மௌன கீதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 2,719 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மின் விசிறிகள் வேக மாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. மின் விளக்கு களின் மஞ்சள் நிறமான வெளிச்சத்தில், அவற்றின் நிழல் கரும்பூதங்களாய் கூரையில் அசைகின்றன. ஏதொவொரு ஸ்வலிப்பான அழகு பெற்றது போன்ற அந்தச் சூழலில் – கலகல வென்று பேசிக் கொண்டி ருக்கும் ‘ஒவ்வீஸ்’ நண்பர் களின் குரலுக்கு அப்பால்மயங்குகின்ற மோகனமான தொரு மௌனகீதமாய், ஏதோவொரு உணர்ச்சி என் இதயத்தின் அடித் தளத்தில் பிறப்பது போன்ற அந்த இலயிப்பில், மூடி யிருக்கின்ற கண்ணாடி ஜன் எலுக்கப்பால் பார்க்கின்றேன். ‘ ஒவ்வீசில்’ எனது இடத்தில் இருந்தவாறே பார்க்கின்றேன்.

நெழிந்து, வளைந்து செல்கின்ற அந்த வீதிக்கப்பால், மேடும் பள்ளமுமாக ஓட்டு வீடுகளின் கூரைகள் தெரிகின்றன. வடகீழ் மூலையில் அருகருகாக இருக்கும் பிள்ளையார் கோவில் கோபுரமும், மாதாகோவிலின் சிலுவையும் ஏதோ தத்துவ உபதேசம் செய்வன போல் நிமிர்ந்து நிற்கின்றன. தூரத்தில் துறைமுகக் கம்பத்தில் அந்த மூன்று கொடிகளும் காற்றில் அசைந்துகொண்டே இருந்தன. ஓட்டு வீடு களின் மத்தியில் ஒற்றை மரமாய் நின்ற தென்னை மரத் தின் பச்சை ஓலைகளும் அசைந்தன. துறைமுகத்தில் நிற்கும் கப்பல் கொடிமரங்களின் நுனிகள் ஓட்டு வீடுகளுக்கு மேலாய்த் தெரிந்தன.

அந்த மௌனகீதத்தில் மனம் கிளுகிளுத்தது. எப்போ தாவது அபூர்வமாக சங்கீதக்கச்சேரிகளில் கேட்கும் வயலினின் மெல்லிய- மனத்தை உருக்குகின்ற அந்த ஒலிபோல, நாதசக்திகள் எல்லாம் ஒன்று திரண்டு அழுவது போல, கள்ளம் கபடமற்ற ஒரு கன்னிப்பெண் மெல்லிய குரலெடுத்து முளங்குவது போல……..

வெளியேயே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பூமியை மூடியிருக்கும் மேகக்கூட்டங்களால் அரையிருட்டுக் கோலம்; மெல்லிய தூறலாய் மழை விழுந்து கொண்டு இருக்கிறது. தூரத்தே சினிமாத் தியேட்டரின் சிவப்பு வெளிச்சத்தில் அதன் பேர் பளபளக்கிறது. றோட்டில் கண்ணுக்கு எட்டிய வளைவில் சிவப்புச்சேலை கட்டி மொட் டாக்குப்போட்ட நடுத்தரவயதுப் பெண்ணொருத்தி விரைந்து கொண்டிருந்தாள்.

கண்ணை மூடிக்கொண்டே என்னுள்ளே பார்க்கின்றேன். மனம் எதற்கோ ஏங்குவது போலத் தவிக்கிறது. இந்த உலக வாழ்க்கையில் விரக்திவந்தமாதிரி, உலகத்தையே துறந்து விடவேண்டுமென்ற உத்வேகம் வந்தமாதிரி. திடீரென்று சாவு வந்தால் புன்சிரிப்புடன் அதை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறமாதிரி … பச்சை, சிவப்பு. நீல. மஞ்சள் வர் ணங்கள் சுழல்கிறமாதிரி …. அந்த நிறங்களுக்கும் அந்த மௌன கீதத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறமாதிரி அந்த மௌன கீதம் மஞ்சல் நிறமான மாதிரி ஐயோ! தான் கண்களைத் திறக்கின்றேன்.

அபூர்வமான அழகுடன் உலகம் ஜன்னலுக்கப்பால் பரந்து கிடக்கிறது. அரையிருளில் அமிழ்ந்திருந்த உலகத் தில் மெல்லிய தூறலாய் மழை விழுந்து கொண்டிருந்தது. லூயிபாஸ்ரர்’ என்ற விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற் றைக் கூறும் நூலில்; அவன் முதன் முதல் கல்லூரிக்குப் படிக்கப்போகக் கோச்வண்டியில் ஏறியபோது இருந்த சூழல் வர்ணிக்கப்பட்டிருப்பது போன்று, அப்போதும் — நான் ஜன்னலால் வெளியே பார்க்கும் போதும் உலகம் இருந்தது, இயற்கை அழும்போது தன் இலட்சியத்தின் மாருதபிடியுடன் புறப்பட்ட அவன் விஞ்ஞானியானான்: நானோ….?

நானும் இயற்கையுடன் அழுகின்றே?

துன்பப்படுகின்ற உள்ளங்கள் அழுகின்றனவா? அப்போ, உலகமும் துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றதா? நானும் துன்பப்படுகின்றேனா? அப்படியாகில், துன்பம் மோகன மானதா? மனோரம்மியமானதா? விபரிக்கமுடியாததவிப்பை ஏற்படுத்துமா? இறுதியில் … இறுதியில் … அமைதியை, ஆனந்தத்தை அளிக்குமா? இயற்கை அழுதால் பின்பு உலகம் செழிக்குமா?

திடீரென்று ஒரு மின்னல்; உலகம் வெளித்து மீண்டும் இருள்கின்றது. இருள்; ஒளி; துன்பம் – இன்பம்; புயல் – அமைதி : பச்சை – சிகப்பு — நீலம் – மஞ்சள்; ஒன்றின்றி ஒன்றில்லை. ஒன்றிலே ஒன்று தங்கியிருக்கிறதா?

நான் அழுகிறேன்; நான் சிரிக்கிறேன்; நான் துன்பப்படுகிறேன்; நான் ஆனந்தமடைகிறேன்;

வாழ்க்கை! இருள்; ஒளி: துன்பம்; இன்பம்.

மௌனத்தில் மௌனமான அந்த மௌனத்தைக் கிழித்துக்கொண்டு மாதாகோயில் மணி ஒலித்தது. அந்த ஒலி பரவி ரீங்காரித்து, ரீங்காரித்து, ரீங்காரித்து… என் காதில் இனிப்பது போல…..

அந்த மெளனகிதம் அற்புதமானதொரு ராகக் குழைவுடன் இதயத்தை உருக்கி ஒலிப்பதுபோல எனக்குக் கேட்டடது. எனக்குக் கண்ணீர் அரும்பிற்று. சிலப்பதிகாரத்தில் மாதவியும், கோவலனும் வாசித்த கானல் வரிப் பாடலினால் ஏற்பட்ட சோகமான விளைவும் அதன் அனுபவங்களும் போல எனக்கும்…எனக்கும்….

நான் மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன்.

அந்தத் தளுக்கு நடையுடன் என்ன தான் நடந்தாலும் அச்சமில்லை’ என்ற அந்தக் கைவீச்சலுடன் அவள் வந்து சிரிக்கிறாள். என் வாழ்க்கைப்பயணத்தில் எப்போதோ குறுக்கிட்டு நீங்காது நிலைத்து விட்ட அவளுக்கும், மஞ்சள் நிறத்துக்கும், அந்த மௌனகிதத்திற்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கத்தான் வேண்டும்

அப்போதும் இப்படி ஒரு நாள்……..

அமைதியான, அழகான, மனத்தை உருக்குகின்ற, மேகங்களால் சூழப் பெற்ற, மழை தூறிக்கொண்டிருக்கின்ற ஒரு நாள், பல்கலைக்கழகத்துக் கலை மண்டபத்துக் கூரை போட்ட முன்றலில் மழைக்கு ஒதுங்கி, பஸ்சிற்காகக் காத்து நிற்கின்றேன். அவளும் நிற்கின்றாள். சிலை மாதிரி நிற்கின்றாள், மஞ்சள் சேலைகட்டிக்கொண்டு, மஞ்சள் நிறத்தவளாய். மஞ்சள் மயமாய், ஜோதியாய் என் கண்களுக்குப் பளிச்சிடுகிறாள். மெல்லிய குரலில் சோகமான ஒரு சினிமாப்பாட்டை முணுமுணுத்துக் கொண்டு, கொடிபோல நெழிந்து, சாய்ந்து நிற்கிறாள்.

கணங்கள் கரைகின்றன; நிமிஷங்கள் கரைகின்றன: மணித்தியாலங்கள் பிறக்கின்றன. கண்களும் கலந்தமாதிரி…

பஸ் வருகின்றது; இருவரும் ஏறுகின்றோம். ஒருவர் பின் ஒருவராக ஏறுகின்றோம். எனக்குப் பின்னால் அவள் ஏறு நின்றாள்.

நான் ‘ரிக்கற்’ எடுக்கின்றேன்; அவளுக்குக்கும் எனக் குமாக எடுக்கின்றேன். அவள் மெதுவாகப்புன்னகைத்தாள், “நன்றி” என்றாள் மெல்லிய குரலில்; “பரவாயில்லை” என்றேன் நான்.

இது முதல் அறிமுகம்.

என் மனதில் அவளின் கோலம் பதிந்து விட்டது. ஜெக ஜோதியாய் மினுங்கும் மஞ்சள் நிறத்தில் அவள் என்னுள்ளே நின்று முறுவலிப்பாள். மெல்லிய, சோகமான அந்தச் சினி மாப்பாடல் மெட்டு மௌன கீதமாய்……..

வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை மயக்குகின்ற அனுபவங்கள்!

பிறகு……

பிறகென்ன?

நானும் அவளும் இணையானோம், ஒருவருள் ஒருவர் கலந்து ஒருவரானோம் – ரகமானோம்.

அந்த மௌனகீதத்தின் துன்பமான மயக்கில், நான் நன்றாக அடிமனத்தைத் துருவிப் பார்க்கின்றேன்,

ஒருவருள் ஒருவர் கலந்த நிலையிலே வாழ்ந்தோம். அப்படி ஒரு வாழ்க்கை . கவலைகளும், துன்பங்களும் இல்லாத மோகனமானதொரு வாழ்க்கை-அதைவிட்ட பரலோக சுவர்க்கம் இருக்குமென்று நினைக்க முடியாத வாழ்க்கை.

பச்சை போர்த்த மலையடிவாரங்கள், சலசலத்து நெளிந்தோடும் மலையருவிகள், பூக்களாய் பூத்துக் குலுங்கும் மலர் மரங்கள்-புல் பரந்த பூமிகள். அறிவுப் பெட்டகமாக அடுக்கடுக்கான மாடிகள் கொண்ட நூல் நிலையம், விரிவுரை மண்டபங்கள். எங்கும் அவளும் நானும் இணையாய், இணையாய், இணையாய்………

நான் சொல்வேன் “ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுதான் வாழ்க்கையென்று. வாழ்க்கையை வெறுப்பதெல்லாம் பொய். வாழ்க்கையை வெறுக்கத் தூண்டும் இலக்கியங்களும் பொய். ‘வாழ்வாவது மாயம்’ என்ற வா தாட்டம் எல்லாம் பொய், வாழ்க்கைதான் உண்மை; அது தான் திசம்; அதுதான் சுவர்க்கம். மஞ்சள்–சிகப்பு – நீலம்பச்சை வர்ணபேதங்கள் போல. இன்பம்-துன்பம் – கவலைகளிப்புக் கொண்டதுதான் வாழ்க்கை”

அதன் மகத்தான அனுபவங்கள்…

ஆணும் பெண்ணும் இணைவதற்கு குலம், கோத்திரம், அழகு. சாதகப் பொருத்தம் ஒன்றும் வேண்டாம்; அன்பு வேண்டும். அன்புதான் குலம் – அன்புதான் அழகு – அன்புதான் பொருத்தம்.

நான் அவள் மீது அன்பு கொண்டேன்; அவள் என்மீது அன்பு கொண்டாள். இனைத்தோம். இறுகினோம், நான் அழகனல்ல, அவள் அழகி. அவளுக்கு நான் அழகனம். என்னைவிட வேறொருவரும் அழகில்லையாம். நான் சிரித்தேன், அன்பு என்னவென்று புரிந்தது.

நான் கண்ணை மூடியவாறே இருக்கின்றேன். அந்த மௌனகீதம் என்னை என்னவோ செய்கிறது.

ஒரு நாள்……

எனக்கும் அவளுக்கும் ஊடல்.

நூல்நிலையத்தில், ஆங்கிலக்கவிஞன் கீட்சின் நூலொன் றைப் பிரித்துப் படித்தபடி இருக்கின்றேன். அவள் வந்து கெஞ்சுகிறாள் – மன்றாடுகிறாள். நான் மசியவில்லை. அவள் என்னருகிலிருந்து மெதுவாக முணுமுணுக்கிறாள். நாத சக்திகளெல்லாம் அழுவதுபோன்ற மெல்லிய சோககீதமாய் ..

நான் என்னை மறந்து அவளை அணைக்க முயல்கிறேன். அவள் சிரிக்கிறான்; வெண்கல மணியின் நாதமாய்–கலீர் கலிரென்று …….

என்னைப் பொறுத்தவரையில் அவளொரு இசைமேதை; கலாரசிகை. எத்தனையோ இயற்கையின் அற்புதக் காட்சிகளை அவள் எனக்குக் காட்டி வியாக்கியானங்கள் செய்து இருக்கிறாள். றோட்டின் வடக்கே உயர்ந்த மலைச்சிகரத்தின் புகார் மூடிய கோலங்கள், காலை இளம் பரிதி வெளிச்சத்தில் பளிங் குக்கற்களாய் பளிச்சிடும் மலை அருவிகள், புல் நுனிகளில் மணிகளாய் மினுங்கும் பனித்துளிகள், இலைகளே இல்லாமல் பூத்துக்குலுங்கும் மலர்மரங்கள். நிசப்தமான வானத்து அந்த காரத்தில் ஜோடி, ஜோடியாய் பறக்கும் பறவைகள் ……..

இதை யெல்லாம் நாங்கள் தனிமையாக நின்று பார்த்திருக்கிறோம். எங்களை மறந்த நிலையில் ஒன்றாய் நின்று அவற்றில் கலந்து இலயித்திருக்கிறோம்; அவற்றுக்கு எங்களால் புரியக்கூடிய அர்த்தங்கள் செய்து மகிழ்ந்திருக்கிறோம்…

அவள் சொல்லுவாள் “நீங்கள் ஒரு கலைஞன் என்று நண்பர்கள் சொல்லுவார்கள். “உன் படைப்புச் சக்தியால் எமது சமுதாய அவலங்களைச் சித்தரியாது. வாழ்க்கைப் போராட்டங்களை வர்ணிக்காது வெறுமனே இயற்கை, காதல், தனிமனித மன உணர்ச்சிகள் என்று. உழன்று கொண்டிருக்கிறாயே” என்று….. .

எனது கதைகள், கவிதைகள் அற்புதமாய் இருக்கின் மனவென்று அவள் பாராட்டுவாள். நான் நண்பர்கள் கூறும் குறைகளைக் கூறுவேன். அவள் வானத்துப் பறவைகளைக் காட்டிக் கேட்பாள், “அவைகளுக்கு வாழ்க்கைப்போராட்ட மில்லையா – பசியில்லையா — எவ்வளவு ஆனந்தமாகப்பாடி இயற்கையை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றன” வாழ்கின்றன. வாழ்க்கையிருக்குமட்டும் வாழ்க்கைப் போராட் மும் இருக்குமென்றும் அவள் கூறுவாள். “லளிதகலைகளி னால் மட்டுமே வாழ்க்கையில் எம்மை மறந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம்” என்பாள் அவள்.

நான் தலையசைப்பேன். மனப்பூர்வமாக தலையசைப்பேன், வாழ்க்கை, கலை, இலக்கியம் எல்லாவற்றிலும் என் கருத்துகளும் அவள் கருத்துக்களும் ஒன்றே. அதனாற்போலும் நாம் எம்மை மறந்து பரிபூரணமாக ஒருவரில் ஒருவர் கல்க்க முடிந்தது. ஆணும் பெண்ணும் இணைய அன்பு இருந்தால் மட்டும் போதாது. மனப்பொருத்தமும் லேண்டும்தான். இருவர் மனத்தினால், மன உணர்வுகளினால் – அதனால் உயிரினால் கலப்பது தான் உண்மையான வாழ்க்கை.

மனித வாழ்க்கையின் மன உணர்ச்சிகள், சூழல் பாதிப் புகள், அவற்றின்விளைவுகள் என்பனவற்றைப்பற்றி தீவிரமாகச் சிந்தித்து ஒரு கவிதை எழுதியிருந்தேன் ‘ வாழ்க்கையின் மூச்சுக் காற்று’ என்ற மகுடத்தில் எழுதிய அக்கவிதையை, ‘வாழ்க்கை என்பது கனவின் தொகுதிகள்’ என்ற முத்தாய்ப்புடன் முடித்து வைத்தேன்.

அவள் அக்கவிதையைப் பார்த்தாள். அவள் கண்கள் பரவசத்தில் மின்னின. “வாழ்க்கை என்பதே எத்தனை எத்தனையோ கனவுகளின் தொகுதிகள் தான்” என்றாள். “லைவ் இஸ் மாஸ் ஒவ் றீம்ஸ்” என்று அந்த இறுதிவரியை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்துத் துள்ளினாள், என்னை அளவுக்கு மீறிப் புகழ்ந்தாள்.

“இந்தக்கவிதையை நான் மட்டும் எழுதவில்லை; என்னுடன் கலந்த நீயுந்தான் எழுதினாய்; உன்னுடன் கலந்த அனுபவங்கள் தானேடி இந்தக் கவிதை” என்றேன்.

அவள் கன்னத்தில் செம்மை பரவ முறுவலித்தாள்.

ஏனோ. எனக்கு முதன் முதலில் அவளைச்சந்தித்தபோது மனதில் பதிந்த அந்த மஞ்சள் நிறமும், அந்தச் சோகமான பாடல் மெட்டும் நினைவில் தட்டின.

நான் கண்களை மூடியபடியே இருக்கிறேன், மின் விசிறி களின் வீர், வீர் சத்தம் – காதில் விழுகிறது.

இந்த உலகின் ஊனக்கண்களுக்கு, நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தோம். அப்போதும் உலகம் அரையிருட்டில் ஆழ்ந்திருந்தது, மழை தூறிக்கொண்டிருந்தது. அவள் மஞ்சள் சேலை கட்டியிருந்தாள்; அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள், கரிய புகையைக் கக்கிக் கொண்டு புகையிரதம் வந்தது. நான் தான் அவளை வழியனுப்பி வைத்தேன் அவள் அழவில்லை. நானும் அழவில்லை. நாங்கள் அழக் காரணம் இருக்கவில்லை. ஏன் நாங்கள் அழ வேண்டும்? எங்களுக்குத் துன்பம் வரவில்லை. துன்பம் வந் தாலும் அழவேண்டுமென்று நியதியிருக்கிறதா என்ன?

நான் உண்மையில் ஒருமுறை அழுதிருக்கிறேன். அவளும் அழுதிருக்கிறாள், பஸ்சில் அறிமுகமானதின் பின். முதன் முதல் நாங்கள் இருவரும் பூந்தோட்டத்தில் ஒன்றாகச் சந் தித்தபோது- என்னை அவளும், அவளை நானும் புரிந்தபோதுநாங்கள் ஒருவரில் ஒருவராய்க் கலந்தபோது – அப்போது நாங்கள் அழுதிருக்கின்றோம். எதற்காகவோ அழவேணும் போல இருந்தது. அழுதோம். அந்தத் தவிப்பு தீருமட்டும் அழுதோம்.

நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிட்டதாக எல் லோரும் சொல்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவில்லை. எங்களைப் பிரிக்க ஒருவராலும் முடியாது. நாங்கள் அமரத்துவமான காதலர்கள். என்னுள் அவள் இருக்கிறாள்; அவளுள் நான் இருப்பேன்; நிச்சயமாக இருப்பேன்.

நாங்கள் புறவாழ்வில் ஒன்றாக இருக்க முடியாதென்று அறிந்தபோது – இந்தச் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீற முடியாது என்று உணர்ந்தபோது நாங்கள் அதை எதிர்த் துப் புரட்சி செய்யவில்லை. எங்களுக்குப் புரட்சி செய்ய வலுவில்லை, நாங்கள் புரட்சிக்காரர்களல்ல. நாங்கள் கலைஞர்கள்……

அப்போது அவள் சொன்னாள், “நாங்கள் ஒன்றாகவே இணைந்து வாழ்வோம். என் மனதில் நீதான் என்றும் வாழ் வாய்; சமுதாயம் எங்களைப் பழிவாங்க முடியாது. என் ஆத்மா என்றும் உன்னையே நாடி நிற்கும். என் உடலை சமுதாயம் என்ன செய்தாலும் செய்யட்டும்; என் உயிருள்ளவரையில், இந்த உலகின் எங்கோ மூலையில் மானசீகமாக உன்னுடனே ஒரு கற்புள்ள மனைவியாக நான் வாழ்வேன்”.

அப்போதும் நான் அவளைப் பரிபூரணமாக புரிந்து கொண்டேன். அப்போதும், என் கண்களில் நீர் வடிந்தது.

புறவாழ்வில் அவள் யாருக்கோ மனைவியாக இருந்தாலும், உண்மையில் என் மனைவியாகத்தான் அவள் என்றும் இருப்பாள்.

நானும் அவள் கணவனாகவே இருப்பேன்; உலகை மூடிய அரையிருட்டு, தூறும் மழை, மஞ்சள் நிறம், மௌன கீதம்..

“என்ன தம்பி நித்திரையோ” என்ற குரல் கேட்கிறது.

கண்ணை விழித்துப் பார்க்கிறேன். கடிகாரம் நாலரை மணியைக் காட்டுகிறது.

ஜன்னலுக்கப்பால் வெளியே பார்க்கிறேன்.

மழை தூறிக் கொண்டிருக்கிறது .. உலகம் விரிந்து கிடக்கிறது. மனதில் மௌனகீதம் ஒலிக்கிறது. பச்சை. சிவப்பு, நீலம், மஞ்சள் ……..

– 1969 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *