கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 11,582 
 

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ரகுராமனை இவ்வளவு அருகில், நெருக்கத்தி;ல் பார்ப்பேனென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம்…. இவன் அவன்தானா….என்கிற ஐயம் மனதுக்குள் சடக்கென்று தோன்ற…. எதிரி;ல் வந்த அவனை உற்றுப் பார்த்தேன். அவனேதான்..! கால இடைவெளி வளர்ச்சியில் கொஞ்சம் மாறி இருந்தான்.

அதே சமயம், என்னை அவனுக்கு அடையாளம் தெரியுமா என்பதிலும் எனக்குள் ஒரு சந்தேகம் துளிர்த்தது. தெரியாவிட்டாலென்ன… அறிமுகப்படுத்திக் கொள்வோம்.! என்று
துணிந்து…ஆர்வமிகுதியில்…….

” டேய்..! ரகு! ” என்னையுமறியாமல் கூவினேன்.

அவன் திடுக்கிட்டு…விழித்து, ” நீங்களா என்னைக் கூப்பிட்டீங்க ? ” கேட்டான்.

‘அடப்பாவி!’ மனசுக்குள் திட்டி, ” என்னைத் தெரியலையா ? ” என்றேன்.

” தெரியலை. ஆனா பார்த்த ஞாபகமா இருக்கு.”

” ராமராஜன் ! ரகுராமன்… ” என் பெயரைச் சொன்னேன்.

” எ..எந்த ராமராஜன்….? ” இன்னும் அவன் குழப்பினான், விழித்தான்.

” அக்கரைமங்களம் பெரிய பண்ணை ராமசாமி பையன்! ”

இதைக் கேட்டதும் டக்கென்று அவன் முகம் பிரகாசித்தது.

” யேய்….!!!!! ” கடைத்தெரு, அருகில் மனித நடமாட்டம் அதிகம் என்பதையும் மறந்து சடக்கென்று கட்டிக்கொண்டான்.

” மன்னிச்சுக்கோடா.. மறந்து போச்சு.” கையை இறுகப் பிடித்து மன்றாடுவது போல் கெஞ்சும் குரலில் மன்னிப்புக் கேட்டான்.

” விடு. நீ எங்கே இந்தப் பக்கம்.” மெதுவாய்க் கையை விடுவித்துப் பிரித்துக் கொண்டேன்.

” நான் இங்கதான். பக்கத்து ஊர்ல இருக்கேன்.” என்றான்.

” சென்னையில வேலை…? ”

” அதையெல்லாம் மூட்டைக் கட்டி முடிச்சு… இங்கே பக்கத்து கிராமத்துக்குக் குடி வந்து ரொம்ப நாளாச்சு. நீ…? ”

” நான் அரசாங்க பள்ளி ஆசிரியர். நாலு மாசத்துக்கு முன் இங்கே மாற்றல். குடும்பத்தை இங்கே கொண்டு வரலை. தனியா ஒரு அறையில தங்கி இருக்கேன்.”

” ஏன் குடும்பம் கொண்டு வரலை…? ”

” என் ரெண்டு புள்ளைங்களும் நாம படிச்ச அரசாங்க பள்ளியில் படிக்கிறாங்க. அரையாண்டு நெருக்கத்தில் எந்த பள்ளியிலும் சேர்க்க மாட்டாங்க. அதனால இந்த வருசம் முடிஞ்சி இங்கே கொண்டு வர ஏற்பாடு செய்யனும். அதுவரைக்கும் சனி, ஞாயிறு விடுப்பில வாரா வாரம் நான் போய் வருவேன். இந்த வார விடுப்பில் போகலை. ”

”அக்கரைமங்களத்தில்தானே இருக்கே.”

” ஆமா. ”

” அம்மா அப்பா ? ”

” இருக்காங்க.”

” நம்ம ஊர் இப்போ எப்படி இருக்கு. ? ”

” எந்த முன்னேற்றமும் இல்லே. ஆனா…. நம்ம அக்கரகாரத்தெருவுல இப்போ எல்லாரும் நடமாடுறாங்க. நீங்க இருக்கும்போது உள்ள கட்டுப்பாடு இல்லே. ” – நான் இதைச் சொன்னதும் ரகுராமன் முகம் மாறியது.

” சரி. இப்போ உனக்கு ஏதாவது வேலை இருக்கா ? ” அந்தப் பேச்சை மாற்ற இப்படிக் கேட்டான். அப்படித்தான் எனக்குத் தோன்றியது.

” ஏன்…?! ” ஏறிட்டேன்.

” ரொம்ப வருசம் கழிச்சு சந்திச்சிருக்கோம். நிறைய பேசனும். அப்படியே என் வீட்டுக்கும் உன்னை அழைச்சுப் போய் காட்டலாம்ன்னு யோசனை. ” சொன்னான்.

எனக்குள்ளும் அந்த ஆசை துளிர்த்தது. காரணம்…..பொறியியல் படிப்பு முடித்துவிட்டு கை நிறைய சம்பளம். அந்த சம்பளத்தை விட்டு கிராமத்தில் வந்து குடி இருக்கிறானென்றால் என்ன வில்லங்கம்.? தெரிய ஆசை. இதுருந்தாலும் ” அப்படியா !” கேட்டேன்.

” ஆமா. அப்படியே என் அப்பா அம்மாவையும் பார்த்துத் திரும்பலாம். நாங்க அந்த ஊரை விட்டு பிரிஞ்சதிலிருந்து அந்த ஊர் மக்கள் யாரையும் அப்பா, அம்மா சந்திச்சதில்லே. உன்னைச் சந்திச்சா சந்தோசப்படுவாங்க.” என்றான்.

எனக்கு மேலும் தயக்கம். சின்ன யோசனை.

” என்ன யோசனை. உன்னைத் திருப்பிக் கொண்டு வந்து உன் இடத்தில் விடுறேன்ப்பா. தயக்கம் வேணாம்.” அடித்துச் சொன்னான்.

என் தயக்கம் தவிர்ந்தது. பால்ய நண்பன் இவ்வளவு வற்புருத்தி அழைக்கும்போது போகாமல் இருப்பது எப்படி முறை ? தோன்றியது.

” சரி ” தலையசைத்தேன்.

அடுத்த விநாடி… இதற்காகவேக் காத்திருந்தவன் போல் ரகுராமன் அருகில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை நிமிர்த்தி அமர்ந்தான். அவன் வண்டியை எடுக்க வரும் வேளை நான் பார்த்துவிட்டேன் – சந்திப்பு… புரிந்தது. பின்னால் அமர்ந்தேன். வண்டி புறப்பட்டது.

நாங்கள் இருவருமே அக்கரைமங்களம் கிராமத்தில் ஒரே தெரு. ஒரேத் தெரு என்றால்….. அந்த கிராமத்திற்கு எங்கள் தெருதான் முதல் தெரு அக்கரகாரம். அதற்கு அடுத்து வடக்கேதான் ஐம்பது வீடுகள் கொண்டு ஒரு குடியானத்தெரு. அந்த தெருவில் ஒரே ஒரு வார்குச்சியைத் தவிர மற்ற எல்லாமே சின்னதும் பெரிதுமான குடிசை வீடுகள். வார்குச்சி என்றால்…… ஒரே வரிசையாய் நாட்டு ஓடுகள் வேயப்பட்ட பத்து ஒரே மாதிரியான வீடுகள். இந்த வீடுகள் மரைக்காயர் பண்ணைக்குச் சொந்தம். அங்கு வேலை செய்யும் நிரந்தர மாத சம்பள ஆட்கள் அங்கு வாடகைக்கு இல்லாமல் குடி.

எங்கள் ஊரைச் சுற்றி மொத்தம் அறுபது வேலிகள் விவசாய நிலங்கள். நான்கு புறமும் பாய்கால், வடிகால் வசதிகள் கொண்ட ஆறு, வாய்க்கால்கள். மொத்த நிலங்களும் பெரியப்பண்ணை, சின்னப்பண்ணை, நடுப்பண்ணை, மரைக்காயர் பண்ணைகளுக்குச் சொந்தம்.

வாய்க்கால் வரப்புகள் வெட்டுவது சரி செய்வதெல்லாம் இவர்கள் கட்டுப்பாடு. இந்த பண்ணைகளுக்குரிய பெரிய ஓட்டு வீடுகளெல்லாம் முதல் தெரு. பெரியப்பண்ணை, சின்னப்பண்ணை, நடுப்பண்ணை எல்லாம் ஐயர்மார்கள். கடைசி வீடு மரைக்காயர் பண்ணை. இந்த ஒவ்வொரு பண்ணைகளும் தலா பதினைந்து வேலிகளுக்குக் குறையாமல் மிராசு. இதில் எந்த மிராசுகளும் தற்போது ஊரில்லை. அவர்கள் அனுபவிக்கும்வரை அனுபவித்துவிட்டு…..பிள்ளைகள் படித்து பெரிய ஆட்களான பின்….நிலங்களை ஒரு காரியக்காரர் மேற்பார்வையில் நிர்வகிக்கச் செய்து விட்டு நகரத்தை நோக்கி நழுவி நிரந்தாமாகி விட்டார்கள்.

எங்கள் தெருவில் முதல் வீடு நடுப்பண்ணை. அதில்தான் ரகுராமன் குடி. அவன் அப்பா கணேசய்யர் காரியஸ்தர். அடுத்து சின்னப்பண்ணை. இதன் உரிமையாளர் இதை நடுப்பண்ணையோடு சேர்த்து விட்டுவிட்டு பாபநாசத்தில் குடியேறிவிட்டார். வருடத்திற்கு இரண்டு முறை புல்லட்டில் வந்து நடுப்பண்ணை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி வரவு செலவுகள் பார்த்துச் செல்வார். ரகுராமன் அவரை அத்திம்பேர் என்று அழைப்பான். உறவு.

நடுப்பண்ணை வீட்டில்….ரகுராமன் அப்பா அம்மாவோடு….இரண்டு அக்காள்கள், ஒரு தங்கை என்று மொத்தம் ஆறு பேர்கள் வாசம். எல்லாரும் சரியான மஞ்சள் நிறத்தில் பார்க்க
அழகாக இருப்பார்கள். இவர்களுக்குப் பாத்திரம் பண்டம் தேய்க்க இரு குடியானப் பெண்கள் வேலையாட்கள்.

அடுத்து எங்கள் வீடு பெரிய பண்ணை. அப்பா அம்மா, அண்ணன், ஐந்து தங்கைகளுடன். நான்.

கடைசி….மரைக்காயர் பண்ணை. வயதான சைவப்பிள்ளை ஒருத்தர் காரியஸ்தர். அவருக்கு ஒரு மகன், மனைவி. அவர் வீட்டருகே கிழக்கு நோக்கி கீற்றுக் கொட்டகையில் சின்ன
பிள்ளையார். அந்த பிள்ளையாரை இந்த ஐயர் குடும்பம்தான் வெள்ளி, செவ்வாய் விளக்கேற்றி கும்பிடும். கிராம மக்கள் மறந்தும் அவரைக் கும்பிட்டது கிடையாது. அவர்கள் வாழ்விற்கும், உழைப்பிற்கும் தெய்வத்தை நினைக்க எங்கே நேரம். அவர்களுக்குத் தீபாவளி, பொங்கல்தான் திருவிழா. எங்கள் தெருவிற்குத் தெற்கால்…. பெரிய குளம், அதை ஒட்டி பெரிய திடல் எனும் களம். இந்த களத்தில் அறுவடைக் காலத்தில் மூன்று பண்ணைகளுமே நெல் அடித்து வைக்கோல் போட்டு உபயோகப்படுத்தும். ஊரைச் சுற்றிலும் ஐந்து குளங்கள். கூப்பிடு தொலைவில் கிழக்காலும் மேற்காலும் இரண்டு காலனி ஊர்கள். சுமார் இருநூறு குடியிருப்புகள்.

இங்குள்ள ஆண் பெண் அனைவருமே இந்த பண்ணைகளின் விவசாயக் கூலிகள். இந்த காலனி மக்கள் ஐயர் வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது என்பதுதான் கட்டுப்பாடு. இந்த நாலு வீடுகளிலும் பண்ணை மிராசு ஐயர்கள் குடி இருந்த போது அக்கரகாரத் தெருவையேத் தொடக்கூடாது, மிதிக்கக் கூடாது என்கிற விதி இருந்தது போல. அது தற்போதும் தொடர்கதையாகி ஐயர் வீட்டு வாசலை மிதிக்கக்கூடாது, தாண்டக்கூடாது என்பது நிரந்தமாகி விட்டது.

அந்தக் காலம் தீண்டாமை தலைவிரித்தாடியக் காலம். அப்போதுதான் அப்படி என்றால்….தற்போதும் அது தொடர்வதில் எல்லாருக்குமே உடன்பாடில்லை. என்ன செய்ய எல்லாருமே அப்படிப் பழக்கப்பட்டுவிட்டார்கள். தப்பித்தவறி மீறினாலும்….கணேசய்யரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்கள்.

கிராமத்தில் விவசாயம்தான் தொழில். அதை நம்பித்தான் மக்கள் வயிற்றுப் பிழைப்பு நான்கு பண்ணைகளிலும் தினக்கூலி, மாதக்கூலி, வருடக்கூலி என்று எல்லாக் கூலிகளிலும் ஆட்கள் இருப்பார்கள். மாதக் கூலியிலிருந்து பதவி உயர்வு வருடக்கூலி. இவர்கள் பண்ணைக்குப் பத்துப் பேர்கள் என்பது அதிகம். பண்ணையில் வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிர்ணயிக்கப்பட்ட மாதம் சம்பளம் உண்டு. வருடத்திற்கு இத்தனை நாட்கள் விடுப்பு என்பதும் உண்டு.

அப்பா எல்லா கூலி ஆட்களுக்கும் வருகைப் பதிவேடு வைத்திருப்பார். வந்தவர்களை அதில் பதிவார். பெருக்கல் குறி போடுவார். இன்றைய அலுவலக அட்டவணைப் போலவே அதில் வருகை, விடுப்பு எல்லாம் இருக்கும். நெல்தான் கூலி. பணம் என்பது அறவே கிடையாது.

காலனி மக்கள் பெரியபண்ணை, சின்னப்பண்ணை, மரைக்காயர் பண்ணை வீடுகள் முன்பாக காலையில் வேலைக்காவும் மாலையில் கூலிக்காகவும் நிற்பார்கள்.

நடுப்பண்ணை ஐயர் வீட்டு வாசலில் அவர்கள் அப்படி நிற்க முடியாது, கூடாது. வேலை, கூலி, சேத்p எதற்காகவும் பத்தடி தள்ளி எதிரே உள்ள கொல்லை வேலி ஓரத்தில் நிற்க வேண்டும்.
அவர்கள் முதல் வீட்டைத் தாண்டி எங்கள் பண்ணை வீட்டிற்கு வருவதென்றாலும் ஐயர் வீட்டுப் பின் பக்கம் மாட்டுத் தொழுவம், எருக்குழியெல்லாம் தொட்டு சுற்றி வரவேண்டும். இல்லை
என்றால் தெற்கால் உள்ள குளத்தைச் சுற்றி வரவேண்டும்.

எல்லா பண்ணை வீடுகளுக்கு முன்பாக பெரிய கொட்டகையில் விவசாயத்திற்குத் தேவையான மண்வெட்டி, ஏர்கலப்பை….போன்ற தளவாட சாமான்கள் இருக்கும். எல்லாரும் தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துப் போவார்கள், திருப்பிக் கொண்டு வந்து வைப்பார்கள். ஐயர் வீட்டில் மட்டும் அப்படி இல்லை. காலனி மக்களுக்குக் குடியான
ஆட்கள்தான் எடுத்துக் கொடுப்பார்கள். மாலை, கொடுத்தவர்கள் அதைச் சரி பார்த்து வைக்க வேண்டும்.

ஐயர் எங்கள் வீட்டைக் கடக்கும் போதும் என் அப்பா எழுந்து மரியாதை செய்வார். இவ்வளவிற்கும் இருவருவமே காரியக்காரர்கள்.

ஐயர் வீட்டில் குடியான சனங்களில் கொஞ்சம் பேர் காலையில் மோர் வாங்க செல்வார்கள். அது வாங்கி வர அவர்கள் தங்கள் பையனையோ பெண்ணையோதான் அனுப்புவார்கள். அவர்கள் வாசலில் பாத்திரத்தையும் அதில் காசையும் போட்டு வீட்டிற்கு வெளியே ஓரத்தில் நிற்க வேண்டும். ரகுராமன் அம்மா ஒவ்வொரு பாத்திரத்திலும் தண்ணீர் தெளித்து காசை எடுத்துக் கொண்டு அதற்கான மோரை ஊற்றி அனுப்புவாள்.

அவ்வளவு ஏன்….ஒரே பள்ளிக்கூடத்தில், ஒரே வகுப்பில், தோள்மேல் கைபோட்டு ஒன்றாகப் படிக்கும் ரகுராமனுக்கு தெருவில் என்னோடு பேச அனுமதி இல்லை. அப்படியே பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான். குடியானப் பையனோடு பையன் சரி சமமாகப் பழக கணேசய்யர் இடம் கொடுத்ததில்லை.

இரு சக்கர வாகனம் பிரதான தார் சாலையை விட்டு கிராம மண்சாலைக்குள் நுழைந்தது. சிறிது தூரம் சென்றதும் சாலை இரண்டு பக்கமும் நெருக்கமான குடிசை வீடுகள் நிறைந்த ஊருக்குள் நுழைந்து சென்றது. அங்கு அரை, முக்கால் நிர்வாணங்களில் அழுக்காய்…

பரட்டைத் தலை, மூக்கொழுகல்களுமாகக் குழந்தைகள். குடிசை ஓரங்களில் சட்டிப் பானைகள், சமையல்கள். குப்பென்று நண்டு நத்தை, மீன் கவுச்சிகளின் வீச்சம். இது காலனி ஊர். என்பது தௌ;ளத்தெளிவாகத் தெரிந்தது.

” உன் வீட்டுக்கு இது குறுக்குப் பாதையா ரகுராமா ? ” டக்கென்று கேட்டேன்.

” இல்லே. வழியே இதுதான்.! ” என்றான்.

அதிர்ச்சியாக இருந்தது. இது கணேசய்யருக்கு சரி பட்டு வராதே என்றும் எனக்குள் யோசனை வந்தது.

தற்போது ரகுராமன் இருசக்கர வாகனம் அந்த ஊரைத்தாண்டி குறுகலான ஆறடி சாலையில் பிரிந்து சென்றது. இருபுறமும் காட்டாமணக்கு செடிகள். அதில் முள் வேலிப் படல்கள். கரும்பு, நெல், பருத்தி, எள் வயல்கள். மிளகாய், வெண்டை, கத்திரி செடிகள். எங்கும் பச்சைப்பசேல். என்ன ஒரு செழுமை.!

ஊரில் நுழைந்ததுமே பாழடைந்த சின்னதாய் ஒரு மாரியம்மன், விநாயகர் கோயில். பத்தே பத்து குடிசை வீடுகள். அதைத் தாண்டி இவனது பெரிய மாடி வீடு. அதாவது பண்ணை
வீடு. வாசலில் களம். அதில் ஒரு பக்கம் கம்பு, சோளக்கதிர்கள் கதிர்களும், இன்னொரு பக்கம் எள் செடிகளும் காய்ந்தன.

பெரிய மரத்தடி நிழலில் டிராக்டர், அருகில் ஏர் உழ சின்ன கை டிராக்டர், ஒரு மினி வேன் எல்லாம் நின்றது.

ரகுராமன் வண்டியை நிறுத்த இறங்கினேன்.

வாசலிலேயே ரகுராமன் அப்பா கணேசய்யர் மர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அறுபது வயதிற்கான முதுமை அவரை அதிகமாகத் தொடாமல் கொஞ்சமாக தொட்டிருந்தது.

” அப்பா! அக்கரைமங்கலம் ராமசாமி பையன்! ” என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினான் ரகுராமன்.

” ஓ…. ராமராஜன் ! ” அவர் என் பெயரைச் சரியாய்ச் சொல்லி ஏறிட்டார்.

” ஆமாம். ” என்றேன்.

” அப்பா இருக்கானா ? ” மரியாதைக் குறைவாய் எப்போதும் போல் ஒருமையில் கேட்டார்.

தன்னைவிட தாழ்த்தப்பட்டவர்களை அவர் அப்படி ஒருமையில் அழைத்துதான் வழக்கம். பண்ணைகளுக்குள் ஏதாவது முக்கியச் செய்திகள் பரிமாற வேண்டுமென்றால்….”பக்கத்துப் பண்ணையில் ராமாசாமி இருக்கானா பாரு. இருந்தா வரச்சொல்லு, அழைச்சு வா.” என்று தன் வேலைக்காரரைத் துரத்துவார் ஐயர். இந்த மரியாதைக் குறைவு சிறுவனாய் இருக்கும் அப்போதே அது எனக்குப் பிடிக்காது.

வளர்ந்து நாற்பது வயதை தொடும் மகனிடம் இன்றும் அப்படியே பழக்கத்தை மாற்றாமல் விசாரிக்கிறாரென்றால்….. எனக்கு என்னவோ போலிருந்தது. அவர் முதுமையை உத்தேசித்து நான் மௌனமாக இருந்தேன்.

” ஊருக்குப் போனா நான் கேட்டதா சொல்லு ? ” தகவல் சொன்னார்.

” சரி” நான் தலையசைத்து நண்பனுடன் வீட்டினுள் சென்றேன்.

அம்மா, மனைவி, ஐந்து, பத்து வயது தன் மகன், மகளிடம் அறிமுகப்படுத்தினான்.

” உனக்கு இன்னைக்கு மத்தியான சாப்பாடு இங்கோதான்.” கண்டித்தான்.

ஊரைச் சுற்றியுள்ள தன் வயல் வெண்டை, கரும்பு, கத்தரி, நெல்…பயிரிட்டிருந்தவைகளையெல்லாம் காட்டினான். எல்லாமே பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பத்து ஏக்கர் நிலங்களில் நான்கு இடங்களில் கண்ணாடி போல நிலத்தடி நீர் மின் மோட்டார்களால் அருவியாக கொட்டியது.

” பக்கத்துல கொள்ளிடம் ஆறு. அதான் இவ்வளவு அருமையான நீர். எல்லாமே இயற்கை விவசாயம். மருந்துக்கும் ரசாயன உரங்கள் கிடையாது. சாம்பல், சாணம் உபயோகத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரித்து கட்டுப்படுத்தறேன். எனக்கு மட்டுமில்லாம மக்களுக்கும் நல்லது செய்யனும்ன்னுதான் இயற்கை விவசாயத்தில் இறங்கினேன். என்னைப் பார்த்து இங்கே மத்த விவசாயிகளும் இதை பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்க. ” என்றான்.

‘என்ன ஆரோக்கியமான எண்ணம். !’ எனக்கு அவனைப் பார்க்கப் பெருமையாக இருந்தது.

மதியச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு சொன்னபடி என்னைத் தன் வண்டியில் ஏற்றி அறையில் கொண்டு வந்து விட்டு;…..நாற்காலியில் அமர்ந்து……..” ஊர் எப்படி ? ” கேட்டான்.

” ரொம்ப அருமை. எப்படிடா இந்த ஊரைக் கண்டு பிடிச்சே….? ”

” பெரிய தகவல் துறை கம்பெனியில் வேலை செய்தேன். மாசம் எழுபதாயிரம் சம்பளம். அப்போதான் அக்கரைமங்கலத்திலிருந்த குடும்பத்தை சென்னைக்குக் கொண்டு வந்தேன். திருமணம் செய்தேன். அருமையான வேலை, கை நிறைய சம்பளம்ன்னாலும் எனக்கு மனசு நிறையலை. வெறும் நோட்டாய் சம்பாதிச்சு என்ன பிரயோசனம். நம்ம சம்பாத்தியம்
நமக்கும் பயன்படனும் நாட்டுக்கும் நல்லதாய் இருக்கனும். அது என்ன தொழில்ன்னு தினம் மண்டைக் குடைச்சல். விளைவு…? ஒரு நாள் விவசாயம்ன்னு என் தேடலுக்கு விடை கிடைச்சுது.
இந்த முடிவை வீட்டில் சொன்னேன். யாரும் ஏத்துக்கலை. ஆனா… நான் பிடிவாதமாய் அதை மனசுக்குள் வைச்சி நிலத்தைத் தேடினேன். என் நண்பர் மூலமா இந்த ஊரும் நிலமும் அமைஞ்சுது. உடனே வாங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கே வந்துட்டேன். மனசு நிறைஞ்சிருக்கு ராமராஜன்.” மலர்ச்சியாய் சொன்னான் ரகுராமன்.

நான் தேடி வந்ததற்கான விடை கிடைத்து விட்டது. அதே சமயம் இடையில் தோன்றிய இன்னொரு கேள்விக்கான பதில்…? அவனையேக் கேட்டுவிடுவது என்கிற முடிவில்….

” ரகு! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒளிமறைவில்லாம பதில் சொல்லனும் ? ” கேட்டு அவனைக் கூர்ந்து பார்த்தேன்.

” கேளு ”

” நீ மனசுக்கு நிறைவாய் இருக்கே. உன் அப்பா அப்படி இருக்காரா ? ”

” புரியலை..?! ”

” அக்கரைமங்கலத்தில் உன் அப்பா தன் வீட்டு வாசலில் காலனி மக்கள் பாதமே படாமல் இருந்தார். இன்னைக்கு அவர் அந்த தெரு மேலேயே நடமாட வேண்டிய நிலை. அவர் எப்படி நிறைவாய், சந்தோசமாய் இருப்பார். ? ”

” அதைச் சொல்றீயா ? அவருக்காகத்தான் நான் தேடித் தேடி இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன். ” என்று சொல்லி என்னை அதிரடித்தான்.

” புரியும்படி சொல்லு..? ”

” சொல்றேன். அவர் தீண்டாமை அன்னைக்கே எனக்குப் பிடிக்கலை ராமராஜன்..பக்கத்துப் பக்கத்து வீடு, ஒரே தெருவான உன்னிடமே எனக்குப் பேச கட்டுப்பாடுன்னா எப்படி.! வயசு வந்து வளர வளர….மனுசனுக்கு மனுசன் என்ன ஒரு தீண்டாமைன்னு அந்த வெறுப்பு ஒரு கடுப்பாகவே ஆச்சு. இவர் தீண்டாமையை நாம வேரறுக்கனும், அந்த காலனி மேலேயே அவரை
நடக்க விட்டு வேடிக்கைப் பார்க்கனும் என்கிற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் மனதில் ஏறி பெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்து ஒரு பிரமாண்ட மலையாய் உருவாகி நின்னுடுச்சி.
மனுசன் ஒன்னை நினைச்சா நிறைவேத்திடுவான் இல்லியா. அதுக்கான இடத்தைத் தேடித் தேடி அலைஞ்சி என் எண்ணத்தை நிறைவேத்தி…..அவரை எல்லாரும் மனுசன் என்கிறதை உணர வைச்சிருக்கேன்.”

” அவர் உணர்ந்திருக்கிறாரா ? ”

” உணர்ந்திருப்பார், உணரனும் ! உணரலைன்னாலும்…என் சங்கல்பத்தை நிறைவேத்தி என் மனப் பாரத்தை இறக்கிட்டேன். அந்த ஆத்ம திருப்தி போதும். எனக்கு நிம்மதி.” என்று பெரு மூச்சு விட்டான்.

‘ அந்த பாரதி…..தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு பூணூல் போட்டு அழகு பார்த்தார். இவனோ… பெத்த அப்பனையே…. காலனி தெருவிற்குள் நடக்க விட்டு பாடம் கற்பிக்கிறான். ஒரு வேளை இவன் பாரதிக்குப் பையனோ…! ‘ எனக்குள் நினைவு வர….ரகுராமனைப் பார்த்தேன்.

அவன் முகம் நிச்சலனமாய் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *