அதிர்ஷ்டலட்சுமி – ஒரு பக்க கதை





என் அலுவலக உதவியாளர் சண்முகத்துக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி வந்தது. அவன் ஆண் குழந்தையைத்தான் பெரிதும் எதிர் பார்த்தான் பெண் என்றதும் அவன் ஏமாற்றறமும் சோர்வும் அடைந்ததாக எல்லோரும் சொன்னார்கள்.
அன்று மாலையே மனைவி சகிதம் மருத்துவ மனை சென்றேன்.
குழந்தையைப் பார்த்தோம். ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து குழந்தை கையில் வைத்தேன்.
முதலில் கவனிக்காத சண்முகம், சட்டென்று சுதாரித்து, ”சார்…எதுக்கு இவ்வளவு?” என்றான்.
”இல்லப்பா…சட்டுன்னு எடுக்கும்போது கையில ஆயிரமா வந்துட்டுது. உன் மக அதிர்ஷ்டக்காரப் பொண்ணா இருப்பா போல தோணுதே” என்றேன்.
”ஆமாம்..சண்முகம்…லட்சுமியே உன் வீட்ல வந்து பிறந்திருக்கா’ என்றாள் என் மனைவி.
சண்முகத்திற்கு மட்டுல்லை…அவள் மனைவிக்கும் வாய் கொள்ளாச் சிரிப்பு.
திரும்பி வரும்போது என் மனைவி கேட்டாள். ”புறப்படும்போதே ஆயிரம் ரூபாய் கொடுக்கப்போவதாகத்தானே சொன்னீங்க…அப்புறத்
ஏன் ட்விஸ்ட்?”
“பொண்ணு வேணாம்னு சொல்றவங்க கூட, அதிர்ஷ்டலட்சுமி வேணாம்னு சொல்லமாட்டாங்க. தன் வீட்டுப் பொண்ணை அதிர்ஷ்டலட்சுமின்னு அவங்க நம்புறதுக்காகத்தான் இந்தப் பொய்’யென்றேன்.
புன்னகைத்துப் பாராட்டினாள் மனைவி.
– ஆர்.முத்தரசு (15-10-12)