வைரஸ் வந்ததும் போவதும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 5,870 
 

இன்டெர் நெட் திறந்ததும் அவன் முதல்லே பார்ப்பது அவனுக்கு வரும் ஆன்லைன் பர்ச்சேஸ் மலிவு என அறிவிக்கும் பொருள்கள் அதிலும் அதில் வரும் செல்போன், ஹெட்போன் தான். “கிரேசி” என்று சொன்னாலும் “பிச்சு ” என்று தெலுங்கில் சொன்னாலும், பைத்தியம் என்று தமிழில் சொன்னாலும் அவனுக்கு பிடிச்ச வார்த்தை. இவனுக்குன்னு அந்த பெரிய கடைகள்.

ரெண்டு மாசம் முன்னாலே அம்பதாயிரத்துக்கு வாங்கின போன், அதனுடைய அட்வான்ஸ் மாடல் வந்ததும், எக்சேஞ்சு என்ற பேரில் பத்தோ, பன்னிரண்டுகோ கொடுத்திட்டு புது போன் அறுவது அல்லது எழுபதுக்கு வாங்கணும்.

அன்றொரு நாள். அவன் கெல்லீஸ் வழியா கார் ஓட்டிக் கொண்டு போகும் போது, அவன் பழைய டிரைவர் வேலு, பாவமா பஸ் ஸ்டாண்ட் கிட்டே நின்றதை பார்த்து வண்டியே நிறுத்தி “என்ன வேலு! பார்த்து நாளாச்சு! எங்கே போறே! வா! வண்டிலே ஏறு !” என்று சொல்லி ஏற்றிக் கொண்டான்.

“எப்படி இருக்கே! வேலு!” என்றவுடன்,

“என்ன சார் பண்றது! உங்களுக்கு வெளி வேல நின்னதும் என்னையும் நிறுத்திடீங்க! வீட்டு பசங்க ஸ்கூல் டிராப்பும் நின்னிடிச்சு! நீங்களும் நிறைய பணம் கொடுத்தீங்க! சாப்பாடு வாடகைக்கு இவ்வளவுநாள் சமாளிச்சேன்! அம்மாவுக்கு வேற உடம்பு சரி இல்லே சார்! இந்த டிராவல்ஸ் காரங்களும் முன்னே மாதிரி கூப்பிடறதில்லே சார்! எல்லாமே இருண்டு போச்சு சார்!

போன நவராத்திரி நினைச்சு கிட்டேன் சார்! நம்ப அம்மா தினத்துக்கு சாப்பாடு போட்டு, எனக்கும் என் சம்சாரத்துக்கும் புடவை துணி வாங்கி தந்தாங்க! சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க சொல்ல மைலாப்பூர், அடையாறு, நீலாங்கரைன்னு போயிட்டு வருவாங்க!

இவன் பேச பேச சேகருக்கு போன வருஷ நினைவு!

எப்பவும் பிசி!

பிசினஸ் அருமையா போய்க் கொண்டிருந்தது.

நடுவுலே இந்த வைரஸால் எல்லாம் நெட்டுக்கு போச்சு! இப்போ நல்ல காலம் கடவுள் கண்திறந்த மாதிரி மெதுவா நிலைமை மாறுது!

மெதுவா வியூ மிரர் லே வேலுவை பார்த்தான்!

பாவம் எவ்வளவு நல்லவன்! தனக்காக எப்படி உழைச்சு அன்பா இருப்பான்! கடவுளே!

வாட் ஏ செல்பிஷ் மேன் ஐ யாம்! என்று லேசா அவன் கண்களில் கண்ணீர்!

அதற்குள் கார் நுங்கம்பாக்கம் தாண்டி ராதாகிருஷ்ணன் சாலை போய்க் கொண்டிருந்தது!

வண்டியே ஓரம் நிறுத்தினான்!

வேலு! வண்டியே எடு! நேர வீட்டுக்கு விடு! என்று சொல்லிவிட்டு அவன் மனைவிக்கு போன் பண்ணினான்.

வண்டி வீட்டுக்குப் போனதும், “வேலு! நீ பார்க் பண்ணிட்டு மேல வா!” என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.

சற்று நேரத்தில் வேலு வீட்டின் டோர் பெல் தொட்டதும் சேகரும் அவன் மனைவியும் திறந்தார்கள்.

“அம்மா! நல்லா இருக்கீங்களா! பார்த்து ரொம்ப நாளாச்சு!”

“ஆமாம் வேலு! இந்த வைரஸ் எல்லாத்தையும் மாத்தி விட்டது, உள்ள வா!”

“அந்த சானிடைஸர் கை கழுவிட்டு டேபிள்லே டிபன் காபி சாப்பிடு!” என்றாள் அன்புடன்.

பல மாதங்களுக்கு பிறகு வேலு அவனுக்கே உண்டான மகிழ்வுடன் சாப்பிட்டான். அதன்பிறகு,

“வேலு ! இந்த கவர்லே பணம் வச்சிருக்கேன் உன் வீட்டு சிலவுக்கு, நாளைக்கு காலையிலே உன் வீட்டுக்கு தேவையான மளிகை லிஸ்ட் போட்டு எடுத்திண்டு வா! தயங்காதே! இப்போ ஷாப் எல்லாம் திறக்கறாங்க! நான் கூட வந்து வாங்கி தரேன்! இனிமே உனக்கு மாசம் தவறாம இது உண்டு. அதுக்காக நீ நாளைக்கு வேலைக்கு வரணும் அவசியமில்லே! நேரம் கிடைக்கும்போது ஒருநடை வந்துட்டு போ!” என்றாள் சேகர் மனைவி.

“அம்மா! உங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போறேன்!” என்று வேலு கண்ணீர் மல்க சொன்னான்.

அதற்குள் சேகருக்கு அந்த பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்லிருந்து கால்!

“சார்! லேட்டஸ்ட் போன்! பெஸ்டிவல் ஆபர்! பாமிலி பாக் ஸ்பெஷலா இருக்கு! எடுத்து வச்சுட்டேன்! வாரீங்களா! அல்லது அனுப்பவா!”

அந்த காலுக்கு சேகர் பதில் “அவசரமில்லே! வேணும்னா நான் அங்கு வரேன். இப்போ தேவை இல்லை” என்று போனை ஆப் பண்ணி விட்டு திரும்பும்போது அப்பொழுதுதான் வேலு சிரிச்ச முகத்தோட வெளியே போய்க் கொண்டிருந்தான்.

“வேலு! ஒரு நிமிஷம் நில்லு!” என்று அவனிடம்,

“இன்னம் தீபாவளிக்கு ஒரு வாரம் கூட இல்ல! நீ நாளைக்கே டூட்டி ஜாயின் பண்ணிடு! இந்த செக்கில் அமவுண்ட் பில் அப் பண்ணிட்டேன். இது தீபாவளிக்கு உனக்கும் உன் பாமிலிக்கும். அம்மா கைலே கொடுத்து வாங்கிக்கோ!

அப்புறம் ஸ்கூல் திறக்கப் போறாங்க! இனிமே உன் பசங்க ஸ்கூல் பீசு, எல்லாம் சேர்த்து நாளைக்கு வரும்போது அம்மா பணம் தருவாங்க! வாங்கிக்கோ!” என்றான்.

மனைவியின் முகத்தை பார்த்தான். அவன் மனைவி முகம் மலர சிரித்தாள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *