ஆறடிக்கு மேல் நிலமேன்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 9,588 
 

உலகில் துன்பம் இல்லாமல் வாழவேண்டு மானால் ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசை குறையக் குறையத் துன்பம் குறையும் என்பது அறிஞர்கள் கருத்து. ஆனால் உலகில் மக்களுட் பெரும்பாலோர் ஆசைக்கு அடிமையாவதால், தந்நலக்காரர்களாகவும், பல பாதகச் செயல்களுக். குரியவர்களாகவும் மாறி உலக வாழ்க்கையைக் கெடுப்பதுடன், தாங்களும் கெட்டு ஒழிகின்றார்கள். ஆசையினால் ஏற்படும் அழிவை விளக்கவே உருசிய மூதறிஞர் தால்ஸ்தாய் பின்வரும் சிறு கதையைத் தீட்டியுள்ளார்.

பாலூர் என்பது தஞ்சை மாவட்டத்தில் உள்ள வளம் நிறைந்த ஒரு சிற்றூர். அதில் பல குடும்பத் தினர் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தனர். அக்குடும்பங்களுள் ஒன்று பொன்னப்பன் குடும்பம். பொன்னப்பன் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வேளாண்மை செய்து வருபவர்கள். பொன்னப்பன் தன் மூதாதையரைப் போன்று தானும் உழவுத் தொழிலையே செய்துவந்தான். அத்தொழில் செய்வதில் அவனுக்கு மிகுந்த பெருமை. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்பதை அவன் அடிக்கடி எடுத்துக் கூறுவான். அவ்வேளாண்மைத் தொழிலிலும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்னும் மூதுரையை மனத்திற்கொண்டு தனக்குக் கிடைக்கும் வருவாயில் மன நிறைவு கொண்டவனாய், எக்கவலையும் இல்லாமல் பொன்னப்பன் ‘இன்பமாய் வாழ்ந்து வந்தான்.

பொன்னப்பனுக்குச் சிறிதளவு நிலமே இருந்தது. அதில் நன்கு பாடுபட்டு உழைத்தான் பொன்னப்பன். அதில் விளைந்ததைக் கொண்டு, அவனும், அவன் மனைவி மாணிக்கவல்லியும் மக்கள் நால்வரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அக்குடும்பம் கவலையற்று, என்றைக்கும் இன்பம் நிறைந்து விளங்கியது.

மாணிக்கவல்லிக்கு ஒரு தமக்கை இருந்தாள். அவள் பெயர் மரகதவல்லி. அவள் வணிகர் ஒருவரை மணந்து நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். மரகதவல்லியின் கணவர் வாணிகத்தைச் சிறப்பாக நடத்தியபடியால் பெருஞ்செல்வம் திரட்டி இருந்தார்; அழகிய மாளிகை ஒன்று கட்டிக் கொண்டு வாழ்ந்தார். அதனால், மரகதவல்லியின் வாழ்க்கை ஆடம்பரம் நிறைந்ததாக இருந்தது.

மரகதவல்லி, சிற்றூரில் வாழும் தன் தங்கையைக் காண விரும்பி ஒரு நாள் பாலூருக்கு வந்தாள். தன்னைக் காண வந்த தமக்கையை மாணிக்கவல்லி அன்போடு வரவேற்றுச் சிறப்புடன் உபசரித்தாள்; சிறந்த முறையில் அவளுக்கு விருந்து வைத்தாள். தங்கையின் மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தைக் கண்ட மரகதவல்லி வியப்படைந்தாள். ஏனெனில் அந்தச் சிற்றூர் வாழ்க்கையும் சூழ்நிலையும் மரகதவல்லிக்குப் பிடிக்கவில்லை. அவ்வாழ்க்கை மிக எளிய, துன்பம் நிறைந்த வாழ்க்கையாக அவள் மனதிற்குப்பட்டது.

விருந்துண்டபின், ஓய்வாக அமர்ந்து தங்கையும்’தமக்கையுமாகப் பேசத் தொடங்கினார்கள். மரகத வல்லி தன் தங்கையைப் பார்த்து,

“மாணிக்கம், நானும் என் கணவரும் குழந்தை களும் நகரத்தில் இன்பமாக வாழ்கிறோம்; நல்ல சுவை மிக்க உணவுகளை உண்கிறோம். வகை வகை யான உடுப்புக்களை உடுத்துகிறோம். திரைப்படக் காட்சிகள், நாடகங்கள், இசையரங்குகள், நடனங்’ கள் முதலியன நகரத்தில் அன்றாடம் நடைபெறு கின்றன. நாங்கள் அடிக்கடி சென்று அவற்றைக் கண்டு மகிழ்கிறோம்; அவற்றிற்குப் போகாதநாட்களில் பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களுக்குச் சென்று நல்ல காற்றைப் பெற்று மெல்ல உலாவி மகிழ்கிறோம். பொதுவாக எங்கள் வாழ்வு இன்பம் நிறைந்ததாக இருக்கிறது” என்று கூறினாள்.

“அக்கா, இந்தச் சிற்றூரில், இந்தச் சிறிய குடிசை வீட்டில் நானும் என் கணவரும் குழந்தைகளும் மன நிறைவுடன் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றோம். எங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் கீரைவகைகளையும் அன்றாடம் புதிது புதிதாக பறித்துச் சுவையாகச் சமைத்து வயிறார உண்டு மகிழ்கிறோம். இந்தச் சிற்றூருக்கு ஏற்ற வகையில் உடுத்துகிறோம். எங்கள் வாழ்வு பார்வைக்கு எடுப்பாகத் தோன்றாது. எனினும் நாங்கள் சிறிதும் கவலையில்லாமல் இன்பமாகவே வாழ்கின்றோம் எங்களுக்கு எதிலும் மனக்குறையோ கவலையோ இல்லை அக்கா” என்று மாணிக்கவல்லி கூறினாள்.

“மாணிக்கம், இந்தச் சிற்றூரில் இந்தக் குடிசை வாழ்வையா இன்ப வாழ்வென்கிறாய்? இதனையா பெருமைப் படுத்திக் கொள்கிறாய்?” என்றாள் மரகதம்.

“ஆம் அக்கா, எங்களைவிட நீ சற்று எடுப்பாக வாழலாம். நாகரிகமாக உண்டு உடுத்தலாம். தேவைக்கு மேல் உங்களுக்கு வரவு வந்தாலும் எல்லாவற்றையும் செலவு செய்துவிட வேண்டிய நிலையை நகர வாழ்க்கை உண்டாக்கிவிடுகிறது. இன்றைக்குச் செல்வத்தில் புரள்பவர் நாளையே தங்கள் உணவுக்கு இரக்கும் நிலையுடைய வறியவர்கள் ஆகிவிடலாம். ‘ஆறு இடும் மடுவும் மேடும் போலாகும் செல்வம்,’ என்பது உனக்குத் தெரி யாதா? எங்கள் நிலை அப்படிப்பட்டதன்று. என்றும் ஒரே நிலை. பயிர்த்தொழில் பெருவருவாய் தரக்கூடிய தாயில்லை. என்றாலும், என்றும் நிலைத்து நிற்கக் கூடிய சிறிய வருவாயையாவது தவறாமல் அளித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் என்றைக்கும் செல்வந்தராக முடியாது. ஆனால் உண்ணவும் உடுக்கவும் எங்களுக்குப் பஞ்சமில்லை. அந்த வகை யில் எங்களுக்குத் தேவையானவற்றை நாங்கள் பெறமுடிகிறது. எங்கள் தேவையும் குறைவு; பெருவருவாயும் எங்களுக்கு தேவைப்படுவதில்லை. நாங்கள் எக்கவலையுமில்லாமல் இன்பமாக வாழ் கின்றோம். அதனால் பிணிகளும் எங்களை நெருங்கு வதில்லை. பிணியற்ற கவலையற்ற அமைதியான வாழ்வுதானே இன்பவாழ்வு?” என்றாள் மாணிக்கம்.

மரகதம் தன் தங்கை கூறியதைக் கேட்டு உரக்கச் சிரித்து விட்டு அவளைப் பார்த்து, “அப்படியா? மாணிக்கம்! கன்றுகளுடன், பன்றி களுடன், ஆடுகளுடன், மாடுகளுடன், உங்கள் வாழ்வு நடைபெறுகிறது. நாகரிகம் பண்பாடு என் பவற்றைப்பற்றி நீங்கள் கவலைப் படுவதில்லை. உன் கணவர் எவ்வளவுதான் பொருளீட்டினாலும், இந்தச் சிற்றூரில் வாழ்க்கை நடத்தும் வரையில், நீயும் உன் மக்களும் இங்குள்ள குப்பை கூளங்களிலும், மணற்குவியலிலும் எருக்குழியிலுந்தான் படுத்துப் புரண்டு முடிவில் சாகவேண்டும். இதனையா இன்ப வாழ்வு என்கிறாய்?” என்று கேட்டாள்.

“நீ கூறுவது போலத்தானிருக்கட்டும்! அதி லென்ன தவறு? எங்கள் வேலை கடினமானதாயிருக்க லாம்; வாழ்வு மேன்மையற்றிருக்கலாம். நாங்கள் நாள் முழுவதும் சேற்றிலும் சகதியிலும் குப்பையிலும் கூளத்திலும் பாடுபடுகின்றோம். ஆனால் எவருக்கும் தலை வணங்குவதில்லை. எங்களுக்குத் தேவைகள் மிகக் குறைவு. நகரில் வாழ்பவர்களுக்குத் தேவைகள் மிகப்பலவாம். எனவே, எங்கள் வாழ்வு ஆடம்பர மற்று படாடோபமில்லாமல் இருக்கிறது. பிறருக்குப் பணியவோ, உணர்ச்சி வசப்படவோ நேரிடாமல், அமைதியாக எங்கள் வாழ்வு நடை பெற்றுக் கொண் டிருக்கிறது. இதில் நான் முழு மன நிறைவு பெற்றிருக்கிறேன். இந்தச் சிற்றூர் வாழ்வை நான் மனமாரப் பெரிதும் விரும்புகிறேன். நகரவாழ்வு எனக்குப் பிடிக்கவில்லை. அது பயங்கர வாழ்வாக என் மனத்திற்குப் படுகிறது” என்றாள் மாணிக்கம்.

அடுத்த அறையிலிருந்த பொன்னப்பன் இவ்விருவரும் பேசிக் கொண்டதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். மரகதவல்லி கூறியவை அவன் சிந்தனையைத் தூண்டிவிட்டன. அவன் எண்ணம் எல்லாம் எங்கெங்கோ சென்றது.

“ஆம்; என் மனைவியின் தமக்கை கூறியவை யாவும் உண்மையே. நாங்கள் கடின உழைப்பாளிகள். சிறுவயதிலிருந்தே விழித்தது முதல் உறங்கும் வரையில் உழைத்து எங்கள் கைகளும் உடலும் கரடு முரடாகிவிட்டன. பகட்டாக உடுத்தவோ, பல்சுவையுண்டிகள் உண்ணவோ, கேளிக்கை -களில் ஈடுபடவோ வேடிக்கையாகப் பொழுதைக் கழிக்கவோ, எங்களால் முடியவில்லை. அதைப்பற்றி நினைக்கவும் எங்களுக்கு நேரமில்லை. நாங்கள் இளமையிலிருந்தே உழைப்பு ஒன்றையே கருத்திற் கொண்டு விழித்தது முதல் இரவு வரை உழைப் பதால், தீய எண்ணங்கள் எங்கள் மூளையில் எழ இடமில்லை. எங்களுக்கிருக்கும் ஒரே கவலை, இன்னும் முயன்று உழைக்க நிலமில்லையே என்பது தான். நன்றாக உழைப்பதற்குப் போதுமான நிலம் மட்டும் எங்களுக்கிருந்தால், எங்கள் வாழ்வில் துன்பமோ, கவலையோ எட்டிப்பார்க்கவும் இடந்தர மாட்டேன். என்ன செய்வது! நான் விரும்பும் அளவு எனக்கு நிலமில்லையே” என்று பொன்னப்பன் மெல்லக்கூறிக் கொண்டான்.

பொன்னப்பன் கூறியவை பிறருக்குக் கேட்க வில்லையே ஒழியத் துன்பத்தேவன் அவன் கூறியவற் றையும், அவன் மனைவி மாணிக்கம் அவள் தமக்கை மரகதவல்லியுடன் பேசிக் கொண்டிருந்தவைகளையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

“மாணிக்கவல்லி தன் சிற்றூர் வாழ்வைப்பற்றிப் பெருமை பேசுகிறாள். அவள் கணவன் பொன்னப்பனோ தனக்கு மிகுதியாக நிலமிருந்தால் என்னையே தன் வீட்டில் காலடி வைக்க விடமாட்டேன் என் கிறான். என்ன இறுமாப்பு; நல்லது நான் ஒருகை பார்த்து விடுகிறேன்! இவனுக்கு வேண்டிய நிலம்நிறைய இருக்குமாறு செய்கிறேன். அதன் மூலம் இவனை என் அடிமையாக்கி வீழ்த்துகிறேன்!” என்று அந்தத் துன்பத் தேவன் தனக்குள் கூறிக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றான். பாலூருக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பெரியவர் சிறிய தொரு மாளிகையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு பண்ணை இருந்தது. அவருக்கு மனைவி இல்லை. ஒரே மகன் நகரத்தில் மருத்துவக் கல்வி பயின்று கொண்டிருந்தான். அவன் விடுதி ஒன்றில் தங்கிப் படித்துக் கொண்டிருந்ததால் செலவு மிகுதியாயிருந்தது. எனவே பெரியவர் தம் சிற்றூர் பண்ணையை விற்றுவிட்டு நகரத்திற்குச் சென்று, மகனைத் தம் மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டு மென்று எண்ணினார்.

எனவே அப்பண்ணையார் தம் நிலபுலன்களை விற்க முயன்றார். அடுத்த ஊரார் அதை வாங்க ஏற் பாடு செய்து கொண்டிருப்பதாகவும் பாலூராருக்குச் செய்தி எட்டியது. அடுத்த ஊரார் அப்பண்ணையை வாங்கிவிட்டால், தங்களுக்குப் பெருந்தொல்லையாக இருக்குமென்று அவ்வூரார் எண்ணினர்.

அவர்கள் ஓர் ஆலமரத்தினடியில் ஒன்று கூடிப் பேசினர். அடுத்த ஊரார் கொடுப்பதைவிடச் சிறிது மிகுதியான தொகையைக் கொடுத்து, அந்தப் பண்ணையைத் தாங்களே வாங்கிவிடுவதென்றும், அதற்குத் தரவேண்டிய தொகையைத் தாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொடுப்பதென்றும் முடிவு செய்தனர். இந்த ஊரார் செய்த முடிவை அந்தப் பண்ணையாரிடம் கூறிய போது அவர் அதற்கு இணங்கினார்.

பாலூரார் தனித்தனியே அந்தப் பண்ணையின் நிலங்களைப் பிரித்து அவரவர்கள் பண நிலைக்கேற்றவாறு வாங்கிக் கொள்ளலாம் என்று பாலூரார் முடிவுசெய்தனர். இந்த ஏற்பாட்டை அந்தப் பண்ணையாரும் ஏற்றுக் கொண்டார். மேலும் ஊராருட் சிலர் ஐம்பது காணி, அறுபது காணி என்று நிலத்தைப் பிரித்து விலைபேசி வாங்கி ஒரு பாதிக் கட்டணத்தை அப்பொழுதே செலுத்திவிட்டு, மறுபாதியைச் செலுத்த ஓராண்டுக் காலத் தவணை பெற்றுக் கொண்டனர்.

பொன்னப்பன், தம் மனைவியுடன் இதுபற்றிக் கலந்தாலோசித்தான். இருபது காணி நிலமாவது தாங்கள் வாங்கியேயாக வேண்டும் என்றும், இல்லை யென்றால் பிழைப்புக்கே பஞ்சம் வந்து விடும் என்றும் அவன் தன் மனைவிக்கு எடுத்துரைத்தான். அவள் அதற்கிணங்கினாள். பொன்னப்பன் தன் மைத்துனனிடம் சிறிது தொகை கடன் வாங்கியும் தம்மகனை ஓரிடத்தில் வேலைக்கு அமர்த்தி அம் முதலாளியிடம் பையனுக்குரிய ஓராண்டுச் சம்பளத் தொகையை அச்சாரமாகப் பெற்றும், வேறு சில வகைகளில் முயன்றும் முழுத் தொகையைத் திரட்டிவிட்டான். பிறகு பண்ணையாரிடம் இருபது காணி வாங்கலாம் எனத் தான் எண்ணியதை இரட்டிப்பாக்கி நாற்பது காணி நிலத்தை விலை பேசிப் பாதித் தொகையை செலுத்திவிட்டான். மறு பாதியை இரண்டாண்டுகளில் தீர்த்துவிடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டான்.

பொன்னப்பன் இப்போது நாற்பது காணி நிலத்துக்கு உரியவனாகி விட்டான். நல்ல விதைகளைப் பெற்று வந்து தான் வாங்கிய நிலங்களில் விதைத்தான்; நல்ல விளைச்சலை அடைந்தான். ஒரே ஆண்டில் பண்ணையாருக்குத் தரவேண்டிய கடனையும், மைத்துனனிடமும் மற்றோரிடமும் வாங்கிய கடனையும் தீர்த்து விட்டான்; இப்போது மகிழ்ச்சி நிறைந்த மனத்துடன் சிறிய பண்ணையார் போல இன்பமாக வாழ்க்கை நடத்தி வந்தான்.

பொன்னப்பன் பண்ணையில் நெல் விளைந்தது; கரும்பு விளைந்தது; காய்கறிகள் விளைந்தன; மலர்கள் மலர்ந்தன. மாடுகளின் தீவனத்துக்கெனப் புல் வெளிகள் இருந்தன. எங்கும் பச்சைப்பசேலென வளம் பெற்று விளங்கிய பொன்னப்பனது பண்ணை யில் மற்ற உழவர்களின் கால் நடைகள் வந்து மேயத் தொடங்கின. இதனையறிந்த பொன்னப்பன். முதலில் அவற்றை விரட்டி விடுவதுடன் நின்றான். அவற்றுக் குரியவர்களிடம் சென்று அன்பு காட்டி இனிய முறையில் பேசித் தன் பண்ணையில் மாடுகளை மேயவிடாமல் தடுக்குமாறு வேண்டிக் கொண்டான். ஆனால் அது நிற்கவில்லை. முன்னைவிட மிகுதியான அளவில் மாடுகள் வந்து மேயத். தொடங்கின. இவ்வாறு பல நாட்கள் நடைபெற்றுக் . கொண்டிருந்தது.

இவ்வாறு தொடர்ந்து நடந்தபடியால் முதலில் அமைதியாயிருந்த பொன்னப்பன் இறுதியில் பெருங்கோப மடைந்தான். அக்கம் பக்கத்தில் வாழ்ந்த உழவர்கள் வேண்டுமென்றே கால் நடை களைத் தன் பண்ணையில் மேயவிடவில்லை என்பதை யும், வறுமையே இதற்குக் காரணமென்பதையும், வேறு தீய நோக்கம் ஏதும் இல்லை என்பதையும் பொன்னப்பன் நன்கறிந்திருந்தான். எனினும், அவன் தன் வயல்களின் வளத்தைக் காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் நீதிமன்றத் தில் முறையிட்டுச் சிலருக்குத் தண்டம் விதிக்குமாறு செய்தான். இதனால் ஊருட் சிலர் பொன்னப்பன் மீது வெறுப்புக்கொண்டனர். வேண்டுமென்றே தங்கள் கால் நடைகளை அடிக்கடி அவன் பண்ணை யில் மேயவிட்டனர். எவனோ ஓர் உழவன் இரவில் பொன்னப்பன் பண்ணையில் புகுந்து அங்கிருந்த ஐந்து எலுமிச்சை மரங்களை வெட்டித் துண்டு துண் டாக ஆக்கிவிட்டான். மறு நாட் காலையில் இதனைக் கண்ட பொன்னப்பன் பெருஞ்சினங் கொண்டான். இத்தகைய அடாத செயல் செய்தவன் கருப்பண்ண னாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினான். கருப்பண்ணன் எதற்கும் துணிந்த முரடனாதலால் அவனைத் தவிர்த்து எவரும் இதனைச் செய்திருக்க முடியாது என்று எண்ணி அவன்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தான்.

நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் கருப் பண்ணனே குற்றவாளி என்பது தக்க சான்று களால் மெய்ப்பிக்கப் படவில்லை. ஆதலால் நீதிபதி கருப்பண்ணன் குற்றமற்றவனென்று கூறி விடுதலை செய்து விட்டார். ஆனால், பொன்னப்பனோ நீதிபதி தனக்கு அநீதி செய்துவிட்டதாகக் கருதினான். நீதி மன்றத் தீர்ப்பு அநீதியானதெனக் கூறினான்; அதனால் பலருடைய வெறுப்புக்கு ஆளானான். நிலைமை இங்ஙனமாகிவிடவே பொன்னப்பனுக்கு பகைவர்கள் பெருகினர். அவ்வூராரே அவனுக்கு எதிராக இருந்தனர் என்று கூறலாம். பொறாமையால் சிலர் பொன்னப்பனை வெறுத்துப் பேசினர். பொது வாகப் பொன்னப்பன் அவ்வூரில் அமைதியாக, வாழமுடியவில்லை.

அவ்வூரார் சிலர் வேறு ஊர்களுக்குக் குடியேறு வதாக ஒரு செய்தி பரவியது. அச்செய்தி பொன்னப் பனுக்கு மகிழ்ச்சி யூட்டுவதாக இருந்தது. அப்படிச் சிலர் ஊரைவிட்டுத் தொலைந்தால், அவர்களுடைய நிலங்களையும் வாங்கிக் கொண்டு, தன் பண்ணையை இன்னும் சிறிது பெரிதாக்கி விடலாம் என்றும், தன் பண்ணை சிறியதாயிருப்பதால் பயனில்லை என்றும் அவன் எண்ணினான்.

இந்நிலையில் பொன்னப்பன் வீட்டிற்கு நெடுந் தொலைவிலிருந்து ஒருவர் வந்தார். அவர் அவ்வூருக் குப்புதியவர். பொன்னப்பன் பண்ணைக்காரர் ஆகையால் அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வடக்கே ஒரு காட்டுப்பகுதியில் அங்கே வந்து குடி யிருப்பவர்களுக்கு ஆளுக்கு ஐம்பது காணி நிலம் என ஒதுக்கிக் கொடுக்கப்படுகிற தென்றும், அப்பகுதியில் தம் மூரிலிருந்து பலர் குடியேறி உள்ளனர் என்றும் கூறினார். விருந்தினரை உபசரித்து விருந் திட்டபின் நிலத்தை இலவசமாகக் கொடுக்கும் காட்டுப் பகுதி இருக்கும் இடம் பற்றிய முழு விவரங்களையும் பொன்னப்பன் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

வந்தவர் சென்றபின் இரண்டு நாட்கழித்து அக்காட்டுப் பகுதிக்குப் பொன்னப்பன் சென்றான்; முந்நூறு கிலோ மீட்டர் தொலை பயணம் செய்தபின் அவ்விடத்தை அடைந்தான். விருந்தினர் கூறியவை அனைத்தும் உண்மையே என உணர்ந்தான். அங்கு நிலம் வளம் மிக்கதாய் இருந்தது. முதலில்– கையில் ஒருகாசுமின்றிக் குடியேற வந்த பலர் இப்போது சீரும் சிறப்புமாய் வாழ்வதாக அங்குள்ளோர் கூறியதைக் கேட்ட பொன்னப்பன் மனத்தில் பேரவா பொங்கியது.

என்னுடைய சிறிய பண்ணையில் நான் ஏன் துன்புற வேண்டும்? இங்கே பல நலன்களோடு வாழ வழி இருக்கும் போது, அதைப் பயன்படுத்திக். கொள்ளாமல் இருப்பது அறிவீனம் அல்லவா ? என்று எண்ணிய பொன்னப்பன் தன் ஊருக்குத் திரும்பி வந்தான். பண்ணையை விற்றுப் பண மாக்கினான்; கால் நடைகளை எல்லாம் விற்றான். பிறகு தன் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு நெடுந்தொலை பயணம் செய்து அக்காட்டுப் பகுதியை அடைந்தான். அங்கிருந்த தலைவர்கள்,. பொன்னப்பன் குடும்பத்திலுள்ளவர்களைக் கணக்கிட்டு, ஆளுக்கு ஐம்பது காணி நிலம்வீதம் ஒதுக்கிக் கொடுத்தனர். இது தவிர, பொது மேய்ச்சல் நிலத் தைக் கால்நடைத் தீவனத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையையும் பொன்னப்பன் பெற்றான்.

பொன்னப்பன் அங்கே தனக்கு வேண்டிய அள வில் வீடு அமைத்துக் கொண்டு வளம்மிக்க அந்த நிலங்களில் பயிரிட்டு நல்ல விளைச்சலை அடைந்து இன்பமாக வாழ்ந்து வந்தான். இதற்கு முன்னால் பொன்னப்பன் வாழ்ந்து வந்த நிலையைவிடப் பதின்மடங்கு உயர்ந்த நிலையை இப்போது அடைந்தான். நிலமும் முன்னைவிட மூன்று மடங்கு மிகுதியான அளவில் இப்போது பொன்னப்பனிடம் இருந்தது, இவ்வளவிருந்தும் பொன்னப்பனுக்கு ஆசை குறையவில்லை. மேலும் பணம் சேர்த்துப் பெரும் பணக்காரன் ஆகவேண்டும் என்றும், தன்னைப் பிறர் ஒரு பெரிய பண்ணைக்காரர் என்று நினைக்க வேண்டும் என்றும் எண்ணினான். ஆகவே குத்தகைக்குப் பிறர் நிலங்களைப் பெற்று விளைச்சலைப் பெருக்கித் தன் செல்வத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தான்.

இவ்வாறு சில ஆண்டுகள் வரை தன் செல்வத் தைப் பெருக்குவதில் ஊக்கஞ் செலுத்தி வந்த பொன்னப்பன், இன்னும் வடக்கே நெடுந்தொலைவில் மலை வாழ் இனமக்கள் தலைவன் ஒருவன் வளப்பம் மிக்க நிலங்களைப் பத்து ரூபாய்க் கொரு காணியென விற்ப தாகக் கேள்விப்பட்டான். அந்த மலைவாழ் மக்கள் தலைவனுடன் நட்புக் கொண்டால், அவனுக்கு விருப்பமான பொருள்களை வாங்கி அளித்தால், இன்னும் குறைந்த விலையிலும் நிலங்களைக் கொடுப்பதாகப் பொன்னப்பன் கேள்விப்பட்டான். பேரவா அவன் பிடரியைப் பிடித்து உந்தியது. எப்படியாவது அந்த மலைத்தலைவனைப் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டு மென்று முடிவு செய்தான்.

பொன்னப்பன் தான் கேள்விப்பட்ட புதிய இடத்திற்கு முதலில் தனியே சென்று பார்த்து விட்டு, வரவேண்டு மென்று, கையில் ஐயாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு, துணைக்கு ஓர் ஆளை அழைத் துக்கொண்டு புறப்பட்டான் ; வழியில் ஓர் ஊரில் அந்த மலைவாழ் மக்கள் தலைவனுக்கு விருப்பமான பொருள்கள் பலவற்றை வாங்கி எடுத்துக் கொண்டான்; ஏழு நாட்களாக வண்டியிலும் நடந்தும் ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் சென்று அந்த மலைவாழ்மக்கள் வாழும் இடத்தை அடைந்தான்.

அந்த மலைவாழ் மக்கள் குடிசைகளில் வாழ்ந்தார்கள். தங்களுக்கு வேண்டிய அளவு நிலத்தில் மட்டும் பயிரிட்டுக் கொண்டு மற்றவற்றைப் பயன்படுத்தாமலே விட்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் அளவில் ‘போது மென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற கொள்கை உடையவர்களாக இன் பமாய் வாழ்ந்து வந்தார்கள். பொன்னப்பன் அங்குச் சென்றவுடன், எவரோ வேற்று நாட்டவர் தம் ஊருக்கு வந்திருப்பதாக எண்ணிய அவ்வூரார், அவனைச் சூழ்ந்து கொண்டு வரவேற்று உபசரித்துத் தக்க இருக்கை அளித்து அங்கு வந்த செய்தி பற்றிக் கேட்டனர்.

பொன்னப்பன் தான் கொண்டு வந்த பரிசுப் பொருள்களை அத்தலைவனிடம் அளித்தான். அவற் றைப் பெற்றுத் தம் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் அமர்ந்த அத்தலைவன் பொன் னப்பனைப் பார்த்து, “நெடுந்தொலை நடந்து வந்து இளைத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. இங்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கி உண்டு இன்பமாகக் காலங் கழிக்கலாம். ஆனால் நீங்கள் இங்கே எதனை நாடி வந்தீர்கள் என்பதைத் தெரிவித் தால் எங்களால் இயன்றதைச் செய்கிறோம்” என்று கூறினான்.

பொன்னப்பன் அத்தலைவனை நோக்கி, “ஐயா, தங்கள் அன்புக்கும் உபசாரத்திற்கும் என் நன்றி. நான் ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பாற் பட்டதொரு காட்டிலிருந்து தங்கள் பெருமையையும் உயர் பண்பையும் தங்கள் நாட்டின் வளத்தையும் பற்றிக் கேள்வியுற்று, இங்கேயே தங்களுள் ஒருவனாக வாழலாம் என்னும் எண்ணத்தோடு வந்திருக்கிறேன். எனக்குத் தங்க நடைய் இந்தப் பகுதியில் நிலம் அளித்தால் நான் என் குடும்பத்துடன் இங் கேயே குடியேறி என் வாழ் நாட்களை இங்கேயே கழித்து விடுவேன்” என்று கூறினான்.

“அப்படியா! மிகவும் மகிழ்ச்சி. எங்கள் நீட் டில் பயிரிடப்படாமல் அளகடந்த நிலம் இருக் கிறது. அவை மிக்க வளப்பம் இருந்திய நிலங்களாகும். அதோ தெரிகிறதே! அந்த ஆறு என்றும் வற்றாது. அதன் நீரைப் பாய்ச்சி இந்த நாடெங் கும் விளையாத நிலம் என்பது ஓரங்குலமும் இல்லை. அது மட்டுமன்று. எத்தனை ஆண்டுகள் மடித்து மடித்துப் பயிரிட்டாலும் எங்கள் நாட்டு நிலம் உரம் குன்றுவதில்லை. அடிக்கடி “சாரம் குன்றிப்போவதோ, கரம்பாகி விடுவதோ, விளைச்சல் குறைவதோ எங்கள் நாட்டில் இல்லை. இந்த நாட்டில் உங்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ அவ்வளவையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்று அத்தலைவன் மகிழ்ச்சியுடன் கூறினான். “தலைவரே! உங்கள் அன்பான சொற்களுக்கு நன்றி. நான் விரும்பும் அளவு நானே எடுத்துக் கொள்ளுவது என்பது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? அதனை எல்லை வகுத்து ஆவணக்களரியில் பதிவு செய்து கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லை என் றால் இப்பொழுது நான் விரும்பும் அளவு நிலம், அன்பு நிறைந்த உங்களால் எனக்கே தரப்பட்டாலும், நாளை ஒரு காலத்தில் உங்கள் மனம் மாறுபட்டு அந்நிலம் அனைத்தையும் என்னிடமிருந்து பறித்துக் கொள்ளலாமல்லவா? எனவே எல்லை! கட்டிப் பதிவு செய்து, ஆவணம் செய்து கொடுப்பதே சிறந்த செயலாகும். உங்களிடம் பேரளவில் நிலம் இருக்கிறது. எனக்குச் சிறிதளவு கொடுத்தால் போதும். அதனை அளந்து ஆவணம் எழுதிக் கொடுத்து விட்டால் அது போதும்” என்று பொன்னப்பன் அத் தலைவனிடம் கூறினான்.

“நீர் கூறியது மிகவும் உண்மை . நீர் விரும்பிய படியே செய்வோம். சற்றுத்தொலைவில் உள்ள நகரத்திற்குச் சென்று ஆவணம் எழுதிப் பதிவு செய்து தருகிறோம்” என்றான் தலைவன். “மிகவும் மகிழ்ச்சி.. அப்படியாயின் தாங்கள் இதற்காக என்ன விலை கேட்கின்றீர்கள்?” என்று கேட்டான் பொன்னப்பன்.

“உங்களுக்கு இது தெரியாதா? எங்கள் விலை…எப்போதும் ஒரே விலைதான். அதாவது ஒரு. நாளைக்கு ஆயிரம் ரூபாய்” என்றான் தலைவன்.

“ஐயா ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்றால்அது எனக்குச் சரியாக விளங்க வில்லையே! இது என்ன கணக்கு? இந்தக் கணக்குப்படி எத்தனை காணி நிலம் கிடைக்கும் ?” என்று கேட்டான். பொன்னப்பன்.

எத்தனை காணி என்பதோ எப்படி நிலத்தை அளப்பதென்பதோ எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நாள் கணக்கில்தான் நிலங்களை விற்கிறோம். ஒரு நாளைக்கு ஓராயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு நாளப் பொழுதில் நீங்கள் எவ்வளவு தொலை நடந்து போய்த் திரும்பி வருகின்றீர்களோ, அவ்வ ளவு தொலையுள்ள நிலம் உங்களுடையதே. அது தான் நாங்கள் கணக்கிடும் முறையாகும்” என்றான் அந்த மலைத் தலைவன்.

“வியப்பாயிருக்கிறதே! அப்படியானால் ஒரு நாளையில் மாபெரிய அளவுள்ள நிலத்தைச் சுற்றி வந்து விடலாமே!” என்றான் பொன்னப்பன்.

“நீங்கள் எவ்வளவு தொலை சுற்றி வந்தாலும் அவ் வளவு தொலையுள்ள நிலப் பகுதியும் உங்களுக்குத் தான். ஆனால், இதில் ஒரு நிபந்தனை உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் புறப்பட்டுக் குறிப் பிட்ட நேரத்திற்குள் சுற்றிக் கொண்டு புறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வந்துவிட வேண்டும். இது தவறினால் நிலமும் இல்லை; நீங்கள் கொடுத்த ஆயிரம் ரூபாயும் பறிமுதலாகி விடும்” என்று மலைத் தலைவன் பெருங் குரலில் சிரித்துக் கொண்டே கூறினான்.

“நான் சுற்றி வந்த தொலை இவ்வளவுதான் என்று எப்படிக் குறிப்பிடுவது?” என்று கேட்டான் பொன் னப்பன்.

“நீங்கள் விரும்பும் இட மொன்றுக்கு நாம் போவோம். அங்கே நாங்கள் நின்று விடுவோம். அங்கிருந்து நீங்கள் புறப்பட்டுச் சுற்றி வரவேண்டும். நீங்கள் கையில் ஒரு மண் வெட்டி எடுத்துச் செல் லுங்கள். ஒவ்வொரு திருப்பத்திலும் நீங்கள் மண் வெட்டியால் பள்ளம் வெட்டி அடையாளம் செய்தல் வேண்டும். சூரியன் மறைவதற்குள் நீங்கள் புறப்பட்ட இடம் வந்து சேரவேண்டும். அதற்குள் நீங்கள் எங்கெங்குப் பள்ளம் தோண்டி அடையாளம் செய் திருக்கிறீர்களோ அந்த அளவு நிலம் உங்களுடையதாகும். நீங்கள் மண் வெட்டியால் அடையாளம் செய்த இடங்களைப் பிறகு நாங்கள் உழுது பள்ள மாக்கி எல்லை அமைத்து விடுவோம். உங்களால் முடிந்தவரை சூரியன் மறைவதற்குள் நீங்கள் எவ் வளவு தொலை சுற்றி வந்தாலும் அவ்வளவும் உங்களுக்கே உரியதாகும்” என்று கூறினான் அந்த மலைத் தலைவன்.

“நல்லது உங்கள் திட்டம், எனக்குப் பெரு மகிழ்ச்சியளிக்கிறது. நாளைக் காலையில் புறப்படுவோம்” என்றான் பொன்னப்பன்.

மறு நாள் விடியற்காலையில் சூரியன் தோன்றும் பொழுது சுற்றிவரப் புறப்படுவது என்று சொல்லப் பட்டது. அன்றிரவு பொன்னப்பனுக்குப் பெரு விருந்து நடத்தப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருந்தார்கள். ஆட்டமும் பாட்டும், நடனமும் : நாட்டியமுமாகப் பெருங் கேளிக்கையில். அன்றிரவு நெடு நேரம் கழிந்தது.

பொழுது விடிந்ததும், பொன்னப்பன் எழுந்து விரைவில் காலைக் கடன்களை முடித்துக் கொண் டான். அதற்குள் மலைத்தலைவனும் மற்ற மலை வாசி கள் சிலரும் அங்கு வந்து சேர்ந்தனர். அனைவரு மாகச் சற்றுத் தொலைவிலிருந்த வயற்காட்டுக்குச் சென்றார்கள். பொன்னப்பன் தன்னுடன் வந்த ஆளை அழைத்துக் கொண்டு, மண் வெட்டி ஒன்றைத் தூக்கித் தன் தோளில் சார்த்திக் கொண்டு புறப்பட்டான்.

குன்று போன்ற ஒரிடத்தில் அனைவரும் நின் றனர். நாடோடித் தலைவன் பொன்னப்பனை அழைத்து, “இதோ பாரும்! கண் பார்வைக் கெட்டிய தொலைவரையிலுள்ள நிலங்களனைத்தும் எங்களுக்கு உரியவையே. இதில் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் உங்களுடையதாக்கிக் கொள்ளலாம்” என்று கூறினான்.

பொன்னப்பன் – மனம் பெருமகிழ்ச்சியுற்றது. அங்கிருந்த நிலம் மிகுந்த வளம் பொருந்தியது; மேடு பள்ளமில்லாதது. பண்படுத்தினால் மற்றெங்கும் இல்லாத அளவு விளைச்சலைத் தரவல்லது என்பதை அவன் நன்குணர்ந்தான். மலைத்தலைவன் உட்கார்ந்து தன் கைப்பையை எடுத்து எதிரில் வைத்தான். மற்ற மலைவாசிகளும் பொன்னப்ப னுடன் வந்த ஆளும் அவனைச் சூழ உட்கார்ந்து கொண்டார்கள். தலைவன் பொன்னப்பனை நோக்கி, “ஐயா இந்த இடந்தான் நீங்கள் புறப்பட வேண் டிய இடத்தைக் குறிக்கும் அடையாளம். நீங்கள் திரும்பி வந்து சூரியன் மறைவதற்குள் இதே இடத்தை அடையவேண்டும். அதற்குள் நீங்கள் சுற்றிக் கொண்டு வரும் இடமனைத்தும் உங்களுக்கே தரப்படும். ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடும்” என்று கூறினான்.

தலைவன் கூறியபடி பொன்னப்பன் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டான்; மண் வெட் டியைத் தோளில் சாற்றிக் கொண்டு சோற்று மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டு வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான் ; ஆயிரம் முழம் சென்றதும் ஒரு குழி வெட்டினான். இவ்வாறு ஆயிரம் முழத்துக்கொரு குழியாக வெட்டிக் கொண்டே ஒரே நேராகச் சென்றான்; இவ்வாறு நேராக ஏறத்தாழ ஐந்து கிலோ மீட்டர் தொலை சென்றபின் பொன்னப்பன் திரும்பிப் பார்த்தான். மலைத்தலைவன் உட்கார்ந் திருந்த குன்றும், அதன் மீதிருந்த அனைவரும் நன்றாகப் பொன்னப்பனுக்குத் தெரிந்தனர். எனவே, மேலும் ஒரே நேராகப் போய்க் கொண்டிருந்தான்; அதற்குள் உச்சி வேளை வந்து விட்டது. திரும்பிப் பார்த்தான். குன்றின் மீதிருந்த வர்கள் எறும்புகள் போலக் கண்ணுக்குத் தெரிந்தனர். மேலே நடக்க நடக்க நிலம் மேலும் வளப்பம் உடையதாக இருந்தபடியால், அதோடு போதும் என்று திரும்ப அவன் மனம் இடந்தரவில்லை. இவ்வாறு மேலும் சற்றுத் தொலை நேராகவே சென்று இடப்பக்கமாகத் திரும்பினான்.

பசி மிகுதியா யிருந்தபடியால் ஓரிடத்தில் உட் கார்ந்து சோற்று மூட்டையை அவிழ்த்துத் தின்றுவிட்டு மீண்டும் நடந்தான். நேர்கிழக்காக எவ்வளவு தொலை வந்தானோ அவ்வளவு தொலை நேர்த்தெற் காகவும் நடந்துபோனான்.

வெயில் மிகக் கடுமையாக இருந்தது. பொன்னப்பன் உடல் வியர்த்துக் கொட்டத் தொடங் கியது. சற்று உறங்கினால் நலமாயிருக்கும் என்று தோன்றிற்று. எனினும் உறங்கினால் பேரளவில் நிலம் பெற முடியாமற் போய்விடுமே என்ற ஆசை காரணமாக, உறங்காமலும் உட்காராமலும் அவன் நடந்து கொண்டேயிருந்தான்; பிறகு மேற்குப் புறம் திரும்பி மிக வேகமாக நடந்து சென்றான்; தன் நிலப்பகுதி சதுரமாக அமைய வேண்டும் என்னும் ஆசை காரணமாக விரைந்து நடந்தான்; ஆங்காங்கே மறவாமல் குழிகளை வெட்டிக் கொண்டேபோனான்.

கடைசியாக வடக்குப்புறம் திரும்பினான். பொன்னப்பனால் விரைந்து நடக்க முடியவில்லை. கால்கள் தள்ளாடத் தொடங்கின. வெயிலினால் உண்டான அசதியும் நெடுந்தொலை நிற்காமல் நடந்து வந்ததால் உண்டான களைப்பும் மிகுதியாக இருந்தன. பாதங்களோ, கற்களால் குத்தப்பட்டுப் புண்ணாகி வலிக்கத் தொடங்கின. சற்றாவது, ஓய்வாக உட்காருதல் நலமெனக் கருதினான். ஆனால் சூரியன் மறைவதற்குள் தலைவன் இருக்கு மிடம் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்னும் ஆத்திரத்தால் விரைந்து நடந்து வந்து கொண் டிருந்தான். சூரியனோ அடிவானத்தில் இறங்கி விட்டது. தலைவன் இருக்குமிடம் இன்னும் நெடுந் தொலைவில் இருந்தது. “ஐயோ! சூரியன் மறைவதற்குள் நான் போய்ச் சேரமாட்டேன் போலிருக்கிறதே! பேராசையினால் நெடுந்தொலைப் பகுதியை வளைக்க வேண்டி இவ்வளவு தொலை நடந்து விட்டேனே! இனி என்ன செய்வேன்!” என்று எண்ணிய வண் ணம் பொன்னப்பன் விரைந்து ஓடத் தொடங்கினான். அச்சத்தாலும் வெப்பத்தாலும் உடல் வியர்த்தது. அவன் சட்டையும் வேட்டியும் உடலோடு ஒட்டிக் கொண்டன. நா உலர்ந்து இதயம் சம்மட்டியால் அடிப்பதுபோல ஒலித்துக்கொண்டிருந்தது. மார்பு துருத்தி போன்று எழும்பியெழும்பி அடங்கிக் கொண்டிருந்தது. கால்கள் தள்ளாடித் துவண்டன.. இந்தக் கடுவேலையால் உண்டான தளர்ச்சி தன்னைக் கொன்றுவிடுமோ என்று பொன்னப்பன் அஞ்சினான். ஆனால், நிற்கவில்லை.

“இப்பொழுது நின்றுவிட்டால் அவர்கள் என்னை முட்டாள் என்று எண்ணி விடுவார்கள்” என்று எண்ணியவாறு அவன் ஓடிக் கொண்டே இருந்தான். மலைவாசிகள் கைதட்டி ஆரவாரம் செய்து விரைந்து ஓடி வருமாறு கூவியழைக்கும் ஒலி பொன்னப்பன் காதில் தெளிவாகக் கேட்டது. அவர்கள் கையை வீசி அழைப்பது தெரிந்தது.. இடுப்பில் கை வைத்தவாறு சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த தலைவன் உருவம் தெரிந்தது.. சூரியன் இரத்தம் போன்று செந்நிறத்தோடு அடிவானத்தில் மறையத் தொடங்கியதும் தெரிந்தது.

“இன்று முழுவதும் அரும்பாடுபட்டு நடந்தது’ பயனில்லாமல் போய்விட்டதே!” என்று எண்ணிய பொன்னப்பன் நிற்க முயன்றபோது, குன்றின் மேலிருந்த நாடோடிகள் விரைந்து வருமாறு கை. கொட்டிக் கூவினார்கள். ஒரு வேளை குன்றின் மேலிருப்பவர்களுக்குச் சூரியன் இன்னும் தெரிகிறது போலும்!” என்று எண்ணிய பொன்னப்பன் தன் முழுவலிமையை வரவழைத்துக் கொண்டு மூச்சுப் பிடித்து அந்தக் குன்றின் மீது ஓட்டம் ஓட்டமாக ஓடினான்; உச்சியை அடைந்ததும் சூரியன் இன்னும் சிறிது மறையாதிருப்பதைக் கண்டான். தலைவன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு உரத்துச் சிரிப்பதைக் கண்டான்..அச்சத்தால் ஒருவித ஒலி அவன் வாயினின்று வெளிப் பட்டது. கால்கள் பின்னின. அவன் நெடு மரம் சாய்வது போலத் தலைவன் காலடியில் போய் விழுந்தான். மிகச் சிறந்தவன்; ஆசை மிகவுடையவன்; பெரிய அளவு நிலத்தைத் தனக்குரியதாக்கிக் கொண்டான் இந்த மனிதன்” என்று தலைவன் கூறினான்.

பொன்னப்பனின் ஆள் வந்து அவனைத் தூக்கி உட்கார வைக்க முயன்றபோது, அவன் வாயி னின்று இரத்தம் வடிவதையும் அவன் செத்துக் கிடப்பதையும் அறிந்தான். மலைவாசிகள் பொன் னப்பன் நிலைகண்டு இரக்கப்பட்டார்கள்.

பொன்னப்பனின் ஆள், அவன் வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து, அவனைப் புதைப்பதற்காக வேண்டிய ஆறடி அளவு நிலத்தில் குழி வெட்டி அதில் அவன் சவத்தைப் புதைத்துவிட்டான். “பேராசை பெருங்கேடு” என்பது இதன் மூலம் மிகத்தெளிவாக் உணரக்கிடக்கிறது.

பயிற்சி

1. நகர வாழ்வு சிறந்ததா ? நாட்டுப்புற வாழ்வு சிறந்ததா ?

2. பொன்னப்பன் பண்ணக்காரன்

3. காட்டுப் பகுதியில் பொன்னப்பன்

4. மலைவாழ் மக்களிடை பொன்னப்பன்

5. பேராசையால் விளைந்தகேடு

(இவற்றுள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒன்றரைப் பக்கங் . களுக்கு மிகாமல் ஒவ்வொரு கட்டுரை வரைக.)

– சிறுவர் கதைச் சோலை (சிறுகதைத் தொகுப்பு), ஆறாம் வகுப்புத் துணைப்பாட நூல், முதற் பதிப்பு: அக்டோபர் 1965, திருமுருகன் பதிப்பகம், வேலூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *