செல்லி அல்லது மணிராசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 9,744 
 

1868 ஆம் ஆண்டு.

இலங்கையின் மலையகம் எங்கும் கோப்பிப் பயிர்ச்செய்கை செழித்துப் பூத்து காய்த்து கொக்கரித்து கோலோச்சிக் கொண்டிருந்தது. உலக சந்தையில் கோப்பியின் விலை மிக உச்சத்தில் உயர்ந்திருந்ததால் அன்றைய இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுனராக பதவி வகித்த ஹெர்கியூலிஸ் ரொபின்சன் மிகவும் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

அவ்வருடம் தமது நிர்வாகத்தின் கீழிருந்த சிலோன் என்ற பிரிட்டிஷ் காலனித்துவ நாட்டிலிருந்தே அதிக அந்நியச் செலாவணி வருமானம் பெறப்பட்டிருப்பதாக ஆளுனர் தம் அதிகாரிகளிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டார். கோப்பித் தோட்ட சொந்தக்காரர்கள் செல்வத்தில் மிதந்து கொண்டிருந்த காலம் அது. நுவரெலியா மாவட்டத்திலேயே மிக அதிகமான கோப்பித் தோட்டங்கள் இருந்தன. இக்காலத்தில் தான் கோப்பித் தோட்ட சொந்தக்காரர்கள் தமக்கென ஆடம்பர பங்களாக்களை கட்ட ஆரம்பித்தனர்.

ஆனால் இந்தவிதமான எந்த செல்வச் செழிப்பும் கோப்பித் தோட்டங்களை பூத்துக்குலுங்கச் செய்த கூலித்தொழிலாளர்களை சென்றடையவில்லை. அவர்களுக்கு பஞ்சம் பட்டினியே பரிசாக வழங்கப்பட்டது. அவர்கள் தமக்குக் கிடைத்த கூழையும் கழியையும் கிண்டிச் சாப்பிட்டு வயிறு நிறைத்தனர்.

செங்கந்தைத் தோட்டம் கம்பளைக்கருகில் கண்டி மாவட்டத்தில் காணப்பட்ட ஏனைய தோட்டங்களை விட விசாலமான ஒரு பெரிய தோட்டமாகும். ஏழுநூறு ஏக்கர்களில் அமைந்திருந்த அந்த அழகிய கோப்பித்தோட்டம் பல மலைக்குன்றுகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டிருந்தது. அவற்றை சுற்றிச் செல்லும் மகாவலி கங்கையின் தலையருவிகளில் ஒன்றான மாவலி ஆறும் அங்குதான் இருந்தது. மாவலியாறு அழகிய தொளஸ்பாகை மலைப்பிரதேசத்தில் இருந்து ஊற்றெடுத்திருக்கின்றது.

அந்தத் தோட்டத்தின் துரையாக இருந்தவர் இங்கிலாந்தின் அயர்லாந்தைச் சேர்ந்தவர். அவர் பெயர் மெக்லியோட் மெக்லீனன் என்பதாகும். ஏனைய தோட்டத்துரைமார்களைப் போலவே மெக்லீனன் தனக்கென பங்களா ஒன்றை அமைக்கத் தீர்மானித்தார். அவர் பங்களா அமைக்கத் தீர் மானித்த இடம் நாற்புறமும் மலைக்குன்றுகளாலும் அக்குன்றுகளில் இருந்து கொட்டிச் சொரியும் மலையருவிகளாலும் சூழப்பட்ட மலைச்சாரல் ஆகும். ஆனால் அந்த இடத்தில் தான் அத்தோட்ட மக்களின் அன்புக்கும் பக்திக்கும் பாத்திரமான முனியப்பர் கோயில் அமைந்திருந்தது. அவர் அக்கோயிலை இடித்து தரைமட்டமாக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்தச் செய்தி அத்தோட்ட மக்களிடையே கலவரத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது. ஆனால் அவர்களால் எந்த எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை. அவர்கள் பெரியாங் கங்காணியிடம் சென்று முறையிட்டனர். முனியப்பர் கோயிலை இடிப்பது அழிவைக் கொண்டு வரும் என்றும் தடுத்து நிறுத்துமாறும் வேண்டிக்கொண்டனர்.

ஆனால் பெரியாங் கங்காணியினாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவர் துரையிடம் சென்று இது தொடர்பில் பிரஸ்தாபித்தபோது துரை கோபம் அடைந்தார். “போ…போ..வேற எடமா இல்லை….வேற எடத்துல கோயில் கட்டிக்கோ போ……போ…..”என்று விரட்டி விட்டார். அதன் பின் தொழிலாளர்கள் சும்மா இருந்து விட்டார். வருத்தப்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. தோட்டத்துரையின் அந்த அடாவடித்தன செயல் தொடர்பில் அவர்கள் மனதளவில் சாபமிட்டுக் கொண்டனர்.

செங்கந்தையில் தோட்டத்துரையின் பங்களா மிகப் படாடோபமான முறையில் உருவானது. பங்களாவின் முன்புறம் இருபதடி உயரமான தூண்களைக் கொண்ட விசாலமான வராந்தாவைக் கொண்டிருக்க வேண்டும். வீட்டின் வாயிலில் இருந்து பார்த்தால் செங்கந்தை தோட்டத்தின் மலைச்சிகரங்கள் இள வயது குமரிகள் போல் நெஞ்சை நிமிர்த்தி திமிராகத் தோற்றமளிக்க வேண்டும். தாமரை இதழ்கள் போல் அறைகள் வெளிப்புறம் நோக்கி விரிந்திருக்க வேண்டும். வெளியில் பூத்துக்குலுங்கும் பூங்கா ஒன்று இருக்க வேண்டும். ஜன்னல்களில் இருந்து பார்த்தால் பூங்கா பூத்துக் குலுங்க வேண்டும். ஏனைய அறைகளையும் படுக்கையறையையும் பிரான்ஸ் நாட்டுப் பாணியில் அமைந்த ஜன்னல்களால் இணைக்க வேண்டும்.

தனது பங்களா எப்படி அமைய வேண்டுமென மெக்லீனன் துரை கட்டிடக் கலைஞர்களுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.

படிப்படியாக சுவர்கள், சுவர்களில் ஜன்னல்கள், கதவு நிலைப்படிகள், பின்னர் புகைக்கூண்டுக்கோபுரம், இறுதியாக கூரை என பங்களா கட்டி முடிக்கப்பட்டது. ஜன்னல், கண்ணாடிகள், கூரைத்தகடுகள், தளபாடங்கள் என்பன இங்கிலாந்தில் இருந்தும் பிரான்சில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. ஒருவாறு துரையின் பங்களா பூர்த்தியாகும் கட்டத்தையடைந்த போது தோட்டத்தின் தலைமை கன்டக்டர் அபோன்சுவையும், பெரியாங் கங்காணி வீரமலைத்தேவரையும் அழைத்து வரும்படி ஆளனுப்பினார் துரை.

எதற்காக இந்த திடீர் அழைப்பு என்று ஊகிக்க முடியாத கன்டக்டரும், கங்காணியும் இல்லாத வாலை கீழே தொங்கப்போட்டுக் கொண்டு ஓடினார்கள். அவர்களுக்கு எலி அளவுக்காவது மதிப்புக்கொடுக்காத துரை அடுத்து வரும் ஒரு மாதத்துக்குள் பங்களாவுக்கு கிரகப் பிரவேச வைபவம் எடுக்க வேண்டுமென்றும் அதனை மிக உயர்வான விதத்தில் நடத்திக் காட்ட வேண்டும் என்றும் கூறினார். “நல்லதுங்க, நல்லதுங்க”என்று கை பொத்தி வாய் பொத்தி தலையாட்டிய அவர்கள் இருவரும் துரை சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கவனித்தனர்.

“பங்களாவை ஜோடன செய்யனும். பெரிய பார்ட்டி கொடுக்கனும், டான்ஸ் ஏற்பாடு பண்ணு…..ஸ்பெசலா தோட்ட பொண்ணுங்களோட டான்ஸ்….என்னா?” தொரையின் எல்லா வார்த்தைகளுக்கும் அபோன்சும் வீரமலை கங்காணியும் “சரிங்க சாமி…..நல்லதுங்க சாமி” என்று மட்டுமே தலையாட்டி பதில் கூறினர்.

“சரி நீ ரெண்டு பேரும் போகலாம்” என்று அவர்களை அனுப்பினார் துரை.

அதன் பின்னர் அபோன்சும் வீர சாமித் தேவரும் ஆலோசனை நடத்தினர். அவர்களுக்குள் ஒரு திட்டம் உருவானது. அடுத்த நாள் இது தொடர்பில் தொழிலாளர்கள் மத்தியில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு அறிவிக்கப்பட்டது. தோட்டத் துரையிடமும் நிர்வாகத்திடமும் நல்ல பேர் பெற்றுக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமென்றும் இதனை அனைவரும் உரிய முறையில் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் வீர சாமித்தேவர் தொழிலாளர் மத்தியில் குறிப்பிட்டார். எனினும் பங்களா கட்டப்பட்டிருப்பது முனியப்பர் கோயிலை இடித்த இடத்தில் என்பதால் பலரும் அதில் குறைந்த ஆர்வம் காட்டினர்.

அபோன்சு மற்றும் வீரசாமி கங்காணி ஆகியோரின் திட்டத்துக்கமைய அழகும் சுறுசுறுப்பும் புத்திக் கூர்மையும் கொண்டவள் என அத்தோட்ட மக்களால் கருதப்பட்ட செல்லி என்ற பதினாறு வயதுடைய செல்லாயி நடனக்குழு தலைவியாக தெரிவு செய்யப்பட்டாள். அவளுடன் மேலும் அதே வயதுடைய ஆறு பெண் பிள்ளைகளும் தப்பு, தாரை, தம்பட்டம், தமுக்கு, உறுமி, உடுக்கு, மோர் சங்கு, புல்லாங்குழல், குண்டு மேளம், தாளம் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதற்கு இள வயதுடைய இளைஞர்களும் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் மத்தியில் சுயமாக நடனக் கலைஞனாக உருவாகியிருந்த பெரியாம்பிள்ளையை டான்ஸ் மாஸ்டராக அபோன்சு நியமித்தான்.

அவர்கள் சுமார் பதினைந்து நாட்களிலேயே ஒயிலாட்டம், மலிலாட்டம், கரகம், கும்மி, கோலாட்டம் என்பவற்றை எல்லாம் இணைத்து ஒரு அழகிய இனிமையான நாட்டிய நடன நிகழ்ச்சியை தயாரித்துக் கொண்டனர்.

அபோன்சும் வீர மலைத்தேவரும் இணைந்து அந்த நடனக் குழுவினருக்கு ஏற்ற விதத்தில் ஆடை அணிமணிகள் மற்றும் ஏனைய அலங்காரப் பொருட்களையும் பெற்றுக்கொடுத்தனர். எல்லாமே சிவப்பு, நீலம், மஞ்சள் என மின்னி ஜொலித்தன. பெண் பிள்ளைகள் இடுப்புக்கு கீழ் முழங்காலுக்கும் சற்று அப்பால்வரை மடிப்புக்கள் பல கொண்ட பாவாடைகளும் மார்பகங்களை மேலும் பிதுக்கி மதர்த்து நிமிர்த்தி மெருகூட்டிக்காட்டும் விதத்தில் மார்புக் கச்சைகளும் அணிந்திருந்தனர். இயற்கையாகவே பேரழகும் கவர்ச்சியும் கட்டுடலும் கொண்ட செல்லிக்கு அந்த ஆடைகள் கண்களைக் கிறக்கம் கொள்ள வைக்கும் மையலைத் தந்தது.

எல்லாத் தயாரிப்புக்களுக்கும் மத்தியில் கிரகப் பிரவேச கொண்டாட்ட நாளும் படாடோபமாக வந்தது. ஊரெங்கும் வழியெல்லாம் ஜோடனைகள் ஜொலித்துக் குலுங்கி கிளுங்கிக் கொண்டிருந்தன. பங்களா பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் வெண் சுண்ணம் கரைத்து சாந்து பூசி மெருகூட்டப்பட்டு மிளிர்ந்து கொண்டிருந்தது. உயர்தர பலகைகளால் மினுக்கி வார்ணிசு பூசப்பட்ட பிரான்சு நாட்டின் விலை கூடிய கண்ணாடிகள் பொருத்தப்பட்ட விசாலமான ஜன்னல்கள், கலை வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகள் என்பன பார்ப்போர் நெஞ்சுக்கு பரவச மூட்டின.

அன்றைய தினம் செல்லி தலைமையிலான நடனக்குழுவினர் அந்த பங்களாவுக்குள் மிகத் தயங்கித் தயங்கியே காலடி எடுத்து வைத்து சென்றனர். அவர்கள் உயிர் பெற்று வந்த மெழுகுச் சிலைகள் போல் ஆடி அசைந்து நடந்து சென்றனர்.

அந்த பங்களாவின் மிகப்பெரிய விசாலமான மண்டபத்திலேயே வரவேற்பு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அழைக்கப்பட்டிருந்தவர்களில் அநேகம் பேர் வெள்ளைக்கார துரைமார்களும் அவர்கள் குடும்பத்தினரும் சில அரசாங்க அதிகாரிகளுமாவார்கள். மற்றும் சில போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள், பறங்கியர் என்போரும் சொற்பளவில் ஆங்கில பாணியில் உடையணிந்த சிங்கள செல்வந்தர்களும் இருந்தனர்.

செல்லியும் அவள் குழுவினரும் மண்டபத்துக்குள் பிரவேசித்த போது அங்கிருந்த சிங்கள தனவந்தர்கள் இந்தக் கூலிக்கார நாய்களை எந்த மடையன் அழைத்திருக்கக்கூடும் என்று மனம் சுழித்தனரன்றி வெள்ளைக்காரர்கள் அதனை ஒரு பொருட்டாக கொள்ளவில்லை. அதன் பின்னரே அந்த பங்களாவுக்கு சொந்தக்காரரான மெக்ளியோட் மெக்லீனன் மிகக்கம்பீரமாக கோட்டும் சூட்டும் அணிந்து பாதணிகள் நிலத்தில் பட்டு “டக்கு டக்கு” என்று ஒலி எழுப்பியவாறு கூடியிருந்தோர் முன்னிலையில் பிரவேசித்தார். அவர் தாம் அழைத்திருந்த விருந்தாளிகள் ஒவ்வொருவரிடமும் சென்று முகமன் கூறி நலன் விசாரித்தார்.

அதன் பின்னர் மெக்லீனன் தன் இடத்துக்குச் சென்று வந்தவர்களை வரவேற்று ஐந்து நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. முதலில் ஆங்கிலப் பாடலுடனான நடனம் அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து டச் கலாசார நடனமும் போர்த்துக்கீச “கபரிஞ்ஞா” நடனமும் இடம்பெற்றன. இவ்விதம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முடிவுற்ற பொழுதுகளில் அங்கு கூடியிருந்தவர்கள் தத்தமது கரங்களில் இருந்த வைன், விஸ்கி, பிராண்டி, ரம், கிளாஸ்களை உயர்த்தி மண்டபம் எதிரொலிக்க நிறைந்த கரகோஷங்களை எழுப்பினர்.

அதற்கு அடுத்த நிகழ்வாகவும் இறுதி நிகழ்வாகவும் செல்லி தலைமையிலான நடனக்குழுவின் நடனம் மேடைக்கு வந்தது. அரங்கம் என்று சொல்லும் வகையில் பலகையிலான இரண்டடி உயர மேடையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் தாவி ஏறிய நாட்டியக் குழுவினர் குறிக்கப்பட்ட தத்தமது இடங்களில் இருந்து கொண்டனர். முதலில் நீண்டதொரு சங்கொலி எழுப்பப்பட்டது. அச்சங்கொலி அங்கிருந்த சிறு சலசலப்பையும் அமைதியாக்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு தப்பும் உறுமியும் உடுக்கையும் கலந்த சீரான இசை ஒலித்தது.

டண்டனக்கா டண்டனக்கா டுன்டுடும்…. டுன்டுடும்

டண்டனக்கா டண்டனக்கா டுன்டுடும்…. டுன்டுடும்

னாக்கு முக்கா னாக்கு முக்கா டுன்டுடும்…. டுன்டுடும்

னாக்கு முக்கா னாக்கு முக்கா டுன்டுடும்…. டுன்டுடும்

தப்பு, உறுமி உடுக்கு என்பவற்றின் ஒலி அங்கு கூடியிருந்தோரின் நரம்பு, நாளங்கள், தசைநார்கள் என்பவற்றில் ஊடுருவி அவர்கள் மனங்களில் பெருங்கிளர்ச்சியை உண்டு பண்ணின. அவர்கள் காதுகள் இதுவரை இப்படியொரு இசையை செவிமடுத்திருக்கவில்லை.

அடுத்து அவர்களின் பாடல் வரிகள் கணீர் என்று எழுந்தன.

முப்பத்து முக்கோடி தேவரே…….. தேவரே…..
எங்களுக்கு விடிவுதனை தாருமே…. தாருமே….

கதிரமலை கந்தனே…. கந்தனே…..கந்தனே…..
எங்களுக்கு விடிவுதனை தாருமே…. தாருமே….

முப்பாட்டன் முதுகொடிந்த கோப்பியே… கோப்பியே
முன்னோரை பலி யெடுத்தாய் கோப்பியே… கோப்பியே
ஆத்தாளை காவு கொண்ட கோப்பியே… கோப்பியே
அண்ணனைத்தான் என்ன செய்தாய் கோப்பியே… கோப்பியே

டண்டனக்கா டண்டனக்கா டுன்டுடும்…. டுன்டுடும்….

இப்படி அவர்களின் இசையும் பாட்டும் ‘ராகமும் தாளமும்’ ஆட்டமும் வேகமும் சேர்ந்து கூடியிருந்தோரை கல்லென சமைத்து கிறங்கச் செய்தன. அவர்கள் குதித்தாடியபோது பலகையிலான மேடையும் கூட இசையமைத்துக் கொடுத்தது. அதற்கேற்ப பாதச் சலங்கைகளும் மெட்டெடுத்துத் தந்தன.

அவர்களின் பாடல் அந்த நேரத்திலும் தமக்கு விடுதலை வேண்டும் என்ற தொனியிலேயே அமைந்திருந்த போதும் அதன் அர்த்தத்தை அங்கிருக்கும் யாரும் புரிந்து கொண்டிருக்க நியாயமில்லை.

பாட்டும் கூத்தும் இசையும் என்னதான் அங்கிருந்தவர்களை மாயப்பிடிக்குள் சிக்க வைத்து கட்டிப்போட்டிருந்தாலும் இரண்டு கண்கள் மாத்திரம் ஆட்ட நாயகியான செல்லியின் ஒவ்வொரு அங்க அசைவையும் கண்கொட்டாமல் விழுங்கி விடுவது போல் ரசித்துக் கொண்டிருந்தன. அவை வேறு யாருடையதும் கண்கள் அல்ல. மெக்லீனின் கண்கள்தான்.

செல்லி ஏற்கனவே கண்ணைக் கவரும் அழகிதான். என்றாலும் அன்று அவள் செய்திருந்த ஜோடனைகள், அணிந்திருந்த ஆடை அணிமணிகள் அவளை தேவ லோகத்து தேவதையாக்கி காட்டியது. குறிப்பாக அவள் கட்டிருந்த மார்புக் கச்சைக்கு அடங்காத அவளது மதர்த்துச் செழித்த மார்பகங்களை யார், எவரது கண்களையும் கசக்கித் தேய்த்துப் பார்க்க வைத்திருக்கும் என்பதில் எதுவித ஐயப்பாடும் இருக்க முடியாது. மெக்லீனன் அவள் மீது தீராத மையல் கொண்டு அவள் மார்பகங்களை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான். அவனது காம வேட்கை தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

அவர்களின் அந்த நடனம் உண்மையிலேயே அங்கிருந்தோர் அனைவரையும் தம்வசம் இழுத்து வைத்திருந்தது. மெய் மறந்திருந்த அவர்கள் நடனம் முடிந்ததும் தம் இருக்கையில் இருந்து எழுந்து நீண்ட நேரம் கரகோசம் எழுப்பினர். சிலர் விசில்கள் அடித்தனர். சிலர் தம் கரடு முரடான கட்டைக்குரலால் காட்டுக்கூச்சல் எழுப்பினர்.

நடன நிகழ்ச்சி முடிவுற்றதும் மெக்லீனன் அங்கே ஓரமாக இருந்து நிகழ்ச்சிகளை அவதானித்துக்கொண்டிருந்த அபோன்சுவை அழைத்து “தேவதை போல் ஜொலிக்கும் அந்த இள நங்கை” யாரென்று கேட்டான். அதற்கு அபோன்சு அவள் “மேமலை தங்கன் கங்காணியின் இளைய மகள்” என்று பதில் சொன்னான். “அவளை இன்றிரவு இங்கே தங்க வை. அவள் எனக்கு வேண்டும்.” என்று கட்டளையிட்டு அபோன்சுவை போகச்சொன்னான்.

அன்றிரவு செல்லி வீட்டுக்கு வராததும் விசயம் இன்னதுதான் என்று வீராசாமித் தேவர் கங்காணி வாயிலாக தெரிய வந்ததும் வீடு இழவு வீடு போலானது. செல்லியின் ஆத்தா கதிரம்மாளும் அப்பாயி செங்கம்மாளும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தனர். தங்கன் கங்காணி வெத்தலையைக் குதப்பிக்கொண்டு செய்வதறியாது பித்துப் பிடித்தவன் போல் ஓரமாக குந்திக்கொண்டிருந்தார்.

தெரிந்தே நடக்கும் அந்த அட்டூழியத்தை தட்டிக்கேட்கும் திராணி அங்கே யாருக்கும் கிடையாது. மெக்லீனன் வைத்ததுதான் அங்கு சட்டம். அவனை எதிர்க்க அந்தத்தோட்டத்திலோ சுற்று வட்டாரத்திலோ யாரும் இல்லை. அங்கே மெக்லீனன் பிடியில் சிக்குண்டு கழுகின் பிடியில் சிக்கிய கோழிக்குஞ்சு போல் சின்னா பின்னப்பட்டுக்கொண்டிருந்த செல்லியின் நிலை மிகப் பரிதாபகரமானதாக இருந்தது.நேற்று வரை தேன் சிட்டுப் போல் அத்தோட்டத்தில் காடு மலையெல்லாம் சுதந்திரமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த செல்லி அக்காமுகனின் கடும்பிடியில் சிக்கி துவண்டு கந்தல் துணிக்கு சமமானாள்.

அன்றிரவு செல்லிக்கும் செல்லியின் குடும்பத்தினருக்கும் விடியா நெடும் இரவாக நீண்டு கொண்டே போனது. அந்த கொடுமையான நீண்ட இரவு ஒருவாறு முற்றுப்பெற்று செல்லி விடிகாலையில் கந்தல் துணியாக அலங்கோலமாக வீடு வந்த போது மீண்டும் ஒருமுறை அங்கே ஒப்பாரிச் சத்தம் பொருங்குரலெடுத்து ஓலமிட்டு ஓய்ந்தது.

அந்த ஒப்பாரி அத்தோட்டத்தில் எல்லா மலை முகடுகளிலும் பட்டுத்தெறித்து ஓங்காரமிட்டு சாபமிட்டு ஓய்ந்தது. அந்த ஒப்பாரியே அந்தத்தோட்டத்து சனங்களுக்கும் முழு உலகுக்கும் நடந்து போய்விட்ட அந்த அநீதியை தண்டோரா போட்டு அறிவித்தது.

இந்த சம்பவம் செல்லியின் மனதை மிகப்பாரதூரமாகப் பாதித்தது. அவள் பித்துப் பிடித்துப் போய் ஊமையானாள். அதற்கு முக்கிய காரணம் அவள் அவளது அத்தைப் பையன் முறையான மணிராசு மீது கொண்டிருந்த மாறாத காதல் தான். அவர்கள் இருவரும் ஒருவருக்கு மற்றவர் என நிச்சயிக்கப்பட்டவர்கள் என்பதை அந்த ஊரும் உலகும் நன்கறியும்.

அவர்கள் அந்த தோட்டத்தின் பூப்பூத்த எல்லா கோப்பிச்செடிகளுக்கு ஊடாகவும், மலை உச்சிகளிலும் நதி தீரத்திலும் அடர்ந்த பற்றைக்குள்ளும் அலைந்து திரிந்து தம் காதலை பறை சாற்றியிருந்தார்கள். அவர்கள் காதல் ஒரு போதும் இரகசியக் காதலாக இருந்ததில்லை. அவர்கள் ஒருவரது நெஞ்சுத்துடிப்பை மற்றவர் காது கொடுத்து கேட்டு இன்புற்ற சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. இப்போது மணிராசுவிற்கு என்ன பதில் சொல்வது என செல்லிக்கு தெரியாது போனது. இதற்கப்புறமும் அவன் மடியில் தலைசாய்க்க இந்த மனம் ஒப்புக்கொள்ளுமா? அவளுக்கு தன் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் போல் உள்ளம் கொந்தளித்தது. இருந்தும் அவள் எல்லாத் துன்பங்களையும் உள்ளத்தில் போட்டு பூட்டி அடைத்துக்கொண்டு மௌனியாகவே இருந்தாள்.

தினங்கள் ஒவ்வொன்றாக கழிந்து சென்றன. செல்லியின் வாழ்வில் அந்த கறுப்புக் கறை ஏற்பட்டு அன்று எட்டாவது தினம். இந்த ஏழு நாட்களில் மணிராசு ஒரு தடவை கூட அவளை வந்து பார்க்கவில்லை. அவனுக்கு ஏன் தன்னை வந்து பார்த்து ஒரு வார்த்தை ஆறுதல் கூறத்தோன்றவில்லை. அவன் தன்னை அடியோடு வெறுத்து விட்டானோ என்று அவள் மனதுக்குத் தோன்றியது. நடந்து முடிந்து விட்ட அந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இது ஒரு விபத்துத்தான் என்று கத்திக் கூற வேண்டும் போல் அவள் தவிப்பாய் தவித்தாள். அதன் பின் அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். இதற்கு மேலும் இந்த உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பதில் எந்தவித பலனும் இல்லை என்று தோட்டத்தில் காணப்பட்ட அந்த உயரமான “உச்சிப்பாறை” நோக்கி நடந்தாள்.

இது இப்படி இருக்க, முதல் நாள் பிற்பகல் வேளையில் செங்கந்தைத் தோட்ட வரலாற்றில் மறக்க முடியாதபடி ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியது. அன்று காலை சாப்பட்டை முடித்து விட்டு பத்து மணியளவில் தனது கம்பீரமான அரபுக் குதிரையில் ஏறிப்புறப்பட்ட மென்லீனன் துரை தோட்டத்தின் ஒவ்வொரு மலையிலும் வேலை செய்து கொண்டிருக்கும் கூலிகளையும் கங்காணி, கண்டாக்கு, சுப்பவைசர் ஆகியோரின் வேலைகளையும் பார்வையிடுவதற்காக சென்றான். அவன் எல்லா மலைகளையும் சுற்றிப்பார்த்து விட்டு மேலும் செய்ய வேண்டியவைகளை கூறி விட்டு பங்களாவுக்குத்திரும்பலாம் என்று கருதினான்.

அதுவரை மப்பும் மந்தாரமாகவும் காணப்பட்ட வானம் திடீரென கருக்கட்டி பெருந்தூறலாக கொட்டவாரம்பித்தது. குதிரையை வேகமாக முடுக்கி விட்டால்தான் பெருமழைக்கு முன்னர் பங்களாவை அடையலாம் என்று துரைக்குத் தோன்றியது. அவன் தலையில் இருந்த தொப்பியை சரி செய்து பூட்ஸ் கால்களால் குதிரையின் தொடைப்பக்கம் உதைத்து கடிவாளத்தை இழுத்துப்பிடித்தான். குதிரை வேகமாகக் கிளம்பியது.

எனினும் அந்தப் மலைப்பாங்கான செப்பனிப்படாத கரடு முரடான பாதைகள் அவ்விதம் குதிரையில் வேகமாக பயணிக்கத்தக்க உகந்த பாதைகள் அல்ல. குதிரைக்கு அப்பாதைகள் பழக்கப்பட்ட பாதைகள் என்ற போதும் அது உதைத்த உதைப்பிலும் அடித்த அடியிலும் தட்டுத்தடுமாறி பங்களாவுக்கு சற்று அண்மித்திருந்த இடித்த முனியப்பர் கோவிலுக்கு அருகாமையில் வந்து விட்டது. இப்போது மழை இன்னும் பலமாக பெய்ய ஆரம்பித்தபோது மெக்லீனன் குதிரையை உதைத்து மேலும் கடிவாளத்தை இறுக்கினான்.
குதிரை எகிறிப் பாய்ந்தது. அக்கணத்தில் முனியப்பர் கோவிலின் இடிபாடுகளில் இருந்து வெளியே நீட்டித்துருத்திக் கொண்டிருந்த ஒரு கருங்கல்லில் குதிரையின் முன்காலொன்று இடற குதிரையுடன் மெக்லீனனும் குட்டிக்கரணம் அடித்து வீசப்பட்டான். குதிரை அவ்விடத்திலேயே விழ மெக்லீனன் பத்தடிக்கப்பால் வீசப்பட்டிருந்தான்.

அவன் விழுந்த போது இடிக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்த முனியப்பர் கோவிலின் கருங்கற்குவியலிலேயே விழுந்தான். அவன் மண்டை பிளந்து இரத்தம் மழை நீரில் கலந்தது. அவன் மூச்சுப்பேச்சற்று கிடந்த இடத்தில் இரத்தம் கலந்த நீர் தெப்பக்குளமென நிறைந்திருந்தது.

விசயமறிந்து ஆட்கள் வந்து சேர சற்று நேரம் பிடித்தது. எனினும் அபோன்சும் வீரமலைத்தேவரும் வந்த பின்பே வண்டில் கட்டி கண்டியில் இருந்த பெரியாஸ்பத்திரிக்கு அவனை அனுப்பி வைத்தனர். அந்த நேரம் வரை தலையில் இருந்து இரத்தம் வெளியேறுவதை என்ன பிரயத்தனம் செய்தும் அவர்களால் நிறுத்த முடியவில்லை. அபோன்சும் அந்த வண்டியிலேயே ஆஸ்பத்திரிக்குச் சென்றான்.

அபோன்சுவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அங்கிருந்த மருத்துவர்கள் மெக்லீனனைக் காப்பாற்ற கடும் முயற்சி செய்தனர். அவ்வித முயற்சி பல மணி நேரங்கள் வரை நீடித்த போதும் அவர்களால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. உடலில் இருந்து மிக அதிகமான இரத்தம் வெளியேறி விட்டமையே அதற்கு காரணம் என்று அவர்கள் இறுதியாகக் கூறினர்.

மெக்லீனனின் மரணச் செய்தி அன்றிரவே செங்கந்தை தோட்டத்தை எட்டி விட்டது. அபோன்சுவே அச்செய்தியைக் கொண்டு வந்திருந்தான். ஆஸ்பத்திரி நடைமுறைகள் பூர்த்தியானதும் அடுத்த நாளே உடலை தோட்டத்துக்குக் கொண்டு வர முடியும் என்று அபோன்சு தெரிவித்திருந்தான். இந்த அகால மரணம் தொடர்பில் தோட்டத்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழத்தொடங்கின. அவற்றில் சில கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்டன. அட்டூழியக்காரனுக்கு தமது காவல் தெய்வம் சரியான தண்டனை வழங்கி விட்டது என்பதே பொதுவாக எல்லோராலும் உரத்துக்கூறப்பட்ட கருத்தாக இருந்தது.

மெக்லீனனின் மரணச் செய்தியை மணிராசும் கேள்விப்பட்டான். உடனேயே செல்லியை சந்தித்து விட வேண்டுமென்று அவன் மனதில் உந்துதல் ஏற்பட்டது. எனினும் இரவு வந்து வெகு நேரமாகியிருந்ததால் காலையில் சென்று அவளை சந்திப்பது என்று தீர்மானித்தான். கடந்த ஒரு வாரமாகவே அவன் செல்லியை காணாமல் மனம் தவிப்பாகத் தவித்துக்கொண்டிருந்தது. “செல்லி கெட்டுப்போனவள். அவளுடன் இனி உறவு வேண்டாமென” அவன் வீட்டார் அவனுக்கு செல்லியை சந்திக்கத்தடை விதித்தனர்.

இதனால் அவன் மனம் போராடிப் போராடி தோற்றுப்போயிருந்தது. ஆனால் இப்போது மெக்லீனனின் இறப்பு அத்தோட்ட மக்கள் அனைவரது மனங்களிலும் வாழ்வின் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அவன் காலையில் செல்லியை சந்திக்க அவள் வீட்டுக்குச் சென்ற போது செல்லி வீட்டில் இருக்கவில்லை. செல்லியின் வீட்டினர் அவனை திருடனைப் பார்ப்பது போல் அருவருப்புடன் பார்த்தார்கள். அவனால் அந்தப் பார்வையைத்தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் எங்கே போய் செல்லியைத் தேடுவது என்று நினைத்தான். சட்டென்று அந்த எண்ணம் அவன் மனதில் பளிச்சிட்டது. செல்லியும் கூட தன்னை போல் அவனைக் காண தவித்துக் கொண்டுதானே இருப்பாள். அவனுக்கு அவர்கள் வழக்கமாக சந்திக்கும் அந்த உயர்ந்த “உச்சிப்பாறை” நினைவுக்கு வந்தது. கூடவே பய உணர்வும் ஏற்பட்டது.

அவள் இந்த ஒரு வார காலத்தில் தன்னை காண முடியாத ஏக்கத்தில் பாறையில் இருந்து குதித்து விட்டால்…. அந்த “உச்சிப்பாறை” என்ற இடத்துக்கு “தற்கொலை முனை” என்று இன்னொரு பெயரும் இருந்தது.

அவன் ஓட்டமும் நடையுமாக விரைந்தான். விரைந்து மலையேறுவது லேசுப்பட்ட காரியமல்ல. அவனுக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. எனினும் “அவள் தற்கொலை செய்து கொண்டால்…” என்ற நினைப்பு அவனது பிடறியைப் பிடித்து உந்த உருண்டு பிறண்டு அவன் மேலே ஏறிச் சென்றான். மணிராசு வருவதற்கு வெகு நேரத்துக்கு முன்னமே உச்சிப் பாறைக்கு வந்து விட்ட செல்லி தன் வாழ்க்கை இவ்விதம் திடீரென அஸ்தமித்துப் போய்விட்டதை எண்ணிக் கலங்கிக் கலங்கி விசும்பலெடுத்து அழுதாள். இந்த உலகமே திரண்டு வந்து “நீ கெட்டுப்போனவள்” என்று சொன்னால் கூட அவள் கவலைப்படமாட்டாள். ஆனால் அவள் உயிருக்குயிராய் அன்பு செலுத்திய மணிராசு ஒரு தடவையாவது ஏன் வந்து பார்க்கவில்லை என்பதே அவளை சோகத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்றது.

அந்த “உச்சிப்பாறை” எவரது மனதுக்கும் இதமளிக்கும் மிக ரம்மியமான ஒரு இடமாகவே அனைவராலும் கருதப்பட்டது. மறுபுறத்தில் மலையருவி கொட்டும் மாயத்தோற்றம். அதற்குக்கீழ் மிக ஆழமான பள்ளத்தாக்கு. கால் தடுக்கி விழுந்தாலும் கூட அதல பாதாளத்தில்தான் விழ வேண்டும். பின்னர் எலும்புகளை பொறுக்கி எடுப்பது கூட மிகக் கடினமான காரியமாகி விடும்.

வாழ்வில் எத்தகைய பெரிய துன்பம் வந்து இனிமேல் வாழ முடியாது என்று விரக்தியின் உச்ச கட்டத்துக்கு வந்தவர்கள் கூட ஒரு முறை அந்தப்பள்ளத்தாக்கை பார்த்தால் அச்சமடைந்து தம் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். இருந்தும் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு முறை மணிராசுவை பார்த்து விட்டு அப்புறம் நான் செத்துப்போய்விடமாட்டேனா என்று அவள் மனம் துடித்து ஏங்கியது. “மணிராசு வந்துவிட மாட்டானா?” என்று எதிர்பார்த்து அவள் மனம் தம் தீர்மானத்தை பின் போட்டுக்கொண்டே இருந்தது.

அப்படி அவள் மனம் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த போதுதான் மணிராசு அவ்விடத்தைச் சென்றடைந்தான். மணிராசுவை செல்லி காண்பதற்கு முன்னரேயே அவன் வாசத்தினை அவள் உள்ளம் உணர்ந்து விட்டது. அந்த கணத்திலேயே அவள் முகம் அன்றலர்ந்த அல்லி மலர்போல் பிரகாசிக்கத் தொடங்கி விட்டது. அவள் துன்ப துயரங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளிகள் போல் காற்றில் கரைந்து போய் விட்டன. அவள் எழுந்து அவனை வரவேற்கத்தயாரானாள்.

அவனுக்கும் அதேநிலைதான். அவன் அவளைக் கண்ட மாத்திரத்தில் தன் வசமிழந்ததான். அவன் கால்கள் நிலத்தில் படவில்லை. இருவரும் ஒருவர் மற்றவரை நோக்கி ஓடோடி வந்தனர். அவர்களின் அந்த அணைப்பு அவர்களிடையே சகலவிதமான இடைவெளிகளையும் இல்லாமல் செய்தது. அவன் அவள் கண்களை உற்று நோக்கினான். அவற்றில் துளிர்த்திருந்த இரு சொட்டு கண்ணீர்த்துளிகளை தன் சுட்டு விரலால் அழுத்தித் துடைத்து, சொடுக்கி விட்டெறிந்தான். அந்த துடைப்பானது அந்த ஒரு வாரத்தில் அவளடைந்த எல்லாத் துயரங்களையும் துடைத்தெறிந்தது போல ஒரு சுதந்திர உணர்வை அவளுக்கு தந்தது.

அடுத்த கணத்தில் அவள் உதட்டில் முகிழ்த்த அந்த சிறு புன்னகைக் கீற்று அவன் கவலைகள் எல்லாவற்றையும் துரத்தியடித்தது. அவர்கள் இருவருக்கும் தத்தம் ஆதங்கங்களை கூறிக்கொள்ள வார்த்தைகள் தேவைப்படவில்லை. அவர்களின் எல்லா வேற்றுமைகளும் காற்றினில் கரைந்து போய்விட்டன. அவர்கள் ஒருவரில் ஒருவர் ஒன்றாய்க் கலந்தனர். உள்ளமும் உயிரும் ஒன்றாய்க் கசிந்தன. எல்லா மலைகளும் எல்லா மரங்களும் எல்லாப் பூக்களும் அவர்களின் ஒன்றுதலுக்கு ஒத்திசை பாடின. கட்டியம் கூறின. கவி மழை பொழிந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *