அம்மா




(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அம்மாவின் மடி பிதுங்கிற்று. ஆனாலும் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவரைப் பந்தலின் இன்னொரு பக்கம் ஏணியைப் போட்டாள்.

என்ன அம்மாப் பெண்ணே, இன்னும் பறிக்கணுமா? பறிச்சதே யதேஷ்டமா..
அம்மா, ஏணிமேல் ஏறிக்கொண்டே. “நமக்கு மட்டும் இருந்தால் ஆயிடுத்தா? சங்கராந்தியுமதுவுமா, மத்தவாளுக்கும் கொடுக்க வேண்டாமா?”
“மத்தவாளா? அது யாருடா மத்தவாள்?” அண்ணாவுக்கு — அதுதான் அப்பா, அப்பாவை அண்ணாவென்று அழைப்போம் – அண்ணாவுக்குத் திகைப்பு. ஆனால் அண்ணா இடக்காகவும் பேசுவார்.
“ஏன், எதிர்த்தாம், பக்கத்தில் உடையார் வீடு, இடையன் வீடு, வேலைக்காரி குடும்பம், பால் பொங்கித் தான்னு விசாரிக்க வரவா இவாள்ளாம் உங்களுக்கு மனுஷாளாப் படல்லியா?”
“சரிதான். ஊரையே வளைச்சுப் போட்டாச்சா? நாளைக்கு எல்லார் வீட்டிலேயும்தானே பால் பொங்கறது நீ வேறே சீர்கொடுத்து அனுப்பனுமா?”
“உங்கள் வாக்குப்படியேதான் இருக்கட்டுமே! வருஷத்துக்கொரு நாள். எல்லாரும் சந்தோஷமாயிருக் கணும்னே ஒரு நாள். ஊரே கல்யாண டு. நம்மிடம் இருக்கறதைப் பங்கிட்டுப்போமே!”
அதுதான் அம்மா.
இது எங்கள் சொந்த ஊர் இல்லை. சென்னையில் அண்ணா உடம்பு சீர்குலைந்து போய், ஆரோக்யத்தைத் தேடி, குடும்பத்தோடு வயிறு பிழைக்க வந்த ஊர். அப்பா பள்ளிக்கூட (ஆறாம் வகுப்பு வரைதான்) ஹெட்மாஸ்டர். கூடவே போஸ்ட் மாஸ்டர். அவர் பெயரே தபாலாபீஸ் வாத்தியார்.
எதிர்வீட்டு முதலியார்தான் இந்த வீட்டுக்குச் சொந்தக் காரர். மூட்டையும் முடிச்சுமா,குழந்தையும் குட்டியுமா. இரவு முதன்முதலாக அண்ணாவும் அம்மாவும் வண்டியி லிருந்து இறங்கியபோது, முதலியாரும் அவர் மனைவியும் எங்களை வரவேற்க வாசலில் காத்திருந்தனர்.
முதலியாரும் அவர் மனைவியும், கோவில் உற்சவத்தில் முன்னால் போமே, ஆள் உள்ளே புகுந்துகொண்டு போமே பூதப் பொம்மைகள்! அதுமாதிரி.
“என்ன முதலியார், நான் திருப்பித் திருப்பிக் கேட்டு எழுதியும், வாடகையைப் பற்றியே ஒண்ணும் ம் தெரிவிக்க வில்லை?”
முதலியார் மார்மேல் கட்டிய கைகளுடன், “இங்கெல்லாம் அப்படியொண்ணும் கண்டிப்பு கிடையாதுங்க. மாலை வேளையில் வீட்டுக்கு விளக்கேத்தி வைக்க மஹாலச்சுமி வந்தால் போதுங்க. அம்மாவைப் பார்த்தாலும் அப்பிடித் தான் இருக்காங்க.”
முதலியார் பிரமாதமாகப் பேசுவார். ஆனால் அவர் மனமும் அவர் உடலைவிடப் பெரிது.
மிக மிகச் சிறிய வீடு. இரண்டே சின்ன அறைகள் சமையலறையையும் சேர்த்து. ஆனால் அந்தப் பிரம்மாண்ட மான கொல்லையைப் பார்த்ததும் அம்மாவால் சம்மா இருக்க முடியவில்லை. முதலியார் வீட்டிலிருந்து கடப்பா ரையும் மண்வெட்டியும் வாங்கிக்கொண்டாள்.
வந்த ஒரு வாரத்துள் கொல்லைப்புறத்துக்கு முகமே மாறிவிட்டது. அத்தனையும் அம்மா.
அவளே கொம்புகளை நட்டுப் பந்தல் போட்டாயிற்று. நாளடைவில் அவரைக்கொடியும் படர ஆரம்பித்துவிட்டது. பந்தலின் நிழலில் நாங்கள் விளையாடுவோம். அங்கிருந்து தொங்கும் புடலையைப் பார்த்து எங்களுக்கு வியப்பா யிருக்கும்.
“தொடாதேங்கோ துஷ்டைகளா?” அம்மா சமையலறையிலிருந்து இரைவாள். ஆனால் நாங்கள் தொடுவோம். ஒரு தடவை ஒரு புடலை தானாவே பந்தலிலிருந்து கழன்று கீழே தொப்பென்று விழுந்து, அதோ வாழை நட்டிருக்கும் இடத்துக்குச் சரசரவென்று போய் ஜலதாரையுள் மறைந்தது. அம்மா ஓடிவந்து எங்களை மூர்க்கமாக அணைத்துக்கொண்டு அன்று மாலை எல்லோருக்கும் சுத்திப் போட்டாள்.
கொல்லையின் ஒரு மூலையில் மாட்டுக் கொட்டகை. ‘அம்மா!’ கலியாணி கத்துகிறது. அதற்கு மடிகனம் தாங் காமல் துளிக்கிறது இன்னும் சற்று நேரம் பார்த்துவிட்டு குப்பன் வராவிட்டால், அம்மாவே கறந்துவிடுவாள்.
அம்மாவுக்குக் கண் கண்டது கை செய்யும்.
அவள் புத்திசாலி என்றதால் மட்டுமே அல்ல.
அவளால் சும்மாயிருக்க முடியாது.
அவள் சுபாவமே அப்படி.
அம்மா.
தினம் சாயங்காலம் அம்மா காய்கறித் தோட்டத்தைச் சுற்றி வருவாள், வலது கை சுட்டுவிரலும் நடுவிரலும் மேலு தட்டைப் பொத்தியபடி. அது அவளுடைய மானரிஸம்.
வெண்டைச் செடி எதிரே நிற்பாள். அங்கு ஏதோ பேச்சு நடக்கும் என்றே என் கருத்து. பாஷை நமக்குப் புரியாதது. மாலைக் காற்றின் ஜாலமோ அதன் சொந்தமான அசைவோ, செடி எட்டி அம்மாவைத் தொட முயல்வது போல எனக்குத் தோன்றும். அம்மா நகர்வாள். செடி பட படவெனத் தலையை ஆட்டும்.
அம்மா காதண்டை இடித்துக் ‘கிசுகிசு’த்துத் தவிக்கும் அவரைக்கொடியை அம்மா மெல்லத் தூக்கி பந்தலில் தொற்ற விடுவாள்.
ஓ, அம்மாவுக்கும் அவள் செடிகளுக்குமிடையே நிச்சய மாகப் பேச்சு இருந்தது; சந்தேகமேயில்லை. பாஷைதான் நமக்குப் புரியாதது.
முதல் காய்ப்பைப் பறித்ததும் அம்மா. என்னிடம் சொல்லி அனுப்பி முதலியார் தம்பதிகள் வந்தனர்.
வந்ததும், ‘முதலியார், இந்தாங்கோ இது உங்களுடையது உங்கள் வீட்டு மண்.”
சிவபாக்கியம் முன்றானையை ஏந்தி அதில் வாங்கிக் கொண்டாள்.
முதலியார் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு “மண்ணை வெச்சிட்டு என்ன செய்யறதுங்க? அதைப் பொன்னாக்கும் கை யாருடையது? அம்மா வந்த அன்னிக்கே சொன்னேனே, வீட்டுக்கு மஹாலச்சுமி வந்தாச்சுன்னு”
முதலியார் பிரமாதமாய்ப் பேசுவார்.
ஆனால் அவர் கண்கள் இப்போது துளும்பின. கூடவே புன்னகையில் கன்னங்கள் நெகிழ்ந்தன. முதலியாரும் அவர் மனைவியும் பக்கத்தில் பக்கத்தில் ஜோடி யானைக்குட்டிகள்-
நாங்கள் இருபது வருடங்கன் இந்தக் கிராமத்தில் வாழ்ந்தோம். எங்கள் குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம் இங்குதான் கழிந்தன. பிறகு மேலே படிக்கச் சென்னைக்கு நாங்கள் பையன்கள் சிற்றப்பா வீட்டுக்குச் சென்றாலும் மைக்கல் மஸ், கிறிஸ்துமஸ், கோடையென அவ்வப்போது விடுமுறைக்கு என்று தீரும்பிவிடுவோம். அப்போது இங்கி ருக்கும் நேரமெல்லாம். விடுமுறை கழிந்ததும் சென்னைக்குத் திரும்பணுமே என்ற கசப்பு: சென்னையில் இருக்கும்போது மறுவிடுமுறைக்குக் காத்திருக்கும் நாட்கள்.
அப்படியொரு காலம்.
எங்கள் வாழ்க்கையிலேயே சந்தோஷமான சத்தான நாட்கள் இந்த வீட்டில்தான். எளிமையான வாழ்க்கையில் களங்கமற்ற சந்தோஷங்கள்.
தினப்படி எனக்கொரு வியப்பு: அம்மா எப்போ குளித் தாள்? ஏனெனில் நாங்கள் என்ன சுருக்க எழுந்திருந்தாலும் அதற்கு முன்னேயே அம்மா குளித்திருந்தாள். விடிகாலையில் எழுந்துவிடுவாள்.
‘வசுதேவ பாலனே அசுரகுல காலனே எழுந்திரும்
யசோதா நந்தனே நந்தகுமாரனே பிருந்தாவன
நவநீத சோரனே எழுந்திரும் [லோலனே
வெட வெட குளிருக்குத் தலைமேல் இழுத்துப் போர்த் திய கம்பளியுள், கிருஷ்ணன் பேரைச் சொல்லி எங்களை எழுப்பும் பாட்டு எட்டும். அம்மாவின் நடமாட்ட சத்தங்கள் கேட்கும்.
அம்மா குரல் வேய்ங்குழல் போன்றது. சற்று உச்சஸ்தாயியில், சற்றுத் திகட்டும் இனிப்புடன்…
கம்பளியுள் முதல் விழிப்பில் கேட்கும் இந்த முதல் ஓசை தான், அன்றைய, அன்றன்றைய நடப்புக்குக் கணித்த ஸ்குதி என்று இப்போது நினைத்துக்கொள்ள எனக்கு மிகவும் பிடிக்கிறது.
ஆம், நினைத்துப் பார்ப்பதென்பதே ஸ்ருதி மீட்டல் தானே, சிந்தனையின் இசைவில், சிந்திக்கும் விஷயங்கள். அவைகளின் சூட்டின் அவசரமும் ஆத்திரமும் பின்னோக்கில் தணிந்து, தன் தன் இடத்தில் விழுந்து அமைதி பெற்று விடுகின்றன.
இதில் அம்மா, அவளைப் பற்றி நான் எண்ணும் போதெல்லாம் – அவளை எண்ணாத நாட்களே இல்லை- அவளுடைய ஸ்வரஸ்தானத்தில், அவளுடைய எண்ணத்தில், பேச்சில், செயலில், சந்தோஷங்களில், துயரங்களில் தீர்மான மாக, சுத்தமாக, உள்ளத்தின் வானில் ப்ரகாசிக்கிறாள்.
நான் தவங்கிடந்து பெற்றபிள்ளை. திலோமம் பண்ணி, விரதங்கள் முழித்து ராமேசுவரம் போய்
இத்தனை அருமையாக நான் பிறந்தபோதிலும், அம்மாவிடம் தனிக் கொஞ்சல்கள் சலுகைகள் நான் அனுப பித்ததாக அந்தச் சின்ன வயது முதற்கொண்டே. ஞாபகம் இல்லை.
பள்ளிவிட்டு வந்ததும், ஸ்லேட்டையும் புத்தகங்களை யும் வீசியெறிந்துவிட்டு அம்மா மடியில் விழுந்ததாவோ,
“அடி கண்ணே! படிச்சுக் களைச்சுப் போயிட்டியா?” என்று அவள் என்னை வாரிக்கொண்டதாவோ,
சாதத்தைப் பிசைந்து எங்களுக்கு கையில் போட்டதாவோ,
‘என்ன குழந்தையை இப்படிப் போட்டு அடிக் கறேளே!’ என்று எனக்குப் பரிந்து கொண்டு வந்ததாவோ
‘நீ சமர்த்து, கெட்டிக்காரன்’ என்று என்னை நேரில் பாராட்டினதாவோ,
பிறரிடம் பெருமைப்பட்டுக் கொண்டதாவோ, ஹும்
அதற்கெல்லாம் பாட்டிதான் சரி. வீட்டுக்குப் பாட்டி கட்டாயம் வேணும்.
ஆனால் அம்மா, பாட்டியான பிறகும், பாட்டியாக இல்லை. எனக்கு ஆச்சரியமாயிருக்கும், ஏமாற்றமாயிருக்கும், ஆத்திரம் வரும்.
ஆனால்
ஆ, இது எனக்கு மிக்கப் பிடித்தமான சொல்.
சொன்ன புத்திகள், போதித்த கோட்பாடுகள், அச்றுத்திய கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்கள் எல்லாவற் றையும் ஒரே கணத்தில் தூக்கியெறிந்து, கலகத்துக்குக் கொடி நாட்டும் சொல்.
ஆனால் அம்மா எதையும் வெளிக் காண்பித்துக் கொள்ளமாட்டாள்.
அது அவள் சுபாவம்.
தீபாவளி சமயத்தில் தலையில் ஒரு காய் எண்ணெய் வைப்பாள்.
விளையாட்டிலோ, மேலே ஏறிக் கீழே விழுந்து அடி பட்டுக் கொண்டுவந்தால், காயம் பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவுவாள்.
இதுபோன்ற அத்யாவசியங்களுக்கன்றி, அம்மாவுக்குப் பிள்ளைகளையோ பேரக் குழந்தைகளையோ தொட்டு உறவாடும் பழக்கம் இல்லை.
ஒருசமயம் பேச்சுவாக்கில்: “இந்த நாள் எதற்கெடுத்தாலும் ருஜு கேட்கிறது. தன்னம்பிக்கையில்லாத நாள். யாருக்கு எதை ருஜுப்படுத்தியாகணும்? என்னை உனக்கா? உன்னையே உனக்கா? நேர்மையில்லாத நாள்!”
ஏன் அப்படிச் சொன்னாள்? அப்போது புரியவில்லை. ஆனால் அவள் குமுறல் மட்டும் தெரிந்தது, முகத்தில் குழுமி விட்ட குங்குமத்தில்; குரலில் தெறித்த அனலில்.
ஏன், ஏன்?
இப்போ புரிகிறது
கொஞ்சம், கொஞ்சம்.
இப்படித்தான்,சூத்திரம் போல் எதையேனும் சொல்லி விட்டுச் சும்மாவாகிவிடுவாள். கேட்டாலும் சொல்லமாட்டாள். “என்னவோ அப்போ தோணித்து, சொன்னேன். போயேன்!”
நண்பர்களுடனோ, ஆபீஸ் அலுவலிலோ வேறு எக் காரணமோ, என் வழக்கநேரம் மீறி நான் வீடு திரும்ப நேர்த் கால் அம்மா வாசலில் உட்கார்ந்திருப்பாள்.நானும் உள்ளே போகாமல் பக்கத்தில் உட்கார்ந்துகொள்வேன். உள்ளே ஒரே ரகளையாயிருக்கும்.
பேசமாட்டோம். பேசத் தோன்றவில்வை.
தனிமையே ஒரு அழகிய பூ. விரிந்த பூவின் இதழ் கள் மீண்டும், படு தாயிறங்கும் இருளில் எங்கள்மேல் குவிந்து, அதனுள் நாங்கள் அந்த மோனத்தின் இதவுக்கும் மெத்’துக்கும் இனி எங்கே போவேன்?
எதை யாருக்கு ருஜுப்படுத்தியாகணுமா என்ன அம்மா பாஷையில்?
நாங்கள் இருந்த இந்த நிறைவு நிலை பாஷைக்குக் டாது. அப்பாற்பட்டது. ஆனால் இப்படியும் ஒரு நிலை உண்டு என்று தெரிகிறது. அலைதாண்டிய அமைதி. ஆனால் கடல்.
அம்மா பெருமூச்செறிகிறாள்.
அம்மா கடவுள் இருக்கிறார் என்பதில் உனக்கு நம்பிக்கையிருக்கிறதா?
அம்மா பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி, மேலுதட்டின் மேல் வலது சுட்டுவிரலையும் நடுவிரலையும் வைத்தபடி எங்கோ யோசனையிலிருந்து மீண்டாள். ‘ஊங்?’
“கடவுள்மேல் உனக்கு நம்பிக்கையிருக்கா?”
கையை விரித்துக் குறுஞ்சிரிப்புச் சிரித்தாள்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு, “திருடனுக்கும் கன்னக்கோல் சார்த்த ஒரு மூலை வேணுமில்லையா?”
நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், அம்மா புதிர் மாஸ்டர்.
ஆனால் அவளைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. எந்தப் பேருண்மைக்கும் ‘பளிச்’சான வெளிச்சம் கிடையாது.
ஒளியுள் நிழலாய்
நிழலுள் ஒளியாய்
ஒளியும் நிழலுமாய்
ஒளியில் நிழலில்
ஒளிந்து கொண்டு
களவு காட்டும்
மாய நிர்வாணம்
இல்லை
நிர்வாண மாயம்.
சத்யமாயை என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார்.
தான் அறிந்தோ அறியாமலோ இந்தக் களவு காட்டும் பாஷையால் அம்மாவும் இதற்கு உடந்தை
பத்து நாட்களுக்குமுன் ஓரிரவு தூக்கமிலாது. புரண்டு கொண்டிருக்கையில், எண்ணங்களின் கடையலில் ‘தொப் புள்கொடி” என்று ஒரு சொற்றொடர் தோன்றிற்று.
(மனம் எப்போத்தான் சும்மாயிருக்கிறது, சும்மா விட்டது?)
ஆம், கொடியை அறுத்துவிட்டாலும், அதுவாய் அறுந் தாலும் அல்ல இற்று விழுந்தாலும் கொடி உறவின் பிணைப்பு விட்டுப் போவதில்லை.
போவதேயில்லை.
அகிலத்தையே அப்படி ஒரு தொப்புள் கொடி சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் மறுபெயர் அம்மா.
அம்மா, நான் அறிந்த அவள் இளமையிலேயே சற்றுக் கொழ கொழவென்று இருப்பாள். சந்தனச் சிவப்பு.
வெள்ளைப் பசு.
நாளடைவில், கூந்தலின் கறுகறு, சாம்பல் நிறமாக மாறி, அது அலை நுரையாகி,மஞ்சள் பூத்து, சமுதாயம் நெற்றியில் அழித்துவிட்டாலும், பிறவியின் மங்கலம் தழைத்து,வாழ்க்கையின் அடிமேல் அடிக்கு வைத்த பெயர் அனுபவம் மேல் பூத்த புற்றினுள், தன் விரக்தியின் தனி மையில் வீற்றிருந்தாள்.
விரக்தியா? வீம்பா?
அம்மா பெயர் ஸ்ரீமதி.
வாழ்க்கையில் அம்மா ரொம்ப அனுபலித்துவிட்டாள். சின்ன வயதிலேயே பெற்றோர்களை இழந்து, திருமணமான பின், பெங்களூரில் குடித்தனம் பண்ணுகையில் ஒரே வார இடைவெளியில் தம்பிகள் இருவரையும் ப்ளேக்கில் இழந்து அம்மாவும் அண்ணாவும் கோடைவிடுமுறைக்குச் சென்னைக்கு வந்திருந்த சமயத்தில், அண்ணா திடீரென்று இறந்துபோனார்.
அந்த வாரத்துக்குள்ளேயே. வீட்டு மாப்பிள்ளை, ஜுரத்தில்.
அம்மா கிராமத்துக்குத் திரும்பவேயில்லை. பிள்ளைகளுடன் தங்கிவிட்டாள்.
சில வருடங்கள். இன்னொரு பெண்ணை ஜுரத்தில் இழந்தாள்.
அடுத்த வருடம், என் தம்பி, மாரடைப்பில். குடும்பத்தின் தூண்.
“ஆண்டவனே உனக்குக் கண் இல்லையா?” கதறுகிறோம். துடிக்கிறோம். தூற்றுகிறோம். அடுத்தே “விதி யாரை விட்டது?” என்று கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறோம். தத்துவம் பேசுகிறோம். சிரிக்கிறோம்.
விவஸ்தை கெட்ட ஜன்மா. ரோசம் கெட்ட பிழைப்பு.
ஆனால் திருடனுக்கும் கன்னக்கோல் சார்த்த முலை வேண்டும்.
என் கசப்பில் நான் சொல்கிறேன்.
ஆனால் அம்மாவிடமிருந்து இதுவரை ஒரு வார்த்தை வந்ததில்லை.
அம்மா வெளிக் காண்பித்துக் கொள்ளமாட்டாள் அது அவள் சுபாவம்.
ஆனால் இப்போதெல்லாம் அவ்வப்போது நெஞ்சைத் தடவிக்கொள்வாள்.
“விடமுண்டகண்டன்” தேவாரத்தில் வருகிறதோ? உள்ளே இறங்கவில்லை.
“என்னம்மா பண்றது?”
“நெஞ்சை அடைக்கிறது சரியாப் போயிடும். குடிக்கத் தண்ணீர் கொடேன்.ஊம், அம்மாடி! சரியாப் போயிடுத்து. GAS அடைச்சிருக்கு.”
ஆனால் சரியாய்ப் போய்விடவில்லை. இந்த நெஞ்சடைப்பு மாதம் ஒருமுறையிலிருந்து இருமுறையாகி, அப்புறம் வாரம் இருமுறை, அப்புறம் தினம், எப்போ வேணுமானாலும் வேளையே கிடையாது.
உயிர் விடுதலைக்குத் தயாராயிருக்கிறது. உடல்தான் லேசில் அதை விடுவதில்லை. உயிரோடு பூமியில் விழுந்த திலிருந்து இத்தனை காலம் உயிருடன் பழக்கம், உடல் தன் அழிவை லேசில் ஒப்புக்கொள்வதில்லை. பிடியை லேசில் விட மறுக்கிறது.
“எங்கே ஆபீஸுக்குக் கிளம்பறியா?”
“ஆமாம்”
“ஒரு நிமிஷம் என்னை உன்மேல் தாங்கிக்கோயேன். அதனால் என் அவஸ்தை குறையப் போவதில்லை. மனசுக்குத்தான் ஏதோ ஆறுதல். அம்மாடி!”
“ஒரு வேடிக்கை பார்த்தையா? அன்று நீ குழந்தையா இருந்தபோது மடியில் வளர்த்திண்டேன். இன்று என் வேளையில் உன் தோள்மேல் சாஞ்சுக்கிறேன். கணக்கு சரியாப்போச்சு இல்லே?”
லேசாகச் சிரிக்கிறாள்.
அன்று – என்றோ.
கிராமத்துக்குப் போயிருந்தேன். பழைய நினைவுகளின் ஈர்ப்பு, அங்கே, நாங்கள் விட்டுப்போன கிராமம் இல்லை. மின்சாரம், வானொலி, ஒலிபெருக்கி, இரைச்சல் எல்லாம் புகுந்தாச்சு. நாட்டில் கிராமங்களே இப்போது இல்லை, அது ஆறுதலுமில்லை.
எதிர் வீட்டில் முதலியார். அவர் குடும்பம்? இடமே சிதிலமாயிருந்தது.
ஸில்லி.நீ வரும்வரை காத்திருப்பார்களா? என்ன எதிர் பார்க்கிறாய்? காத்திருக்கணுமா?
எங்கள் வீடு, ஆவலுடன் ஆசையுடன் வாசற்படி மிதித்ததும் குரைத்துக்கொண்டு ஒரு நாய் வெளியே வந்தது.
“உஷ் – down, down, ஜிம்மி. யார் சார் நீங்க? யார் உங்களுக்கு வேணும்?”
“யாரும் வேண்டாம்” என் குரலில் அழுகையே நடுங்கிற்றோ என்னவோ? “இங்கே சின்ன வயசில் நாங்கள் குடியிருந்தோம். சும்மாப் பார்க்க”
“அப்படியா வாங்க, வாங்க!”
ஆனால் அங்கே பாக்க என்ன இருக்கிறது? அவரைப் பந்தலையும், செடிகளையும், மாட்டுக் கொட்டாயும்-
மடையா!
இல்லை, நான் இந்த சமயத்துக்கு மன்னிப்புக்கு உரியவன். சில சமயங்களில் எண்ணத்தின் வார்ப்படம் எண்ணும் அவாவில் விழும் வேகத்தில், கனத்தில், காலம் கூட அதனடியில் சிக்கிக்கொண்டு அழுந்திவிடுகிறது. நேரம் என்னவோ சொற்பம்தான். ஆனால் இந்தப் ப்ரமை நிகழ்ந்தது நிகழ்ந்ததுதான். அதுவரை நாம் பாக்யவான்கள் ஆவோம்.
இடம் சாய அடியாக மாறியிருந்தது. ஒருபக்கம் சாயம் ஏற்றிய நூல்கள் கற்றை கற்றையா கொடியில் உலர்ந்து கொண்டிருந்தன. அங்கங்கே தரையில் சாயம் குட்டை குட்டையாத் தேங்கி நிரந்தரமாய்த் தங்கிவிட்ட துர் நாற்றம்.
ஆனால் அதோ என்ன?
சுவரோரத்தில் ஒரு அவரைக்கொடி, நட்டுவைத்த ஒரு கொம்பில் சுற்றிக்கொண்டு ஏறி அந்தரத்தில், துளிர் சுருண்டு தத்தளித்துக் கொண்டிருந்தது. தூக்கிவிட்டால் ஓட்டுக் கூரைமேல் தொற்றிக்கொள்ளும்.
“அட நீ எப்போ வந்தே?”
இப்போ எனக்கு நன்றாகப் புரிந்தது, அம்மாவுக்கும் அவள் செடிகளுக்குமிடையே பாஷை.
கண்ணீர் மறைத்தது.
தலையைக் குனிந்துகொண்டு, சாமர்த்தியமாக வெளி யேறி விட்டேன்.
உலகத்துக்கெல்லாம் ஒரே தொப்புள் கொடி.
அம்மா.
– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.