அப்பனுக்கு ஆசை, மகளுக்குப் பூசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2025
பார்வையிட்டோர்: 269 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ஒரு ஏழக் குடும்பம். எதுனாலும் வேலைக்குப் போனாத்தா கஞ்சி. நெல்லுக்கருது (கதிர்) அறுக்கத்தா அதிகமாப்போவாங்க. இப்டி, கூலி வேல செஞ்சே காலத்த கடத்திக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கு ரெண்டு மகளுக. 

ஒருநா, தாயும் ம் – தகப்பனும் நெல்லுக்கருது அறுக்கப் போயிட்டாங்க. மூத்த மக, வாசப்படில ஒக்காந்து இருந்தா. அப்ப, ஒரு சிட்டுக் குருவி வந்து, அவ பக்கத்ல ஒக்காந்திருச்சு. ஒக்காரவும், அதுக்கு ரெண்டு நெல்ல எடுத்துப் போட்டா. அதக் கொருச்சு திண்டுட்டுப் போயிருச்சு. நெல்லுக்கருது அறுக்கப் போன தாயும் – தகப்பனும் திரும்பி வரவும், குருவிக்கு நெல்லு போட்டத மக சொன்னா. 

சொல்லவும், நாங்க என்னா பாடுபட்டு நெல்லு கொண்டு வாரோம். அத வீணடிக்கிறியேண்டு சொல்லி, அவள அடுச்சு, வீட்ட விட்டுப் பத்திட்டாங்க. அழுதுகிட்டே, குருவி இருக்கிற வீட்டத் தேடிக்கிட்டுப் போறா. வழில, ஒரு தென்ன மரம் தண்ணி எடுத்து ஊத்திட்டுப் போண்டு சொல்லுது. தென்ன மரத்துக்குத் தண்ணி எடுத்து ஊத்திட்டுப் போறா. 

அங்கிட்டு, வண்ணாத்தி துணி தொவச்சுக்கிட்டு இருக்கா. அவ, ரெண்டு துணிய, தொவச்சுப் போட்டுட்டுப் போண்டு சொன்னா. சரிண்டு, ரெண்டு துணிய, தொவச்சுப் போட்டுட்டு, அங்கிட்டுப் போறா. 

வாழ மரமும் – ரோசாச் செடியும் தண்ணி எடுத்து, ஊத்திட்டுப் போண்டு சொல்லுது. தண்ணி எடுத்து, ரெண்டுக்கும் ஊத்திட்டு, அங்கிட்டுப் போகயில, குருவி வீடு இருக்குது. 

குருவிய பாத்து, குருவிக்குக் குடுத்த, ரெண்டு நெல்லயுங் கேட்டா. ரெண்டு நெல்லுக்குப் பதிலா, குருவி, ஒரு மூட்ட நெல்லு குடுத்திச்சு. செமந்துகிட்டு வாரா. 

வரயில, தென்ன மரம் தேங்கா குடுத்துச்சு. வாழ மரம் வாழக்கா குடுத்துச்சு. வண்ணாத்தி பட்டுச் சீல குடுத்தா. பட்டுச் சீலயக் கட்டிக்கிட்டா. ரோசாச் செடி, பூ குடுத்துச்சு. புவ்வ, கொண்டையில வச்சுக்கிட்டா. வீட்டுக்கு வந்தா, நெல்லக் கொட்டி வச்சா. தேங்ககாய எரக்கி வச்சா. வச்சிட்டு, தாயயும் – தகப்பனயும், எதுரு பாத்து, ஒக்காந்து இருக்கா.

தாயுந் – தகப்பனும் வந்தாங்க. குருவி யப் பாத்து, நெல்லு வாங்குன வெவரத்தச் சொன்னா. சொல்லவும், தாயுக்கும் தகப்பனுக்கும் ஆச வந்திருச்சு. எளய மகளயும் அடுச்சு வெரட்டினா, அவளும் போயி, நெல்லு வாங்கிட்டு வருவாண்டு சொல்லி, எளயமகள அடுச்சு, வீட்டவிட்டு வெரட்டிட்டாங்க. 

அழுதுகிட்டே – குருவி யத் தேடிக்கிட்டுப் போறா. எடையில, சொன்ன தென்னமரம், வண்ணாத்தி, வாழமரம், ரோசாச் செடிகளச் சட்ட செய்யாமப் போறா. 

குருவி கிட்டப் போயி, நெல்லு கேட்டா. குருவி நெல்லுக்குப் பதிலா, செமையா அடி குடுத்து அனுப்பிச்சிருச்சு. 

குருவி கிட்ட அடிய வாங்கிக்கிட்டு, திரும்பி வரயில, தென்ன மரம், தம்பங்குக்கு ரெண்டு வாங்கு வாங்குச்சு. வண்ணாத்தியும், ரெண்டு வாங்கு வாங்குனா. வாழமரம் அடிக்க, ரோசாச் செடி அடிக்க, அடிவாங்கி, மேலெல்லாம் காயமும் – கீயமுமா, அளுதுகிளுது வீடு வந்து சேந்தாளாம். நல்லவ போனா, கெடச்சுச்சு. இவ போனாண்டா எப்டிக் கெடைக்கும்? அடிதான் கெடைக்கும். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *