அப்பாவின் நிழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 145 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

வெயிலின் அருமை நிழலில் தெரியும்.

இந்த வாசகத்தை நாளைக்கு ஒரு தடவையாவது தனக்கு தானே சொல்லி கொள்வான் கருப்பையா. அலுவலகத்தில் இந்த வாசகத்தை தனக்கு எதிரே ஒரு சிறிய போர்டில் தன் கண்ணில் அடிக்கடி படும் படி எழுதி வைத்திருப்பான்.

கருப்பையா, மதுரைக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அப்பா, சிறு விவசாயி. ஒரளவு நிலமும், மாடுகளும் சொந்தமாக வைத்திருந்து அதிலிருந்து வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்து வாழ்கின்றவர்.

இவனை படிக்க வைத்ததெல்லாம், அரசாங்க பள்ளியிலும், கல்லூரியிலும். கிராமத்தில் இருக்க கூடிய சௌகரியங்களுக்கு நடுவில் வாழ்ந்தவன். வீட்டில் மண்ணெய் விளக்குதான். பஞ்சாயத்து கூடத்தில் மின்சார விளக்கு இருக்கும். அங்கு போய்தான் படிப்பான். படிப்பில் கெட்டி. பள்ளிகூடத்தில் ஆசிரியர்கள் நன்றாக உதவி செய்தார்கள். இவன எப்படியும் ஒரு டிகிரி வாங்க வைத்து அரசாங்க வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என்பதில் அவன் அப்பா குறியாக இருந்தார்.

படிப்போடு சேர்த்து, விவசாய வேலைகளையும், மாடுகள் பராமரிப்பதிலும் உதவியாக இருப்பான். ஆரோக்கியமான உணவுகளும், உடல் உழைப்பும் அவனை கட்டுமஸ்தான இளைஞனாக வளர உதவியது. அவன் கல்லூரிக்கு சென்ற பின் தான் வீட்டில் மின்சார வசதி வந்தது. படிப்பை முடித்து, ஆசிரியர்களின் ஆலோசனை கேட்டு வேலை தேட ஆரம்பித்தான்.

கள யதார்த்தம் வேறு மாதிரி இருந்தது. அவன் படிப்பை முடித்த காலத்தில், வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக இருந்தது. அவன் கிராமத்தில் இருந்த சௌகரியத்தை வைத்து அவனால் போட்டி தேர்வுகளுக்கெல்லாம் தன்னை தயார் செய்ய முடியவில்லை. அப்பாவிடம் பேசாமல், விவசாயம் செய்ய உங்களுடன் வந்து விடுகின்றேன் என்று சொல்லி பார்த்தான். அப்பா ஓப்பு கொள்ள வில்லை.

“உன்னை படிக்க வைச்சதே, நீயாவது நம்ம குடும்பத்தில இந்த கரிச காட்டில கிடந்து சாகாம, ஏதாவது ஆபிஸுல வேலைக்கு போவனுதான். உன் பையன் இன்னும் வேலைக்கு போகலையான்னு கேக்கும் போது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. நீ இங்க இருந்தது போதும். உங்க மாமா திருப்பூரில் இருக்கான். அவன் கிட்ட பேசினேன். உன்னை அனுப்ப சொன்னான். அங்க வேலை வாங்கி தர்ரேன்னு சொல்றான். அங்க போய் வேலை பார்த்து கிட்டே, அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணு” என்று சொல்லி திருப்பூருக்கு அனுப்பி வைத்தார்.

மாமாவின் வீடு ஒரு குறுகலான சந்தில் இருந்தது. சின்ன ஓட்டு வீடு. இவன் கொண்டு போன பெட்டியை பார்த்து பயந்து விட்டார்.

“டேய், இங்க மனுஷன் இருக்குறத்துக்கே இடமில்ல. இதில இவ்வளவு பெரிய பெட்டிய எங்க வைக்க?. சரி எப்படியும் நீ வேலைக்கு சேர்ற இடத்துல தங்குறதுக்கு எடம் தருவாங்க, அது வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” என்று சொல்லி விட்டு, அவன குளித்து விட்டு வர சொன்னார்.

“இந்தா இட்லியை சாப்பிடு. சைக்கிள் ஓட்ட தெரியும்ல. முதலாளி வீட்டுக்கு போகனும். அங்க போனாதான் என்ன வேலைன்னு தெரியும்” என்று அவரும் கிளம்பினார். அவரை பின்னாடி உட்கார வைத்து டிராபிக்கில் சைக்கிள் ஓட்டுவது கஷ்டமாக இருந்தது. சமாளித்து ஒரு வழியாக ஓட்டிட்டு போய் மாமா சொன்ன ஒரு வீட்டின் முன், வீடு என்று சொல்ல கூடாது, அது அரண்மனை, நிறுத்தினான்.

“பரவாயில்லை, சைக்கிள் நல்லா ஓட்டுற” என்ற பாராட்டுடன், “வா உள்ள போகலாம்” என்று, வாசலில் உள்ள வாட்ச் மேனிடம், “ இவன் தான்பா நான் சொன்ன பையன், என் தங்கச்சி பையன். டிகிரி படிச்சவன். ஐயா கிட்ட சொல்லி இருந்தேன், கூட்டிட்டு வரச் சொன்னார்” என்று உள்ளே அழைத்து போனார்.

லான் பெரிதாக இருந்தது, எப்படியும் வாசலில் இருந்து, போர்டிக்கோவுக்கு போவதற்க்கே 5 நிமிடத்திற்க்கு மேல் ஆனது. வழியில் அழகான தோட்டம், தோட்டத்திற்கு நடுவில் கிருஷ்ணர் சிலை மற்றும் ஒரு பவுண்ட்டன். ஆவென்று பராக் பார்த்த படி மாமாவுடன் நடந்து போனான்.

வெராண்டாவில் ஒரு ஊஞ்சல் தொங்கி கொண்டிருந்தது. கிட்ட்தட்ட 10 நிமிட காத்திருப்புக்கு பின், பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து, தூக்கி வாரிய சிகை அலங்காரத்துடன், 55 வயது மிக்க ஒரு பெரியவர் வந்தார்.

ஊஞ்சலில் உட்கார்ந்து, “என்னப்பா, இவன் தான் நீ கூட்டிட்டு வர்றேன்னு சொன்ன பையனா? படிச்ச பையனா இருக்கானே, வாட்ச் மேன் வேலைக்கு சரிப்பட்டு வருவானா?” என்று கேட்டார்.

இவனுக்கு பக்கென்றது. என்னது வாட்ச் மேன் வேலையா? இதுக்கா இவ்வளவு தூரம் வந்தேன் என்று ரோஷம் வந்தது, மாமாவை கோபமாக பார்த்தான்.

“சார், எந்த வேலை கொடுத்தாலும் செய்வான் சார்” என்றார்.

“குட், இவனுக்கு என்ன வேலை எப்படி செய்யனும்ன்னு சொல்லி கொடுத்துடு. அம்மாகிட்ட பணம் வாங்கி இவனுக்கு யூனிபார்ம் தைச்சு கொடுத்துடு. பின்னாடி இருக்குற ரூம்ல, இவனை தங்கிக்க சொல்லு. தம்பி, நாணயமா, ஓழுக்கமா வேலைய பாரு. உன் உழைப்புக்கு ஏத்த மாதிரி உன் முன்னேற்றம் இருக்கும் புரியுதா” என்றார்.

இவனை இழுத்து கொண்டு வந்து, “ என்னடா முறைக்கிற. துரைக்கு எடுத்தவுடனே மானேஜர் உத்தியோகமா கிடைக்கும். ஊருல தண்டமா அப்பாவுக்கு பாரமா தானே உட்கார்ந்திருந்த. இங்க சாப்பாட்டுக்கும், இடத்துக்கும் எந்த குறையும் இருக்காது. சிக்கனமா இருந்து, நல்லா வேலை பார்த்து, நல்ல பேர் வாங்கு. புரியுதா” என்று சொல்லி விட்டு அடுத்ததாக எஜமானி அம்மாளிடம் அழைத்து சென்றார். பணக்கார மிடுக்குடன், கம்பீரமாகவும், அழகுடன் இருந்தார்.

“என்னப்பா, சின்ன பையனா இருக்கானே, சொல்ற வேலை எல்லாத்தையும் செய்வானா? நாயை அவன் தான் பராமரிக்கனும்ன்னு சொல்லிட்டியா?” என்று அதட்டலாக பேசினார்.

இவனுக்கு மீண்டும் சூர்ன்னு ஏறியது. என்னது நாயை பராமரிக்கனுமா. வேற வேலையில்லை என்று மாமாவை பார்த்தான்.

“அதுவெல்லாம் செயவான். பையன் சூட்டிகையானவன்” என்று அவனை இழுத்துக் கொண்டு வந்து, “நாய்க்கு ஊசி எல்லாம் போட்டிருக்காங்களாம். பயமில்ல” என்று சமாதானப் படுத்தினார்.

முதல் தடவையாக, கருப்பையாவுக்கு அழுகை வந்தது. கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டான்.

நடந்த விஷயங்களை எல்லாம், அப்பாவுக்கு கடிதம் மூலமாக தெரிவித்தான்.

அப்பா பதில் கடிதத்தில் கோபமாக எழுதி இருந்தார்.

“தம்பி, நீ எழுதுனத படிக்கும் போது சங்கடமாதான் இருக்கு. ஆனா, என்ன பண்றது. நீ இங்க இருந்தா ஒரு முன்னேற்றமும் வராது. கிடைக்கிற வேலையில நல்ல படியா இருந்து, அடுத்த நல்ல வேலைய வாங்குற வழிய

பாரு. ஊருக்கு மட்டும் திரும்பி வந்துடாத” என்று கண்டிப்பாக பதில் கடிதம் அனுப்பினார்.

கருப்பையாவுக்கு அப்பாவின் மேல் வெறுப்பாக வந்தது. அவருக்கு அவரோட கௌரவம் தான் முக்கியம். என் சிரமத்தை பத்தி கொஞ்சம் கூட கவலை படலயே. இனிமே என்ன கஷ்டம் வந்தாலும் அவருக்கு கடிதம் எழுதுவதில்லை என முடிவு செய்து கொண்டான்.

வேலையில் சுறுசுறுப்பாக இருந்தான். விவசாய வேலைகளின் அனுபவம், தோட்ட பராமரிப்புக்கு உதவியது. மாடுகளை பிடித்து உழைத்த அனுபவம், நாயை பராமரிக்க உதவியது. முதல் நாள், அவனை பார்த்ததும், கடுமையாக குரைத்தது.

எஜமானியம்மாள், அதை அதட்டி,” தம்பி பயப்படாமல், அதை வாக்கிங் கூட்டிட்டு போ” என்றார்.

அதன் சங்கிலியை கழட்டினவுடன், இவனை இழுத்து கொண்டு ஓடியது. ஊரில் மாடுகளை ஏரில் பூட்டி உழுத கை, அதனிடம் நாயின் பாச்சா பலிக்குமா!. ஒரு இழு, இழுத்தான், தன்னை விட இவன் பலசாலி என் அடங்கி போனது. அமைதியாக அவனுடன் வந்தது. இவனுக்கும் அதனை பிடித்து போனது. ஸ்டேடஸ் சிம்பல். நன்றியுள்ள மிருகம்.

“பரவாயில்லையே, உடனே உங்கிட்ட ஓட்டிகிச்சு, குட்” என்று பாராட்டினார்.

நாட்கள் செல்ல, செல்ல அவன் குடும்ப உறுப்பினர்கள் எல்லாருடனும் நன்றாக பழகிவிட்டான்.

அவன் எஜமானருக்கு, இவன் தோட்டத்தை பராமரிக்கும் முறை மிகவும் பிடித்து போனது. “நான் கூட படிச்ச பையன் இந்த வேலை உனக்கு பிடிக்காது, நாலு நாளுல ஊருக்கு போய்டுவன்னு நினைச்சேன். ஆனா பரவாயில்லை, எல்லா வேலையும் நல்லா செய்றன்னு அம்மா சொன்னாங்க. ஒரு மனுஷனுக்கு உண்மையான் சாப்பாடு அவனோட உழைப்பு. அத தான் வள்ளுவர், அந்த காலத்திலே மெய் வருத்த கூலி தரும்ன்னு சொன்னாரு. என் வீட்டு வாசல்ல, போர்டுல அந்த குறளை தான் எழுதியிருப்பேன். தினமும் அத படிக்காம போ மாட்டேன். நல்லா, கடுமையா உழைப்பவன் கடவுள் என்னைக்குமே ஆசிர்வதிப்பார்” என்று பாராட்டினார்.

அடிக்கடி, அவன் மாமா “என்னடா, அப்பாவுக்கு லெட்டர் போட மாட்டேன்ற. அவர் எங்கிட்ட சொல்லி வருத்தப் படுறார். பெத்தவங்க கிட்ட கோபத்தை காட்ட கூடாதுரா” என்பார். ஆனால் இவன் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவான்.

எஜமானருக்கு இரண்டு குழந்தைகள். கல்லூரியில் படித்து கொண்டிருந்தார்கள்.

இவன், நாயை வாக்கிங்குக்கு கூட்டிட்டு போக போன போது, அவர் பையன், எஜமானியம்மாளிடம் “அம்மா, இன்னைக்கு டியூஷன் வாத்தியார் வர மாட்டாராம். நாளைக்கு இந்த பிராபளத்தை ஷால்வ் பண்ணி காண்பிக்கனும். என்ன செய்றதுன்னு தெரியல” என்று சொல்லி கொண்டிருந்தான்.

இவன் மெதுவாக, “அம்மா, நான் வேணா டிரை பண்ணி பார்க்கட்டுமா. நான் எம். எஸ். சி மேத்ஸ் மேஜர்” என்றான்.

“அப்படியா, டேய் அவங்கிட்ட காண்பிடா”

தயக்கத்துடன் இவனிடம் புத்தகத்தை நீட்டினான். எல்லாம் அவன் படித்ததுதானே. ஐந்தே நிமிடத்தில், பிராப்ளத்தை சால்வ் செய்து கொடுத்து விட்டு, நாயை வாக்கிங்குக்கு அழைத்து சென்று விட்டான்.

அடுத்த நாள், எஜமானியம்மாள் இவனை அழைத்து, “ நீயே, நாளையிலிருந்து அவனுக்கு டியூஷன் எடு” என்று உத்தரவிட்டார்.

முதல் முறையாக படிப்புக்கு ஏத்த வேலை.

இவன் சொல்லி கொடுக்கும் முறை அந்த பையனுக்கு மிகவும் பிடித்து போனது. அடுத்த எக்சாமில் அவன் வாங்கிய மார்க், இவன் திறமையை பறைசாற்றியது.

எஜமானியம்மாளுக்கு இவனை மிகவும் பிடித்து போனது.

விஷயம் எஜமானர் காதுக்கு போனது. அவனை அழைத்து, “நாளைக்கு, ஆபிஸுக்கு வந்துடு, இனிமே உனக்கு அங்க தான் வேலை. வேலை முடிச்சுட்டு வந்து இங்க டியூஷன் எடு”

பெரிய அலுவலகம். இவனுக்கு வேறு உலகத்தில் நுழைந்தது போல் இருந்தது. அவன் எஜமானர் அறைக்கு ஒருவர் வந்து அழைத்து போனார்.

“குட், நல்லா கணக்கு சொல்லி கொடுக்குறன்ன்னு வீட்ல சொன்னாங்க. உன் கிட்ட நிறைய திறமை இருக்கு. உனக்கு அக்கவுண்ட்ஸ் டிபார்மெண்ட்ல கிளார்க் வேலை கொடுக்க சொல்லி இருக்கேன். உன் உழைப்பிற்க்கேற்ற முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும் “என்றார்.

இவனுக்கு சந்தோஷத்தில் கை, கால் பட, படவென ஆடியது.

கிளார்க் வேலை. தனி டேபிள், சேர். ஆபிஸ் வேலை. இதற்குதானே, அப்பா என்னை சிரம பட வைத்தார். அவருக்கு கடிதம் போட்டு இப்ப சந்தோஷமான்னு கேட்கனும் என்று நினைத்து, “எதுக்கு சொல்லனும். வீட்டை விட்டு விரட்டிவுட்டவர். அவர்கிட்ட போய் ஏன் என் சந்தோஷத்தை பகிரனும்” என்று கடிதம் எழுதும் எண்ணத்தை மாற்றி கொண்டான்.

நாட்கள் ஓடின. அலுவலகத்தில், இவன் வேலைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து கொண்டிருந்தது. மேனேஜராக பதவி உயர்வு கிடைத்தது. வாடகைக்கு வீடு எடுத்து கொண்டான்.

அன்றைய தினம், வீட்டு வாசலில் காகம் கத்தியது. நம்ம வீட்டுக்கு யார் வர போறான்னு நினைத்து கொண்டான். அப்பா, அம்மாவை பற்றிய சிந்தனை அவ்வப்போது வந்து போனது. அலுவலகத்திலும், நிறைய பேர் உங்க அப்பா, அம்மாவை கூட்டிட்டு வந்து வச்சுக்க வேண்டியது தானே? என்று கேட்பார்கள். சிறிய புன்முறுவலுடன் எந்த பதிலும் சொல்லாமல் போய் விடுவான்.

மும்முரமாக அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, அவன் முதலாளி கூப்பிடுவதாக பியுன் வந்து சொன்னான்.

அவர் அறைக்கு சென்றான்.

“மே ஐ கம் இன் சார். குட் மார்னிங் சார்”

“எஸ். கம் இன் கருப்பையா, சிட். எப்படி வேலை போய்ட்டிருக்கு?”

“பைன் சார். என்ன செய்யனும் சார்?”

“நத்திங் அபிஸியல். ஏன் ஊருக்கே போக மாட்டிங்கிற? அப்பா, அம்மா மேல கோபமா?”

அமைதியாக இருந்தான்.

“பொதுவா நான் அடுத்தவருடைய பெர்ஷனல் விஷயத்தில் நுழைய மாட்டேன். ஆனா, உங்க மாமா மூலமாக, உங்க அப்பா ஒரு லெட்டர் எனக்கு அனுப்பி இருந்தார். அதை படிச்ச பின்னாடி, உங்கிட்ட நான் கண்டிப்பா பேசனும்ன்னு தோணிச்சு”

அவனுக்கு கோபம் வந்தது. முதலாளிய ஏன் டிஸ்டர்ப் பண்ணி இருக்காங்க?

அவன் மனதை படித்த மாதிரி “ நோ, நோ எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. அவர் எழுதிய லெட்டர், என் மனசை தொட்டிருச்சு. நீ இப்படி ஒரு அப்பாவை அடைந்ததிற்கு பெருமை படணும்.. பேரண்ட்ஸ்ல இரண்டு வகை. ஓன்னு, தான் எப்படி வளர்ந்தோமோ அதே மாதிரி தான் பிள்ளைகளும் வளரனும்ன்னு நினைக்கிற டைப். பிள்ளைகளை தங்களுடன் ஓப்பிட்டு அவர்களை அவர்கள் இஷ்டபடி வளர விட மாட்டார்கள். இரண்டாவது டைப், தான் பட்ட கஷ்டங்களை பிள்ளைகள் படக்கூடாது என் நினைப்பவர்கள்.

அவர் இரண்டாவது டைப். அவர் பட்ட கஷ்டத்தை நீ படக்கூடாது என் நினச்சிருக்கார் பாரு. ரியலி கிரேட். அவர் கடிதத்தை படிக்கிறேன் கேளு.

“மரியாதைக்குரிய அய்யா, வணக்கம். நீங்கள் என் பையனுக்கு கொடுத்திருக்கிற வாழ்க்கைக்கு நான் என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். நாங்க அவனை வீட்டை விட்டு விரட்டிடோம்ன்னு அவனுக்கு ரொம்ப கோபம். அவன் எனக்கு ஒரே பையன். அவனை வெளியே அனுப்புனது எனக்கும், என் மனைவிக்கும் என்ன சந்தோஷத்தை கொடுக்க போகுது. காஞ்சு போன கரிசல் நிலத்தில கால, காலமாய் கூலியா வேலை பார்த்த குடும்பம் எங்க குடும்பம்.

வயலை குத்தகைக்கு எடுத்து, வெயில், மழை பார்க்காமல், கால் வயிற்று கஞ்சியில் பொழப்பு நடத்துனவங்க. விளைச்சல பொறுத்தது தான் எங்க ஜீவனம். சோறு கிடைக்கும்ன்னு தான் பள்ளி கூடத்துக்கே போனோம். எட்டாவதோட என் படிப்பு, கஷ்டத காரணம் காட்டி நிறுத்தியாச்சு. ஆறு பிள்ளைகள். நான் ஒருத்தன் தான் பையன். என் மாமனார் வீட்டு உதவியோடு என் அக்கா, தங்கச்சிகளை கரையேத்தினேன்.

ஒரு பிள்ளையோட நிறுத்திகிட்டேன். இவனை எப்படியும் படிக்க வச்சு, நல்ல வேலைக்கு அனுப்பிடனும். இந்த கரிச காட்டு வெயில் அவன் மேல் படக்கூடாதுன்னு தீர்மானமா இருந்தேன். அவனும் நல்லா படிச்சு டிகிரி வாங்கினான். ஆனா, அந்த கரிச காட்ல இருந்து, எப்படி வேலை தேடுறது? சுத்தி இருக்குறவனெல்லாம், அவனை குறைச்சு பேசும் போது எனக்கு தாங்காது.

எனக்கு யாரைங்க தெரியும். என் கஷ்டம் என்னோடு போகனும்ன்னு தான், அவன் மாமாகிட்ட வலுக்கட்டாயமாக அனுப்பி வச்சேன். அவன் ஊரு கிளம்பி வந்த அன்னைக்கு நான் அழுத அழுகை எனக்கு தாங்க தெரியும். அவனோட மாமா, வாட்ச் மேன் வேலையில சேர்த்து விட்டதை தெரிஞ்சவுடன் அவனோட சண்டை போட்டேன். அவன் வேலைய பார்க்காத மாமா, அவன் சேர்ந்திருக்கிற இடத்தை பாரு. அவன் முன்னேற அங்க நிறைய வாய்ப்பு இருக்கு. அவனை கண்டிப்பா இங்க தான் இருக்கனும்ன்னு சொல்லிடு என்று லெட்டர் போட்டான். மனசை கல்லாக்கிட்டு அதைதான் நான் செஞ்சேன்.

இன்னைக்கு அவன் நல்ல நிலைமையில இருக்கான். அவன் என் மேல கோப படுறதுல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. அவன் அம்மாதான் அழுதுகிட்டே இருக்கா. எல்லாத்துக்கும் காரணம் நாந்தான்னு திட்டுறா. அவனை ஒரு தடவை ஊருக்கு வரச் சொல்லுங்க. உங்களுக்கு கோடி புண்ணியம்”

கருப்பையாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்.

‘எனக்கு பிறந்ததிலிருந்து கஷ்டம்ன்னா என்னன்னு தெரியாது. எங்க அப்பா, பணக்காரர். எப்படியும் அவர் தொழில தான் நான் தொடர்ந்து செய்ய போறேன்னு, அது சம்பந்தமா படிச்சேன். ஆனா உன் நிலைமை வேற. எந்த மாதிரி வாழ்க்கைய கொண்டு போறதுன்னு தடுமாற்றத்துடன் இருக்கிற போது உங்க அப்பா செஞ்சது தான் சரி. நிழலின் அருமை வெயிலில் தெரியும்ன்னு சொல்வாங்க. நமக்கெல்லாம் அப்பாக்களின் நிழலில் இருந்ததால் வெயில் என்னன்னு தெரியாது. வெயில் என்பது நமக்கான வாழ்க்கை. விட்டமின் டி. அதை கண்டுபிடிக்க செய்த வழிமுறை தான் உன் அப்பாவின் பிடிவாதம். கோபத்தை மூட்டை கட்டி தூக்கி போட்டுட்டு, உடனே ஊருக்கு போய் அப்பா, அம்மாவை இங்க கூட்டிட்டு வந்திடு. உனக்கு லீவு சேங்ஸன்” என்று சிரித்தார்.

அவர் தலைக்கு மேல், அவர் அப்பாவுடன் எடுத்த புகைப்படம் இருந்தது.

நானும் இந்த மாதிரி போட்டோ எடுத்து பிரேம் பண்ணி மாட்டனும் என்று நினைத்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *