கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 10,822 
 

மாலை 3 மணி வாக்கில் பாரிஸ் சார்ல்ஸ் டி கால் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் இறங்கியது. ரம்யாவும் கிருஷ்ணமூர்த்தியும் விமானத்திலிருந்து இறங்கி இமிகிரேஷன் கவுண்டரை நோக்கி நடந்தார்கள். நீண்ட பயணம். களைப்பு தெரிந்தது. நல்லவேளையாக, பெரிய அளவில் வரிசை இல்லை வேகமாகச் சென்று அதிகாரியின் முன்னால் நின்றார்கள்.

அவனிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்கவில்லை. ரம்யாவிடம் திருமண பத்திரத்தைக் கேட்டார்.

இதற்கிடையில் அவருடைய திரையில் பீப் என்று ஒலித்தது. அதைப் பார்த்தவுடன் அவர் முகம் மாறியது. அவனுடைய கடவுச்சீட்டு எடுத்தார். திரையையும் கடவுச்சீட்டையும் மாறி மாறிப் பார்த்தார்.

பிறகு நிமிர்ந்து

‘நீங்கள்தானே கிருஷ்ணமூர்த்தி பரமசிவம்?’

‘ஆமாம்’.

‘நீங்கள் பிரெஞ்சு காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி. உங்களைக் கைது செய்ய போலீஸ் வருகிறது’.

சொல்லிக் கொண்டிருக்கும்போதே கவுண்டருக்குப் பின்புறத்திலிருந்து இடது பக்கமாக இரண்டு போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்து அவன் பெயரைக் கேட்டு, உறுதி செய்து கொண்டு மணிக்கட்டைப் பிடித்து இழுத்துச் சென்றனர். ஒருவன் கிருஷ்ணமூர்த்தியின் கடவுச்சீட்டைச் சரிபார்த்து பின் எடுத்துக்கொண்டு போய் விட்டான்.

ரம்யாவுக்கு என்ன நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது என்பதை மூளை கிரகித்துக் கொள்வதற்குள் அந்த காட்சிகள் எல்லாம் மறைந்து அவள் மட்டும் அந்த கவுண்டர் முன்னால் நிற்கிறாள். கடவுச்சீட்டில் முத்திரைகள் பதித்து அவளைப் போகலாம் என்று‌ வலது பக்கமாகச் செல்லும் வழியினை காட்டிவிட்டு வரிசையில் நின்ற அடுத்தவரைப் பார்த்து ,

‘நெக்ஸ்ட்’ என்றார்

அடுத்த பயணி கவுண்டருக்கு வந்துவிட்டார்.

கவுண்டருக்குப் பக்கத்திலிருந்த சிறிய கதவு திறந்து ரம்யாவை வா என்றது.. செல்வதற்குத் தயக்கம். அவரை அந்தப் பக்கம் அல்லவா கூட்டிட்டு போனார்கள்? இவர் இந்தப் பக்கம் போங்கிறாரே.

இப்போது கவுண்டரில் அவள் நின்று இருந்த இடத்தில் வெளிர் சிவப்பு நிறத்தில் உயரமான ஒருவன் இருந்தான்.

இவள் அவனிடம் அழாத குறையாக,

‘ப்ளீஸ் ஐ வாண்ட் டு ஆஸ்க் ஹிம் சம்திங்’ கெஞ்சினாள்.

அவன் புன்னகையோடு,

‘பை ‌ஆல்‌ மீன்ஸ்’ இரண்டு அடி பின்னால் சென்றான்.

அந்த அதிகாரியைப் பார்த்து,

‘வேர் இஸ் மை ஹஸ்பண்ட்?’ என்றாள்

ரம்யா போகாமல் அங்கேயே இருந்தது அதிகாரிக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் போல..

‘கோ இன் சைடு அன்ட் ஆஸ்க் தி போலீஸ்’

கிட்டத்தட்ட அவளை விரட்டாத குறையாக உப்பக்கம் செல்ல வைத்தான். அந்த சிறிய தடுப்பைக் கடக்கும் போது பிரெஞ்சு நாட்டுக்குள் அவள் காலடி எடுத்து வைக்கிறாள்.

எத்தனை கனவுகளோடு இங்கே வந்தாள். ஆனால் இப்போது எந்தப் பிரக்ஞை இல்லாமல் அந்த தேசத்திற்குள் நுழைந்தாள்.

நகரும் படிக்கட்டுகள் வழியாக ஒரு தளம் கீழே சென்றாள். அங்கு வரிசையாகக் ஏராளமான கன்வேயர் பெல்ட்கள் பாம்புகள் போல வளைந்து நெளிந்து மிரட்டின. ரம்யாவுக்கு மயக்கமே வரும் போல இருந்தது. போலீஸ் எங்கே? சுற்றிப் பார்த்தாள். எல்லோரும் பொருட்களை எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். விசாரிக்கலாம் என்றால் ஒருவரும் இல்லை. அது நீண்ட ஒரு ஹால். திக்கு தெரியாமல் ஏதோ ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கிறாள். அவசரம். உதவி செய்ய ஒருவரும் இல்லையே என்கிற அங்கலாய்ப்பு. யாராவது கண்ணில் படமாட்டார்களா? போலீஸ்காரர்கள் எங்கக் கூட்டிக் கொண்டு போய் இருப்பார்கள்? அவர்கள் இன்னொரு பக்கம் அல்லவா சென்றார்கள்? நாம் வேறு பக்கம் அல்லவா செல்கிறோம்? ஆண்கள் பெண்கள் ஒதுங்கு அறைகள் இருந்தன. விமானத்தில் எப்பொழுதோ போனது. இப்போது போய்விட்டு வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. உள்ளே போனால் நீண்ட வரிசை. எரிச்சல் வந்தது. பிறகு போய்க் கொள்ளலாம். முதலில் அவரை தேட வேண்டும்.

வெளியே வந்தாள். ஒரே பதட்டம். குளிரூட்டப்பட்ட இடமாக இருந்தாலும் உடலின் வியர்வை கொட்டியது. எந்த பக்கம் போவது என்று புரியவில்லை. எல்லோருக்கும் அவர்களுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே போக வேண்டும் என்கிற கவலை. இவளைப் பற்றி கவலைப்பட யாருமில்லை. கடலில் திசை தவறிய பறவை போல சுற்றிச்சுற்றி வந்தாள். ஏதோ ஒரு திசையை முடிவு செய்து கொஞ்சம் தூரம் நடந்தவள் திரும்பவும் குழம்பி அந்தப் பக்கம் போவோம் என்று திரும்ப சடாரென்று ஒருவன் மீது மோதிக் கொண்டாள். நிமிர்ந்து பார்த்தாள் அதே உயரமானவன். வெளிர் சிவப்பு நிறக்காரன். மேலே இமிகிரேஷன் கவுண்டர் அருகிலே சந்தித்தவன்.

‘உங்க ஹஸ்பண்ட் பார்த்தீங்களா?’ என்றான்.

ஆங்கிலம் அவன் தாய் மொழியாக இல்லை என்றாலும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்குப் புரிய வேண்டும் என்பதற்காக எச்சரிக்கையோடு உச்சரித்தான்.

அவன் அக்கறையோடு கேட்ட விதமும் கண்களில் தெரிந்த கனிவான பார்வையும் தனக்கு யாராவது உதவ மாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருந்த ரம்யாவுக்கு அந்த நேரத்தில் உயிர் காக்கும் உறவாகத் தெரிந்தான். எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவளால் அழாமல் இருக்க முடியவில்லை.

கீழைக் காற்றில் வளையும் மூங்கிலாய் அவள் முகத்துக்கு நேராக தன் முகத்தைக் கொண்டு வந்து,

‘அய் அம் விக்கி. தயவுசெய்து கவலைப்படாதீர்கள். உங்கள் பிரச்சினைக்கு என்னால் முடிந்த அளவிற்கு நான் கண்டிப்பாக உதவி செய்வேன்’.

‘அய் அம். ரம்யா. அவரை போலீசார் எங்கே கொண்டு போனார்கள். என்று தெரியவில்லை. சுற்றிச் சுற்றி வருகிறேன். யாரை கேட்பதுன்னு தெரியவில்லை’.

‘சரி. முதலில் போய் நம்முடைய சாமான்களை எடுத்துக் கொள்வோம். .வெளியே போன பிறகுதான் நாம் போலீசார் இருக்கும் இடத்துக்குச் செல்ல முடியும்.

பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். கணவனுடைய பெட்டிகளையும் சேர்ந்து ஏகத்துக்கும் வண்டியில் வைத்துத் தள்ளுவதைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. அவன் ஒரேயொரு பெட்டி மட்டும் வைத்திருந்தான்.

‘விலகுங்கள்’ என்று சொல்லி அவன் அந்த ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்தான்.

ஓரிடத்தில் அவளை நிற்க வைத்துவிட்டு விசாரிக்கச் சென்றான். அந்த நிமிடங்கள் அவள் வாழ்க்கையை பொறுத்தவரை இதுகாறும் அனுபவித்திராத மன உளைச்சல் மிக்க ஒன்று. சொந்த ஊரைவிட்டு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் வந்து அனாதையாக தவிக்கிறோமே என்கிற கவலை ஒருபக்கம். அச்சம் இன்னொரு பக்கம். பேசாமல் இந்த நொடியோடு இல்லாமல் போய் விட்டால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் தோன்றியது.

காத்திருந்தாள்.

அவன் அவளை நோக்கி வந்தான்.

‘போலீஸ் அறை கண்டுபிடித்துவிட்டேன். வாருங்கள் போவோம்’.

அந்த அறையில் நான்கு பேர் இருந்தார்கள். கருநீல முழுக்கை சட்டையும் அதே நிறத்தில் காற்சட்டையும் தொப்பியும் அணிந்திருந்தனர். அதில் இரண்டு பேர் ஏற்கனவே மேலே வந்து கிருஷ்ணமூர்த்தியை அழைத்துச் சென்றவர்கள்.

‘என் கணவர் என்ன குற்றம் செய்தார்? அவரை ஏன் அழைத்து வந்தீர்கள்? அவர் எங்கே? நான் இப்பொழுது அவரை பார்க்க வேண்டும்’. மூச்சு விடாமல் அடுக்கினாள்.

எந்த உணர்வுகளும் இன்றி, மூத்த அதிகாரி போலிருந்தவர்,

‘உங்கள் கணவன் பெயர் என்ன?’

‘கிருஷ்ணமூர்த்தி பரமசிவம்’.

‘இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?’

வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.

‘அவர் வியாபாரத்துல போலி நிறுவனங்களை நடத்தி இந்தோனேசியா வங்கிகளுக்கு நட்டம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு. அதேபோலவே இந்நாட்டிலும் பொய்யான விவரங்கள் கொடுத்து நிறுவனங்கள் இருப்பதாக ஏமாற்றியது குற்றம்’.

அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

‘இப்போது அவர் எங்கு இருக்கிறார்?’

‘அவரை நகர போலீஸார் விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்’.

‘அந்த ஸ்டேஷன் எங்கு உள்ளது?’

இடத்தை சொன்னார்.

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தாள்.

அவளுடைய பாவமான முகத்தைப் பார்த்த அந்த அதிகாரி,

‘உங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்’ என்றார்.

இப்ப எங்கே போவது? தன்னுடைய வாழ்க்கையில் இத்தகைய கையறு நிலையைச் சந்தித்ததில்லை.

வெளியே வந்தவுடன் வரிசையாக இருந்த நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தாள்.

எந்த உணர்வுகளுமற்று சிறு சலனம் இல்லாமல் எதிரிலிருந்த பெரிய டிஜிட்டல் பலகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விமானங்கள் வந்து இறங்கும் தகவல்கள் இருந்தன. பக்கத்தில் விக்கி நின்று கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவன் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது.

‘என்னால் உங்களுக்கு எவ்வளவு சிரமம். உங்கள் நேரத்தை வீணடித்து விட்டேனே’ என்றாள்.

மெலிதாக புன்னகைத்து ‘பரவாயில்லை’ என்றான்.

‘இப்பொழுது எங்குப் போகப் போகிறீர்கள்? உங்களுக்கு இந்த நகரத்தில் தெரிந்தவர்கள் யாராவது உண்டா?’

‘எங்க போறதுன்னு எனக்கு தெரியல. எனக்கு யாருமே தெரியாது’.

அப்பாவை அழைத்து விஷயத்தைச் சொல்லலாமா என்று யோசித்தாள். ஏற்கனவே இதய ‌நோயாளி. அதிர்ச்சி தாங்க மாட்டார். வேண்டாம்.

வேறு யாரிடம் பேசுவது? தயாநிதி?‌

அவன் என்ன செய்வான் . அது மட்டுமில்லாமல் புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

‘என்னோடு வாருங்கள். என்னுடைய அப்பார்ட்மென்ட்டில் தற்காலிகமாகத் தங்கிக் கொள்ளலாம். பொருட்களை எல்லாம் அங்குக் கொண்டுபோய் வைத்துவிட்டுக் காவல் நிலையத்துக்குச் செல்லுவோம்’.

‘சரிங்க’

‘இங்கிருந்து நகரத்திற்கு ஆர்யிஆரில் செல்வோம். அங்கிருந்து டாக்ஸி அமர்த்திக் கொண்டு என்னுடைய இடத்திற்குச் செல்வோம்’.

என்ன சொல்வாள் ரம்யா? பாவம். தலையாட்டினாள்.

மின்னல் வேகத்தில் சென்றது ரெயில். 25 நிமிடத்தில் காஃர் டே நார்ட் நிலையத்தை அடைந்தது.

வெளியே வந்து வாடகை கார் ஒன்றை அமர்த்தினான். அரை மணி நேர பயணத்திற்குப் பின் அவன் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

முதல் மாடியில் அவனுடைய வீடு. அவனே பொருட்களையெல்லாம் மேலே தூக்கி வந்தான்.

கதவைத் திறந்தவுடன் ஒரு சிறிய நடை பிறகு ஒரு வரவேற்பு அறை அதில் ஒரு பகுதியில் உட்கார்ந்து சாப்பிட மேசை. இரண்டு நாற்காலிகள்.

இடதுபுறம் ஒரு படுக்கை அறை. கட்டிலுக்கு மட்டுமான இடம். அதற்கு உட்புறம் குளியலறை. சிறிய டாய்லெட்.

ஹாலின் வலது புறத்தில் சமையலறை. ஒரு ஆள் சென்று வரக்கூடிய வகையில் அளவாய் இருந்தது. பெரிதாகச் சமையல்கள் நடந்த அறிகுறிகள் இல்லை. மைக்ரோவேவ் அவன், டிஷ் வாஷர் காபி மேக்கர், வாட்டர் சிங்க், பிரட் டோஸ்டர் போன்ற அத்தியாவசியங்கள் இருந்தன.

அவளுடைய பெட்டிகள் ஹாலை ஏகத்துக்கு நிரப்பி விட்டது.

‘நீங்கள் போய் குளித்துவிட்டு வாருங்கள்’ என்றான்.

ப்ராக்கோலி சூப். பிரட் பட்டர். சிறப்பாக பீஃப் ரோஸ்ட் தயார் செய்திருந்தான். நல்ல பசி. அது என்ன மாமிசம் என்பதைக் கூட கேட்காமல் சாப்பிட்டு விட்டாள்.

இரவு 7 மணி அளவில் பாரிஸ் நகர மையத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு வந்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தி உட்கார்ந்திருந்தான். சோர்ந்து இருந்தான். பரிதாபமாக இருந்தது.

அவளைப் பார்த்தவுடன் எழுந்து நின்று,

‘என் மேல எந்த தப்பும் இல்ல. கன்ஃபூயுஷன்ல என்ன பிடிச்சி வச்சிருக்காங்க. உன்னைய அப்படியே விட்டுட்டு வந்துட்டனேன்னு கவலை பெருசா இருந்தது’.

‘இவர்தான் எனக்கு ஹெல்ப் பண்ணாரு’.

அப்போதுதான் விக்கியை கவனித்தான்.

‘ஹாய் அயம் கிருஷ்’.

‘விக்கி’ கை குலுக்கினான்.

‘நம்ம லக்கேஜ்ல்லாம் எங்க?’

‘விக்கியோட வீட்டிலதான்’ .

‘ஓகே. ஒகே’.

வீட்டு விலாசத்தையும், கதவைத் திறக்க ரகசிய எண்ணையும் கொடுத்து அங்குப் போய் தங்கிக் கொள்ளச் சொன்னான். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான்.

இரவு நேரம் என்பதால் அதற்குமேல் பேசுவதற்கு நேரம் தர முடியாது, வேண்டுமென்றால் நாளை காலை 11 மணிக்குள் வாருங்கள் என்று போலீஸ் அதிகாரி அனுப்பிவிட்டார்.

பாரிஸ் நகரின் கிழக்குப் பகுதியில் விக்கியின் வீடு. வடமேற்கு திசையில் கிரிஷ் வீடு. வீட்டிற்கு வரும்போதே இரவு ஒன்பது ஆகிவிட்டது. அதற்கு மேல் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்புவது உசிதமல்ல என்றான் விக்கி.

அவளுக்கும் அதுவே சரியென்றுபட்டது.

தன்னுடைய போனை சார்ஜ் செய்து மீண்டும் இயக்கியபோது, அப்பாவிடமிருந்து தவறவிட்ட அழைப்புகளை கவனித்தாள். இந்தியாவில் நள்ளிரவு பன்னிரண்டரை மணியாக இருக்கும். காலையில் பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.

அடித்தது.

‘அப்பா’.

‘எப்படிமா இருக்க? சாயந்தரத்திலிருந்து உனக்கு ட்ரை பண்ணிகிட்டு இருக்கறேன். அவரோடதகூட ட்ரை பண்ணேன். ரீச்சே பண்ண முடியல’.

அவளுக்கு அழுகை பொத்திக்கொண்டு வந்தது. சொல்லிவிடலாமா என்று யோசித்தாள். இரவு நேரத்தில் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடப்போகிறது.

‘ஒன்னும் இல்லப்பா. சார்ஜர் பெட்டிக்குள்ள மாட்டிகிச்சு’.

‘மாப்பிள நல்லா இருக்காராமா? வீடெலாம் நல்லா அமைஞ்சு இருக்கா?’

‘ம்’ என்றாள்.

‘மாப்பிள்ளை பக்கத்துல இருக்காராமா?’

‘இல்லப்பா’.

‘யாருக்குமே கிடைக்காத ஒரு பெரிய அதிர்ஷ்டம் உனக்கு கிடைச்சிருக்குமா. உன் வாழ்க்கை எப்படியெல்லாமோ போயிடுமோன்னு கவலைப்பட்டேன். கடவுள் ஒரு நல்ல வழி காட்டிட்டாருமா. எல்லாத்தையும் மறந்துட்டு நல்ல வாழ்க்கைய துவங்கியிருக்கமா. நீ நல்லா இருக்கனுங்கறத தவிர வேற என்ன வேணும்? ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்கமா’.

அவருடைய அறியாமையை நினைத்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல்,

‘சரிங்க அப்பா. டைம் ரொம்ப ஆயிடுச்சு போய் தூங்குங்க’

‘சரிம்மா’.

வெச்சிடட்டுங்களப்பா?’

‘கொஞ்சம் பொறும்மா. அம்மா பேசணும்ன்னு சொல்றாங்க.’

ரம்யா பேசும் நிலையில் இல்லையெனறாலும், அம்மா கேட்டதற்கு எல்லாம் சம்பிரதாய வார்த்தைகளாகப் பொய் சொன்னாள்.

எத்தனை எத்தனை கனவுகளோடும் ஆசையோடும் விமானம் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். என்னுடைய இந்த சோகமான நிலை அறிந்தால் இவர்களால் தாங்க முடியுமா?

கண்களில் தூக்கம் சொருகியது. நினைவுகள் எல்லாம் விழிகள் வழியாய் இறங்கிப் போய் தொலைந்தால் இமைகளை மூடி தூங்கலாம் போலிருந்தது.

‘நீங்கள் உள்ளறையில் படுத்துக்கொள்ளுங்கள்’ என்றான் விக்கி .

‘இல்லை நான் வெளியிலே படுத்துகிறேன்’ என்று அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அவளை உள்ளே படுக்கை அறையில் படுக்கச் சொல்லிவிட்டு வெளியே அவன் சோபாவில் படுத்துக்கொண்டான்.

அவளுக்குத் தூக்கமே வரவில்லை.

யார் இவன்? எந்த நாட்டுக்காரன்? எந்த மதத்தவன்? என்ன சாதிக்காரன்? வீட்டில் என்ன மொழி பேசுவான்? இன்று மாலை வரை இவன் யாரென்று எனக்கும் தெரியாது. ஆனால் இப்பொழுது இந்த நொடியில் எல்லாமே இவன்தான் என்று ஆகிவிட்டானே.

கடந்த மூன்று மாதங்களாக எல்லாமே வேகவேகமாக தனது வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்த்தாள்.

தயாநிதியின் நினைவு வந்தது. எவ்வளவு நல்லவன். இந்த விக்கிப் போலவே பிறருக்கு உதவும் தயாள குணம் கொண்டவன். அவனை மனதார விரும்பினாள். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்திருந்தாள். எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டை போட்டார் அப்பா.

தயாநிதியும் அவளும் கிணத்துக்கடவு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பள்ளிக்கூடத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அழகான மாணவிகளில் ரம்யாவும் ஒருத்தி. அவள் தனது காதலியாகிவிட கூடாதா என்பது ஒவ்வொரு மாணவனின் கனவு.

தயாநிதிக்கு எப்பொழுதுமே படிப்புதான். மாணவிகள் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. தோற்றத்தில் கம்பீரமாக இருப்பான். நல்ல வளர்த்தி. நீண்ட தோள்கள். நிமிர்ந்த முதுகு.. வலிமையான கைகள், கூரான பார்வை, நேரான சற்று நீண்ட மூக்கு. தன்னம்பிக்கையும் கொஞ்சம் வெட்கமும் கலந்த கருந்திராட்சை விழிகள். எட்டிப்பார்க்கும் மீசை. அளவான சுருட்டை முடி .

ரம்யாவுக்கு அவன்மீது இனம் தெரியாத ஒரு ஈர்ப்பு வந்தது. பாடங்களில் ஏதேனும் சந்தேகம் வந்தால் எல்லோருக்கும் உதவுவான். வகுப்பில் கொடுக்கும் அசைன்மென்ட் முதலில் முடிப்பவன் அவனாகத்தான் இருப்பான். ஆனால் அது எல்லோரிடமும் ஒரு ரவுண்டு சென்று விட்டு கடைசியாகத் தான் ஆசிரியர் கைக்குப் போய்ச்சேரும். பள்ளிக்கூடத்தின் மொத்த பெண்களுக்குமே கனவு நாயகனாகத் திகழ்ந்தான். பன்னிரண்டாம் வகுப்பின் இறுதி நாட்கள். எப்படியாவது தன் விருப்பத்தினை அவனுக்குச் சொல்லிவிட வேண்டுமென்று துடித்தாள். ஒரு முறை கவிதை ஒன்றை எழுதி அவனிடம் காட்டி எப்படி இருக்கிறது என்று கேட்டாள். அந்தக் கவிதை அவளுடைய மனக்கிடங்கை அவனுக்கு வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஆனால் அவன் அதைப் படித்துவிட்டு நன்றாக இருக்கிறது. நல்ல கற்பனை. ஒற்றுப் பிழைகள் சரி செய்ய வேண்டும். இலக்கணப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும் என்று வகுப்பு எடுத்தான். தொடர்ந்து எழுதுங்கள் என ஊக்கப்படுத்தினான். சுத்த வாத்து என்று எண்ணிக்கொண்டாள்.

கல்லூரி படிப்பை இருவரும் கோயம்புத்தூரில் சென்று படித்தார்கள். அவன் பிஎஸ்ஜி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியிலும் அவள் ‌பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியிலும் படித்தார்கள். அவள் பி.காம்‌. அவன் வரலாறு பிரிவு. யுபிஎஸ்சி எழுத இதுதான் சரி என்றான்.

கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்திலேயே ஒரு மாலையில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அவள் அருகில் வந்தான்

அவளுக்குள் படபடப்பு. வியர்த்து விட்டது.

‘நீங்க எந்த காலேஜ்?’

அவளுக்குச் ஏமாற்றமாக இருந்தது. தான் அவனைப் பற்றிய விவரங்கள் தெரிந்து வைத்திருக்கும் போது, தன்னைப் பார்த்து எந்த காலேஜ் என்று கேட்கிறானே என ஏமாற்றமாக இருந்தது.

அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதிகமாகப் பேச மாட்டான். ஒன்றிரண்டு வார்த்தைகள்.

அலைபேசி எண் இருந்தாலும் எப்போதும் அழைத்ததில்லை, குறுஞ்செய்தியும் அனுப்பியது இல்லை.

திடீரென ஒருநாள் தலைகீழாக மாறிவிட்டது.

அவனுடைய எண்ணிலிருந்து எதிர்பாராத அழைப்பு. ஆச்சரியமும் உற்சாகமும் பொங்க எடுத்தாள்.

அவன் குரலில் ஒரு பதட்டம். அவனுடைய நண்பன் ஒருவனுக்கு சாலை விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவசரமாகக் பணம் வேண்டி இருப்பதால் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து உதவி செய்கிறார்களாம். அவளால் ஏதாவது உதவமுடியுமா என்று கேட்டான்.

‘சரி நிச்சயமாக’ என்று சொல்லிவிட்டாள். கையில் ஒன்றும் பெரிதாக இல்லை. தோழிகளுடன் வாங்கி கணிசமான தொகையைக் கொடுத்தாள்.

கங்கா ஹாஸ்பிட்டலில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.

இதற்குப் பிறகு இருவரிடமும் நெருக்கம் ஏற்பட்டது.

ஒருமுறை நண்பர்களாகச் சேர்ந்து 3 மோட்டார் சைக்கிளில் ஊட்டி சென்றார்கள்‌.

வாழ்க்கையில் எத்தனையோ வசந்த காலங்கள் வந்து சென்றாலும் கூட, கவலை ஏதும் அறியாத, காதல் அரும்பும் அந்த இளமை காலத்தில் வருபவற்றுக்கு ஈடு-இணையே இல்லை.

முதலில் பொட்டானிக்கல் கார்டன். படகுத் துறை ‌ செர்ரிங் கிராஸில் ஐஸ் கிரீம். தொட்டபெட்டா சென்றார்கள். திரும்பி வரும் வழியில் சிம்ஸ் பூங்காவிற்குப் போக வேண்டும் என ரம்யா வற்புறுத்தினாள். மேபிள்ஸ் மரத்துக்குக் கீழே இருவரும் நின்று கொண்டிருந்தனர். அதுவரை சற்று வெய்யிலாக இருந்த பருவநிலை மாறி திடீரென மேகமூட்டமாகிப் பனிப் போர்த்தியது.

தயாநிதியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்ட ரம்யா,

‘உனக்குத் தெரியுமா நான் உன்னை எவ்வளவு விரும்புறேனு?’

‘தெரியும்.’

‘தயா நான் உன்ன…….’ அவளைச் சொல்ல விடாமல் தன் விரல்களை அவள் உதட்டின் மீது வைத்து,

‘அய் லவ் யூ ரம்யா’ என்றான்

‘ஒ சார் தான் ஃபர்ஸ்ட் சொல்லனுமா?’

அணைத்துக்கொண்டாள்.

‘நேரமாகிறது வா போகலாம். இருட்டுவதற்குள் மலை இறங்குவது நல்லது’ என்றான்.

அதற்குப்பின் அந்த பயணம் முழுவதும் அவள் மிதந்தாள். இரவு அன்னபூர்ணாவில் பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டது கூட அவளுக்கு நினைவில்லை. பின்னொரு சமயம் அவன் அதைச் சொல்லும் போது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது

பேசாமல் தயாநிதியையே கல்யாணம் செய்துக் கொண்டு இருந்திருக்கலாம்.

பாழாப் போன சாதி அந்தஸ்துன்னு சொல்லி அநியாயமாகப் பிரித்து விட்டார்களே. ஆற்றாமையில் அழுதாள்

எப்பொழுது தூங்கினாள் என்று தெரியாது. காலையில் விக்கி கதவு தட்டிய போது திடுக்கிட்டு எழுந்தாள்‌.

‘சாரி கூடுதலாக தூங்கி விட்டேன்’

‘பரவாயில்லை. குளித்துவிட்டு தயாராகுங்கள் பிரட் வெண்ணெய் இருக்கிறது. பால் இருக்கிறது. சீரியல்ஸ் உள்ளது. சாப்பிடுங்கள். ஒருவேளை இவ்வுணவு உங்களுக்குச் சலிப்பு ஏற்படுத்தினால், பக்கத்திலேயே இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கிறது. அங்கே சாப்பிட்டுக் கொள்ளலாம்’.

‘உங்களுடைய இன்றைய திட்டம் என்ன?’

‘எனக்கு இன்றைக்கு மிக முக்கியமான வேலை. நேற்றைக்கு நாம் சென்ற காவல் நிலையத்துக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதற்கு மேப்பில் வழி சொல்கிறேன்’.

பாரிஸ் நகரம் பிரம்மாண்டமாக இருந்தாலும் முதல்முறை செல்பவர்கள் கூட யாருடைய உதவியும் இல்லாமல் எளிதாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடியும். காரணம் ரயில் போக்குவரத்து சீராக இயங்கும். அதைப்போல டிராம், பேருந்து என எல்லா இடத்தையும் இணைக்கக்கூடிய வசதி உண்டு. நகர ரெயில்களின் வரைபடத்தைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாகக் கைப்பேசியில் உள்ள ஜிபிஎஸ் உதவி செய்யும்.

‘நான் பிற்பகல் 3 மணிக்கு வந்து விடுவேன். பிறகு உங்களது பெட்டிகளை எடுத்துக்கொண்டு உங்கள் கணவர் வீட்டிற்குச் செல்லலாம்’

‘ம். சரிங்க’.

குழந்தைக்குப் பாடம் எடுப்பது போல அழகாக விளக்கினான். இந்தியன் ரெஸ்டாரன்ட் எங்கே இருக்கிறது என்று மேப்பில் காட்டினான்.

‘நீங்கள் இங்கே பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த கைப்பேசியை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதனைப் பயன்படுத்துவதில்லை உங்களைப் போன்று நண்பர்கள் யாராவது வந்தால் உதவிக்கரமாக இருக்கும்’.

வீட்டின் இன்னொரு சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பி விட்டான். விக்கிச் சொன்னதுபோல எந்த சிரமமும் இன்றி காவல் நிலையத்திற்கு வந்தாள்.

கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான காகிதங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர். ரம்யாவைக் கண்டவுடன் அதிகாரி ,

‘சற்று உட்காருங்கள் அழைத்து வரச் சொல்கிறேன்’.

‘என்ன ஆயிற்று ?’ என்று கேட்டாள்.

சுருக்கமாக, தெளிவாக அவன் புரிந்த குற்றத்தைச் சொன்னார்.

கிருஷ்ணமூர்த்தியும் அவனுடைய இன்னொரு பார்ட்னரான ரோஸலின் இருவரும் இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து இந்தோனேசியா முதலிய நாடுகளிலிருந்து பல்வேறு விதமான ஆயத்த ஆடைகளைத் தருவித்து பாரிஸ் நகரம் மற்றும் பிரான்ஸ் நாட்டில் இருக்கிற வேறு சில நகரங்களில் உள்ள பெரிய சிறிய கடைகளுக்கு வழங்குவதை தொழிலாகக் கொண்டிருந்தனர். பெரிய அளவில் இல்லையென்றாலும் சுமாரான அளவில் செய்து கொண்டிருந்தனர். பெரிய இலாபம் பார்க்க முடியாததால் வேறு வழிகளில் பணம் பார்க்க முயன்றார்கள். இந்தோனேஷியாவில் சில போலி கம்பெனிகள் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்வதற்காக வங்கிகளில் லெட்டர் ஆஃப் கிரடிட் வாங்குவார்கள். ஏற்றுமதியே நடக்காது. நடந்தது போலப் பொய்யாகக் கணக்குக் காட்டுவார்கள். கிருஷ்ணமூர்த்தியின் கம்பெனி இங்கிருந்து கொண்டு அத்தகைய பொருட்களைத் தருவித்ததாகப் பொய்யாக உறுதி செய்வார்கள். அத்தகைய போலி நிறுவனங்கள் அவ்வாறு பெறப்பட்ட பணத்தை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி பன்மடங்கு பெருக்கிக் கொள்வார்கள். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு கணிசமான பங்குண்டு. அத்தகைய வங்கி ஒன்றில் யாரோ நியாயமான அதிகாரி பொறுப்புக்கு வர, இந்த முறைகேடுகளைக் கண்டுபிடிக்க, அது இங்குச் சுற்றி அங்குச் சுற்றி இறுதியில் அந்நாட்டின் சிஅய்ஏ கைக்குச் சென்றது. தவறு இழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கும் போது அதன் தொடர்ச்சியாக சிஅய்ஏ இன்டர்போல் வாயிலாக பாரிஸ் வரை தன்னுடைய வலையை விரித்தது. அதில் சிக்கிய ஒரு மீன் தான் கிருஷ்ணமூர்த்தி. ஃபிரெஞ்சு போலீஸார் இங்கே விசாரிக்கும்போது இந்நாட்டிலும் பல பொய்யான தகவல்களைத் தந்து தில்லு முல்லுகள் செய்திருப்பது தெரிந்தது. கிருஷ்ணமூர்த்தியை நெருங்குவதற்குள் அவன் திருமணத்திற்காக இந்தியாவிற்குச் சென்று விட்டான்.

திரும்பி வந்தவன் மாட்டிக் கொண்டான்.

அதிர்ந்தாள்.

‘உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களிடம் ஒரு ஸ்டேட்மென்ட் மட்டும் வாங்க வேண்டும். அதுவும் வெறும் சம்பிரதாயத்திற்காக. மற்றபடி, நீங்கள் பாரிசை உல்லாசமாய் வலம் வரலாம்’.

‘சரிங்க’.

கிருஷ்ணமூர்த்தி வந்தான். இப்போது சுத்தமாக அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தான். சவரம் செய்யப்படாத முகம். ஒளியில்லாத கண்கள். கலைந்து போயிருந்த தலை முடி. துவண்ட உடல்.

‘சாப்பிட்டீங்களா?’

‘ம்.’

‘இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க?’

‘எனக்கே தெரியல’.

‘என்ன தப்பு பண்ணிங்க?’

‘இந்தோனேஷியா இருக்கிற கம்பெனிக்காரங்க இங்க பொருட்கள் அனுப்பியதாகப் பொய்யான கணக்குக் காட்டி இருந்தாங்க’.

‘இதுல உங்க தப்பு எங்க இருக்கு?’

‘பொருட்கள் வந்துவிட்டதாக ஒரு டெலிவரி ரெஸிட் கொடுக்க சொன்னாங்க. நானும் கொடுத்துவிட்டேன்’.

‘அப்படிக் கொடுக்கிறது தப்புன்னு தெரியாதா?’

‘அவங்க அங்க ஏமாத்துறாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?’

எவ்வளவு அழகாகப் பொய் சொல்கிறான். இவனிடத்தில் ஏமாந்து விட்டோம்.

‘சரி இப்போ இதுக்கு என்ன வழி?’

‘இவங்க நீதிமன்றத்துக்கு கூட்டிக்கிட்டு போன பிறகுதான் தெரியும்’.

‘நாம் ஏதாவது லாயர் வைக்க வேண்டாமா?’

‘என்னோட பார்ட்னர் ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணி இருக்கா?’

‘இப்ப அவங்க எங்க இருக்காங்க?’

‘இங்கதான். அவளையும் கைது செய்து இருக்காங்க’.

இன்னொரு அறை திறந்து ஒரு பெண் வெளியே வந்தார். பிரவுன் கலரில் ஸ்கர்ட்டும் சந்தன நிறத்தில சட்டையும் அணிந்திருந்தாள். பாப் முடி வைத்திருந்தாள். அவள் கண்களிலும் அயர்ச்சியும் உடலில் தளர்ச்சியும் தெரிந்து.

கிருஷ்ணமூர்த்தியின் பக்கத்தில் வந்து நின்று கொண்டு ஒரு கையை எடுத்து அவன் தலை மீது வைத்து,

‘ஹவ் ஆர் யூ டார்லிங்?’.என்றாள்.

டார்லிங். அதிர்ச்சி.

அவன் சங்கடத்துடன் நெளிந்ததைக் கவனித்தாள்.

‘ரோசலின் திஸ் இஸ் மை வைஃப் ரம்யா’ என்றான்.

‘ஹாய் ரம்மி ஹவ் டு யூ டு.?’ கை நீட்டினாள்.

ரம்யாவுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் கை நீட்டினாள்.

எரிச்சல் வந்தது.

‘இப்ப நான் என்ன பண்ணட்டும்?’ சம்பிரதாயத்துக்காக கேட்டாள்.

‘ஐ யம் டெரிபிளி சாரி ரம்யா. நானும் குழம்பிப் போய் இருக்கேன். என்னால் உன்னுடைய வாழ்க்கையும் வீணாகப் போய்விட்டது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் கல்யாணமே செய்து இருக்க மாட்டேன்’.

பொய். மீண்டும் பொய்.

‘தயவுசெஞ்சு உடனே இந்தியாவுக்கு போன் பண்ணி டேக் தெர் ஹெல்ப். நான் எப்படியாவது வெளியில் வந்துடுவேன். வீடு சௌகரியமா இருக்குதா?’

‘நான் இன்னும் அங்க போல’.

‘அப்படியா? அப்ப நேத்து எங்க தங்கின?’

‘நேத்து வந்தாரே விக்கி, அவரோட வீட்டிலேயே தங்கிட்டேன்’.

அவன் முகம் கருத்தது. ‘முன் பின் தெரியாதவர்களோடு ‌ அப்படியெல்லாம் போய் தங்குவது ஆபத்து’.

முன் பின் தெரியாதவன கட்டிக் கிட்டு இங்க வந்து நான் சந்திக்கிற ஆபத்தை விடவா இனிமேல் பெரிதாக வந்து விடப் போகிறது? கேட்க நினைத்தாள். கேட்கவில்லை..

சந்திப்பு நேரம் முடிந்துவிட்டது என காவல்துறை அதிகாரி நினைவுபடுத்தினார். அவன் ஆண்களுக்கான அறைக்குள் செல்லவும் அவள் பெண்களுக்கான அறைக்குள்ளும் சென்றனர்.

அதிகாரி ஒரு தாளை நீட்டினார். சில சம்பிரதாய கேள்விகள். பதில் அளித்து விட்டு ரம்யா கிளம்பினாள்.

கால் போன போக்கிலே நடந்தாள்.

சரி அவன் வீட்டையாவது போய் பார்ப்போம் என்று முடிவு செய்தாள்.

அரை மணியில் வந்து சேர்ந்தாள். பாஸ்கோட் அமுக்கினாள். பூட்டு கிர்ர்ங்ங் என்ற ஒலியோடு திறந்தது

எத்தனை எத்தனை கனவுகள் எதிர்பார்ப்புகளோடு அவள் பெற்றோர் உறவினர் ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் வாழ்த்தி அனுப்பி வைக்கப்பட்ட அவள் தற்போது அனாதையாக அந்த வீட்டுக்குள் காலடி வைக்கிறாள்.

பிரம்மாண்டமான தனி வீடு. பரந்து கிடக்கும் வரவேற்பறை. இடதுபுறம் ஒரு அறை. அலுவல் அறை. ஹாலின் இறுதி பகுதியில் சாப்பாட்டுக் கூடம். அதற்கு வலது பக்கமாக விஸ்தாரமான சமையலறை. வீட்டுக்குப் பின்புறம் செல்ல ஒரு கதவு. வரவேற்பறையின் வலது புறத்தில் மாடிக்குச் செல்வதற்குப் படிக்கட்டுகள். பக்கத்துலயே கீழ்த் தளத்திற்குச் செல்வதற்குப் படிக்கட்டுகள் இருந்தன. சமையல் அறை, வரவேற்பறை எல்லாம் சுத்தமாக இருந்தது. மாடிக்குச் சென்றாள். மூன்று அறைகள். இரண்டு ஒரே அளவிலிருந்தன. ஒன்றில் கட்டிலும் படுக்கையும் இருந்தது. இன்னொரு அறையில் வீட்டுத் திரையரங்கு அமைக்கப்பட்டிருந்தது. கடைசியிலிருந்தது பிரம்மாண்டமான படுக்கையறை. கட்டிலும், படுக்கையும், மேலிருந்த அலங்கார விளக்குகளும், திரைச்சீலைகளும் சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வைக்கப்பட்டிருந்த கலைப்பொருட்களும் அந்த அறையின் வனப்பைப் பன்மடங்கு கூட்டியது. செழிப்பாகத் தான் இருக்கிறான் போலும்.

வீடு முழுவதும் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. எல்லாப் பருவ காலங்களிலும் ஒரே வெட்ப நிலை நிலவ குளிர் சாதன இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. அறைக்கு வெளியே இருந்த பால்கனிக்கு வந்தாள். கீழே பரந்து விரிந்திருக்கும் பெரிய புல்வெளி. எல்லா பக்கமும் பச்சை பசேலென்று இருந்தது. ரம்மியமான சூழல்.

விக்கி வீட்டுக்குப் போய் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மாலைக்குள் வந்து விட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

கீழே வந்தவள் அடுத்து கீழ்த் தளத்திற்குச் சென்றாள். அங்குப் பெரும்பான்மையாக ஓட்டை உடைசல் சாமான்களும் சில உடற்பயிற்சி உபகரணங்களும் காணப்பட்டன.

ஒரு பெரிய கருப்பு பையில் குப்பைகள் போட்டுக் கட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்து விட்டுக் கடந்து சென்றவள் திடீரென ஏதோ நினைத்துக் கொண்டு மீண்டும் அந்த பை அருகினில் வந்தாள்.

பையைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆவலோடு பார்த்தாள். பீட்சா சாப்பிட்ட பெட்டிகளும், சீரியல்ஸ் இருந்த அட்டைப் பெட்டிகளும் சோப்பு பெட்டிகளும் பியர் கேன்களும் காணப்பட்டன. பையை மூடப் போனவளுக்கு வித்தியாசமாக சில பெட்டிகள் தெரிந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தாள். வாசகங்கள் பிரெஞ்சிலிருந்தாலும் கூட அது என்ன என்பதைப் புரிந்துகொண்டாள் ஆணுறைகள் இருந்த பெட்டிகள். உறைந்து போனாள். பையை முழுவதுமாக ஆராயத் தொடங்கினாள். ஒரு புகைப்படம் இரண்டாகக் கிழிக்கப்பட்டு இருந்தது. இன்னொன்று கசக்கிப் போடப்பட்டிருந்தது. இரண்டிலும் கிருஷ்ணமூர்த்தி ஒரு பெண்ணோடு மிகவும் நெருக்கமாக இருந்தான். அந்தப் பெண்,

அவனுடைய பார்ட்னர் ரோசலின்.

அவன் வீடு திடீரென அந்நியமாகப்பட்டது. அந்த நொடியே அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் போல் தோன்றியது.

புறப்பட்டாள்.

விக்கி வீட்டுக்கு வந்தாள். பசி. மணி மூன்று. இந்தியன் ரெஸ்டாரண்டுக்கு நடந்து சென்றாள். சிறிய கடைதான். நின்று சாப்பிடுவதற்கு மார்பளவு உயரத்திற்கு நான்கு வட்டவடிவ மேசை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மேசையிலும் சிரமமின்றி மூன்று. பேர் சாப்பிடலாம்.

எல்லாமே இந்திய உணவுகள். இடியப்பம், தேங்காய்ப் பால், சொதி சம்பல், ஆடு, கோழி, மீன், குழம்பு வகைகள் மற்றும் பொரித்த மீன்கள். சைவ உணவுகள், சோறு, பிரியாணி, சப்பாத்தி எனப் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புப் பலகையில் வண்ணமயமாய் படங்களுடன் ஒளிர்ந்தன.

கடையில் நடுத்தர வயது பெண்மணி ஒருவரும் அவரை விடச் சற்று வயது கூடிய ஒருவரும் பிறகு ஒரு சிறு பெண்ணும் இருந்தார்கள்.

‘என்ன இருக்கிறது என்று கேட்டாள் ரம்யா?’

‘அந்தப்பலகையில் உள்ள எல்லாமே கிடக்கடா. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்கோ அந்த பெண்மணி.

‘சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும் வேண்டும்’.

‘நீங்கள் தமிழ்நாடா? ‘தமிழ் பேசத் தெரியும் தானே?’

‘ம் தெரியுங்க. உங்களுக்கும் தமிழ்நாடா?’

‘இல்லை. நாங்கள் இலங்கை’

‘ஒ’.

‘யுத்தம் நடக்கேக்க வந்த நாங்கள் இப்ப ஏதோ சீவியம் நடத்திக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கை என்டாலே போராட்டம் தானே.. இருந்தாலும் எங்கட பிள்ளைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறம்’.

ம்….எல்லோருக்கும் வாழ்க்கையில் போராட்டம். சிலருக்கு வாழ்க்கையே போராட்டம். நினைக்கும்போதே ரம்யாவின் கண்கள் குளமாகின.

‘நீங்கள் இந்த ஊருக்கு புதுசா? உங்களை உதுக்கு முந்தி இங்க கண்டதில்லை’.

‘ஆமாங்க’.

‘என்ட பேர் நீலவேணி. உங்கட பேர் என்ன?’

‘ரம்யா’.

இதற்குள் அந்த ஆண் சுடச்சுடச் சப்பாத்திக்கள் தட்டில் கொண்டு வந்தார்.

‘கோழி குழம்பு மீன் குழம்பு ருசியாக இருக்கும். சாப்பிட்டுப் பாருங்கோ’.

ரம்யா தயங்கினாள்.

‘விலை பற்றி யோசிக்க வேண்டாம் சப்பாத்தி குழம்புக்குச் சேர்த்து ஒரே விலைதான். எல்லாமே ஒரு கரண்டி குடுப்பம். விலையொன்றுதான். நல்லா ருசிச்சி சாப்பிடுங்கோ’.

அவர்கள் சொன்ன விதம் அவளுக்குப் பிடித்தது.

‘சரி’ என்றாள்.

‘புதுசா கல்யாணமாகி வந்தனீங்களோ?’

இவள் திகைக்க,

‘உங்களின்ற கழுத்துல மஞ்சள் போகாத தாலிக்கயிற பார்த்துக் கேட்டனான்’. பல் தெரியச் சிரித்தார் நீலவேணி.

‘ஆமாங்க’. சொல்லும்போது அவள் கண்கள் தாழ்ந்தன.

‘உங்கட அவர் எங்க?’

எரிச்சல் வந்தது. ஏன் சாப்பிட வந்தோம் என்று தோன்றியது.

பதில் சொல்லாமல் அவள் சாப்பிடத் தொடங்கினாள்.

அந்த அம்மாவின் கணவர்,

‘எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைக்கட்டோ?. நேரம் ஆகிட்டு’.

ரம்யா சற்று வேகமாகச் சாப்பிட முயற்சிக்க

‘நீங்க அவசரப்படவேண்டாம். மெதுவா சாப்பிடுங்கோ. கடை மூட மாட்டோம். வெறும் சாமான்களையெல்லாம் எடுத்து உள்ளே குசினியில் வைப்போம். பிறகு மாலை ஆறு மணிக்கு திருப்பி திறப்பம்’.

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை நீலவேணி பேசவில்லை.

சாப்பிட்டுவிட்டு எவ்வளவு பணம் என்று கொடுக்க முயலும் போது அவர்,

‘உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா?’

‘ஏன் அப்படி கேக்கறீங்க?’

‘நான் உங்கள விடப் பெரியவ. என்னோட அனுபவம் சொல்லுது. புதுசா கல்யாணம் ஆன பெண்ணுக்குரிய சந்தோஷம் வெட்கம் எதிலுமே உங்களின்ற முகத்துல காணோம். ஏதோ ஒரு சோகம் உங்களின்ற முகத்தில தெரியுது’.

ரம்யா வியந்தாள். எப்படி தன் முகத்தைக் கண்டு சரியாகக் கணித்தார் என்று.

‘எந்த பிரச்சனையாக இருந்தாலும் நாளாகச் சரியாகிடும் பிள்ளை. ஊர்ல அப்பா அம்மாவ பிரிஞ்சி தனியா வந்திருப்பது கஸ்டந்தான் போகப்போகப் பழகிடும்’.

ரம்யா ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்தபடி இருந்தாள்.

‘உங்கட அவர் எங்க இருக்கிறார்?’

நிமிர்ந்து அவர் முகத்தை ஒரு நொடி வெறுமனே பார்த்து பின் அழுத்தமாக

‘ஜெயில்ல இருக்காரு’. சொல்லும்போதே கண்ணீர் கொட்டியது.

நீலவேணி அக்கா அதிர்ந்தார். அவளை அணைத்துக் கொண்டு

‘என்ன சொல்றீங்கோ’.

ரம்யா அவர் தோளில் சாய்ந்து கொண்டு கதறி அழுதாள்.

எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள். ஒன்றுவிடாமல் நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டாள்.

நீலவேணியால் அதிர்ச்சியிலிருந்து எளிதாக வெளிவர முடியவில்லை.

‘பொலீஸ்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?’

‘எனக்கு ஒன்னுமே புரியவில்லை. என்ன செய்றதுன்னு தெரியல’.

‘உங்க வீட்ட கதைக்கவேண்டியதுதானே?’

ரம்யா விழித்தாள்.

‘இல்ல அப்பா அம்மா அவையலோயோடு பேசலாம் தானே?’

‘அப்பாவுக்கு ஹார்ட் பிராப்ளம். அதான் யோசனையா இருக்கு’.

இவ்வளவு பெரிய பிரச்சனையில் இருக்கும் போது எப்படியாவது நீங்க அவங்களுக்கு சொல்லி விடுவது நல்லது. என்ன? ‘இப்ப எங்கே தங்கி இருக்கநீங்க?’

‘விக்கி சார் வீட்ல’.

‘அப்போ நீங்கள் உங்களின்ற புருஷன் வீட்டுல தங்க போறதில்லையா?’

‘எனக்கு அங்க போகவே பிடிக்கல’.

‘பிறகு எங்க தங்க போறனீங்கள்?’

‘எனக்கு ஒண்ணுமே புரியல’.

‘இப்ப உங்கட திங்ஸ் எல்லாம் எங்க கிடக்கு?’

‘விக்கி சார் வீட்ல’.

‘அங்க தங்க போறனீங்களா?

‘எவ்வளவு நாளைக்கு தங்கறதுன்னு தெரியல’.

‘இப்ப உங்கட யோசனை என்ன?’

‘அப்பா அம்மா கிட்ட பேசலாம்னு இருக்கேன். இந்தியாவுக்குத் திரும்பி போய்டலாமான்னு யோசிக்கிறேன்’.

நீலவேணியின் கணவர் மனைவியை உள்ளே அழைத்தார்.

இருவரும் ஏதோ பேசிக் கொண்டனர். நீலவேணி,

‘என்ர கணவர் என்ன சொல்றார் என்றால் நீங்கள் இந்தியா போகும் வரை எங்களின்ட வீட்டிலேயே தங்கலாம்னு சொல்றார். எங்களின்ற வீடு அவ்வளவு பெரிசாக இல்லையென்றாலும் நீங்கள் தங்கிக்கிறதுக்கு எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. நீ எனக்குத் தங்கை மாதிரி. தமிழாக்கள் நாங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யவேண்டுமென்று எங்க வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவார்’.

அன்பாய் அணைத்துக் கொண்டார்.

‘நீங்கள் அந்த விக்கி சாரோட வீட்டுக்குப் போய் உங்கட பொருள் எல்லா எடுத்துக்கொண்டு எப்ப வேணும்னாலும் இஞ்ச வரலாம் இது உங்கட இடம் போலத்தான். இலங்கையில் இருந்து யார் வந்தாலும் முதலில் எங்கள் வீட்ட வந்து இருப்பினும். எங்களால முடிஞ்சவரை மற்றவர்களுக்கு பயனா இருக்கணும். அதனால எந்த கவலையும் இல்லாம புறப்பட்டு வாங்க. நான் சொல்றது விளங்கிட்டா?’

‘சரி’ என்று கூறிவிட்டு வீட்டுக்குத் திரும்பினாள்.

விக்கி வந்திருந்தான்.

‘ஹாய் குட் ஈவினிங்’

‘குட் ஈவ்னிங் விக்கி”..

‘வழி கண்டுபிடிச்சு சரியா போக முடிஞ்சுதா?’

‘ஒ சூப்பர். நீங்கதான் எல்லாமே சரியாகச் சொல்லிக் கொடுத்துட்டீங்களே’.

‘யு ஆர்‌ ஸ்மாரட். சரி என்ன ஆச்சு?’

‘உங்க கூட பேசணும். சில முடிவுகள் எடுக்க உங்களுடைய உதவி தேவை’.

‘ஓ தாராளமாக. நாம வெளியே காலாற நடந்து போலாமா?’

”எங்கேயாவது உட்கார்ந்துகிட்டு பேசலாமே.’.

‘குட். பக்கத்துல ஒரு நல்ல பூங்கா இருக்கு. அங்க போலாமா?’

‘ம். சரி’..

‘எனக்கு ஒரு பத்து நிமிஷம் குடுங்க காஃபி போட்டுக்கிட்டு வந்துடறேன். உங்களுக்கு வேணுமா?’

‘இப்ப தான் சாப்பாடு சாப்பிட்டேன் எனக்கு வேண்டாம்’.

அப்பாவிடம் பேசலாம் என்று அவரை அழைத்தாள்.

‘என்னமா ரம்யா காலையிலிருந்து உன் போன் வரும்னு நானும் அம்மாவும் எதிர்பார்த்திட்டே இருந்தோம்’.

பதில் சொல்ல யோசிப்பதற்குள்,

‘பெட்டிகளெல்லாம் பிரிச்சி அடுக்கி வச்சுக்கிட்டு இருப்பான்னு அம்மா சொன்னாங்க’.

‘ம்’.

‘வீடெல்லாம் வசதியா இருக்கம்மா? ‘

‘இருக்குங்கப்பா’.

‘பக்கத்துல தமிழ் பேசறவங்க இருக்காங்களா?”

‘ம்’.

‘என்னம்மா சரியா பேச மாட்டேங்குற?’

‘ஒன்னும் இல்லங்கப்பா’.

‘நாங்க எப்படி இருக்கோம்னுன்னு ஒரு வார்த்தை கூட கேக்கலையேமா ‌‌நீ’.

விழித்தாள்.

அப்பா ஸ்பீக்கரில் போட்டு இருந்தார். அம்மாவும் இப்போது அவள் பங்குக்கு

‘ஏண்டா தங்கம், சரியாவே பேச மாட்டேங்குற? இன்னும் பழசையெல்லாம் நினைச்சுக்கிட்டு இருக்கியா?’

‘இல்லைங்கம்மா.

‘புது இடம் அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாளானால் பழகிடும்’.

‘ம்’.

‘அவரு எப்படி இருக்காரும்மா?’ இது அப்பா.

‘அவர் சரி இல்லங்கப்பா. மோசம் போய்ட்டோம்.’.

‘என்னாச்சு?’

‘ஏற்கனவே யார்கூடவோ தொடர்பு வச்சு இருக்காரு’.

இருவரும் கலங்கிப் போனது தெரிந்தது. சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு பிறகு அப்பா பேசினார்

‘ரம்யா நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோ. அப்பாவா இல்லாம ஒரு ஆம்பிளையா சொல்லறேன். அவரு பல வருஷமா அங்க தனியா இருக்காரு. இது எல்லாம் நீ பெரிசுபடுத்த வேண்டியதில்ல . இனிமே உன் கூட எப்படி இருக்கிறாருங்கறதுதான் முக்கியம்’.

அம்மா தொடர்ந்தாள்.

‘பெண் பிள்ளைங்க நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் போகணும். உங்க அப்பா ஆடாத ஆட்டமா? ‘

ரம்யாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. இருந்தாலும் அவர்களைப் புண்படுத்தி விடக்கூடாது என்று அமைதி காத்தாள்.

‘வாழ்க்கையில விட்டுக் கொடுத்துப் போவதும் சில விஷயங்களைக் கண்டும் காணாம இருக்கிறதும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வதும் பொறுமையா இருக்குறதும் பெண் பிள்ளைகளுக்கு ரொம்ப முக்கியம்மா’

காலங்காலமாக வழிவழியாக எடுக்கப்பட்ட பாடங்களை மகளுக்கு அம்மா எடுத்தாள்.

‘சரிங்கம்மா’

‘புது இடம் புது மனிதர் அப்படித்தான் இருக்கும். எல்லாம் போகப் போக பழகிவிடும்’.

‘ம்’.

‘நல்லா கவனத்தில் வச்சுக்கோ’.

‘ம். சரி’.

‘எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லு. என்ன பொண்ணுமா நீ?

மாப்பிள்ளை எங்கமா?’

‘சரிங்கம்மா’.

‘நாம ஒன்னு கேட்டா அவ ஒன்னு சொல்றா பாருங்க’.

‘ரம்யா மாப்பிள்ளை எங்க அம்மா ?’ அப்பா.

‘ஜெயிலில’.

‘என்ன சொல்ற?’

‘இப்ப நான் சொல்ல போறதை அதிர்ச்சி அடையாம கவனமாக் கேளுங்க.

விமான தளத்தில் கைது செய்தது முதல் இன்று மாலை இந்தியன் ரெஸ்டாரண்டுக்குச் சென்று விட்டு வந்தது வரை தெளிவாக . எல்லாவற்றையும் சொன்னாள், ஒன்றைத் தவிர. விக்கி என்பதைத் தவிர்த்து ரிக்கி, பெண் என்று மாற்றி விட்டாள்.

உடைந்து போய் விட்டார்கள்.

அப்பா சுரத்தே இல்லாமல்,

‘அடுத்து என்ன செய்யலாம்’ என்று கேட்டார்.

‘யோசித்து நாளை காலை சொல்லுங்கள். என்னைப் பற்றி எந்த கவலையும் வேண்டாம். பாதுகாப்பா இருக்கிறேன்’.

போன் தொடர்பைத் துண்டித்தவுடன், விக்கி கேட்டான்,

‘அப்பா அம்மா அதிர்ச்சி அடைந்து விட்டார்களா?’

‘உங்களுக்கு எப்படி அப்பா அம்மாவிடம் பேசினேன் என்று தெரியும்? தமிழ் மொழி தெரியுமா?” நகைச்சுவையாகக் கேட்டாள்.

‘மகள் பெற்றோரிடம் பேசுவதைத் தெரிந்து கொள்ள மொழி அறிந்திருக்க அவசியமில்லை. உடல்மொழியே போதுமானது.. கிளம்புவோமா?’

பெரிய கிளாஸில் கருப்பு காஃப்பியை எடுத்துக் கொண்டான். எப்படிப் பால், சர்க்கரை இல்லாமல் சொட்டுச் சொட்டாக மணிக்கணக்கில் ருசித்துச் சாப்பிடுகிறார்கள். இந்த வெள்ளைக்காரர்களே இப்படித்தான் போலும். எந்த வேலையாக இருந்தாலும் பொறுமையாக நிதானமாக முழு ஈடுபாட்டுடன் செய்கிறார்கள். நமக்குத்தான் எல்லாமே அவசரம்.

அதைப் பூங்கா என்று சொல்லுவது சற்று கடினம். ஏக்கர் கணக்கில் அமைந்திருப்பதால் ஒழுங்குபடுத்திய காடு என்று சொல்லலாம். ஆங்காங்கே சில குடும்பங்கள் அமர்ந்திருந்தனர். சிறுவர்களும் சிறுமியர்களும் ஒடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இளம் காதலர்கள் ஒருவருக்குள் ஒருவர் எதையோ தேடிக். கொண்டிருந்தனர். ஒரு சிலர் உதடுகள் வழியே இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

உட்காருவதற்கு மரங்களால் அழகியலோடு வடிவமைக்கப்பட்ட நாற்காலிகளும் இருந்தன. ஒன்றில் அமர்ந்தார்கள். மாலை வெய்யில் வரவேற்றது. அருகில் ஒரு பைன் மரம்.

காலையிலிருந்து நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொன்னாள்.

‘இத்தனை வருடங்களாக உங்கள் கணவரோடு பழகியிருக்கிறீர்களே அவர் ஒரு மோசடி பேர்வழி என்பதை நீங்கள் உணரவில்லையா?’

‘ஒரு மாதத்தில் என்ன பெரிதாகத் தெரிந்துவிடும்?’

‘ஓரு மாதமா?’ அதிர்ச்சியுற்றான்.

‘எனக்கு ஏப்ரல் மாதத்தில்தான் அவரைப் பற்றித் தெரியும். மே மாதத்தில் கல்யாணம். இப்ப இங்கே’.

‘என்னால நம்பவே முடியவில்லை. அது எப்படி முன்னப்பின்ன தெரியாத ஒருத்தரை நம்பி உங்க வாழ்க்கையை ஒப்படைப்பீர்கள்?’ .

‘அம்மா அப்பா, பெரியவர்கள் எல்லாம் விசாரித்து, பிறகு இரண்டு பேருடைய ஜாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவு செய்வார்கள்’.

‘ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி என்றால் நீங்கள் யாரையும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்ள மாட்டீர்களா? காதல் என்பது உங்கள் ஊரில் இல்லையா?’

‘யார் சொன்னது இல்லை என்று. விருப்பப்படுவோம். காதலிப்போம். கைகூடா விட்டால் வேறு ஒருவரை மணந்து கொள்வோம். பிறகு மணந்து கொண்டவரைக் காதலிப்போம். அவ்வளவுதான்’.

‘விந்தை. நீங்கள் யாரையாவது விரும்பினீர்களா?’

‘ஆம்’.

‘இன்டர்ஸ்டிங். ஏன் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்கள்? சொல்வதற்குத் தயக்கமில்லை என்றால் சொல்லுங்கள்’.

‘சாதி, அந்தஸ்து?’

‘அப்படின்னா?’

‘அது எங்க ஊரோட தலையெழுத்து. பிறக்கும் போதே இவன் இந்த பிரிவைச் சார்ந்தவன் என்று வரையறுக்கப்படுகிறது. நான் உயர்ந்த சாதியாம். என் காதலன் தாழ்ந்த சாதியாம்’.

‘எனக்கு விசித்திரமாக இருக்கிறது. இன்னுமா இதுபோன்ற சிந்தனைகள்? சரி, முன் தலைமுறையினர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டுமே. நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் யாரென்ன செய்துவிட முடியும்?’

‘அவ்வளவு எளிதல்ல விக்கி. எங்கள் அப்பா அம்மா, ஒத்துக் கொண்டாலும்கூட எங்கள் ஜாதியைச் சார்ந்த மற்றவர்கள் என் காதலரைக் கொன்று விடுவார்கள்’.

‘ஷிட். போலீஸ், சட்டம், நீதிமன்றம் இவைகளெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டா இருக்கும்?”

‘அதெல்லாம் ஒன்றும் செய்யாது. எல்லாருமே இந்த கட்டமைப்பு அப்படியே இருக்கணும்னு விரும்பறாங்க. வேதனையான உண்மை’.

‘எனக்கு இதெல்லாம் புதுசு. சரி, இந்த காரணத்தினால்தான் உன்னுடைய காதலை இழந்தாயா?’

‘என்னுடைய முன்னாள் காதலர் இலட்சியவாதி. நன்றாகப் படித்து இந்தியாவின் மிக உயர்ந்த அரசுப் பணியான ஐஏஎஸ் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். தான் உயர்ந்த நிலையை அடைவதன் மூலம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமையும் அந்தஸ்தும் கொண்டு வரமுடியும் என்று நம்புகிறார். அவர் மீது கொண்டிருக்கும் தீராத காதலால் என் காதலை இழக்கத் துணிந்தேன்’.

‘இன்க்ரிடபிள். யு ஆர் ஏ கிரேட் பர்ஸன் ரம்யா’.

‘உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் விக்கி?

‘நான் கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவன்’.

‘பழைய சோவியத் ரஷ்யா? ‘

ஆம். என்னுடைய அம்மாவுடன் வாழ்ந்து வருகிறேன். நான் சிறுவனாக இருக்கும் போதே அப்பா அம்மாவை விவாகரத்து செய்துவிட்டார்.

நான் சிற்பங்கள் ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சியைச் செய்து வருகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன் அது விஷயமாகத்தான் ஃபிரான்ஸில் தங்கி உள்ளேன்’.

‘அப்படின்னா நீங்கள் இந்தியாவுக்கும் வரவேண்டும். அதுவும் நான் வசிக்கும் தமிழ்நாட்டில் ஏராளமான புராதன காலத்துச் சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன. 1300 ஆண்டுகளுக்கு முன்னால் பாறைகளில் செதுக்கப்பட்ட ஓவியங்களை எங்கள் ஊரில் மட்டும் தான் பார்க்க முடியும்’.

‘அப்படியா? என்னுடைய அடுத்த கலைப் பயணத்தை இந்தியாவில் அமைத்துக் கொள்கிறேன்’.

‘உங்களுக்குக் காதலி யாராவது?’

‘இருந்தாள்’.

‘என்னைப் போலவே உங்களுக்கும் இறந்தகாலம் போலும்’.

‘ஆனால் என்னுடைய காதலி இறந்து விட்டாள்’.

‘ஓ மை குட்னஸ். என்ன ஆச்சு?’

‘மார்பக புற்றுநோய். மூன்று மாதங்கள் ஆச்சு’.

‘அடடா. வெரி சாரி.’

‘தன்னுடைய அழகான மார்பகங்கள் மீது அவளுக்கு எப்போதும் ஒரு கர்வம் உண்டு. கொடுமை அதுவே அவள் உயிருக்கு உலையாய் அமைந்துவிட்டது’.

‘சிகிச்சை?’

‘புற்றுநோய்க்குக் காலம் கடந்த சிகிச்சை, மறுக்கப்பட்ட சிகிச்சை என்று சொல்லலாம். ஒரே மாதத்தில் எல்லாமே முடிந்துவிட்டது. அவள் போன பிறகு என் உலகமே சூனியமாகிவிட்டது. நானும் செத்து விடலாம் என்று முடிவு செய்தேன். அம்மாவின் நினைவு தடுத்துவிட்டது. என்னைத் தேற்றிக்கொண்டேன். நடைப்பிணமாக அலைந்தேன். விமான நிலையத்தில் உன்னைச் சந்திக்கும்வரை.

உன் பிரச்சினைகளைக் கண்டபோது உனக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. உண்மையாகவே இந்த இரு நாட்களாகத்தான் நான் இயல்பிற்கு திரும்பியுள்ளேன். உனக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்’.

‘அட. இங்க பாருடா. நான் அந்த விமான நிலையத்திலேயே ஒழிந்து போயிருப்பேன். ஆதரவாய் நின்று உதவி செய்த உங்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும் விக்கி’.

‘இருவரும் மாறி மாறி நன்றி சொல்லிக் கொண்டே இருப்போம்’.

இந்த இரு நாட்களில், முதன்முறையாக வாய்விட்டுச் சிரித்தாள்.

‘சரி உன்னுடைய அடுத்த திட்டம் தான் என்ன?’

‘நாளை காலை அப்பா அம்மாவிடம் பேசி இந்தியாவிற்குக் கிளம்ப வழி பார்க்கணும். நான் எதற்காக இங்கிருந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தி செய்த குற்றங்களுக்காக மன உளைச்சல் கொள்ள வேண்டும். அவரது வீட்டுக்குச் சென்று தங்குவதில் எனக்கு விருப்பமும் இல்லை’.

‘ம். நியாயம்தான்’

‘இன்று மாலை இந்தியன் ரெஸ்டாரண்டில் சாப்பிடச் சென்றபோது அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்று தெரிந்ததும் நெருக்கம் கூடியது. அந்த அக்கா அவர்கள் வீட்டிலே தங்கிக் கொள்ளலாம் என்று வலியுறுத்திக் கூறினர். அவர்கள் இலங்கையைச் சார்ந்தவர்கள். தாய்நாட்டை இழந்து உயிர் வாழவேண்டும் என்பதற்காக இங்கே வந்தவர்கள். கடினமாக உழைத்து முன்னேறியவர்கள். வாழ்க்கையின் அவசியத்தை அவர்களைத் தவிர வேறு யாரும் அதிகஅளவில் உணர்ந்திருக்க முடியாது. அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பைப் பரிசீலிக்கிறேன்’.

‘ரம் நான் உன்னை வற்புறுத்துகிறேன் என்று நினைக்க வேண்டாம்’.

‘ரம்’ அவளுக்குப் போதை ஏற்றியது.

‘நீ விருப்பப்பட்டால் என்னுடனேயே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இன்னும் கேட்டால், அதை நான் பெரும் பேறாகக் கருதுவேன். கட்டாயப்படுத்தவில்லை. என் வீட்டில் இருப்பதா அல்லது செல்வதா என்பது முழுக்க உன் முடிவைச் சார்ந்தது’.

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவனுடைய கதையைக் கேட்டவுடன் கூடுதலாக அன்பும் பரிவும் சேர்ந்து கொண்டது. மனிதர்கள் இந்த பூமிப்பந்தில் எங்கிருந்தாலும் பிரச்சனைகள், உணர்வுகள் ஒன்று தான். இருவேறு பகுதிகளில் பிறந்த நாங்கள் இன்னொரு பகுதியில் ஒன்றாக இணைந்து இருக்கிறோம். என்ன காரணம்? விதி என்று எளிதாகச் சொல்லி விட்டுப் போய்விடலாம். அது காரணம் அல்ல. மனிதர்கள் இடையே புதைந்து கிடக்கும் மனித நேயம் மட்டுமே காரணம்.

வீட்டுக்குள் வந்ததும் அவன் கேட்டான்,

‘ஒருவேளை நீ இப்பொழுது கிளம்புவதாக இருந்தால் உன்னை உயர்தர உணவகத்திற்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தர விரும்புகிறேன். ‘பிரிவு விருந்து’ என்றுகூடக் கொள்ளலாம். வருவதற்குச் சம்மதமா?’

‘இல்லை’

அவன் முகம் சுருங்கியது.

அதைக் கவனித்த ரம்யா ஏனோ இரசித்தாள்.

‘இன்றைக்கு இல்லை என்றால் என்ன நாளைக்குப் போவோம்‌ விக்கி’ என்றாள்.

‘ம். சரி’ என்றவன் அவள் சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு….

‘ஓ மை குட்னஸ். ரியலி? தேங்க்யூ சோ மச்’.

மெலிதாகப் புன்னகைத்தாள்.

அவளை அணைத்துக் கொண்டான்.

அவளுக்கும் அப்பொழுது அது தேவையாக இருந்தது. அவன் மார்பில் சிறிது நேரம் புதைந்து கொண்டாள்.

‘நான் மாலை அதிகமாகவே சாப்பிட்டுவிட்டேன். வயிறு இன்னும் நிரம்பியுள்ளது. வர முடியாமல் போனதற்கு மன்னித்துக் கொள்’ என்றாள்.

‘நீ என்னோடு இருக்கப் போகிறாய் என்கிற நினைப்பே என் வயிற்றையும் நிரப்பி விட்டது’.

சிரித்துக்கொண்டார்கள்.

‘எனக்கு சில வேலைகள் இருக்கு. நாளைக்கு நான் இரண்டு கட்டுரைகள் அனுப்ப வேண்டும். ஃபிரிட்ஜில் பழங்கள் உள்ளன. தேவைப்பட்டால் எடுத்துக்கொள்’ என்று சொல்லி லாப்டாப்பை திறந்தான்.

‘பை த பை இங்கு இருக்கும் வரை உள்ளறையை நீ பயன்படுத்திக் கொள்வாய்’.

அவள் சிரித்துக்கொண்டே ஆமோதித்தாள்.

முதன்முறையாக பாரிஸ் இனித்தது.

மறுநாள் காலையிலேயே அப்பா அழைத்திருந்தார்

அவருக்கு ரொம்ப வருத்தம். அவள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோம் என்று. பதிலுக்கு அவள், கவலைப்படாதீங்க, இதோடு வாழ்க்கை முடிந்து போகவில்லை. என்று ஆறுதல் கூறினாள்.

‘நீ உடனே புறப்பட்டு வாமா’ என்றார்

‘நீங்களே டிக்கெட் வாங்கி இமெயில்ல அனுப்பிடுங்கபா’ என்றாள்.

காலை சிற்றுண்டி சாப்பிடும்போது விக்கி கேட்டான்,

‘ரம்யா இந்தியா சென்றவுடன் ஏற்கனவே நடந்த திருமணத்தை என்ன செய்யப் போகிறாய்?’

‘விவாகரத்துதான்’.

‘அப்புறம்?’

‘தயாநிதி அய்ஏஎஸ் ஆகும்வரை காத்திருந்து, அவர் விரும்பினால் கல்யாணம் செய்து கொள்வேன்’.

‘ஒருவேளை மிஸ்டர் தயாநிதி மறுத்துவிட்டால்?’

‘ம். தெரியல’.

‘நீ இங்க வந்து விடு’.

அவள் அமைதியாக இருந்தாள். பதில் சொல்லவில்லை.

‘நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?’

‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’.

அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.

அடுத்த 3 நாட்களுக்கு எந்த விமானத்திலும் டிக்கெட் இல்லை. அதற்கு அடுத்த ஓரிரு நாட்களுக்கு விலையோ மிக அதிகமாக இருந்தது. பரவாயில்லை என்று வாங்கி அனுப்பி விட்டார்.

ரம்யா நான்கு நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை.

விக்கி அவளை ஈபிள் டவர், லுவேர் மியூசியம் என முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தான். ஒரு நாள் மாலை செயின் நதிக்கரையில் சொகுசுப் படகில் உல்லாச பயணம் சென்றனர். நாட்கள் எப்படி ஓடின என்றே தெரியவில்லை. நாள்தோறும் இந்தியன் ரெஸ்டாரன்ட் சென்று நீலவேணி குடும்பத்தினரைச் சந்தித்தாள். புறப்படும் நாள் வந்துவிட்டது. அன்று முழுவதும் விக்கி அவளிடம் அதிகமாகப் பேசவே இல்லை. நேராகப் பார்ப்பதையும் தவிர்த்தான்.

சார்ல்ஸ் டி கால் விமான நிலையம். ஒரு பக்கம் ஊருக்குத் திரும்புகிறோம் என்கிற நிம்மதி. இன்னொரு பக்கம் விக்கியை பிரிகிறோமே என்கிற வலியும் இருந்தது.

‘நான் புறப்படுகிறேன் விக்கி. குறுகிய நாட்கள் தான் எனினும் நிலைத்த நினைவுகளை ஏற்படுத்தி விட்டீர்கள்’.

‘எனக்கும் அதே உணர்வுகள் தான் ரம்’.

‘நீங்கள் இந்தியா கண்டிப்பாக வரவேண்டும். எங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டும்’.

‘ஒ ஷ்யூர். வருகிறேன்’.

‘உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்’.

‘கண்டிப்பாக. ரம், நான் ஒன்று கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?’

‘ப்ளீஸ் கேளுங்கள்’

‘ஒருவேளை மிஸ்டர் தயாநிதி மறுத்துவிட்டால்? நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீர்களா?’

எந்தவித உணர்ச்சியுமின்றி அமைதியாகப் பார்த்தாள்.

‘விக்கி நான் உனக்கு ஒரு முத்தம் தரட்டுமா?’

அவன் முகத்தில் பளீரென்று உற்சாகம்.

முதுகை வளைத்து முகத்தை முன் கொண்டுவர முயல அவள் அவனுடைய வலது கையை எடுத்து அன்புடன் ஒரு முத்தம் பதித்தாள்.

‘ஒ. நான் எதிர்பார்த்தது வேறு’.

‘என்ன?’

‘பிரெஞ்ச் கிஸ் தருவாய் என்று எதிர்பார்த்தேன்’.

புன்னகைத்து விட்டு, ‘நீங்களும் பிரெஞ்ச் அல்ல நானும் பிரெஞ்ச் அல்ல’ என்றாள்.

அதைக் கேட்டு விட்டு வாய்விட்டு சத்தமாகச் சிரித்தான்.

‘ஐ லைக் யுவர் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்’ என்றான்.

நீ யாரடா எங்கிருந்து வந்தாய்? என்மீது உனக்கு ஏனடா இத்தனை பற்றுதல்? கண்களில் கண்ணீர் கோர்க்க. அன்பொழுக அவனிடமிருந்து விடைபெற்றாள்.

இமிகிரேஷன் பகுதியைக் கடந்து பாதுகாப்பு சோதனை பகுதிக்கு நெருங்கும்போது,

கைப்பேசி, வளையல்கள், செயின், வாட்ச் போன்றவைகள் எல்லாம் கழற்றி கைப்பைக்குள் வைத்தாள். மிச்சம் இருந்தது மஞ்சள் கயிறு மட்டும்தான்.

பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நிற்கச் சென்றவள், என்ன தோன்றியதோ, கழுத்தில் இருக்கும் அந்த கயிற்றைக் கழற்றி அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு மீண்டும் வரிசையில் சென்று நின்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *