அடிச்சுவடு




(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீயுமா சுந்தரேசன்?’ அவர் ஆங்கிலத்தில் தான் கேட்டார் என்றாலும், ஆணி அறைந்தாற்போல அது அவ னது உள்ளத்தை ஊடுருவத் தவறவில்லை.
அவனுக்கும் அவருக்குமுள்ள பரிச்சயம், அதற்கும் மேலாக அவர் அவன்மீது வைத்திருந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கையை பெறுவதற்காக இந்த நிமிஷம்வரை அவருக்கு விசுவாசமாக உழைத்த அவன் என்று எவ்விதம் ஒன்றின் விளைவில் உருவான ஒன்று பொய்யாகி, போலித் தோற்ற மாகி, அடித்தளத்தை ஆட்டுவிக்கும் அவநம்பிக்கையுமாகி விட்டதால், ஏற்பட்ட
ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவாக அவர் அப்படிக் கேட்பதை அவனால் விளங்கிக் கொள்ள முடி கிறது.
அவர் ஓர் அதிகாரி, ஆயிரம் ஏக்கர் கொண்ட தேயிலைத் தோட்டத்தினை நிர்வகிக்கும் பெரியதுரை, அவருக்குக் கீழ், ஆரம்பத்தில் அவரது அனுதாபத்தையும் அதன் பின் அவரது அன்பையும் அதற்குப் பிறகு அவரது நம்பிக்கையும் சுவீக ரித்து அதே தோட்டத்தில் பெரிய கிளாக்கராக கடமையாற்று பவன் அவன்.
அந்தக் கடமையின் பளு மகத்தானது, மகோன்னத மானது.
அந்த மதிப்பையும் மகோன்னதத்தையும் அவன் பாழ் படுத்தி விட்டதாக பாவித்துக் கொண்டுதான் ஹட்சன் அவ னிடம் அப்படி ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்.
பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு. இருபதுவயதே நிறைந்த இளைஞனாக, எதிலும் ஒரு தீர்க்கமான சிந்தை இல்லாத வாலிபனாக, அவருக்குக் கீழ் குமாஸ்தாவாக பணியாற்ற ஆரம்பித்த காலத்துக்கு அவரது கேள்வி அவனை நினைவு இழுத்துச் சென்றது.
அந்த ஆரம்ப காலத்தில் அவருக்கு அவன் பயந்ததை விட அப்போதிருந்த பெரிய கிளாக்கருக்கு பயந்துதான் அதிகம். ஆர்தர் என்றால் அந்த தோட்ட உத்தியோகத்தர் களே நடுநடுங்கினர்.
பெரிய கிளாக்கர் ஐயா வீட்டுப் படியை விட்டு இறங்கி வெளியே கிளம்புகிறாரென்றால் எதிரே நடந்து வர யாருக் கும் துணிவு பிறப்பதில்லை.
ஆங்கிலத் துரைமார்களின் அந்தரங்க காரியதரிசியாக விளங்கிய அவர்கள் தோட்டத்தைப் பொறுத்தமட்டில் அவர் களின் ஏக பிரதிநிதியாக அதிகாரம் பண்ணினர்.
அவர்களின் ஆற்றலும் திறமையும் ஆங்கிலத் துரைமா ரின் ஆடம்பர பிரியத்தை ஊக்குவித்தன. அந்த ஊக்குவிப்பில் தோட்ட நிர்வாகி’ என்ற பெயரில் கையெழுத்திடுவதோடு தங்களின் கடமையைச் சுருக்கிக் கொள்ள அவர்கள் பழகிப் போனார்கள். அவர்களின் அந்தப் பழக்கமே பெரிய உத்தி யோகத்தர்களின் மூலதனமாயிற்று.
ஆர்தர் என்ற ஒரு தனிமனிதரால் தோட்டத்திலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அத்தனை மனிதர்களும் ஆடினார்கள்.
அவர் குரலிம் கோபம் ஏறினால் அவர்கள் வாழ்வில் துன் பம் ஏறும், துயரம் சேரும்.
அவர் முகம் சுளிக்கத் தொடங்கினால் அவர்கள் வாழ்வே சுருங்கத் தொடங்கும்.
அவர் மனம் வைத்தால் அவர்கள் வாழ்க்கையே மாய்ந்து போகும்.
அந்த ஒரு தனி மனிதனின் திருப்தியில், தங்கள் வாழ்க் கையை அமைத்துக் கொள்ளும் போலி முயற்சியில் அத்தனை பேரும் விரும்பியோ விரும்பாமலோ ஈடுபடலானார்கள்.
இளம் கன்றின் துள்ளலோடும், ஆரவாரம் மிகுந்த வெளி உலகின் அனுபவம் மிகாதால் ஏற்படுகிற மிரட்சி யோடும் வாழ்க்கையை ஆரம்பித்திருந்த அவனுக்கு அவரது போக்கு பயத்தை அளித்தது.
அவரது செல்வாக்கும், அச்செல்வாக்கின் தாக்குதலுக் காட்பட்ட பாமரத் தொழிலாளர்களும், அந்தரங்கத்தில் அவரை வெறுத்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளத் தயங்கும் படித்த உத்தியோகத்தர்களும் அவனுக்குப் புரியாத புதிராக விளங்கினர்.
அந்த புதிர் நிறைந்த வாழ்க்கையை, விளங்கிக் கொள் ளவும், அதற்கேற்ப அவனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் அவனுக்குப் பல மாதங்கள் பிடித்தன.
காட்டாறாக, ஓடிய கால வெள்ளத்தில், ஆங்காங்கே பொங்கிப் பிரவகிக்கும் நுரை கூட்டமாய் அவன் உள்ளத்தில் பல உணர்ச்சிகள் பொங்கிப் பிரவகித்தன.
அவர் லீவில் இருந்து வந்ததும் யாருக்குச் சீட்டுக் கிழிக் கிறாரோ என்ற அச்சத்தில், முன்னிலும் பவ்வியமாக நடக்க ஆரம்பிக்கும் பிரயத்தனம் செய்யும் மனிதர்களின் அசாத்திய முயற்சி தொடங்கும். அப்படி நடக்கத் தெரியாத அப்பாவி கள் அகப்பட்டுக் கொண்டு விழிக்கவேண்டியதுதான்.
கணேசனுக்கும் அப்படித்தான் நடந்தது.
பயமும் மிரட்சியும் நிறைந்த உள்ளத்தோடும், எண்ணு வதை தவறாகவும். எழுதுவதை பிழையாகவும், பேசுவதை தப்பாகவும் பண்ணி சுற்றி அமர்ந்திருக்கும் சக குமாஸ்தாக் களின் கேலிப் பொருளாக அவன் தனித்து நிற்கையிலும், ஆர்தர் என்ற பெரிய கிளாக்கரின் மிடுக்கான ஏவலுக்கு அஞ்சி நடுங்குகையிலும், அனுதாபத்தோடும் ஆதரவோடும் அவனை நோக்கி, கனிவான சொற்களால் அவனுக்குத் தைரியம் ஊட்டுபவர் அந்த கணேசன்தான்.
தனது வேலையில் அசாதாரணமான பாண்டித்தியம் அவருக்கிருந்தது. வேகமும் சுறுசுறுப்பும் அவருக்கு இலா வண்யத்தோடு கைவந்திருந்தன. அவைகளின் கூட்டுச் சேர்க்கையாக அவரிடம் நம்பிக்கையும் துணிச்சலும் துளிர் விட்டிருந்தன.
ஆர்தர் என்ற வார்ப்பிக்கும் பின் மிருக தாக்குதலை அவர் ஒருவரால்தான் ஆபிஸில் தாக்குப்பிடிக்க முடிந்தது.
அந்த ஒன்றினாலேயே, அவரோடு நெருங்கிப் பழக அவனுக்குப் பிடித்திருந்தது-
ஆபீஸ் முடிந்த கையோடு அவருடனேயே சென்று அந்தி கருக்கல் வரை அவர் வீட்டிலேயே பேசிக் கொண்டிருப்பது அவனுக்குப் பழக்கமாகி விட்டது.
“சுந்தரம் நீங்கள் வயதில் மிகவும் இளைஞர், உங்களை விட எனக்குப் பதினெட்டு வயது அதிகம். இந்த ஒரு தகுதியே உங்களுக்குப் புத்தி சொல்ல எனக்குப் போது மானது” என்று சொல்லி அவர் இலேசாக சிரிப்பார். அவனும் பதிலுக்கு ஒரு புன்முறுவலை உதிர்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.
“சுந்தரம், உங்களை எனக்குமிகவும் பிடித்திருக்கிறதின்ற காரணம் தெரியுமா உங்களுக்கு?”
ஒரு நாள் திடீரென்று அவர் அவனிடம் இப்படி கேட் டார். அவனுக்கு எப்படித் தெரியும்? அவன் விழித்தான்.
“நீங்களும் தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தான்” அவராகவே தொடர்ந்தார்.
“என்னுடைய எண்ணங்கள் உங்களைக் காணுகையில் மேலும் மேலும் வலுப்பெறுகின்றன. புதியதோர் உத்வேகம் என்னிடம் எழுவதற்கு நீங்கள்தான் காரணகர்த்தா, அவர் உணர்ச்சிவசப்பட்டார்.
“என்னில் வளர்ந்திருக்கின்ற சிந்தனைகளின் உயிர் பெற்ற உருவமாக நீங்கள் இருக்கிறீர்கள். என் அனுதா பத்தை சுவீகரித்து, ஆவேசக் கனலை என் உள்ளத்தில் எழுப்பிவிட்ட பரிதாபத்துக்குரிய சமுதாயத்தில் ஊறித் திளைத்தவர் நீங்கள்.
“பயந்து, பயந்து, பாழாய்ப் போனவர்கள் அவர்கள். பயப்படுவதையே பாரம்பரியச் சொத்தாக்கிக் கொண்டு விடு அதனாலேயே, தங்கள் பாமரத் தன்மையினின்றும் படாது முடங்கிப் போனவர்கள் அவர்கள் அவர் மேலும், இவ்விதம் கூறினார்.
அவரது சொற்கள் தெரிந்து தொடுத்த அம்பாக அவ னில் பாய்ந்தன. அவைகளுக்கு அவன் உள்ளத்தின் ஒரு மூலையில் உறங்கிக் கிடந்த உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் மாயசக்தி இருந்ததை அவன் உணர்ந்தான்.
நாளாக ஆக அந்த உணர்ச்சிகள் அவனில் ஊற்றெடுத்துப் பிரவகித்து உருவெடுத்து நடமாடத் தொடங்கின.
ஆர்தர் அவனை நன்றாக விளங்கிக் கொண்டார். அவன் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனிக்கத்
கவனிக்கத் தொடங்கினார். அவனைத் தூண்டும் சக்தியாக கணேசன் இருப்பதை அவர் தெரிந்து வைத்துக் கொண்டு கொக்காகக் காத்து நின்றார், அவர்கள் இருவரையும் கொத்தித் தீர்ப்பதற்கு.
ஆபீசில் அவர்கள் விடும் ஒவ்வொரு சிறிய தவறையும் பூதக்கண்ணாடி போட்டுத் தேடிப் பிடித்து பெரிதாக்கி அமர்க்களப்படுத்த ஆரம்பித்தார்.
கணேசன் மீது புகார்கள் நிறைந்தன, ஆபீசில் அவர் வேலையில் கவனம் செலுத்துவதில்லை என்று. தொழிலாளர் களிடம் பணம் வாங்குவதாக பிராதுகள் வேறு வந்து குவிந்தன.
பொய்யாய்ப் புனைந்த புகார்கள் சோடனைத் திறமை யாலும் அவற்றைச் சோடிந்தவர்களின் திறமையாலும் மெய்யாய் உருவெடுத்து கணேசனை வேலையினின்றும் நீக்கும் முடிவுக்கு ஹட்சனை வரவழைத்தன.
கணேசனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட அந்த அநீதிச் செயலுக்காக ஆபீசில் கவலைப்படாதவர்கள் ஒருவருமில்லை என்றாலும் அவனுக்காக பரிந்து பேசும் தைரியம் யாருக்கும் வரவில்லை.
தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக திறமைசாலி யான குமாஸ்தாவையே வெளியேற்ற ஆர்தர் முடிவு எடுக் கிறாரென்றால் அவனைப் போன்றவர்கள். எத்தனை விழிப் போடு இருக்க வேண்டும் என்பதை அவன் உணர்ந்தான்.
இப்படி நடக்கிற செயல்களை இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிப்பது?
குமையும் உள்ளத்தோடும், கொதித்தெழும் உணர் வோடும் அவன் போராடினான்.
செயல்களின் விளைவுகளை எண்ணிப் பார்க்கத் தெரி யாத காரணத்தால் – அவ்விதம் எண்ணிப் பார்க்கத் தெரியாத காரணத்தால் மட்டுமே, இருப்பதை இல்லாததாகவும் இல்லாததை இருப்பதாகவும் அல்லது இரண்டையுமே அலட்சியப் படுத்திவிடும் துணிச்சல் படித்தறியாத பாமரத் தொழிலாளர்களிடம் குவிந்திருப்பதை அவன் உணர்ந்தான்.
அவர்களின் முரட்டு துணிச்சலை, தங்களுக்குக் சாதக மாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள்— அசைக்க முடியாத பலத்தோடு மேலும் புதிய சக்தி பெறுவது நடை முறை சாத்தியமாகி விடுகிறது.
தீடீர் திடீர்ரென்று தோன்றுகிற இயக்கங்கள் அபரிமித மான வளர்ச்சியும் அந்த மக்களின் சக்தியால் விளைந்தவை தாமே.
ஆர்தர் என்ற அந்த தனி மனிதன் ஆலமரம் போல அகன்று நின்று அதிகாரம் காட்டுவதும் அந்த சக்தியின் பகைப்புலத்தால் தான்.
அறியாமையின் பாற்பட்ட தொழிலாளர்களின் மனக் கண்கள் திறக்கப்பட வேண்டும். அநீதியும், அநியாயமும் தங்களுக்கு எதிராக இழைக்கப்படுகிறதென்ற உண்மையை அவர்கள் உணர்ந்தே ஆக வேண்டும். தூங்கி கிடக்கும் அவர்களின் அசுர சக்தியைத் தட்டி எழுப்பி விடுவதன் மூலமே, தூங்கத் தொடங்கும் மத்தியதர வகுப்பினரைத் துயிலெழுப்ப முடியும்.
இந்த முடிவுக்கு வந்த நாள் தொட்டு இரவு பகலாக அவன் கண் விழித்து உழைக்கத் தொடங்கினான்.
தோட்டத்து ஆபீஸ் என்பது ஓர் இரகசிய சங்கம் போன் றது. ஆபீஸில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள். தொழிற் சாலைகளிலும், மலைகளிலும் பணியாற்றுகின்ற சக உத்தி யோகத்தர்களோடு நெருங்கி பழகாமைக்குக் காரணமே இந்த இரகசியத்தைக் காப்பாற்றத்தான். போனஸ், சேம லாபநிதி, பென்ஷன், நஷ்டஈடு, பேறுகால மருத்துவப் பணம், அட்வான்ஸ் என்று கூறப்படுகின்றவைகளெல்லாம் எப்படி வருகின்றன என்பதை தொழிலாளர்கள் அறிந்து கொள்ளாத வரைக்கும் ஆபீஸ் இரகசியத்தைக் கட்டிக் காக்கும் ‘ஆர்தர்’ போன்றவர்கள் ஆலம் விருட்சமாக என்ன, ஆலம் தோப்பாகவே, வளருவார்கள்.
அவன் துணிந்து செயற்பட்டான்.
ஆர்தர் திகைத்துப் போனார்; ஹட்சன் துரை மலைத்துப் போனார் – அறுபதாயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொழி லாளர்களுக்கான பென்ஷன் பணம் மோசடி செய்யப் பட்டிருந்தது.
மலைப்புக்குக் காரணம் எப்படி நடந்ததென்று.
திகைப்புக்குக் காரணம் எப்படி தெரிந்ததென்று.
இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.
ஓடிச் செல்கிற ஆறு ஒரே அடியாக திசை திரும்பி விடுவ தில்லை.
ஆனால், மனித வாழ்க்கையில் இதற்கு மாறாக எல்லாமே நடக்கின்றன. ஆர்தர் அசந்து போனார்.
ஐம்பத்தைந்து வயது வரையிலும் தாங்கள் உழைத்ததின் ஒரு பயனாக, தங்களுக்குக் கிடைக்க விருந்த பணத்தைச் சுருட்டிக் கொண்டவனையும் தாம் இதுவரை கையெடுத்துக் கும்பிட்டோம் என்று அவர்கள் தங்கள் மீதே ஆத்திரப்பட்டார்கள்.
ஆர்தர் நிலைமையை விளங்கிக் கொண்டார். தொடர்ந்து பணமும் புகழும் கிடைக்காவிட்டால் பரவா யில்லை. இருக்கும் பணமே எஞ்சியிருக்கும் வாழ்க்கையை ஓட்ட போதும் என்று அவர் ஓய்வெடுத்துக் கொண்டு போயே விட்டார்.
பாவம், எப்படி இருந்தவர், இப்படி ஆகிவிட்டார் என்று பச்சாத்தாபப்பட யாருமில்லை.
அவர் செய்த தில்லுமுல்லுகளுக்கு உடந்தையாக இருப்ப தன் மூலம் தங்கள் திறமையின்மையை மூடிமறைத்துக் கொண்டிருந்தவர்கள் அவரே போன பின்னர் நம்மால் ஆவ தென்ன என்று ஒவ்வொருவராக போக ஆரம்பித்துவிட்டனர். அப்போதுதான் “ஹட்சன்” அவனுக்குப் பதவி உயர்வு கொடுத்தார்.
“இத்தனை இளவயதில் இப்படி ஒரு திறமைசாலியை நான் கண்டதில்லை” என்று முதல்நாளே அவர் அவனிடம் ஆங்கிலத்தில் புகழ்ந்தார்.
“தாங்யூ சேர்” என்று அவருக்கு அவன் பதிலளித் தான். அதற்காகவே காத்திருந்ததைப் போல அவர் தொடர்ந்தார்.
“பெரிய கிளாக்கர் என்பவன் தோட்டத்தில் “கிங் மேக்கர். புத்தியாயிருந்து பிழைத்துக் கொள்” என்று அவர் சொன்னதன் அர்த்தம் அவனுக்கு நன்றாக விளங்கியது.
சட்ட பூர்வமாக கிடைக்கிற சம்பளத்தோடு, சட்டம் இரகசியமாக வழி வகுத்துக் கொடுத்த கிம்பளமுமாகச் சேர்ந்துதான் பெரிய கிளாக்கர் பதவிக்கு வரும் எவரையும்- அவர் எத்தனை பெரிய பிள்ளை குட்டிக்காரராக இருந்தா லும், கார் வாங்கவும் பங்களா கட்டவும் செய்து விடுகிறது.
ஒரு தனி மனிதனுக்குக் கிடைக்கிற அளப்பரிய இத்தனை வழிகளும் வசதிகளும் அனுபவங்களும்தான் அந்த மனிதனின் அழிவுக்குக் காரணமாயமைந்து விடுகின்றன.
ஆர்தரின் வாழ்க்கை அவன் கண் முன்னே தோன்றி நிழலாட்டம் போட, ஹட்சனின் வார்த்தைகளை நினைத்து அவன் சிரித்துக் கொண்டான்.
தொழிலாளர்கள் “ஸ்ட்ரைக்” பண்ணி விட்டார்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து,
அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய தொழிற் சங்கங் கள் பெரிய மகஜர் ஒன்றையே தயாரித்து அனுப்பி இருந்தன. இது போன்ற சம்பவம் கிடைக்கும் போதுதானே.
தன் பலத்தை வளர்த்துக் கொள்ள அதற்கு வாய்ப்புக் கிடைக் கிறது.
ஹட்சன் அவனிடம் வந்தார்.
சுந்தரேசன் கையை விரித்து விட்டான். அவனது பலம் அவனுக்குத் தெரிந்தது.
ஹட்சன் கொழுந்துவிடும் தீ ஜுவாலையைப்போலானார். வயோதிபத்தால் வெளுத்திருந்த அவரது முகம் இரத்தச் சிவப்பேறி கனன்றது.
அவனை வேலையிலிருந்தே விலக்கிவிடுவதாக அவர் பயமுறுத்தினார். அதற்காக அவன் கொஞ்சங்கூட கவலைப் படவில்லை.
உண்மையில், அவர் அந்த முடிவுக்கு வருவார் என்பதை அவன் எதிர்பார்த்தான்.
ஆர்தரின் அட்டூழியத்தை வெளிப்படுத்துவதற்காக அவன் எத்தனை சிரமப்பட்டிருக்கிறான்? துரையின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அந்தச் சிரமத்தின் பயனை அவனே அழித்து விடுவதா?
“நீங்களும் தொழிலாளர் வகுப்பைச் சார்ந்தவர். பயந்து பயந்து பாழாகி போனவர்கள் அவர்கள். பயப்படு வதையே தங்களின் பாரம்பரியச் சொத்தாக்கிக் கொண்டு தங்கள் பாமரத் தன்மையினின்றும் விடுபடாது முடங்கி போனவர்கள் அவர்கள்” என்ற ஆர்தரின் குரல் அவனது செவியில் உரத்து ஒலித்தது. அவன் நெஞ்சு விம்மிப் புடைத்தது.
அவன் நிதானமாகச் சிந்தித்து தைரியமாகச் சிரித்துக் கொண்டான்.
அடுத்தநாட் காலை ஹட்சன் தன்னுடைய ஆபீஸ் அறைக்குள் நுழைந்து ஐந்து நிமிடங்கள் கழித்து, அவனது மேசையிலிருந்த டெலிபோன் மணி ஒலித்தது.
முதல் நாள் தான் கூறியது தவறு என்பதை ஹட்சன் சுந்தரேசனுக்குத் தெரிவித்து அதற்காகப் பச்சாத்தாபப் படுகிறார்.
பத்தடி இடை வெளிதானிருக்கும், சுந்தரேசனது ஆபீஸுக்கும் பெரிய துரையின் ஆபீஸ் அறைக்கும். இரண்டையும் இடைமறிக்க. ஒரு கண்ணாடிச் சுவரென்றால் இருவரும் பேசிக் கொள்ள டெலிபோன் வசதி.
இந்த ஏற்பாட்டின் அர்த்தம் இன்றுதான் அவனுக்கு நன்றாகத் தெரிகிறது.
எதிரே, நேரில் நின்று முகத்தைப் பார்த்துச் சொல்லத் தயங்குகிற ஒன்றை எத்தனை சுலபமாக்கி விடுகிறது இத்தகைய தொடர்பு.
சுந்தரேசன் மனதிற்குள்ளாகவோ சிரித்துக் கொண்டா லும் அவனது முகத்தில் பொங்கிவிரிகிற புன்சிரிப்பால் இதழ் விரித்துச் சிரிக்கிற இதய மகிழ்ச்சி வெளிப்படவே செய்கிறது.
அதில்தான் எத்தனை கம்பீரம்!
– 1970
– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.