அந்நியன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2025
பார்வையிட்டோர்: 2,631 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த வீட்டு நடையில் அவன் வந்து சேரும்போது பின் நிலவு தோன்றி விட்டிருந்தது. தூங்கு மூஞ்சி மரக் கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவாலைப்போல நிழல் மூட்டையாய்த் தெரிந்த வீட்டை, வெளிக்கேட்டின் முன் நின்றுகொண்டு ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு அவன் மெல்லத் தட்டினான். 

வீட்டினுள்ளே ஏதோ ஓர் அறையிலிருந்து ஒரு குழந்தை அழும் ஓசை… அழும் வாய்க்குள் வலுக்கட்டாயமாய்த் திணிக்கப்படும் முலைக் காம்பால் அமர்ந்த குரலில் ஆகி, ஓரிரு நிமிஷத்தில் அடங்கி விட்ட அழுகுரல்… 

பெருமூச்செறிந்து கொண்டிருக்கும் காற்று.. மீண்டும் கதவில் தட்டியபோது இருளிலிருந்து அசரீரியாய் ‘யாரது?’ என்ற ஒரு கேள்வி, குறி தெரியாமல் அவனைக் கடந்து சென்றது. 

‘நான்தான்.’ 

‘நான்தான் என்றால்…?’ 

அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. கீழே இடப் பக்க அறைக்குள் நிரம்பிய மின் வெளிச்சம் அடைந்து கிடக்கும் கண்ணாடிச் சன்னல் கதவின் மஞ்சள் நிறத்தைத் தோய்ந்தது. 

முற்றத்திலும் ஒரு லைட் மின்னியது. ஆனால், அதன் ஒளிக் கரங்களுக்குத் தன் பக்கத்தில் வரும் வலுவில்லாதிருந்தது என்பதை அவன் கண்டுகொண்டான். 

ஓப்பன் வராந்தாவின் லைட்டின் கீழ் இப்போது ஒருவர் தென்பட்டார்… உடம்பில் சட்டை இல்லை. 

அங்கேயே நின்று கொண்டு, 

‘யாரது இந்த நேரத்தில்’ என்று இடுப்பு வேட்டியைக் கட்டிக் கொண்டே மறுபடியும் கேட்டார் அவர். 

அவர் தலையில் லேசாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வழுக்கையிலும், வெற்றுடம்பிலும் பளபளவென்றிருந்த எண்ணெய் மினுமினுப்பைப் பார்த்தவாறு, ‘நான்தான்’ என்று சொன்னான் அவன். 

‘நான்தான்… நான்தான்… என்று மட்டும் சொன்னால் எப்படித் தெரியும்?’ என்று ஒரு எரிச்சல் தொனியில் சொன்னவாறு முற்றத்தில் இறங்கிக் கேட்டின் பக்கத்தில் அவர் வந்தார். 

‘யார் நீங்க? யாரைப் பார்க்கணும்?’ 

‘உங்களைப் பாக்கத்தான வந்தேன்.’ 

‘என்னையா? நீங்க யாரு?’ 

‘என்னைத் தெரியலையா?’ 

அவர் ஒரு தடவை கூடப் பார்வையைக் கேட்டின் வெளியில் செலுத்தி அவனை உற்றுப் பார்த்தார்… தெரிந்தது போலவும் தெரியாதது போலவும்… 

‘இருட்டில் சரியா தெரிய மாட்டேங்குதே…’ என்று அவர் குரலில் ஒரு நடுக்கம் இருந்ததுபோல் இருந்தது. 

‘கதவைத் திறங்கோ… உள்ளே வெளிச்சத்தில் பார்த்தால் சரியாத் தெரிய வரும்…’ 

கேட்டின் உள் தாழை மெல்ல விலக்கி ஒரு ஆள் மட்டும் உள்ளே வரும் அளவு அகலத்திற்கு அவர் திறந்தார். கையிலிருந்த சிகரெட்டைத் தெருவில் எறிந்துவிட்டு அவன் முற்றத்தில் நுழைந்தான். 

அவர் முன்னால் சென்றார். அவன் அவரைப் பின்தொடர்ந்தான். 

வராந்தாவில் ஏறும் படிகளின் முன் லைட்டின் கீழ் வந்தபோது, அவர் திரும்பி நின்றார். இப்போது வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து கொண்டிருக்கிறது. தோல் பையை இடது கை இடக்கில் வைத்துவிட்டு, பேண்ட் ஜேபியிலிருந்து ஒரு வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு நின்ற அவனை அவர் உற்றுப் பார்த்தார். 

அடர்த்தியான கூட்டுப் புருவம். 

கன்னங்கரிய மீசை. 

ஓரிரு நரை வந்துவிட்ட சுருண்ட தலை மயிர்… 

இவன்… இவன்…? 

‘நீயா… நீங்களா?’ 

‘ஆமா… நானேதான்… இப்போ புரிஞ்சுதல்லவா? இனியாவது உள்ளே வரலாமல்லவா?’ என்று லேசாய்ப் புன்முறுவலித்து விட்டு, அவர்கூட வராந்தாவில் நுழைந்து அங்கே கிடந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டி, ‘இன்றைக்குப் பூரா ஒரே நடைதான் இங்கே நான் உட்காருவதில் ஆட்சேபணை இல்லையே’ என்று கேட்டான். 

தன் இடக் கையால் நெஞ்சைத் தடவியபடி, எதையோ நினைவுக்குக் கொண்டுவர எத்தனித்துக் கொண்டிருந்த அவர், ‘அதுக்கென்ன? உட்காரலாமே’ என்று அனுமதி வழங்கியதும் தோல் பையைச் சுவர் அருகில் சாய்த்து வைத்துவிட்டு அவன் உட்கார்ந்துகொண்டான். 

பளபளவென்று மின்னிய அவன் கருத்த ஷூஷூவின் மேல் கால் சராயின் அடியில் தெரியும் செக்கச் சிவந்த நைலான் ஸாக்ஸைப் பார்த்தவாறு எதிரில் கிடந்த ஸெற்றியில் அவரும் உட்கார்ந்து கொண்டார். 

நடுக்கூடத்திலும் இப்போது விளக்கு போடப்பட்டது. சாளரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கர்ட்டனின் இடைவெளி வெளிவந்த வெளிச்சத்திலிருந்து தெரிகிறது. 

கதவைத் திறந்துகொண்டு வாசலுக்கு வந்துநின்று தூக்கக் கலக்கத்தில் கனத்த இமைகளுடன் அவனை நோக்கிய அவளிடம், ‘என்ன சௌக்கியந்தானா?’ என்று அவன் குசலப் பிரசனம் செய்தபோது, ‘நீங்க வந்தூ… வந்தூ…’ என்று இழுத்தாள். 

‘ஆமா… நானேதான்… நீங்க யாரும் இப்போ இந்த அகால வேளையில் என்னைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க; இல்லையா?’ என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் குழந்தை எட்டு வயதிருக்கும், மெல்ல கண்களைக் கசக்கியவாறு, ‘அம்மா’ என்று முனகியவாறு வந்தது. 

அவன் உட்கார்ந்தவாறே கையை நீட்டித் தோல் பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு ஸிப்பை இழுத்து உள்ளிருந்து நீண்ட ஒரு பிஸ்கெட் பொட்டலத்தைக் கையில் எடுத்து, ‘ராஜீ… என்னைத் தெரியுதா…? இதோ…’ என்று குழந்தையிடம் நீட்டினான். குழந்தை கலவரப்பட்டு அதன் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அவள் பின்புறத்தில் தன்னை மறைத்துக்கொண்டது. 

‘என்ன ராஜீ…? பயமாயிருக்குதா… இதோ, உனக்காகத்தான் வாங்கிட்டு வந்திருக்கேன்’ என்று மறுபடியும் அவன் நிர்பந்தித் தான். ‘இதெல்லாம் எதுக்கு?’ என்று அவர் சொன்னபோது, ‘அதுக்கென்ன? பிஸ்கெட்தானே…’ என்றவாறு அதை டீப்பாயில் தினசரியின்மீது வைத்துவிட்டு, ஸிப்பை இழுத்து தோல்பையை அடைத்து சுவரோரத்தில் சாய்த்து வைத்தான். 

உள்ளே இருந்து முனங்கல் ஒலி… அவள் உள்ளே போனாள்; கூடவே குழந்தையும் சென்றது. 

‘உங்க மொதல் சம்சாரம் இப்பவும் படுக்கையில்தானா?’ 

‘ஆமா’ என்று மேலிருந்து கீழ் அசைந்த அவர் முகத்தில் மறுபடியும் அந்த வியப்புக் குறி. 

‘உம்… தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?’ என்று விட்டு சுவரில் காற்றில் அசைந்து கொண்டிருந்த காலண்டரில் பறந்து கொண்டிருந்த பச்சைக் கிளிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். 

விளக்கை மொய்த்துக் கொண்டிருந்த பூச்சிகளில் ஒன்றாவது கிடைக்காதா என்ற பிடிக்கத் தருணம் பார்த்தவாறு பதுங்கியிருந் தது ஒரு பல்லி. 

கால் சராய்ப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவரிடம் நீட்டினான். அவர் சற்றுத் தயங்கியபோது, ‘உங்க பிராண்ட்தான்’ என்றபோது அவர் ஒன்றை எடுக்க, இவனும் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துவிட்டு நெருப்புப் பெட்டியை அவரிடம் கொடுத்தான். அவரும் பற்ற வைத்துக்கொண்டார். 

சென்ற காலத்தின் சிறையிலிருந்து மூண்டெழும் புகைச் சுருள்கள்…! 

நிசப்தம்… 

உள்ளே மறுபடியும் குழந்தையின் அழுகுரல்… 

‘ஆணா? பெண்ணா?’ 

‘பெண்தான்.’ 

‘கான்பூரிலிருந்து இப்போ கடிதம் வருவதுண்டா?’ 

அவன் முகத்தில் எதையோ தேடுவதுபோல் அவர் ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அவன் விழிகள் அந்தக் காலண்டர் கிளிகளிடம் இருந்தன.

‘நான் வாசிச்சுப் பார்ப்பதில்லை’ – அவர் முகத்தில் ஒரு கடுகடுப்பு.

‘சீனிவாசனின் அம்மாவுக்குத் தெரியுமா?’ 

‘தெரியாது.’ 

‘ஹூம்… அதுவும் நல்லதுதான்.’ 

மறுபடியும் நிசப்தம்! 

டப்… 

இந்தப் பல்லி கீழே விழுந்தது. அதன் வாயில் ஒரு சின்னப் பூச்சி… விழுந்த அதிர்ச்சியால் ஒரு கணம் பல்லி தயங்கி நின்று விட்டு எங்கோ ஓடி மறைந்தது. 

வாசலில் நிழல்…! அவள் அங்கே நின்றுகொண்டிருந்தாள். 

‘தூங்கிட்டாங்களா?’ என்று அவன் கேட்டதுக்கு அவரைப் பார்த்தவாறு ‘ஆமா’ என்று சொன்னாள் அவள். 

‘நான் வந்திருக்கேண்ணு சொல்லல்லியே…’ 

‘இல்லை.’ 

‘யாருண்ணு கேட்டிருப்பாங்களே?’ 

‘கேட்டாங்க.’ 

மறுபடியும் பல்லி சுவரில் ஏறிக்கொண்டிருந்தது. கிளிகள் பறந்து கொண்டிருந்தன. 

‘அப்போ நான் போயிட்டு வரட்டுமா?’ 

அவர் அவளைப் பார்த்தார். அவள் முற்றத்தில் பதுங்கிக் கிடந்த இருளைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள். 

சிகரெட்டை அணைத்து ஆஷ் ட்ரேயில் போட்டுவிட்டு கையை நீட்டி தோல் பையை எடுத்தான். 

மெல்ல எழுந்து எங்கென்றில்லாமல் பார்த்தவாறு சற்று நேரம் நின்றான். 

மௌனத்தின் கனத்த கால் சுவடுகள்!… 

திரும்பி ஓரிரு அடிகள் எடுத்து வைத்துவிட்டு, நின்று திரும்பிப் பார்த்து, ‘நீரஜாவிடம் ஏதாவது 

ஏதாவது சொல்லணுமா?’ என்று அவளை நோக்கிக் கேட்டான். அவள் கண்கள் பனித்தன…! 

‘ஒன்றும் சொல்ல வேண்டாம்…’ என்று அவசரப்பட்டுக் கொண்டு சற்றுக் கோபத்துடன் அவர் பதில் சொன்னார். சற்று நேரம்கூட அவன் அப்படியே நின்றான். முகத்தில் தீவிர எறும்புகள் ஊர்வதுபோல்…! 

என்னவோ நினைத்ததுபோல் உள்ளே பார்த்து, ‘அவுங்களை நான் ஒரு தடவை பார்த்துக்கிட்டுப் போகட்டுமா?’ என்று கேட்டான். 

ஒரு கணம் யாரும் பதில் சொல்லவில்லை. அவர் சிகரெட்டை ஆஷ் ட்ரேயில் போட்டுவிட்டு எழுந்தார். அங்கிருந்து எழும்பிக் கொண்டிருக்கும் புகைச் சுருள்கள்… 

‘எழுப்ப மாட்டேன்… ஒரே ஒரு தடவை முகத்தைப் பார்த்து விட்டுப் போயிடுவேன்.’ 

அவர் முகத்தால் சைகை காட்டி விட்டு உள்ளே போனார். பையும் கையுமாய் அவரைப் பின் தொடர்ந்து அவனும் உள்ளே சென்றான். 

அவள் அங்கேயே நின்றாள். 

ஓரிரு நிமிஷங்களில் இருவரும் உள்ளிருந்து வெளியே வந்தார்கள். அவன் முகம் இருண்டு போயிருப்பதாய் அவளுக்குத் தோன்றியது. 

விடை பெற்றுக்கொண்டு சென்ற அவன்கூட முற்றத்தில் இறங்கி வெளிக் கேட்டை அடைந்து உள்ளிருந்து தாழிட்டு விட்டு வந்து அவளைப் பார்த்த அவர் முகத்திலிருந்தே அதே பாவம் அவன் முகத்திலும் நிரம்பி நின்றது. 

‘இப்போது ரெண்டு பேருமா அவனை விரட்டியடிச்சுட்டீங்க, இல்லையா…?’ என்ற கதறலுடன் உள்ளிருந்து பரிதாபமாய் அழுகை ஓலம் கேட்கத் தொடங்கியது. 

– 13.10.1975 – பம்பாய்த் தமிழ்ச் சங்க நாடக விழா மலர், 1975.

– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *