யாவரும் அடிமைகளே!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,184 
 

மோகன் !

டேய் மோகன் !

அம்மா அழைக்கும் சத்தம் கேட்டது.

மாடியில் இருந்து எட்டி பார்த்தபடி, என்னமா ! என்றேன் உரக்கமாக.

கீழ இறங்கி வாடா! என்றாள் அம்மா.

சென்றேன். ஏம்மா கூப்ட ?

அம்மா, என் கையில் லிஸ்ட் ஒன்றை கொடுத்து, சாரதி அண்ணாச்சி கடைக்கு போயி இந்த லிஸ்ட்ல இருக்குற சாமான வாங்கிட்டு வா என்றாள் .

ஹ்ம்ம்…என்று இழுத்தபடி, சரி போறேன், காசு குடு !

கையில காசு இல்லடா. ATM ல போய் காசு எடுத்துட்டு அப்புடியே அண்ணாச்சி கடைக்கும் போய்ட்டு வந்துருடா ! என்றாள் அம்மா.

பர்சில் இருந்த ATM கார்டையும், அம்மா கொடுத்த லிஸ்டயும் சட்டை பையில் திணித்தேன். மூட்டு அடிக்காத லுங்கியை மடித்துக் கட்டி, இரண்டு வருடத்திற்கு முன்பு வாங்கிய பேட்டா செருப்பை மாட்டிக்கொண்டு கடைவீதிக்கு புறப்பட்டேன்.

வீட்டு படியில் இருந்து கீழே இறங்கும் தருணம் ஒரு குரல், அண்ணா ! அண்ணா ! என்று என்னை அழைத்தது. அது வேறு யாருமில்லை, என் பக்கத்து வீட்டு இரண்டு வயதுமிக்க குழந்தை ‘சச்சு’. அவன் பேசும் நான்கு வார்த்தைகளில் அண்ணாவும் ஒன்று. சச்சுவின் குரல் மெல்ல மெல்ல மறைய, என் வீட்டிலிருந்து மெயின் ரோட்டுக்கு செல்லும் ஒற்றையடி பாதையில் நடந்தேன். திடீரென்று என் கால்களை ஏதோ சீண்டியது. சட்டென்று திரும்பி பார்த்தேன். பார்த்தால் அது என் தெருவின் காவல்கார நாய். மன்னிக்கவும்.. காவல்காரி நாய். அவள் பெயர் ஜுலி.

ஜுலிக்கு தெரியாமல் புதிதாக யாரும் என் தெருவின் எல்லையை கடப்பது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அப்படி ஒரு கெட்டிக்கார காவல்காரி.

ஏய் ஜூலி போ …. என்று அவளை துரத்திவிட்டு மெயின் ரோட்டை நோக்கி நடந்தேன். என் தெரு முக்கில், மெயின் ரோட்டை தொடும் அந்த மேடான பாதையில் இரண்டு வேகத்தடைகள் உண்டு. மெயின் ரோட்டிலிருந்து என் தெருவிற்குள் டூ வீலரில் நுழையும் ஆசாமிகள், அந்த இரண்டு வேகத்தடைகளில் இருபுறமும் இருக்கும் சிறு கேப்பின் வழியாகத்தான் தங்களின் டூ வீலர்களை ஓட்டுவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. ஏனென்றால் என்னிடம் டூ வீலர் எதுவும் இல்லை.

அம்மா கூட அடிக்கடி என்னிடம் சொல்லுவாள்.. “மோகன் நீ ஏன்டா லோன் போட்டு ஒரு பைக் வாங்க கூடாது ? என்று.

ஆனால் எனக்கு அதில் இஷ்டம் இல்லை. காரணம் என் தந்தை அடிக்கடி என் காதுகளில் ஓதும் மந்திரம் ஒன்று.. “டேய் மோகா ! யாருகிட்டயும் கடன் மட்டும் வாங்கிறாத. எப்ப நீ அடுத்தவன் கிட்ட கை நீட்டி கடன் வாங்குரியோ அப்பவே நீ அவனுக்கு அடிமை ஆயிடுவ” என்று. அதனால் என்னவோ இப்போது ATM சென்டருக்கும், சாரதி அண்ணாச்சி கடைக்கும் நடந்தே செல்லும் கட்டாயம்.

சில மீட்டர் தூரத்தை என் கால்களால் கடக்க, இப்போது மெயின் ரோட்டை வந்தடைந்தேன்.

பொதுவாக நான் செல்லும் மெயின் ரோட்டில், அடிக்கடி மற்றவர்கள் கண்களில் பட நடந்து செல்வது இரண்டே பேர். ஒன்று நான். மற்றொருவன் அதே ரோட்டில் திரியும் நீண்ட சடை வளர்த்த பிச்சைக்காரன். இன்று அவனை காணவில்லை. ஒர்க் பிஸி என்று நினைக்கிறேன்.

மெயின் ரோட்டில் சில வாகனங்கள் என்னை கடந்து செல்ல, நான் ரெகுலராக முடி திருத்தும் செய்யும் மாரி சலூனும் வந்தது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் மாரி அண்ணனுக்கு கஸ்டமர் யாரும் வரவில்லை போல. கடை வாசலில் உட்கார்ந்தபடி செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன் பாக்கு போட்டு கறை படிந்த அவரின் முன் பற்கள் தெரியும்படி சிரித்துக்கொண்டே எனக்கு ஒரு சலாம் வைத்தார். நானும் மாரி அண்ணனுக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு, அவரின் சலூன் கடைக்கு சற்று எதிரே இருக்கும் விநாயகப் பெருமானுக்கும் ஒரு நமஸ்காரத்தை செலுத்தி விட்டு ATM சென்டரை நோக்கி நடந்தேன்.

அப்படி நான் நடந்து செல்ல, மடித்து கட்டிய என் லுங்கி கீழே இறங்கியது. கீழே இறங்கிய லுங்கியை நடந்துகொண்டே மீண்டும் தூக்கிக்கட்டியபடி என் கண்களை இடது புறமாக திருப்பினேன். பெட்ரோல் பங்கில் சுமார் முப்பது அடி உயரத்தில் ஒரு கம்பம் நிற்க, அந்த கம்பத்தில் இருந்த டிஸ்பிளேவில் “பெட்ரோல்- 92 ரூபாய் ; டீசல்- 87.60 ரூபாய் “ என்ற எழுத்துக்கள் சிவப்பு நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. அதை கண்ட மறு கணம் என் கண்கள் பெட்ரோல் பங்கிற்கு திரும்பியது. அங்கு ஆண், பெண் என்று எவ்வித பாரபட்சமும் இல்லாமல், மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிவாயு நிரப்புவதற்கு முண்டியடித்துக்கொண்டு அவர்களின் பைக் ஆக்ஸலரேட்டரை முறிக்கியபடி வரிசைகட்டி நின்றிருந்தனர். அதில் ஒரு சில ஆசாமிகள் “இந்த பெட்ரோல் விலை எப்பதான் குறைய போகுதோ?” என்று அவர்கள் புலம்பும் சத்தம் என் காதுகளுக்கு கேட்கவில்லை. ஆனால் என் கண்களுக்கு தெரிந்தது. நல்ல வேலை, நமக்கு இப்போது இந்த புலம்பல் அவசியமில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

பெட்ரோல் பங்கை கடந்து சில மீட்டர் நடந்தேன்.

ATM சென்டர் என் கண்களுக்கு தென்பட்டது. ATM வாசலில் செக்யூரிட்டி வெள்ளை நிற பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து கொண்டு அருகில் இருந்த பூக்கடை முதலாளியிடம் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தார். அருகில் சென்றேன்.

ATM சென்டர் கதவில் வெள்ளை நிற அட்டையில், கருப்பு நிற எழுத்துக்கள் “ATM OUT OF SERVICE” என்று.

எனக்கு ஆத்திரம் வந்தது. நான் பலமுறை அந்த ATM சென்டரை கடந்து செல்லும் போது சர்விஸில் இருக்கும் ATM, நான் பணம் எடுக்க செல்லும் தருணம் “OUT OF SERVICE “.

சரி போகட்டும் என்று அருகில் இருந்த மற்றொரு ATM கு சென்றேன். மக்கள் கூட்டம் ஏதும் இல்லை. உள்ளே நுழைந்தேன். சட்டை பையில் இருந்த ATM கார்டை எடுத்து, ATM மெஷினிற்குள் செலுத்தினேன். அப்போது என் முதுகின் பின்னே ஒரு குரல், “தல ATM ல காசு இல்ல” என்று. திரும்பினேன். இரண்டு ஆசாமிகள், தோளில் கருப்பு நிற பேக், கழுத்தில் ID கார்ட் அணிந்தவாறு நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அந்த ATM வங்கிக்கான சர்வீஸ் மேன்கள்.

கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க ! என்றார் அந்த ஆசாமியில் ஒருவர்.

முகம் சுளித்தபடி மெஷினிலிருந்து கார்டை ரிமூவ் செய்துவிட்டு, ATM ஐ விட்டு வெளியே வந்தேன். நான் வருவதை பார்த்து, அழுக்கு லுங்கி, உடம்பில் ஆங்காங்கே பெயிண்ட் புள்ளிகள், வாயில் குபீரென்று வீசும் சாராய வாடையுடன் நாற்பது வயதுமிக்க ஒரு ஆசாமி என்னிடம் வந்து “தம்பி atm ல பணம் வருதா” என்று கேட்டார்.

அண்ணே, இப்பதான் பணம் வைக்க போறாங்க ! வெயிட் பண்ணுங்க என்றேன். அப்படியா தம்பி ! என்று என்னிடம் பேசியவாறே அந்த ஆசாமியின் கண்கள் என்னைவிட்டு விலகி ATM சென்டருக்குள் பாய்ந்தது. அங்கு சர்வீஸ் மேன், அவர் கொண்டு வந்திருந்த கருப்பு நிற பையில் இருந்து ரூபா நோட்டுகளை கட்டு கட்டாக வெளியே எடுப்பதை அந்த ஆசாமி குறு குறுவென கவனிப்பதை நான் கவனித்தேன். ஒரு வேள இந்த ஆளு திருடனா இருப்பானோ ? என்ற எண்ணம் என் மண்டையில் ஓடத் தொடங்கியது.

நமக்கு எதுக்கு வம்பு … என்று நினைத்து அந்த ஆசாமியை விட்டு சற்று ஐந்தடி தள்ளியே நின்றேன். என் கண்கள் அவரை விட்டு விலகி ரோட்டிற்கு சென்றது. டென்ஷனாக இருந்த எனக்கு, கண்கள் குளிர்ச்சி அடைய R.V.G பெண்கள் கலை கல்லூரி பேருந்து என்னை மெதுவாக கடந்தது. ஆஹா ! என்ன அழகான பெண்கள்.

பார்த்தேன். ரசித்தேன்..

என்னை பொறுத்த மட்டில் பெண்மையை ரசிக்கத் தெரியாதவன் கிறுக்கன். பெண்மையை ருசிக்க துடிப்பவன் அரக்கன். நான் கிருகனும் அல்ல, அரக்கனும் அல்ல..

நான் அப்படி பெண்மையை ரசிக்க, கல்லாரி பேருந்தும் என்னை விட்டு மெதுவாக கடந்து சென்றது.

பேருந்து என்னை விலக, அதன் பின்னே இருந்த FAST FOOD கடை என் கண்களுக்கு தென்பட்டது. கடைக்காரன் நீண்ட கரண்டி ஒன்றை வைத்து சட்டியை கிண்டி கொண்டிருந்தான். ஒரே கூட்டம். குறிப்பாக இளைஞர்கள், அவர்களுள் பெண்களும் அடங்கும். கடைக்காரனுக்கு வருமானம் பேஷ் பேஷ். நாற்பது அடி தூரத்தில் இருக்கும் FASTFOOD கடையின் மணம் என் மூக்கை துளைத்தது. நுகர்ந்தபடியே நின்றிருந்தேன். மீண்டும் அந்த சாராய ஆசாமியின் குரல், “தம்பி வாங்க பணம் வச்சுட்டாங்க” என்று.

அவர் அருகில் சென்றேன். போங்க, நீங்க போய் பணம் எடுத்துட்டு வாங்க என்று அவருக்கு அனுமதி கொடுத்தேன். அந்த ஆசாமியோ தலையை சொரிந்த வாரே “இல்ல தம்பி எனக்கு பணம் எடுக்கத் தெரியாது, நீங்க கொஞ்சம் வந்து எடுத்து தரீங்களா? என்று ATM கார்டை என்னிடம் நீட்டினார்.

சரி வாங்க! என்று அவரை அழைத்து ATM சென்டருக்குள் இருவரும் நுழைந்தோம்.

அண்ணே எவ்ளோ அமௌன்ட் ?

மூவாயிரம் தம்பி…

கார்டை மெஷினிற்குள் செலுத்தி, சாராய ஆசாமி சொன்ன பின் நம்பரை டைப் செய்து, பின்னர் 3000 என்ற எண்ணையும் டைப் செய்தேன். சில வினாடிகளில் ஆறு ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் மெஷினிலிருந்து வெளியே வந்தது. பணத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். ரொம்ப நன்றி தம்பி ! என்று சொல்லி நோட்டுக்களை எண்ணியவாறே ATM சென்டரை விட்டு வெளியேறினார். அவர் சென்றாலும், அந்த ஆசாமியின் சாராய வாடை ATM சென்டரை விட்டு வெளியேறவில்லை.

அடுத்தபடியாக நான் பணம் எடுக்க வேண்டும் அல்லவா !

ATM கார்டை மெஷினிற்குள் செலுத்தி, எனக்கான பின் நம்பரை டைப் செய்து, அமௌன்ட் நானூறை டைப் செய்தேன்.

INSUFFICIENT FUND என்று டிஸ்பிளேயில் காண்பித்தது. மீண்டும் முயற்சி செய்தேன். INSUFFICIENT FUND என்று மீண்டும் காண்பிக்க என் வங்கி கணக்கின் பேலன்ஸ் என்கொயரி ஐ செக் செய்தேன்.

அதில் பேலன்ஸ் அமௌன்ட் 450 ரூபாய் என்று காண்பிக்க, அப்போது தான் புரிந்தது, ATM சர்வீஸ் செய்ய வந்த ஆசாமிகள் மெஷினிற்குள் திணித்து விட்டு சென்றது எல்லாமே ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் என்று. நூறு, இருநூறு ரூபாய் நோட்டுகள் இருப்பதும், அதை என்னைப்போன்ற பாமர மக்களில் ஒருவன் வித்ட்ராவல் செய்வதுண்டு என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள் போல. பாவம் …

ATM ல் பணம் வரவில்லை என்று அம்மாவிற்கு போன் செய்து தெரிவித்தேன். அம்மாவோ, “மோகன் ! அண்ணாச்சி கிட்ட நாளைக்கு காசு தரேன்னு சொல்லி வாங்கிட்டு வாடா” என்று சொல்லிவிட்டார்.

ஓ கடன் வாங்குவதா………

ஒரு வித தயக்கத்துடன் ATM சென்டரில் இருந்து சாரதி அண்ணாச்சி கடைக்கு சென்றேன். மடித்து கட்டிய லுங்கியை இறக்கி விட்டு, சட்டை பையில் இருந்த லிஸ்டை எடுத்து சாரதி அண்ணாச்சியிடம் கொடுத்தேன். அவரும் லிஸ்டில் இருந்த சாமான்களை சர் சர் என்று பொட்டலம் மடித்தார்.

கணக்கு பார்த்து, மொத்தம் முன்னூத்தம்பது ஆச்சு தம்பி ! என்றார்.

அண்ணாச்சி ! அம்மா நாளைக்கு காசு தரேன்னு சொன்னாங்க… என்றேன் மங்கிய குரலில்.

ஏன் தம்பி ! நம்ம கடைலதான் கடன் கொடுக்குறது இல்லேன்னு தெரியும்ல உங்களுக்கு. அம்மாவுக்கும் இது தெரியுந்தானே… பின்ன கடன் கேட்டா எப்டி தம்பி ? நல்லவா இருக்கு சொல்லுங்க.. நான் என்ன மொத்த வியாபாரமா நடத்துறே, நீங்க குடுக்குற பணத்துல தான் நெதம் மார்க்கெட் போய் சாமான் வாங்கிட்டு வாறே..

அமைதியாக நின்றேன்.

சரி போங்க ! இதுவே முதலும் கடைசியாவும் இருக்கட்டும். அம்மாகிட்ட சொல்லிருங்க என்றார் சாரதி அண்ணாச்சி.

சரிங்க அண்ணாச்சி.. என்று சொல்லி சாமான்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்தேன். அப்போது அப்பா என் காதுகளில் ஓதிய மந்திரம் மீண்டும் என் நினைவிற்கு வந்தது. ஆனால் என்ன செய்வது ?

நாம் யாவரும், ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் யாருக்கோ அடிமைகள் தானே……..

Print Friendly, PDF & Email

1 thought on “யாவரும் அடிமைகளே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *