அது அப்படித்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 25, 2025
பார்வையிட்டோர்: 3,383 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னங்க! சிரம்பான்லே என் தங்கச்சி மகளுக்குக் கல்யாணம். உங்களுக்கும் கொழுந்தியா பொண்ணுதானே! இப்படி எது கேட்டாலும், இடிச்சி வச்ச புளியாட்டம் பேசாம இருந்தா எப்படி? முன்னெல்லாம் பென்ஸ் கார்லே போய் ஜாம் ஜாம்னு இறங்குவோம். இப்ப என்னடான்னா, என்ன தனியா டிரெயின்லே போகச் சொல்றீங்க. என்ன கண்றாவியோ? எப்படி மதிப்பாங்க. இதிலே வேற வெறுங்கையோட.. என் கௌரவம் என்னாவுறது? ஏதாவது பதில் சொல்லுங்களேன். உங்க கிட்டேதான் பேசிக்கிட்டிருக்கேன். வாயிலே என்ன கொழுக் கட்டையா இருக்கு?”

“ஏன் ரொம்ப அலட்டிக்கிறே? இருந்தப்ப செஞ்சேன். இல்லாதப்போ அடக்கித்தான் வாசிக்கணும். நான் என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன். என்னால முடியல அவ்வளவுதான்.”

“பேங்க்ல ஏதாவது கடன் வாங்கக் கூடாதா? செய்யக் கூடாதுன்னு இருந்தா எல்லாம் இருட்டாத் தானிருக்கும். ஒங்க தங்கச்சி பொண்ணுன்னா சும்மா இருப்பீங்களா?”

“இந்தா பாரு! ‘உங்க’ ‘எங்க’ன்னு பிரிச்சிப் பேசாதே! பேங்க்லே எத்தனை முறைதான் கடன் கொடுப்பான். வட்டி குறைச்சலா இருந்தாலும், வாங்கினதைத் திரும்பக் கட்டணும்லே… இருந்ததோ இரண்டு பேக்டரி. ஒண்ணை ஏலம் விட்டு எடுத்துக் கிட்டான். மூணு பசங்களுக்கும் மூணு காரு. தவணை கட்டமுடியாம எல்லாத்தையும் திருப்பி எடுத்திக் கிட்டான். இப்ப ஒரு காரும் ஒரு பேக்டரியும்தான் இருக்குது. இந்த வீடும் இன்னைக்கோ நாளைக் கோன்னு இருக்குது. இருக்கிற பேக்டரியிலே ஏகப்பட்ட பிரச்சினை. நாட்டின் பொருளாதாரமும் இறங்கிகிட்டே போகிறதனாலே தொழிலும் தலையெடுக்க மாட்டேன்குது. நம்மகிட்டே வேலை செய்யறவங்க வேறு இடம்தேடிப் போறாங்க.

இந்த நிலைமையிலே கொஞ்சம் அட்ஜஸ் செஞ்சுக்கேயேன். சும்மா தொண தொணன்னு” என்று சொல்லியபின், காலைத் தினசரி தமிழ்முரசைப் படித்துக் கொண்டிருந்த கணேசமூர்த்தி, மடித்து வைத்துவிட்டு எழுந்தார்.

“விளக்கத்துக்கு மட்டும் குறைச்சயில்ல. நம்ம மூன்று பையன்களிலே ஒருத்தனையாவது கூட வச்சிக்கலாம். அதையும் செய்ய மாட்டீங்க.”

என்று பொரிந்துகொண்டே, எழுந்து சென்று தினசரிக் காலண்டர் தாளைக் கிழித்தாள் மங்களம்.

“ஒருத்தனாவது கூட இருக்கமாட்டானா என்று கெஞ்சிப் பார்த்திட்டேன். தொழிலே நொடிச்சிப் போயிட்டிருக்கு. அதிலே நான் வந்து என்ன செய்யப் போறேன்னு அவனவன் தனித்தனியே போய் எங்கேயோ வேலை செய்யறான்க. ஒரு வெள்ளியையாவது உங்ககிட்டே கொடுக்கிறான்களா? இதையெல்லாம் கண்டிக்க உங்களால முடியல. எங்கிட்டேதான் உங்க ஜம்பம் எல்லாம்…”

“இதுக்கு முன்னாடி நான் சொல்லிக்கிட்டே யிருப்பேன். அப்பவெல்லாம் பேசாம ஊமைச் சாமியாராயிடுவீங்க. இன்னிக்கு என்னென்னா பேசியே என் வாயை அடைக்கிறீங்க. அப்பவே எங்கப்பா சொன்னார். அந்த கோடீஸ்வரன் தேவேந்திரன் பையனுக்குக் கட்டிவைக்கிறேன்னார். சதிகாரி எங்கம்மாதான் படிச்சிருக்கார்ன்னு சொல்லி உங்க தலையிலே கட்டிவச்சி என்னை மோசம் செய்திட்டார்.”

“இப்படியெல்லாம் பேசி மன அமைதியைக் கெடுத்துக்கிட்டே வர்றே. இதனால தொழில என்னால டெவலப் பண்ண முடியுதா? அதப்பத்தி எல்லாம் யோசிக்காம, எப்ப பார்த்தாலும் கொற…. கொற.. ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு யோசிக்கிறது. என்னைக்காவது ஒருநாள்…ம்…” என்று சொல்லிக் கொண்டே குளியலறை நோக்கி நடந்தார்.

என்றைக்கும் ஒருவழிப் பாதையாக அந்தக் குடும்பத்தில் மங்களம்தான் தொண தொணத்துக் கொண்டேயிருப்பார். தனக்கு நீரிழிவு, இரத்த அழுத்த நோய்கள் இருப்பதைப் பொருட்படுத்தாது, கணவன் வீட்டுக்கு வந்துவிட்டால் போதும்; திட்டித் தீர்ப்பதே வேலை. அவர் எதற்கும் பதிலே பேசமாட்டார். பெயருக்கு எதையோ கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் படுக்கப் போய்விடுவார். இன்றுதான் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அது அந்த 52 வயது அம்மையாருக்குச் சற்று வியப்பாகவே இருந்தது.

‘மங்களம் கெமிக்கல் இண்டஸ்டரீஸ்” என்கிற சிறு தொழிற்சாலைக்குள் நுழைந்தது கணேச மூர்த்தியின் கார். தன் அலுவலகத்திற்குள் நுழைந்த போது வெறிச்சோடிக் கிடக்கும் பெரிய வரவேற்பு வளாகத்தில் ஒரே ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். இவர் அதைக்கூடக் கவனிக்காமல் நேராகத் தன் அறைக்குச்சென்றுவிட்டார்.

மேனேஜர் மட்டும் கோப்புகளுடன் அவர் அறைக்கு வந்தவர்,

“சார் ஒரு பெண் ஒருமணி நேரமா உட்கார்ந்து கிட்டுத் தங்களப் பார்க்கணும்னு அடம்புடிக்கிறா”. என்று சொல்லிக்கொண்டே சில பைல்களை மேஜையில் வைத்துவிட்டுச் சிலவற்றை எடுத்து அவர் கையில் கொடுத்தார்.

“என்னை எதுக்குப் பாக்கணுமாம்? இப்ப இருக்கிற நெலயில நான் என்ன உதவிட முடியும்? சரி.. சரி வரச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டுக் கோப்புகளைப் புரட்ட ஆரம்பித்தார்.

”குட்மார்னிங் சார். மே ஐ கம் இன்” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அப்பெண்.

“எஸ்… எஸ்…” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தார். சிறந்த அழகான பெண்ணாக இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு ஓர் ஈர்ப்புச் சக்தியாக இருந்தாள். அதைவிட ஒரு புத்திசாலித்தனம் அவள் முகத்தில் தெரிந்தது. தமிழ்ப் பாரம்பரியச் சேலை உடுத்தி, குடும்பப் பாங்காகவும் இருந்தாள். மேனேஜருக்கே ஓரளவு பிடிமானம் இல்லாவிட்டால் விரட்டியிருப்பாரே! இதைப்போல் எத்தனை பேரை விரட்டியிருப்பார்!

“வாம்மா…உட்கார்.. என்ன வேணும்?”

“சார்… என் பெயர் மாலதி. நான் எம்.பி.ஏ. கிராஜுவேட். நான் டெட்டால் தயாரித்த ஜெர்மன் கம்பெனியிலே வேலை பார்த்தேன். சிங்கப்பூர் கிரைசஸ்… சார்ஸ் நோய்.. புதுசா ஒண்ணு ஆரம்பிச்சிக் கிட்டேயிருக்கே… அதனால் அந்தத் தொழில் பாதிக்கப்பட்டு, அந்த அந்த பேக்டரியையே மூடுற அளவுக்குப் போயிட்டுது. அதிலே வேலையிழந்து பெண் நான்.”

“சரி. அதுக்கு நான் என்ன செய்ய முடியும். எங்க பேக்டரியிலேருந்து ஒவ்வொருத்தரா போயிகிட்டே இருக்காங்க. இப்ப நிருவாகத்திலே மேனேஜர் அக்கவுண்டண்ட், அப்புறம் தொழிலாளர்கள் பதினெட்டுப்பேர் மட்டும்தான். நாங்களும் நீ சொன்ன பிரச்சினையால் பாதிக்கப்பட்டுக்கிட்டுதானிருக் கிறோம்.”

“சார்… நீங்க இன்னும் மூடிடலயே! உங்க தொழிலைச் சீர்செய்ய என்கிட்ட சில ஐடியாக்கள் இருக்கின்றன. நானும் வயதான என் அம்மாவும்தான் வீட்டிலே. உங்களப்பத்தி ஏற்கெனவே உங்ககிட்டே வேலை செய்த என் பிரண்ட் சொல்லி இருக்கிறாய அதனாலதான் உங்ககிட்டே எப்படியும் வேலையிலே சேர்றதுன்னு முடிவோட வந்திருக்கிறேன். என்னை வேணாம்னு சொல்லிடாதீங்க. எங்க பேக்டரிை மூடும்போது கையிலே கொஞ்சம் வெள்ளி கொடுத்தாங்க. அதை வச்சி ஒரு வருஷத்தை ஓட்டிடுவேன். என்னை வேலைக்கு எடுத்துப் பாருங்க. என்னால உங்களுக்குப் பயன் கிடைச்சிருக்குன்னு நீங்க நெனெச்சிங்கன்னா, ஒரு வருஷத்துக்கப்புறம் எனக்கு ஏதாவது கொடுங்க. அதுவரைக்கும் ஒண்ணும் வேண்டாம்.” என்றாள்.

இதைக் கேட்ட அவர் முடிந்தவரை அவளுக்கு எப்படி உதவிடலாம் எனச் சாதகமாகவே யோசித்தார். “சரிம்மா…என்னமோ ஐடியா வச்சிருக்கேன்னு சொன்னியே என்னது”.

“சார் டெட்டால் லிக்யூட், ட்ெடால் சோப்பு, பேண்டெய்டு போன்றவைகளை உற்பத்தி செய்யும் ஜெர்மன் கம்பெனியை மூடிட்டாங்க. நாம அந்தப் பெயர் உரிமத்தை மட்டும் வாங்கி அந்த லோகோவிலேயே செஞ்சிட்டா போதும். உங்க பேக்டரியிலே ஏற்கெனவே டாய்லட்கிளீனர், புளோர், கிளாஸ் கிளீனர், சோப்பு லிக்யூட், கோரக்ஸ் போன்றவைகளைச் செய்யுறீங்க…

அதனால் இதையும் செய்யறது பெரிய கஷ்டமா இருக்காது சார். அதோட இப்ப சார்ஸ் நோய்னாலே… லேட்டஸ்ட் நியூஸ் டெட்டாலுக்கு சிங்கப்பூர்ல மட்டுமில்லை, இந்தோனிசியா, மலேசியா, புரூனே… இந்த நாட்லேயெல்லாம் ஏகப்பட்ட கிராக்கியாம். கெவர்மெண்டே முக்கால் பகுதியை வாங்கிக் கொள்றாங்களாம். நேத்துகூட என்.டி.யூ.சிக்குப் போனேன். ஆறு வெள்ளிக்கு விற்ற 750 கிராம் டெட்டால் இன்று பத்து வெள்ளிக்கு விக்கறாங்க. டிமாண்டா வேற இருக்குதாம். இந்தச் சான்ஸை விடாதீங்க.

எனக்குத் தெரிந்தவர் தீன்முகமது என்பவர் சிங்கப்பூர் இந்தியன் சேம்பர்லே உதவி கேட்டு, அது கிடைச்சி ஒரு கிளாஸ் பேக்டரியே திறந்து, இன்று முன்னுக்கு வந்துகிட்டிருக்காரு. என்னை வேலைக்கு எடுத்துக்கிறீங்களோ, இல்லையோ உடனே ஆக்ஷன் எடுங்க சார். என்று கடகடவென்று விளக்கங்கள் கொடுத்தாள்.

“நீ இன்றைக்குப் போயிட்டு நாளைக்கு வாம்மா” என்று சொல்லி அனுப்பிவிட்டுச் சிறிய சிந்தனைக்குப் பிறகு, தொழில் துறை தொடர்புடைய சில நண்பர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்தார். பேசும்போது அவர் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது.

மறுநாள் குறிப்பிட்டபடி, மாலதி தொழிற் சாலைக்குள் நுழைந்தாள். மேனேஜர் அப்பெண்ணிடம்.

“பாஸ் உன்னை, வந்ததும் வரச்சொன்னார்’ என்று சொன்னார். அதைக்கேட்ட மாலதிக்குச் சிறிது ஆறுதலாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒரு மணிநேரம் முன்னதாகவே அலுவலகம் வந்துவிட்ட கணேசமூர்த்தி மாலதியை முகமலர்ச்சியுடன்,

“வாம்மா… உட்கார்” என்றார்.

“என்ன முடிவு செஞ்சீங்க சார்..”

“முடிவு செஞ்சாச்சி… நீ இன்றிலிருந்து வேலையிலே சேர்ந்துக்கம்மா… நானும் முழுவதும் கவிழ்ந்து ஓட்டாண்டி ஆயிடல. பெருங்காய டப்பா. கொஞ்சம் வாசனை இருந்துகிட்டுதானிருக்கும். சம்பளம் இல்லாம நீ வேலை செய்ய வேண்டியதில்லை. உன் குடும்பச் செலவுக்கு உனக்கு வேண்டிய மினிமம் செலவுத் தொகையைக் கேட்டு, மேனேஜர் கொடுப்பார். ஒரு வருஷத்துக்கு அப்புறம் உனக்கு என்ன செய்யலாம்னு அப்ப சொல்றேன். என்ன சரிதானே! உன் பேரு என்ன சொன்னம்மா..?”

“மாலதி!.. ரொம்ப நன்றி சார்!.. ரொம்ப நன்றி…”

“போதும் மாலதி! நன்றி யாருக்கு யார் சொல்றது. எனக்கு ஒரு புதுத் தெம்பையே ஏற்படுத்திவிட்டாய். சமீபத்திலே என்னைச் சந்திச்சவங்க எல்லாரும் டிஸ்கரேஜ் பண்ணிதான் பேசுவாங்க. நீ ஒருத்திதாம்மா என்கரேஜ் பண்ணிப் பேசியது. அதோட ஒரு ஆக்கபூர்வமான ஆலோசனையையும் சொன்னது. நேற்றே பல நண்பர்களிடம் கலந்து பேசினேன். எல்லாரும் நீ கொடுத்த திட்டங்களெல்லாம் பிரமாதம்னு சொல்லிட்டாங்க.

நான் சிங்கப்பூர் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்லே மெம்பர். அவுங்க கிட்டேயும் நீ சொன்ன ஐடியாபடி கேட்டேன். யாரோ புதுசா கீர்த்திக்மேனன்கிறவரு எக்ஸிகுட்டிவ் டைரக்டரா வந்திருக்காராம். ஆனா பேசும்போது ரொம்ப என்கரேஜாகவும், இன்டிரஸ்ட்டாகவும் பேசினார். இன்னிக்கு நேர்லே வரச்சொல்லியிருக்கிறார்.

நீ போயி உன் அப்பாயிண்மெண்ட் ஆர்டரை வாங்கிகிட்டு, உன் அறையிலே இரு. மேனேஜர்கிட்டே சொல்லிட்டேன். உனக்கு என்னென்ன வேலைன்னு. அவரு எல்லாத்தையும் சொல்வாரு. அப்புறம் 12 மணிக்கு மிஸ்டர் மேனனோட அப்பாய்ண்மெண்ட் நீயும் புறப்பட ரெடியாயிரு. நாம ரெண்டு பேரும் போவோம். அதற்கு வேண்டிய பைல்களை எல்லாம், மேனேஜர்கிட்டே ரெடி பண்ணச் சொல்லி யிருக்கிறேன். கேட்டு வாங்கி வச்சிக்க. நீ போ..” என்றார்.

அவர் இன்று குதூகலமாகவே தோன்றினார். 58 வயதுடையவராக இருந்தாலும், இடைப்பட்ட காலத்தில் சோர்வுற்றிருந்ததனால் தளர்ந்திருந்த உடம்பு இன்று எழுச்சியுற்று 48 வயதுடையவராகத் தோன்றினார். இன்று அவர் நடையில், பேச்சில், ஏன் உட்கார்ந்து எழுவதில்கூட ஓர் உற்சாகமும் சுறுசுறுப்பும் தென்பட்டது. இதை மேலாளர், கணக்காளரிடம் சொல்லி ஆறுதலடைந்தார்.

இதற்கு முன்பு உடையில்கூடக் கவனம் செலுத்தாமல், ஏனோ தானோ வென்று கிடைக்கிற உடையை உடுத்திக்கொண்டு வருவார். இன்று மட்டும் கோட், டை வீதம் மிடுக்காக அலுவலகம் வந்திருந்தார்.

சுமார் பதினொன்றரை மணிக்கெல்லாம் கிருபா சாலை அலுவலகத்திலிருந்து கணேசமூர்த்தியும், மாலதியும் காரில் புறப்பட்டனர். கார் சிராங்கூன் சாலையைக் கடக்கும்போது காரை நிறுத்திப் பின்னால் உட்கார்ந்திருந்த மாலதியை முன் இருக்கையில் வந்து அமரச் சொன்னார். அவளும் சிறிய தயக்கத்துடன் வந்து அமர்ந்தாள்.

“நீ பின்னால் உட்கார்ந்திருந்தால் நான் உன் டிரைவர் போலாயிடும். அதனாலதான்… சரி எக்ஸிகுடிவ் டைரக்டரிடம் நான் விளக்கிச் சொல்லி சேம்பர் இதில் எப்படி உதவலாம் என்றெல்லாம் கேட்பேன். நான் ஏதேனும் விட்டிருந்தா நீ எடுத்துச் சொல்லிடு. சரியா..?”

“சார் நீங்க தைரியமா இருங்க…. நம்பிக்கையா இருங்க. பாருங்களேன் நீங்களே எல்லாம் பேசிடுவீங்க…”

காரை சிசில் சாலையில் உள்ள ‘டோங் எங்’ கட்டடத்தின் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு இருவரும் மின் மின் தூக்கி வழி 23ஆவது மாடி சேம்பருக்குச் சென்றடைந்தபோது நேரம் 11.55.

குறிப்பிட்டபடி 12.05க்கு சந்திக்க அழைக்கப் பட்டனர். இருவரும் உள்ளே சென்றனர்.

எதிர்பார்த்தது போலில்லாமல் டைரக்டர் எளிமையாகவும், அதிகாரத்துவம் இல்லாமலும், இனிமையாக வரவேற்று உபசரித்து, அனுசரணை யாகப் பேசியது இவர்களுக்கு இதமாக இருந்தது.

“சென்ற மாதம் மூத்த துணைத் தொழிலமைச்சர் தருமன் சண்முகரத்தினம் எங்க சேம்பர் கூட்டத்திலே பேசும்போது, தொழிலில் வளர்ந்துவிட்டவர்களுக்குத் தான் உதவிட வேண்டும் என்கிற வழக்கமான கொள்கையை விடுத்துப் புதிதாகத் தொழில் துறைக்கு வர்றவங்களையும், நலிந்த தொழிலதிபர்களையும் கைதூக்கி விட வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதனால் உங்களுக்கு உதவி செய்யணுங்கிற எண்ணத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை. நீங்க எடுத்துச் சொன்ன திட்டங்கள், எதிர்பார்ப்புகள், செயல்முறை வரைவுகள் எல்லாமே எனக்குப் புடிச்சிருக்கு. அந்த ஜெர்மன் ரிக்கட் பென்கிசர் நிறுவனத்துடன், எங்க சேம்பரே பேசி ஆக வேண்டியதைச் செய்யும். சேர்மன்கிட்ட சொல்லி, போர்டிலேவைத்து அனுமதியை வாங்கிறதுக்கு முன்னாலே, உங்க ஆடிட்டர்கிட்டே சொல்லி ஒரு “புராஜக்ட்” போட்டு ரெண்டு நாள்ள கொண்டாங்க” என்று சொல்லி வழியனுப்பினார்.

காரில் திரும்பும்போது “சார்… ஆடிட்டர்கிட்டே என்னை அறிமுகப்படுத்தி விட்டுடுங்க. அவருகிட்டே பேசிட்டு, நானே புராஜக்ட்டை தயார் பண்ணிடறேன். நம்ம இன்வெஸ்ட்மெண்ட் இல்லாம, இப்ப இருக்கிற ப்ராபர்ட்டியை முதலாக்கி பைனான்ஸ் எய்டை வாங்கிடலாம்” என்றாள் மாலதி.

“ஓகே மாலதி! எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. போற வழியிலே அன்னலட்சுமி ரெஸ்ட்டா ரெண்ட்லே நாம சாப்பிட்டுட்டுப் போவலாம்” என்று சொல்லி, ஹில்தெரு வழியாகச் செலுத்தி, ஹை தெருவில் உள்ள உணவகத்தின் கீழே நிறுத்திக் காரைப் பூட்டிவிட்டு மதிய உணவை, உள்ளே சென்று சாப்பிட்டனர்.

சேம்பர் ஆப் காமர்ஸ்லே புராஜக்ட்டை மறுநாளே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டனர். அடுத்த பத்து நாள்களிலேயே ஒரு மில்லியன் சிங்கப்பூர் டாலர் உடனடி நிதியுதவி கிடைத்தது. அதற்கு மேல் அந்த ஜெர்மன் நிருவாகத்துடனும், சேம்பரே பேசி, கொடுக்கல் வாங்கல் ஓர் உடன்படிக்கையில் முடிந்தது. அந்தத் தொகையும் இவர்கள் கணக்கில் பற்றாக எழுதப்பட்டது.

மகிழ்ச்சிக் கடலில் நீந்திய கணேசமூர்த்தி உடனே மேலாளரை அழைத்துத் தொழிற்சாலைக்கு மேலும் உடனடியாக 20 சிங்கப்பூரர்களையே தொழிலாளர் களாக நியமிக்கச் சொன்னார்.

அவர்களை ஆய்ந்து, நேர்காணல் செய்து, நியமிக்கும் பொறுப்பு மாலதியிடமே கொடுக்கப் பட்டது. சில நாள்களில் தொழிற்சாலை களைகட்ட ஆரம்பித்தது.

மாலதியின் ஆலோசனைப்படி அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனிசியா, புரூனே ஆகிய நாடுகளுக்கு முதல் கட்டமாகச் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டார் கணேசமூர்த்தி. தாய்லாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்த கட்டமாக ‘சார்ஸ்’ நோய் விலகியபின் செல்வதாகத் திட்டம்.

மாலதி என்ன சொன்னாலும் கணேசமூர்த்தி தட்டுவதில்லை. எந்த நாட்டிற்குச் சென்றாலும் மாலதியை உடன் அழைத்துச் சென்றுவிடுவார். அதற்குக் காரணம், அவள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை. அவளுடைய அறிவு, திறமை, ஆர்வத்தை அவர் நன்கு புரிந்து அறிந்து கொண்டதேயாகும்.

முதல் கட்டமாக இந்தோனிசியாவின் தலைநகர் ஜாகர்த்தா சென்று தங்கி இருந்தபோது அங்குள்ள தொழிலதிபர்களிடம் கலந்து பேசினார்கள். அவ்வளவாக ஒத்துவராத நிலையில்,

“சார் இங்கு டெஸ்மாகோ கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் ஒரு தமிழர். வைரவன் செட்டியார் என்பது அவர் பெயர். நான் டெலிபோன் டைரக்டரியைப் பார்த்துக் கண்டுபிடித்துவிட்டு வருகிறேன்” என்று மாலதி சொல்லிவிட்டுக் கீழே வரவேற்பு அறைக்கு நடந்தாள்.

சிறிது நேரத்தில் அறைக்கு வந்த மாலதி,

“சார்! செட்டியார் போன் நம்பரைக் கண்டு பிடித்துவிட்டேன்” என்று சொல்லித் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள். கணேசமூர்த்தியை அவருடன் பேசவைத்தாள். அவர்கள் பேச்சுத் திசைமாறிப் போவதை அறிந்த மாலதி தொலைபேசியை வாங்கிப் பேசினாள்.

அவளுடைய திறமையான பேச்சினால் இந்தோனிசியா முழுவதுக்கும் ஏஜென்சி எடுத்து இறக்குமதி செய்து விநியோகம் செய்வது என்றும்,

“சார்ஸ் நோய்க்கிருமி பரவாமல் தடுக்க வல்லது; வீட்டுக்கு வீடு டெட்டால் வாங்கி உபயோகித்து, வீட்டையும் நாட்டையும் தூய்மையாக வைத்திருந்தால் நோய் அண்டாது” என்கிற விளம்பரத்தில் பாதிச் செலவைப் பகிர்ந்து கொள்வது என்றும் முதல் உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டார்கள். பிறகு ஓராண்டு முடிந்தவுடன், சிங்கப்பூர் மங்களா கெமிக்கல் இண்டஸ்டிரிஸ் போலவே ஒன்றை இந்தோனிசி யாவில் உருவாக்குவது; அதற்குரிய எல்லா அனுபவம், அறிவு, பேப்பர் ஒர்க், தொழில் நுட்பத்தைக் கணேசமூர்த்தி செய்து கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வைரவன் செட்டியார் இந்தோனிசியாவில் அவர்களுக்கு இருக்கும் பல தொழில்களில், நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றினை ஒதுக்கிக் கொடுப்பது என்றும், இயந்திரங்கள், தொழிலாளர்கள் பிரச்சினை ஆகியவற்றைச் செட்டியார் பார்த்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. பங்கு விகிதத்தில் கணேசமூர்த்திக்கு 40 விழுக்காடு என்றும், செட்டியாருக்கு 60 விழுக்காடு என்றும் உடன்பாடு செய்து கொண்டார்கள்.

இதை மறுநாள் ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் ஒப்பந்தம் தயார் செய்து கையெழுத்து இடுவது என்றெல்லாம் முடிவு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக அன்று மாலை நேரில் சந்தித்து இறுதி வடிவம் எடுப்பது என்றும் மாலதி பேசி முடித்து விட்டாள்.

பேசியபடி செட்டியார், வழக்கறிஞர், ஆடிட்டர், மேனேஜர் உள்பட அனைவரும் விடுதிக்கே வந்து பேசி முடித்துவிட்டு அடுத்த நாள் உடன்படிக்கையுடன் வருவதாகச் சொல்லிச் சென்றுவிட்டனர்.

ஒரு காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிட்ட மன நிறைவில் மாலதி அசந்து உறங்கிவிட்டாள். கணேசமூர்த்திக்கு இருப்புக் கொள்ளாமல், அறையிலேயே நடை பயின்றார். பின்பு குளித்தார். என்ன செய்வது என்று குழம்பிப் போயிருந்தவர் மாலதியை எழுப்பினார்.

அவளும் குளித்துவிட்டு உடை உடுத்திக்கொண்டு வந்தாள்.

“மாலதி! உங்கிட்ட கொஞ்சம் மனம் விட்டுப் பேச வேண்டும் போலிருந்தது. அதனால்தான் தூங்கும் உன்னை எழுப்பிவிட்டேன் சாரி!”

“பரவாயில்லை சார்! எங்கிட்டே பேசுவதனால் உங்களுக்கு ஒரு ரிலாக்ஸ் ஏற்படுதுன்னா சொல்லுங்க!”

“மாலதி உன்னை இதுக்கப்புறம் என்னிலிருந்து பிரித்துப் பார்க்க முடியவில்லை. அதனால உங்கிட்டே சில விஷயங்களை வெளிப்படையாச் சொல்லப் போறேன். என் குடும்பம் பற்றி…”

“ஏன் சார் உங்க குடும்பம் பற்றி..”

”நோ.. நோ… நீ ஏன் அப்படி நினைக்கிறே! நீ வந்தப்புறம் தான் என் சொந்த வாழ்க்கையிலேயும், தொழில் துறையிலேயும் ஒரு திருப்பு முனை ஏற்பட்டிருக்கு.

என் வாழ்க்கையிலே சந்தோஷத்தைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகின்றன. இப்போதுதான், ஒரு விடிவு காலத்தின் கீழ்வானம் சிவக்கிறது. நிச்சயமாகச் சூரியன் எழுந்து, வாழ்க்கையில் பிரகாசத்தைத் தரப்போகிறான் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம் யாரால்…!

எனக்கு மூன்று பையன்கள். பெண் பிள்ளை இல்லை. மூன்று பேருக்கும் ஆளுக்கொரு கார் கேட்டார்கள். வாங்கிக் கொடுத்தேன். என்ன படிப்புப் படித்தாலும் கணக்குப் பார்க்காது செலவு செய்தேன். படிப்பு முடிந்த பின்பு, பேக்டரிக்கு வரச்சொன்னா ஒருத்தன்கூட வரல. பணம் செலவுக்கு வேணும்னா வந்து நிற்பானுங்க. பணம் கைக்கு வந்துவிட்டால், இரவு முழுவதும் இந்த கிளப், அந்த கிளப் என்று சுத்துவான்க. தண்ணீர்… சிகரெட்.. கேட்கவே வேண்டாம்.

புத்திமதி சொன்னா புடிக்கிறதில்லை. எல்லாம் தங்களுக்குத் தெரியுங்கிற மமதையிலேயே இருப்பான்க. விடிவதற்குச் சற்றுமுன்தான் வீட்டுக்கு வருவான்க. பகல் முழுவதும் நல்லா தூங்குவான்க. பணத்தை விரயம் செய்கிறதோட உடல் நலத்தையும் கெடுத்துக்கிறோம்கிறதை புரிஞ்சிக்கமாட்டேன் கிறாங்க சொல்லிச் சொல்லிப் பார்த்து விட்டு விட்டேன்.

என் ஒய்பும் எப்ப பார்த்தாலும் பணம்… பணம்ன்னு கத்திக்கிட்டேயிருப்பா. ஆடம்பரமா இருக்கணும்; தோழியோ உறவுக்காரியா ஒரு நகை வாங்கிட்டா இருப்புக் கொள்ளாம தவிப்பாள்.

வறட்டுக் கௌரவம் பார்த்துகிட்டே புலம்புவா. எப்ப பார்த்தாலும் சிடுசிடுன்னு திட்டிக்கிட்டேயிருப்பாள்.

நான் எதுக்கும் பதில் பேசுவதில்லை. காதிலும் போட்டுக்கிறதில்லை. வீட்டுக்குப் போனோமா; சாப்பிட்டோமா; தூங்கினோமான்னு காலையிலே எழுந்து ஓடி வந்துவிடுவேன். ஏண்டா வீட்டுக்குப் போறோன்னு வெறுப்பா வரும். நல்ல வருமானம் இருந்தப்போ எல்லாருக்கும் வேணும்கிறதைச் செஞ்சேன். வீடு, பங்களா, கார், நகை, நட்டு ஒண்ணையும் குறை வைக்கல. தொழில் பாதிப்பு ஏற்பட்டு வருமானம் குறையறப்போதான் பிரச்சினை பெரிதாகியது. என் பேச்சை யாரும் கேட்பதுவுமில்லை; மதிப்பதுவுமில்லை. தவணை கட்டமுடியாம பையன்கள் கார்கள் எல்லாத்தையும், குடியிருக்கிற வீட்டை விட்டுட்டு இன்னொரு பங்களாவையும் திருப்பி எடுத்துக்கிட்டான்க. கையிலே பணப்புழக்கம் குறைந்தது. சினிமாப் படத்திலே வர்ற கதையாட்டம் போய்விட்டது என் வாழ்க்கை.

இந்த நேரத்திலேதான் நீ வந்து சேர்ந்தே! நீ என்னை என்கரேஜ் செய்வது போல, ஒரு புள்ளையாவது மனைவியாவது என்கரேஜ் செய்து உதவியிருந்தா ஏதாவது தத்தித் தப்படி போட்டிருப்பேன். தொழிலாளர்களும் வேறு இடம் போயிருக்க மாட்டான்க. பேங்க் லோனும் ஏறியிருக்காது.

கடவுள் நேரா வரமாட்டாரு; நேரா உதவிட மாட்டாரு. யார் மூலமாவது உதவுவாருன்னு சொல்வாங்க. அது என் வாழ்க்கையிலே உண்மையா யிட்டது.

மாலதி கண்கலங்கி, வெட்கத்தால் தலைகுனிந்தாள்.

“நான் என்ன சார் பெரிசா செஞ்சிட்டேன். வேலையிழந்த எனக்கு வேலை குடுத்தீங்க. நான் என் கடமையைச் செய்தேன்.” என்றாள்.

“எப்படியோ உன் அனுசரணையான அன்பும், நீ காட்டிய உற்சாகமும் இல்லாவிட்டால், கவலையிலேயே சீக்கிரம் செத்துப் போயிருப்பேன். அதுமட்டும் நிச்சயம்” – கண் கலங்கினார்.

“இப்ப எதுக்காக வருத்தப்படுறீங்க! நான் இருக்கேன்ல. காலம்தான் மாறிட்டுதே!’

“சரி விடும்மா… நீ மட்டும் என்னை விட்டுட்டுப் போயிட்டேன்னா… நான் செத்துப் போயிடுவேன். எனது உற்சாகத்திற்கும் சுறுசுறுப்புக்கும் உந்து சக்தியாக விளங்கிறதே நீதான்.”

“உங்களை விட்டுட்டு நான் ஏன் போகணும்? சம்மா அதை இதைப் பேசி மனசை அலட்டிக்காதீங்க. விடுங்க…”
“இன்னிக்கு நான் சந்தோஷமா இருக்கேன். கொஞ்சம் ஒயின் ஆர்டர் கொடேன். லைட்டா சாப்பிடுவோம்.”

“பிள்ளைகள் குடிக்கிறார்கள் என்று இப்பதானே சொல்லி வருத்தப்பட்டீங்க. நீங்களே அப்புறம் அதைச் செய்யலாமா? நான் இருக்கேன்ல. வாங்க கீழே இறங்கிப் போய், வெளியிலே ஒரு ‘வாக்’ போய்ட்டு வருவோம். அசதி வரும். தூங்கிடலாம்”

“வேணாம்மா. நீ வேணும்னா அப்படியே போய்ட்டு வா… நான் ரூமிலேயே இருக்கிறேன். நீ போ…” என்று அவளை எழுப்பிவிட்டு சோபாவில் சாய்ந்தார்.

அவள் வெளியே போய்விட்டாள்.

கணேச மூர்த்திக்கு நித்திரையும் வரவில்லை.. ஒரு நிலையில் நிலைத்திருக்கவும் முடியாமல் திக்குமுக்காடினார்.

மாலதி வெளியே சென்ற அந்த ஒரு மணி நேரமும் துடியாய்த் துடித்துவிட்டார். அவளைக் காணாத; பார்க்காத ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாகத் தோன்றியது. அவள் இல்லாத அந்த அறை வெறிச்சோடிக் கிடந்தது. இருள் கவ்வியதாக உணர்ந்தார். அவள் அவர் அருகில் இருந்தால் எல்லாம் இருப்பதாகவும், அவளில்லாவிட்டால் எதுவும் இல்லாதது போலவும் உணரத் தலைப்பட்டார். படுக்கையில் புரள்கிறார்; தண்ணீர் குடிக்கிறார்; வானொலியை முடுக்குகிறார்; அணைக்கிறார். இனம் புரியாத தனிமை வாட்டுவதாக உணர்ந்தார். பாலைவனத்தின் நடுவிலே தனிமரமாய் நிற்பதாக உணர்ந்தார்.

மாலதி கதவைத் திறந்த சத்தம் கேட்டவுடன், அவளைப் பார்த்தவுடன், பாலைவனமாக இருந்த மனம், சோலைவனமாக மாறிவிட்டது.

“ஏன் மாலதி இவ்வளவு நேரம்.. நீ இல்லாத இந்த ஒரு மணி நேரத்தையே என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இன்னும் ஒரு மணி நேரம் ஆகலையே என எத்தனைமுறை கடிகாரத்தைப் பார்த்திருப்பேன். இனி எங்குப் போனாலும் சேர்ந்துதான் போகணும்… என்ன..”

“ஓகே…”

“நீ என்னை விட்டுப் பிரிந்துவிட்டால் என்னாவேன். வா… வா… என் அருகில் வந்து உட்கார் முதல்லே…”

அவள் சிரித்துக்கொண்டே அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

“என்ன குழந்தையாட்டம் இருக்கீங்களே”

“ஆமாம்! சினிமாவை டிவியிலே பார்த்தாலே போதும் அது டிராமான்னு தெரியுது. டைரக்டர் சொன்னபடி நடிகர்கள் நடிக்கிறாங்கங்கிறது தெரியுது. இருந்தாலும் நெகிழ்ச்சியான சீன் வர்றப்போ நீ சொன்ன குழந்தையாட்டம் அழுதுவிடுவேன். அதுதான் நான்… குழந்தைபோல உன் மடியிலே தலையை வச்சிக்கணும் போலத் தோணுது. நெருங்கி வா…” என்றார்.

அவளும் நெருங்கி உட்கார அவர் தலையை எடுத்து அவள் மடியில் வைத்துப் புதைத்துக் கொண்டார். அவளும் அன்பாக அவருடைய தலைமுடியின் கேசத்தை நீவிக்கொடுத்தாள்.

இந்தப் பாசமிகு அணைப்பையும், பரிவையும், இந்த அன்பு ஸ்பரிசத்தையும் வாழ்க்கையில் கிடைத்தற்கரியதாக உணர்ந்தார்.

அவர் விட்ட கண்ணீரில், அவளுடைய புடைவை. நனைந்து தொடைப் பகுதி ஈரமானதை அறிந்து, அவருடைய முகத்தை நிமிர்த்தி,

“என்னங்க… ஏன் இப்படியெல்லாம்” என்று- சொல்லி அவளும் நெகிழ்ந்து மனம் உருகியவளாய்க் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

கணேசமூர்த்தி அப்படியே மாலதியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவளை ஒரு இழுப்பு இழுத்தார். அவளும் அவர் மார்பின் மீது சாய்ந்தாள்.

மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், சிங்கப்பூர் பயணமானார்கள். விமானத்தில் மாலதி பறந்தாள். அவள் மனம் அதற்குமேலே ராக்கெட்டாய்ப் பறந்தது. அவள் முகம் சற்று இறுக்கமாகவே இருந்தது. தன் போக்கு சரியா? தவறா? புரியாமல் குழம்பினாள். எதிரும் புதிருமான வாதங்கள் அவள் மனத்தைக் குத்திக் கிளறியது.

வீட்டிற்கு வந்தவுடன், நடந்ததைத் தாயாரிடம் மாலதி சொன்னாள். தாய் பதிலேதும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள். கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டது மட்டும் தெரிந்தது.

மாலதியும் ஒன்றும் பேசவில்லை. ஆனால், அவள் மனம் பேசியது.

“என்னைத் தியாகம் செய்துகொண்டேன். என் சுய விருப்பு வெறுப்புப்படி எதுவும் நடப்பதில்லை. ஆனால், என் தியாகத்தின் மூலம் ஒரு நல்ல மனிதரைக் காப்பாற்றி உள்ளேன். ஒரு சிறந்த தொழிலைக் காப்பாற்றியுள்ளேன். என்னைப்போல் சுமார் 300 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய ஒரு தொழிற்சாலையை உருவாக்கி உள்ளேன். இந்த திருப்திதான் எனக்கு மேலோங்கி நிற்கிறது.

ஆறு ஆண்டுகட்குப் பின்னர் :

இப்பொழுது சிங்கப்பூரில் பிரபலமான தமிழ்த் தொழிலதிபர்களில் ஒருவராகிவிட்டார் கணேசமூர்த்தி.

மூன்று மகன்களுக்கும் மூன்று தரைவீடு, மூன்று கார்கள் வாங்கி வழங்கிவிட்டார். இரண்டு மகன்களுக்கும் அவர்கள் பிரியப்பட்ட பெண்களையே திருமணம் செய்துவைத்துவிட்டார். பையன்கள் ஒவ்வொருவர்க்கும் மாதம்தோறும் செலவுக்கு ஒரு தொகை வீட்டிற்குச் சென்றுவிடும். மனைவிக்கு, அவள் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டார்.

இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொன்னவளே மாலதிதான். இவ்வளவு செய்தவள் தனக்கும், தன் நான்கு வயது மகளுக்கும் வயதான தாய்க்கும் தேவையான செலவை மட்டும்தான் வாங்கிக் கொண்டாளே தவிரயா கணேசமூர்த்தி வற்புறுத்தி மாலதி தனக்கென்று எந்த வசதியையும் பெருக்கிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் செய்துகொண்டால், இவர்களின் உறவுக்கு அர்த்தம் வேறு விதமாகிவிடுமென்று பயந்தாள்.

மாலதியின் வீட்டுக்குத் தினமும் காலையில் கணேசமூர்த்தி சென்று அழைத்துச் செல்வதும், மாலையில் கொண்டு போய் விட்டு விட்டுத் தம் ஆசை மகளிடம் சிறிது நேரம் செலவழித்து விட்டு போவதும் தான் வழக்கம்.

தொழிலில் மகன்களைப் பங்குதாரர்களாக்க மனைவி கேட்டுக்கொண்டும், மகன்கள் அதை விரும்பியும், கணேசமூர்த்தி அந்தத் தவற்றை மட்டும் செய்யாமலே தவிர்த்துவந்தார். பையன்கள் தொழிற் சாலைப் பக்கம் வந்துவிட்டால், தாம் அனுபவித்துக் கொண்டு வரும், அமைதியும் மகிழ்ச்சியும் பறந்து போய்விடும்; மாலதிக்குக் கேடு செய்ய ஆரம்பிட் பார்கள்; தொழிலையும் கெடுத்து விடுவார்கள் என்று உறுதியாக நம்பினார். அதனால், தொழில் வேறு, குடும்பம் வேறு என்று இரண்டுக்கும் வேலி போட்டே வந்தார்.

இதுவரை மாலதியை அவர்கள் யாரும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தராமலே பார்த்துக்கொண்டார் கணேசமூர்த்தி. தொழில் முழுவதும் மாலதியின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. காசோலையில்கூட அவள் கையெழுத்தும் இணைக்கப்பட்டுவிட்டது. அந்த அளவுக்கு உரிமை பெற்றிருந்த மாலதி, ஓரறை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஓரறை வீட்டிலேயே குடியிருப்பதைக் கணேசமூர்த்தி விரும்பவில்லை. அத்துடன், தமக்கு அமைதி தேவைப்பட்டாலோ, பிரச்சினை ஏற்பட்டாலோ அந்த ஓரறை வாடகை வீட்டில் தங்கி, தன் மகளுடன் விளையாடுவார். அந்த நேரத்தில் மாலதியின் தாயாருக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தனியார் அடுக்குமாடி வீட்டில் ஒரு பகுதியை வாங்கி, மாலதியின் விருப்பத்திற்கு மாறாக, வலுக்கட்டாயமாக அவர்களைக் கணேசமூர்த்தி குடியேற்றிவிட்டார். தம் ஆசை மகளின் எதிர்காலப் படிப்பிற்கும், திருமணத்திற்கும் ஒரு தொகையைத் தனித்தனியே வங்கியில் வைப்புத் தொகையாகக் கட்டிவிட்டு, மாலதிக்குத் தெரியாமல், தமக்கு நம்பிக்கைக்குரிய ஆடிட்டர் அரிகிருஷ்ணனிடம் பத்திரத்தை ஒப்படைத்து விட்டார். வெளிநாடு சென்று வரும் போதெல்லாம் ஆசைமகளுக்கு நகை, துணிமணிகள், விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள் வாங்கி வந்து கொடுத்து மகிழ்வதில் கணேசமூர்த்திக்கு ஒரு திருப்தி.

இந்தச் சூழலில் ஒருநாள் மூன்று மகன்களும், மனைவியும் சேர்ந்து கணேசமூர்த்தி அலுவலகத்தில் நுழைந்தார்கள். எதிர்பார்க்காத கணேசமூர்த்திக்கு, வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது, அவர்கள் வருகை.

“என்னப்பா.. எல்லாரும்… என்ன விசேஷம்?”

“எங்களுக்கு ஒண்ணு இன்று தெரிஞ்சாகணும்.” மூத்த மகன்.

“ஆமாங்க! ஊர்லே யார்யாரோ என்னென்னமோ சொல்றாங்க” மனைவி.

“எங்களுக்கு எதிர்காலத்திலே என்ன உத்திரவாதம்?” கடைசி மகன்.

“என்னப்பா தெரிஞ்சாகணும்” அப்பா.

“உங்களுக்கும், இந்தத் தொழிற்சாலையை ஆட்டிப் படைக்கும் அந்தப் பொம்பளைக்கும் என்ன உறவு?” இரண்டாவது மகன்.

கணேசமூர்த்தி, தொலைபேசிமூலம் மாலதியை வரச்சொல்லிவிட்டு, அவள் வரும் வரையில் அமைதி காத்தார்.

மாலதி உள்ளே நுழைந்தவுடன் அவர்களைப் பார்த்துத் திகைத்தவளாய்,

“யார் இவர்கள்? என்ன பிரச்சினை? நீங்க ஏன் ஒரு மாதிரியா இருக்கிறீங்க?” என்றாள் ஒரு படபடப்புடன்.

“இவள் என் மனைவி. அவர்கள் மூவரும் என் மகன்கள். எதிர்காலத்தைப் பற்றிப் புதிதாக அக்கறை வந்து சிந்திக்க வந்துள்ளார்கள். தொழில் வீழ்ச்சியடைந்திருந்தப்போ, வருந்தி வருந்தி வந்து உதவிடுங்கன்னு கேட்டப்போ, வரமுடியாது; வருமானமே இல்லை. அங்கே வந்தா போரடிக்கிறது; என்று வர மறுத்த பிள்ளைகள், உன்னால் தொழில் தலை எடுத்தபின் வந்துவிட்டார்கள்.

அந்த நேரத்தில் எனக்கு உற்சாகமூட்டி அரிய ஆலோசனைகளைச் சொல்லிக் கூடவே இருந்து எல்லா உதவிகளையும் நீ செய்யாவிட்டால், இவங் களெல்லாம் இங்கே இப்ப வந்திருப்பாங்களா?

விதை விதைக்கவோ உரம் போடவோ, நீர்விடவோ, வேலிபோட்டுக் காப்பாற்றவோ செய்யாமல், காய் கனியுடன் பூத்துக் குலுங்கும்போது பழம் பறிக்க வந்திருக்காங்க..”

“நீ மட்டும் இல்லேன்னா, நானே இந்நேரம் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். இது அவங்களுக்குத் தெரியுமா? உனக்கும் எனக்கும் என்ன உறவுன்னு தெரிஞ்சுக்கத் தான் இந்தப் படையெடுப்பாம். அவுங்களுக்கு வேண்டியதை யெல்லாம் செஞ்சாச்சே! இப்போ இங்கே ஏன் வந்து என் நிம்மதியைக் கெடுக்கறாங்க? தெய்வமே நீ இருக்கிறீயா! இருந்தா ஏன் என் சந்தோஷத்தைக் கெடுக்கிற?” என்று இரு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.

உடனே பின்னால் இருந்த மாத்திரை ஒன்றை எடுத்து வந்து தண்ணீருடன் மாலதி கொடுத்துச் சாப்பிடச் செய்து விட்டு அவர் தலைமுடியை நீவி விட்டு, நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டிருந்தாள்.

இந்தக் காட்சியை அவர்கள் பார்த்து எரிச்சலடைந்தனர். மாலதியின் நெருக்கமும் பழக்கமும் அவர்களைப் பொறாமைப்பட வைத்தன.

கணேச மூர்த்தியின் முகத்தை நிமிர்த்த்தி மாலதி சொன்னாள்.

“இதோ பாருங்க! இப்ப என்ன நடந்துவிட்டது? நீங்க ஏன் வருத்தப்படணும். பிள்ளைங்க கேட்கிறதிலேயோ, சந்தேகப்படறதிலேயோ என்ன தப்பு? எங்கே இந்தத் தொழிலையே என் பெயருக்கு எழுதி வைத்திடுவீங்களோன்னு பயம் வர்றது இயற்கைதானே.

“இந்தப் பாருங்கப்பா…. உங்களுக்கு இன்னிக்குச் சொல்றேன். சாருக்கு அப்புறம்… என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே மேஜை மீது இருந்த வெள்ளைத் தாளை எடுத்துக் கணேசமூர்த்தியின் கோட் பையிலிருந்த பேனாவை உரிமையுடன் எடுத்துக் கையெழுத்துப்போட்டு, மங்களத்திடம் கொடுத்தாள்.

நடுமகன் கேட்டான். “அதெல்லாம் விடும்மா… உனக்கும் எங்கப்பாவுக்கும் என்ன உறவு? ஊரெல்லாம் ஒரு மாதிரியாப் பேசுறாங்க’

தலைநிமிர்ந்த கணேசமூர்த்தி சிவந்த கண்களுடன் அவர்களைப் பார்த்துச் சொன்னார்.

“ஏய் ஊரெல்லாம் பேசலடா… நீங்கதான் பேசுறீங்க..மாலதி! நீயே சொல்லும்மா!”

மாலதி சொன்னாள்.

“என் மகளின் அப்பாதான், உங்களோட அப்பா!”

“அப்படீன்னா” ஒருவன் கேட்டான்.

“அது அப்படிதான்!”

என்று பதிலளித்துவிட்டு மாலதி அறையை விட்டு வெளியேறினாள்.

– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *