அது ஒரு நிலாக்காலம்






(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் – 13

சரியாக மாலை ஐந்து மணிக்கு எங்கள் ஆஸ்தான மணல்வெளியில் புதிய ஷர்ட் அணிந்து ஒரு மாறுதலுக்காக 555 சிகரெட் புகைத்தபடி ஒரு புதிய வாழ்க்கையை எதிர் நோக்கும் தன்மையோடு என் வருங்கால மனைவிக்காக – இன்னமும் சிறிது சூடாக இருந்த மண்ணில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தேன்.
உழைப்பாளர் சிலை அருகே ஆட்டோவை விட்டு இறங்கி மஞ்சள் வெயிலின் மனோ ரம்மியமான பின்னணியில், கையில் சிறிய பார்சலுடன் ஆபீஸில் பணிபுரிந்து களைத்த தோற்றத்தில் ஓர் ஆயில் பெயிண்ட்டிங் போன்ற சோபையில் சுகந்தா என்னை நோக்கி மிக வேகமாக வந்தாள்.
“யம்மாடி! ஆட்டோவிலதான் வர்றேன். ஆனா என்னமோ பாரீஸ் கார்னர்ல இருந்தே ஓடி வராப்பல மூச்சு வாங்கறது…”
“உக்கார் உக்கார். உக்காந்து கொஞ்சம் ரெஸ்ட் எடு…”
”என்னது ராம்ஜி அது? புஹாரிஸ் பேக்கரின்னு போட்டிருக்கு. நீங்க வேற ஸ்வீட் வாங்கினேளா?”
“போச்சுடா – நீ வேற வாங்கிட்டேயா…?”
“நான் ஆரிய பவன்ல வாங்கினேன்…”
”அப்ப ஒண்ணு செய்யலாம். நான் வாங்கிட்டு வந்ததை நீ சாப்பிடு, நீ வாங்கிட்டு வந்ததை நான் சாப்பிடறேன்…”
“இந்தாங்கோ!”
“இந்தா…”
இருவரும் இனிப்புப் பரிமாறிக் கொண்டோம்.
”ஹை! புது ஷர்ட்டா ராம்ஜி?”
“எப்படி இருக்கு – ஒனக்குப் பிடிச்ச ஆலில் க்ரீன்…”
“ஃபைன். நாலு வயது கொறச்சுக் காட்றது!”
“பட்டுப் புடவை ஒண்ணு வாங்கியிருக்கேன் பார்”
பெட்டியை எடுத்து அவள் முன்னால் போட்டேன்,
“தமிழரசிக்கா?”
“யெஸ்!”
அவசரமாகப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். முந்தானையைப் பிரித்துப் பார்த்தாள். அந்த மயில்கள் அனைத்தும் அவளுடைய கண்களில் பிரதிபலித்தன.
“எப்படி வாத்யாரோட செலக்ஷன்?”
“கொன்னுட்டேள்! ஒங்க தங்கை பார்த்தா பிரமிச்சுப் போயிடுவா…!”
சில நிமிஷங்கள் சுகந்தா புடவையைப் பார்த்து சொக்கிக் கொண்டிருந்த, பெண்ணுக்கே உரிய அழகைக் கண்டபடி உட்கார்ந்திருந்தேன்.
“இப்ப நீ தான் சுகந்தா பிரமிக்க போறே!”
“ஓங்க தங்கைக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகப் போறதா?”
”இல்லை.”
“அப்போ?”
“இந்தப் புடவை ஒனக்குத்தான்! நீ போன் பண்ணி விஷயத்தைச் சொன்ன உடனே எனக்கு நம்பிக்கை வந்திடுச்சி. இன்னிக்கே நம்ம கல்யாணத்துக்கும் இந்த பீச்லேயே பரிசம் போட்டுடலாம்னு தோணுச்சி! ஒடனே லஸ் கார்னர் போனேன். கடைக்காரன் மூஞ்சியில பணத்தைத் தூக்கி எறிஞ்சேன்! அலறி அடிச்சிகிட்டு அவன் இந்த புடவையை பேக் பண்ணிக் குடுத்தான். இதான் ஒனக்கு நான் தர்ற பரிசப் புடவை… எங்க அம்மா ஒனக்கு எடுத்துத் தந்ததா நெனைச்சி மனப்பூர்வமாக வாங்கிக்க…”
சுகந்தா அவளின் கண்களால் நன்றி சொன்னபடி புடவையை வாங்கிக் கொண்டாள்.
”ஆனா ராம்ஜி. இதை எங்காத்துக்கு என்னால் எடுத்திட்டுப் போக முடியாது. அதனால இதை நான் ஜானகி கிட்ட குடுத்து அவ வீட்ல வச்சிருக்கச் சொல்றேன். என்னிக்காவது ஒரு நல்ல பிக்சருக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணி வையுங்கோ, அன்னிக்கு இதை உங்களுக்காகக் கட்டிண்டு வரேன்…சரியா?”
“ரொம்ப சரி. ஆனா, ஒரு கண்டிஷன்! ஆசையா இருக்குன்னு சொல்லி ஜானகி இந்தப் புடவையைக் கட்டிக்கிட்டிப் பார்த்தா… அவ்வளவுதான்!”
“அதெல்லாம் கட்டமாட்டா பயப்படாதீங்கோ…”
“அப்பாடி! ஒருவழியா ஒங்க கௌசல்யாவுக்கு ஃபிக்ஸ் ஆயிடுச்சி! இனி எங்க தமிழரசிதான்! அதுவும் முடிஞ்சிடுச்சின்னா க்ளோஸ்! உலகத்திலேயே அப்புறம் நம்ம கல்யாணம் தான். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உலகத்துல வேற எவனுக்கும் கல்யாணம் கெடையாது. எப்படி?”
“சமர்த்துதான்…”
”அதுவும் உலகத்துல எவனும் செய்யாத ஸ்டைல்ல -பீச்லதான் நம்ம கல்யாணம்!”
“எப்படி வேணா ஏற்பாடு பாணுங்கோ.. உங்க இஷ்டம்…”
“சரி… நம்ம சகலை எந்த ஊர்ல இருக்கார்? என்ன பண்றார்…”
சுசுந்தா லேசாகக் கிள்ளிவிட்டுச் சொன்னாள்; “அதுக்குள்ள சொந்தம் கொண்டாடியாறது! இங்கதான் வெஸ்ட் மாம்பலத்துல இருக்கா. அவர் இங்கே தான் ப்ராவிடண்ட் ஃபண்ட் ஆபீஸ்ல ஒர்க் பண்றார்…”
“கடைசியில ஆள் எங்கே இருந்திருக்கான்னு பார்… இதுக்குப் போய் ஊரெல்லாம் அலைஞ்சி, ஆயிரத்தெட்டு ஜாதகம் பார்த்து, மேலேயும் கீழேயும் யோசிச்சி… எவ்ளோ டயம் வேஸ்ட்! ஒருத்தன் ஒருத்தியைப் பார்த்தானா; ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சிப் போச்சா, கல்யாணத்தைப் பண்ணிட்டுப் போயிட்டே இருக்கணும்… குறுக்கே எதுவும் இருக்கக்கூடாது என்ன சொல்றே?”
“ஒப்புக்றேன்!”
“நம்ம பசங்களையெல்லாம் பொறந்தவுடனே அவுத்து விட்டுடுவேன்! ‘எங்க வேணாலும் போங்கடா! என்ன வேணாலும் பண்ணுங்கடா’ன்னு ஜாலியா விட்டுடுவேன்…! கெடைச்சது ஒரே ஒரு லைஃப் – சாவறத்துக்குள்ள அத்தினியும் அனுபவிச்சிடணும்… என்ன சொல்ற?”
”சரி. இதென்ன சிகரெட், புதுசா இருக்கு?”
“ட்ரிபிள் ஃபைவ்! என்னை மாதிரி பெரிய மனுஷங்க குடிக்கிறது!”
“சரி. அதெல்லாம் இருக்கட்டும் ராம்ஜி. இப்போ சீரியஸா நான் சில விஷங்கள் பேசப் போறேன்…!”
“சிகரெட்டை அணைச்சிரட்டுமா?”
“அதுபாட்டுக்கு அது பொகையட்டும்! நீங்களும் கொஞ்சம் சீரியஸா பேசணும், அதுக்குத்தான் சொல்றேன்”.
“என்ன விஷயம், சொல்லு?”
“அன்னிக்கு மூர்மார்க்கெட்ல அழைச்சிட்டு வந்தேளே அவ யாரு?”
“சத்தியமா, எங்கம்மா மேல் ஆணையா- அவ என்னோட டாட்டர் மாதிரி… அந்த பெண்ணோட ஓடம்புக்கு மட்டும்தான் இருபது வயசு! மனதுக்கு அதுல் ஸைபரை அடிச்சிடு! வெறும் ரெண்டு வயசு! ஒலகமே தெரியாது அதுக்கு, கொஞ்சம் ஃபூல்! கொஞ்சம் இன்னஸெண்ட்! கொஞ்சம் ஏஞ்சல்! நாம் மேரேஜ் பண்ணிட்டதும் அது நம்மக்கூடத்தான் வந்து இருக்கப் போகுது. அப்ப நீயே அவளை உன் மகள்னு சொல்லப் போறியா இல்லையான்னு பார்…”
சுகந்தா மிகுந்த உணர்ச்சிவசப்பட்டாள். பல நிமிஷங்களுக்கு உதட்டைக் கடித்தபடி உட்கார்ந்திருந்தாள். சிறிது நேரம் கை நகங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவளையும் என்னையும் தப்பா நெனைச்சியா?”
“சேச்சே!”
“அப்புறம் என்ன?”
சுகந்தா மௌனமாக இருந்தாள்.
“எது உன் மனதில் இருந்தாலும் – சொல்லிடு சுசுந்தா….”
“ராம்ஜி, நீங்க வந்து…” – தயங்கினாள்.
”சொல்லு.”
“என் ஒருத்திக்குத்தான் சொந்தம்…!”
“ப்பூ, இதைச் சொல்றதுக்குந்தானா இந்தத் தயக்கம்? குதிரை முட்டை! எனக்கு ஒன்னை விட்டா வேற யார் இருக்கா – சொல்லு? ஏன் வீணா இப்படியெல்லாம் பயப்படறே?”
“பயப்படத்தான் செய்றேன் ராம்ஜி! அதுக்குக் காரணம் – நீங்க ரொம்ப பொண்களுக்கு அப்பில் ஆறேள்! அதான் என்னைப் பயப்படுத்தறது! எவளாது சிரிச்சு உங்களை ஏமாத்திடுவாளோன்னு நடுங்றது என் மனசு!”
“பைத்தியக்காரி எவளாவது பல்லைக் காட்னா நானும் பல்லைக் காட்டுவேன்னு பாத்தியா?”
”வுமன்னா உங்களுக்கு ஒரு வீக்நெஸ் இருக்கு!”
“இருந்திச்சி! ஆனா இப்ப இல்லை! என்னோட பர்ஸனாலிட்டி வீக்னெஸ் அத்தினியையும் உன்னோட அப்படியே உறிஞ்சித் தள்ளிடுச்சி. சந்தேகமே படாதே! நான் முழுக்க முழுக்க உன் ஆள்.”
“உங்க அப்பா மேல் ஆணையா சொல்லுங்கோ!” – சுகந்தா தமாஷாகத்தான் சொன்னாள்.
“ஐயையோ! அந்த ஆள் மேல ஆணையா சொல்லக் கூடாதும்மா! அவரு ஒரு மாதிரி… தேவதானப்பட்டிங்கற ஊர்ல இன்னொரு அம்மாளை செட்-அப் பண்ணி வச்சிருக்கார் அந்த ஆளு…”
“ஐயையோ! நெஜமாலா ராம்ஜி?”
“நெஜம்மா. எங்க அம்மாவுக்கே அதெல்லாம் தெரியும்!”
“ஒண்ணும் சொல்லமாட்டாளா?”
“அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க! அந்த மாதிரி விஷயமெல்லாம் அந்தப் பக்கத்ல ரொம்ப சர்வ சாதாரணம்! அது ஒரு பார்ட் ஆஃப் தேர் கல்ச்சர்!”
”நல்ல கல்ச்சர்!”
“நான் அந்த கல்ச்சர்லேருந்து வெகு தூரம்…”
“அதான் எனக்கு வேணும்!”
“இப்ப என் மேல நம்பிக்கைதானே?”
“என்னிக்குமே என்னோட இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமா நீங்க இருக்கணும்!”
“இப்பவும் இருப்பேன். எப்பவும் அப்படியே இருப்பேன். போதுமா?”
“போதும்…”
“சரி. நீ இப்ப சீரியஸா சில விஷயங்கள் பேசின மாதிரி, நானும் சில விஷயங்கள் சீரியஸா ஒன்னைக் கேக்கட்டுமா?”
“தாராளமா கேளுங்கோ…”
“இப்ப உங்க கௌசல்யாவுக்கு வர செப்டம்பர்லே மேரேஜ்?”
“யெஸ்.”
“அந்த மேரேஜ் முடிஞ்சதுமே உனக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கப் போறாரா உங்கப்பா?”
”இல்லே. கௌஸி கல்யாணத்துக்கு எஸ்டிமேட்டுக்கு மேல் போயிடுத்து இல்லையா – அதனால இன்னும் ஆறேழு மாசத்துக்குப் பயமில்லை…”
“ஒருவேளை எங்க தமிழரசி கல்யாணம் ஆறு மாசத்துக்குள்ளே முடியாம – அதுக்குள்ள உங்கப்பா உன்னோட ஜாதகக்கட்டைத் தூக்கிட்டார்னா அப்ப என்ன பண்ண?”
சுசுந்தா யோசித்தாள்.
“எதுக்குக் கேக்கறேன்னாக்க, உன் விஷயம் கௌசல்யா விஷயம் மாதிரி இல்லை. நீ ப்யூட்டி க்வீன்! அருமையான ஜாப்ல வேற இருக்கே! ரெங்கராஜன் மாதிரி எவனாவது ஒருத்தன் வரதட்சிணையே வேண்டாம்னு உங்கப்பா கால்ல வந்து விழுவான்.”
“அப்படி வாச்சே பார்த்துக்கலாம்!”
”வந்திடுச்சின்னு வச்சிக்கம்மா!”
“அப்போ… ஒரே ஓட்டம்தான். ஓடியே வந்திருவேன்!”
“அந்த ஓட்டத்தைக் கௌசல்யா கல்யாணம் முடிஞ்ச மறுநாளே ஓடிக் காட்டிடு!”
சுகந்தா யோசனை செய்து பார்த்து விட்டுச் சொன்னாள்:
“பயமா இருக்கு ராம்ஜி!”
”ஆறு மாசம் கழிச்சி ஓடி வர்றதுக்குப் பதிலா ஆறு மாசம் முன்னாடி வந்திடப் போறே, அவ்வளவுதானே?”
“வந்து…”
“இங்கேயே ஸ்பெஷல் மேரியேஜஸ் ஆக்ட்படி நாலைஞ்சு ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிப்போம்… பண்ணிட்டு நாமபாட்டுக்கு இங்க ஒரு வீடு பார்த்து ஜாம் ஜாம்னு குடித்தனத்தை ஆரம்பித்து விடுவோம். தமிழரசி கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே, எங்க ஊர்ல போய் குழந்தை குட்டியோட இறங்கிடுவோம்!”
சுசுந்தா கிள்ளினாள்.
“அது சரி, சும்மா கிள்ளிட்டு கிள்ளிட்டு போ!”
“அவசரப் படாதேள் ராம்ஜி. எங்க கௌஸி கல்யாணத்துக்குத் தான் இன்னும் ரெண்டு மாசம் இருக்கே! நன்னா யோசிச்சு உங்களுக்கு நான் பதில் சொல்றேன்…”
“என்னத்தை யோசிக்கப் போறேன்னு தெரியலை…”
“ஒரு பொண்ணுங்கற முறையில நான் யோசிக்கத் தான் செய்யணும் ராம்ஜி.”
“சரி… உன் இஷ்டப்படி யோசி! ஒனக்காக எத்தினியோ நாள் பொறுத்தாச்சு, இன்னும் கொஞ்ச தாள் பொறுத்திட்டு இருக்கறதிலே என்ன ஆயிடப் போகுது. ஆல்ரைட்! சுகந்தா மனதே!”
“தாங்க யூ…”
சிறிது நேரத்துக்கு சுகந்தா என்னவோ யோசித்தபடி மௌனமாக இருந்தாள். கொஞ்சம் துவண்டு போயிருந்த அவளுடைய முந்தானையைப் பார்த்தபடி நானும் மௌனமாக இருந்தேன்.
“சுகந்தா, முந்தானை என்கிறதைப் பத்திச் சின்னச் சின்ன ஐடியாஸ் வருது எனக்கு! அதை வச்சி ஒரு கவிதை சின்னதா எழுதலாம்னு பார்க்கிறேன்…”
”ஒரு வரி சொல்லுங்கோ….”
“முந்தானை காதல் மிக்கது. கொலுசு மோகம் மிக்கது. எப்படி?”
“கொலுசு ஒங்களுக்கு பிடிக்குமா ராம்ஜி?”
“பிடிக்குமான்னு லேசா கேட்டுட்டே!”
‘கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கித் தாங்கோ.”
“ஓயெஸ்!”
”சரி. கவிதையோட நெக்ஸ்ட் லைன்?”
“இனிமேதான் யோசிக்கணும்!”
“என்னைக் கேட்டா நீங்க கதை எழுதலாம் ராம்ஜி!”
“நீ சொல்லியாச்சு இல்லையா? நாளைக்கே எழுத ஆரம்பிக்கிறேன்!”
“ஐ’ம் நாட் ஜோக்கிங்! ப்ளீஸ் பி ஸீரியஸ்…”
“சீரியஸாத்தான் சொல்றேன் நானும். லாரன்ஸோட சன்ஸ் அண்ட் லவர்ஸ், ஹெஸ்ஸோட டேமியன்: ஹென்றி மில்லரோட ப்ளாக் ஸ்பிரிங் – அது மாதிரியெல்லாம் தமிழ்ல எவனாவது எழுதத்தான் செய்யணும்…”
“ஆர்த்தர் மில்லரை வுட்டுட்டேளே…?”
“நோ நோ. அவன் ரொம்ப சாதாரணமான ப்ளே ரைட்டர்! ஆனா அவன செஞ்ச மாதிரி நானும் வேணா ஒரு காரியம் செய்யலாம்!”
“என்ன செஞ்சான் அவன்?”
“ஓர் அருமையான சினிமா நடிகையைக் கல்யாணம் செஞ்சான்!”
சுகந்தா கொஞ்சம் பலமாகக் கிள்ளினாள்.
“சுகந்தா, சினிமால ஆக்ட் பண்றியா?”
“அதுதான் கொறைச்சல்!”
“நீ சினிமா நடிகை ஆயிட்டா ஒண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எனக்கு இன்னும் கொஞ்சம் கிக், த்ரில் – ஜாஸ்தியா இருக்கும்! ரொம்ப ஈஸியா நானும் பாப்புலர் ஆயிடுவேன்!”
“பேத்தறத்துக்கு ஆரம்பிச்சுட்டேன். எழுந்துக்கலாம்”.
“இரு இரு. ஒரு விஷயத்தை மறந்துட்டேன். நீ ஓங்க கௌஸி கல்யாணத்துக்கு த்ரீ தவுஸன் கொடுக்கப் போறதா சொன்னே இல்லையா?”
“ஆமா.”
“இந்தா, அதை நான் தரேன் ஒனக்கு…”
பேண்ட் பாக்கெட்டில் திணித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்தேன். கொத்தாக அவளிடம் நீட்டினேன். பணத்தை அவள் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக இருந்தாள்.
“வாங்கிக்க கண்ணம்மா…”
‘வேண்டாம்’ என அவள் தலை அசைந்தது.
“கௌஸி கல்யாணத்துக்கு நான் தரக்கூடாதா?”
‘தரக்கூடாது’ என்று அவள் தலை மறுத்தது.
“தாங்க்ஸ். நீங்களே வச்சுக்கோங்கோ!”
“பரவாயில்லே. சும்மா என்கிட்டே இருக்கறதுக்குப் பதிலா உன்கிட்டே இருக்கட்டும்…”
“அதெல்லாம் வேணாம். ராம்ஜி! சொன்னா கேளுங்கோ…”
“சரி. போ: மூவாயிரம் ரூபா மிச்சம்தான் எனக்கு…”
“இம்சைதான் பண்றேள்…”
“ஆல்ரைட். அடுத்த வாரம் கௌஸி நிச்சயதார்த்த மாக்கும். அந்த நேரத்ல நான் எங்க ஊருக்குப் போய் என்ன நடக்குதுன்னு ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடறேன்.”’
”அதைச் செய்யுங்கோ…”
சுகந்தா அந்தப் பட்டுப் புடவையை ஜானகியிடம் கொடுத்து வைத்திருந்தாள். ஒரு திரைப்படம் பார்க்க என்னுடன் ஆனந் தியேட்டருக்கு வந்தபோது ஒரே ஒரு முறை அவள் அந்தப் புடவையை அணிந்து கொண்ட பின் மீண்டும் அப்புடவையைக் கட்டிக் கொள்கிற சந்தர்ப்பம் அவளுக்கு வரவேயில்லை. சுகந்தா ஒரு நாள் தரையில் வீசி யெறிந்துவிட்ட அந்த பனாரஸ் பட்டுப் புடவையை நானும் திரும்பப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். ஜானகியின் வீட்டுத் தரையில் எங்கள் இருவராலும் நிராகரிக்கப்பட்ட அந்தப் பரிசப் புடவையை, சில வருடங்கள் கழித்து ஒரு பண்டிகை காலத்தில் ஜானகி கட்டிக் கொண்டிருந்த மாண்பு கெட்ட செயலைக் கண்டு காணாதவன் போலத்தான் நான் போய்க் கொண்டிருந்தேன்.
அத்தியாயம் – 14
சுகந்தாவின் மூத்த சகோதரி கௌசல்யாவின் திருமண நிச்சயம் சென்னையில் மிக எளிதாக நடைபெற்றுக் கொண்டிருந்த கணத்தில், நான் பெரியகுளம் தென்கரை இடையர் தெருவில் எங்கள் வீட்டு மாடியில் என் அப்பா, அம்மா முன்னிலையில் சுசுந்தா பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
என் அப்பா இகழ்ச்சியாகப் பேசினார்: “ஒன்னை மாதிரி அவளும் கிராக்குத்தானா. அதான் ஒன்னைக் கட்டிக்கிறேன்னு சொல்றா! நீ ஒண்ணும் உருப்படுவேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. போ போ… எவளை வேணுமானாலும் கட்டிக்க, எங்களுக்கென்ன? தாய் தகப்பன் சொல்ற பேச்சைக் கேக்கற பிள்ளையா இருந்தா சொல்லலாம்…ஆனா நீ ஏணின்னா கோணின்னு சொல்ற ஆளு! உன்கிட்ட என்னத்தைப் பேசறது?”
என் அம்மா என்னைப் புகழ்ச்சியாகத்தான் சொன்னார்கள்: “நீங்க சும்மா வாயை மூடிட்டு கெடங்க. புள்ளை ஏதோ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதே பெரிய புண்ணியம். என் தலைப்புள்ளை அநாதை மாதிரி பட்ணத்ல போயி கெடக்கான்னு நான் கெடந்து பொலம்பித் தவியா தவிச்சிட்டுக் கெடக்கேன். நல்லபடியா இவன் எவளையாவது கல்யாணம் செஞ்சிகிட்டா பழனி முருகனுக்குப் பால் அபிஷேகம் பண்றேன்னு நேந்து கிட்டிருக்கேன். நீ கூட்டிட்டு வாய்யா அந்தப் பொண்ணை. நம்ம பொம்பளைப் புள்ளைக்கு எப்படி, எவ்வளவு நகை செஞ்சு கல்யாணம் செஞ்சு குடுத் தோமோ… அதே மாதிரி அந்தப் புள்ளைக்கும் வைரத்ல கம்மலும் நெக்லஸும் செஞ்சு போட்டு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவோம். எல்லாம் நம்ம தமிழரசி கல்யாணமாகி அவ புருஷன் வீட்டுக்குப் போய்ச் சேரட்டும். மறு ரயில்லேயே போய் அவளைக் கூட்டிட்டு வந்துருவோம்…”
‘”அம்மாவும் ஆச்சு, புள்ளையும் ஆச்சு! எனக் கென்ன?” – துண்டை உதறி தலையில் கட்டிக் கொண்டு, அப்பா தேனிச் சந்தைக்குக் கிளம்பிச் சென்றார். நான் அவருடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தேக்கடி நோக்கிப் பறந்தேன்.
திரும்பி சென்னை வந்து மாலையே சுகந்தாவைச் சந்தித்தேன்.
“என்ன ராம்ஜி? தமிழரசி கல்யாணம் எதுவும் முடிவாயிருக்கா?”
“முடிவாயிடும். தமிழரசியோட அப்பா நாலு திசையிலும் ஆளை அனுப்பிச்சிருக்கார், எங்கேயிருந்தாலும் பிடிச்சி இழுத்திட்டு வாங்கடான்னு. ரெண்டு மூணு மாசத்துல எப்படியும் இழுத்திட்டு வந்திடுவாங்கன்னு நெனைக்கிறேன்!”
“தமிழரசிக்குக் கல்யாணம் வந்தா ரொம்ப தடபுடலா நடக்குமோ?”
“கடைசிப் பொண்ணாச்சே! வெளுத்துக் கட்டிடுவாங்க…”
“என்னைப் பத்தி சொல்லிட்டேளா?”
“சொல்லியாச்சி. ஒனக்கும் வைரக்கம்மல், வைர நெக்லெஸ் எல்லாம் செய்யணும்னு எங்கம்மா, எங்கப்பாவுக்கு கண்டிஷனா ஆர்டர் போட்டுட்டாங்க…!”
இதைக் கேட்டதும் சுகந்தாவின் கண்கள் வைரம் போலத்தான் ஜொலித்தன.
“சரி; கௌஸி நிச்சயதார்த்தமெல்லாம் எப்படி?”
“அது ரொம்ப சிம்பிள்! மேரேஜ் செப்டம்பர் ஆறாம் தேதி ராம்ஜி…”
“இன்னும் ரெண்டு மாசம்கூட இல்லை. வெரிகுட் நியூஸ்…!”
“பேட் நியூஸ் ஒண்ணு! என்னையும் பெண் கேக்கறா!”
“போச்சுடா! யாரவன் விஷயம் புரியாமே வந்து மோதுறான்! பாவம், அவனுக்கும் ரெங்கராஜன் கதீ ஆயிடாமே…! யார் அவன்?”
“பேர் வேணுகோபாலன்.”
“எந்த ஊர்ல இருக்கான்?”
“ஸ்டேட்ஸ்…!”
“ரொம்ப தூரத்ல இருந்துதான் வரான்! என்ன பண்றான் அங்க?”
“மாண்டேனா யுனிவர்ஸிடில ஏதோ பெரிய ப்ரொபசராம்!”
”கிழிச்சான்! அவனுக்கு வேற பொண்ணு கெடைக்கலையா? அப்ப நீ இம்மீடியட்டா ஓங்க வீட்ல இருந்து சுழட்டிக்க வேண்டியதுதான்!”
“இருங்கோ. நான் சொல்றதை முழுசா கேளுங்கோ… அதுக்குள்ள அவசரப்படறேளே! அந்த வேணுகோபால் டிசம்பர்ல ஒரு ஷார்ட் லீவ்ல இண்டியா வராராம். அப்போ வந்து என்னைப் பார்ப்பாராம். என்னைப் பிடிச்சுப் போச்சுன்னாக்கா ஜனவரியில சிம்பிளா திருச்சானூர்ல மேரேஜ் பண்ணிண்ட உடனே திரும்பிப் போயிடு வாராம். நான் விசா கெடைச்சு மெதுவா போகணுமாம்! அவரும் சொல்லிட்டாராம். வரதட்சனை ஒரு பைசா வேணாம்னு! எங்க வீட்ல பேசிப் பேசிக் கிடக்கா…”
“பிசாசுங்க! பேசிப் பேசி ஏமாந்து போகட்டும்… டிசம்பர்ல அவன் வந்து பார்க்கறப்ப நீ மூணு மாச கர்ப்பமா இருப்பே!”
குபீரென சுசுந்தாவின் முகம் சந்தோஷத்தாலும் வெட்கத்தாலும் சிவந்து விட்டது. முந்தானையை எடுத்து வாயை மறைத்தபடி சொன்னாள் :
“எதுதான் பேசறதுன்னு ஒர் இதுவே கெடையாதா உங்களுக்கு?”
“அது இருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன்?”
“அந்த வேணுகோபாலனோட அம்மாவும் தங்கையும் வந்திருந்தா என்னமோ நான் அவா வீட்டுக்கு மாட்டுப் பொண்ணா போய்ட்டாப்லேயே பேசிப் பேசிச் சிரிச்சுண்டிருந்தா… எனக்கு ஒரு மாதிரியா கோவம் வந்திடுத்து. வாயைத் தெறந்து எதுவும் பேசப் படாதுன்னு பல்லைக் கடிச்சுண்டு இருந்தேன்….”
நான் சிகரெட் பற்ற வைத்தேன்
“சாக்கோபார் வேணுமாம்மா?”
“கூப்பிடுங்கோ…”
கூப்பிட்டு ஆளுக்கு ஒன்று வாங்கிக் கொண்டோம்.
“பத்து நாள் ஊர்ல என்ன செஞ்சேள்?”
”என்னமோ செஞ்சேன் போயேன்..”
சிறிது நேரம் இருவரும் சாக்கோபார் சுவையில் ஆழ்ந்திருந்தோம்.
“வேணுகோபால் டிசம்பர்ல வரானாக்கும்? வரட்டும் வரட்டும். அதுக்குள்ள நம்ம விஷயங்கள் முடிஞ்சிட்டா நோ ப்ராப்ளம்…”
“இல்லேன்னாக்கா பெரிய ப்ராப்ளம் ராம்ஜி…”
“ப்ராப்ளமும் கெடையாது ஒரு விளக்கெண்ணெயும் கெடையாது. எல்லாம் ஒன் கையிலதான் இருக்கு. ஸப்போஸ் கௌஸி கல்யாணம் முடிஞ்ச அப்புறமும் எங்க தமிழரசி கல்யாணம் முடியாம ஜவ்வா இழுத்திட்டு இருந்தாக்கா, அதுக்காக நாம டிலே பண்ணிட்டு இருக்க வேண்டாம். அன்னைக்கி நான் சொன்னபடி மெட்ராஸ்லே நாம காதும் காதும் வச்சாட்ல கல்யாணத்தைப் பண்ணிடுவோம். புரியுதா நான் சொல்றது?”
“புரியறது!”
“சும்மா இப்படியே சொல்லிட்டு சொல்லிட்டு போ. வேணு கோபாலன் கிளம்பி வந்தாத்தான் அப்புறம் புரியும்”
சாக்கோபார் சாப்பிட்ட வாயைத் துடைத்துவிட்டு – எனக்குப் புரியும்படி பேசுவது போலப் பேசினாள் :
“என்னோட பொஸிஷனை க்ளியரா சொல்லிடறேன் ராம்ஜி… கேளுங்கோ. ஒங்க தங்கைக்கு முடியாம நாம் பெரியகுளத்துல ஒங்க வீட்டுக்குப் போக முடியாது இல்லையா?”
“ஆமா.போக முடியாது. போனா எங்கப்பாவுக்கும் எனக்கும் பெரிய தகராறே வரும்..”
“ஆனா, என்னைப் பொறுத்த வரைக்கும் நம்ம மேரேஜ் ஒங்க வீட்ல, ஒங்க பேரெண்ட்ஸ் முன்னாடிதான் நடக்கணும். இந்த முடிவை மட்டும் நான் மாத்திக்கறதாகவே இல்லை. காரணமெல்லாம் கேட்காதீங்க! யாரோ ரெண்டு மூணு ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை…”
“இரு இரு…இதெல்லாம் நானும் ஒப்புக்கறேன். ஸப்போஸ் அந்த வேணுகோபாலன் ஸ்டேட்ஸ்ல இருந்து டிசம்பர் மாதம் வந்துட்டான்னா, நீ என்ன பண்ணப் போறே?”
‘”அப்போ வீட்டை விட்டுக் கிளம்பிடுவேன்!”
“அதைத்தான் நானும் சொல்றேன். டிசம்பர் மாதம் வீட்டைவிட்டுக் கிளம்பறதுக்குப் பதிலா செப்டம்பர் லேயே கம்பியை நீட்டிடு…!”
“இருங்கோ கேப்டன். நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சுடறேன். நான் வீட்டை விட்டு ஓடி வந்திடுவேன்னு சொன்னேன் இல்லியா…அப்படி நான் ஓடறது உங்களோட கெடையாது…!”
“ஏய் ஏய் ஏய்…என்ன இது பெரிய குண்டா தூக்கிப் போடறே…?”
“நான் தனியா ஓடிடுவேன்!”
“எங்கே?”
“சௌகார்பேட்ல இருக்கிற என்னோட ஃப்ரெண்ட் கோமல் வீட்டுக்கு…”
எனக்குப் போரடித்தது.
“சும்மா நீ கழுத்தை அறுக்கறே…”
“பெண்கள் மனசு ஒங்களுக்குத் தெரியாது.”
எனக்கு எரிச்சல் வந்தது: “பெரிய பெண்கள் மனசு, போங்கடி..!”
“நன்னாத்தான் கோவம் வரது. எங்க வீட்டுக்குத் தெரியாம நான் கோமல் வீட்ல இருப்பேன்…”
”ஆபீஸ்?”
“ரிஸைன் பண்ணிடுவேன்! உங்க தங்கை கல்யாணம் முடிஞ்சதும் உங்களோட ஜாய்ன் பண்ணிடுவேன்!”
“ஏதோ சென்ட்டிமெண்ட்டை மனசில் வச்சிக்கிட்டு பெரிய ரோதனை பண்றே சுகந்தா!”
“சென்டிமெண்ட்தான்! என் கல்யாணத்துக்கு என்னோட அப்பா சும்மா இருக்கமாட்டார்ங்கறது ரொம்ப கஷ்டமான சென்டிமெண்ட் ராம்ஜி! இந்த சென்ட்டி மெண்ட் பொண்ணாப் பொறந்தாத்தான் ஓங்களுக்குப் புரியும். கல்யாணத்துக்கு அவா வரமாட்டா. கல்யாணத் துக்கு அப்புறமும் வரமாட்டா. இனிமே எனக்கு அப்பா அம்மாங்கறது ஒங்க அப்பா அம்மாதான்! அதனாலதான் திரும்பத் திரும்பச் சொல்றேன் – அட்லீஸ்ட் அவர் முன்னாடியாவது நம்ம கல்யாணம் நடந்தாகணும்…”
சொல்லும்போதே சுகந்தாவின் கண்களில் நீர் நிறைந்து கன்னங்களில் வழிந்தது. என் மனத்தை நனைத்தது.
இனி நான் இந்த விஷயத்தில் சொல்ல என்ன இருக் கிறது? அவளுடைய முந்தானையால் அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். மனம் அவளின் காதலால் கனத்துப் போயிருந்தது. அவளை வீட்டுக்கு அனுப்பி விட்டு பஸ் ஸ்டாப் நோக்கி நடந்த போது ஏதோவொரு தனிமை கவிழ்ந்தாற்போலிருந்தது. தனிமை யைத் தாங்க முடியாமல் ரோஸ்மேரியிடம் ஓடினேன்.
“சின்ன கண்ணம்மா… இந்த ஒன் வீக் நீ என்ன செஞ்சே?”
“சின்னச் சின்ன தொட்டியில் ஹண்ட்ரட் ரோஜாச் செடி வாங்கினேன்…”
“காசை விரயம் பண்றே! யாராவது நூறு செடி வாங்குவாங்களா?”
“என் பேரே ரோஸ்மேரி! அதனால நான் வாங்கினேன். வாங்கக் கூடாதா?”
“பணம்…?”
“நீ குடுத்தியே!”
“எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா ரத்தக் கண்ணீர் வடிச்சிடுவார். மெட்ராஸ்ல பொம்பளைகளுக்கு சேலையும் பூவும் வாங்கிக் குடுத்தே நான் ஓட்டாண்டி ஆயிடுவேன்னு புலம்பித் தவிச்சுடுவார்”.
“ஏய்… பொய் சொல்ற நீ. எனக்கு எங்கே ஸாரீ, வாங்கிக் குடுத்தே?”
”ஔக்கில்ல ரோஸி. சுகந்தாவுக்கு,”
“ஏன், அதுக்கு ஸாரியே இல்லையா?”
“ஏன் இல்லை? ஒரு பீரோ நிறைய அடுக்கி வச்சிருக்கா…”
“அப்ப எதுக்கு நீ மட்டும் பணத்தை வேஸ்ட் பண்றே?”
“நான் அவளுக்கு வாங்கித் தந்தது பரிசுப் புடவை! சீக்கிரமே எனக்கும் சுகந்தாவுக்கும் கல்யாணம் ஆகப் போகுது சின்னம்மா…”
சட்டென ரோஸ்மேரியின் கண்களில் ஒரு அச்சம் வந்தது.
“என்னை நீ மறந்திட மாட்டியே பாஸ்?” – கலக்கத்துடன் கேட்டாள்.
“சுகந்தாவையே மறந்தாக்கூட ஒன்னை மறக்க மாட்டேன் ரோஸி.”
“நெஜமாவா?”
“சத்தியமா. எனக்கும் சுசுந்தாவுக்கும் கல்யாணமானதும் நீயும் எங்க கூடவே வந்து இருந்திடு. மூணுபேரும் ஒரே வீட்ல ஜம்னு இருக்கலாம்…”
“ஜாலியா இருக்கும் இல்லே?”
“ரொம்ப ஜாலியா இருக்கும்!”
ரோஸ்மேரி பரவசத்துடன் சொன்னாள்: “எனக்கு ஒலகமே நீதான் பாஸ்!”
“எனக்கும் ஒலகமே நீயும் சுகந்தாவும்தான்.”
“உன் சிஸ்டர் தமிழ்?”
“தமிழாவது ஹிந்தியாவது? தமிழரசிக்கு கல்யாணமாகி அவ புருஷன் வீட்டுக்குப் போய் சேர்ந்தா சரி எனக்கு! அப்புறம் எவன் அவளைப் போய்ப் பார்க்கப் போறான்.”
“பாவம் தமிழ்!”
“செலவுக்குப் பணமெல்லாம் வச்சிருக்கியா?”
“இருந்தா குடு பாஸ்… ஒரு பைசா இல்லை…”
ரோஸ்மேரியின் காதைப் பிடித்துத் திருகினேன்.
குழாய் முனையில் ஒவ்வொரு நீர்த்துளியாய் உதிர்வது போல, சுகந்தாவின் மூத்த சகோதரியின் திருமணத்தை நோக்கி ஒவ்வொரு தினமாக உதிர்ந்து கொண்டிருந்தது. இந்தக் கால உதிர்வு டிசம்பரில் வேணுகோபாலன் சுசுந்தாவைப் பெண் பார்க்க வரப் போகிற அந்தக் கட்டத்தையும் நோக்கித் தான் இல்லையா? நாள் செல்லச் செல்ல நானும் அவளும் பரவசமாகவும் படபடப்பாகவும் இருந்தோம். பரவசம் கௌசல்யாவின் கல்யாணத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தாமதத்தால். வாரம் ஒரு முறை நான் பெரிய குளத்துக்கு டெலிபோன் செய்து கேட்டுக் கொண்டே இருந்தேன். எந்த வரனும் அவளுக்கு முடிவாகவில்லை. எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.
தமிழரசியின் திருமணத்துக்காகக் காலம் காத்திருக்குமா என்ன? ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் கடந்து அந்த செப்டம்பரும் வந்தது. கௌசல்யா கல்யாணமும் நடந்து முடிந்தது.
இன்னும் கூட எனக்கு நினைவிருக்கிறது. கௌசல்யாவின் முதல் திருமண அழைப்பிதழ் – திருப்பதி வெங்கடாஜலபதி அவர்களுக்கு. அடுத்த அழைப்பிதழ் எனக்குத் தான்! ஆனால், அந்த அழைப்பிதழை எனக்கு அனுப்பியவர் சுகந்தாவின் தந்தை அல்ல. அவரின் சீமந்த புத்திரி சௌபாக்கியவதி சுகந்தவதி!
எனக்கும் கௌசல்யாவின் திருமணத்துக்குப் போக வேண்டுமென்றுதான் ஆர்வமாக இருந்தது. கல்யாண வீட்டில் என்னுடையவள் எப்படி வளைய வருகிறாள் என்பதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் நானும் ஆசைப்பட்டேன். எனினும் நான் போகவில்லை. அந்தச் கல்யாணம் நடந்து கொண்டிருந்த சத்திரம் இருந்த தெருப்பக்கம் மட்டும் வெறுமனே அப்படியும், இப்படியுமாக நான்கு முறை போய் வந்து என்னைத் திருப்தி செய்து கொண்டேள்!
கௌசல்யா திருமணம் முடிந்து ஆறு நாள்கள் கழித்துத் தான் நானும் சுசுந்தாவும் சந்தித்தோம்.
“அப்போ ஓங்க அக்காவுக்கு கல்யாணத் தன்னிக்கே சாந்தி முகூர்த்தமும் வச்சி ஜமாய்ச் சுட்டாங்களாக்கும்…”
“ஆமாமா. அன்னிக்கே வச்சுட்டா. ஆனா, ஜமாய்ச் சுட்டாளா இல்லையான்னு சம்மந்தப்பட்டவாளத் தான் கேக்கணும்…!”
“நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல நீ ஜமாய்ச்சிடுவே இல்லையா?”
காதில் விழாதவள் போல எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள். எத்தனை மறைத்தும் வெட்கம் அவளுடைய முகத்தில் பரவியதைச் சில நிமிடங்கள் ரசித்தேன்.
”அந்த விஷயத்ல நான் ரொம்ப முரடன்! ஈஸியா என்னை ஃபேஸ் பண்ணிடுவியாம்மா?”
பேசாமல் இருந்தாள்.
“சரி. வெட்கப்பட்டதெல்லாம் போதும். நாளைக்கி ஸண்டே தானே. ஏதாவது பிச்சர் போகலாமா?”
“வீட்ல எக்கச்சக்கமா வேலை இருக்கு ராம்ஜி. எங்கேயும் நகர முடியாது.”
“அப்ப மறுபடியும் ஒன்னை எப்ப பார்க்கறது?”
“நான் ஒங்களுக்கு ரிங் பண்றேனே.”
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புத்தகங்களைப் புரட்டினேன். இசைத் தட்டுகளை ஒலிக்க விட்டேன். எதிலும் மனம் ஒன்றவில்லை. மனத்துக்குப் பிடித்த உடையாகத் தேர்ந்தெடுத்து அணிந்தேன். ஸ்கூட்டரை எடுக்க விருப்பமில்லை. டாக்ஸியில் அமர்ந்து சபையர் தியேட்டரை அடைந்தேன்.
சிகரெட்டின் துணையோடு அங்கும் இங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்த என்னை ஒரு பெண்ணின் குரல் முதுகின் பின்னால் ஒலித்தது நிறுத்தியது.
“மிஸ்டர் ராம்குமார்…!”
சட்டென திரும்பிப் பார்த்தேன்.
ருத்ரா – அவளுடைய தங்கையுடன் மிக அழகாக நின்று கொண்டிருந்தாள். அவ்வளவுதான், சரசரவென்று நான் வேறொரு உலகப் பிரஜையாகி விட்டேன்!
அத்தியாயம் – 15
“ஹலோ ருத்ரா! ஹௌ ஆர் யூ?”
தோள்களை நவீனமாகக் குலுக்கியபடி ஓர் அழகிய அபிநயம் செய்து ‘ஃபைன்’ என்றாள்.
அவளின் அபிநயத்தில் அவளுடைய நாட்டியக் கலை ஆர்வத்தின் முத்திரை துல்லியமாகத் தெரிந்தது.
“வீட்ல அப்பா அம்மா ப்ரதர் எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“நீங்கதான் ரெண்டு வருஷமா எங்க வீட்டு பக்கமே வரலையே… வரக்கூடாதுன்னு இருக்கீங்க போலிருக்கு…”
“நோ நோ… நீங்க கோபாலபுரம் பக்கம் வீடு ஷிஃப்ட்டாகிப் போனப்புறம் எனக்கு அந்தப் பக்கமே வர முடியாம போச்சி, இப்ப. அம்மா எப்படி இருக்காங்க…?”
”பரவாயில்லை. சுவரைப் பிடிச்சிக்கிட்டே கொஞ்ச தூரம் நடக்கறாங்க. மற்றப்படி வீல்சேர்தான் யூஸ் பண்றாங்க…”
‘”அப்பா ஊரில் இருக்காரா?”
“இல்லை ராம்குமார். அப்பா அவுட்டோர் ஷூட்டிங்குக்கு எர்ணாகுளம் போயிருக்கார். ப்ரதரும் கூடப் போயிருக்கான்…”
“ஸோ… ஃபிலிம் வந்தீங்களா?”
“டிக்கெட் கெடைக்கலே. சும்மா ஸ்டில்ஸ் பார்த்துட்டு வீட்டுக்குப் போயிடலாம்னு லாபிக்குள்ள வந்தோம்… உங்களுக்கு டிக்கெட் கிடைச்சுதா?”
“ப்ளாக்லதான் கெடைச்சுது…”
“வீட்டுக்கு ஒரு நாள் வாங்க ராம்குமார். அப்பாகூட அடிக்கடி உங்களை நினைத்துக் கொள்வார்.”
”உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, நானும் இப்பவே உங்ககூட வீட்டுக்கு வரட்டுமா ருத்ரா?”
மிக நட்புடன் எங்கள் கண்கள் சந்தித்துக்கொண்டன.
“யூ ஆர் வெல்கம்…”
“ஒன் மினிட்! டிக்கெட்டை யாருக்காவது குடுத்திட்டு வரேன்…”
“வெய்ட் வெய்ட்…டிக்கெட்டை விக்க வேண்டாம் ராம்குமார்…என் சிஸ்டர் ஓமனா போய்ப் பார்க்கட்டும்…”
“அப்ப சரி…இந்தாங்க!”
“ஓமன்! நீ படம் பார்த்துட்டு வா. நான் இவரை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்…”
“ஓயெஸ்…”
கோபாலபுரம் நோக்கிய அந்த நீண்ட வீதியில் ருத்ராவுடன் நடந்து சென்றது புதியதொரு காற்று வெளியில் பிரவேசிப்பதாக இருந்தது.
சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த ருத்ராவின் அம்மாவை வணங்கினேன். அடையாளமே தெரியாதபடி அந்த அம்மாளின் உடலையே பாரிசவாயு சின்னாபின்னமாக்கி இருந்தது.
நானும் ருத்ராவும் வெளிப்புற வராந்தாலில் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட பிரம்பு நாற்காலிகளில் எதிர் எதிராக உட்கார்ந்தோம். கொன்றை மரத்தில் இன்னும் பூக்கள் இருந்தன. புல்தரையில் நிறைய அணில்கள் திரிந்து கொண்டிருந்தன.
”உங்க டான்ஸ் ப்ராக்டிஸ் எல்லாம் கண்ட்டினியு பண்றீங்களா?”
இதற்கு ருத்ரா நேரிடையாகப் பதில் சொல்லாமல் வேறொரு சம்பவத்தை எனக்கு நினைவூட்டினாள்.
“த்ரீ இயர்ஸ் பேக் – நீங்களும் நானும் மியூஸிக் அகாடமியில் யாமினி கிருஷ்ணமூர்த்தி யோட ப்ரொக்ராம் ஒண்ணுக்குப் போயிருந்தோமே, ஞாபகம் இருக்கா?”
எனக்கு ஞாபகம் இருந்தது. ஆனால், கடந்துபோன எதையும் நான் மீண்டும் அப்போது நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. நான் நிறையவே களைத்துப் போயிருந்தேன். என் களைப்பு அத்தனையையும் சுகந்தாவில் கரைத்து விடுகிற எல்லைக்கோட்டின் அருகில் வந்து விட்டபின் என் இறந்த காலங்களைப் புரட்டிப் பார்க்கிற சக்தியும் எனக்கு இல்லை. அதனால் மௌனமாகவே இருந்தேன். கழுத்தில் கிடந்த மெல்லிய பொன் சங்கிலியைக் கடித்தபடி ருத்ராவும் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தாள்.
“எப்போவாவது கலாக்ஷேத்ரா பக்கம் போனீங்களா ராம்குமார்?”
“இல்லை ருத்ரா, உங்ககூட அங்கெல்லாம் போய் வந்தப்புறம் அந்தப் பக்கம் நான் போகவே இல்லை. அங்கெல்லாம் போற மாதிரி எனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாருமே கெடையாது…”
“ஏன், நான் இல்லையா?”
பளிச்சென்று என் கழுத்தில் ‘ஒரு மாலை விழுந்தாற் போல’ இருந்தது. சங்கடத்துடன் ருத்ராவைப் பார்த்தேன். மலரில் தேன் அருந்தும் வண்ணத்துப் பூச்சியின் போதை யேறிய இயற்கையாக அவளின் கண்கள் இமைக்காமல் தீர்க்கமாக என்னையே நோக்கின.
“யூ ஃபர்காட் திஸ் பிட்ச் ருத்ரா…” – வறண்ட குரலில் சொன்னாள்.
நான் கொஞ்சம் பதறி விட்டேன். “நோ… நோ… ப்ளீஸ் அந்த மாதிரியெல்லாம் சொல்லாதீங்க ருத்ரா….”
“உண்மையிலே உங்களுக்கு என்கிட்ட நட்பு இருந்திருந்தா இப்படி எதுவுமே சொல்லாமே என்னைப் பார்க்கறதையே நீங்க நிறுத்தியிருக்க மாட்டீங்களே… நான் எவ்வளவு தான் அழகா இருந்தாலும், என்ன தான் பரதநாட்டியத்ல இண்ட்ரெஸ்ட்டெடா இருந்தாலும் கேவலம் நான் ஒரு சினிமாக்காரியோட பெண் தானே…!”
எனக்கு எரிச்சலாகிவிட்டது. ஏன் புத்தி கெட்டுப் போய் இவளுடன் வந்தோம் என்று தோன்றியது. எழுந்து போய் விடலாம் என்று இருந்தது. சட்டென என் மன நிலையை உணர்ந்து கொண்ட ருத்ரா, தன்னிரக்க வேஷத்தைக் கைலிட்டு, “ஏதாவது டிரிங்க்ஸ் சாப்பிடறீங்களா?” என்று கேட்டாள்.
“ஜஸ்ட் காபி – இருந்தா தாங்க, போதும்…”
ருத்ரா உள்ளே திரும்பி, பணியாளை அழைத்து மலையாளத்தில் எதுவோ பேசி காபிக்கு உத்தரவிட்டாள்.
”ஆஷ்ட்ரே வேணுமே” – என்று கேட்டபடி நான் சிகரெட்டை எடுத்தேன்.
“வெய்ட் ஏ மினிட்…”
உள்ளே போய் வேகமாக ருத்ரா ஆஷ்ட்ரே கொண்டு வந்து நாற்காலியைச் சிறிது நெருக்கமாகப் போட்டு உட்கார்ந்தாள்.
“நீங்க ஏதாவது ஆடிக்காட்டுங்க ருத்ரா. ஆக்ச்சுவலா அதுக்குத்தான் உங்ககூட இப்ப வந்தேன் நான்.”
“ஸாரி ராம்குமார்! நான் டான்ஸ் கத்துக்கறதை நிறுத்தியே ரொம்ப நாளாயிடுச்சி. எப்ப என்னை வெறும் சினிமா நடிகை ஆக்கறதுக்காகத் தான் நாட்டியம் கற்றுக் கொள்ள என் பேரெண்ட்ஸ் என்னை கம்ப்பெல் பண்ணினாங்களோ – அன்னிக்கே நான் ஆடற ஆசையை விட்டுட்டேன். ஒன் வீக் டயம் தாங்க ராம்குமார். லேசா முயிற்சி பண்ணிக்கிறேன். அப்புறம் உங்களுக்காக உங்க முன்னாடி ஆடறேன். ஜெயதேவர்தான் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமே – அவரோட அஷ்டபதிக்கே ஆடறேன். போதுமா?”
ஜெயதேவர் என்றதுமே கீத கோவிந்தத்தின் ‘நித்ததி சந்தன…’ என் மனக்கண்களில் விரிந்தது.
இரண்டு கப் சாஸர்களில் காபி வந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே குடித்தோம்.
சில விநாடிகளுக்குப் பின் ருத்ரா சாயம் பூசப்பட்ட அவளின் நீண்ட விரல் நகங்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். “மிஸ்டர் ராம்குமார்! நான் வெட்கத்தை விட்டே ஒரு விஷயம் உங்களைக் கேட்கட்டுமா?”
என்ன கேட்கப் போகிறாளோ என்று கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ஆனால், அவளுக்கு சொன்னேன், “எது வேணுமானாலும் கேளுங்க ருத்ரா…”
“உங்க நட்பு எனக்கு வேண்டும். மீண்டும் நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும்.”
ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்படுகிற போதெல்லாம் எனக்குள் மூளும் ஒரு சோகம் அப்போதும் மூண்டது. அந்த சோகத்தை மறைத்துக் கொண்டு பேசினேன்: “ருத்ரா, ரொம்ப நாளாவே நாம ஃப்ரெண்ட்ஸ்தான், ஆனா, ஏனோ ரெண்டு வருஷம் நாம் மீட் பண்ணலை. இனி தொடர்ந்து மீட் பண்ணுவோம்! உங்களுக்கும் என் மாதிரியே லிட்ரேச்சர், ஃபைன் ஆர்ட்ஸ் இதிலெல்லாம் நல்ல இண்ட்ரெஸ்ட் இருக்கு. அதை நாம் ரெண்டு பேருமே அடிக்கடி மீட் பண்ணி ஷேர் பண்ணிக்கலாம். ஆனா, அது வந்து உங்களை வேற எந்த விதமான எண்ணத்துக்கும் லீட் பண்ணிடக் கூடாது. இதை முதல்லேயே சொல்லிடறது நல்லது. ஏன்னா ஐ’ம் என்கேஜ்ட்…”
ஒரு கணம் புரியாமல் விழித்த ருத்ரா, “யு மீன் மேரேஜ்?” என்றாள்.
“ஆமாம்.”
“ஓ! கங்க்ராஜுலேஷன்ஸ்!”
அவளின் கரம் நிஜமான உள்ளன்புடன் என்னை நோக்கி நீண்டது. நன்றியுடன் அந்தப் பெண்ணின் கையைக் குலுக்கினேன்.
“பெண் உங்க ஊரா?”
“இல்லை ருத்ரா. இங்கேதான் சில வருஷங்கள் முன்னாடி அவளை நான் மீட் பண்ணினேன். சீக்கிரமே நாங்க மேரேஜ் பண்ணிக்கப் போறோம்…”
“ரியலி வெரி ஹேப்பி நியூஸ் ராம்குமார். உங்களை நான் சரியான நேரத்லதான் பார்த்திருக்கேன். கல்யாணம் எங்கே நடந்தாலும் கண்டிப்பா நான் வருவேன். இன்விடேஷன் அனுப்ப மறந்துடாதீங்க…”
“கண்டிப்பா முதல் இன்விடேஷன் உங்களுக்குத் தான்…!”
“இன்னொரு காபி சாப்பிடறீங்களா?”
”ஓயெஸ்…!”
காபி கலந்து எடுத்து வர ருத்ராவே உள்ளே விரைந்ததும் நான் பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி கொன்றை மரக் கிளைகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது காபி கலந்து கொண்டு குத்ரா வேகமாக வந்ததும் பெண்களின் அருகாமையில் எளிதில் உணர்ச்சி வசப்படும் என் சுபாவம் வெகு சுலபமாக இயங்கிவிட்டது!
“ருத்ரா, காத்துல இந்த மரம் ஆடறப்ப ஒரு அருமையான அபிநயம் போலத் தெரியுதே, கவனிச்சீங்களா?”
“ஓலியஸ். மெனி டைம்ஸ் அதை நான் வாட்ச் பண்ணியிருக்கேன் ராம்குமார்…”
“என்னிக்காவது பாண்டிபஜார் போனா அங்கே ரெண்டு பக்கமும் இருக்ற ஒவ்வொரு மரமா அப்சர்வ் பண்ணிப் பாருங்க. பார்க்கப் பார்க்க அற்புதமா இருக்கும். க்ளியரா அலாரிப்பில் இருந்து தில்லானா வரை பார்க்கலாம் அங்கே…!”
ருத்ரா வெகுவாக நெகிழ்ந்து போனாள். “நீங்களும் வாங்க ராம்குமார். ரெண்டு பேருமா சேர்ந்தே போய்ப் பார்க்கலாம்…”
எனக்கு சனி எப்போதுமே நாக்கில்தான்!
“போகலாம் ருத்ரா! கண்டிப்பா போகலாம். பாண்டி பஜார் மரங்களை மட்டுமில்லை. மெட்ராஸ்ல இருக்கற அத்தனை மரங்களையும் ஒரு பார்வை பார்த்துடலாம்….”
“ஓயெஸ்…”
‘”அப்ப நாளைக்குக் காலையில 11 மணிக்கு சபையர் இயேட்டர் எதிர்ல ஷார்ப்பா என்னோட ஸ்கூட்டர்லேயே வந்திடறேன்….அங்கே மீட் பண்ணி அப்படியே கிளம்பிடலாம்…”
“ஓகே…!”
அன்று இரவு பீரோவில் பத்திரமாக வைத்திருந்த சுகந்தாவின் புடவையைக் காதலுடன் எடுத்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்! ‘என் கண்ணம்மாவின் புடவையே! நீ மீண்டும் அவளிடமே போய்ச் சேரும் நாள் நெருங்கிக் ரெண்டிருக்கிறது! திரும்ப உன்னை அடைந்து விட்ட குதூகலத்தில் உடனே கட்டிப் பார்க்கத் துடிப்பாள்! கட்டிக்கொண்டு களிப்படைவாள். உரியவளிடம் உன்னைச் சேர்த்துவிட்ட ஆண்மையோடு நானும் உன்னை என் கண்ணம்மாவோடு சேர்த்து அணைத்துக் கொள்வேன்!”
அன்று இரவு அப்புடவையை அணைத்துக் கொண்டே தான் தூங்கினேன்.
மறுநாள் திங்கட்கிழமை காலை பத்தரை மணிக்கு சுகந்தாவுக்கு போன் செய்தேன்.
“என்ன ராம்ஜி?”
“சுகந்தா, நான் உடனே எங்க ஆடிட்டர்ஸை எல்டாம்ஸ் ரோட்ல போய் மீட் பண்ண வேண்டியிருக்கு…”
“ஏன் ராம்ஜி? எதுவும் ப்ராப்ளமா?”
“பெரிய ப்ராப்ளம்… அதான் இன்கம்டாக்ஸ்! அதனால இன்னிக்கு முழுக்க ஆபீஸுக்கே நான் வர மாட்டேன். நாளைக்கு நானே உனக்கு போன் பண்றேன்… வேற எதுவும் நியூஸ் உண்டா?”
“இப்பவே ஆடிட்டரைப் பார்க்கறத்துக்குக் கிளம்பி ண்டிருக்கேளோ?”
“ஆமாமா! ஆடிட்டர் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார்! நாளைக்கு நானே ரிங் பண்றேன்.”
“ஓகே…”
அப்பா! சுகந்தாவை டபாய்த்தாகி விட்டது. இனி ஆபீஸ்!
“கண்ணன்!”
“யெஸ் சார்”
”ஊர்ல இருந்து கெஸ்ட் வந்திருக்காங்க! அதனால நான் இன்னிக்கு ஆபீஸ் வர மாட்டேன்… யாராவது என்னைக் கேட்டா சொல்லிடு!”
“சரி ஸார்!”
சபையர் தியேட்டரை நோக்கி என் ஸ்கூட்டர் விரைந்து கொண்டிருந்த போது தம்புச் செட்டித் தெருவில் ஓர் அலுவலகத்தின் மாடியில் என் வருங்கால மனைவியின் அறிவும் கனவேகமாகச் செயல்பட்டிருக்கிறது! ஆபீஸே இடிந்து தரைமட்டமாகிப் போனால் கூட மனுஷன் அசைந்து கொடுக்க மாட்டாரே என்று சுகந்தாவின் மனத் தராசு ஆடியிருக்கிறது! போன் கூடப் பண்ண வேண்டாமென்று சொல்லிவிட்டு ஆடிட்டரைப் பார்க்க ஓடிக் கொண்டிருப்பதாகச் சொன்னாரே… அது நிஜம் தானா என்று அவளின் அறிவுத் தராசு சற்றுப் பலமாகவே ஆடியிருக்கிறது. ஏதேதோ கடந்து போன பல சம்பவங்களை யெல்லாம் தராசில் கொண்டு வந்து நிறுத்தினாள்! இன்னும் தனக்குள் புகைந்து கொண்டிருக்கும் சில சந்தேகங்களையும் தன்னை அறியாமலே தராசில் போட்டு நிரப்பினாள். தராசின் தட்டுகள் அவளுள் நிதானம் இழந்து ஆடின. உயர்ந்தன. தாழ்ந்தன. அவளைக் குழப்பின. கடைசியில் அவளை மிகத் தந்திரமாகச் செயல் படவும் வைத்தன.
கலாக்ஷேத்ராவின் பின்னால் கடலை ஒட்டிய வெண் மணல் பரப்பில் சவுக்குத் தோப்பு ஒன்றில் ருத்ராவின் முழுமையான பயிற்சியற்ற ‘மோகனமானேன்’ என்ற வர்ணத்தின் அபிநயத்தை மிக ஸ்டைலாக நான் என் யாஷிகாவால், போட்டோ எடுத்துக் கொண்டிருந்த அந்த உச்சி வெயிலில், சுசுந்தா என் பர்ஸனல் போனுக்கு டயல் செய்யாமல் ஆபிஸின் பொதுவான நம்பருக்கு மிகத் தந்திரமாக டயல் செய்து விட்டாள்!
இதெல்லாம் தெரியாத நல்ல பிள்ளையாக மறுநாள் காலை என்னுடைய ஆபீஸில் நுழைந்தேன்.
கண்ணன் சொன்னான்; “நேற்று மத்யானம் உங்க ஃப்ரெண்ட் சுகந்தா போன் பண்ணினாங்க ஸார்!”
எனக்குத் திக்கென்றிருந்தது! “நீ என்ன சொன்னே கண்ணா?”
“ஊர்ல இருந்து ஸாருக்கு கெஸ்ட் வந்திருக்காங்க! அதனால ஆபீஸ் வர மாட்டார்னு சொன்னேன் சார்!”
“சரி, நீ போ!”
வெகுநேரம் ஒன்றும் செய்யத் தோன்றாமல் பேசாமல் இருந்தேன். நிச்சயம் இன்று என்னை நார் நாராகக் கிழித்து விடுவாள். விரைவிலேயே போன் பண்ணுவாள். மானம் போவது போலக் கேட்பாள், என்ன செய்யலாம் என யோசித்தேன். அவளாக போன் செய்து கேட்கும் வரை பயந்து சும்மா இருக்கக் கூடாது. நானே அவளை முந்திக் கொள்ள வேண்டும்!
நானே சுசுந்தாவுக்கு டயல் செய்தேன்…
“ஹலோ சுசுந்தாவா? நேத்து போன் பண்ணினதா கண்ணன் சொன்னான்!”
சில வெறுமையான கணங்களுக்குப் பிறகு அவளின் குரல் கேட்டது.
“இன்கம்டாக்ஸ் ப்ராப்ளம் சரியாயிடுத்தா?”
ஒரு ஜாக்கியின் கீழ் பாயத் தயாராக இருக்கும் பந்தயக் குதிரை போலத்தான் நான் சிலிர்த்துக் கொண்டேன்.
“ஏன் கண்ணன் சொல்லியிருப்பானே!”
சுகந்தா படீரென்று வெடித்தாள்: “ஏன் தான் இப்படி அற்பமால்லாம் பொய் பேசறளோ?”
நானும் பதிலுக்கு வெடித்தேன்: “ஆமா பொய்தான் சொன்னேன்! என்ன பண்ணிடுவே நீ? உனக்கு ஒண்ணும் இங்கே நான் பயந்திண்டு இல்லை!”
“உங்களை யாரும் பயப்படச் சொல்லலை! பொய் சொல்லாமதான் இருக்கச் சொல்றேன்!” – சுகந்தாவும் விடாமல் வெடித்தாள்.
“அப்படித்தான் பொய் பேசுவேன். என்ன பண்ணுவே?”
பதில் இல்லை!
“உன்கிட்ட கண்டபடி பொய் சொல்லிட்டு கண்டவ கூடப் போய் சுத்தறேன்னு நெனைக்கியா? அப்படி நெனைச்சா ஓப்பனா சொல்லிடு! இன்னிக்கே ஒனக்கு ஒரு குட்-பை சொல்லிடறேன்….!”
இதற்கும் பதில் இல்லை.
“எங்கம்மா பேர்ல சத்தியம் பண்ணிச் சொல்லியிருக்கேன். ஒன்னைத் தவிர வேறு எவளையும் என் மனசால கூட நெனைக்க மாட்டேன்னு…! இந்த என் வார்த்தை மேல ஒனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தா இன்னிக்கு ஈவினிங் நாம் மீட் பண்ணுவோம். இல்லேன்னா இன்னியோட ஒருத்தர்க் கொருத்தர் இப்பவே குட்-பை சொல்லிடலாம். என்ன சொல்றே? நல்லா யோசிச்சி ஈவினிங் சொல்லு!”
அவளுடைய பதில் எதையும் எதிர்பாராமல் படாரென்று ரிஸீவரை வைத்து விட்டு ஆயாசத்துடன் நாற்காலியில் சாய்ந்தேன். நாட்டிய ரசனைக்காக ருத்ராவைப் போய் சந்திப்பது கூட வேண்டாம் என்ற திடீர் தீர்மானத்தில் முற்றிலுமாக அவளை நினைவுகளிருந்து நீக்கிவிட்டு மாலை வேளைக்காக விசனத்துடன் காத்திருந்தேன்.
– தொடரும்…
– ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது.
– அது ஒரு நிலாக்காலம் (நாவல்), முதற் பதிப்பு: 2010. கலைஞன் பதிப்பகம், சென்னை.