அம்மாயி மனசும், ஆலமர சுருட்டும்





அந்த வீட்டுக்கு நவீன் குடி வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. சமீபத்தில் தான் அவனுக்கு வசந்தியோடு திருமணம் ஆகி இருந்தது. திருமணம் முடிந்தவுடனே, அவனோடு வசந்தியை சீர் வரிசையோடு அனுப்பி வைத்து, தனி வீடும் பார்த்து குடி வைத்து விட்டார்கள்.

ஓரு தனிகுடித்தனத்துக்கு தேவையான வசதிகளாக… நாலு எட்டு வைத்தால் மளிகை, பால், பழம், காய்கறி எல்லாம் கிடைக்கும். ஒரு தெரு தாண்டினால் பஸ் ஸ்டாப், பள்ளிக்கூடம். அந்த தெரு முனையிலேயே விநாயகர் , அம்மன் கோவில் என்று எல்லாம் இருந்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி.
ஹவுஸ் ஓனர் ஆறுமுகமும் அமைதியான மனிதர், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய கடை தெருவில், பெயிண்ட் கடை வைத்து இருக்கிறார். தினமும் காலையில் பத்து மணிக்கு அவர் மனைவியோடு கடைக்கு போவார். அவருடைய மனைவிதான் கடையின் கல்லா, கணக்கு வழக்கு பார்கிறார்கள். அவர் மனைவியை இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர் கடையை பூட்டிக்கொண்டு வர ஒன்பது மணி ஆகிவிடும். அவருக்கு ஒரே மகன், வெளிநாட்டுல படிச்சிட்டு இருக்கிறதாக சொன்னார்.
நவீனுக்கும் பக்கத்தில் உள்ள மோட்டார் கம்பெனியில் வேலை. காலையில் ஏழு மணிக்கு பைக் எடுத்துட்டு வேலைக்கு போனால், மாலை நாலு மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவான். ஓவர் டைம் ஏதும் செய்ய வேண்டி இருந்தால் இரவு ஏழு மணிக்கு வருவான்.
அதனால் ஞாயிறு ஒரு நாள் மட்டுமே எல்லோரையும் அங்கே ஒன்றாக பார்க்க முடியும்.
மனைவி வசந்தியோடு நவீனுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக போய் கொண்டிருந்த நேரத்தில், ஒருநாள் ஹவுஸ் ஓனர் கிராமத்தில் இருந்த அம்மாயியை அந்த வீட்டிற்கு கூட்டி வந்தார்.
ஹவுஸ் ஓனர் ஆறுமுகத்துக்கு, சின்ன வயதிலேயே அம்மா இறந்து விட்டதால் அம்மாயிதான் அவரை வளர்த்து ஆளாக்கி விட்டதாம். அவங்க
கிராமத்தில இருக்கிற நிலத்தை பார்த்துகிட்டு, அம்மாயி அங்கேயே இருக்குமாம். இவரை பாக்கணுமுன்னு நினைப்பு வந்துட்டா மட்டும், இவரை கிராமத்துக்கு வரச்சொல்லி, இவர் கூடவே இங்க ஊருக்கு வந்து கொஞ்ச நாள் தங்கி இருக்குமாம். அப்படித்தான் இப்பவும் வந்து இருக்கு, என்று நவீனிடம் சொன்னார்.
அம்மாயிக்கு வயது எண்பது தாண்டி இருக்கும். இருந்தாலும், ஒரு இடத்தில் உட்காராமல், வீட்டை பெருக்குவது, துணி துவைப்பது, துணிகளை மடித்து வைப்பது, விறகு அடுப்பை மூட்டி வெந்நீர் வைப்பது என்று ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கொண்டே இருப்பது வசந்திக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஆரம்பத்தில் பகல் வேளையில் யாரும் வீட்டில் இல்லாத காரணத்தால், அம்மாயிக்கு குடிக்க சுடு தண்ணி வைத்து கொடுப்பது, ரசம் வைச்சு கொடுப்பது என்று வசந்தி அடிக்கடி ஏதாவது ஒரு வேலை செய்து கொடுத்து கொண்டு இருந்தாள்.
அதை கூட ஏதோ வயதான பாட்டிக்கு ஒரு உதவியா இருக்கட்டுமே என்று நினைத்து அவள் செய்தாலும்… ‘அம்மாயி’யின் பேச்சும் நடவடிக்கைகளும் அவளுக்கு தொந்தரவாக தெரிந்தது.
அம்மாயிக்கு வீட்டில் வேலை ஏதும் இல்லாவிட்டால், உடனே வசந்தியின் வீட்டுக்குள் வந்து,
“வசந்தி என்ன செய்றே” என்று கேட்டு பேச்சு குடுப்பது, ‘இதை இப்படி பண்ணு, அதை அப்படி பண்ணு’ன்னு அட்வைஸ் செய்வது அவளுக்கு பிடிக்கவில்லை.
கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று வீட்டு கதவை தாளிட்டு கொண்டு அவள் உள்ளே இருந்தாலும், சமையல் அறை ஜன்னல் வழியே அப்பப்ப அம்மாயி எட்டி பார்த்து விட்டு போவது, அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
இதை பற்றி வசந்தி, நவீனிடம் புலம்ப,
“அந்த பாட்டி கிராமத்தில் இருந்து வந்தவங்க , அப்படிதான் இருப்பாங்க. இந்த நகரத்தில இருக்கிற மனுசங்கதான், அடுத்த வீட்டில் யார் இருக்கான்னு கூட கண்டுக்க மாட்டாங்க. பாவம், அதுக்கு பேச்சு துணைக்கு யாரும் இல்லன்னு போர் அடிக்குமா இருக்கும். அவங்க கொஞ்ச நாள்ல திரும்பவும் ஊருக்கு போய்டுவாங்க. விடு பாத்துக்கலாம்”
என்று சொல்லி வசந்தியை சமாதானம் செய்தான்.
ஆனால், அப்போது வசந்தி சொன்ன இன்னொரு விஷயம் தான் அவனுக்கு புதுமையாக இருந்தது.
“அதுவமில்லாம… சுருட்டு புகைக்கற வாசனை வீட்டுக்குள்ள இருந்து வருதுங்க. அம்மாயிக்கு இந்த வயசில இப்படி ஒரு பழக்கம் வேற இருக்கு போல…”
என்று வசந்தி சொல்ல… அந்த தகவல் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நவீனுக்கு புகை பிடிக்கிற பழக்கமும் இல்லை, அந்த வாசனையும் பிடிக்காது என்பதால்… அம்மாயி சுருட்டு பிடிக்கறாங்க என்கிற தகவல் தெரிந்ததும், அம்மாயி மீது அவன் வைத்திருந்த மரியாதையை அது குறைத்து விட்டது.
அடுத்த நாள் ஞாயிற்று கிழமை, விடுமுறை நாள் என்பதால், காலையில் வெகு நேரம் கழித்து தான் நவீன் எழுந்தான்.
எழுந்ததும், பல் துலக்கி,கை கால் முகம் கழுவி விட்டு, காபிக்கு வெளியே போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வர கிளம்பினான்.
அவன் வாசல் கதவை திறக்க வந்த போது, சமையல் அறை ஜன்னல் திறந்து இருப்பதை பார்த்தான். அவன் அந்த ஜன்னலை பார்த்த அதே நேரத்தில்…
அந்த ஜன்னலில் திடீரென ஒரு முகம் தெரிந்தது.
வெண்ணிறத்தில் சுருட்டை தலை முடியோடு, கருவளை சூழ்ந்த இடுங்கிய கண்களோடு… அம்மாயி முகம் ஜன்னலில் தெரிந்தது, அதை பார்த்ததும் நவீன் ஒரு நொடி அதிர்ந்து விட்டான்.
இவன் பார்ப்பதை கவனித்து விட்டு அம்மாயி, தலையை பின்னால் இழுத்துக்கொண்டதை கவனித்தான்.
அம்மாயி பற்றி வசந்தி சொன்னது நவீனுக்கு நினைவுக்கு வந்தது. அன்று வசந்தியிடம் அவன் சமாதானமாக பதில் சொல்லியிருந்தாலும், இப்போது ஏனோ அவனுக்கு கோபம் கோபமாக வந்தது.
அதனால் வேகமாக கதவை திறந்து வெளியே போய் …
“என்ன பாட்டி , என்ன வேணும்.?! எதுக்கு ஜன்னலில அப்படி எட்டி பாக்கறீங்க?!”
என்று கடுப்பாக…ஒரு வித எரிச்சலோடு கேட்டான்.
“ஆங் … அது வந்துப்பா … விடிஞ்சி இம்புட்டு நேரம் ஆயிடுச்சே, வசந்திய வெளியே காணலையே… ஏதும் உடம்புக்கு சொகமில்லயோன்னு எட்டி பாத்தேன். வசந்தி மகராசி …ஒரு தங்கமான பொண்ணுதான் உனக்கு பொஞ்சாதியா கிடைச்சு இருக்கா.! பெரியவங்கள எப்படி அனுசரணையோடு அக்கறையா பார்த்துக்கணும்ன்னு தெரிஞ்சு வைச்சிருக்கா. அவளை நீ எப்பவும் சந்தோசமா, நல்லபடியா பாத்துக்கணும் அப்பு “
சுருக்கம் விழுந்த கன்னங்கள் விரிய, பழுப்பு நிற பற்களை காட்டி புன்னகைத்தபடியே, அம்மாயி பொறுமையாக பதில் சொன்ன விதம், நவீனுடைய கோபத்தை தணிய வைத்து விட்டது.
“சரி பாட்டி, இன்னக்கி ஞாயிற்று கிழமை. எனக்கு லீவு நாளு.. அதனால கொஞ்சம் லேட்டா தான் எழுந்திருப்போம். ஆனா… நீங்க இப்படி ஜன்னல்ல எல்லாம் எட்டி பாக்காதீங்க.! தீடீர்னு பார்த்தா பயமா இருக்கில்ல… அதான் சொன்னேன்.”
“சரிப்பா… எனக்கு காலையில எழுந்ததில இருந்து, இந்த முழங்கால் வலி அதிகமா இருக்கு. நேத்து வசந்தி ஒரு தைலம் போட்டு விட்டா… வலி கொஞ்சம் தேவலையாக இருந்தது. அவகிட்டே அதை கேட்கலாமுன்னு வந்தேன். நான் எப்பவும் இப்படித்தான், அவ தூங்கி கிட்டு இருந்தா கதவை தட்டி எழுப்ப கூடாதுன்னு, இப்படி ஜன்னல் வழியா பார்ப்பேன்.”.
அவர்களின் பேச்சு சத்தத்தை கேட்டு, வசந்தியும் எழுந்து வந்தாள்.
அம்மாயி அவள் மீது வைத்திருக்கும் நல்ல அபிப்ராயத்தையும், அக்கறையான பேச்சையும் கேட்ட வசந்திக்கு, மனசுக்கு வருத்தமாக இருந்தது.
‘நவீன் சொன்னது போல, அம்மாயியோட கிராமத்து சுபாவத்தையும்… நல்ல மனசையும் புரிந்து கொள்ளாமல், அவங்களை தப்பாக நினைச்சுட்டேனே !’ என்று நினைத்தாள்
“வசந்தி பாட்டிக்கு தைலம் எடுத்து குடு. நான் பால் வாங்கிட்டு வரேன்”
என்று சொல்லி விட்டு நவீன் கடைக்கு கிளம்பினான்.
“ஆங் அப்பு.. அப்படியே எனக்கு ஒரு ஆலமர சுருட்டு ஒண்ணு வாங்கிட்டு வரியா.? இந்தா இந்த ரூபாவ வாங்கிக்க “
அம்மாயி தனது சுருக்கு பையில் இருந்து கசங்கிய பத்து ரூபா நோட்டை எடுத்து நவீனிடம் கொடுக்க…
தைலம் எடுக்க, வீட்டுக்குள் திரும்பிய வசந்தி.. பாட்டி சொன்னதை கேட்டதும், முகம் சுளித்தாள்.
நவீனோ ஷாக் அடித்தது போல ஒரு நிமிடம் நின்று விட்டு… பின்பு பல்லை கடித்துக்கொண்டு, அம்மாயியை பார்த்து கேட்டான்.
“ஏன் பாட்டி… உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. சுருட்ட புகைக்கறது உங்க உடம்புக்கு கெடுதல் இல்லையா?! அது வேணாமே.! விட்டுடலாமே…!”
அவனுடைய அறிவுரையை கேட்ட அம்மாயி, மீண்டும் தன் பழுப்பு நிற பற்களை காட்டி சத்தமாக சிரிக்க …
அவன் முகம் சிவந்து அம்மாயியை முறைத்தான்.
“அட…அப்பு.. நான் சுருட்டல்லாம் பிடிக்கிறதில்லை. என் ஊட்டுகாரரு என்னை விட்டு போய் பத்து வருஷம் ஆவுது. அவருக்குதான் இந்த ஆலமர சுருட்டு மேல அம்புட்டு ஆசை. அவரு நெனைப்பு வர்றப்ப எல்லாம் அவரு புடிச்ச சுருட்டு வாசனை தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும். அவரோட ஒரு சோடி செருப்பை என் கூடவே வெச்சுருக்கேன். நான் தூங்கறப்ப அத என் தல மாட்டுல வெச்சுப்பேன். எப்பவாவது அவரு நெனைப்பு வந்தா… ஒரு சுருட்டை வாங்கி, அதை அந்த செருப்புக்கு பக்கத்தில பத்த வச்சு, அவரை நினச்சு கும்பிட்டுக்குவேன். அந்த சுருட்டு புகை வாசனையில, நான் அவரோடு இருந்த காலத்தை நெனைச்சுட்டே படுத்து கிடப்பேன். அதுக்குதான்.”
அம்மாயி, தன் புருஷனிடம் வைத்துள்ள அந்த ஆத்மார்த்தமான நேசத்தை பத்தி கேட்டதும் , இருவரும் வியந்து போனார்கள்.
நவீன் ஏதும் பேசாமல் அம்மாயி கொடுத்த பத்து ரூபாவை வாங்கிக்கொண்டு கடைக்கு போக, வசந்தி தைலம் எடுக்க வீட்டுக்குள் போனாள்.
இந்த நிகழ்வுக்கு பிறகு ஒரு வாரம் கழித்து , நவீனுக்கு மதிய உணவு இடைவேளையில், வசந்தியிடம் இருந்து போன் அழைப்பு வந்தது.
“என்னங்க.. உடனே வீட்டுக்கு வாங்க.! இங்க என்ன என்னவோ நடந்துடுச்சு.! பயமாயிருக்கு.! அம்மாயிக்கு வேற தலையில அடிபட்டு இருக்கு.”
அழுதுகொண்டே பேசிய வசந்தியின் குரலில் இருந்த நடுக்கத்தையும், பேச்சில் தெரிந்த பயத்தையும், நவீன் புரிந்து கொண்டான்.
அதனால் ஏதும் பேசாமல் “இதோ வரேன் ” என்று சொல்லி போன் அழைப்பை துண்டித்தான்.
உடனடியாக கம்பெனி மேற்பார்வையாளரிடம் சொல்லி விட்டு அவசரமாக பைக்கில் கிளம்பி வீட்டுக்கு வந்தான்.
அங்கே அவனுக்கு முன்பே ஹவுஸ் ஓனர் ஆறுமுகமும், அவர் மனைவியும் இருந்தனர். மேலும் புதிய முகங்களாக நான்கைந்து பேர் அங்கே கூட்டமாக கூடி இருந்தனர்.
அம்மாயி கண்களை மூடி வீட்டின் முன்னறையில் கட்டிலில் படுத்து இருக்க, எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் ஹவுஸ் ஓனர், இப்போது முகம் வாடிப் போய் சோகமாக இருந்தார். அம்மாயி தலையில் ஒரு கட்டு போட்டு இருந்தது.
வசந்தி இவனை பார்த்ததும் ஓடி வந்து, அவனுடைய கையை பிடித்துகொண்டாள்.
“அம்…அம்மாயி மட்டும் இல்லையின்னா… ம் .. அவ்வளவுதான்…எனக்கு என்ன ஆயிருக்குமுன்னே சொல்ல முடியாது..”
வசந்தி அதற்கு மேல் பேச முடியாமல்..விம்மி..கண்ணீர் பொங்க வாயை பொத்திக்கொண்டு அழ தொடங்கி விட்டாள்.
“என்னாச்சு ?!”
நவீன் பதட்டமாகி, அவளை பிடித்து தோளில் சாய்த்துக்கொண்டு சமாதானப்படுத்த முயன்றான். அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை.
“ஏன் ..என்ன ஆச்சு சொல்லு வசந்தி…?!”
அவன் அவளை உலுக்கி கேட்க…
அதை பார்த்த ஹவுஸ் ஓனர், மெதுவாக எழுந்து வந்து அவனிடம் பேசினார்.
“அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க. இங்க நடந்தத எனக்கு, மளிகைகடை அண்ணாச்சிதான் போன் பண்ணி சொன்னார். உடனே புறப்பட்டு வந்துட்டேன்.
யாரோ இரண்டு திருட்டு பசங்க… கேஸ் ஸ்டவ் விக்கறவங்க மாதிரி வந்து வசந்திகிட்ட பேச்சு குடுத்து இருக்காங்க. வசந்தி தனியா இருக்கிறத
தெரிஞ்சு, ‘சத்தம் போடாம நகையை கழட்டி குடுன்னு’, கத்திய காட்டி மிரட்டி இருக்கானுக.
அப்ப வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்த அம்மாயி, அவனுக வசந்தியை மிரட்டுறத பார்த்துட்டு… ஓஒன்னு சத்தம் போட்டு கிட்டே… விறகு கட்டையால அவனுகள அடிச்சி இருக்கு. உடனே வசந்தியும் சத்தம் போட்டு கத்தவும்… மளிகை கடை அண்ணாச்சியும், கடைக்கு வந்தவங்களும் ஓடி வந்திருக்காங்க. கூட்டத்தை பார்த்தவுடனே அந்த திருட்டு பசங்க, அம்மாயிய தள்ளி விட்டுட்டு ஓடி போய்ட்டானுங்க. நல்ல வேலை.! அம்மாயிக்கு நெத்தியில லேசான காயம் தான். “
அவர் சொன்ன விஷயத்தை கேட்க கேட்க… நவீனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
‘வசந்தி சொன்ன மாதிரி அம்மாயி மட்டும் அங்க இல்லையின்னா… என்ன ஆயிருக்கும். அம்மாயி தொல்லை கொடுக்கிறதா நினச்சுக்கிட்டு இருந்தோம், ஆனா அவங்க தான் இன்னைக்கு தெய்வம் மாதிரி நின்னு அவளை காப்பாத்தி இருக்காங்க ‘.
நவீனும் வசந்தியும் அம்மாயி படுத்திருந்த இடத்துக்கு போய் நின்று, மனதுக்குள் மன்னிப்பு கேட்டு கொண்டார்கள்.
அப்போது அம்மாயி மெல்ல கண் விழித்து வசந்தியை பார்த்து, புன்னகைத்தது. பின்பு ‘அழாதே’ என்று கையால் சைகை செய்தது.
அம்மாயி தலை மட்டில், ஒரு ஜோடி செருப்பும், இன்னும் பத்த வைக்காத ஆலமர சுருட்டும் இருந்ததை அவர்கள் பார்த்தார்கள்.
– 21 Feb 2025, My Vikatan.