கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 5,263 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குளியலறைக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான் நித்தியானந்தன் என்ற நித்தி. அவனுடைய முகம்தான் கண்ணாடியில் தெரிந்தது. அது அவன் முகம்தானா? தெரிவதைக் காட்டுவது தானே கண்ணாடி. அது அவன் முகமே தான்… உள்ளத்தைதான் கண்ணாடி காட்டும்; காட்டுகிறது. இந்த உலகில் உள்ளதை உள்ளபடியே காட்டுவது இந்தக் கண்ணாடி மட்டும்தான்… வேறு யார் இப்படி இருக்கின்றார்கள்? எங்கு பார்த்தாலும் பொய் புகழ்ச்சி…. முகத்துக்கு முன்னே ஒரு பேச்சு… பின்னே ஒரு பேச்சு…. காரியம் ஆக கை குலுக்கல்…. பதவிக்காக ஒரு பாராட்டு… சலுகைக்காக முகஸ்துதி, எல்லாவற்றையும் இள வயதிலேயே பார்த்துட்டான். எவரையும் நம்பமுடியவில்லை. ஆனால் இந்தக் கண்ணாடியை அவன் நம்புகின்றான். அது பொய் சொல்லாது.

மறுபடியும் அந்தக் கண்ணாடியைப் பார்த்தான். அவன். அவன் முகம்தான் அது. பரமலிங்கம் நித்தியானந்தன் முகம் அப்படித்தான் இருக்கும். சுருள் சுருளான முடி. அது பரம்பரை வழிப் பயணத்தின் அடையாளம் என்கிறார்கள். அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் கூட சுருள் முடியாம். ஆனால் அவன் அந்த சுருள் முடிக்காக எதையும் செய்யவில்லை. எந்த சலூனுக்கும் போகவில்லை. எந்தக் கிரீடமும் பூசவில்லை. அது தானாகவே சுருண்ட முடி…. ஆனால் அதற்கே ஒரு பாராட்டு விரிந்தது. ஆண், பெண், நண்பர், உறவினர் எனப் பலரையும் காந்தமாய் கவர்ந்த முடி, இன்னமும் திருமணம் செய்யாமல் பேங்கில் தனி மரமாய் இருக்கும் மிஸ் சுஜாதா அத்த நாயக்காவின் கண் சிமிட்டலைக் கொண்டு வந்த முடி…. அவள் லேசில் எந்த ஆணையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டாள். அவளே இந்த முடியில் மயங்கி அவனோடு வலிய வலிய பேசினாள் என்றால்? அதுவெல்லாம் அங்கு கொழும்பில் நடந்து முடிந்த காட்சிகள். ஆனால் இங்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் தலை முடியில் வித விதமாய் நிறம் பூசுவதும், கை வண்ணம் காட்டுவதும் பெரிய கலை. இதில் இவனுடைய கறுப்பான இந்த சுருள் முடியை கண்டு கொள்பவர் யார்? ஆனால் சிலர் இவனைப் பார்க்கும் போதெல்லாம் “ஆர் யூ ஃபிஜி?” என்று கேட்பார்கள். பிறகுதான் புரிந்தது ஃபிஜி நாட்டவர்களுக்கும் சுருள் சுருளாக முடி இருக்குமாம். அதனால் அவனை ஃபிஜி காரன்’ என்று கேட்டிருக்க வேண்டும்.

சுருள் சுருளாக முடிக்கு கீழே பரந்த நெற்றி, நெற்றியில் கோடுகள் இல்லை. தீர்க்கமானப் பார்வை கொண்ட கண்கள். அழகான புருவங்கள்…எடுப்பான மூக்கு…சிலருக்கு மூக்கு குடமிளகாய் போலிருக்கும். சிலருகு ஜப்பான்காரன் போல் சப்பையாக இருக்கும். அவனுக்கோ எடுப்பான ஆண்மையைப் பெருக்கிக் காட்டும் மூக்கு… இது பிறக்கும் போது படைக்கப்படவில்லை. பாட்டியின் கைகள்தான் படைத்தன. பாட்டிதான் குழந்தையில் குளிக்க வைத்தபோது மூக்கை நீவி நீவி இப்படி செய்தாளாம். அளவாய் உப்பிய கன்னங்கள்…பொருத்தமான காது….மொத்தத்தில் இவனைப் படைக்கும் போது பிரமன் சந்தோஷத்தில் இருந்திருக்க வேண்டும்.

இத்தனை சகல பொருத்தங்கள் கொண்ட இந்த முகம் தான், கொழும்பில் அவன் மானேஜராய் இருந்த போதும் – ஒரு மானேஜர் தமிழனா என்ற பிற்போக்கு வாதத்தில் எழுப்பிய போராட்டங்களில் – வெற்றியே தேடிக்கொடுத்தது. இந்த முகம் அவனுக்கு ஒரு வகையில் கவசம். முதன் முதலில் ‘பேங்க் இண்டர் வியூ’விற்குப் போன போது நூற்றுக்கணக்கானவர்களைப் பின் தள்ளிவிட்டு வேலையைக் கொடுத்தது இந்த முகம் தான்…அவன் பெரிய அழகன்; அல்லன் கறுப்பையும் எட்டாத வெள்ளையையும் நெருங்காத மாநிறம்…ஆனால் அந்த முகத்தில் ஒரு வசீகரம் ஏவுகணையாக இருந்தது.

அப்படித்தான் கொழும்பில் இருந்தபோது நம்பினான். நம்புவது போல்தான் அவன் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்தன. அதனை பெண் பார்க்க போன போது நேரில் பார்த்தான் அவன்.

புரோக்கரின் வற்புறுத்தலில் வெள்ளவத்தைக்கு ஒரு பெண் பார்க்கப் போனான். பெண் வீட்டைப் பார்த்ததுமே அவன் பயந்து திரும்பிப் போக முயன்ற போது அந்த புரோக்கரின் வார்த்தைகள் அவனைத் தடுத்து நிறுத்தின.

“தம்பி நான் புரோக்கர் தான். எத்தனையோ பேருக்கு பொண்ணு பார்த்து மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் நடத்தியிருக்கேன். வேற யாரையும் இந்த வீட்டுக்கு நான் கூட்டிவரவே இல்லை. உங்கள் உங்க முகத்துக்காகத்தான் கூட்டிகிட்டு வந்தேன். நீங்க எதுக்கும் யோசிக்க வேணாம். பெண் வீடு உசந்த கைதான். ஆனா அந்த கை இந்த முகத்த பார்த்தா மௌனமாயிரும். மௌனம்னா சம்மதம் தானே?”

மந்திர மாயம் போட்டது போல் மௌனமாக நித்தி அந்த இரட்டை தட்டு பங்களாவிற்குள் காலடியை வைத்தான்.

அது கொழும்பில் செல்வம் கொண்டவர்கள் செருக்குடனும், கடல் அலைக்காற்று தாலாட்ட பணத்தில் மிதப்பவர்கள் வாழ்கிற தெரு….

அந்தத் தெருவில் வாடகைக்கு கூட வீடு பார்க்க முடியாதவன் நித்தி பெண் வீட்டாருக்கு நித்தியின் முழுப் புராணமும் அவன் பேங்கில் வாங்குகிற மாதச் சம்பளம் எவ்வளவு என்பதும், அது தங்களின் ஒரு மணி நேர வருமானம் என்பதும் தெரியும்.

லட்சக்கணக்கில் ஏற்றுமதி – இறக்குமதி செய்கிற எத்தனையோ மாப்பிள்ளைகள் தாலி கட்டப் போட்டி போட்டும் ஒரே மகள், வியாபாரம் செய்யும் மாப்பிள்ளையே வேண்டாம்’ என்று சொன்ன பிறகு தான், கைநிறைய சம்பளத்தோடு கௌவரமான தொழில் செய்கிற மாப்பிள்ளையைத் தேடுகிற இந்த வேட்டையே தொடங்கியது. அதில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர் வந்து போனார். இப்போது நித்தி.

பெண்ணை அவனுக்குப் பிடித்து விட்டது. அவனைப் பொறுத்த வரையில் அது ஒரு கேள்வியே அல்ல அவனை அவர்களுக்குப் பிடிக்க வேண்டும்..? ஆனால் அவர்களுக்குப் பார்த்த மாத்திரத்தில் அவனைப் பிடித்துவிட்டது. அது எப்படி என்பது அவனுக்குப் புரியவே இல்லை. புரோக்கர் சொன்னது போல் அவன் முகம் செய்த மாயாஜாலமாக’ இருக்குமோ! அப்படித்தான் அவன் நினைத்துக்கொண்டான்.

ஒரு நல்ல நாளில் கொழும்பில் கோயிலில் திருமணமும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பும் நடந்தது. திருமணத்திற்கு பெண் வீட்டுக்காரர்களே அதிகமாய் வந்திருந்தனர் என்ற போதும் எல்லாவற்றையும் அவனைக் கேட்டுத்தான் செய்தார் பெண்ணுடைய அப்பா, பொருளியலில் அவன் பள்ளத்தில் இருந்த போதும், செல்வ மேட்டில் இருந்த அவர் அவனோடு மாயாவாக கைகுலுக்கியதே ஒரு விந்தையென்று உலக அதிசயம் என்றும் நம்பிய அவன், இவற்றையெல்லாம் புரோக்கர் சொன்னது போல் சாதித்தது தன் முகம்’ தான் என உறுதியாக நம்பத் தொடங்கினான். அந்த நம்பிக்கைதான் இனி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எல்லாத் தடைகளையும் உடைக்க முடியும் என எண்ணத் தூண்டியது.

கொழும்பில் ஒரு பெரிய வங்கியில் மானேஜராக இருந்த அவன் எக்காரணம் கொண்டும் வெளிநாடு போவதில்லையென்று உறுதியாய் இருந்தான். அந்த உறுதியை கௌரவமான உத்தியோகம், ஆசை மனைவி, வசதியான வாழ்வு எல்லாம் இணைந்து தாலாட்டி தட்டிக் கொடுத்தன. ஆனால் கொழும்பில் அடிக்கடி நடந்த குண்டு வெடிப்பும் தமிழ்பெயர் என்றாலே போலிசார் பார்க்கிற கழுகுப்பார்வையும் எங்கு போனாலும் அடையாள அட்டையோடு போகிற கட்டாயமும் வங்கியில் மானேஜர் என்ற போதும் தமிழன் என்பதால் பெரும்பான்மை அரசியல் சித்தாந்தத்தில் உருவான கட்சி அரசியல் அழுத்தங்களும் அவனோடு மோதி சவால் விட்டு அவனை அசைத்துக் குலுக்கி சங்கடப்பட வைத்து வேறுவழியே இன்றி ஆஸ்திரேலியாவிற்கு குடியேற விண்ணப்பிக்க வைத்தது. அப்படி விண்ணப்பித்ததைக் கூட ரகசியமாகவே அவன் வைத்திருந்தான். எவரிடமும் சொல்லவில்லை. அப்படி சொல்லாதற்கு காரணம் இருந்தது. எல்லோரிடமும் சொல்லிவிட்டு கடைசியில் ‘மைகிரேசன்’ விசா கிடைக்காமல் போய்விட்டால் அது தனக்கு. குறிப்பாக தன் முகத்திற்கும் இழுக்காகி விடுமே!…

மூன்று வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாய் குடியேற விசாவை அவனுக்கு கொடுத்தார்கள். அதனை நண்பர்களிடம் சொன்ன போது அவர்கள் உன் முகத்துக்கு ஆஸ்திரேலியா என்ன அமெரிக்க விசாவே கிடைக்கும்” என்றார்கள். பலருக்கு அவன் மீது பொறாமை! எட்ட முடியாத உயரத்துக்கு போகிறானே! அவனோ அதைப்பற்றி கவலைப்படாமல் இந்த முகத்துக்கு சிட்னியில் இறங்கியதும் வேலை கிடைக்கும் என்று நம்பி சிட்னியில் மனைவியோடு இறங்கினான்.

நித்தி சிட்னியில் கால் வைத்து நாலு மாதமாகி விட்டது. இன்னமும் அவன் எதிர்பார்த்த பேங்க்’ வேலை கிடைக்கவே இல்லை. பல தனியார் ஜாப் ஏஜன்சிகளில் பதிந்தான். கடிதம் மூலமாகவும் ஃபேக்ஸ் மூலமாகவும் ரெசிமே (Resume)க்களை வாராவாரம் அனுப்பி வைத்தான். ஒரு பேங்க் நடத்திய விரைவு காணல் பரீட்சை எழுதினான். அந்த பரீட்சையில் சித்தி அடைந்தான். அதனைப் பாராட்டி உன் பெயரை ஏற்கனவே இங்கு வேலைக்கு காத்திருப்பவர்கள் பெயர்களோடு வரிசைப்படுத்தி பதிந்துள்ளோம். எவ்வளவு விரைவில் கூப்பிட முடியுமோ அவ்வளவு விரைவில் கூப்பிடுவோம்’ என்று கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் இருந்த தொலைபேசி எண்களுக்கு டெலிபோன் செய்தபோது எழுத்தில் எழுத முடியாத ஒன்றை சொன்னார்கள்…அது உண்மையும் கூட..’லோக்கல் எக்ஸ்பீரியன்ஸ்’ உள்ளவர்களைத்தான் முதலில் அழைப்போம்…

அதனைக் கேட்டதும் அவனுக்கு கோபம் வந்தது. கொழும்பில் பேங்க் மானேஜராக இருந்தது அனுபவம் இல்லையா?…இந்த நாட்டுக்கு வந்தே சில மாதங்கள் தான் ஆகின்றன. யாராவது வேலை கொடுத்தால்தானே லோக்கல் எக்ஸ்பீரியன்ஸ்’ வரும்? என்ன சொல்கிறார்கள்.

இப்போதுதான் முதன் முதலாக தன் முகத்தின் மீதே நித்திக்கு சந்தேகம் வந்தது. அக்கரையில் தடைகளை உடைத்த இந்த முகத்திற்கு என்ன ஆயிற்று? அவன் மனத்தில் கவலைகள் பெருகத் தொடங்கின. எல்லாம் வசப்படும் – அதற்குத்தான் முகம் இருக்கிறதே என்றவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திரும்பிப் போய் விடலாமா? எப்படி திரும்பிப் போவது? வேலை கிடைக்கவில்லை என்று சொல்ல முடியுமா? சொன்னால் அவன் அந்தஸ்து என்னாவது? மானேஜர் பதவியை ராஜினாமா வேறு செய்துவிட்டான். அதற்காக பெரிய விருந்துகூட வைத்தார்கள். அந்த விருந்தில் ஓடியாடி வேலை செய்த சொய்ஸாதான் இப்போது வங்கியின் மானேஜராம்.

கொழும்பிலிருந்து கையேடு கொண்டு வந்த டாலர் வேறு குறையத் தொடங்கியது. இரு வாரத்திற்கு ஒரு தடவை வாடகை கட்ட வேண்டும். புதிய குடியேற்ற சட்டப்படி வேலை இல்லாதோருக்கான கொடுப்பனவு இரண்டு வருடத்திற்கு இல்லையாம். மாமாவுக்கு ஒரு போன் போட்டால் அவர் ஆயிரக்கணக்கில் டாலர் அனுப்புவார். அதற்கான வழிமுறைகள் அவருக்குத் தெரியும். ஆனால் எப்படி கேட்பது? எந்த முகத்தோடு கேட்பது? இந்த முகத்திற்கா வேலை கிடைக்கவில்லை என்று அவர் நினைத்தால்?

குளியல் அறையிலிருந்து வெளியே வந்த நித்தியை வரவேற்பது போல் டீ கோப்பையை நீட்டிய மனைவி சோர்வான முகத்துடன் ஒரு தகவலையும் சொன்னாள் “சிட்டி நெட் கபீரியில் ஜாப் விஷயமா உங்களை பத்தரை மணிக்கு வரச் சொன்னார்.”

சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தான். மணி எட்டுதான். ‘சான்ட்விச்’ சாப்பிட்டு உடுத்தி கொண்டு புறப்பட்டால் பத்து மணிக்கெல்லாம் சிட்டிநெட் ஆபீசுக்குப் போய்விடலாம்.

ஒன்பதரைமணிக்கு கோட்டும் சூட்டுமாய் கையில் பிரீப் கேசுடன் கம்பீரமாய் நித்தி புறப்பட முனைந்த போது மனைவியின் முகத்தில் லேசான வாட்டம் மின்னி மறைந்ததை அவன் கண்டான். சிட்னிக்கு வந்ததுமே கணவனுக்கு வேலை கிடைக்கவில்லையே என்பது அவள் கவலை. அந்தக் கவலையிலும் தன் கணவன் தன் தந்தையிடம் கூட தாழ்ந்துவிடக் கூடாதென்று தன்மான உணர்வு மேலிட்டவளாகவே இருந்தாள். செல்வச் செழிப்பில் வளர்ந்த அவள், தற்காலிக வசதியின்மையைக் கூட தாங்காது தன்னைக் கவிழ்த்து விடுவாளோ எனப்பயந்தான். ஆனால் அவளோ தன் கணவன், தன் குடும்பம் என்ற உத்தேகத்தில் இருக்கிறாள். கணவனைப் புரிந்து, தெரிந்து நிற்கிறார். இதெல்லாம் எவ்வாறு அவளுக்கு வந்தது? இதுதான் தாம்பத்தியத்தின் தாற்பரியமா?….கணவனை கௌரவப்படுத்துகிற மனைவியும், மனைவியை கௌரவிக்கிற கணவனும்…என்பதே தாம்பத்தியத்தின் மிகப்பெரிய சுருதி. அதனை அறிந்தவன் அவன்.

நேற்று இரவு படுக்கையில் அவளை விட்டு விலகியது போல் கண்களை மூடி படுத்துக் கிடந்தான் நித்தி. இந்த ‘விலகல்’ ஒரு வாரமாக நீடிக்கிறது. அதனை கண்டு பொறுக்க முடியாத அவள் அவனை உசுப்பினாள் மெள்ள “என்ன டார்லிங்?” என்றவாறு கண்களைத் திறந்து பார்த்தான். இரவு விளக்கின் ஒளியில் அழகாய் அதற்கு கவர்ச்சியாய் நைட்கவுனில் இருந்தாள்…வில்லாய் வளைந்த புருவம். காந்தமான கண்கள் எடுப்பான மூக்கு. பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் முகம் மாநில உடலுக்கு ஏற்ற குங்கும நிற நைட்கவுன். தொடர்ந்து அவளைப் பார்த்தால் மூட்டைக் கட்டியிருக்கிற அந்த உணர்வுகள் அறுத்துக்கொண்டு எழுந்து விடுமோவென்ற பயம் அவனுக்கு மீண்டும் கண்களை மூடினாள்.

அவள் தன் கை விரல்களால் மூடிய கண்களைத் திறக்க முயன்றாள்.

“ப்ளீஸ் உங்களோட பேசணும். கண்ண தொறங்க.”

“கண்ண மூடிக்கிட்டே பேசலாம். நீ பேசு.”

“ரெண்டு பேரும் கண்ண மூடிக்கிட்டு பேசினா அதுக்கு அர்த்தமே வேற…கண்ண தொறங்க.”

முகத்தில் புன்னகையைத் தேக்கிக்கொண்டே கண்களைத் திறந்தான், நெருப்பாய் அவள்.

“வேலை கெடைக்கட்டும்.”

“வேலைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? பகல்ல நடக்கிறதை – செய்யிறதை ராத்திரியில் நெனைக்க வேணாம். எங்க அப்பா ராத்திரி எத்தனை மணிக்கு வருவாருன்னு அம்மாவுக்கு தெரியாது. ஆனா அது வரை காத்திருப்பா. அப்பாவுக்கு பிசினஸ்தான் முக்கியம். எப்பவாவது நேரத்தோட வந்தாலும் பிசினஸ் தவிர வேறு எதையும் பேசமாட்டார். இதையெல்லாம் பார்த்து வெறுத்துத்தான் வேலைக்கு போற உங்களை விரும்பினேன். வேலை கெடைக்கிர போது கெடைக்கட்டும். நாம சந்தோஷமா இருப்போம்” என்ற அவளின் நீண்ட விரிவுரையில் மறுத்துப் பேச முடியாத அவன் ஒரு உற்சாகம் வந்தவனாய் அவளைக் கட்டி அணைத்தான். பிறகு மெள்ள தன் வாயிதழ்களை அவள் கண்ணருகே கொண்டுபோய் அழுத்திவிட முயன்ற போது, அவள் சுதாரித்துக்கொண்டு விலகி நின்று சொன்னாள்: ” சந்தோஷமா இருப்போம்னு என்கிறது அதுதானா? நாம் மனம் விட்டு பேசுறது ஒருத்தரை ஒருத்தர் பார்க்கிறது ரசிக்கிறது கூட சந்தோஷம்தான்.”

அதற்கு மேல் அவன் நெருங்கவில்லை. ஆனால் மனம் விட்டு பேசினான் – ரசித்தான். இருவரும் சிரித்துக்கொண்டார்கள். பிறகு அவர்களாகவே நெருங்கிக்கொண்டார்கள்.

“டோன் வொரி. இன்னைக்கி ஜாப் கிடைக்கும்…” என்ற நித்தி மனைவியைப் பார்த்து கண்ணடித்தான். அந்த கண் அசைவில் அவளின் சோர்வு பறந்து போனது.

சிட்டி நெட் கபீரியலின் டெலிபோன் அவனுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துவிட்டது. கபீரியல் இத்தாலிக்காரனுக்கும் ஆஸ்திரேலிய வெள்ளைக்காரிக்கும் பிறந்தவன். மூக்கு முகம் இத்தாலி யச் சாடை வாயில் ஆஸ்திரேலிய வெள்ளைக்காரனின் ஆங்கில பாஷை… போன மாதம் அவனைச் சந்தித்து மனம் விட்டு பேசிவிட்டு வந்தான். உதவுவதாக சொன்னான்.

வெளியே போவதற்காக கதவருகே போனான் நித்தி மீண்டும் தொலைபேசி அழைத்தது. மறுபடியும் சிட்னி நெட் கபீரியலா?

வேகமாய் நடந்துபோய் தொலைபேசியை எடுத்து ‘ஹலோ’ என்றான் நித்தி. மறுபக்கத்தில் புதிய குரல். ‘நித்தி… ஐ யாம் சியாங் சென்.’

“யார். இந்த சியாங்சென்?” என்று எண்ணிப் பார்ப்பதற்குள் விடையும் கிடைத்துவிட்டது. சீனாவில் இருந்து வந்திருக்கும் டாக்டர்.

“யெஸ் டாக்டர்…”

டாக்டர் சியாங்சென் சொன்னார்… “சிட்டி நெட் முகவரி, தொலைபேசி எண்களைத் தவற விட்டு விட்டேன். தொலைபேசி எண்ணை சொல்கிறாயா?…”

‘மள மள’ வென்று சிட்டி நெட் தொலைபேசி எண்களை சொன்னான். அவையெல்லாம் அவனுக்கு மனப்பாடம் மூன்று மாதமாக வேலைக்காகப் பிரார்த்தனை செய்கிற மந்திரங்கள் அவை சிட்டிநெட் ஆபிசில் தான் டாக்டர் சியாங்சென்னை சந்தித்தான் அவன். அவர் கதையைக் கேட்டபோது தன் கதை பரவாயில்லை என்பது போல் இருந்தது.

சியாங்சென் சீனாவில் எம்.பி.பிஎஸ் டாக்டர் பட்டம் வாங்கியவர் – அங்கு வரும் ஐந்து வருடம் டாக்டராக பணிபுரிந்தவர். தட்டுத்த தடுமாறி ஆங்கிலம் பேசுவார் அவர். ஆஸ்திரேலியாவிற்கு வந்து எட்டு மாதமாவிட்டது. இங்கு டாக்டராக தொழில் செய்ய மெடிக்கல் எக்ஸாம்’ எடுத்தார். ஃபெயில் என்று சொல்லி விட்டார்கள். அவரைப் போல் பல வெளிநாட்டு டாக்டர்களும் ஃபெயிலாகிவிட்டார்கள்.

அவர்களுக்கெல்லாம் தங்களின் எழுத்தை வைத்து பொரின்’ என்று கண்டு பரிட்சையில் ஃபெயில்’ ஆக்குகிறார்கள் என்ற சந்தேகம். அவற்றை உறுதி செய்வதைப் போல் வெளிநாட்டு டாக்டர்கள் இங்கு வேணாம்’ என்பது போன்ற முணுமுணுப்பு மருத்துவ வட்டாரத்தில் இருந்தே வந்தது.

ஆங்கிலம் தவிர்த்த ஏனைய மொழிகளை தாய் மொழியாகக் கொண்ட டாக்டர்கள் ஒன்று திரண்டு, தங்களை வேண்டுமென்றே ஃபெயில்’ ஆக்குவதாகப் போராடினார்கள். அதில் டாக்டர் சியாங்சென்னும் ஒருவர். அவர் தான் பல டாக்டர்கள் கிளரிக்கல் தொழில் செய்வதாகவும் சொன்னார்.

சிட்டி நெட் ஆபீசுக்குப் போன போது டாக்டர் சியாங்சென் நித்திக்கு முன்னதாகவே ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்தார். அவனைக் கண்டதும் மெல்லிய குரலில், “குட்மார்னிங் நித்தி ” என்று சொன்னார். நித்தி பதிலுக்கு பேச வாயெடுத்தபோது, தமிழ் சினிமாக்களில் கிளப் டான்ஸ் ஆடுபவளைப் போல் அரைகுறையாய் உடுத்திக் கொண்டு, டாக்டர் சியாங்சென்’ என்றாள். இனிய குரல். நித்தி அவளைப் பார்த்தான். வெள்ளை உடம்புக்கு ஏற்ற கறுப்பு உடுப்பு. அழகான கண்கள் தோகையாய் தொங்கும் பொன்னிற முடி. நிச்சயம் இவளின் அழகுக்கு அல்லது அந்த கவர்ச்சிக்குதான் வேலையே கொடுத்திருக்கிறார்கள்.

பத்தரைக்கு தன் அறையில் கபீரியலை பார்த்தான் நித்தி கபீரியல் நேரே விஷயத்திற்கு வந்தான்.

“நித்தி! ஒரு தொழில் இருக்கிறது. நீ சம்மதித்தால் உனக்குத் தான் அது.”

கபீரியலின் பீடிகை போட்ட பேச்சின் பின்னணி மறு விநாடியே தெரிந்தது.

“ஒரு சின்ன பாக்டரி, வாரத்தில் இரு நாட்கள் ஆபீசில் அக்கவுண்டன்ட் வேலை. மீதி மூணு நாள் மெசின் ஆபரேட்டர் வேலை. டிரெயினிங் தருவார்கள். வேலை கஷ்டம் இல்லை. நீ சரினு சொன்னால் நாளை தொடங்கலாம்.”

நித்தியின் முகத்தில் சுருக்கங்கள் மிதந்தன. கொழும்பில் பேங்க் மானேஜர் வேலை….இங்கு? கொழும்பில் ராசியான இந்த முகத்திற்கு இங்கு என்ன நடக்கிறது? என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மெள்ளவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறினான் அவன்.

அப்போது கபீரியல் சொன்னான்: “ஐ அன்டர் ஸ்டேன்ட் யுவர் பிராப்ளம். பட் திங் யுவர் சிச்சுவேசன்.”

நித்தியின் டாலர் கையிருப்பு அவனுக்குத் தெரியும்…சொல்லி யிருந்தான். இப்போது அதை வைத்து தூண்டில் போடுகிறானா?

“நீ இந்த வேலையை கொஞ்சநாள் செய்தால் லோக்கல் எக்ஸ்பீரியன்ஸ் கெடைக்கும். அதை வைத்து வேறு வேலை தெடலாம்.”

கபீரியல் எப்படியாவது நித்தியை அந்த வேலைக்கு அனுப்பிவிட முயன்றான். ஆனால் நித்தி அந்த வேலைக்குப் போக ஒப்பவே இல்லை.

“சாரி…கபீரியல்.”

நித்தி அப்படிச் சொன்னதுமே கபீரியல் “தட்ஸ் ஓகே” என்றவாறு எழுந்து கைகுலுக்கத் தயாரானான். அப்படியென்றால் ‘நித்தி இடத்தை காலி செய் – அடுத்த ஆளை பார்க்க வேண்டும்’ என்பதன் சுருக்கமே அது…கை குலுக்கிவிட்டு நித்தி வெளியே வந்தான்….அவனுக்காக வெளியே டாக்டர் சியாங்சென்.

வயிறே காணாமல் போய்விட்ட தேகம். தொப்பையோடு ஒரு சீசனை அவன் இன்னும் பார்க்கவில்லை. இருவரும் சிட்டி நெட்டை விட்டு வெளியே வந்தார்கள். நித்திக்கு என்ன நடந்தது என்பது பற்றி

அறிய அந்த சியாங்சென்னுக்கு ஆசை.

“வாட் ஹேபன்ட் நித்தி?”

கபீரியல் சொன்னதை சொன்னான் நித்தி..அதைக் கேட்டதும் டாக்டர் சியாங்சென் முகத்தில் படாரென்று ஒரு வெளிச்சம். பிறகு ஒவ்வொரு செங்கலாய் அடுக்கி வீடு கட்டுவதைப்போல் வார்த்தைகளை வெளியே விட்டான்… “யூ லக்கி நித்தி….எனக்கு அப்படி ஒரு வேலை தந்தால் கூட நான் போவேன். பத்து நிமிடத்திற்கு முன்னர் கபீரியலிடம் வேலை கேட்டதுக்கு உங்களுக்கு பொருத்தமான வேலை இல்லேன்னு சொல்லிட்டான் நான் வேற வேலை தேடுரது அவனுக்குத் தெரியும். எனக்கு இல்லேன்னு சொன்னவன் உன்னிடம் வேலை இருக்குன்னு சொல்லி இருக்கிறானே! அப்படியானால் உன் முகத்தில் ஏதோ வசீகரம் இருக்க வேண்டும், போய் வேலையை ஒப்புக்கொள். காசாவது வரும். இந்த நாட்டுல பணம்தான் முக்கியம். அதோட ஒரு ஆணுக்கு வேலை செய்வதுதான் ஆண்மை…நானே எந்த வேலையும் செய்ய விரும்புவது அதுனாலதான்.”

டாக்டர் சியாங்சென்னின் வார்த்தைகள் அவனை ஒரு விநாடியில் உசுப்பிக் குலுக்கி நிறுத்தியது. இந்த வேலையை ஏற்காவிட்டால் அடுத்த மாதத்திலிருந்து பணத்திற்கு எங்கே போவது? மாமாவிடம் பணம் கேட்பதையோ பணத்திற்காக மாமாவிடம் முகத்தை அடகு வைக்கவோ அவன் விரும்பவில்லை. மனைவியும் அதைத்தானே விரும்புகிறாள். ஒரு முடிவுக்கு வந்த நித்தி டாக்டர் சியாங்சென்னை உற்றுப் பார்த்துவிட்டு புன்னகையோடு திரும்பவும் சிட்டிநெட் ஆபீசுக்குள் நுழைவற்குகாக நடந்தான். அப்போது அவன் முகம் ஆபீஸ் கண்ணாடிக்கதவில் நிழலாக விழுந்தது. அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

– கதை இலக்கியமும் உரைநடையும், இளநிலை பட்டப்படிப்பு, முதற் பதிப்பு: 2008, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *