அந்தரங்கம்!





“ ஏய்!…சித்ரா!…உனக்கு எத்தனை தடவை சொல்லறது… ‘பாத் ரூம்’ லிருந்து குளிச்சிட்டு வரும் பொழுது ஹீட்டரை ஆப் செய்திட்டு வர வேண்டுமென்று?…”என்று சத்தம் போட்டாள் சித்ராவின் தாய் விமலா.
“ அம்மா!..மறந்து போச்சு!..அதற்கு எதற்கு இப்படி கத்தறே?…”
“ ஏண்டி ஹாலிருந்து எழுந்து வரும் பொழுது ஃபேன், லைட்டை எல்லாம் ஆப் செய்திட்டு வரவேண்டுமென்று உனக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாது? .”
“ ஏம்மா!..இதற்குப் போய் இப்படியா சத்தம் போடறது?…எனக்கு மறந்து போச்சு!…..விடம்மா!.”
“எந்த நேரமும் டி.வி. பார்க்கத் தெரியுதில்லே…..டி.வி.யை ஆப் செய்யும் பொழுது ரிமோட்டில் மட்டும் ஆப் செய்தா போதாது!…சுவிட்ஸையும் ஆப் செய்யனும் என்று உனக்குத் தெரியாதா?…”
“சே!…சே!…..உனக்கு இந்த சின்ன விஷயத்திற்கெல்லாம் குறை சொல்லி சத்தம் போடறதே வேலையாப் போச்சு!….”
சித்ரா இந்த வருடம் தான் ஒன்பதாவது வகுப்பு போயிருக்கிறாள். அப்பா, அம்மாவிடம் அடம் பிடித்து தனக்கென்று ‘பேஸ் புக்’கில் ஒரு கணக்கு தொடங்கியிருக்கிறாள். அதன் பின் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதிலேயே மூழ்கி விடுகிறாள்.
திடீரென்று வாசலில் “ஐயோ!..ஐயோ!…” என்று யாரோ சத்தம் போட்டு அழுதார்கள்!
“ சித்ரா வாசலில் யாரோ சத்தம் போட்டு அழறாங்க! என்ன ஏது என்று ஓடிப்போய் பார்!….நான் கை வேலையாக இருக்கிறேன்!..பின்னால் வருகிறேன்!….” என்று கிச்சனில் இருந்து அம்மா குரல் கொடுத்தாள்.
சித்ரா தன் ரூமில் அந்த நேரத்தில் ‘பேஸ் புக்’ பார்த்துக் கொண்டிருந்தாள். சீக்கிரம் அவள் கம்பியூட்டர் டேபிளில் இருந்து எழுவதாகத் தெரிய வில்லை! அதற்குள் கிச்சனில் இருந்து வெளியில் வந்த விமலா சித்ரா ஏன் தாமதம் செய்கிறாள் என்று அவள் ரூமில் எட்டிப் பார்த்தாள்.
சித்ரா கம்பியூட்டரில் இருந்து தான் எழுந்த பிறகு, தன் பேஸ் புக் பக்கத்தை அடுத்தவர் யார் வந்தாலும் தொடர முடியாமல், பொறுப்பாக ‘லாக் அவுட்’ செய்து பேஸ் புக் பக்கத்தை மூடி விட்டு எழுந்து வந்தாள் சித்ரா.
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சித்ரா இந்த ஏன் இவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்கிறாள் என்று விமலாவுக்குப் புரியவில்லை!
டீன் ஏஜ் குழந்தைகள் அந்தரங்கம் என்று பெற்ற தாயிடம் மறைக்கும் விஷயங்களை நாகரிகம் என்று கருதி அதை அப்படியே விட்டால், பின் விளைவு தலையில் கை வைத்துக் கொள்ளுபடி நேரலாம்!
– பாக்யா ஜூலை3-9 இதழ்