அது இன்னொருத்தர் வீடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2025
பார்வையிட்டோர்: 322 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் அன்புள்ள அம்மாவுக்கு,

சுமித்ரா செய்யும் அநேக நமஸ்காரம். என்னிடமிருந்து ஒரு மாதமாகக் கடிதம் இல்லையே, ஏன் என்று கவலைப் பட்டு எழுதியிருக்கிறாய். புது வீட்டில் எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா என்று கேட்டிருந்தாய். கடிதத்தைப் பார்க்கிறவர்கள் தப்பாக எடுத்தக் கொள்ளாதபடி நான் மட்டும் புரிந்து கொள்கிற மாதிரி எழுதியிருக்கிறாய். என் அம்மா வின் சாமர்த்தியம் யாருக்கு வரும் என்று அடிக்கடி நான் பெருமைப்பட்டுக் கொள்வேன். அது உண்மைதான்.

இங்கே எல்லாரும் பெசன்ட் நகரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கிறார்கள். எனக்கு ஒரே தலைவலி, வரவில்லை என்று சொல்லலாமா என்று நினைத்திருந்தேன். அதற்குள் ராதாவுக்கு உடம்பு கொஞ்சம் கதகதவென்று இருக்கவே, குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் படி சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். சாயந்தி ரம்தான் வருவார்கள்.

வீட்டில் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதால், சாவ காசமாக உட்கார்ந்துகொண்டு சவிஸ்தாரமாக இந்த லெட் டரை எழுதுகிறேன். கவரை போஸ்ட்மேனிடம் இருந்து வாங்கும்போதே இவ்வளவு கனமாயிருக்கிறதே, என்னவோ ஏதோ என்று கலவரப்பட்டிருப்பாய். அக்காவிடமிருந்து கவர் வரும்போது எல்லாம் அப்பா, “போச்சு! லக்ஷ்மி நாவல் எழுதிட்டாளா!” என்று சொல்லிக்கொண்டே கடுதா சியைப் பிரிப்பாரே, அது ஞாபகம் வருகிறது. அவர் சொல்வது மாதிரியே, அக்காவும் புராணம் புராணமாகத் தன் கஷ் டங்களை எழுதியிருப்பாள்.

எனக்கும் இங்கே கஷ்டம்தான். அவள் அளவுக்கு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

குழந்தை பிறந்துவிட்டதால், தி.நகரில் புதிய வீடு பார்த் திருப்பதாகச் சொன்ன போது, அபார்ட்மெண்ட்டாக இருக் குமோ என்று கொஞ்சம் கவலைப்பட்டுக் கொண்டிருந் தேன். அபார்ட்மெண்டில் அது சௌகரியம், இது சௌகரி யம், ஒரு தலைவலி, ஜூரம் என்றால், அக்கம் பக்கத்தில் உதவுவார்கள், பந்தோபஸ்து என்று ஆயிரம் சொல்கிறார்கள். ஆனால், எனக்கென்னவோ அபார்ட்மெண்ட் என்றால், ஜெயில் மாதிரி தோன்றுகிறது. நம்ம மாயவரம் வீடு மாதிரி காற்றோட்டமாக தனி வீடாக இருந்தால்தான் மனசுக்குச் சந்தோஷம்.

நல்லவேளை, இந்த தி.நகர் வீடு, பாண்டி பஜார், உஸ் மான் ரோடு சந்தடிகளெல்லாம் எட்டாத உள்புறத்தில் இருக் கிறது. வாசல் பக்கம் நாலு செடி போடக் கூட இடம் இருக்கிறது. அடுத்த வீட்டில், எதிர்த்த வீட்டில் எல்லாம் காலி மனைகளில் அபார்ட்மெண்டுகள் கட்டிவிட்டார்கள். இதையும் எப்போது கட்டுவார்களோ தெரியவில்லை. வீட்டுச் சொந்தக்காரர் துபாயில் இருக்கிறாராம். இப்போதைக்கு இங்கே வரவும் மாட்டார். வீட்டை அபார்ட்மெண்ட் கட்டுவதற்கு விடவும் மாட்டார் என்று சொல்கிறார்கள். பார்க்கலாம்.

நிற்க. இங்கு வந்த முதல் இரண்டு மாசத்துக்கு எல் லாம் நன்றாகத்தான் இருந்தது. குழந்தை ராதாவைக் குளிப்பாட்டி, பவுடர் போட்டு, துணிமணி மாற்றி, வேளா வேளைக்கு ஆகாரம் கொடுத்து, பொழுது சரியாயிருந்தது.

போன வருஷம் கல்யாணம் ஆன சமயம், ‘நல்ல காலம், மாமனார் மாமியார் பிடுங்கல் இல்லை. அவர்கள் ஜாம்ஷெட்பூரில் இருக்கிறார்கள்’ என்று சந்தோஷத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாயே, அது போய்விட்டது.

அவர்கள் போன மாசம் மெட்ராஸ் வந்துவிட்டார்கள். வாலண்ட்டரி ரிட்டயர்மெண்ட்டாம். கைநிறையப் பணம் இருக்கிறது. திருநெல்வேலியில் ஒரு பிள்ளையும் மன்னார் குடியில் ஒரு பிள்ளையும் இருக்கிறார்கள். அங்கே போகக் கூடாதோ? மெட்ராஸ் பிள்ளைதான் வசதி என்று இங்கே வந்து உட்கார்ந்துவிட்டார்கள்.

இவர்கள் வந்ததிலிருந்து எனக்குத் தலைவலி ஆரம்பமாகிவிட்டது. இருபத்துநாலு மணி நேரமும் அதிகாரம்தான். நான் சொல்வதெல்லாம் உனக்கு அற்பமான விஷயமாகத் தோன்றும். இதற்குப் போய் இப்படி அலட்டிக் கொள்கிறாயே என்று நினைப்பாய். ஆனால், மனசுக்குக் கஷ்டமாக இருப்பதால் எழுதுகிறேன். என் அம்மாவிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வேன்?

முதலாவதாக, எனக்குக் குழந்தை வளர்க்கவே தெரியாது என்பது இவர்கள் எண்ணம். பிரசவம் ஆன நாள் முதல் ஐந்து மாசமும் எனக்கு நீ எத்தனை சொல்லிக் கொடுத்திருக்கிறாய்! அதை எல்லாம் நான் மறந்தா போய் விடுவேன்? நான் அங்கிருந்து கொண்டு வந்திருந்த பேபி பவுடர் மோசமாம். வேறொரு பவுடரைக் கொண்டு வந்த போது திடுக்கிட்டுப் போனேன். முன்னே ஒருநாள் அங்கே இருந்தபோது, யாரோ கொடுத்தார்கள் என்று ஒரு பவுடரைப் போடப் போய், குழந்தையின் முதுகில் திட்டுத் திட்டாகத் தடித்துப்போனது ஞாபகம் இருக்கிறதா உனக்கு? ‘அதே பவுடர்! இது…’ என்று நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘எனக்குத் தெரியும். இதுதான் உசத்தி!’ என்று அடித்துச் சொன்னால், அப்புறம் நான் என்ன பண்ண முடியும்? ரகசியமாகக் கொஞ்சம் போட்டு, ரகசியமாக உடனே துடைத்துவிடுகிறேன். பவுடரே போட்டுக் கொள்ளாத கைக் குழந்தை இந்தச் சென்னையிலேயே ராதாவாகத்தான் இருக்கும்.

குழந்தையின் ஆகார விஷயத்திலும் இப்படி ஏதாவது ஏடாகூடம் ஏற்படப் போறதே என்று பயந்திருந்தேன். நல்ல காலம், அப்படி ஏதும் நடக்கவில்லை. நாம் அங்கே கொடுத்த அதே புட்டிப் பாலையே தொடர்ந்து கொடுத்து வருகிறேன். ஆனால், அதற்கும் ஆயிரம் நொட்டை.

ஆகாரம் கரைத்துக்கொண்டிருக்கும் போது, ‘ஐயையோ! இவ்வளவு கெட்டியாகக் கரைத்தால், குழந்தைக்கு எப்படி செரிக்கும்?’ என்று ஒரு நாள் புலம்பல். மறுநாள், ‘ஐயையோ! இப்படித் தண்ணியாகக் கரைத்தால் உடம்பிலே என்ன சத்து சேரும்?’ என்று குற்றச்சாட்டு.

குழந்தை விஷயத்தில் என்று இல்லை. எதிலுமே எனக்குப் புத்திசாலித்தனம் போதாது என்று அபிப்பிராயம். வாசல் பக்கம் இடம் இருப்பதால் நாலு ரோஜாச் செடிகள் வைக்கலாமே என்று ஒரு நாள் சொன்னேன். ‘அதெல்லாம் கிராமாந்தரத்திலேதான் சரியாக இருக்கும். செடிகள் வைத்தால் இங்கே பூ வராது. கொசுதான் வரும்’ என்று குத்தலைக் கேட்கும்போது எனக்கு எப்படி இருக்கும்? நான் கிராமாந்தரமாம்! இவர்கள் லண்டனிலிருந்து குதித்தவர்கள்!

எனக்கென்று ஒரு மனசு, எனக்கென்று ஒரு அபிப்பிராயம், எனக்கென்று ஒரு ஆசை இருக்காதா? ஊகூம். இருக்கக் கூடாது.

பெட் ஸ்ப்ரெட், பில்லோ கவரெல்லாம் பத்து நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்று நீ அடிக்கடி சொல்வாய். நம் வீட்டில் அப்படித்தான் வழக்கம். இங்கே மாசக்கணக்காக அப்படியே இருக்கிறது அத்தனையும். வெறுமே உதறிப் போடுவதோடு சரி. ‘இதெல்லாம் சலவைக்குப் போட வேண்டும்’ என்று ஒரு நாள் எடுத்து வைத்தேன். ‘கிராமாந்தரத்தில் டோபி செலவே இருக்காது. இங்கே டோபி சார்ஜ் எக்கச்சக்கம்’ என்று சொன்னதோடு நான் உருவி வைத்திருந்ததை எல்லாம் அப்படியே திருப்பி மாட்டியாயிற்று! எங்கே போய் முட்டிக்கொள்வது?

போன வாரம் எல்லாரும் துணிக்கடைக்குப் போனார்கள். காரில் போவதால் என்னையும் கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்து ரெடியாக இருந்தேன். கூப்பிடவேயில்லை. அதுவும் நல்லதுக்குத்தான் என்று இருந்து விட்டேன். குழந்தையுடன் கொஞ்ச நேரம் கொஞ்சி விளையாடச் சந்தர்ப்பம் கிடைக்கிறதில்லையா?

வயிற்றெரிச்சலைக் கேள்.

கடையிலிருந்து எனக்காக வாங்கி வந்த புடவை! அந்த பாலியஸ்டர் வெரைட்டியும் கலரும்… இரண்டு வரஷம் முந்தி தீபாவளிக்காக நீ அந்த மாதிரி ஒன்று வாங்கி வந்து தந்தாய். நான் திட்டினதும் கடைக்கு எடுத்துக் கொண்டு போய் மாற்றிக்கொண்டு வந்தாய். இங்கே திட்டவும் முடியவில்லை. மாற்றவும் முடியவில்லை. மனசுக்குள் அழுதபடி கட்டிக்கொண்டேன்.

இதையெல்லாம் படிக்கிறபோது, என்னவோ டி.வி. டிராமாவிலே வருகிற மாதிரி இருக்கிறது என்று நீ நினைத்துக் கொள்வாய். இது டிராமா இல்லை அம்மா…நிஜம்!

டி.வி. என்றதும் ஞாபகம் வருகிறது. கிரிக்கெட் என்றால், நமக்கெல்லாம் எத்தனை உயிர்! அதுவும் இந்தியா விளையாடுகிறது என்றால், ராத்திரி பன்னிரண்டு மணியோ, இரண்டு மூன்று மணியோ, டீயும் பிஸ்கட்டும் முறுக்கும் சீடையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவோமே. நினைவிருக்கா? எதிரியின் விக்கெட் விழ விழ, ஒவ்வொரு விக்கெட்டுக்கும் கால் ரூபாய் கொண்டுபோய் பிள்ளையார் படத்துக்கு முன்னால் வைத்துக் கொண்டிருப்போம். நம்ம பேட்டிங் மோசமாக இருந்தால், இருபத் தைந்து ரன்னுக்கு ஒரு தடவை கால் ரூபாய் வைப்போம். சில சமயம், ‘நான் இங்கே உட்கார்ந்திருந்தால் விடிவதில்லை. வெளியே போய் உட்கார்ந்து கொள்கிறேன்’ என்று சொல்லி, நீ பால்கனியில் போய் உட்கார்ந்து கொள்வாய். ‘இந்தியா ஜெயிக்கப் போகிறது! வா, வா!’ என்று நான் கூப் பிட்ட பிறகுதான் வந்து உட்கார்ந்து கொள்வாய்.

இங்கே ஒரு மண்ணும் கிடையாது. கிரிக்கெட் மட்டுமில்லை. ஏழு மணி நியூஸ், எட்டு மணி நியூஸ்கூட வேப்பங்காய். எப்போது பார், சினிமா, சினிமா, சினிமா. ‘இது அர்ஜுன் நடிச்ச படம் இல்லையோ? சத்யராஜுன்னு போட்டு இருக்கே? இதே ட்யூனில் முன்னே சொர்ணலதா பாடியிருக்காள் இல்லியோ…?’ இப்படியேதான் பேச்செல்லாம். நமக்கும்தான் சினிமா பிடிக்கும். ஆனால், கிரிக்கெட் வந்தால், மற்றதெல்லாம் மறந்துவிடுவோம். இவர்களுக்கு, சினிமா வந்தால் உலகமே மறந்துவிடுகிறது.

எனக்கு ஐந்து வயதானபோது, நீ கந்த சஷ்டி கவசம் சொல்லித் தந்தாய். அன்று முதல் இன்றுவரை நான் அதை ஒரு நாள்கூடச் சொல்லாமல் விட்டதில்லை. இங்கே வந்த பிறகும் குழந்தைக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். அதிலும் ‘காக்க காக்க கனகவேல் காக்க’ என்று ஆரம்பிக்கும் வரிகளைச் சொல்கிறபோது மனசிலே ஒரு தெம்பு ஏற்படுகிறது.

தினம் காலையில் குளித்துவிட்டு வந்ததும் அதை மனசுக்குள்தான் சொல்வேன். அன்றைக்கு என்னவோ என்னையும் மீறி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. ‘என்ன அது பாட்டு?’ என்று கேட்டதும், கந்தசஷ்டி கவசம் என்றேன்.

‘அதெல்லாம் வேண்டாம். இதைச் சொன்னால் போதும்’ என்ற கட்டளையுடன் ஒரு சின்னத்தாள் என் கைக்கு வந்தது.

அது ஏதோ இரண்டு ஸ்லோகம். இந்தி ஸ்லோகத்தைத் தமிழில் எழுதியிருந்தது.

கந்த சஷ்டிதான்… என்று இருந்தேன்.

‘வேண்டாம்… வேண்டாம். இதை மட்டும்தான் சொல்ல வேண்டும். ஜாம்ஷெட்பூரில் மகேஷ் மகராஜ் கொடுத்தது. இதையும் சொல்லி மற்றதையும் சொன்னால், அந்த சுவாமிகளை அவமரியாதை செய்ததாகும். பலன் இருக்காது!’ என்றால், எனக்கு எப்படி இருக்கும்? ரூமுக்குள் போய்த் தலையில் தலையில் அடித்துக் கொண்டேன்.

அன்று முதல் குளிக்கும்போதே யாருக்கும் கேட்காமல் கந்த சஷ்டி கவசம் சொல்லி வருகிறேன். வெளியே வந்து அந்த என்னவோ ஒரு மகராஜின் ஸ்லோகத்தை இரைந்து சொல்கிறேன். என்ன வெட்கக்கேடு பார்!

இதெல்லாம் சாதாரண சமாசாரம். மனசைப் போட்டு அலட்டிக்கொள்ளக் கூடாது என்று தீர்மானமாகத்தான் இருந்தேன். ஆனால், போன புதன் கிழமை நடந்த ஒரு சமாசாரம்… என் மனசை ரொம்பவும் பாதித்துவிட்டது.

திருவான்மியூர் பக்கத்தில் ஒரு வீடு விலைக்கு வந்திருப்பதாகவும் அதை வாங்கலாமென்றும் பேசிக் கொண்டார்கள். சென்னையில் சொந்த வீடு என்றால் சும்மாவா? சந்தோஷப்பட்டேன். வீட்டைப் பார்க்கப் புறப்பட்டபோது, என்னைக் கூப்பிட மாட்டார்கள் என்று நினைத்தேன்… கூப்பிட்டார்கள்! போயிருந்தேன்.

சும்மா சொல்லக்கூடாது. வீடு கொள்ளை அழகு. கிளி கொஞ்சுகிறது என்று நீ சில வீட்டைப் பற்றிச் சொல்வாயே, அதே போல வீட்டுச் சொந்தக்காரருக்கு என்ன கஷ்டமோ, நெருக்கடியோ தெரியவில்லை. இருபது லட்சத்துக்கு விற்கப்போகிறாராம்! எனக்கு வீட்டுப் பெறுமானம் பற்றி எதுவும் தெரியாது. இருந்தாலும், முப்பது லட்சம் கண்ணை மூடிக்கொண்டு தரலாம் என்று நினைத்துக் கொண்டேன். ‘முதலில் ஐந்து லட்சம் தந்தால் போதும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கலாம்’ என்று வீட் டுக்காரர் சொன்னார். அது இன்னும் பெரிய அனுகூலம்.

நிச்சயம் வாங்கிவிடுவார்கள் என்று நினைத்திருந்த எனக்கு காரில் திரும்பிய போது, அவர்கள் பேச்சு ஆச்சரியமாக இருந்தது. வாங்க வேண்டாமென்று தீர்மானம் பண்ணிவிட்டார்கள்.

‘இருபது லட்சம் முப்பது லட்சத்துக்கு எல்லாம் எங்கே போவது?’ என்று பேச்சுக் காதில் விழுந்ததும், நான் சும்மா இருக்காமல், ‘முதலில் ஐந்து லட்சம் தானே கேட்கிறார்கள்?’ என்று சொல்லி விட்டேன்.

வெடித்துக்கொண்டு வந்ததே பார்க்கணும் கோபம்! ‘ஐந்து லட்சம்தானேயாமே! மகாராஜாக்கள், ஜமீன்தாரர்களுக் கெல்லாம் அது பிச்சைக்காசாக இருக்கலாம். நாங்கள் பரம்பரை ஆண்டிகள்!’ என்று ஒரே படபடா! பயந்து நடுங்கிவிட்டேன். ‘இல்லை… வீடு நன்றாக இருக்கிறதே என்பதால் வாய் தவறிச் சொல்லிவிட்டேன்…’ என்று மன்னிப்புக் கேட்காத குறையாக, சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டேன்.

இப்படியே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. பொறுமை யாக இருக்கணும் என்று நீ படித்துப் படித்துச் சொன்னாய். அதன்படி பொறுமையாகத்தான் இருக்கிறேன். ஆனால், எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கமுடியும் என்றுதான் பயமாயிருக்கிறது. என்னவோ மனசு தாங்காமல் இவ்வளவு எழுதிவிட்டேன். நீ உழப்பிக் கொள்ளாதே…

உன் அன்புள்ள,
சுமித்ரா

உன் பெண்ணின்

என் அன்புள்ள சுமித்ராவுக்கு,

அம்மா செய்யும் அநேக ஆசீர்வாதம்.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படப் போகிறாளே என்று நீ உன் பெண் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு உதவி செய்தது போதும். தன் குழந்தைக்கும் மாமனார், மாமியாருக்கும் பணிவிடைகள் செய்ய இலவசமாக ஒரு வேலைக்காரி கிடைத்தாள் என்பது உன் பெண்ணின் நினைப்பு. நீ எழுதாமலே உன் கடிதத்திலிருந்து அது தெரிகிறது. பட்ட துன்பங்களை மறந்துவிட்டு உடனே புறப்பட்டு வந்து சேர்.

அன்புடன், அம்மா

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *