அந்தோணியும் கிளியோப்பாத்ராவும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 23, 2022
பார்வையிட்டோர்: 33,352 
 

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை உறுப்பினர்

ஆடவர்
1. அந்தோணியோ : ரோம வீரன், ஒப்பற்ற படைத்தலைவன். ஆசியா நாடுகளையும் எகிப்தையும் வென்றடக்கியவன் – கிளியோப்பாத்ராவின் ஆருயிர்க் காதலன். அவள் காதலால் வீரவாழ்வும், அரசியல் வாழ்வும் இழந்தவன். மூவருள் முதல்வன்.
2. அக்டேவியஸ் ஸீஸர் : மூவருள் ஒருவன் – ஜூலியஸ் ஸீஸரின் புதல்வன் – அரசியல் சூழ்ச்சியில் வல்லவன்.மற்ற இருவரையும் எதிரிகளையும் வைத்துச் சொக்கட்டானாடிய தலைவன்.
3. லெப்பிடஸ் : மூவருள் கடையானவன்- அக்டேவிய ஸால் அந்தோணியின்ஆற்றலைக் குறைக்க உயர்த்தப்பட்ட பெருங்குடி மகன். செல்வன், வெள்ளையுள்ளமும், பெருந்தன்மையுமுடையவன்.
4. பாம்பி : மூவரின் பொது எதிரி. கடற்படை வலிமையுடையவன். பெருந்தன்மையும், நம்பிக்கையும் உடையவன்.
5. எனேபார்பஸ் : கிளியோப் பாத்ராவின் அமைச்சன். படைத்தலைவன். அரண் மனைப் பணியாளர் தலைவன். நண்பன். காதல் தோழன்.
6. அந்தோணியின் துணைத் தலைவன் : அந்தோணியிடம் பற்றுடையவனாயினும் தவறுகளைக் கண்டிக்க எதிரியிடம் சென்று அவன் பெருந்தன்மையினால் பின்னும் கழிவிரக்கங்கொண்டவன்.
7. தூதர்.

பெண்டிர்
1. கிளியோப்பாத்ரா : எகிப்து அரசி. டாலமிகளின் வழி வந்தவள். அழகி, ஒப்பற்ற சொல் திறமுடையவள். ஸீஸர், பாம்பி முதலியவரைக் காதல் திறையாகக் கொண்டு அந்தோணியின் காதலிற்குத் தன்னைத் திறையாக்கிக் கொடுத்தவள்.
2. பல்வியா : அந்தோணியின் முதல் மனைவி.
3. அக்டேவியா : அந்தோணியின் இரண்டாம் மனைவி.

கதைச் சுருக்கம்

ஜூலியஸ் ஸீஸருக்குப் பின் ரோம் அரசியல் மூவர் கையில் சிக்கியது. பொது மக்கள் உள்ளங் கவர்ந்த வீரன் அந்தோணி, ஜூலியஸ் ஸீஸர் மகன் அக்டேவியஸ் ஸீஸர், லெப்பிடஸ் என்ற செல்வப் பெருங் குடிமகன் ஆகியவரே இம் முவர். அவருள் அந் தோணியே ஒப்பற்ற வீரனாதலின் கீழ் நாடுகளனைத்தையும் எகிப் தையும் வென்றடக்கினான். ஆனால் முன் ஸீசரையும் பாம்பியை யுங் காதல் சூழலிற் திறைகொண்ட அரசி கிளியோப்பாத்ரா அவனையும் கவர்ந்தாள் –

அரசியல் சூழ்ச்சிவல்ல அக்டேவியசினைச் சிலநாள் அந் தோணியின் முதல் மனைவி பல்வியா எதிர்த்து நின்றாள் – அவள் இறந்தபின் அக்டேவியஸ் அந்தோணியை வருவித்துத்தன் ஒன்று விட்டதங்கை அக்டேவியாவை அவனுக்கு மணந்து அவனைப் பிணைத்தான். பின் அவனுதவியால் பாம்பி என்பவனைத் தம் முடன் நட்பாய்ச் செய்தான்.

ஆனால் விரைவில் பாம்பி இறந்தான். லெப்பிடளை நயமாகக் குற்றஞ் சாட்டி அக்டேவியஸ் கொன்றான். பின் அந்தோணியும் பகை தொடுக்க முயன்றான். கிளியோப்பாத்ரா காதல் வாழ்வால், அவன் எல்லா நாடும் பிடிக்குமளவும் அந்தோணி அசையவில்லை. எகிப்தை எதிர்த்த பின்னும் அவள் பிணக்கு வழி நின்று போரில் தோல்விகள் பெற்றான். இறுதியில் தம் காதல் வாழ்விலேயே அழுந்தி இருவரும் தற்கொலை செய்து எகிப்தை அக்டேவியஸுக்கு விடுத்தனர். உலகியல் சூழ்ச்சியில் வல்ல அக்டேவியஸ்கூட அந்தோணியின் வீரத்தின் அருமையையும் அதனை விழுங்கிய காதலின் பெருமையையும் பாராட்டினான்.

அந்தோணியும் கிளியோப்பாத்ராவும்

க.வென்றி வீரனையும் வென்ற மெல்லியலாள்

கிளியோப்பாத்ரா எகிப்தின் ஒப்பற்ற அரசி. அவள் கரிய நிறமுடையவளாயினும் மாசுமறுவற்ற வடிவழகி. அவள் தன் ஒரு பார்வையால் உலகையே ஆட்டிவைக்கும் திறமுடையவள்.

மக்களை அறியும் நுண் திறத்திலும், அவர்களை மகிழ்ச்சியுள் ஆழ்த்தும் நயத்திலும் அவளுக்கு யாரும் ஈடு அற்றவர். அவள் நாத்திறனோ சொல் லுந் தரமுடையதன்று. உலகின் கவிஞர்களும் நாடக ஆசிரியர்களும் அவளிடமிருந்தே தம் கலைத்திறனைக் கடன் வாங்கவேண்டும்.

எகிப்து நாட்டு மக்கள் மாயத்திற்கும் மந்திரத் திற்கும் பேர்போனவர்கள். அவர்கள் கூட, அவள் நாவசைந்தால் உலகசையும் என்றும், அவள் முக அழகு சற்றுக் குறைந்திருந்தால் உலகின் வரலாறே முற்றிலும் மாறியிருக்குமென்றும் கூறுவராம்.

இங்ஙனம் கூறியதில் வியப்பு எதுவும் இல்லை. அவள் முதலில் மணந்த எகிப்து அரசன் டாலமிக்குப் பின், உலகை வென்ற வீரர்களும் ரோமப் பெருந் தலைவர்களுமான பாம்பியும் ஸீஸரும், ஒரு வர்பின் ஒருவராக அவள் கவர்ச்சியுட்பட்டு அவள் காலடியில் துவண்டு கிடந்தனர். அவர்கள் உலகினர் அஞ்சும் வீரமும் வரலாற்றில் நின்று நிலவும் புகழும் உடையவராயினும், அவள் அழகின் முன், அவள் மாய மிரட்டல்களின் முன், தலைவணங்கி நின்றனரேயன்றி வேறானாரல்லர்.

ஸீஸருக்குப் பின் ரோமப் பேரரசைத் தன் வீரத்தாலும் தோள் வலியாலும் ஆளுந் திறமுடையவன் அந்தோணி என்ற வீரனே. ஆயினும் அவன் பெருந்தன்மையுடையவன்; இன்ப வாழ்விலும், நண்பருடன் கூடிக் குலாவுவதிலும் விருப்புடையவன்; அரசியல் பெருமையை நாடியவன் அல்லன். ஆகவே ரோமின் அரசியல் அவன் காலடியில் கிடப்பினும் அவன் அதனை ஏற்றுப் பேரரசன் ஆகாமல் அதனைக் கைப்பந்து போல் வைத்து விளையாடினான்.

ஸீஸரின் மகனாகிய அக்டேவியஸ் ஸீஸர் அந்தோணியின் மனப்போக்கையும் நாட்டின் நிலை யையும் கண்டு, அவற்றைத் தனது முற்போக்கிற்குக் கருவியாகப் பயன்படுத்த எண்ணினான். ரோமப் பெருமக்களுள் செல்வாக்குடைய லெப்பிடஸ் பெருமகனையும், இவ்வெண்ணத்திற்கேற்ப, அவன் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். இம்மூவரும் ரோமப் பேரரசின் மீது ஒருங்கு ஆட்சி செலுத்துவதாக உடன்படிக்கை செய்துகொண்டனர். ரோமப் பேரரசின் பெயரால் கீழ் நாடுகளை வென்றடக்குவதாக அந்தோணி ஏற்றுக்கொண்டான். அதன்படி அவன் சென்று பார்த்தியரும், பாக்தியரும், பாரஸீகரும், அயோனியரும் வெருண் டோடும்படி போர் புரிந்து பின் எகிப்தையும் வென்று கீழ் அடக்கினான். ஆயின், அந்தோ! நஞ்சூட்டிய அமிழ்தாகிய கிளியோப்பாத்திராவின் வனப்பில் ஈடுபட்டு அவன் தன் வீரமும் உயர்வும் இழந்ததோடு, தன் வெற்றி விழாவை அறவே மறந்து காதல் விழா அயர்வானாயினன்.

அந்தோணிக்குப் பல்வியா என்ற ஒரு மனைவி யுண்டு. அவள் மிகுந்த அறிவும் திறமையும் உடையவள் ஆயினும், உணர்ச்சி வசப்பட்ட அந்தோணி போன்ற ஆடவனைக் கட்டுப்படுத்தப் போதிய கவர்ச்சியற்றவள். அவன் உயர்வையும் வீரத்தையும் அவள் நன்கறிவாள். அவனை யொத்த வீரனைக் கணவனாகப் பெற்றதற்காக அவள் இறும் பூது எய்தினாள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவளால் முடியவில்லை. உயர் குடியிற் பிறந்த அவளுக்கு அரசியல் சூழ்ச்சிகள் நல்ல பாடமாயிருந்தன. அவற்றை எதிர்க்கும் எண்ணம் கணவனிடம் இல்லை என்பதை அவள் கண்டு அவன்மீது சீற்றம் கொண்டாள். இதனால் காதலுறவு பறந்தது..அவன் செய்ய வேண்டும். அரசியல் நடவடிக்கை களை எடுத்து அவள் அவன் அரசியல் அமைச்சனாகச் செயலாற்ற மட்டுமே அவளால் முடிந்தது.

இந்நிலையில் அவள் அந்தோணியின் உடன் பிறந்தான் உதவியால் ஒரு சிறுபடை சேர்த்து ஸீஸரை எதிர்த்துப் போரிட்டாள். இங்ஙனம் செய்தது உண்மையில் ஸீஸரின் வன்மையைக் குறைப்பதற்காக மட்டுமன்று; அந்தோணியை ரோமிற்குக் கொண்டுவருவதற்காகவுமே யாம்.

கேவலம், பெண்ணாகிய பல்வியா இங்ஙனம் ஆடவர்களை வீரத்திலும் திறனிலும் மடக்குவது தெய்வத்திற்குப் பொறுக்கவில்லை போலும்! அது இந்த இக்கட்டான நிலையில் அவளைத் தன் பக்கம் அழைத்துக்கொண்டது.

கிளியோப்பாத்ராவின் கண் பார்வை என் னும் நிலவொளியில் அவளது கருங்குழ லென்னும் முகிலினிடையே விளையாடி, உலக ஆட்சியையும் ரோம் அரசியலையும் மறந்திருந்த அந்தோணி, பல்வியா இறந்தது கேட்டு வருந்துவதற்கு மாறாகத் தன் இன்ப வாழ்வின் இடையூறு ஒன்று அகன்றதென்று கருதி மகிழ்ந்தான்.

கிளியோப்பாத்ரா இதுவரை வீரர், அரசர் பேரரசர் முதலிய பலர் நெஞ்சம் திறைகொண்டு அவர்கட்கு ஆட்படாது நின்றவள் எனினும், அந்தோணியைக் கண்டதுமே அவன்பால் தன் நெஞ்சம் தன்னையும் மீறிச் செல்வதை உணர்ந் தாள். இதுவரையிற் பிறர் நெஞ்சில் வீறுற இருக்கை கொண்டதன்றித் தன் நெஞ்சில் பிறர்க்கிடந்தராத அத்தையலர்மாணிக்கம், இன்று அதே நெஞ்சில் வேறெதற்கு மிடமின்றி அவன் வடிவழகும் பண்பழகும் வந்து நிறைந்ததை உணர்ந்தாள்.

எகிப்தில் அந்தோணி வாழும் வாழ்க்கையைப் பற்றி ரோமிற் பலரும் பலவாறு தத்தம் மனம் போனபடி பிதற்றுவாராயினர். அவற்றைக் கேட்டு மூவர் ஒப்பந்தத்திற் கையெழுத்திட்ட மற்ற இருவரும் மனங் கவன்றனர். அவர்களுக்குப் பொது எதிரியாகிய பாம்பியிடம் அரிய கடற்படை மூன்று இருந்தது. அதனால் அவர்கள் எளிதிற் பேரரசுமுற்றும் சென்று அடக்கியாள முடியாதபடி அவன் அவர்களைத் தடைசெய்து கொண்டிருந்தான். அந்தோணியின் முழு ஒத்துழைப் பின்றி அவர்களால் அவனை எதிர்த் தடக்கமுடியா தென்று அறிந்து, அவர்கள் அந்தோணிக்கு மேன்மேலும் தூதரை அனுப்பி அரசியல் வாழ்வி லீடுபடுமாறும், ரோம் நகர்வந்து தம்முடன் கலக்கு மாறும் வேண்டினர்.

ஆனால் இவ்வரசியல் தூதர்கள். வரவு – அந்தோணியின் காதல் வாழ்வாகிய நறுந்தேனி டையே அத்தேனைக் குடிக்கவொட்டாமல் கெடுக்க வரும் ஈக்களின் வரவு போன்றிருந்தது. அரிய துயிலுளாழ்ந்தவன் உடலிற் கொசுக் கடித்தால் அவன் தூக்கத்தோடு தூக்கமாக அதனை அறைந்து கொன்று மீண்டும் தூங்குவதுபோல, அவன் முதன் முதல் வந்த தூதனை வரவேற் கவோ, அவன் யாரிடமிருந்து வந்தானென்று கேட்கவோகூடச் செய்யாமல், பணியாட்கள் மூலமே அவனைத் துரத்திவிட்டான். இதுகேட்டு ஸீஸர் மிகவும் வெகுண்டானெனினும், இடமும் வேளையு மறிந்து அதனை அடக்கிக்கொண்டு பொறுமையுடன் மீண்டும் மீண்டும் ஆளனுப்பிக் கொண்டேயிருந்தான்.

உ.மணமும் அரசியலுறவுகளும்

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற உண்மைப்படியே, பல்வியாவின் பிரிவுச் செய்தியால் ஏற்பட்ட நல்லுணர்ச்சியாலோ, அந்தோணியின் மனத்திலுங்கூடச் சிலநாளில் ஒரு வகையான ஆண்மையுணர்ச்சியும் மனச் சான்றும் எழுந்து அவனது வாழ்க்கைப் போக்கை – சோம்பல் வாழ்வைக் – குறைகூறத் தொடங்கின. பகைச் சிங்கத்தின் உறுமல் கேட்டுப் பெண் சிங்கத்தின் குழைவையும் குட்டிகளின் நடுக்கத்தையும் பாராமல் வீறிட்டெழும் சிங்க வேற்றைப் போல அவன் கிளியோப்பாத்ராவின் காதலாகிய பட்டு நூல் வலையை அறுத்தெறிந்து ரோமிற்குப் புறப்பட்டான்.

அந்தோணிமீது, அவன் காதல் நெஞ்சின் – மீது தான் ஆட்சி செலுத்தினும், அதே நெஞ் சிற்கு இன்னொரு பகுதி- வீரப்பகுதி-உண்டென்றும், அதைத்தான் உறங்கவைக்க முடியுேமயன்றி ஒழிக்க முடியாதென்றும், அது விழித்துவிட்டால் அவனைத் தான் அடக்கியாள முடியாதென்றும் கிளியோப்பாத்ரா நன்கு அறிவாள். இப்போது அவன் வீர உரு எடுத்துவிட்டபடியால் அவள் அவன் முன் காற்றிலாடும் மாந்தளிரென நடுங்கி னாள். அவள் ஆணைப்படி, அவள் சேடியர் அவளுக்கு உடல் நலமில்லையென்றும், அவள் சினங் கொண்டுள்ளாள் என்றும், பலவாறு பேசிப்பார்த்தும் அவன் போவதிலேயே முனைந்து நின்றமை கண்டு அவனிடமிருந்து ஊடித் தன் அறை சென்று, அவனைப் பிரிந்த துயர்பொறாது பிதற்றி அப்பிரிவு நாட்ககளின் ஒவ்வொரு நொடியையும் ஓவ்வொரு சிறிய ஊழியாக எண்ணிக் கழித்தாள்.

பாம்பியால் அலைக்கழிக்கப்பட்டு நின்ற ஸீஸரும் லெப்பிடஸும் அந்தோணியை ரோமில் கண்டதே, காட்டில் அலைந்து பசியாலும் விடா யாலும் வருந்திய மக்கள் முன் வேடச்சிறாரும் சிறுமியரும் இன்முகத்துடன் தேனும் தினைமாவும் ஊனும் கொண்டுவந்தா லெப்படியோ அப்படிக் களிப்புற்றனர். இதுவரை ஒருவருக்கொருவர் செய்த தீமைகளைப்பற்றிக்கூட வற்புறுத்திப் பேசாது தோழர்களுடன் குத்தலாகப் பேசு முறையில் எடுத்துக் காட்டிவிட்டுப் பின் இணக்கமாக ஒருவருடன் ஒருவர் கூடிக் குலாவலாயினர். இவ்வொற்றுமை நெடுநாள் நிலைத்திருந்தாலன்றித் தன் காரியங்கள் நடைபெறா என்றறிந்த அக்டேவி யஸ் ஸீஸர், தன் நண்பர்களை அந்தோணியின் மனப்பாங்கறிந்து தன் ஒன்றுவிட்ட உடன் பிறந்தாளாகிய அக்டேவியாவை அவன் மணக்கும்படி தூண்டச் செய்தான்.

Shakespeare11அந்தோணியின் தெளிந்த மனச்சான்று இப் போது கிளியோப்பாத்ராவுடன் தான் நடத்திய சோம்பல்வாழ்வை வெறுத்ததாகலின், இனித்தான் நல் உணர்வுடைவனாய் ஆண்மை வாழ்வு வாழ இத்தகைய மணம் உதவும் என்று நினைத்தான். இதற்கேற்ப அக்டேவியாவும் எளிய குணமும் உயர்ந்த கடமையுணர்வும் உடைய வளாய்ச் சூது வாதற்றிருந்தமையால், அவள் அன்று அவனது இப்பிரிவு மனப்பான்மையில் மிகவும் உயர்ந்தவளாய்க் காணப்பட்டாள். ஆகவே விரைவில் அவ்விருவரையும் ஸீஸர் மணமுடித்து வைத்துவிட்டான்.

அவர்களும் சிலநாள்கள் கிளியோப்பாத்ரா வின் மாயவலையினின்றும், ரோமின் அரசியல் சிக்கல்களினின்றும் விலகி நின்று தூய மண வாழ்க்கையிலீடுபட்டனர்.

ரோமில் மூவரும் மீண்டும் ஒருங்கு சேர்ந்ததும் இணக்கமடைந்ததும் பாம்பியின் வலிமையைக் குறைத்தன. அவர்களை இனி எதிர்ப்பது அரிது என்று கண்டு அவன் அவர்களுடன் உறவு கொண்டுவிட எண்ணினான். அதற்கு அவர்களும் உடன்பட்டனர். உடன்படவே பாம்பி தன்னுடன் கப்பலில் வைத்து விருந்துண்ண மூவரையும் வருமாறு அழைத்தான். முக்கனிகளும் தேனும் பாலும் சிற்றுண்டிகளும் அவர்கள் நட்பிற் கறி குறிகளாக வழங்கப்பட்டன. இனிப் போராட்ட மின்றி நால்வரும் தம்முள் ஒருவரையொருவர் சரி சமமாகக்கொண்டு வாழ்வதென்றும், ஒருவர் பங்கில் ஒருவர் புகுவதில்லை என்றும் உறுதி கூறிய பின் அவர்கள் பிரிந்தனர்.

ஆனால் அந் நான்கு உள்ளங்களில் ஒன்றுமட்டும் இந் நட்பை ஒரு மேலுறையாகக் கொண்டு உள்ளூர நஞ்சைக் கலந்து ஒளித்து வைத்துக் கொண்டிருந்தது. அதுவே ஸீஸரது உள்ளமாகும். உலகை முற்றிலும் தானே ஆளவேண்டுமென்னும் ஓர் எண்ணத்தையும் அதற்கான சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் அல்லாமல், நட்பு, காதல், நம் பிக்கை ஆகிய இத்தகைய எண்ணங்கள் எதற்கும் அவன் அதில் இடங் கொடுக்கவில்லை. ஆகவே பாம்பி, அவர்களைத் தம் விருந்தினர் என்றெண்ணிக் கப்பலில் அவர்கள் தன்னிடம் வந்து சிக்கிய போது அவர்களைச் சிறைபிடிக்க வேண்டுமென்று கூறிய தன் துணைத்தலைவன் மொழியைச் சினந்து கண்டிக்கவும், லெப்பிடஸும் அந்தோணியும் தம் நலனை மறந்து அக்டேவிஸ் ஸீஸருக்கு உயர்வும் ஒப்புரவும் நல்கவும், அக்டேவியஸ் ஒருவன் மட்டும் நெஞ்சில் வஞ்சங்கொன்டு அவர்களனைவரையும் பிரித்து அழிக்கும் எண்ணங் கொண்டவனாயிருந்தான்.

Shakespeare12ஊழ் இவ்வகையில் அக்டேவியஸுக்குப் பேரு தவி புரிந்தது. முதலாவதாகப் பாம்பி தற்செயலாகத் தன் பணியாள் ஒருவன் கையால் கொலை யுண்டான். அதைக்கேட்டதும் இனி லெப்பிடஸ் உதவி வேண்டுவதில்லை என்று கண்டு அக்டேவியஸ், அவன் பாம்பியுடன் மறைவாக எழுத்துப் போக்கு வரவு வைத்திருந்தான் என்று பொய்க் குற்றஞ் சாட்டினான். அக்டேவியஸிடம் நம்பிக்கை வைத்து அவனை ரோமின் தலைவன் என்றே கொண்ட பெருந்தன்மையும் நாட்டுப் பற்றும் மிக்க லெப்பிடஸ், தான் தன் நாட்டுத் தலைவனது நம்பிக்கையை யிழந்ததாகக் கண்டதே தானாகவே தன் நிலையை விட்டு அவனிடம் சிறையாளியாக வந்து நின்றான். அக்டேவியஸ் அப்பெருந்தகை லெப்பிடஸைப் பாராட்டுவதற்கு மாறாக அவன் குற்றத்தை வற்புறுத்தி அவனைக் கொலை செய்தான்.

ரோமப் பேரரசின் பங்காளிகளுள் இப் போது அக்டேவியஸுக்கு எதிரியாக மீந்திருந்த வன் அந்தோணி ஒருவனே. தனது மூன்று எதிரிகளிலும் வீரத்தாலும் திறனாலும் தனக்குப் பேரிடர் தரத்தக்க எதிரி அவனே என்பது அக்டேவியஸுக்குத் தெரியும். அதனால் அவன் தன் தங்கைமூலம் அவனைப் பிணித்து வைக்க எண்ணினான். ஆனால் இப்போது பாம்பியும் லெப்பிடஸும் போனபின், அதுவும் அவன் கிளியோப்பாத்ராவின் வலையில் பிணிப்புண்டிருக் கையில் அவனை எதிர்ப்பது அவ்வளவு கடுமையான தன்று என்றுங் கண்டான். அந்தோணியும் தனது மனச்சான்றுக்கு இடங்கொடுத்த அளவே அக்டேவியாவுக்கு இணக்க முடையவனாயிருந்தான். உள்ளுணர்ச்சியும் இன்ப விழைவும் ஏற்பட்டதே இல்லை; அவள் அவனுக்குக் கரும்பின் நறிய சாற்றினின்று பிரித்தெடுக்கப்பெற்ற வெள்ளிய சக்கைபோலத் தோன்றினாள். அக்டேவியா உலக மெச்சும் மனைவியாதற் குரியவளேயன்றித் தன் உள்ளங் கவர்ந்தவள் அல்லள் என்று அவன் கண்டு கிளியோப்பாத்ரா இருந்த இட நோக்கலானான்.

கூ. பிரிவும் பிரிந்தவர் கூடலும்

அந்தோணி தன்னுடன் இருந்தபொழுது அவன் தன் காதலுக்கு அடிமை என நினைத்திருந்த கிளியோப்பாத்ரா, இப்போது உண்மையில் தானே அவன் காதலுக்கு அடிமை என்பதை உணர்ந்தாள். அவள் உடலும் உயிரும் இப்போது இடைவிடாது அவனது தொடர்பு, அவன் தோற் றம், அவன் மொழிகள் இவற்றிலேயே நாட்டமாய் நின்றன. ஊணிலும் உடையிலும் ஆடல் பாடல் களிலும் அவள் கொண்ட விருப்பு அனைத்தும் அந்தோணி என்னும் ஒரு பொருளால் வரும் இன்பத்திற்குக் கருவிகளாக மட்டுமே இப்போது தோன்றின. அவள் சேடியர் எவ்வளவு வேண்டினும் அவள் அவற்றிலோ பிற அரச காரியங்களிலோ மனஞ் செலுத்தாமல், அந்தோணியையே நினைத்து நினைத்துப் பெருமூச்சு விட்ட வண்ணம் இருந்தாள்.

ரோமில் அந்தோணி எந்நிலையில் இருக் கிறான், என்னென்ன செய்கிறான் என்பதை யறிய, கிளியோப்பாத்ரா மறைமுகமாக ஒற்றரை அனுப்பியிருந்தாள். அவர்கள் மூலமாக வந்த செய்திகள் அவள் மனத்தைப் பின்னும் மிகுதியாகக் குழப்பின. அந்தோணி தன் காதல் தளையி னின்று விடுபட்டதன்றி, அரசியலுள் முழுமனதுடன் ஈடுபட்டு மூவருடன் ஒத்துழைத்தது அவள் மனத்தை வாள்போல் ஈர்த்தது. அதன்பின், அவன் அக்டேவியாவை மணந்தான் என்ற செய்தியைக் கேட்கவே, அவளடைந்த சினத்திற்கும் துயருக்கும் எல்லையில்லை.

அச்செய்தி கொண்டுவந்த ஒற்றனையே முத லில் அவள் சினந்து பாய்ந்து கொல்ல இருந்தாள். அவள் பணியாட்களுள் தலைவனான எனேபார்பஸ் அவளுக்குத் தேறுதல் கூறி அவளை அமைதிப் படுத்தினான். அந்தோணி அக்டேவியாவை மணந் தது உண்மையில் ஸீஸருடன் அவனைப் பிணைப்ப தன்று, முரணச் செய்வதேயாம் என்று அவன் எடுத்துக் காட்டினான். அதோடு அக்டேவியா அழகற்றவள் என்றும், அந்தோணியின் உள்ளக் கிளர்ச்சிக்கு ஒரு நொடியும் ஈடு செலுத்தக் கூடாதவள் என்றும் அவன் கூறவே, அவள் தன் துயரை மறந்து அந்தோணியை மீண்டும் தன் பக்கம் இழுக்கும் வழியாதென ஆராயலானாள்.

இச்சமயம் அக்டேவியா தன் கணவனைவிட்டு அகன்று தன் தமையனைப் பார்க்கச் செல்கிறாள் என்ற செய்தி வந்தது.

ஸீஸர் இப்போது நேரடியாக அந்தோணி யைக் குறைகூறவும், அவன் நண்பர்களைச் சிறைப் படுத்தி ஒறுக்கவும் தொடங்கினான். இவற்றைக் கேட்டும், லெப்பிடஸினிடம் ஸீஸர் நடந்து கொண்ட வகையை அறிந்தும் அந்தோணி அவன்மீது சீற் றங்கொண்டு அதனை அக்டேவியாவினிடமும் காட் டினான். கணவனையும் தமையனையும் ஒருங்கே பற்றிநின்ற அக்டேவியா தமையனை நேரே சென்று திருத்த எண்ணி ரோம்நகர் சென்றாள்.

லெப்பிடஸின் நட்பையும் பெருந்தன்மையை யும் பாராத ஸீஸர் அந்தோணியின் உறவையும் தங்கையின் நல் வாழ்வையும் கூட எண்ணிப் பாரான் என்பது எதிர்பார்க்கத் தக்கதேயன்றோ? அவன் தங்கை வாய்திறக்கும் முன்னாகவே, அவளை அந்தோணி ரோமப் பேரரசின் பங்காளியாகிய தன் மனைவியென்ற முறையில் விருதுகளுடனும் மேளதாளங்களுடனும் அனுப்பாமல் பணிப்பெண் போலத் தனியே அனுப்பினான் என்று அவன் மீது சீறினான். அந்தோணிமீது இந்த அவமதிப்பிற்காகப் பழிவாங்குவதெனக் கூறி, அவன் தன் பகைமைக்குப் புதிய சாக்குக் கண்டான். இங்ஙனம் மைத்துனர் இருவரையும் ஒன்று சேர்க்கும் எண்ணத்துடன் வந்த அக்டேவியா அவர் களைப் பிரித்து வைக்கவே உதவியவள்போலானாள்.

அக்டேவியா போனதே, அந்தோணி, தான் இதுவரை வலியுறுத்தி மேற்கொண்டிருந்த செயற்கையாண்மையாகிய போர்வையைக் கிழித்து எறிந்துவிட்டு, முன்னினும் பன்மடங்கு ஆர்வத்துடன் விரைந்து கிளியோப்பாத்ராவிடம் சென்று சேர்ந்தான்.

“பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?” நீரின்றி வெடித்த நிலத்தில் மழைத்துளி விழுந்தாலன்ன அவன் வரவு அவள் நெஞ்சின் துடிப்பையும் ஏக்கத்தையும் அகற்றி அவளை இன்ப உலகேழினும் மேலாம் துறக்க உலகு எய்துவித்தது.

தானின்றி அந்தோணி வாழினும்கூட இனித் தான் அந்தோணியின்றி வாழ முடியாதெனக் கிளியோப்பாத்ரா கண்டாள். ஆகவே அவள் அதுமுதல், எங்கே அந்தோணி இயற்கை வீர உரு எடுத்துத் தன்னைவிட்டு அகன்றுவிடுவானோ என்று அஞ்சலானாள். அதன் பயனாக அவனது வீர உணர்ச்சி எழாதபடி ஓயாது காதல் உணர்ச்சியைத் தூண்டி அவனைச் சுற்றிக் காதற் கோட்டை கட்டுவதே அவளது இடைவிடா வேலையாயிற்று. மறந்துங்கூட அவன் அக் கோட் டையை விட்டகல எண்ணாதபடி செய்வதில் அவள் தன் ஒப்பற்ற திறனையும் மாயவித்தைகளையும் காட்டலானாள்.

பெண்மையே உருவெடுத்து வந்தது போன்ற அப் பெண்ணரசிக்கு இது மிகக் கடுமையான பணியுமன்று. கூடலின் உயிர்நிலை ஊடலே என் பதையுணர்ந்து, அவள் அந்தோணியை ஒரு சமயம் தன் பக்கம் ஈர்ப்பதும் அடுத்த கணமே அவனை வெறுத்துத் தள்ளுவதும் போல் நடித்து, அவன் ஆர்வத்தைப் பன்மடங்கு மிகைப்படுத் தினாள். அவள் வரவும் செலவும், அவள் விருப்பும் வெறுப்பும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், நகைப்பும் சினமும், மாறி மாறி ஒளியும் நிழலும்போலவும், உடலும் உயிரும் போலவும், பகலும் இரவும் போல வும்! நின்று, அவன் வீரமும் அறிவும் அவனிடம் வருவதற்கு ஓய்வு தராதபடி அவன் மனத்தைத் தாக்கி உரிமைப்படுத்தின.

ஆயின், என்ன இருந்தாலும் அவளும் பெண் தானே! தனது இம்முயற்சியினால் தன் உயிருக்கும் தன் காதலன் வாழ்க்கைக்கும் உலைவைக்கிறோ மென்று அவள் அறிந்திலள்! ஜூலியஸ் ஸீஸரது மதிப்பிற்கும் பாம்பியின் அச்சத்திற்கும் இடமான அந்தோணி, தன் காதல் வலைப்பட்டு அக்டே வியஸ் ஸீஸர்போன்ற மோழையும் பாயும் ஏழையாய்விட்டான் என்று அவள் அறிந்திலள்!

அந்தோணி எகிப்தில் கிளியோப்பாத்ராவுட னும், அவள் சேடியர் பேடியருடனும் சூதாடியும், அவளுடன் பொய்கை நீராடியும், பூம்பந்தாடியும், பொற்படகு ஊர்ந்தும், ஆடல் பாடல்கள், கேளிக் கைகள் முதலியவற்றில் கலந்தும் நாள் போக்கிவந்தான். அதேசமயம் அவன் நடைமுறைகள் முற்றி லும் ஒற்றர் மூலம் அறிந்து வந்த அக்டேவியஸ் இது தான் சமயமென்று கண்டு அந்தோணியின் நண்பர்களை ஒவ்வொருவராக முறியடித்து அழித் தும், அவன் பங்கிலுள்ள நாடுகளை வென்று கைக் கொண்டும் வந்தான். அவற்றைக் காதாற் கேட் டும் மனத்தால் கொள்ளாதவனாய் அந்தோணி சில நாள் கடத்தினான். பின் “வரட்டும் அவன் எங்கே போகிறான், ஒரு கை பார்க்கிறேன்” என்று உறுக்கி நாள் போக்கினான். தன் படைத் தலைவர்களிடம் “இன்று புறப்பட்டுச் சென்றெதிர்ப்போம், நாளை புறப்பட்டுச் சென்றெதிர்ப்போம்,” என்று கூறி முயற்சியேயின்றிப் பல நாள் கழித்தனன். இங்ஙனமாக எகிப்தும் கீழ் நாடுகளும் நீங்கலாக எல்லாம் ஸீஸர் வசமாயின.

ச.காதலுக்கு வீரம் பலியாதல்

ரோமப் பேரரசின் குழப்பத்தைவிட இப் போது அந்தோணியின் மனத்திலுள்ள குழப் பமே மிகப்பெரிதாயிருந்தது வீஸரின் சிறுமையை – அவனது நன்றி கொன்ற தனத்தை – அவன் தன்னை அவமதித்த அவமதிப்பை – எண் ணும்போதெல்லாம் அவன் தோள்கள் துடித்தன; அவன் மீசைகள் படபடத்தன. அப்போது அவன் இந்தக் கிளியோப்பாத்ராவையும் அவளது எகிப்தையும் சின்னாபின்னப் படுத்திவிடுவோமா என்றெழுவான். அடுத்த நொடியே அக் கிளியோப்பாத்ராவின் உருவம் – நகையும் சீற்றமும் மாறி மாறி வந்து நடனமிடும் அவள் முகம் – மயிலும் நாண அன்னமும் பின்னிட நடந்து வரும் அவளது ஒய்யார நடை – தேனினுமினிய தெவிட்டா அமிர்தான அவள் குயிலிசை மொழிகள் – ஆகிய இவை அவன் மனத் திரையில் வந்து தவழும். அப்போது அவன் தன் வீரத்தையும் தன் அறிவையும் இழந்து ‘இவ்வுருவின் முன் ரோமப் பேரரசையும் என் வாழ்வையுங்கூடப் பலி கொடுக்கத் தயங்கேன்’ என்பான்.

இறுதியில் ஸீஸர் மற்ற நாடுகள் அனைத்தை யும் வென்று தன்னை எதிர்க்க எகிப்து நோக்கிவருகிறான் என்று கேள்விப்பட்டதும் அந்தோணி, மேற் பணியாளன் வரவு கேட்டு எழும் குடிவெறிப் பட்ட படைஞன் போல் எழுந்தான். தனது நாடாகிய எகிப்துக்கே இடையூறு வந்தது கண்டு கிளியோப்பாத்ராவும் அந்தோணியின் காதற் புகைக்கு நறுந்தூளிடும் வேலையை விட்டு எழுந்தாள். விரைவில் அமைச்சர்களுக்கும் படைத் தலைவர்களுக்கும் உத்தரவுகள் பறந்தன. பேடியரும் சேடியரும் அஞ்சி அகல நிற்க வீராது போர் அவை கூடிக் கலந்தது.

அந்தோணியை விட்டகல விரும்பாமல் கிளி யோப்பாத்ரா தானும் போரில் தன் படைக்குத் தலைவியாய் வரவேண்டுமென்று விரும்பினாள். அந்தோணியின் அமைச்சனும் நண்பனுமான எனோபார்பஸ், பெண்டிர் போர்க்களம் செல்வது நன்றன்று என்றும் அதிலும் கிளியோப்பாத்ரா அந்தோணிக்குக் காற்கட்டாயிருப்பாள் என்றும் கூறினான். கிளியோப்பாத்ரா இதனை ஏற்காது அவனை வாயடக்கினாள்.

கிளியோப்பாத்ராவின் இப்பிழைகளால் வந்த தீங்கையன்றி வேறெவ்வகையிலும் வெற்றிக்குரிய முழுவன்மை அந்தோணி பக்கமே இருந்தது. அவனது படை அவ்வளவு வீரமும் நற்பயிற்சியு முடையது: அது அவனிடம் நிறைந்த பற்றுடையது: அவனுக்காக உயிரை ஒரு பொருட்டாக மதியாது போரிடும் இயல்புடையது. அந்தோணியும் ஒப்பற்றவீரன்; தன் படைகளை வெற்றி மேல் வெற்றியாக நின்று நடத்திய நேரிலாத் தலைவன். ஸீஸரின் படை அந்தோணியின் படைக்கு ஈடுடையதும் வீர முடையது மன்று; ஸீஸரும் வீரத்திலும் தலைமைத் திறத்திலும் அந்தோணிக்கு ஈடு ஆகான்.

கடற்படை வகையில் நிலைமை இதற்கு நேர் மாறானது. ஸீஸர் படை பாம்பியால் பயிற்சி தரப் பட்டது. அந்தோணியின் கப்பற்படையோ எகிப்து அரசி உலாப்போகும் சமயம் அழகிற்காக உடன் செல்ல ஏற்படுத்தப்பட்டது. ஆகவே நிலத்திற் போர் புரிவது அந்தோணிக்கே நல்லது என்றும் கடலிற் போர்புரிவதே தனக்கு நல்லது என்றும் ஸீஸருக்கு நன்கு புலப்பட்டது. எங்கே அந்தோணி தன்னை நிலத்தில் தாக்கிவிடுவானோ என்று அவனுக்கு உள்ளூர அச்சமாயிருந்தது.

கிளியோப்பாத்ராவின் போக்கு இதிலும் ஸீஸருக்கு நன்மையாகவே முடிந்தது. எனோபார் பஸ் அந்தோணியின் கடற்படையைவிட நிலப் படையே வெற்றியுடன் போர்புரியத்தக்கது என்ற போது, அவள், அவன் தன் நாட்டின் கடற்படை யைக் குறை கூறினான் எனக்கொண்டு இதிலும் அவன் கூறியதற்கு நேர்மாறாக அந்தோணியைத் தூண்டினாள். ‘தையல் சொற் கேளேல்’ என்னும் மூதுரையை மீறி அவனும் அவள் சொல்வதையே மேற்கொண்டு கடலிலேயே சண்டை செய்யுமாறு: எனோபார்பஸுக்குக் கட்டளையிட்டான்.

எனோபார்பஸ் கூறியபடியே எகிப்தியக் கடற் படை ஸீஸரது படையுடன் சில மணி நேரங்கூட நிற்க ஆற்றாமல் முறிந்து பின்னிடைந்தோடியது. கிளியோப்பாத்ராவும் உடன் தானே நடுநடுங்கித் தன் கப்பலையும் அவற்றுடன் ஓடும்படி ஆணையிட் டாள். பாவம்! தான் போவது அந்தோணிக்கு உயிர்போவதுபோல் இருக்கும் என்பதை அவள் மறந்தாள்.

இருப்படையும் நெருங்கிப் போர்புரியும் வேளை யில் அந்தோணியின் கண்கள் தற்செயலாகக் கிளியோப்பாத்ராவின் பக்கமாகச் சாய அப்போது அவன் அவள் படைகள் உடைந்தோடு வதையும் அவளும் உடனோடுவதையும் கண்டான். கண்டதே அவன் போரும் மறந்தான். புவியும் மறந்தான் ; போர்வீரர் நிலையையும் மறந்து, ஓடு கின்ற தாய்ப்பசுவைப் பின்பற்றும் கன்றைப் போல அவளைப் பின்பற்றி ஓடினான்.

புறங்கொடா வீரனாகிய அவன் மனத்தில் காதற்பேயிருந்து உயிரினும் மிக்க மானத்தையும் உண்டதென்னல் வேண்டும்!

தலைவன்போனபின் படை என்ன செய்யும்? அது நாலாபக்கமும் சிதறி ஸீஸரது படையின் வாளுக்கும், அம்புமாரிக்கும் இரையாகிச் சீர்குலை வுற்றது. மனஞ்சென்ற வழியும் புலன் சென்ற வழியும் செல்லும் அந்தோணியைப் போலாது அம் மனப்போக்கையும் உலகப்போக்கையும் காற்றை யும் பூதங்களையும்கூடத் தான் கருதிய அருங்காரியத்திற்குத் துணையாகும்படி தன் கூர் அறிவால் இணைக்கும் ஒப்பற்ற சூழ்ச்சியாளனாகிய அக்டேவியஸ் ஸீஸர் அன்று ஊழ் என்னும் அலையின் உச்சியில் மிதந்து வெற்றி வீரனாய் விளங் கினான்.

ந.இறுதிப் போர்

உணர்ச்சி வசப்பட்டுப் போரைவிட்டு ஓடிய அந்தோணி, எகிப்து சென்றதும் தன் வீரர் அடைந்த படுதோல்வியையும் அழிவையும் கேட்டு மனமுருகினான். அப்போதுதான் அவனுக்குத் தான் அடைந்த தீங்கின் முழு வன்மையும் புலப்பட்டது. படவே இஃதனைத்திற்கும் ஏதுவான கிளியோப்பாத்ராவின் மீது அவன் சீறி விழுந்தான். அன்று அவன் கண்களுக்கு அவள் குற்றங்கள் தெரிந்தன என்று மட்டுமல்ல ; அக் குற்றங்கள் பெரிதாக்கப்பட்டும், பல தப்பெண்ணங்கள் சேர்ந் தும், அவள் உடலே போல் அவள் உளமும் அவன் பார்வைக்குக் கருமையாகத் தோற்றின. ஆகவே அவளும் தன்னைப் போலவே உணர்ச்சிவசப் பட்டுத்தான் இத்தனை அழிவுகளையும் உண்டு பண்ணினாள் என்று கொள்வதற்கு மாறாக, அவள் வேண்டுமென்றே தன் நலத்தினால் தூண்டப் பெற்று ஸீஸருக்கு உடந்தையாய் நின்று தன்னைக் கவிழ்க்கத் தொடங்கினாள் என்று சீறினான்.

இன்மொழியால் முகமலரும் மென்மலர்க ளாகிய நங்கையர் செவிகளில் வன்மொழிகள் புகுந்தால் அவர்கள் துன்பத்தைக் கேட்பானேன்! அவனது சீற்றத்தால் அவன் காதலை இழந்து விட்டோமோ என்ற அச்சம் ஒருபுறம்; அவன் தன்னைக் கொல்வதாகப் பாய்ந்தெழும்போது எங்கே தான் அவன் காதலையும் உயிரையும் ஒருங்கே இழக்க நேரிடுமோ என்ற அச்சம் ஒரு புறமாக நின்று அவளை வாட்டின.

எப்படியும் தன் உயிரைக் காத்துவிட்டால் அவன் சினந்தணிந்தபின் அவன் தப்பெண்ணங்களை மாற்றிவிடலாம் என்று நினைத்து அவள் ஓடித் தன் இருக்கையறையிற் சென்றொளிந்து கொண்டாள்.

அப்படியும் அந்தோணி அமையாமல் தன்னைக் கொல்லத் தேடுகிறான் என்று கேட்ட கிளியோப்பாத்ரா தான் இறந்துவிட்டதாகவே அவனிடம் கூறிவிடும்படி ஆணையிட்டாள். இத்தந்திரம் முற்றிலும் வெற்றிபெற்றது.

அவள் இறந்தாள் என்று கேட்டதுமே அந் தோணியின் சீற்றமெல்லாம் படமெடுத்த பாம்பு மந்திரத்திலடங்குவதுபோல அடங்கி ஒடுங்கிற்று. அவள் எத்தகையள் ஆயினும் அவளில்லா உலகில் தனக்கு எத்தகைய விருப்புக்கும் இடனில்லை யென்று கண்டு அவனும் சாகத் துணிந்துவிட்டான். இதனையறிந்ததும் சேடியர் அவனைத் தேற்றி அவள் உண்மையில் இறக்கவில்லை என்று கூறினர்.

அவர்கள் கூறி வாய்மூடுமுன் கிளியோப்பாத்ராவே நேரில் வந்து அவன் காலில் வீழ்ந்து, ‘நான் தங்கள் வாழ்வைத் தொலைத்தவள்; தங்கள் பெருமைக்கும் தங்கள் காதலுக்கும் ஒவ்வாதவள்; என்னை அதற்காக எப்படித் தண்டித்தாலும் சரி; தாங்கள் காட்டும் வெறுப்பையும் சீற்றத்தையும் மட்டுமே கண்டு அஞ்சுகிறேன். தங்கள் காதலுக்காக உயிர் விடுவதாயின் மகிழ்ச்சியுடன் இறப்பேன்,’ என்றாள்.

அந்தோணி அவளைத் தன் நீண்ட கைகளால் வாரி எடுத்தணைத்து ‘என் அரும் பொருளே! நின் அன்பை நோக்க இப்பேரரசும், இவ்வுலகுந்தான் என்ன விலையுடையது! நின் ஒரு புன்முறுவலுக் காக இன்னும் ஏழுமுறை இவ்வுலகத்தை வென்று வென்றிழக்க நேரினும் பொருட்படுத்தேன். நீ கவலை கொள்ள வேண்டாம்,’ என்றான்.

இப்போது கிளியோப்பாத்ராவுக்குத் தன் காதல் போயிற்றென்ற சீற்றம் மறைந்துவிட்டது; அதோடு அந்தோணியோவிற்கும் தன் கிளியோப் பாத்ரா போயினள் என்ற வெந்துயர் அகன்றது. முன்போல் அவளது மதிமுகமும், துணைக்கரங்களும், இன்மொழிகளும் அவனுக்கு உயிரும் ஊக்கமும் அளித்தன. அவன் அவள் முகத்தை உற்று நோக்கியவண்ணம் “ஆ, இம்முகத்தில் காதல் ஒளியுள்ளளவும் என் உள்ளத்தில் வீர ஒளிக்குக் குறைவில்லை. உன் பெயரால் – உன் காதலின் பெயரால் – இன்னும் ஒருமுறை இவ்வுலகை வெல்வேன்” என்றெழுந்தான்.

அந்தோணியை நிழல் போல் தொடர்ந்து உட லுறுப்புக்களோ என்னும்படி மாறுபாடின்றி அவன் கருத்தறிந்து தவிய அவன் வீரரும், துணைத் தலைவரும் இதுகாறும் அவன் காதற் பெரும் புயலாலும் சீற்றத்தாலும் தன் நிலை இழந்து நிற்பது கண்டு வருந்திச் செயலிழந்து நின்றனர். இப்போது அவன் முகத்தே வீரக்களையைக் கண்டதுமே “இனித் தயக்கம் வேண்டாம். எம் தலைவர் எழுந்தார் இனியும் வெற்றி நமதே, உலகம் நமதே,” என்று ஆரவாரித்து எழுந்தனர்.

மறுநாளே அக்டேவியஸ் படை எகிப்தில் வந் திறங்கியது. அந்தோணியும் அவன் வீரர்களும் அதனுடன் கைகலந்து தாக்கினர். அக்டேவியஸ் படை அந்தோணியின் படையைவிட எவ்வளவோ பெரியதாயிருந்தும், அந்தோணியின் ஆற்றலுக்கும் அவன் வீரர்களின் துணிச்சலுக்கும் ஆற்ற மாட்டாது பின்னிடைந்தோடிற்று, ஸீஸர் தன் முழுத்திறனையும் காட்டி அவர்களைத் தன் கையாட்கள் மூலம் சாட்டையால் அடித்து ஆட்டுக் கூட்டங் களைப்போல் எல்லைப்புறத்தில் திரட்டிச் சேர்க்கவில்லையானால் அவர்கள் மீட்க முடியாதபடி சிதறியே இருப்பர்.

ஆண்மைமிக்க அந்தோணியின் வீரர் இவ்வெற்றியால் பின்னும் ஊக்கம் அடைந்தனர். அவ்வெற்றியைத் தொடர்ந்து ஸீஸரின் படைகளை ரோம் வரைக்கும் துரத்தியோட்டி அவனை வேண்டுமென்று அந்தோணியின் துணைத் தலைவன் மன்றாடினான். ஆனால் அந்தோணியின் இயற்கைச் சோம்பலும் இன்பவிழைவும் இவ்வின்றியமையாக் கடமையைச் செய்யக் காலந்தாழத்தின. வெற்றியைக் கொண்டாடும் வகையில் தன் பொருட்குவை முற்றிலும் தன் வீரர்களுக்கு வாரீ இறைத்தும் அவர்களுடன் உண்டாட்டயர்ந்தும் அவன் பொழுது போக்கினான். இதனைக் கண்டும் தன் நன்மொழிகளை அவன் புறக்கணித்ததால் சினங்கொண்டும் அத் துணைத்தலைவன் அன்றிரவே அவன் எதிரியின் பக்கம் சென்று சேர்ந்து கொண்டான்.

இச்செய்தியைக் கேட்ட அந்தோணி அவனிடம் எள்ளளவும் சீற்றங்கொள்ளாது மற்ற வீரர்களிடமும் “அவனைப்போலவே காலநிலைக்கொப்ப நீங்கள் நடந்துகொள்வதே எனக்கு விருப்பம்” என்று கூறினான். அதோடு ஸீஸர் பக்கம் சென்றவன் தனது ஆத்திரத்தில் விட்டுப்போன பொருள் களை அவனிடமே சேர்க்கும்படி கட்டளையிட்டான். உண்மையில் அந்தோணியினிடம் நேசம் கொண்டு சீற்றத்தாலேயே எதிர்க்கட்சியில் சென்று சேர்ந்த அத் துணைத்தலைவன் இது கேட்டுத் தன் நன்றியின்மையையும் தன் தலைவன் பெருந்தன்மையையும் நினைத்துக் கண்ணீருகுத்தான்.

அந்தோணியும் அவன் வீரரும் இருந்த நிலைமையினை ஒற்றர்மூலம் அறிந்த ஸீஸர் தன் படையை இரவோடிரவாகத் திரட்டிக் குடி மயக்கத்திலும், துயில் மயக்கத்திலும், தம்மை மறந்திருந்த அந்தோணியின் படைவீரர்மீது பாய்ந்தான். கொஞ்ச நேரத்திற்குள் அந்தோணியின் படை இருந்த இடம் தெரியாது அழிந்தொழிந்தது. எஞ் சிய சில வீரரும், அந்தோணியும், கிளியோப்பாத்ராவும் அரும்பாடுபட்டுத் தப்பியோடித் தம் அரண்மனை வந்து சேர்ந்தனர்.

கா.முடிவு

வீரருள்ளும் துணைத்தலைவருள்ளும் பலர் இன் னும் அந்தோணியை நீங்காது பின் தொடர்ந்து வந்தனர். செத்தாலும் அவனுடன் சாவதைவிடத் தமக்கு உயர்ந்த பேறு வேறில்லை என்றே அவர்கள் நினைத்தனர். ஆனால் அந்தோணி தன்னால் இதுவரை அவர்கள் கெட்டது போதும் என்று நினைத்துத் தன் பொருட்குவை யனைத்தும், துணிமணி யனைத்தும் அவர்கட்கே கொடுத்து, ‘இவயனைத்தும் உங்கள் வெற்றியால் வந்த பொருள்களே. என் அறியாமையால் இழந்தவைபோக மீதத்தையேனும் உங்களிடம் சேர்க்கிறேன். எடுத் துக்கொண்டு நச்சுமரமாகிய என்னை விட்டகல்வீர்! எனக்கு நீங்கள் செய்யும் கடமையை எனது விருப் பத்தினும் எத்தனையோ மடங்கு நீங்கள் செய்து தீர்த்துவிட்டபடியால் இனி உங்களிடம் எத்தகைய கடமையையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் பெயர் சொல்வதே இனித் தீங்கு விளைவிக்குமாத லால் அதனை மறந்து காலத்துக்கேற்ப நடந்து கொள்ளுங்கள். எனக்கு வேண்டியதெல்லாம் என் நண்பர்களாகிய உங்கள் நல்வாழ்வே,’ என்றான்.

தன் வெற்றி நாள் முழுமையும் காதலுக்காக உயிரைப் பலியிட்ட இப் பெருந்தகையாளன், தோல்வியிலும் நட்பிற்காகத் தன்னைப் பலியிடு வதைக் கண்டு வீரரனைவரும் கண்ணீருகுத்தனர். அவனை விட்டுச் செல்ல அவர்கள் எவரும் விரும்ப வில்லையாயினும் அவன் மீண்டும் மீண்டும் வற் புறுத்தியதன் பேரில் ஒவ்வொருவரும் பிரியா விடை பெற்றுக், கால் முன்னும், மனம் பின்னும் இழுக்க அவனை விட்டுச் சென்றனர்.

அக்டேவியஸ் ஸீஸர் இப்போது உலகப் பேரரசனாக விளங்கினான். எகிப்தும் அவன் கால டியில் பட்டுவிட்டது. ஆனால் அவன் அந்தோணி யிருக்குமளவும் தன் நிலை உறுதியுடைத்தன்று என அறிந்து அவனையும் அவனுக்கு உடந்தையா யிருந்த கிளியோப்பாத்ராவையும் உயிருடன் கைப் பற்றிச் சிறையுள் வைக்க எண்ணினான். ஆனால் இறக்கும் தறுவாயிலும் சிங்கவேற்றை மக்கள் அணுக அஞ்சுவது போல அவனையும் கிளியோப் பாத்ராவையும் நேரில் அணுக அஞ்சித் தூதர் மூலம் அக்டேவியஸ் அவர்கள் மன நிலையறிந்து வரும்படி ஏவினான்.

அந்தோணி தனக்குப் பரிவு வேண்டியதில்லை என்றும் தன் துணைவர்களையும் கிளியோப்பாத்ரா வையும் மட்டும் மதிப்புடன் நடத்தினால் போதும் என்றும் கூறினான். பின் அவன் கிளியோப் பாத்ராவை நோக்கி இனித் தன்னை விட்டுவிட்டு ஸீஸரை நயந்து நல்வாழ்வு பெறுவதே அவளுக்கு நல்லது; தனக்கும் அதுவே மனதிற்குகந்ததென வேண்டினான்.

இதுகாறும் பெண்மையின் மென்மையையே காட்டிய கிளியோப்பாத்ரா இச்சொற் கேட்டதே அரசியின் பெருமிதத் தோற்றங்கொண்டு தலை நிமிர்ந்து ஸீஸர் தூதனை நோக்கி- அரசி கிளியோப்பாத்ரா அந்தோணி ஒருவன் முன் மட்டுமே பெண் ஆவள்; பிறருக்கு அரசியேயாவாள். ‘அரசி என்ற நிலையில் வாழ முடியவில்லையாயின் அரசியா சாவ அறிவாள்’ என்று கூறி அனுப்பிவிட்டுப் பின் அந்தோணிபக்கமாகத் திரும்பி, ‘என் அரசே, நீங்கள் கூட என் காதலை இங்ஙனம் பழிக் கப் பொறுக்கேன். அந்தோ நான் கரிய எகிப்தியரிடைப் பிறந்து ஜூலியஸ் ஸீஸர் முதலிய பலருடன் உறவாடியதை நினைத்ததாலன்றோ என் அந்தோணி என்னை இவ்வளவு இழிவாக மதிக்க இடமேற்பட்டது! என் அந்தோணியைக் காணு முன் நான் யாதாயினும் ஆகுக! அந்த அரும் பொருளைக் கண்டபின், அதன் காதலின் பெருக் கையும் ஆழத்தையும் உயர்வையும் அளவிட்டறிந்தபின், அஃதின்றி நான் வாழ்தல் கூடுமோ? அந்தோணியை ஒத்த மதயானையைப் பிணித்த இக்காதற் கரங்கள் இனி ஸீஸரையொத்த குள்ள நரியையும் பிணிக்க முற்படுமோ? என்னே என் அந்தோணி மனத்துட் கொண்ட கருத்தின் போக்கு!’ என்றாள்.

அதுகேட்ட அந்தோணி ‘சரி, அப்படியா யின் உன் முடிவு என்ன?’ என்றான்.

அவள் ‘உங்கள் உடலுடன் என் உடலைச் சேர்த்து உங்கள் உயிருடன் என் உயிரும் உடன் வரச் செய்வதே’ என்றாள்.

அவள் காதலின் உயர்வையும், அதன் முழு வலியையும், அதன் வீறையும் அன்றுதான் அவன் கண்டான்.

அவன் முகம் எல்லையில்லாத பேரின்பக் கதிர் வீசி ஒளிர்ந்தது.. அவ்வொளி கண்டு கிளியோப்பாத்ராவும் காதற் கடலின் கரை கண்டவளானாள். அவள் ‘இனிப் பிறப்பு இறப்பும் இன்பதுன்பமும் மாறி மாறி அலைபோல் வந்து வந்து மோதும் இவ் வாழ்க்கைக் கடலைக் கண்டு நான் மலைவடையேன். என் அந்தோணியே அரிய அந்தோணியாகக் கொண்டு அதனைக் கடப்பேன்’ என்று கூறி அவனைத் தழுவி முத்தமிட்டாள்.

வாழ்க்கை முற்றிலும் பிறர் அடையும் இன் பத்தினும் அவ் வொரு நொடியில் அவர்கள் அடைந்த இன்பம் பெரிதென்னலாம்.

அந்தோணி கிளியோப்பாத்ராவை அன்று மணந்த மணமகனினும் உயர்வாக எடுத்தணைத்து முடி நீவி ‘இறைவன் உன்னைக் காக்க! உன்னால் பிறவியின் பயன் பெற்றுவிட்ட எனக்கு இனி என்ன குறை! உன் காதல் நிறைவுடன் மாளக் கிட்டிய இம்மாள்வு வாழ்வினும் நிறைவுடையது! இனி நான் ரோமனாக நின்று உயிர்விடவேண்டும்’.

Shakespeare13நீயும் டாலமிகளின் வழித்தோன்றல் என்ற தகு திக்கும் ரோமன் காதலி என்ற தகுதிக்கும் இணங்க நிறைவாழ்வெய்துவாய்! காதற் கடவுளின் பாதுகாப்புக்கு உன்னை விடுத்துச் செல்கின்றேன்’ என்று கூறி அவளைவிட்டகன்று வெளியிடம் சென்று தன் வாளாலேயே தன்னை மாய்த்துக்கொண்டான்.

அவன் இறந்தது கேட்ட கிளியோப்பாத்ரா உயிரிழந்த உடல் போல் செயலற்று நின்றாள். பின் தேறித் தன் காதற்கடனாற்ற எண்ணுமளவில் ஸீஸரின் தூதன் வந்து பலவகை இனிய மொழிகளால் அவளை வயப்படுத்த முயன்றான். அவள் அவனை அசட்டையாகப் பார்த்துத் தன் இறுதி விருப்பங்களை ஸீஸருக்கு உணர்த்துமுறையில் அவனிடம் கூறினாள்.

‘எனக்கு ஸீஸர் பரிவதாயின் அதனை என் புதல்வனிடமும், என் காதலன் நண்பரிடமும் காட்டுக!’

‘நான் அந்தோணியின் உயிரே உயிராய் அவன் வாழ்வே வாழ்வாய் வாழ்ந்தவள்; அது போல் அவன் மாள்வே மாள்வாய் மாளத் துணிந்துவிட்டேன். ஸீஸர் நாடிய ரோமப் பேரர சையும், ஸீஸர் நாடிய எகிப்தையும் இழப்பதில் எனக்கு வருத்தமில்லை. அந்தோணி இல்லா உலகை ஸீஸர் ஆளட்டும். நான் அந்தோணியை யும் அவன் வாழும் உலகையுமே ஆளப்போகிறேன்.’

‘காதல் தளையால் கட்டுண்டிருந்த சிங்கத்தைப் பின்பற்றி நான் செல்லுகிறேன். சிறுமைப்பட்ட சூழ்ச்சி வலையால் உலகைக் கவர்ந்த ஸீஸர் இவ்வெற்றுலகை ஆளட்டும்.’

இவ்வாறு பெருமிதத்துடன் கூறிவிட்டு அவள் தன்னிடமே ஒரு சிறு பெட்டியில் கரந்துவைத் திருந்த கொடிய நச்சுப்பாம்பு ஒன்றை யெடுத்து ‘இதுகாறும் பிள்ளைபோல் உன்னை வளர்த்தேன். இப்போது நன்றி மறவாது என் காதற் கனியுடன் என்னைச் சேர்ப்பிப்பாய்’ என்று கூறி, அதன் நஞ்சை உடலில் ஏற்றாள். அரைநொடியில் அந்தோணியின் உடலுடன் அவள் உடல் கிடப்ப உயிர் அந்தோணியை நாடிச் சென்றது.

இறுதியில் அக்டேவியஸ் ஸீஸர் வந்து காதலரசனும் காதலரசியுமாய் மாள்விலும் பணியாது வீறுடன் விளங்கிய அத்துணை வரைக் கண்டான். ஒரு நொடி அவன் உலகியல் அறிவுகூடக் கலங்கியது. தமது தந்நலத்தாலும் ரோமின் சீர்குலைவாலும் இதுகாறும் இறந்த ஒப்பற்ற ரோமத் தலைவர்களை எண்ணிப் பார்த்தான். “வீரத்துக்கு இரையாகிய ஜூலியஸ் ஸீஸரென்ன, ஒழுக்கத்தின் உயர் குன்றாகிய புரூட்டஸென்ன, நட்பின் அணிகலமாகிய காஸியஸென்ன, கடைசியில் காதலின் ஒப்பற்ற சிகரமாகிய இவ்வீர அந்தோணியென்ன, இப்பெருந்தகை ரோம வீரர் அனைவரும் மாண்டனரே! ரோமின் பெருவாழ்வின் ஊற்றுக்களான இவர்கள் போனபின் பாலையாய் விட்ட இப்புன்மை உலகோ இப்பாவியேனுக்குக் கொடுத்து வைத்தது!” என்று மனமாழ்கிக் கண்ணீருகுத்தான்.

உலகப் பேரரசை வென்ற வெற்றி வீரனது வெற்றியைச் சிறுமைப்படுத்தின காதற் பேரரசனும் பேரரசியும் ஆகிய அவ் இருவருடைய உயர் தனிக் குணங்களை எண்ணி எண்ணி எகிப்தியரும் ரோமரும் ஆற்றொணாத் துயரெய்தினர்.

– சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (ஐந்தாம் புத்தகம்), முதற் பதிப்பு: ஜனவரி 1940, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *