அம்மாவின் வெற்றி!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 2,933 
 
 

ஒரு புயல் போனால், மற்றொரு புயல் வந்துவிடுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் சிறு சாரலும் மார்கழி குளிருடன் சேர்ந்து கொண்டது.குளிரூட்டப்பட்ட அறையின் கண்ணாடி சுவர்களில் சாரிசாரியாக வேர்த்து வடிந்து கொண்டிருந்தது. அலுவலகத்துக்குள் இருந்து கொண்டே மழையின் அளவை அலைபேசியின் மூலம் அறிந்து கொண்டான் சோமசுந்தரம்.மழை அங்கியை தரித்துக் கொண்டு புறப்பட தயாராக இருந்த போது அலைபேசியில் அம்மாவின் அழைப்பு.

“சோமு பிரியாணி தயாரா இருக்கு. வீட்டுக்கு  வந்துட்டு போ. டப்பால எடுத்து வெச்சுண்டிருக்கேன்”

நாவில் எச்சூற சுறுசுறுப்பாகிவிட்டவன், பிரியாணியை பெற்றுக் கொண்டு தன் ஆத்துக்கு விரைந்தான். ஆம், திருமணம் ஆனபின் தனிக் குடித்தனம் போய்விட்டவனுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த வீடு அமைந்துவிட்டது. அவன் அம்மாவை அழைத்தும் வரவில்லை. அப்பாவின் ஓட்டு வீட்டிலே தன் ஆத்மாவும் சாந்தி பெற வேண்டும் என்ற வேண்டுதல் அவளுக்கு. பிடிவாதமாக இருந்தாள். வாடகை வீட்டில் இருந்த தன் மனைவியின் குடும்பத்தை தன்னுடன் இருத்திக் கொண்டான். ஆளுக்கொரு பதார்தங்களை தயார் செய்வார்கள் அதன் நிறை குறைகளை விமர்சனம் செய்து கொள்வார்கள். ஒரு நாளும் அது மனக் கசப்பில் முடிந்தது இல்லை.

அம்மாவின் வெஜ் பிரியாணி அவர்கள் தெருவெல்லாம் மணக்கும். பிரபலமானவள்.வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அவளை விசேசமாக அழைப்பார்கள்.பணம் பெறாமல் நட்பின் பொருட்டு பிரியாணி சமைத்து கொடுப்பாள்.

அம்மாவுக்கு பக்கத்து ஆத்து அம்மாமியுடன் அந்தியந்த நட்பு. ஓய்வு நேரத்தில் நின்று கொண்டே  சதா பேசிக் கொண்டிருப்பார்கள். இருவரையும் பிரிக்கும் சுற்றுச் சுவர். அம்மாமி வீட்டு பன்னீர் மரம் தன் தேன் பூக்களை சொரிந்து கொண்டே இருக்கும். அன்றைய பட்சனங்களை பரிமாறிக் கொள்வார்கள். அதன் சுவை,காரம்,இன்னும் பிற சேர்மானங்களும் இருந்தால் சுவை மிகும் என மெல்லிய குரலில் சம்பாஷிப்பார்கள். அவன் சிறுவனாக இருக்கும் போது பள்ளிப் பாடங்களை முடித்தவுடன் அம்மாவின் வாய் பார்க்க மரத்தடிக்கு ஓடுவான். மார்கழி குளிர் ஊசியாய் தேகத்தை துளைத்துக் கொண்டிருக்கும். அம்மாவின் புடவைக்குள் புகுந்து கொண்டு கோழியின் செட்டைகளுக்குள் பதுங்கி தலையை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும் குஞ்சுகளைப் போல் சோமுவும் இருப்பான்.

இன்று அம்மாவின் கைபக்குவத்தை மனைவியிடம் சொல்லும் போது , அவள் அமைதியாகிவிட்டாள். மௌனமாகும் உரையாடல் சோமுவுக்கு சில சமயங்களில் மனக்காயமாகும். அந்த சமயங்களிலெல்லாம் தன் தோப்பனாரை நினைத்துக் கொள்வான்.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எத்தனை ஆழ்ந்த பிணைப்பு . ஒரு சிறு சொல் கொண்டுகூட அம்மாவை காயப்படுத்த மாட்டார்.

அப்பாவின் அலுவலகத்தில் அம்மா வைக்கும் வத்தகுழம்பும், மோர்குழம்பும் மிகவும் பிரபலம்.எப்போதும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அம்மாவின் கைநேர்தியை விமர்சிப்பதும் உண்டு.அதனாலேயே மதியவேளையில் தனி அறையில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். தன் இல்லாளை மத்தவா சிலாகிப்தை கிஞ்சித்தும் விரும்பாதவர்.

இரவு ஆகிவிட்டதும் எல்லோரும் சாப்பிட அமர்ந்தார்கள். முதலில் அம்மாவின் பிரியாணியை ஒரு அகப்பை வைத்துக் கொண்டார்கள். முதலில் அவன் மாமியும், பின்பு அவன் மாமனாரும் கடைசியாக மனைவியும் காரசாரமாக விமர்சித்தார்கள். அதற்கு மேல் அவர்கள் போட்டுக் கொள்ளவில்லை. மோர் சாதமே போதும் என்றாள் மனைவி.

சோமு எல்லாவற்றையும் தனியாளாக போட்டு சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். மௌனமாக. ஒவ்வொரு உருண்டையாக இறங்கிக் கொண்டிருந்தது.அந்த பிரியாணியின் சுவையை தன்னுடன் சேர்ந்து பேச ஒருவர்கூட இல்லையே என விசனப்பட்டான்.அவன் மீது காற்று கழிவிரக்கம் கொண்டு சுமந்து சென்றது, பிரியாணியின் மணத்தை.

‘படா’ரென்று கதவு திறக்கும் சப்தம் கேட்டவுடன் எல்லோருடைய கவனமும் வாசல் பக்கம் திரும்பியது. எதிர் வீட்டு நிஷாகந்தி உள்ளே வந்தாள். “பிரியாணி மணக்குதே..உங்க ஆத்துல தானே!”-என்றாள்.மௌனத்தை கலைத்துவிட்ட உண்மை.மெல்ல புன்னகைத்தான் சோமசுந்தரம்.வலுவிழந்துவிட்டது புயல்.

‘அம்மா, நீ ஜெயிச்சிட்டே!’ 

.

2 thoughts on “அம்மாவின் வெற்றி!

  1. சிறுகதைகள் அனைத்தும் வாழ்க்கை அனுபவங்கள்.அதுவே வாழ்க்கை பாடங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *