அடையாளம்
சூப்பிரன்ட் சார்….அந்த ட்யூப் லைட்டைக் கொஞ்சம் ஆஃப் பண்ணிறலாமே…?- நின்று எரியாமல் அவர் தலைக்கு மேல் மினுக் மினுக் என்று அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து இப்படிக் கூறினேன் நான்.. நேர் எதிரில் உட்கார்ந்திருந்த எனக்கு அது ஒரு மாதிரிக் கண்ணைக் கூசியது. தொந்தரவாய் இருந்தது.

கரன்ட் ஃப்ளக்சுவேஷன் இருக்கு இந்த ஏரியாவுல…லோ வோல்டேஜ்…கொஞ்ச நேரத்துல சரியாயிடும்னு பார்த்தேன்….என்று சொல்லிக் கொண்டே சொக்கு…இந்த லைட்டை அணைச்சிடுப்பா….என்று பியூனை அழைத்தார் கண்காணிப்பாளர். சொக்கலிங்கம் என்ற சொக்கு….உட்கார்ந்தமேனிக்கே தூக்கத்தில் சொக்கிக் கொண்டிருக்க…திடுக்கென்று எழுந்து ஓடி வந்தான். அணைத்தால் கண்காணிப்பாளர் இருக்கும் இடத்தில் சற்று இருள் கவியும்தான். வேறு வழி?
பார்வை நிலைத்திருந்த எனக்கு காலையில் என் வீட்டில் நடந்த அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு ட்யூப் மாட்ட என்றுதான் கூட்டி வந்திருந்தேன் அவனை. வலது பக்க ஓல்டர் உ.டைந்திருந்தது. புதிய ஓல்டரைப் பொருத்தி பிறகு புதிய பல்பையும் மாட்ட வேண்டும். ஓல்டரைப் பொருத்தியவன், பல்ப்பையும் மாட்டி விட்டு சுவிட்சைப் போட்டுப் பார்த்தான். லைட் எரியவில்லை. அவன் முகம் சுருங்குவதை நான் கவனித்தேன். டெஸ்டரை வைத்து இடதும் வலதுமாக சோதனை செய்தான். எல்லாமும் சரியாகத்தான இருந்தது. ஆனால் எரிய மறுக்கிறது. நோக்காலியில் நின்ற மேனிக்கே என்ன மிஸ்டேக்காய் இருக்கும் என்று யோசித்தான். ஒரு பதட்டம் தெரிந்தது அவனிடம். என்னையும் ஒரு முறை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டான்.
சின்னப் பையன்தான். இந்தச் சிறு வேலைக்கு இவன் போதும் என்றுதான் கூட்டி வந்திருந்தேன். டேய்…சாரோட போய் ஒரு லைட் மாட்டிக் கொடுத்திட்டு வா…என்று கடை முதலாளிதான் அனுப்பினார்.. ஓல்டர் மாட்டி எரிய வச்சிருவேல்லடா….?
வாங்க சார் போவோம்….என்று அவன் என் டூ வீலரின் பின்னால் உட்கார்ந்து கொண்டு கிளம்பிய போது, இது ஒரு சின்ன வேலைதானே…இவன் போதாதா…? என்று நானும் அழைத்து வந்து விட்டேன்.
சீக்கிரம்ப்பா…எனக்கு ஆபீசுக்குக் கிளம்பணும்….என்றேன் நான்.
அதிகம் பதட்டமடைந்ததுபோல் தெரிந்தான். பிறகு கேட்டான்.
சார்….அந்த ட்யூப் லைட்டுல இருக்கிற ஸ்டார்ட்டரைக் கழட்டி இதுல போட்டுப் பார்க்கலாமா சார்….? – சொல்லிக் கொண்டே கீழே இறங்கி நோக்காலியை நகர்த்தி உறாலில் இருந்த ட்யூப் லைட்டின் அருகே போட்டு, ஏறி அந்த ஸ்டார்ட்டரைக் கழற்றி வந்து இதில் பொருத்தினான். அப்பொழுதும் எரியவில்லை.
எனக்கே சங்கடமாய்த்தான் இருந்தது. வேலை நாளில் இதைச் செய்ய ஆரம்பித்தது தப்போ என்று தோன்றியது. மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் அரை மணியில் நான் கிளம்பியாக வேண்டும்.
சார்…ட்யூப் செட்டையே கழற்றித்தான் பார்க்கணும்…உள்ளே வொயர் எதுவும் கழன்றிருக்கா, கட்டாயிருக்கான்னு பார்க்கணும் சார்….? என்றவாறே என் உத்தரவை எதிர்பார்க்காமல் கழற்ற ஆரம்பித்தான். நேரம் இழுக்கும் என்று நினைத்த நான், ஃபோனை எடுத்துக் கொண்டு வாசலுக்குப் போய் ஆபீசுக்கு ஒரு மணி நேரம் அனுமதி சொல்லிவிட்டு வந்தேன்.
கழற்றிய செட்டை மூலையில் பாதுகாப்பாய்ச் சார்த்தி நிறுத்தி சோதனை செய்ய ஆரம்பித்தான். முகத்தில் கவலையின் அறிகுறிகள். தண்ணி சாப்பிடுப்பா….என்றவாறே போய் டம்ளரில் நீர் எடுத்து வந்து கொடுத்தேன். அவன் உடம்பு தெப்பமாய் வியர்த்திருந்தது..
டீ சாப்பிடலாமா…? என்று கேட்டேன். வேணாம் சார்…இத முடிச்சிட்டு அரை மணில வரணும்னு முதலாளி சொல்லி விட்டிருக்காரு….லேட்டானா சத்தம் போடுவாரு…என்றான்.. இடதுபக்க ஓல்டரையும் கழற்றி, சுத்தம் செய்து திரும்ப மாட்டி, வொயர்கள் எங்காவது விட்டிருக்கிறதா என்று டெஸ்ட் பண்ணி, லைன் க்ளியரா என்று சோதனை செய்தான். ஒரு துணியை வாங்கி அழுக்கு, தூசி போக நன்றாய்த் துடைத்தான். எல்லாம் சரி..லைட் எரியணுமே…! என்றிருந்தது எனக்கு.
அவன் அதி தீவிர கவனம் என்னைப் பதற்றப்படுத்தியது. அடிப் பட்டியையே ஒரு வேளை மாற்ற வேண்டியிருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். உறாலிலிருந்து கழற்றி வந்த ஸ்டார்ட்டரை இப்போது போட்டுப் பார்த்தபோது எரிந்தது.
.இதையே லைட்டைக் கழற்றதுக்கு முன்னாடி போட்டபோது எரியலையே…! என்றேன். அதான் சார்…லைன்ல ஏதோ மிஸ்டேக். வொயர் லேசா விடுபட்டிருந்தாக் கூட எரியாதுல்ல சார்….? – சொல்லிக் கொண்டே ஒரு திருப்தியோடு திரும்ப சுவற்றில் பட்டியை மாட்ட ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் பல்பையும் மாட்டி எரிய விட்டான். பளீரென்று அறை வெளிச்சமானபோது அவன் முகத்தில் மகிழ்ச்சி.
கழற்றிய பழைய ஸ்டார்ட்டரைக் கொண்டு உறால் லைட்டுக்குப் போட்டபோது அது எரியவில்லை. இதுல லைனெல்லாம் சரியாத்தான் சார் இருக்கு…ஒரு ஸ்டார்ட்டர் மட்டும் புதுசா வாங்கி மாட்டிடுங்க….என்று சொல்லிவிட்டு இறங்கிக் கிளம்ப ஆயத்தமானான்.
நூறு ரூபாயை நீட்டியபோது…வேணாம் சார்…அம்பது மட்டும் கொடுங்க…போதும்…அதான் சொல்லி விட்டாரு முதலாளி….என்றான்.
பரவால்லப்பா….இருக்கட்டும்…இவ்வளவு நேரம் பார்த்திருக்கேல்ல…? என்றேன்.
அதிகமா வாங்கினது தெரிஞ்சிதுன்னா என் வேலை போயிடும். சார்… வேணாம்…..என்றான்.
இருக்கட்டும் வச்சிக்கோ….என்றேன் நான். அவன் அதுநேரம் வரை பட்ட கஷ்டமும், பதட்டமும் எனக்குக் கவலையளித்திருந்தது. புதுப் பையன்…கொஞ்ச வயசுக்காரன். தொழில் ஊக்கம் பெறணும்….போகட்டும் என்றுதான் கொடுத்தேன்..
வேண்டாம் சார்….இவ்வளவு நேரம் ஆனதுக்கு நான்தான காரணம். தப்பு எங்கேன்னு கண்டு பிடிக்க முடியாமத் திணறி என்னாலதானே நேரம் ஆயிடுச்சி…தொழில் நல்லா பழகணும் சார்…அதான் எனக்கு முக்கியம்…அதுக்குள்ளயும் சொன்னதுக்கு மேலே கூலி கேட்கிறதோ, வாங்குறதோ தப்பு சார்…அப்புறம் அதுலதான் சார் கவனம் போகும். வேலை படியாது….எனக்கு வேலைதான் சார் முக்கியம்.. நான் ஒரு பெரிய எலெக்ட்ரீஷியன் ஆகி, ஒரு பங்களாவுக்கே வொயரிங் பண்ற அளவுக்கு வரணும் சார்…அதான் என் ஆசை. எங்கம்மா அப்டித்தான் சொல்லியிருக்காங்க…நான் வர்றேன். சார்..- ஐம்பது மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பினான். இது நாள் வரை இப்படி ஒருவனைப் பார்த்ததில்லையே என்கிற ஆச்சரியத்தில் திளைத்துப் போனேன். அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் நடையில் கூட ஒரு ஒழுங்கு இருப்பதாய் உணர்ந்தேன். மேற்கொண்டு படிக்காமல் எதற்கு இப்படி வேலைக்கு வந்திருக்கிறான். வசதியில்லையோ? என்ற சிந்தனை போனது எனக்கு. அவனின் நினைவு மனதில் படிந்து விட்டது அன்று.
அலுவலகத்தில் அணைந்து அணைந்து மினுக்கிய ட்யூப் லைட் அமிழ்ந்திருந்த என் காலை அனுபவங்களைக் கிளர்த்தி விட்டது. அந்தப் பையனின் வார்த்தைகள் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. என்ன ஒரு பொறுப்பான பேச்சு?
ஜன்னல் வழியாக வெளியே நோக்கினேன். அந்தப் பெரியவர் நுழைந்து கொண்டிருந்தார். நாள் தவறினாலும் அவர் வருவது தவறாது. சலிக்காமல் இப்படி வந்து போய்க் கொண்டிருக்கிறாரே….என்ன பெரிதாக விற்று, என்ன லாபத்தைப் பார்த்து விடப் போகிறார்? இதை இவர் ஒரு தொழிலாகச் செய்கிறாரா அல்லது இதுதான் தனது கடமை, லட்சியம் என்று வரித்துக் கொண்டு செய்து கொண்டிருக்கிறாரா? அதிகமாக விற்றதாகவும் தெரியவில்லை, அவரும் அசருவதாகத் தெரியவில்லை. இப்படியிருந்தால் வேறு என்னதான் நினைப்பது இவரைப்பற்றி?
ஐயா…வாங்க….. – கண்காணிப்பாளர் அவரை வரவேற்றார். அலுவலகம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரை மட்டும் ஒன்றும் சொன்னதில்லை அவர். வந்தால் வந்துவிட்டுப் போகட்டும்…என்று விட்டு விடுவார். பிரிவு பிரிவாகப் போவார். அறை அறையாகப் போவார். அந்த வளாகத்தின் அத்தனை அலுவலகங்களிலும் சர்வ சுதந்திர பாத்தியதை உண்டு அந்தப் பெரியவருக்கு. ஐம்பது தாண்டிய வயதுதான் இருக்கும். ஆனாலும் ரொம்பத் தளர்ச்சி தென்படும். எனக்குத் தெரிய பல இடங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன். கலெக்டர் ஆபீஸ் வளாகத்திலும், உள் அலுவலகங்களிலும் கூட புத்தகச் சுமையோடு நடமாடிக் கொண்டிருப்பார். அந்த அவரின் இயக்கத்தில் ஆத்ம சுகம் தேடுகிறாரோ என்று தோன்றும்.
இடது கையில் அடுக்கிய புத்தகங்களோடு, அதே இடது தோளில் தொங்கிய ஜோல்னாப் பையோடு. புத்தக பாரத்தில் அவர் தோளே இறங்கிவிட்டதுதான். ஒவ்வொருவராகக் காட்டிக் கொண்டே வந்தார் அவர். பொதுவாக யாருமே வாங்குவதில்லைதான். சும்மா வாங்கிப் பாருங்க…என்னதான் இருக்குன்னுதான் பாருங்களேன்…- என்று சொல்லிக் கொண்டிருந்தார் அவர். வழக்கமாய் விடாமல் சலிக்காமல் சொல்வதுதான். இவர்களும் வழக்கமாய் வேண்டாம் என்று தலையசைப்பார்கள். ஒருவருக்கும் இரக்கமில்லை என்றுதான் தோன்றும் எனக்கு. எவரும் புத்தகம் வாங்குவதில்லையே ஒழிய, யாரும் அவரைக் கேலியோ கிண்டலோ செய்து பார்த்ததில்லை நான். அந்த அளவுக்கு ஒரு மரியாதை உண்டு அவருக்கு.
படிக்கும் பழக்கம் எங்குதான் இருக்கிறது? எனக்குத் தெரிய எங்கள் அலுவலகத்தில் யாரும் புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ளவர்கள் இல்லை. நன்றாய்ச் சினிமா பார்ப்பார்கள். அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்று சாதனை போல் பெருமையாய்ப் பேசிக் கொள்வார்கள். அதிலும் எவருக்கும் ஒரு ஆழ்ந்த ரசனை என்பதெல்லாம் கூடக் கிடையாது. எல்லாமே பொழுது போக்குத்தான். பொதுவாக மக்களே அப்படித்தானே… இருக்கிறார்கள்?
இருக்கும் பெண் பணியாளர்களில் ஒருவர் மட்டும் மதிய இடைவேளையில் டேபிளுக்குக் கீழே மறைத்து விரித்து வைத்துக் கொண்டு மாத நாவல் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஜனரஞ்சக வாசகரான அவர் இந்த வகைப் புத்தகங்களையெல்லாம் கையால் தொடுவாரா என்ன? நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுதான்.
அத்தனையும் தேசத் தந்தை மகாத்மாவைப் பற்றிய புத்தகங்கள் அவை. காந்தி மியூசியத்தில்தான் அந்தப் பெரியவர் இருப்பார். பார்த்திருக்கிறேன். விடுமுறை நாளில் அங்கிருக்கும் நூலகத்தில் சென்று உட்கார்ந்து விடுவேன். எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்கிறேன். பொதுவாக மெம்பராய்ச் சேர்ந்துதான் புத்தகங்களைத் தொட முடியும். ஆனாலும் ஒரு சிலருக்கு இருக்கும் சலுகை எனக்கும் அங்கு உண்டு. புதிய புத்தகங்கள் வந்து குவிந்து கிடக்கும்போது அவைகளைத் தரம் பிரித்து…அதாவது ஆங்கிலம், தமிழ், மொழி பெயர்ப்பு என்று…பிரித்து அடுக்கி, அவற்றை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து எண்ணிடும் வேலைகளை என் பழக்கத்தில் நானே கேட்டு வாங்கிக் கொண்டு செய்து கொடுத்திருக்கிறேன். கொடுத்திருக்கிறேன் என்று கூடச் சொல்லக் கூடாதுதான். விரும்பிச் செய்தது எப்படி உதவியதாக அர்த்தப்படும். அது ஒரு சேவை மனப்பான்மையில் நம்மை நாமே வலிய ஈடுபடுத்திக் கொண்டு செய்வது.
அங்கிருக்கும் புத்தகங்களைத்தான் இவர் சுமந்து வருகிறார். இவரும் ஒரு வகையான சேவை என்றுதான் செய்கிறாரோ அல்லது சம்பளத்துக்கோ? தெரியாது. ரொம்பவும் ஏமாற்றமாக இருக்கக் கூடாது என்று சில முறை அவரிடம் புத்தகங்கள் வாங்குவதுண்டு. இதை வைத்து…அதோ…அவர்ட்டப் போங்க…என்று என்னைக் கை காண்பித்துத் தாங்கள் தப்பித்துக் கொள்வார்கள். மெல்லிய சிரிப்போடு நகர்ந்து என்னிடம் வருவார் அவர்.
அந்த காந்தீய நூலகத்தில் வெளியே எடுத்துச் செல்ல முடியாத, மெம்பர்களுக்கே கொடுக்கப்படாத, தலையணை அளவுப் புத்தகங்களைத்தான் படிக்க முடியும். குறிப்பு எடுக்க முடியும். ஆகையால் சின்னச் சின்னப் புத்தகங்களை இவரிடமிருந்து வாங்கிக் கொள்வேன். பத்து சதவிகிதக் கழிவில் தருகிறேன் என்பார். நான் அவரிடம் உரிய விலைக்கே வாங்கி விடுவது. நூறு ரூபாய் என்றால் பத்து கழித்து, குறைத்து என்ன பெரியதாய் சேமித்திடப் போகிறோம்? ரொம்ப நன்றிங்க தம்பி…. – அவரின் அந்த வார்த்தைகள்தான் வேண்டும் எனக்கு.
காலைலேர்ந்து அலைஞ்சிட்டிருக்கேன்…இன்னைக்கு ஒண்ணு கூட விற்கலை….குறைஞ்சது அஞ்சு புக்காவது தினசரி வித்துப்புடுவேன். இன்னைக்கு ஒண்ணும்ஓட்டமில்லை… என்றார். மனசுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.
சரிங்க ஐயா….நீங்க மதியச் சாப்பாடு சாப்டுட்டீங்களா? என்றேன். இல்லை என்றார். வரீங்களா போவோம்…என்று கிளம்பினேன். இல்ல தம்பி…நா கொண்டாந்திருக்கேன்…தயிர்ச் சோறு இருக்கு….என்று விட்டு மேற்கொண்டு என் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினார். நான் புறப்பட்டு பக்கத்து பாலிடெக்னிக் கான்டீனை நோக்கி நடந்தேன்.
சீக்கிரம் வாங்க…மதியம் மூன்றரைக்கு ரெவ்யூ மீட்டிங்…தெரியுமில்ல….என்றார் கண்காணிப்பாளர்.
எல்லாம் ரெடி பண்ணி சீஃப் டேபிள்ல வச்சிட்டேன் சார்… என்றேன்.
அது ஓ.கே…மேற்கொண்டு ஏதாச்சும் கேட்டார்னா? நீங்க இருக்கணும்ல….? என்னாலெல்லாம் எடுத்துக் கொடுக்க முடியாது. நீங்கதான் போய் விளக்கிச் சொல்லணும்…புரியுதா.?…சீக்கிரம் போயிட்டு சீக்கிரமா வாங்க….இப்ப வந்திடுவாரு….- சொல்லும்போதே அப்படி ஒரு பதட்டம். காலம் பூராவும் இப்படி வேலைக்குப் பயந்தே, சீனியாரிட்டியில் கண்காணிப்பாளர் ஆகிவிட்டார் அவர். வெறும் சைடு இனிஷியல் பண்ண மட்டும்தான் தெரியும். எழுதியிருப்பது சரியா, தப்பா என்று எதுவும் பார்க்க மாட்டார். அவரவர் எழுதியதற்கு அவரவர்தான் பொறுப்பு.. எல்லோருக்கும்தான் இந்த சர்வீஸ் ஓடுகிறது….நினைத்துக் கொள்வேன் நான்.
கால் மணில வந்திடறேன் சார்….என்று விட்டுப் புறப்பட்டேன். போய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு திரும்பிய போது மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். தம்பி…தம்பி…..என்ற அவரின் குரல் கேட்டு நின்றேன். அருகில் சென்று “சொல்லுங்க…” என்றேன்.
ஆபீஸ்ல ஏதோ ஏதோ எலெக்ட்ரிக் வேலையெல்லாம் இருக்குன்னு பேசிக்கிறாங்க….ஆபீசர் ரூம்ல புது ஃபேன் மாட்டணும், ரெக்கார்டு ரூமுக்கு லைட் மாட்டணும்னு….இன்னும் ஏதோ ரிப்பேர் ஒர்க் வேறே சொன்னாங்க…வெளி கேட் கிட்ட பிள்ளையார் கோயில்ல விளக்குப் போடணுமாம்……என் பையன் இருக்கான்…வரச் சொல்றனே…எலெக்ட்ரிகல் வேலையெல்லாம் நல்லா பார்ப்பான்….கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்…. என்றார்.
ரொம்பவும் பரிதாபமாய்க் கெஞ்சுவது போலிருந்தது அவரது கேட்பு. என்னால் அவரது பணிவையும், குனிவையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வயதில் பெரியவரான அவர் அப்படிக் கூனிக் குறுகி நிற்பது படு சங்கடத்தை ஏற்படுத்தியது.
நல்லா பண்ணுவாருங்களா… அனுபவம் உள்ளவர்தானே…? கூட ரெண்டு ஓசி வேலை சேர்த்துத்தான் சொல்லுவாங்க…எதிர்த்துப் பேசாம, சலிக்காம செய்யணும்…செய்வாரா?
செய்வார் தம்பி….கருத்தான, மரியாதையான பையன்….கூலியும் நியாயமா வாங்கிக்கிடுவான்….கொஞ்சம் சொல்லுங்க தம்பி…… – கண்களில் நீர் தளும்பியது அவருக்கு. அடக் கடவுளே…இதுக்கு எதுக்கு இப்படிக் கண் கலங்குகிறார்? மனசு சங்கடமானது.
இங்கயே இருங்க என்றுவிட்டு உள்ளே போனேன். அலுவலரிடம் சொல்லி ஒப்புதல் பெற்றுக் கொண்டு அந்தப் பையனை வரவழைப்பதற்கான தகவலை பெரியவரிடம் சொன்னேன்.
தன்னிடம் எந்தப் பிடுங்கலும் வராமல் இருந்தால் சரி என்றிருப்பவர் எங்கள் கண்காணிப்பாளர். யார் எதில் தலையிட்டாலும், இருக்கையை விட்டு நகரமாட்டார். அவரை அரிக்காமல் இருந்தால் சரி. அப்படியே இருந்து இருந்து அவரை யாரும் எதற்கும் அழைப்பதும் இல்லை. மதிப்பதும் இல்லை. வழக்கம்போல் இதையும் அவர் கண்டு கொள்ளவில்லை. நரி வலம் போனா என்ன, இடம் போனா என்ன…மேல விழுந்து பிடுங்காம இருந்தாச் சரி….-அவர் கதை இதுதான்.
மறுநாள் நான் அலுவலகம் வந்த போது கவனித்தேன். அந்தப் பையன் வேலையைத் துவக்கியிருந்தான். தோற்றம் எதையோ ஞாபகப்படுத்தியது.
யாரு…பார்த்தது போலிருக்கே….? யாருப்பா….? உன் பேரு…..? என்றவாறே நெருங்கினேன்.
வணக்கம் சார்…என் பேரு மோகன்தாஸ்…..- சொல்லியவாறே திரும்பினான் அவன். நேற்று என் வீட்டில் ட்யூப் லைட் மாட்டத் தடுமாறினானே – அச்சு அசல் அதே பையன்தான் இப்பொழுது என் கண் முன்னே…!!
இவன் அந்தப் பெரியவர் மகனா?!
என்னைக் கண்ட அதிர்ச்சியில் சார்……என்றவாறே நோக்காலியிலிருந்து இறங்க யத்தனித்தான். ஸ்ஸ்ஸ்……எதுவும் பேசாதே…..தெரிஞ்சிதா….பேசாம வேலையைப் பாரு…..என்று சொல்லி வாய்க்குக் குறுக்கே விரலை வைத்து அவனை அமைதிப் படுத்தினேன்.
சீஃப் மாவட்ட ஆட்சியர் அழைத்திருக்கிறார் என்று அங்கு சென்றிருப்பதாகச் செய்தி வந்தது. அப்ப இன்னைக்கு மீட்டிங் இல்லையா…..? – உள்ளே பேசிக் கொண்டார்கள்.
நிச்சயம் வேலை முடிந்து செல்லும்வரை அவனை அருகில் நின்று கண்காணித்துத்தான் ஆக வேண்டும் என்கிற புதிய பொறுப்பு வந்திருந்தது எனக்கு. ஏதாவது ஆலோசனைகள் சொல்லி நிச்சயம் அவனைத் தேற்ற வேண்டியிருக்கும். தொழில் அனுபவத்தில் இன்னும் நம்பிக்கை தராத அந்தப் பையன், நேற்று என் வீட்டிற்கு வேலைக்கு வந்த அதே அவனாய் இருப்பான் என்று நான் இம்மியும் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த காந்தீயப் பெரியவருக்கு உதவ வேண்டும் என்கிற ஒரே நல் நோக்கில்தான் இதற்கு ஏற்பாடு செய்தேன். முன்பே இவன் பெயர் தெரிந்திருந்தால் கூட, ஒரு வேளை இந்தப் பையனாய் இருப்பானோ என்று அவரிடம் கேட்டு அறிந்திருப்பேன். அதற்கும் வழியில்லையே? அப்படியொரு சந்தேகம் வந்தால்தானே கேள்வி?
உங்கப்பா பேரு என்னப்பா? – குறிப்பாய் என்னவோ இப்போது மனதில் தோன்ற கேட்டு வைத்தேன்.
காந்திமதிநாதன் சார்…. – என்றான் அவன்.
யாரு…இந்தப் புஸ்தகமெல்லாம் விக்கிறாரே…அவரா….?
ஆமா சார்…..அவரேதான்….
பார்த்தால் ஆள் ரொம்பத் தளர்ச்சியாய்த் தெரிகிறார். ரொம்ப வயசாகிக் கல்யாணம் முடித்திருப்பாரோ?
நேற்று என் வீட்டில் அவன் பேசியதும், கூலியை அதிகம் வாங்க மறுத்ததுமான அவனது நியாய உணர்வு எனக்குள் வந்து உறுத்தியது. அவன் தந்தையை இப்போது நினைக்க வைத்தது. சில சின்னச் சி்ன்னச் செயல்கள்கூட வாழ்க்கையில் மனிதனை அடையாளப்படுத்துகின்றன. அவை போதும்…ஒருவனைக் கணிக்க..! அடிப்படையான ஒழுக்கமும் உழைப்பும் என்பது ஒருவனிடம் அழுத்தமாய்ப் படிந்து விட்டால், வாழ்க்கையில் என்ன கஷ்டப்பட்டாலும் கூட அது அவனைச் சிதைக்காது சீராய்க் கொண்டு செலுத்தி, உயரத்தில் கொண்டு நிறுத்தா விட்டாலும், ஒரு நிலையான ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொடுத்து விடும் என்பது திண்ணம். அந்தப் பையனைப் பற்றி அந்தக் கணத்தில் அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. அது அவன் தந்தையின், அந்தப் பெரியவரின் மீது எழுந்த மரியாதை.
காந்திமதிநாதன் என்ற அந்தக் காந்தீயப் பெரியவரின் புதல்வன் ஒரு நாள் அந்த மேன்மை நிலையை எய்துவான் என்று எனக்குள் தீர்க்கமாய்த் தோன்றியது.
![]() |
1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க... |