அந்தரங்கமான ஒரு போட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2025
பார்வையிட்டோர்: 357 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூக்க பிள்ளைக்கு இன்னும் வயசு நூறு ஆகவில்லை. ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து விட்டார் என்றால், அந்த லட்சியத்தை அவர் எட்டிவிடுவார். 

மூக்க பிள்ளை நூறைத் தாண்டிவிடுவார் என்றுதான் ஆனந்தக்குறிச்சிக்காரர்கள் கருதினார்கள். அந்த ஊரிலேயே அவர்தான் மூத்தவர். பாலுப் பிள்ளை என்கிற பால் வண்ண நாத பிள்ளை அவருக்கு அடுத்தபடி தான். இவருக்கு தொண்ணூற்று நாலு முடிந்து விட்டது. மூக்க பிள்ளைக்கு தொண்ணூற்று அஞ்சு நிறைந்திருந்தது. 

பார்க்கப்போனால், ஆனந்தக்குறிச்சி வாசிகள் அல் பாயுள் பேர்வழிகள் அல்ல. மண்ணில் அவர்களுக்குப் பிடிப்பு அதிகம். அவர்களுக்கே அலுத்துப்போய், ‘சரி, போகலாமே! என்று பட்டால் தான் சாவார்கள் போல் தோன்றியது. ஆண்களும் பெண்களும் நீண்ட வாழ்வு பெற்றவர்கள். 

அந்த ஊரில் சின்னஞ் சிறுசுகளைப் பார்க்க முடிவது அபூர்வமான காட்சி. அறுபதுக்கு மேற்பட்டவர்களை, எழுபதுகளையும் எண்பதுகளையும், நிறையவே காண முடியும், தெருவில் ஓடியாடித் திரியும் குழந்தைகள் – ஹூங். பேசப்படும்? அதுகளுக்கு அந்த ஊரில் வேலையே கிடையாது. 

ஒவ்வொரு வீட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையி னரும் சென்னை, டில்லி, பம்பாய், கல்கத்தா என்று வேலை மீது போயிருந்தார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் அரேபியாவில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். ‘பெரிய வீடு’ என்று பெயர்பெற்ற ஒரு இடத்தின் மகனும் மருமகளும் கல்யாணம் ஆன வருடமே அமெரிக்கா வுக்குப் பறந்துவிட்டார்கள். ஏதோ மேல் படிப்பு, ஆராய்ச்சி, என்றுதான். பையன் எம்.ஈ. படித்திருந்தான். அவள் பி.எஸ்ஸி. அவனுக்கு அவளே ‘பி.ஏ.’ (PA). 

ஆனந்தக்குறிச்சியின் இளைய தலைமுறையினர் எல் லோருமே நிறையப் படித்தவர்கள். எங்கெங்கோ போய் நிறைய சம்பாத்தியம் பண்ணினார்கள். அந்த ஊர் தபாலா பீசில் தினசரி மணியார்டர்கள் வந்த வண்ணமாக இருக்கும். இருநூறு, முந்நூறு, ஐந்நூறு ரூபாய் என்று. ஊரோடு இருக்கிற பெரியவர்களுக்குத்தான். 

இப்போதையப் பெரியவர்களில் பலர் கூட வெளியூர்கள் எங்கெல்லாமோ போய் பணம் திரட்டியவர்கள்தான். ரங்கூன் போய்வந்து ‘ரங்கூன் பிள்ளை’ என்றாகிவிட்ட வரும், இலங்கையில் சம்பாதித்துவிட்டுத் திரும்பி ‘கொழும்புப் பிள்ளை’ என்று பெயர் பெற்று விட்டவரும், ‘கல்கத்தாப் பிள்ளை’ ஆனவரும் அங்கே இருந்தார்கள். 

இப்போது வெளியிடங்களுக்கும் அயல் நாடுகளுக்கும் போயிருக்கிறவர்கள் கூட அவர்களது அறுபதாவது வயசு வாக்கில் இந்த ஊருக்குத்தான் திரும்பி வருவார்கள். அது நிச்சயம். அந்தக் மண்ணின் பிடிப்பு அப்படி. எங்கே போனாலும், உலகத்தைச் சுற்றி வந்தாலும், ஆனந்தக்குறிச்சி வாசிகளுக்கு அந்த ஊரைப் போன்ற அருமையான இடம் வேறு எதுவும் இல்லை என்றுதான் தோன்றும். எங்கிருந்து எவ்வளவு சம்பாத்தியம் பண்ணினாலும் சரி, கல்யாணம் பண்ணிக் கொள்ளவும், 

கடைசி காலத்தில் அமைதியாக இருந்து சாகவும் அந்த ஊர்க்காரர்கள் அவர்களது சொந்த ஊருக்குத்தான் வந்து சேருவார்கள். அவ்வூரின் தலைமுறை தத்துவம் அப்படிப் பட்டது. 

அதை மீறுவது நல்லதுக்கில்லை என்று அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். 

ஒருமுறை அப்படித்தான் ஆனந்தக்குறிஞ்சிப்பெண் அறம் வளர்த்தாளுக்கு டவுனில் மாப்பிள்ளை பார்த்து, டவுனிலேயே கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். அது என்ன ஆச்சு? ஒரு வருஷம் முடிவதற்குள்ளே அவள் அறுத்துக். கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். புருஷன்காரன் ஏதோ காய்ச்சல் வந்து அவசரமாக அவுட் ஆயிட்டான். அறம் வளர்த்தாள் இன்னும் இருக்கிறாள். கல்லுமாதிரி அவளுக் கும் உள்ளூரிலேயே மாப்பிள்ளை பார்த்து, அங்கேயே கல் யாணத்தை முடித்திருக்க வேண்டும் என்று பெரியவங்க அப் புறமாகப் பேசிக் கொண்டார்கள். என்ன பிரயோசனம்? காலம் கடந்த ஞானோதயம்! 

அதேமாதிரித்தான் நாறும்பூநாதன் என்கிற ஒருவன் வெளியூர் சுந்தரி ஒருத்திமீது மோகம் கொண்டான். அவளையே கல்யாணம் செய்து கொண்டு ஆனந்தக்குறிச்சிக்கு அழைத்து வந்தான். அவள் அடுத்த வருஷம் பிள்ளை பெறு. கிற முயற்சியிலேயே உயிரை விட்டு விட்டாள். பிறகு அந்தப் பயல் புத்தி வந்து உள்ளூர் அம்மாளுவைக் கட்டிக்கொண் டான். ஜாம் ஜாமென்று வாழ்கிறார்கள். அவனுக்கு என்ன இப்ப வயசு அறுபதுக்கும் மேலேயே இருக்கும். அவளுக்கும் அம்பத்து நாலு, அம்பத்தஞ்சு இருக்கும். அந்த மண் ராசி அப்படி. 

ஆனந்தக்குறிச்சிக்காரர்கள் இதுபோல் எத்தனையோ உதாரணங்கள் கூறுவார்கள் அதில் அவர்களுக்கு ஒரு பெருமை. 

மூக்க பிள்ளை அடிக்கடி சொல்லுவார்: ‘முன் காலத்திலே மனுசங்கங்களுக்குச் சாவு கிடையாது. எவ்வளவு வருசமானா லும் சாகாமல்தான் இருந்தாங்க. ஆனால், வயசு அதிகம் ஆக ஆக, உடல் வளர்ச்சி குறுகிச் சிறுத்துக் கிட்டே போவாங்க, அசையாமல் உட்கார்ந்திருப்பாங்க. சிறு குதிரு மாதிரி ஒரு தாழி செய்து, அதுக்குள்ளே அவங்களை வச்சு, அப்படியே ஒரு மாடக்குழியிலே வச்சிருவாங்க. தினசரி அதுக்கு விளக்கு ஏற்றி வைப்பாங்க. அப்பப்போ திங்கிறதுக்கென்று உணவுப் பண்டங்களைத் தாழிக்குள்ளே போடுவாங்க. அவங்கதான் எங்க முன்னோரு. ஆனால் காலப் போக்கிலே ‘மதமதக்கத் தாழி வழக்கம் மறைஞ்சு போச்சு. நம்ம மனுஷங்களும் சாகக் கத்துக்கிட்டாங்க…’ 

ஆனந்தக் குறிச்சிக்கு சில மைல்களுக்கு அப்பால் – ஆற் றின் மறுகரையை ஒட்டி உள்ள ஆதிச்சநல்லூர் பரம்புகளில், அரசு அகழ்வாராய்ச்சித் துறையினர் தோண்டிப் பார்த்து, ‘முது மக்கள் தாழி’ என்கிற பழங்கால சவ அடக்க மண் பாண் டங்களையும், எலும்புகளையும், வேறு சில பொருள்களையும் கண்டெடுத்தபோது, மூக்க பிள்ளையும் மற்றவர்களும் கொக் கரித்தார்கள். ‘நாங்க சும்மாவா சொன்னோம் பின்னே!’ என்று கர்வப்பட்டுக் கொண்டார்கள். 

ஆனந்தக்குறிச்சி வாசிகள் மட்டும் நீண்ட காலம் வாழ முடிவது எதனால் என்று அவ்வப்போது யாராவது ஆராய்ச்சி நடத்தத்தான் செய்தார்கள். அவரவருக்குத் தோன்றிய காரணங்களைச் சொல்லவும் சொன்னார்கள். ஊர் அமைப்பு அங்கு வீசுகிற காற்று, மக்களின் சுகவாசம், கவலையற்ற – நிம்மதியான – பரபரப்பில்லாத வாழ்க்கை முறை என்றார்கள். 

‘இயற்கையின் அமைப்பு அப்படி. இந்த மண்ணின் மகிமை இது. எங்களுக்கு இம்மண்ணின் மீதுள்ள பிடிப்பு வலியது’ என்று மூக்க பிள்ளை சொன்னார். அவர்தான் அந்த ஊரிலேயே பெரியவர். அவர் பேச்சை யார் மறுப்பார் கள்? 

ஆனந்தக்குறிச்சி- ஆனந்தன் குறிச்சி என்பதுதான் சரி யான பெயர். அவ்வூரில் முன்னொரு காலத்தில் நூற்று ஐம்பது வருடங்கள் வசித்த ஆனந்தன் என்பவனின் நினைவை கௌரவிக்கவே இப்படி பெயர் ஏற்பட்டது. அதற்கு முன்பு அது வெறும் ‘குறிச்சி’ ஆகத்தான் இருந்தது. இது அவ்வூர் ‘தலபுராணம் கூறுவது- சுக வாசத்துக்கும் சோம்பல் வாழ்க் கைக்கும் ஏற்ற அருமையான இடம். அழகான ஊரும் கூட. 

இதர இடங்களில் எல்லாம் மக்கள் காலை ஆறு, ஆறே கால் மணிக்கே சூரியனைத் தரிசிக்க முடியும் என்றால், ஆனந்தக்குறிச்சி வாசிகள் எட்டரை அல்லது ஒன்பது மணிக் குத்தான் சூரிய தரிசனம் பெற முடியும். அதுவரை அங்கு அதிகாலை நேரம் போல்தான் இருக்கும். நிழலும் குளிரும் மங்கிய வெளிச்சமுமாக. காரணம், கிழக்கே சுமாரான மலை ஒன்று வளர்ந்து நின்றது. அது சூரியனை மறைத்துக் கொண்டு, வெகு நேரம் வரை அவ்வூருக்கு வெயில் வராதபடி தடுத்தது. 

மலையை ஒட்டிய ஊர். மரங்களும் செடி கொடிகளும் மிகுதியாக இருந்தன. பச்சிலைகளும் மூலிகைகளும் நிறைந்த பகுதி. அதில் தவழ்ந்து வரும் சுத்தமான காற்றை எந்நேர மும் சுவாசித்துக் கொண்டிருந்தார்கள் அவ்வூர் மக்கள். 

மேற்குப் பக்கத்தில் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஜீவநதி -அதன் தண்ணீர் ஆரோக்கியம் தரும் சக்தி பெற்றது என் யது பிரசித்தம். ஆனந்தக்குறிச்சிக்காரர்கள் காலையிலும் மாலையிலும் ஆற்றில் குளித்தார்கள். ஆற்று நீரையே சதா உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். 

மண் வளம் காரணமாக எல்லாவித பயிர்களும் செழித்து வளர்ந்து, நல்ல பலன் அளித்தன. மாடுகள், ஆடுகள் நன்கு வளர்ந்தன. ஆகவே, உணவு தானியங்கள், காய்கறி வகை கள், பால் மோர் தயிர் நெய் வெண்ணெய் ஆகியவற்றுக்குக் கவலையே கிடையாது அவர்களுக்கு. பணம் தாராளமாக வெளியிலிருந்து வந்து கொண்டிருந்ததால், இப்பொருள்களை விற்றுக் காசாக்க வேண்டிய அவசியம் அவ்வூர்க்காரர்களுக்கு ஏற்படவில்லை. ஆகவே, அவர்கள் திருப்தியாக உண்டு வளர்ந்தவர்கள். கவலை இல்லாமல் வாழ்ந்தவர்கள். 

இத்தகைய சூழ்நிலையில், இப்படியொரு வாழ்க்கை வசதியில், காலம் கழித்து வந்த மூக்க பிள்ளை நூறு வயசு என்ன, அதற்கும் அதிகமாகவே-உயிரோடிருக்க முடியும் என்று ஆனந்தக்குறிச்சிக்காரர்கள் நம்பினார்கள். அவரும் நம்பினார். 

ஊரிலே வயசால் மூத்தவர், முதல்வர், என்று எல்லோரும் அவருக்கு மரியாதை காட்டி வந்தார்கள்.நியாயமாக தனக்கு உரிய பெருமைதான் அது என்று அவரும் அதை ஏற்று வந் தார். 

இது ஒரே ஒருவருக்கு மட்டும் மனக்கடுப்பு உண்டாக்கி வந்தது. அவர்தான் பாலுப் பிள்ளை என்கிற பால்வண்ண நாத பிள்ளை, ஊரில் ‘இரண்டாவது பெரியவர்’ அவர்தான். மூக்க பிள்ளை இல்லாமல் போனால் இவரே முதல்வர்; மூத்த வர்; முன்னோன். சமூகத்தின், ஊரின், சகலவிதமான மரி யாதைகளும் கௌரவிப்புகளும் இவருக்கே சேரும். ‘இப்போ அந்த சவத்துப் பய வழி மறிக்கும் நந்தியாய் குறுக்கே நிற் கானே. அவன் எப்போ மண்டையைப் போடுவான்?’ என்று இவர் எண்ணி, ஏங்கி, எதிர்பார்த்த வண்ணம் இருந்தார். 

பாலுப் பிள்ளையும் ஒருவகையில் அவ்வூரில் பிரபலமான வர்தான். அவருக்கு சோசியம், பண்டுவம், மாந்திரீகம் எல் லாம் தெரியும். கை ரேகை பார்த்துப் பலன் கூறுவார். இத னால் எல்லாம் அவருக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது. எதிர் மறையான கீர்த்தி கூட வந்து சேர்ந்திருந்தது. 

‘அவர் சொன்னால் அப்படியே நடக்கும். இத்தனை நாளைக்கு மேலே உயிரோடிருக்க மாட்டான்னு கையைப் பார்த்துச் சொல்லுவார். அந்த ஆசாமி அப்படியே குளோசாகி விடுவான். இன்ன நாள் இத்தனை மணிக்கு இவன் செத்துப் போவான் என்பார். குறிப்பிட்டபடியே நடக்கும். ரொம்பச் சீக்காக் கிடக்கிறவங்க வீட்டுக்கு இவர் இரண்டு தடவை போய் வந்தாலே போதும். மூணாவது தடவை போக வேண் டிய அவசியமே ஏற்படாது. அதுக்குள்ளே அந்த நபர் ஐயா இடம் போய்ச் சேர்ந்திடும்’ என்று பலரும் பேசிக் கொண்டார் கள். உரிய விவரங்களோடு வரலாறு உரைப்பார்கள். ஆகவே அவருக்குச் ‘சாகுருவி’ என்றொரு பெயரும் இருந்தது. 

மூக்க பிள்ளைக்கு ஏதோ ‘உடம்புக்கு வந்தது.’ ஆள் வெளியே நடமாடவில்லை. வீட்டோடு தான் இருந்தார். 

இப்படிச் சில நாட்கள் எவர் வெளியே தலை காட்டாமல், வீட்டுக்குள்ளேயே ஒடுங்கி விட்டாலும் போதும். ஐயாவுக்கு சீட்டு தயாராயிட்டது போலிருக்கு. சீக்கிரம் கிழிபட்டு விடும்னு தோணுது’ என்று ஊர்க்காரர்கள் பேச ஆரம்பித்து விடுவார் கள். உடனே பாலுப் பிள்ளை, பெயர் பெற்ற வெற்றிலைச் செல்லத்துடன் அந்த வீட்டுக்குப் போவார். அதில் செந்தூரம், பஸ்பம், மாத்திரைகள் என்று ‘சகலரோக நிவாரணி’களும் இருக்கும். சமயத்துக்குத் தக்கபடி, ஆளுக்குத் தக்கபடி, அவற் றில் எதையாவது எடுத்துக் கொடுப்பார். இத்தனை மணி நேரம் கழியணும்’ அல்லது, ‘இன்னக்கி ராத்திரி தாண்டினாத் தான் சொல்ல முடியும்’ என்று கூறிவிட்டு வருவார். அப்புறம் அந்த வீட்டுக்கு அவர் போக வேண்டிய அவசியமே ஏற் படாது. 

மூக்க பிள்ளை பற்றியும் சிலர் அப்படிப் பேசலானார் கள். ‘அவர் வலுத்த கட்டை. நூறு வயசைப் பார்க்காமல் போகமாட்டார்’ என்றும் சிலர் சொன்னார்கள். 

‘அண்ணாச்சி’ வெளியே நடமாட்டமில்லை என்று தெரிந்ததும் பாலுப்பிள்ளை சந்தோஷப்பட்டார். ரொம்ப சர்வீஸ் கண்ட கறுப்புக் கோட்டை எடுத்து மாட்டிக் கொண் டார். அதேபோல் உழைத்த பச்சைப் போர்வையை மேலே போர்த்திக் கொண்டார். இந்த தோரணைகள் இல்லாமல் அவர் எவர் வீட்டுக்கும் போகமாட்டார். மருந்துகள் இருந்த செல்லத்தையும், சிவப்பு சில்க் கைக் குட்டையையும் – இதை கையில் போட்டுத்தான் நோயாளியின் நாடியைப் பிடித்துக் கணக்கிடுவார் எடுத்துக் கொண்டு மிடுக்காகக் கிளம்பினார். 

மூக்க பிள்ளை வீட்டில் அறம் வளர்த்தாள் தான் அவரை வரவேற்றாள். மூக்க பிள்ளையின் மகன் வெளியூர் போய்விட்டான். மகள் கலிமாணமாகி மாப்பிள்ளை வீட் டோடு போய்விட்டாள். பெரிய, வசதிகள் நிறைந்த, வீட்டையும் சுகமான வாழ்க்கையையும் விட்டுவிட்டு, 10 ளோடு போய் ‘இன்னொருவர் வீட்டில் காத்துக் கிடக்க’ விரும்பாத மூக்க பிள்ளை தன் வீட்டைக் கவனித்துக் கொள்ளவும், தனக்கு சகலவிதமான பணிவிடைகள் செய்யவும், பெண் துணை தேவை எனக் கருதியும், டவுனுக்கு ‘வாழ்வரசி’ ஆகச் சென்று குறுகிய காலத்திலேயே “அறுதலி’ ஆகத் திரும்பி வந்து தனித்திருந்த அறம் வளர்த்தாளைச் சேர்த்துக் கொண்டார். அவளுக்கும் ஆம்பிளைத் துணையும் வாழ்க்கையில் உறுதியான பாதுகாப்பும் தேவையாக இருந்தன. ஆனந்தக்குறிச்சி வாசிகளுக்கு இதெல்லாம் புதிய விவகாரமில்லை. அவர்கள் எதையும் ‘வழுவல; காலவகையினானே!’ என்று ஏற்று அங்கீகரிக்கும் மனப் பக்குவம் பெற்றவர்களாக இருந்தார்கள். 

பாலுப் பிள்ளை, “என்ன அறமளத்தா, அண்ணாச்சி எப்படி இருக்காக?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார். பெரியவர் இருந்த இடத்துக்கு போனார். 

மூக்க பிள்ளை சோர்ந்து கட்டிலில் படுத்திருந்தார். பாலுப் பிள்ளை அதையும் இதையும் பேசி, அவர் கையைப் பிடித்துப் பார்த்து ஏதோ பொடியைக் கொடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடும்படி சொன்னார். 

“இது எதுக்குங்ஙேன்? சுக்கு வெந்நிதான் சரியான மருந்து. அதைத்தான் அறமளத்தா அப்பப்போ ஏதோ கஷாயம் வச்சுத் தாறா. அது போதும், சுக்குக்கு மிஞ்சிய மருந்து ஏது? சுப்ரமணிய சாமிக்கு மிஞ்சிய கடவுள் ஏது?” என்று கேட்டார் மூக்கப்பிள்ளை. 

‘அது சரிதான், அது சரிதான்’ என்று பாலுப் பிள்ளை தலையை ஆட்டினார். அவர் வேறு ஏதேனும் சொல்லியிருப் பார். அதற்குள் அறம் இரண்டு பெரிய தம்ளர்களைக் கொண்டு வந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டாள். கொத்துமல்லி விதைகளை (தனியா) வறுத்துப் பொடி பண்ணி, அந்தப்பொடியைத் தண்ணீரில் கருப்புக் கட்டி யோடு கொதிக்கவைத்து பிறகு வடிகட்டி நிறையப் பாலும் சேர்த்து ‘காப்பி’ என்ற பெயரில் தயாரான பானம் அது. 

மணமும் சுவையும் நிறைந்த அதை ருசித்துச் சாப்பிட்டு விட்டு, ‘சரி, அப்புறமா வாரேன். உடம்பை கவனிச்சுக்கிடுங்க அண்ணாச்சி’ என்று கூறி, விடைபெற்று வெளியேறினார் பாலுப் பிள்ளை. 

அது ஒரு செவ்வாய்க்கிழமை. 

அதன் பிறகும் மூக்க பிள்ளை வெளியே தலைகாட்ட வில்லை. 

அடுத்த செவ்வாயன்றும் பாலுப்பிள்ளை போய் அவ ரைப் பார்த்துவிட்டு வந்தார். போன தடவையை விட இப்போது அண்ணாச்சி மெலிந்து போயிருந்ததாகத்தான் அவருக்குத் தோன்றியது. அவர் கொடுத்திருந்த பொடியை யும் பெரியவர் சாப்பிடவில்லை. 

‘இப்படிக் கிடந்தால் உடம்பு எண்ணத்துக்காகும்?’ என்று கண்டித்து, வேறு சில மாத்திரைகளும் சூரணங் களும் கொடுத்துவிட்டு அவர் திருப்தியோடு வீடு வந்து சேர்ந்தார். ‘அண்ணாச்சி அவ்வளவுதான். அவர் நம்பு கிற சுக்கும் சுப்பிரமணியசாமியும் எத்தனை நாளைக்குக் கை கொடுக்கும்கிறதையும் பார்த்துப்போடுவோமே!’ என்று முனகிக் கொண்டார். 

பாலுப் பிள்ளையின் அனுபவ ஞானமும் அனுமானமும் மூக்க பிள்ளை விஷயத்தில் மண்ணைக் கவ்வின. ஆனந்தக் குறிச்சி வாசிகளுக்கே இது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பாலுப்பிள்ளை இரண்டு தடவைகள் போய்வந்த பிறகும் உயிரோடு இருக்கிறார். 

இருக்கிறார் என்றால், அவருக்கு வலுத்த உயிர்தான் என்று பலரும் பேசிக் கொண்டார்கள். பாலுப் பிள்ளைக்கே இது மனசை உறுத்தத்தான் செய்தது. 

‘அண்ணாச்சி இன்னும் அஞ்சு வருஷம் இருந்து, நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடி நாமெல்லாம் அதைப் பார்க்க வேண்டாமா என்ன? அவாள் அவசரப் படமாட்டாக’ என்று பெரிய பிள்ளையைப் பற்றி விசாரித்த வர்களிடம் எல்லாம் அவர் சொல்லிக் கொண்டிருந்த போதிலும், அவருடைய உள்ளம் ஆசைப்பட்டதே வேறு தான். 

அன்று மூன்றாவது செவ்வாய், அந்தி வேளை. பாலுப்பிள்ளை வழக்கமான தோரணையோடு, மூக்க பிள்ளையைப் பார்க்கப் போனார். 

அப்போதும் பெரியவர், கட்டிலில் பல தலையணை களை வசதியாக வைத்து சுகமாகச்  சாய்ந்திருந்தார். இவரைக் கண்டதும் அவர் கண்களில் ஒரு பொறி ஒளிர்ந்து மங்கியது. “வந்துவிட்டான் சாகுருவிப் பய! முழிக்கிறதைப் பாரு ஆந்தை மாதிரி!” என்று அவர் மனம் சிரித்துக் கொண்டது. 

பாலுப்பிள்ளை ஒரு நாற்காலியில் வசதியாக உட் கார்ந்து, அண்ணாச்சியைக் கூர்ந்து நோக்கினார். மௌன மாக இருந்தார். திடீரென்று, ‘நாமதான் போறதுக்குப் பயப்படுறமே தவிர, அப்படி அஞ்சும்படியா அங்கே ஒண்ணு மில்லே. ஆனந்தக்குறிச்சி வாழ் கையை விட அற்புத மாகத்தான் இருக்கும் அங்கே…’ என்று பேசலானார். 

அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று பெரிய பிள்ளைக்குப் புரியாமல் இல்லை. ஆயினும், எதுவும் அறியாதவர் போல, ‘எங்கே? எந்த இடத்தைச் சொல்லுதீக’ என்று கேட்டார் அண்ணாச்சி. 

‘மேலேதான். சொர்க்கத்திலேதான்!’ 

‘அப்படியா?’ 

‘அண்ணாச்சி இந்த வீட்டையும் மனையையும் ஊரை யும் எப்படிடா விட்டுப்போட்டுப் போறதுன்னு தயங்கிக் கிட்டே கிடக்கிறாப்போல தெரியுது. அப்படி பயப்படத் தேவையேயில்லை. உங்களுக்காகப் பெரிய பங்களா, சொத்து சுகம் எல்லாம் அங்கே காத்துக்கிட்டிருக்கு. தினம் பாயசமும் வடையுமா விருந்துச் சாப்பாடுதான். அண்ணாச் சிக்குச் சர்க்கரைப் பொங்கல் பிடிக்குமே? அது அங்கே ரொம்ப அற்புதமாகக் கிடைக்கும். நெய் கமகமன்னு வடிய பிரமாதமான ருசியோடும் மணத்தோடும் என்ன சுவை! என்ன சுகம்!… 

அவர் நாக்கிலேயே தண்ணீர் சுரந்து வழியலாயிற்றோ என்னவோ, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டார் பாலுப் பிள்ளை. 

அந்தச் சமயம் வாசனை எங்கும் பரவ சூடான வடை களை எடுத்துவந்து இருவர் முன்பும் வைத்தாள் அறம் வளர்த்தாள். உள்ளே போய் வழக்கமான ‘காப்பி’யைக் கொண்டு வந்தாள். போனாள். 

‘இதைவிட ருசிகரமான, ஆளையே தூக்கிட்டுப் போகும் படி வாசம் அடிக்கும் வடைகள் உங்களுக்குப் பரிமாறப்படும் அண்ணாச்சி! கவலையே வேண்டாம்’ என்றார் பாலுப் பிள்ளை. பிறகு, குரலைக் கொஞ்சம் தணித்துக் கொண்டு பேசினார். 

‘இன்னொரு விசயமில்லா. அறமளத்தா உங்களுக்கு எல்லா சேவையும்தான் பண்ணுதா. இல்லேங்கலே. ஆனா, அங்கே உங்களுக்காகக் காத்திருக்கிற சுந்தரிகளை நெனைக் கிறபோது – என்ன இருந்தாலும் இவ வயசானவ தானே! அதுக…ஆஹ்!…அண்ணாச்சீ, கிருஷ்ணபுரம் கோயில்லே ரதி சிலை இருக்குதே அதைவிட அழகா, ஒவ்வொரு மார்பும் பிரமாதமா, சொகுசு சுந்தரிகள், சிங்காரவல்லிகள், உங்க காலைப் புடிக்கவும், கையைப் புடிக்கவும், உடம்பப் புடிச்சு விடவும், இஷ்டம்போல விளையாடவும்… ஆற்றங்கரையிலே வாற் போற இளசுகளை ஏக்கத்தோடு பாத்துக்கிட்டிருப் பேளே, அந்த ஏக்கம் தீர்ந்துபோம். ஒவ்வொருத்தியும் எப்படி இருப்பாள்ங்கிறீக! லட்டு மாதிரி, மாம்பழம் மாதிரி, – அவளுக மேலேயே லட்டுகளும் மாம்பழங்களும் ஜம்னு இருக்கும். எல்லாம் உங்களுக்கேதான்…?’ 

‘ஆங், அப்படியா?’ என்று பெருமூச்செறிந்தார் பெரிய பிள்ளை. 

‘பின்னே இந்த மண்ணிலே கிடந்து காய்ந்து மெலியற துலே ஏதாவது புண்ணியம் உண்டா?’ என்று அழுத்தினார். பாலுப் பிள்ளை. 

‘அது சரி, இது மாதிரிக் கட்டிலு அங்கே உண்டுமா? ரொம்ப அருமையான கட்டில். எனக்காகச் சொல்லி, மரங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்தது: இதிலே படுத்தாலே சுகமாகத் தூக்கம் வரும்…’ 

பெரியவரின் பேச்சைக் கேட்டதும் சப்பென்றாகிவிட்டது பாலுப் பிள்ளைக்கு. இருந்தாலும், தெம்போடு பேசினார் இதென்ன கட்டிலு! இதுக்கு அப்பன், பாட்டனெல்லாம் அங்கே கிடைக்கும். சப்ரமஞ்சக் கட்டில்னு கேள்விப்பட்டது இல்லே? அது அங்கே உங்களுக்காக இருக்கு. அதுலே இளசு இளசான அழகு சுந்தரிகளோடு எப்பவும் உல்லாசமா இருக்கலாம். உங்களுக்கு…’ 

மூக்க பிள்ளை நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘வேண்டாம் தம்பியாபுள்ளே. இந்தக் கட்டிலே எனக்குப் போதும். இதுலே சும்மா சாய்ந்திருப்பதே சொர்க்கத்திலே இருக்கிற மாதிரி சுகமாகத்தானிருக்கு!’ என்றார். 

பாலுப் பிள்ளை அடிபட்ட புலி மாதிரி ஆங்காரத்தோடு அவரை நோக்கினார். ‘உமக்காவது சொர்க்கமாவது! நரகத் தீ தான் உமக்குக் கிடைக்கும் நீர் செய்திருக்கிற பாபங்க ளுக்கும் அட்டூழியங்களுக்கும் அங்கே தான் நீர் போகப் போறீர். அந்தத் தீயிலே எரிந்து கருகப் போறீரு. உம்ம கட்டிலும் உம்மகூட சேர்ந்து எரியும். அப்படித்தான் நடக்கப் போகுது…’ 

படபடப்போடு எழுந்து நின்று, ஆத்திரமாகக் கத்தி னார் : ‘மினுமினுன்னு இருக்கிற தோதகத்திமரக் கட்டிலும், ண்டு வளர்ந்திருக்கிற தொண்ணூத்தஞ்சு வயசுக் கட்டை யும் தீயிலே நின்று எரியும். நல்லா எரியும்…’ 

ஆத்திரம் தணியாமல் நடக்க முற்பட்டார் பாலுப் பிள்ளை. அவரையே குறும்புப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த மூக்க பிள்ளை ஒரு சிறு வேலை செய்தார். 

அவர் கட்டில் பக்கத்தில் ஒரு தடி இருந்தது. நீளமான வழவழப்பான, கைத்தடி. அவர் எழுந்து வெளியே போனால், கைக்குத் தாங்கலாக இருக்கட்டும் என்று அது எப்பவும் அருகிலேயே இருந்தது. 

பெரிய பிள்ளை அதை எடுத்து, பாலுப் பிள்ளையின் கால் களினூடே லாவகமாக நீட்டினார். பாலுப்பிள்ளை எதையும் கவனிக்கவில்லை. அந்தி கறுத்து, இரவு கனத்துக் கொண்டி ருந்ததால் அறைக்குள் வெளிச்சம் மங்கிவிட்டது. அறம் வளர்த்தாள் இன்னும் விளக்கேற்றி வைக்கவில்லை. 

வேகமாக அடி எடுத்து வைத்த பாலுப்பிள்ளை, தடிக் கம்பினால் தடுக்கப்பட்டு, தவறி விழுந்தார். அவர் தலை கதவில் மோதியது. நாசி வாசல்படியில் பலமாக இடித்தது… அவர் விழுந்தவர் விழுந்தவர்தான்! 

தடிக்கம்பை மறுபடியும் வழக்கமான இடத்தில் வைத்த பிள்ளை, ‘போ, உன் சொர்க்கத்துக்கு நீயே போய்ச் சேரு!? என்று முணுமுணுத்தார். உரக்க, ‘அடடா, தம்பியாபுள்ளே. என்ன இது! பார்த்து நடக்க வேணாம்?’ என்று கூறி, ‘அறம்! அறமௗத்தா! சீக்கிரம் விளக்கைக் கொண்டுவா. இப்படி வந்து பாரு!’ என்று பதட்டமாக உத்திரவிட்டார். 

அங்கு வந்த வெளிச்சம் பாலுப்பிள்ளையின் சோக முடிவை எடுத்துக் காட்டியது. 

‘சே, மனுசன் இப்படியா விழுந்து வைப்பான்! மாலைக் கண்ணுபோலிருக்கு. கதவிலே மோதி, தடுமாறிக் கீழே விழுந்திருக்கான்… கண்ணு தெரியலேண்ணா வீட்டோடு கிடக்க வேணாம்?…சரி, தெருவிலே யாராவது போறாங் களா பாரு. இவனை அப்புறப்படுத்தணுமே. வீண் வேலை வச்சிட்டானே நமக்கு!’ என்று முணுமுணுத்தார் மூக்க பிள்ளை. 

பாலுப் பிள்ளையின் உடல் அகற்றப்பட்ட பிறகு, மூக்க பிள்ளை குதூகலத்தோடு சுற்று முற்றும் பார்த்தார். லேசாகச் சிரித்துக் கொண்டார். ‘அறமளத்தா! ராத்திரிக்கு பால் பாயாசம் வை. பாயசம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு சாப்பிடணுமின்னு தோணுது!’ என்றார். 

– வண்ணங்கள்.

– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *