அபிஷேகமும் அலங்காரமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 4,359 
 
 

வானம் பார்த்த பூமியில் வருண பகவான் கருணை இல்லையென்றால் வறட்சிதானே? குடிக்கக்கூட நீர் இல்லாமலே போகும்.  நீர் பிரச்சனை கைலாசத்தையும் வைகுண்டத்தையும் எட்டிய கதை உங்களுக்கு தெரியுமா?

ஒருநாள் சிவ மற்றும் விஷ்ணு லோகங்களிலிருந்து குரல்கள் எழும்பின.  சிவன் கங்காதேவியை முடியில் சூடியவர், விஷ்ணுவோ நீர்மேல் சயனம் செய்பவர்…இவர்களுக்கு நீர் தட்டுப்பாடு எப்படி வரும் என்று வருண பகவானை கேலி செய்ததாக வதந்தி தேவலோகத்தை எட்டியது.  வருண பகவான் அதீத கோபம் கொண்டார். இந்திரன் தேவலோகத்தை ஆண்டாலும், வருணன்தானே மழைக்கு இன் சார்ஜ்? யார்மேல் கோபத்தைக் காட்டினால் தீர்வு கிடைக்கும் என்று வருணன் யோசித்தார்.  நாரதரை யோசனைக் கேட்க அழைத்தார்.

“நாரதரே,  என்னுடைய பிரச்சினைக்கு என்ன செய்யலாம்?” என்று தன்னுடைய கோபம் பற்றி சொன்னார். நாரதரும் ஒரு யோசனை சொல்லிவிட்டு கைலாசத்துக்கு போனார். உடனே, வருணன் நாரதரின் யோசனையை செயல்படுத்தினார். செயலின் விளைவு?

கையிலையில் சிவபெருமான் நீண்ட அபிஷேக சடங்குகளில் ஈடுபட்டிருந்தார்.

“ஹர ஹர மகாதேவா…ஹர ஹர மகாதேவா…” என்று பாடிக் கொண்டே நுழைந்த நாரதரை நந்தி தலையாட்டி வரவேற்றார். 

“நாரதா…இன்றைய விசேஷம் என்னவோ?”

“சுவாமி,  தங்கள் அபிஷேகம் தடைபட வேண்டாம்.  எல்லா திரவியங்களிலும் தங்கள் மனம்கிழ வேண்டும்.  நீர் பிரவாகம் நிற்க வேண்டாம்…இப்படியெல்லாம் நான் வேண்டுகிறேன்…ஆனால் வருண பகவானுடைய சித்தம் வேறு…”

ஹரன் சிரித்துவிட்டு, “நீர் உமது பயணத்தை தொடருங்கள்…நான் அபிஷேகம் பூர்த்தியானதும் வருணனை அழைத்து கேக்கிறேன்…ம்…ம்…அடுத்தது விபூதி அபிஷேகமா” என்று நிச்சயப் படுத்திக் கொண்டார்.

ஆனால், அபிஷேகம் பூர்த்தியாவதற்குள் தண்ணீர் நின்றுவிட, கோபத்தால் தாண்டவம் ஆட சிவன் எழுந்திருக்கவே, அம்பாள் அவரை சமாதனப்படுத்தி உட்கார வைத்தாள்.

அம்பாள் ‘நாரதரே’ என்று அழைக்குமுன்பே ஓட்டம் பிடித்த நாரதர் அடுத்து எங்கே போவார் என்று தெரியாதா?  வைகுண்டம் சேர்ந்தவுடன், ஓர் அதிசயம் காத்திருந்தது. மகாவிஷ்ணு ஸ்நானம் செய்ய தயாராவது போல் இருந்தது.

“ஓம் நமோ நாராயணா…ஓம் நமோ நாராயணா… இது என்ன காட்சி?” என்று தயக்கத்துடன் கேட்டார்.

“விஷ்ணுலோகத்தில் நான் அடிக்கடி குளிக்காதலால் சிறு புரட்சி ஏற்படும்போல் இருப்பதால் இன்று ஸ்நானத்துக்கு புறப்படுகிறேன்…இதில் உமக்கு என்ன பிரச்சனை நாரதா?”

“உமக்குதான் தண்ணீர் பிரச்சனை பரமாத்மா…பாற்கடலின் நீரும் உப்பு கரிக்கும் நீர்தானே பிரபு?  கடல் நீரில் நீராடினால் ஹரிக்கும் உடம்பு அரிக்குமே!”

“இதைச்சொல்லவா வந்தீர்”

“கைலாசம் வரை போயிருந்தேன்…அங்கே…வருண பகவானைப் பற்றி ஒரு தகவல் சொல்லவேண்டியிருந்தது…”

‘மேலே நானே சொல்கிறேன்…’ என்பதுபோல் கையை உயர்த்திவிட்டு, “அங்கே ஹரன் அபிஷேகத்தில் மூழ்கியிரூப்பார்…அவருடைய நீர் முழுக்குலேயே நீர் முழுக்க தீர்ந்திருக்கும்… என்னுடைய ஸ்நானத்துக்கு தண்ணீர் கிடைக்காது…நான் இன்றும் குளிக்காமலேயே அலங்காரம்…இதைத்தானே சொல்கிரீர்…?”

“உமக்கு தெரியாததா எம்பெருமானே…”

“சிவலோகத்தில் தண்ணீர் அபிரிமிதமாக சிவன் அபிஷேகத்துக்கு மட்டுமே, தினம் 5000 லிட்டர் அளவாமே?  இந்திரன் எனக்கு மாத புள்ளிவிவரம் அனுப்புகிறார். இப்போதே நான் இந்திர லோகத்துக்கு போய் விசாரிக்கிறேன்…நீரும் என்னுடன் வாரும், நாரதரே…” என்று நாரதரை அழைத்த போது, நாரதர் அங்கிருந்து மறைந்து நிறைய நேரமாகியிருந்தது.  

விஷ்ணு மிகச்சிறப்பான அலங்காரத்தை குறுகிய காலத்தில் அணிந்து, இந்த சாதனையை கின்னஸ் புக்கிற்கு அனுப்பச் சொல்லிவிட்டு, பூமாலைகளை சூடிக்கொண்டு, கைலாசத்தை நோக்கி கருட வாகனத்தில் புறப்பட்டார்.  ‘இன்றும் சங்கு சக்கரதாரி குளியாமலே அலங்காரம் போலிருக்கிறது’ என்று தன் அலகை மூடப்போக பெரியதிருவடிக்கு கூர்மையான குத்தல் தான் மிச்சம்.

தற்காலிகமாக சிவ மற்றும் விஷ்ணு லோகங்களுக்கு செல்லும் வாட்டர் சப்ளை லைன்களை நிறுத்திய வருண பகவானுக்கு நாரதரிடமிருந்து  ‘ஹரன் மீது புகார் கொடுக்க ஹரி தேவலோகத்துக்கு விரைகிறார்’ என்ற உடனடி செய்தி வாட்சப்பில் வந்தது. டிபிள் என்கிரிப்ஷன் என்பதால், ஹரிக்கும் ஹரனுக்கும் இந்த செய்தி சேராது, யாரவது ஹாக் செய்தால் தவிர என்ற துணைச்சலில் நடந்த விவகாரம் இது.

அடுத்த சில வினாடிகளில், தெய்வ, தேவ லோக நெட்வொர்க்குகள் அனைத்திலும் ஒரு பிரேக்கிங் செய்தி:  அலங்காரப் பிரியர் அபிஷேகப் பிரியரை பார்க்கப் புறப்பட்டாச்சு.  சிவலோகத்துக்கு தண்ணீர் வரியை மூன்று மடங்காவது அதிகமாக்க மகாவிஷ்ணு தேவலோகத்துக்கு மனு போடுவார்.  இந்திரன் வருண பகவானிடம் அந்த மனுவைப் படித்து தீர்வு சொல்ல எற்பாடு செய்வார்.  

வருண பகவான் நிம்மதியாக சிரித்தார்.  அந்த சிரிப்பே பூலோகத்துக்கு மழையாகக் கொட்டியது.  மக்கள் மனம் குளிர்ந்தது. மறக்காமல், வருணன் நாரதருக்கு மின் அஞ்சல் மூலமாக ஒரு ‘செர்டிபிகேட் ஆப் அச்சிவ்மென்ட்’ அனுப்பிவைத்தார்!

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *