அம்பியூலன்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 21, 2026
பார்வையிட்டோர்: 135 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூனியப் பிரதேசம். 

ஆள் நடமாட்டமில்லை. 

சூனியப் பிரதேசத்தின் எல்லையில் அம்பியூலன்ஸ். 

அந்த அம்பியூலன்ஸில் உணர்வற்ற நிலையில் என் மனைவியின் அம்மா. 

ஒருமாதகாலமாய் படுத்தபடுக்கையாய் பேச்சுமூச்சில்லை. 

நிலத்தில் விழுந்து மண்டை அடிபட்டு உள் காயம். 

குடும்ப வைத்தியர் கைவிரிப்பு. 

யுத்த அனர்த்த தாண்டவம். 

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலை இயங்கவில்லை. 

கொழும்பு அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதைவிட வேறுவழி யில்லை. 

கொழும்பில் மைத்துணர் வீட்டில் சகல வசதிகளும் உண்டு. தாயாரை கொழும்புக்குக் கொண்டுவரும்படி மைத்துனர் வலியுறுத்து. 

கொழும்பிற்குச் செல்வதற்கு இயக்கத்திடமிருந்து பாஸ் எடுக்க வேணும். 

இயக்கத்திற்கு யுத்தநிதியாக ஒரு தங்கப்பவுண் அல்லது பத்தாயிரம் ஒரு குடும்பம் கட்டியிருந்தால்தான் பாஸ் எடுக்கமுடியும். 

ஏற்கனவே கடும் நிர்ப்பந்தத்தினால் எமது குடும்பம் இயக்கத்திற்கு பணம் கட்டிவிட்டது. 

அம்பியூலன்ஸ் கட்டணமாக தலைக்கு இரண்டாயிரம் ரூபா வீதம் எண்ணாயிரம் ரூபா கட்டியாகிவிட்டது. அம்புலன்ஸ் கட்டணம் வேறு. 

கொழும்பிலிருந்து நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பி வருவோம் என்பதை உத்தரவாதப் படுத்துவதற்கு எங்கள் இரண்டு பெண்பிள்ளைகளில் ஒன்றை விட்டுச்செல்ல நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டோம். 

எங்கள் மூத்தமகளை எனது சகோதரியின் வீட்டில் விட்டுச்செல்ல நிர்ப்பந்திப்பு. 

இயக்கத்தின் அம்பியூலன்ஸ் மூலம் எங்கள் நால்வரையும் வவுனியா அரச வைத்தியசாலை வரையில் கொண்டுசென்று விடுவதாய் இயக்க அம்புலன்ஸ் பொறுப்பாளர்கள் கூறினர். 

சாவகச்சேரி அரச வைத்தியசாலைக்கு அருகாமையில் இயக்கத்தின் அம்பியூலன்ஸ் எடுக்க நாங்கள் மாலை நாலு மணிக்கே செல்கின்றோம். 

செஞ்சிலுவைச் சங்க கொடியுடன் ஒரு வாகனம் நிற்பாட்டப்பட்டிருக் கிறது. யாழ்ப்பாணத்திற்கும் அச்சுவேலிக்குமிடையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ‘தட்டி வான்களில்’ ஒன்றுதான் இயக்கத்தின் அம்புலன்ஸ். இதில்தான் நாங்கள் பயணிக்கவேண்டும். 

தட்டி வானுக்குள்ளே பயணிகள் உட்காருவதற்கு, இரண்டு ஒற்றைப் பலகை வாங்குகள், இரண்டு பக்கங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வாங்குகளிலும் பதினாறு பயணிகள் உட்கார்ந்திருக்கின்றனர். எனது மனைவியின் தாயாரை எங்களிருவரதும் மடிகளில் சாய்த்துப் படுக்கவைத்துள்ளோம். 

எதிர்ப்புறமுள்ள வாங்கு ஆசனத்தில் ஆஸ்த்மா நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளி ஓருவர் மரண அவஸ்த்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார். 

செல்லடியில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட மூவர் எதிர்ப்புறமாயுள்ள ஆசனத்தில் வலி தாங்கமுடியாமல் அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருக் கின்றனர். 

இரண்டு வாங்கு ஆசனங்களுக்குமிடையிலுள்ள வெற்றிடத்தில், ஐந்தாறுபேர் கீழே உட்கார்ந்து இருக்கின்றனர். நான்கு மணிக்கு கிளாலி கடற்கரைக்குப் புறப்படவேண்டிய அம்பியூலன்ஸ் தட்டிவான் ஐந்து மணியாகியும் புறப்பட வில்லை. வேறு யாராவது நோயாளியின் வருகைக்காக அம்புலன்ஸ்வான் காத்திருக்கிறதா? 

ஐந்தரை மணிக்கு அம்பியூலன்ஸ் வானுக்கு அருகாமையில், ஒரு பெரிய மோட்டார் சைக்கிள் வந்து நிற்கிறது. மோட்டார் சைக்கிளில் ஒரு வாட்டசாட்டமான தடியன் கம்பீரமாய் இருக்கின்றான். அவன் பார்வையில் திமிர்த்தனம். தடியனின் கையில் நான்கு பெரிய பவுண் மோதிரங்கள், கழுத்தில் துலாக்கொடி போன்ற தங்கச் சங்கிலி. 

தட்டிவானின் நடுப்பகுதியில் இரண்டு அரிசி மூடைகள், ஒரு சீனி மூடை, உரல் உலக்கை, இரண்டு பெரிய அண்டாக்கள் எல்லாம் ஏற்றப்படுகின்றன. நோயாளிகள் இருக்க இடமின்றி அவஸ்தைப்படுகின்றனர். 

பளை அரசாங்க ஆஸ்பத்திரியிலுள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கும் கொந்தராத்தை அந்தத் தடியன் எடுத்துள்ளான். அவன் இயக்க ஏரியாப் பொறுப்பாளனின் அண்ணன். 

தடியனுடைய மேற்பார்வையில் வானிலுள்ள பொருட்கள் பளை ஆஸ்பத்திரியின் விறாந்தையில் இறக்கப்படுகின்றன. பொருட்கள் இறக்கப்பட்டபின் ஆறு மணியளவில் அம்பியூலன்ஸ்வான் கிளாலிக் கடற்கரையை நோக்கிப் புறப்படுகிறது. 

இரவு ஏழு மணிக்கு கிளாலிக்கடலில் படகுகள் தொடர், பயணிக்கத் தொடங்குகின்றன. ஒரு யந்திரப் படகுடன் ஐந்து சாதாரண படகுகள் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படகிலும் முப்பது பிரயாணிகளுக்குமேல் ஏற்றப்பட்டுள்ளனர். ஓவ்வொரு பிரயாணியிட மிருந்தும் நூற்றுக்கணக்கான ரூபாய்கள் கட்டணமாக வசூலிக்கப் பட்டுள்ளது. அவர்களுடைய பொருட்களுக்கு கட்டணங்கள் வேறாக வசூலிக்கப் பட்டுள்ளன. 

பிரயாணிகள் படகுகள் மைஇருளில் நடுக்கடலில். ஆனையிறவு முகாமி லிருந்து இராணுவம் அகோரச் செல்லடி. 

பயணிகள் பயபீதி. திசை மாற்றப்பட்ட பயணிகள் படகுகள் அதிகாலை நாலு மணியளவில் கிளாலிக் கடலின் அக்கரையை அடைகின்றன. 

மறுகரையிலுள்ள தட்டிவானொன்றில் பிரயாணிகள் ஏற்றப்படுகின்றனர். நாங்கள் பயணித்த அம்பியூலன்ஸ் படகிலிருந்து அக்கரையிலுள்ள வானின் மேல் பகுதிக்கு ஐந்து ‘உரபாக்’ பொதிகள் ஏற்றப்படுகின்றன. அந்த பொதிகளுக்குமேல் பச்சை வாழைக்குலைகள் ஏற்றப்படுகின்றன. வாழைக்குலைகளுக்கு நீண்டு வளைந்த வாழைத்தார்கள். 

அக்கரையிலிருந்த அம்பியூலன்ஸ்வான் கிளிநொச்சி ஆஸ்பத்திரியை அடைகிறது. கிளிநொச்சி அரச ஆஸ்பத்திரியில் ஆஸ்த்மா நோயாளி ஒருவர் மாத்திரம்தான் வார்ட்டில் அனுமதிக்கப்படுகிறார். அந்த நோயாளி மாத்திரம்தான் சாவகச்சேரி அரச வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர். 

ஏனைய ஐந்து நோயாளிகள், எங்கள் நோயாளி உட்பட அனைவரும் நட்டாற்றில். 

கிளிநொச்சி ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவில் சுயநினைவற்ற நிலையில் ‘ஸ்ரெச்சரில்’ என் மாமியார் படுத்திருக்கின்றா. 

மருந்தெடுக்க வந்தவர்கள் வேடிக்கை பார்ப்பு. 

‘ஐயோ பாவம்’. சில நோயாளிகள் அனுதாபம். 

‘எணை அம்மா இஞ்சேரணை செல்லையா அண்ணராக்களை’. மருந்தெடுக்க வந்த எங்கள் அயல்வீட்டு அன்னம்மா அக்காவின் மகள் கூறுகின்றாள். 

இரண்டு வருடங்களுக்குமுன் கிளிநொச்சியில் வந்து குடியேறியது அயல்வீட்டு அன்னம்மா அக்காவின் குடும்பம். 

எங்கள் இக்கட்டான நிலையை அறிந்த செல்லம்மா அக்கா, எங்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றா. 

அன்றிரவு நாங்கள் அங்கு தங்கல். 

அடுத்தநாள் அதிகாலை புதுக்குடியிருப்பிலுள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்கு செல்கின்றார் எனது மைத்துனர். அங்குள்ள அதிகாரி களுக்கு எங்கள் இக்கட்டான நிலையைக் கூறி, எமது நோயாளி மாமியாரை கொழும்பிற்கு கொண்டுசெல்வதற்கு ஒரு அம்பியூலன்ஸ் வண்டியை ஏற்பாடு செய்கின்றார் மைத்துனர். 

கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு எங்கள் நாலுபேருக்கும் அம்பியூலன்ஸ் வாகனக் கட்டணம் ஆறாயிரம் ரூபா மாத்திரம் செலுத்தினோம். ஒரு வழிக்கட்டணம், கொழும்பிலிருந்து திரும்பி வரும் பொழுது செ.ச. தலைமை அலுவலகத்திலிருந்து மருந்து வகைகளை அம்பியூலன்ஸ் எடுத்துவர ஏற்பாடு. 

நாங்கள் பகல் பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படுகின்றோம். நாங்கள் பயணித்த அம்பியூலன்ஸ் வாகனம் வவுனியா செல்கிறது. 

வவுனியா தெற்கெல்லையில் சூனியப் பிரதேசம். 

இராணுவமோ இயக்கத்தைச் சேர்ந்தவாகளோ இல்லாத இடம்தான் சூனியப் பிரதேசம். வவுனியாவிற்கும் சூனியப்பிரதேசத்திற்குமிடையில், இயக்கத்தின் நான்கு சோதனைச் சாவடிகள். 

ஓவ்வொரு சோதனைச் சாவடிக்கு இடையிலும் பிரயாணிகள் தங்கள் பொதிகளுடன் நுாறு மீற்றர்கள் தூரம் நடந்து செல்லவேண்டும். சாவடிகளில் கடுமையான சோதனை. பிரயாணிகளையும், ஆவணங்களையும், பொதி களையும் சோதனை செய்யும் இயக்க உறுப்பினர்கள். 

பிரயாணிகளை அவமதிக்கும் வகையில் ஏச்சும் பேச்சும், கிண்டலும் கேலியுமாக அவமரியாதையுடன் நடந்து கொள்கின்றனர். 

எங்கள் வாகனம் இயக்கத்தின் இறுதிச் சோதனைச் சாவடிக்குள் பிரவேசிக்கிறது. 

‘கொழும்புக்கா போறியளே? போங்கோ, போங்கோ. இண்டைக்கு சிங்கள வங்கள் உங்களக்கு நல்ல பாடம் படிப்பிப்பாங்கள்’.இயக்க பெண் போராளிகள். 

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 

‘இண்டைக்குப் பகல் கொழும்பிலை மத்தியவங்கி குண்டுவெடிப்பு. வங்கி தரைமட்டம். நுற்றுக்கணக்கானவர்கள் குளோஸ்.’ 

ஒரு இயக்க உறுப்பினன் அட்டகாசமாய் சிரித்தபடியே கூறுகின்றான். 

எங்களுக்கப் பெரும் அதிர்ச்சி. 

நாங்கள் திகைப்புடன் அம்பியூலன்ஸ் வாகனச் சாரதியைப் பார்க்கின்றோம். 

‘நீங்கள் ஒண்டுக்குமே பயப்படவேண்டாம்.’ 

சாரதி எங்களைத் தேற்றுகிறார். 

‘இப்பிடி எத்தனையோ பயங்கரமான சந்தர்ப்பங்களில் எங்கடை செஞ்சிலுவைச் சங்க அம்பியூலன்ஸ் வாகனங்கள் எதுவித நெருக்கடிகளோ, பயபீதியோ இல்லாமல் போய் வந்துகொண்டிருக்கு. நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம்.’ 

எங்களைத் தேற்றியபடி அம்புலன்ஸ் வண்டிச்சாரதி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

எங்கள் அம்புலன்ஸ் வாகனம் முதலாவது இராணுவ சோதனைச் சாவடியை நெருங்குகிறது. 

படையினர் எங்களை என்ன செய்வார்களோ? என்ற பதட்டம் எங்கள் எல்லோருக்கும். 

சாரதி சோதனைச் சாவடிக்கு முன் வாகனத்தை நிறுத்தி, வைத்தியப் பரிசோதனை ஆவணத்தை இராணுவ அதிகாரியிடம் கொடுக்கின்றார். 

ஆவணத்தைப் பார்த்த அதிகாரி எதுவித சோதனையுமின்றி எங்கள் அம்புலன்ஸ் வண்டிப் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கின்றார். 

வவுனியாவிலுள்ள முதலாவது சோதனைச் சாவடியிலிருந்து கொழும்பு வரை இடையிலுள்ள சோதனைச் சாவடிகள் எதிலும் எதுவித கெடுபிடிகளுமின்றி நாங்கள் பயணித்த செஞ்சிலுவைச்சங்க வாகனம் மாலை ஆறுமணியளவில் எங்களை எமது வீட்டில் கொண்டுசென்று சேர்க்கிறது. 

மைத்துணராக்களிற்கு எங்கள் பிரயாணச்சிரமங்கள் பற்றி எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றோம். 

‘அப்பா, கிளாலிக் கடலின் இக்கரையில் நின்ற ஒரு வானில நாங்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு வந்தோமல்லவா?’. 

‘ஓமோம், சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு அருகிலிருந்து கிளாலிக் கடற்கரைக்கு நாங்கள் பிரயாணம் செய்த தட்டி வான் போல, இக்கரையிலிருந்தும் ஒரு தட்டி வானில் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு வந்தோம்’ 

‘அந்த வானில் செஞ்சிலுவைச் சங்கக் கொடி கட்டி இருந்ததல்லவா? அப்போ அது செஞ்சிலுவைச் சங்கத்தின் வானோ? 

‘இல்லை, அது இயக்கத்திரை வான்.’ 

அந்த வானின் மேலே இயக்கப் பெடியள் ஐந்து ‘உரபாக்’ பொதிகள் ஏத்தினார்கள். அந்தப் பொதிகளில் என்ன இருந்திருக்கும்? ‘AK 47 துப்பாக்கிகள்’.

– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *