அன்னபூர்ணே! சதா பூர்ணே!




நித்திய பாராயண ஸ்லோகங்களுள் ஒன்றான அன்னபூரணி துதி மிகவும் பிரபலமான ஒன்று.
அன்னபூர்ணே! சதா பூர்ணே!
சங்கர பிராண வல்லபே!
ஞான வைராக்ய சித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி
இந்த நான்கு வரி ஸ்லோகத்தில் ஒரு பரிபூரணம் காணப்படுகிறது.
முதல் வரி – “அன்னம் சம்பூர்ணமாக உள்ள தாயே!”
இரண்டாம் வரி – “எப்போதும் முழுமையாக நிறைந்த ஜகதம்பா!” (எந்நேரமும் இந்த தாயின் பொக்கிஷ சாலை காலியாவதில்லை)
மூன்றாம் வரி – “சங்கரனின் உயிருக்குயிரான பிரியமான தேவி!” (அவள் பதிவிரதையாதலால் கணவரின் பெயரை துதித்தால் பரவசப்படுபவள்)
நான்காம் வரி – “ஹே! பார்வதி! ஞான வைராக்யங்கள் பெறும்படியாக எங்களுக்குப் பிச்சையளி, அம்மா!”
இவற்றில் பொதிந்துள்ள மாபெரும் செய்திகள் என்ன?
* ‘நாமே சம்பாதித்து சமைத்து சாப்பிடுகிறோம்’ என்ற கர்வம் நம்மை விட்டு நீங்க வேண்டும். ‘அம்மா போட்ட அன்னம்’ என்ற பாவனை வாத்சல்யத்தையும் மாதுர்யத்தையும் சேர்த்து அமிர்த குணத்தை அளிக்க வல்லது.
* அதே போல் உலகங்களைஎல்லாம் பெற்ற தாயான ஜகதம்பாள் ஒவ்வொரு நாளும் உணவு உண்ணும் முன்பு நம் நினைவுக்கு வருவதால் அம்மாவின் வாத்சல்ய உணர்வை வாழ்க்கை பூராவும் அனுபவிக்க முடியும்.
* ஜகதம்பாளே ‘ப்ரக்ருதி’ எனப்படும் ‘இயற்கை’. இந்த பிரகிருதி, அன்னத்தின் பண்டகசாலை.அதுவே ‘அன்னபூர்ணா!’.
* எத்தனை உயிரினங்கள் எத்தனை விதமாகத் தின்றாலும் திரிந்தாலும் குறையாத கருவூலம். அதுவே ‘சதா பூர்ணா!’
* இயற்கை அனைத்தும் பரமேஸ்வரனின் சக்தி. அதுவே ‘சங்கர பிராண வல்லபா!’.
– பவித்திரமான இந்த எண்ணத்தோடு உணவை ஏற்பவன் உணவு எதற்காக உண்ண வேண்டுமோ அதை அறிந்தவனாகிறான். அதுவே ‘ஞான வைராக்ய சித்யர்த்தம்’. ஞானமும் வைராக்யமும் பெறுவதற்காக அன்னத்தை உண்ண வேண்டும். அதில்லாமல் வயிறு நிறைய தின்று பெரிதாக ஏப்பம் விடுவதற்காக அல்ல.
– நாம் உண்ணும் உணவு அறிவை சைதன்யத்தோடு கூடியதாகச் செய்து நல்ல ஞானத்தை அளிக்க வேண்டும். அந்த ஞானத்தின் மூலம் எது உண்மை எது பொய் என்று உணர்ந்து பெரிய துக்கங்களையும், விருப்பு, வெறுப்புகளையும் நீக்கி தெய்வீக அனுபவம் பெற வேண்டும். அதற்காகத்தான் உணவை ஏற்பது. இத்தனை ஆழமான ஞானம் இந்த ஸ்லோகத்தில் உள்ளது.
காசி க்ஷேத்திரத்தில் அன்னபூரணி, விஸ்வநாதர் கொலு வீற்றுள்ளார்கள். அன்னபூரணி உணவு பரிமாறுவதாகவும், ஈஸ்வரன் பெறுவதாகவும் அங்கு வழிபடப்படுகிறது. இது நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான சித்திரப் படம்.
இதில் உள்ள மர்மமென்ன?
இயற்கையிலிருந்து (பிரகிருதி) தயாரான ஆகாரத்தை முதலில் ஈஸ்வரனுக்கு சமர்பித்து, அதன் பின் நாம் சாப்பிட வேண்டும். என்ற போதனையே அன்னபூரணி விஸ்வநாதருக்கு அன்னமிடும் காட்சியில் பொதிந்துள்ள அர்த்தம்.
காசி க்ஷேத்திரம் ஞான பூமி.
‘அன்னம்’ என்ற சொல்லுக்கு ‘நம் இந்திரியங்கள் கிரகிக்கும் சப்தம், காட்சி போன்ற ஐஸ்வர்யங்கள்’ என்று வேதம் பொருள் கூறுகிறது. இப்பொருளைக் கொண்டு பார்த்தால், இந்த உலகில் இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்தும் அன்ன பூரணியின் பிரசாதங்களே. அவற்றை ‘ஈச்வரார்ப்பணம்’ என்ற அறிவோடு ஏற்பவன் அதிர்ஷ்டசாலி.
விஸ்வநாதர் கங்கை, அன்னபூரணி இவர்களின் பதி. தேவதைகளுள் ‘மனைவி’ என்பது சக்தியின் ஸ்தானம். இந்த விஸ்வத்தை போஷிக்கும் அன்னம், நீர் இவையே அன்னபூரணி தாயும் கங்கை மாதாவும். அவற்றுக்கு மூலமான பரமேஸ்வரனே விஸ்வநாதன். ஒரே ஜகதம்பாளே கங்கையாகவும் அன்னபூரணியாகவும் வெளிப்பட்டுள்ளர்கள். இவை நம் தேவதைகளின் உருவங்களில் உள்ள உட்பொருள்.
சுபம்.
தெலுங்கில் -பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
– ஞான ஆலயம் ஆகஸ்ட், 2016ல் பிரசுரமானது.