அங்கலாய்ப்புகள்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெளிச்சச் சருகின் உதிர்வு;
இரவுத் தளிரின் முகிழ்ப்பு:
பகல் பொழுதின் மரணகாலம்.
வீதி விளக்குகள் கண்முழுகிக் கிடக்கின்றன.
ங்கா ! ங்கா! ங்கா!
குழந்தையின் வீறல்; ஓங்கரிப்பு ஓயவில்லை. கால்களை உதைத்து பிஞ்சுக் கைகளை முறுகி, பிசைந்து அலறுகின்றது.
வயிற்று வலி!
ராஜம் குழந்தையை அணைத்துக்கொண்டு வீதிக்கு ஓடிவந்தபோது ‘சள சள’வென மழை.
விளக்கடியில் ஒதுங்கினாள்.
விளக்கு எரிய தொடங்கியிருந்தது.
வானத்தை நோக்கினாள்; மஞ்சளான விளக்கொளி முறைப்பதாகப் பிரமை.
கடூர மழை.
புயல்போல் காற்று.
டொக்டரிடம் போக வேண்டும்; யோசனையோடு நிற்கிறாள்.
மழை வீழ்ச்சியைக் கண்டு மலைத்ததோ, என்னவோ குழந்தையின் அலறலில் ஓங்காரம் நழுவுகிறது. மழையின் ஊழிக்கூத்து அழுகையின் அமுக்கம்.
ரங்கன் கைதேர்ந்த எலக்ரிஷனாக இருக்கக்கூடும். அதற்காக அவன் என்ன தவறு புரிந்தாலும் மின்சாரப் பிசாசு பொறுத்துக் கொண்டிருக்குமா?
அன்று:
ராஜம் பிரசவ வேதனையில் நெளிந்தபொழுது, வைத்தியசாலையில் சேர்த்துவிட்டு தொழிற்சாலைக்குள் நுழைவதைத் தவிர அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.
லீவுகள் முடிந்துவிட்டன.
வேதனை, யோசனை, ஏக்கம் அனைத்தும் சடசடக்கும் தீப்பிழம்பாகத்தான் தொழிற்சாலைக்குள் நுழைந்தான்.
லீவு கிடைக்காத துக்கம்.
ஆனால்..!
கண்முன்னே மனைவி ராஜமும், அவள் வயிற்றுக் குள்ளிருந்து பிரளய உருட்டல் உருட்டிக்கொண்டிருக்கும் பாலகனும் வேதனை சுகானுபாவம் கொடுத்துக் கொண்டிருக்க…
மின்சார வயரில் கைவைத்தான்.
பிரதான சுவிற்ச்சில் கோளாறு. எந்தவித முன் பாதுகாப்புமின்றிக் கைவைத்துவிட்டான்.
கடவுளே!
‘படா’ரென பிடறியில் ஓர் அறை. மின்னலின் வேகம். ‘சறே’லென சுழன்று, வயர்களுடன் இறுகிப்போனான். பிரிக்க முடியாத தழுவல்.
மின்சாரத்தின் மரணத்தழுவல்.
மரணதேவனின் வருகை மின்னலையும் மிஞ்சும் வேகமாக அல்லவா அமைந்துவிட்டது. ‘ஜீவப் பறவை’ சிறகடித்து மாயமாகிவிட்டது.
ராஜமும் குழந்தையும் தனிமரமானார்கள்.
பெற்றவள் மார்பை உறிஞ்சி உறிஞ்சியே குழந்தை ஆறு மாதங்களைக் கடத்திவிட்டது. தாயின் பால் போதவில்லையோ, என்னவோ. தவழ்கின்ற மழலை கையில் என்னென்ன கிடைத்ததோ அனைத்தையும் வாயில் போட்டு சுவைத்து விழுங்கியது.
இன்று எதனையோ சப்பிவிட்டது. பொறுக்கவொண்ணா வயிற்றுளைவில் தொண்டையைக் கிழிக்கிறது.
அவள் என்ன செய்வாள். கண்கலங்கி கைபிசைந்து உடல் தளர்ந்து வியர்வை பெருகி நிற்கிறாள்.
“ஏன் புள்ளே, கொழந்தைக்கு என்ன?”
பங்கஜம் கிழவி கேட்கிறாள். பக்கத்து வீட்டு வாசலில் பாக்கை இடித்துக்கொண்டிருக்கும் அவளிடமிருந்து கேள்வி புறப்படுகிறது.
மகா தொணதொணப்புக்காரியாயிட்ட ஒரு கேள்வியோட முடிந்து விடுமா என்ன?
“புள்ளய பொறமட்டுந்தான் இந்தக் காலத்து புள்ளைங்களுக்குத் தெரியும். ஒரு பச்சப் புள்ளைக்கு எப்படி பால் குடுக்கிறது, என்னென்ன கைமருந்துகள் கொடுக்கிறது ஒன்னும் தெரியாதே. தாயும் தகப்பனும் வாணாம்னு ஒரு புருஷன தேடுவிங்க. பட்டுன்னு ஒரு ஒரு புள்ளய பெத்துக்குவிங்க. அத வளர்க்க…..” கிழவி சூள்கொட்டுகிறாள். பெரிய தோரணையில் அங்கலாய்த்துக் கொள்கிறாள்.
சுடு சொற்கள்.
உடை நழுவிக் கீழே விழ நிர்வாணமாகி நிற்பதாக பிரமை. ராஜத்தை அவமானம் பிடுங்கித் தின்கிறது.
‘ஐயோ! அம்மா! அம்மா!’
கிழவி அவள் வாழ்க்கையை அல்லவா சுட்டிக்காட்டி பொசுக்குகிறாள்.
நெஞ்சு வேகுகிறது.
கண்களில் நீர் மலர்கள் புஷ்பித்து சொரிகின்றன. ஒரு கவளம் சோறு தின்று ஐந்து நாட்களாகின்றனவே. மார்பகங்களென்ன வற்றாத சுனைகளா… சதா பால் சுரக்க…
அவள் வறுமை அவளுக்கு.
பல தலைகள் வாசலில் தோன்றுகின்றன. உருட்டலான கண்களும், அங்கலாயிப்பான முணு முணுப்புகளும்…
என்ன பெண்கள் இவர்கள்…?
அடடா, எல்லாருமே சொல்கிறார்கள்: ‘அவளுக்கு குழந்தை வளர்க்கத் தெரியாது. பாசமில்லாத மலடி’ என்று. குழந்தை வளர்ப்பைப் பற்றி ஒவ்வொருவரும் வாயால் புத்தகம் எழுதித் தள்ளினார்கள். கண்களில் முள் தைத்த உணர்வில் துடி துடிக்கிறாள். கைமருந்து கைவசமில்லை. தனிப்பட்ட வைத்தியர் வீதிக்கு அப்பாலிருந்தாலும் கையில் பணமில்லை. தர்மாஸ்பத்திரிக்குப் போகலாம். ஐந்து மைல் போகவேண்டுமே.
வாசலில் அங்கலாய்ப்புகள். அவளைக் கரிச்சிக் கொட்டும் வார்த்தைகள். மனதில் பொங்கிப் பிரவகித்த சங்கடங்களுடன் ‘சறெ’லென குழந்தையைத் தூக்கி அணைத்துக்கொண்டு வெளிக்கிளம்பினாள்.
‘சளசள’ வென மழை.
இருள் செறிய, வீதி விளக்கின் மங்கலான வெளிச்சம். நிமிடங்கள் மரணிக்க, மழை மூச்சடங்குவதாயில்லை.
விளக்கடியில் நின்று தெப்பமாகிவிடவே, ‘கிடுகிடு’வென நடுங்கும் உடலோடு ஓடோடிச் சென்று, பஸ் ஸ்டாண்டில் ஒடுங்கிக் கொண்டாள்.
குடியிருப்பிலிருந்து அவள் வந்த குறுகலான பாதை தெரிகிறது.
சங்கடங்கள் நர்த்தனமாடிய அவள் கண்கள் சில கணங்கள் அங்கே தரித்தன.
தடதடவென ஓடி வருகிறார்கள். கையில் ஒரு குழந்தை. அது நனையாதவாறு இன்னொருவர் குடை பிடிப்பு.அங்கு ஏதோவென ஒப்பாரி வைத்துக்கொண்டு ஒரு பெண்கள் கூட்டம். அடடா, கிழவி பங்கஜம்கூட மாரடித்துக் கொண்டு….
‘டாக்க்ஷி,டாக்ஷக்ஷி’ என பல குரல்கள் ஒரே ஸ்தாயியில்.
ராஜம் பிரமித்தாள். அவள் குழந்தைகூட அதிர்ச்சியுடன் அழுகையை நிறுத்திக்கொண்டது.
“என்ன பாட்டி! என்ன நடந்தது?” ராஜம் பெண்கள் பரபரப்புடன் கிழவியைக் கேட்டாள். ஓஹோவென வாயிலடித்துக்கொண்டு கூட்டம் போட்டார்கள்.
அடடா! ராஜம் கேட்கக்கூடாத எதையோ கேட்டுவிட்டாள் போலும்…
“என்னடியம்மா; ஒன்னும் தெரியாம கேக்குறே? சிதம்பரத்துட புள்ள போத்தல் பால் குடிக்கற நேரத்துலே பொற ஏறிச்சி. குழந்த துடிக்காதா என்ன?”
கிழவி பெரும் அங்கலாய்ப்புடன் சொல்கிறாள். அவளுக்குப் பின்பாட்டுப் பாடுவதாக பல குரல்களின் ராக பிரலாபம்.
ராஜம் சிலையாகிப்போனாள். வயிற்றுளைவால் அலறித் துடித்த அவள் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது.
‘என்னம்மா கல்லாகிப் போனாய்? சிதம்பரம் யாரென்று நினைத்தாய். வட்டார மந்திரிட கையாள் இல்லியா? அவர் புள்ளைக்கு நாசிக்குள்ளே பால் ஏறலாமா?’
குழந்தையின் கண்பார்வை அம்மாவை நோக்கிக் கேட்டது.
– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க... |