் காமினியைப் பார்த்து.

‘லம்பட்டும் அவர்கள் சம்பிரதாயங்களும்’ என்று பகிடி பண்ணியவன் ‘இனி இரவுச் சாப்பாட்டுக்கு கவலையில்லை’ என்றான் அதே உற்சாகத்தோடு. 

‘அதற்கும் இன்னொரு லம்பட் கிடைப்பான்’ என்றேன் நான்.

அவன் சிரித்தான். ‘இப்படியே எல்லா லம்பட்டுகளையும் சாப்பிட்டு விடலாம்’ 

வெளியே வந்தபோது வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. 

– 1964 (1970 மல்லிகையில் வெளிவந்தது) 

– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *