அரூப மிருகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2025
பார்வையிட்டோர்: 659 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தண்டஹாரண்யத்தில் பாதைகள் கிளைக்காத நாள்களில் மூர்க்க விலங்குகளும், நீரோட்டத்தின் சப்தம் அருந்தி நிற்கும் மரங்களும், ததும்பிக்கொண்டிருக்கும் இருளும் கூடிய வனவெளியில் ஒரு ரிஷியும், ரிஷிகுமாரனுமிருந்தார்கள். யாகநெருப்பின் முன் ரிஷி மந்திர உச்சாடனங்களைச் சொல்பவராக இருந்தார். வாலிபனாக இருந்தபோதும் ரிஷிகுமாரன் பழக்கப்படாத குதிரையைப் போல வனமெங்கும் அலைந்துகொண்டிருந்ததால் அவன் கண்கள் செம்மையேறியிருந்தன. மிருகங்களைப் போலவே தனது வேட்கையின் மீது மறைந்து தாக்கி ருசிக்கப் பழகியிருந்தவனைக் காட்டுப் பழங்களும், தண்ணீரும் வலிமையாக்கியிருந்தன. ஓய்வில்லாமல் அவன் சுற்றிக்கொண்டே இருந்த வழியில் அவன் காலடியோசையில் திடுக்கிட்டு குரங்குகள் மரம் தாவின. அவன் தன் முன் விரிந்திருக்கும் உலகினைத் தனது கண்களாலும், பற்களாலும் கவ்விக் கிழித்தபடிச் சென்றான்.

அந்த வனத்தின் மேற்குப் பகுதியில் ஓடிய நதிக்கரையில் ஒரு நகரமிருந்தது. அங்கிருந்து எப்போதாவது வன வேட்டைக்காக வரும் வீரர்கள் இலைகளின் நரம்பு வழியே ரிஷிபுத்திரன் பதுங்கி நிசப்தமாக விழித்துப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டதும், குரல் துண்டிக்கப்பட்டவர்களாக மிரட்சி கொள்ளப் பின்னோடு வார்கள். தன்னை எதிர்கொள்ளும் யாவர் முகமும் விலகுவதேன் என அறிய அவன் தன் தகப்பனிடம் கேட்டதற்கு ரிஷி சொன்னார்,

‘நீ யாவரையும் பயம் கொள்ளச் செய்கிறாய்.’ ரிஷிகுமாரனுக்குப் புரியவில்லை. அவன் தகப்பனிடம் திரும்பவும் கேட்டான்,

‘பயமென்றால் என்ன? நீ எனக்கு அதைக் கற்றுத் தரவில்லையே, பயத்தின் ருசியே எனக்குத் தெரியாதே.’

மகனின் ஆழமான கண்களைக் கண்டவராக ரிஷி சொன்னார்,

‘வேண்டாம், அதன் ருசி உன்னை உதிர்ந்து காய்ந்த இலைச் சுருளை விடப் பலஹீனமாக்கிவிடும்.’

ரிஷிகுமாரன் சமாதானம் கொள்ளவில்லை. மறுபடியும் கேட்டான், ‘பயம் என்பதன் வாசனையை நான் நுகரக் கூடாதா? அது என் நாசியில் ஏறிச் செல்லவே நான் ஆசைப்படுகிறேன். பயத்தை எப்படி நான் அறிந்துகொள்வது என்பதை மட்டும் சொல்.’

ரிஷி நிசப்தமானார். மகனை இரவு வரை காத்திருக்கச் சொன்னார். அன்றிரவில் ஓசையடங்கிய பெருவெளியில் எரியும் சிறு தழல் முன் இருவரும் அமர்ந்திருந்தனர். ரிஷி சொன்னார்,

‘பயம் ஒரு மின்னல் போலத் தோன்றி மறையக் கூடியது. அதன் ஓசையும் வெடிப்பும் வலிமையானது. ஒரு துள்ளலில் எங்கும் பரவிப் பெருகக் கூடியது.’

ரிஷிகுமாரன் ஆச்சரியத்தோடு சொன்னான்,

‘மின்னல் எனக்கு உவப்பாகத்தானே இருக்கிறது. அதன் ஒளியைப் பல முறை கைகளில் ஏந்திக் குடித்திருக்கிறேன். பயம் அத்தனை வசீகரமானதா?’

ரிஷி நிசப்தம் கொண்டுவிட்டார். இருள் கூடிக்கொண்டே வந்தது. முகம் அறியாதபடி இருள் ஊர்ந்து நிரம்பியது. இருவரும் நெடுநேரம் உறக்கமற்றுக் கிடந்தனர். எதனெதன் ஓசைகளோ வெடிப்பதும் ஒடுங்குவதுமாக இருந்தன. ரிஷி சொன்னார்,

‘உன்னையும் என்னையும் விழுங்கிக்கொண்டிருக்கும் இந்த இருளின் சுனையில் கூட பயம் மலர்ந்திருக்கிறது. குமாரா, பயம் தன் உடலெங்கும் கால்கள் கொண்டது. நடமாட்ட சப்தம் கூட இல்லாதது. இந்த இருள் பயத்தின் ஒரு மலர்தான். மகன் பெருமூச்சிட்டபடியே பதில் தந்தான், ‘இருளின் அலைகள் என் மீது மோதிச் சரிவது சுகமாக இருக்கிறதே. இருள் துயிலின் வெதுவெதுப்பை அல்லவா கொண்டிருக்கிறது. இந்தக் கரிய மலரைப் போல சுகந்தமானதுதானா பயம்?’

ரிஷியின் குரல் ஒடுங்கிவிட்டது. அவர்கள் திரும்பவும் பேசிக் கொள்ளவே இல்லை. காற்று கடந்து சென்றபடியிருந்தது.

துயிலின் மென்தூவல்கள் நிரம்பின. சொப்பனங்களின் மெல்லிய படலம் எங்கும் விரிவுகொண்டது. ரிஷி துர்சொப்பனத்தில் வீழ்ந்துகொண்டிருந்தார். அரூப மிருகங்களின் பாய்ச்சலில் திடுக்கிட்டு அலறி எழுந்தபோது ரிஷி தொலைவில் எரியும் நட்சத்திரங்களைக் கண்டபடி தன் மகன் நிற்பதைக் கண்டார். அவனருகே வந்த ரிஷி சொன்னார்,

‘சொப்பனத்தின் வீதியில் பயம் ஒளிந்து காத்திருக்கிறது. அது ஒரே நேரத்தில் நாலு திசையும் வளர்கிறது. அதன் தாடை மீறிய பற்கள் மினுங்கிக்கொண்டேயிருக்கின்றன.

ரிஷிகுமாரன் தானும் சொப்பனத்தில் விழித்தெழுந்ததாகவே சொன்னான்.

‘சொப்பனம் புலன்களின் வேட்டை மைதானமாகத்தானிருக் கிறது. அங்கே பயமென்னும் மிருகத்தின் கால் தடத்தினைக் கூட நான் காண முடிந்ததில்லை தந்தையே.’

ரிஷி, இனி தன்னால் குமாரனுக்குக் கற்றுத் தர எதுவுமில்லை என்றவராகக் கடந்து போனார். தனது பதிலற்ற கேள்வியைச் சுமந்து திரிபவனாக ரிஷிகுமாரன் அலைந்துகொண்டிருந்தான். ஒரு நாளில் ரிஷி அவனை அழைத்துச் சொன்னார்,

‘மேற்கில் நதியைக் கடந்து காணும் நகரத்துக்குச் சென்றால் நீ பயத்தைக் கண்டுவரலாம்.’

‘நகரம் பயத்தின் வசிப்பிடமா?’ என ரிஷிகுமாரன் கேட்டதற்கு, ‘பயம் ஒரு தப்பியலையும் விலங்கு, நகரின் ஏதாவது ஒரு பதுங்கு முனையில் கண்கள் ஒளிர அது ஒளிந்திருப்பதை நீ கண்டடைவாய்’ எனப் புறப்படச் செய்தார்.

வேடுவனைப் போல ரிஷிகுமாரன் வனத்தினின்று வெளியேறி னான். நதியில் தன்னை எதிர்கொள்வதைத் தவிர்த்த முகம் விலக்கி நகரம் வந்து சேர்ந்தான். இயக்கத்தின் துள்ளல் கூடிய நகரம் சப்தத்தால் நிரம்பியிருந்தது. குறுக்குச் சந்துகளிலும் கறுத்துப் பாசியேறிய சுவர் வரிசைகளிலும் தேடியலைந்தான். பயத்தின் மூச்சுச் சப்தம் கூட கேட்க முடியவில்லை. இரவு நகரின் மீது படர்ந்தது. இடிபாடுகள் கொண்ட கற்கோயிலின் வெளியே படுத்துக் கிடந்தான். நள்ளிரவுக்குப் பிறகு இருவரின் பேச்சுக் குரல் கேட்டது.

‘பயந்துபோய் நீ கயிற்றை விட்டுவிட்டால், நம் காரியம் கெட்டு விடும்’ என்றது ஒரு குரல். உடனே மறு குரல்,

‘முதல் தடவை என்பதால் பயமாக உள்ளது. வீரர்கள் விழித்துக் கொண்டு நாம் அகப்பட்டுவிட்டால், சாவு நிச்சயம். அந்த பயம் நடுக்கமடையச் செய்கிறது’ என்றது.

ரிஷிகுமாரன் பாய்ந்து அவர்களருகே சென்றான். கள்வர்களில் மூத்தவன் சட்டெனத் தன் குறுவாளை உருவி நின்றான். ரிஷிகுமாரனின் குரல் எழுந்தது.

‘நீ பயத்தைக் கண்டிருக்கிறாயா? அது எங்கே ஒளிந்திருக்கிறது? நான் அதைத் தேடியலைந்து கொண்டிருக்கிறேன்.’

இளையவன் பலமாகச் சிரித்தான். வயதான கள்வன் சிரிக்க வில்லை. ரிஷிகுமாரனின் உருவத்தையும், வேகத்தையும் கண்டவனாகச் சொன்னான்,

‘அது என்னைக் கண்டிருக்கிறது. வளர்ப்பு நாயைப் போல என் காலைச் சுற்றி நக்கிப் போகக்கூடியது பயம். நான் உன்னை அதன் வசிப்பிடத்துக்கே கூட்டிப்போக முடியும். உனக்குக் கயிறைப் பற்றி ஏறத் தெரியுமா? என்றவனாக அவனையும் உடனழைத்துக் கொண்டு அரசனின் அந்தரங்க அறையை ஒட்டிய கோட்டைச் சுவரைப் பற்றி மேல் ஏறினார்கள். வயதானவன் தனது பையில் இருந்த பிடிசாம்பலை எடுத்துக் காற்றில் ஊதியபடி ஊரை உறக்கத்தின் பிடியில் அது வசமாக்கும் என்றான். இருவரும் அந்தப்புர அறைக்குள் புகுந்தனர். வயதான கள்வன் தனக்குத் தேவையானதைத் திருடிக்கொண்டான். ரிஷிகுமாரனின் கண்கள் ஒளிர்ந்து கொண்டேயிருந்தன. வயதானவன் அறையை விட்டு வெளியேறும் முன்பு,

‘நீ தேடி வந்த மிருகம் அடுத்த அறையில் உறங்கிக்கொண்டி ருக்கிறது. துயில் கலைத்து அதன் முகத்தை நேர்கொள்.’ என்றவனாக மதில் சுவர் தாவி நீங்கினான். அடுத்த அறைக்குள் ரிஷிகுமாரன் நுழைந்தபோது இரண்டு சுடர்கள் எரிந்துகொண்டு இருந்தன. படுக்கையில் ஓர் இளம்பெண் கேசம் கலைய உறங்கிக் கொண்டிருந்தாள். அவளருகே குனிந்து தன் இரு கைகளாலும் முகம் பற்றித் தூக்கியபோது, விழித்த அவள் பதற்றம் மீறிக் குரலிட்டும், அவன் தன் பிடியை நழுவவிட்டு, ஏமாற்ற முற்றவனைப் போல அறையின் திரைச்சீலைகளின் பக்கம் திரும்பினான். அவள் தோள் வரை சரிந்த கேசம் கொண்டு, வனவேடனைப் போலிருந்த மனிதனைக் கண்டாள். அவன் கண்கள் எதையோ தேடுவதை உணர்ந்தவளாகக் கேட்டாள்,

‘நீ எதைத்தான் தேடுகிறாய்?’ அவன் தனக்குத் தானே சொல்வது போலப் பேசினான்.

‘பயத்தைத் தேடியலைகிறேன். நீ எப்போதாவது அதைக் கண்டிருக்கிறாயா?’

அவள் வியப்போடு அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அபயக்குரல் கேட்டு வந்த காவலர்களின் வாள்நுனி அவன் தாடையை உராய்ந்தது. அவர்களை விலக்கித் திமிறி நடந்த போது வாள்நுனி முகத்தில் பாய்ந்தது. அவள் வீரர்களை விலக்கி அவனருகே வந்தவளாகக் கேட்டாள்,

‘இந்த வாளின் நுனியில் என்ன பார்க்கிறாய்?’

அவன் தன் ரத்தத்தின் துளிர்ப்பை அறிந்தவனாக, ‘தாக்குதல் என்ற உதிர விளையாட்டினை நான் முன்னமே அறிந்திருக் கிறேன்’ என்றபடி அவர்கள் பிடிதப்பி சரிந்து மதில் சாடி ஏறும்போது அரண்மனையன்றி வேறிடம் கண்டிராத இளவரசி அவனிடம் சொன்னாள்,

‘என்னை நீ இங்கிருந்து தூக்கிக்கொண்டு இந்த தேச எல்லையைக் கடந்து தப்பிப்போக முடியுமானால் உனக்கு பயமென்பதை நான் அறிய வைப்பேன்.

அவன் மூர்க்கம் மீறியவனாக வீரர்களைச் சுழற்றி வீசி அவளை தன் வசப்படுத்திக்கொண்டு தாவும்போது வாள்நுனி அவன் உடலை ரணப்படுத்தியது. முதுகில் அம்புகள் ஏறின. அவன் கவனம் பிசகாமல் தப்பினான். இரண்டு நாள்களின் தொலைவில் தேச எல்லையைத் தாண்டிய அவர்கள் களைப்புற்றிருந்தார்கள். அவன் ரணமேறிய உடலோடு நடந்தான். உடல் நோவும் அசதியுமாக மிக மெதுவாக நடந்தார்கள். செம்பாலை முடிவற்று இருந்தது. யாருமற்ற மணல் வெளியில் அவள் கேட்டாள்,

‘உன்னைத் துரத்தியவர்களின் வாள்முனையில் பயத்தின் நாவு நீண்டு உன் உயிரைப் பற்ற முயன்றதை நீ காணவில்லையா? உன் உடலின் ரணம், வேதனை யாவும் பயத்தின் பற்கள் பதிந்தது தானே?

அவனோ ‘உடல் வேதனை ஒரு பழகிய ருசி’ என மறுதலித்தான். செம்புழுதிகளைப் பொங்கியபடியிருந்த மணல்வெளியில் அவர்கள் போய்க்கொண்டேயிருந்தனர். இனி தன்னால் நடக்க முடியாதென அவள் வீழ்ச்சியுற்ற இடத்தில் அமர்ந்தனர். நாவுலர்ந்தவளாகப் பசியும் தாகமும் கொண்டிருந்தாள். அவன் கானலின் நெடிய சாலையில் தனியனாக அலைந்து எங்கிருந்தோ சில கூழாங்கற்களைக் கொண்டு வந்தான். அது ஈரமேறி யிருந்தது. அந்தக் கற்களைச் சுவைத்துக்கொண்டிருந்தால் தாகம் சாந்தியாகுமென்றான். அவர்கள் பின் நிசப்தமாக வீழ்ந்தனர். காற்று இரவெல்லாம் ஓடியலைந்தது. அவள் காற்றின் படபடப்பில் தன் கேசம் சரியச் சொன்னாள்,

‘நீ பசியால் வீழ்ந்து கொண்டிருக்கிறாய். பயம் உன் நிழலைப் போலக் காலடியில் வட்டமிட்டு அலைவதை நான் காண்கிறேன்.’

அவன் விழித்துக்கொண்டவன் போலப் பதில் பேசினான்.

‘பசியின் குரலுக்கு நான் செவி கொடுக்காதவன். எனைத் தொடரும் நிழலைப் போல எடையற்றதும் மெலிவானதும்தானா பயம்?’

அவள் பின் ‘எதையும் பேசிக்கொள்ளவில்லை. பகலும் இரவும் அவர்களைக் கடந்து சென்றன. இரவில் கடந்து செல்லும் நட்சத்திரங்களைத் தவிர வேறு நடமாட்டமே இல்லை. அவள் சில நாள்களிலே மிகுந்த பலவீனமாகிப் போனாள். செம் புழுதியேறி அவள் மூச்சுக்காற்று கூட உஷ்ணமாகியது. உலர்ந்த கண்களோடு தாகம் தாகமென வீழ்ந்து கிடந்தாள். அவன் புழுதியை முகர்ந்தபடி நெடும்தூரம் சுற்றியலைந்தான். ஒவ்வொரு இரவிலும் அவளிடம் சொல்வான்,

‘இன்றைக்கும் நான் அந்த மிருகத்தைத் தேடியலைந்து காணாமல் திரும்பிவிட்டேன். அதன் நிறம்தான் என்ன? அது எதைப் போல இருக்குமெனப் பிடிபடவேயில்லையே?’

அவள் பெருமூச்சிட்டுக் கொள்வாள். ஒரு பகலில் அவள் மயங்கிச் சரியும் கண்களுடன் நீர்வேட்கையில் தன்னை முத்தமிடச் சொன்னாள். அவன் கைகளால் முகம் பற்றி முத்தமிட்டான். இரு உதடுகளும் கவ்விக்கொண்டன. ரத்தம் அரும்பிய வலியோடு உதடு பிரித்து அவள் சொன்னாள்,

‘நான் நடுங்கிக்கொண்டேயிருக்கிறேன். சாவின் ஈரமேறிய நாக்கு என் நெற்றியைத் தடவுகிறது.’

அவள் கைகளைப் பற்றியபடி அமர்ந்திருந்தான். பிதற்றம் கொண்டவளைப் போல அவள் இரவில் ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தாள். பின் உதடோசை நின்றது. மறுநாளின் காலையில் அவள் நடுக்கம் கூடிவிட்டது. அவனைப் பற்றிக் கடைசியாக முத்தமிட விரும்பினாள். அவன் கேசம் கலைத்து, தாங்கி அவனை முத்தமிட முனைந்தாள். அவள் உதடுகள் பிரியவில்லை. பல் கட்டிக்கொண்டது. அவளைத் தரையில் கிடத்தினான். அவள் திரும்பவும் அவனைத் தலையைத் தூக்கச் சொன்னாள். உஷ்ணமேறிய மூச்சோடு அவள் உதடுகள் பிரிந்து வலிந்து அவன் உதட்டைக் கவ்வின. அதன் சுவை உடல் நரம்பு களில் எரியத் தொடங்கியது. தன்னை விட்டு சுவை பிரிந்துவிடக் கூடாதென வலிய உதடால் சுவைத்துக் கொண்டேயிருந்தான். சுவை மெல்லத் திரிந்து துவர்ப்பேறிக் கொண்டிருந்தது. அவன் நிமிர்ந்து தன் கண்களால் அவளை நோக்கும்போது அவள் இமையோரங்களைக் கண்டான்.

சிற்றெறும்புகள் அவள் இமையினின்று ஊர்ந்து வெளியே சென்று கொண்டிருந்தன. அவன் அதன் ஊர்தலைக் கவனித்துக் கொண்டிருந்தபோது ஒரு சாரை எறும்புகள் அவன் கண்களில் தொற்றி ஏறி கண்ணுக்குள் போவதை அறிந்தான். அவள் சரிந்து வீழ்ந்தாள். இமை விளிம்பில் ஓர் எறும்பு கடித்த வலி துளிர்க்க தன் கண்களைக் கசக்கிக்கொண்டு வீழ்ந்த உடலைக் கண்டான் ரிஷிகுமாரன்.

பலநூறு சாரைகளாக எறும்புகள் அவள் முகத்தினின்று ஊர்ந்து, பற்கள், நாசி, உடலெங்கும் இறங்கின. பயம் ஊர்ந்து திரியும் சிற்றெறும்புதானோ என ரிஷிகுமாரன் அறிதல் கொண்டபோது, அது கடித்த வேதனை தன் கடுப்பை வலியதாக்கியது. அவளிடம் சலனமில்லை. அவள் உடலில் ஏறிய எறும்புகளை விலக்கிய வனின் கைகள் மெதுவாக நடுங்கத் தொடங்கியிருந்தன. சலனமற்ற வெண் உடலைப் பார்த்தபடியிருந்தான்.

எங்கிருந்தோ சிறு குருவிகள் கீச்சிட்டபடி வானில் பறந்தன. தொலைவில் ஒரு மின்னல் தோன்றி பீறிட்டது. எங்கோ பெய்யும் மழையின் காற்று சிதறிப்போன ஈரத்துளியின் வலி தாள முடியாது அவன் கூச்சலிட்டான். பெருவெளியின் தனிமையில் பயமெனும் சில்வண்டுகள் ரீங்காரமிடத் தொடங்கின. உதட்டில் அவள் புகட்டிய சாவின் சாறு சுரந்துகொண்டேயிருந்தது. அவள் செம்மண்ணேறிக் கிடந்தாள். மணலை வளையமிட்டபடி பூமி கீறிய செவ்வெலி ஒன்று தலையைத் தூக்கிப் பார்த்தபடி ஓடி அவள் பாதமருகே வந்து விரல்களைக் கருமிடத் தொடங்கியது. அதனை விரட்ட நினைத்து சப்தமிட முனைந்தபோது நடுக்கம் மீறிடக் குரலற்று சோகை கொண்டு கிடந்தான். எங்கிருந்தோ வாசனையறிந்த செவ்வெலிகள் கூட்டமாகத் தாவி வந்து கொண்டிருந்தன. தன் இரு கைகளையும் தட்டி விரட்ட சப்தம் செய்ய தன் பலம் அத்தனையும் சேர்த்துக் கைகளை அசைத்த போதும் ஓசை பிறக்கவில்லை. பிறகு நாவு மடங்க அவனும் புழுதியில் வீழ்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *