கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 8,471 
 
 

கட்டுடல் கொண்ட இளைஞன் சதீஷ் குமார், தன்னுடைய ஒடிசலான மனைவி பூங்கொடி உடன் வீட்டு உரிமையாளரின் வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டுக் கூடத்தில் வாட்ட சாட்டமான ஐம்பதுக்கு மேல் வயது உடைய நபர் பனியன் வேட்டி அணிந்து பனியன் மேல் மஞ்சள் வண்ணத் துண்டு போரத்திக் கொண்டு அமர்ந்து இருந்தார். அவர் தான் வீட்டு உரிமையாளர் கார்மேகம்.

சதீஷ், “வணக்கம் சார்” என்றான்.

அவர் உரத்த குரலில் பேசினார் –

“வாங்க தம்பி வீட்டைப் பார்த்துட்டிங்களா பிடிச்சிருக்கா”

இருவரும் நின்று கொண்டிருந்தனர்.

சதீஷ் , பணிவுடன் “பிடிச்சு இருக்குங்க சார்” என்றான்.

கார்மேகம் மேலும் பேசினார்

“வீட்டை தூய்மையா பராமரிக்கணும் . ஒங்க ரெண்டு பேரோட ஆதார் கார்டு நகல் கொடுக்கணும். ரென்ட் அட்வான்ஸ் எல்லாம் ரொக்கமா கொடுக்கணும் . தண்ணிய சிக்கனமா செலவழிக்கணும். இபி பில் நீங்க தான் கட்டணும் விருந்தாளிங்கள ரொம்ப நாள் தங்க வைக்க கூடாது.”

சதீஷ் சரிங்க சார் என்று சொன்னான்.

“ஒங்களுக்கு குழந்தைங்க…?”

“ஒரு பையன் அஞ்சு வயசு … இவங்க அக்கா வீட்ல விட்டுட்டு வந்திருக்கோம்…”

“பையன் மாடி போர்ஷன் லேந்து கீழே எங்க வீட்டுக்கு வந்து சேட்டை பண்ணாம பார்த்துக்கணும்…”

“சரிங்க அய்யா”

“ஒங்களுக்கு வேலை ஒர்க் ப்ரம் ஹோமா? ஆபீஸ் போகணுமா?”

“மயிலாப்பூர்ல விளம்பர ஏஜன்சிங்கய்யா ஆபீஸ்ல போய் தான் வேலை பார்க்கணும்ங்க அய்யா”

“நண்பர்களை அழைச்சுகிட்டு வந்து பர்த் டே பார்ட்டி அது இதுன்னு லூட்டி அடிக்க்க கூடாது. டிவி சாதா டிவியா?”

கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்த அவர் சோபாவின் பின்னால் அவரது மனைவியார் பருமனான உடல்வாகு கொண்ட பேரிளம் பெண்மணி சரஸ்வதி வந்து நின்றதை கவனிக்கவில்லை .

சதீஷ் பதில் அளித்தான்

“எல்இடி டிவி தாங்க அய்யா”

“ஹோம் தியேட்டர் எல்லாம் வாங்கி வெச்சுகிட்டு அலற விட கூடாது . தெரியுதா…”

“சரிங்க அய்யா” என்றான் சதீஷ் .

“இந்த ஏரியால ஒங்களுக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களான்னு கேட்டிருந்தேனே…” வினவினார் கார்மேகம் .

சதீஷ் பதில் கூறினான் – “அத்தைய தெரியும் அய்யா”

“அத்தையா யார் அத்தை” கேட்டார் கார்மேகம்.

சதீஷ் , “மேடம் தான் எங்க அத்தை…எங்க அப்பாவுக்கு கசின்…” என்று சரஸ்வதியை சுட்டிக் காட்டினான். அவர் கஷ்டப்பட்டு முகத்தைத் திருப்பி தமது மனைவியைப் பார்த்தார்.

அவரது மனைவி பேசினார் – “இந்த பிள்ளையோட அப்பா கஜேந்திரன் எனக்கு ஒண்ணு விட்ட அண்ணன்… என்ன போக்குவரத்து இல்லாம போச்சு”

கார்மேகம், இப்பொழுது சதீஷின் முகத்தைப் பார்த்தார்.

அவர் சன்னமான குரலில் “இதை முதல்லயே சொல்றது இல்லையாப்பா… சரி நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சிட்டு குடி வந்திடுங்க” என்று கூறி விட்டு தாழ்வு மேசையிலிருந்த செய்தித் தாளைக் கையில் எடுத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *